நாசகார இஸ்ரேலினது குண்டுகள் வெடித்துச் சிதறஉயிர் உதிர்ந்து குருதி கொட்டும் லெபனான் மக்கள்.

அந்த நாட்டின் பக்கத்து நாடு இஸ்ரேல் அதன் எல்லை நாடான எகிப்த்தின் அரைத் தீவு சினையில் "சாம் எல் சைக்" என்ற சுற்றுலாக் கடற்கரை மேவும் நகரம்.

சமீபத்திலும் இங்கும் குண்டுகள் வெடித்துருண்டன.

மனிதர்கள் செத்து மடிந்தார்கள்.


எங்கள் நாடு மட்டுமல்ல.இந்த நாடுகளும் ஐரோப்பியர்களுக்கு-அமெரிக்கர்களுக்காகக் குருதி சிந்திச் செத்து மடியும்போது,
நான் "சாம் எல் சைக்கில்"வந்து விரியும் செங்கடலில் நீந்திக் கொண்டிருந்தேன்.இந்தக் கொலைகளுக்கு நடுவில் மாண்டு விழும் சிறுசுகளைப்போன்ற சிறுசுகள் காணுமிடமெல்லாம் கைகளை ஏந்திக்கொண்டார்கள்!

"பசிக்கிறது காசு கொடு" என்றார்கள்.இவர்கள் எகிப்த்தியச் சிறார்கள்.

ஒரு பக்கம் குண்டினது கோரத்துள் பலியாகும் சிறார்கள்,மறுபுறம் அரசுகளின் கூட்டுச் சுரண்டலில் மாண்டுவரும் ஏழைச் சிறார்கள்!

இதற்குள் சமாதானத்தின் பிதா முபராக் எனும் பாரிய தட்டிகள் எகிப்த்திய வீதிகள் தோறும்.

குண்டு
குருதி,
வறுமை
பசி,-சாவு!

"கலோ ஒன் பை"(கலோ ஒன்றாவது வேண்டு)என்றபடி சிறார்கள் மொய்க்க மனது துவண்டுவிடும் சோகம்.

இந்தச் சோகம் மட்டுமல்ல.எகிப்த்தின் இன்றைய வாழ்வும் இனிவரும் வீழ்வும் சொல்வேன்.

வீடற்றவனின் வேதனையும் வீழ்ந்து போன நாகரீகத்தின் தொட்டிலின் சிதைவும் சொல்வேன்.பார்ப்பதைவிடக் கேட்பது பெரிதல்ல.வெள்ளைத் தேசங்களின் சின்னக் காசுகளைக் கண்டவர்களில்லை இந்தச் சிறுசுகள்.

சிரிக்கும் விழிகளுக்குள் சிந்தும் சோகம் சொல்வது எவ்வளவோ!

கேசாவின் பிரமிட்டுகளைவிடச் சினையின் கருங்கல் தொடர் மலைகளைவிட அந்தச் சிறார்களின் சின்னச் சிரிப்பு அழகானது.

முலையை நன்னும் மழலையை மடிக்குள் இட்டபடி சங்கு,முத்து மாலைக் கடை விரிக்கும் அன்னை,எந்தச் சுற்றுலாப் பேர்வழியும் ஏறெடுத்துப் பார்க்காதபோது அவள் சோகத்தோடு பாலைவனத்தில் பாதம் பதித்துக் கொட்டில் மீளும் சோகம்.

இந்தக் கதைகளுக்கு முன் லெபானான் மழலைகள் ஈழத்து மழலைகளின் கதைகளைச் சொல்வதைப்பாருங்கள்!

இஸ்ரேலியக் கொடுங்கரத்தில் இருப்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆயுதம்தாம்.

அமேரிக்காவின் "பேட்டிரியற் லோஞ்சர்" இஸ்ரேலைப் பாதுகாக்கலாம்.ஆனால் அப்பாவி அரேபிய-ஈழக் குழந்தைகளை எந்த லோஞ்சரும் காக்காது.

ஆயிரக்கணக்கான அப்பாவி லெபனான் மக்களைக் கொன்று குவித்துவிட்டு,இஸ்ரேல் ஜேர்மனியிடம் நடுநிலை இராணுவ (யு.என். நீலத் தொப்பி இராணுவம்) ஒத்துழைப்புக் கோருகிறது.உலகத்துப் பயங்கர வாதிகளின் இருப்புக்கு ஆபத்து வரும்போது, அவர்களின் கரங்கள் பலபத்து ஆயிரம் பயங்கர வாதிகளுடன் பிணைத்திருப்பதை இத்தகைய அழைப்பினூடு கண்டறியலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
04.08.2006