ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்றின்படி வருடந்தோறும் 4.5 கோடி கருஅழிப்புகள் உலகளவில் நடத்தப்படுகின்றது. இவை எல்லாம் பெண் தனது உடல் சுதந்திரத்தைப் பேணும் பெண்ணியப் பிதற்றல்களில் இருந்தோ, ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வழியாகக் கூறும் பெண்ணியச் சீரழிவில் இருந்தோ பெண்ணை விடுவித்து விடவில்லை. மாறாக ஏகாதிபத்தியச் சீரழிவில் இருந்தும், ஆணாதிக்கக் காமத்தைப் பெண் பூர்த்தி செய்யும் அழகான உடல் தேவையில் இருந்தும், ஆணாதிக்க அமைப்பின் தேவைகள+டாகவும், சிதைவினூடாகவும் நடந்தவைதான்.

 

 


அட்டவணை - 24
1997-இல், கரு அழிப்புகளைப் பார்ப்போம்.59


நாடுகள்                                            கரு அழிப்புகள்             பிறந்த குழந்தைகள்
பிரான்ஸ்                                                52,580                                      1,80,000
சுவீடன்                                                      9,460                                         32,000
பிரிட்டன்                                                12,850                                      1,90,000


கருஅழிப்புகள் நாட்டுக்கு நாடு அதன் பண்பாட்டு - பொருளாதார எல்லைக்குட்பட்டு வேறுபடுகின்றது. மேற்கில் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் புள்ளிவிபரத்தில் உள்ள வேறுபாட்டைத் தீர்மானிப்பது, இங்கிலாந்தில் மதமும், மன்னர் பரம்பரையின் ஆதிக்கத் தொடர்ச்சியுமேயாகும்.


பொதுவாக பூர்சுவா கண்ணோட்டத்தை ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொண்ட நாடுகளில் குழந்தை பிறப்புக்கும், அழிப்புக்கும் உள்ள இடைவெளி மூன்றுக்கு ஒன்றாக உள்ளது. அதே நேரம் பூர்சுவா கண்ணோட்டத்தை நிலப்பிரபுத்துவ வழியில் புரிந்து ஏகாதிபத்தியப் பண்பாட்டைக் கொண்ட இங்கிலாந்தில் ஒன்றுக்குப் பதினைந்தாக கருஅழிப்பு உள்ளது.


கருஅழிப்பு என்பது இருக்கும் ஆணாதிக்கப் பண்பாட்டின் பொருளாதார அமைப்புக்கும் உள்ள பண்பாட்டு உறவால் தீர்மானமாகின்றது. இதை மேலும் கீழே ஆராய்வோம். ஆணாதிக்கத்துக்கு உட்படும் பெண்ணின் உடல் சார்ந்தது என்பதால் இது பெண்ணின் உரிமை மற்றும் சுதந்திரம் என்ற கோரிக்கைகள், கோஷங்கள் முன் தள்ளப்படுகின்றது. பெண்ணின் பிரச்சினைகளை ஆணாதிக்கச் சிந்தனையின் சமூக வடிவமாகப் புரிந்து கொள்ளாத பிரிவுகள் ஆணை முன்நிறுத்தி எதிரியாகக் காட்டும் போது இவை பெண்ணின் சுதந்திரம், உரிமையாகக் காட்டப்படுவது நிகழுகின்றது. ஒரு பெண் கூட ஆணாதிக்கச் சிந்தனையில் வாழ்கின்றாள் என்ற சமூகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது மறுக்கின்ற பிரிவு ஆணை எதிரியாகக் காட்டும் போது கரு அழிப்பு பெண்ணின் சுதந்திரமாக, உரிமையாகக் காண்பது நிகழ்கின்றது.


இந்த ஆணாதிக்கச் சுரண்டும் சூறையாடும் சமூகத்தைப் புரிந்து கொள்ளாத அல்லது மாற்ற விரும்பாத பிரிவுகள் ஆணாதிக்கச் சமூகத்தை மாற்றுவதற்குப் பதில் ஆணை எதிரியாகப் பெண்கள் முன் நிறுத்துகின்றது. இதன் மூலம் பெண் சார்ந்த அனைத்தையும் பெண்ணின் சுதந்திரம் சார்ந்ததாக, சமூகத்துக்குப் புறம்பாக இட்டுக் கட்டுகின்றனர். இன்று சமூகத்தில் அடுத்த நேரத்துக்கு என்ன உணவு எனத் தெரியாது வாழும் 100 கோடி பெண்கள் பட்டினியில் பிறரின் எச்சில் சோத்தை எதிர்பார்த்து நிற்பதையும், வருடம் சில பத்து இலட்சம் பெண்ணைக் கொன்றொழிக்கும் ஆணாதிக்கச் சுரண்டல் சமூகத்தையும் பற்றி கவலைப்படாத பிரிவுகள்தான் ஆணுக்கு எதிரான பெண்ணின் சுதந்திரம் பற்றி கூச்சல் போடுகின்றனர். இந்த வகையில் அராஜகவாதப் பெண்ணியல் (இதையே தீவிரப் பெண்ணியல் என்று அடையாளப்படுத்துவோர்), பூர்சுவா பெண்ணியல்வாதிகள் போன்று ஆணைப் பெண்ணுக்கு எதிராக நிறுத்துகின்றனர். அதாவது பார்ப்பனியச் சிந்தனைக்குப் பதில் பார்ப்பாணை எதிரியாகக் காட்டும் இந்தியப் பூர்சுவா குழுக்கள் போல் இது உள்ளது.


