பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.
 

இதுவொரு சாபக்கேடான இழி நிலை.

 

 

ரீ.பீ.சீ.வானொலியானது புலிக்கு எதிரானவொரு வானொலியாகக் கருதப்பட்டாலும் அந்த வானொலியானது முழுமொத்த தமிழ்பேசும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான புலிகள் அமைப்பைப்போலவே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகச் செயற்பட்டது.எனினும் அந்த வானொலியின் குரல் வளையை நெரித்தெறியும் உரிமை எந்தக் கொம்பர்களுக்கும் கிடையாது.அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம்.அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எந்தக் காரணத்துக்காகவிருந்தாலும் அதை நாம் வன்மையாகக் கண்டிப்பதும்,மாற்றுக் கருத்துக்கள்-அது எவையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கான உரிமையை எவரும் காவுகொள்ள அனுமதித்து வாளாதிருக்கமுடியாது.

 

இன்று, நாம் பொல்லாதவொரு அரசியல் அராஜகத்துள் வாழுகிறோம்.தமிழின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகமானது தேசம் கடந்து தனது கோரப் பல்லை நீட்டிக் கொண்டிருக்கிறது.இத்தகைய கொடிய பற்கள் எங்கள் மக்களின் எத்தனை தலைகளை உருட்டியது!இன்னும் எத்தனை தலைகளை உருட்டப்போகிறது?

 

தமிழ்த் (வி)தேசியவாதமானது அப்பாவி முஸ்லீங்கள்மீது அத்துமீறி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து,அவர்களை நாதியற்றவர்களாக்கி, அடித்து வெருட்டுகிறது.எதிர்க்கருத்துடைய தமிழ்பேசும் மக்களை நாயிலும் கேவலமாககச் சுட்டுக் கொல்கிறது. இதுவென்ன அரசியல்?,இதை இன்னும் அனுமதிக்க முடியுமா-தமிழின் பெயரால்,இனத்தின் பெயரால்,தேசத்தின் பெயரால் அனுமதிக்கமுனையும் ஒவ்வொருகணமும் நமது மக்களின் அழிவைத் துரிதப்படுத்துகிறோம்!

இது ,நாம் ஆற்றும் மிகப்பெரிய துரோகமான இழி செயல் இல்லையா?

எங்கள் மண்ணில் குருதியாறைத் திறந்துவிட்ட தமிழ் விதேசிய அதிகாரமையங்கள் அராஜகத்தை-பாசிசத்தை உலகம் முழுவதற்குமான சங்கிலித் தொடர் நகர்வாக்கிக் கருத்தியல் பரப்புரையைச் செய்வதற்கான தடைக்கல்லாகச் செயற்படும் மாற்று ஊடகங்களை, இல்லாதாக்கும் நகர்வில் தனது வலுக்கரத்தைப் பதிப்பது நமக்கு புதிதில்லைத்தாம்.என்றபோதும் இந்தத் தமிழ் மொழி ஊடாகக் கோடு கிழித்து,மக்களின் உரிமைகளைக் காவுகொண்டு தமது நலனை அடைய முனையும் தமிழ்ப் பாசிஸ்ட்டுகள்-மற்றும் ஆளும் வர்க்கமானது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவரும் தொடர் காரியத்தைத் தன்னையும் அறியாது ஆற்றிவருகிறது.ரீ.பீ.சீ.வானொலிமீதான நேற்றைய (24.11.2006)காட்டுமிராண்டித் தாக்குதலானது மிகவும் கொடூரமானதாகும்.இது மக்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயற்பாடுதாமென்பதில் இருவேறு கருத்து நிலைக்க முடியாது.

 

இத்தகைய தாக்குதல்களைப் பாசிசப் புலிகள் போன்றவொரு அமைப்பினால் மட்டுமே ஐரோப்பாவில் நிகழ்த்த முடியுமென்பதும்,சாதரணமான மக்களின் எந்த முனைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கான எந்தச் சாத்தியமும் மேற்குலகில் இல்லையென்பதும் நாம் புரிந்துகொள்ளத்தக்கதே!

 

ரி.பீ.சீ. வானொலி மீதான இந்தத் திடீர் தாக்குதலானது "மாவீரர்"தினக் கூத்துகக்ளை அது(ரீ.பீ.சீ.) கறாராக அம்பலப்படுத்துவதும் கூடவே பிரபாகரனின் அம்மணமான அறிவிலித்தனமானவுரைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு சூழலை இல்லாதாக்குவதாகவுமே செயற்படுத்தப்பட்டுள்ளது.நெருங்கிவரும் இன்னொரு கொடிய சூழலை நாம் மௌனமாக வரவேற்க முடியாது.

 

அந்த வானொலி(ரீ.பீ.சீ)வரும் 27.11.2006க்கு முன்பாக-விரைவாக வருவது மாற்றுக் கருத்துகளற்றவொரு கொடும் பாசிசச் சூழலுக்குள் இருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானது.இத்தகையவொரு நிலையில் ரீ.பீ.சீ.வானொலிக் கெதிரான தமிழ்ப் பயங்கரவாதமானதை நாம் உலக அரங்கில் அம்பலப்படுத்தி,அந்த வானொலிமீதான தாக்குதல் மாற்றுக்கருத்துக்கு-ஜனநாயகத்துக்கு,மக்களுக்கெதிரானதாகவே நாம் பிரகடனப்படுத்துவோம்.

இந்தவொரு தளத்தில் நாம் ரீ.பீ.சீ.க்கு ஆதரவாகக் கத்தவில்லை,மாறாக மாற்றுககருத்துக்கெதிரான-மக்களின் ஜனநாயகத்துக்கெதிரான அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகவுமே குரல் கொடுக்கிறோம்.அந்தவகையில் எமது தோழமைக் கரம் ரீ.பீ.சீக்கு உண்டு.அது அவர்களின் கருத்துகளுக்கானதல்ல.மாறாக அவர்கள் கருத்தாடும் உரிமைக்கானது.

ப.வி.ஸ்ரீரங்கன்

25.11.2006.