பாட்டாளி வர்க்கம் ஆணைப் பெண்ணுக்கு எதிரான எதிரியாக நிறுத்துவதைத் திட்டவட்டமாக மறுக்கின்றது. மாறாக ஆணாதிக்கச் சிந்தனையை ஆண் - பெண் என இருவருக்கும் முன் எதிரியாகப் பிரகடனம் செய்கின்றது. இந்த ஆணாதிக்கச் சிந்தனையில் தனித்து ஆண் மட்டுமல்ல பெண்ணும் இருக்கின்றாள் என்பதை அம்பலப்படுத்துகின்றது. இதில் யாருக்கும் சலுகை வழங்குவதில்லை. 'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்ற ஆணாதிக்கக் கோட்பாட்டின் எல்லா விளக்கத்தையும், ஆணாதிக்கச் சலுகைகளையும் பாட்டாளி வர்க்கம் மறுக்கின்றது.


பெண்ணின் பின் தங்கிய சமூக நிலையைக் கவனத்தில் எடுத்து விசேட அக்கறையுடன் முன்னுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் கையாளுகின்றது. ஆணாதிக்க ஆணின் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் பெண்ணின் சார்பாக நின்று, பெண்ணை ஆணாதிக்கச் சிந்தனைக்கு வெளியில் கொண்டுவரப் போராடுகின்றது. அதேநேரம் சமூக இருத்தலில் முன்னேறிய ஆணின், ஆணாதிக்க விழிப்புணர்ச்சியைப் பாதுகாத்து அதற்கு எதிராக வரக்கூடிய ஆணாதிக்க வடிவ எதிர்ப்புகளின் போது முன்னேறிய ஆணின் பக்கம் சார்ந்து நிற்கின்றது. பாட்டாளி வர்க்கம் ஆண் - பெண் என்ற இடத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிராக யார் முன்னேறி நிற்கின்றனரோ, அவர்கள் பக்கம் சார்ந்து பிரச்சினையைக் கையாளவும், பொதுவான ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணாதிக்க நெருக்கடியில் பெண் பக்கம் சார்ந்தும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகின்றது. இது மற்ற அனைத்துப் பெண்ணியல் கோஷத்துக்கும் மாற்றான ஆண் - பெண் பற்றிய நிலைப்பாட்டில் இதுதான் பாட்டாளி வர்க்க நிலையாகும்.


பாட்டாளி வர்க்கம் இந்தச் சமூகத்தில் இருந்தபடி, சுதந்திரமாக எந்தத் தனிமனிதனும் செயல்பட முடியாது என்பதையும், தீர்மானத்தைச் செய்யவும் முடியாது என்பதையும் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது. சுதந்திரமும் பிரகடனமும் இந்தச் சமூகத்தின் போக்கில் அல்லது இதற்கு எதிரான மறுப்பில் மாற்றுச் சமூக அமைப்பைக் கோருவதில் மட்டுமே செய்யமுடியும். இந்த இரண்டு போக்கும் சமூகத்தின் முரண்பட்ட விதிக்கு உட்பட்டவை. அதாவது குறுக்கு - நேர், மேடு - பள்ளம், நட்பு - பகை, இன்பம் - துன்பம், நீளம் - கட்டை.. போன்ற எதிர் முரண்பாட்டு விதிக்கு வெளியில் யாரும் சுதந்திரமாகச் சிந்திக்கவோ, செயல்படவோ, முடிவு எடுக்கவோ முடியாது. இந்த நேர் எதிரான சமூகப் பார்வையில் இடையில் இருப்பதாகக் கற்பனை செய்வதும், சுதந்திரமாகப் பிரகடனம் செய்வதும் இதில் ஒன்றை ஒட்டியோ, அண்டியோ மட்டுமே இயங்குகின்றது. ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பது ஆணாதிக்கச் சமூகத்தை மறுக்கின்ற போராட்டமாகவே இருக்கின்றது. இதில் இருந்து இரண்டுமற்ற நிலை தோன்ற முடியுமே ஒழிய பெண்ணாதிக்கம் உருவாக முடியாது. பெண்ணாதிக்கம் என்பது இன்னொரு ஆணாதிக்கமாகவே இருக்கும். இதனால் மேடும் பள்ளமுமற்ற சமநி;லை உருவாக முடியாது.


முரண்பாடு பற்றிய இயங்கியல் விதியையும் அதை ஒட்டிய இயக்கம், செயல் பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம். ''வாழ்வு இன்றேல் - மரணமில்லை. மரணமின்றேல் - வாழ்வு இல்லை. மேல் இன்றேல் - கீழ் இல்லை. கீழ் இன்றேல் - மேல் இல்லை. நன்மை இன்றேல் - தீமை இல்லை. தீமை இன்றேல் - நன்மை இல்லை. வசதி இன்றேல் - கஷ்டமில்லை, கஷ்டம் இன்றேல் - வசதி இல்லை. பெருநில உடைமையாளர்கள் இன்றேல் - குத்தகை விவசாயிகள் இல்லை. குத்தகை விவசாயிகள் இன்றேல் - பெரு நில உடைமையாளர்கள் இல்லை.


அதே போன்று முதலாளிய வர்க்கம் இன்றேல் - பாட்டாளி வர்க்கம் இல்லை. பாட்டாளி வர்க்கம் இன்றேல் - முதலாளிய வர்க்கம் இல்லை. நாடுகள் மீது ஏகாதிபத்திய அடக்குமுறை இன்றேல்; - குடியேற்ற நாடுகளோ, அரைக் குடியேற்ற நாடுகளோ இல்லை. குடியேற்ற நாடுகளோ, அரைக் குடியேற்ற நாடுகளோ இன்றேல்; - நாடுகள் மீதான ஏகாதிபத்திய அடக்குமுறை இல்லை.


அனைத்து எதிரானவைகளின் நிலைமைக்கும் இத்தகையது தான். குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் ஒருபுறம் அவை ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன. மறுபுறம், அவை ஒன்றுக்கொன்று உறவோடும், ஒன்றில் ஒன்று ஊடுருவியும், ஒன்றோடொன்று ஊடுருவிப் பரந்தும், ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன. இத்தகையதொரு பண்பு நிலையைத்தான் ஒத்த இயல்பு எனக் கூறுவர்.


குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் முரண்பட்ட கூறுகள் அனைத்தும் ஒத்த இயல்பற்ற பண்பு நிலையைக் கொண்டிருக்கின்றன. அந்நேரத்தில், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும் இருக்கின்றன. எதிரானவை எப்படி ஒத்த இயல்புடையவையாக இருக்கமுடியும்? என இயங்கியல் ஆராய்கிறது. இது பற்றி கூறும் போது லெனின் 'எதிரானவைகள் எப்படி ஒத்தவையாக இருக்க முடியும்? அவை எப்படி ஒத்தவையாக இருக்க முடிகிறது? (அவை எப்படி ஆகின்றன?) எத்தகைய நிலைமைகளில் அவை ஒத்த இயல்புடையதாயிருக்கின்றன? ஒன்று மற்றதாகத் தாமாகவே உருமாறுகின்றன? ஏன் மனிதரின் உள்ளம் எதிரானவைகளை, இறந்தவையாகவும் விறைத்து போனவையாகவும் கொள்ளாது, உயிருள்ளதாகவும், தாமாகவே ஒன்று மற்றொன்றாக மாறக்கூடியதாகவும் பார்க்க வேண்டும் என்பதையே இயங்கியல் சுட்டிக் காட்டுகிறது.'


அப்படி இருக்கையில் அவை எப்படி ஒத்த இயல்புடையவையாய் இருக்கமுடியும்? அதற்கான காரணம், ஒன்று மற்றொன்றின் வாழ்வுக்கான நிபந்தனையாக ஆகிறது. இதுதான் ஒத்த இயல்பு என்று கூறுவதின் முதல் கருத்தாகிறது.


அதனால் முரண்பட்ட கூறுகளில் ஒன்று மற்றொன்றின் வாழ்விற்கான முன் நிபந்தனையாகிறது. அதனால் அவற்றிற்கிடையே ஒத்த இயல்புண்டு. அதனால் அவை ஒரே பொருளுக்குள்ளேயே சக வாழ்வு நடத்த முடியும். ஆக இவைகளை மட்டும் நாம் கூறினால் போதுமா? இல்லை இவைகளை மட்டும் நாம் கூறினால் போதாது. ஒவ்வொன்றும் தன் வாழ்விற்காக மற்றொன்றுடன் சார்ந்திருப்பதாக மட்டும் கூறினால் இவ்விஷயம் முடிந்து விடுகிறதா? இல்லை இதைவிட மிக முக்கியமானதொரு கருத்தும் உண்டு. அது என்னவெனில், அவை ஒன்று மற்றொன்றாக மாறுவது என்பதாகும். அதாவது, குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில், ஒரு பொருளில் உள்ள முரண்பட்ட கூறுகளில் ஒவ்வொன்றும் தன்னைத் தன்னுடைய எதிரானதாக மாற்றிக் கொள்கிறது. தனது நிலையைத் தன்னுடைய எதிரானதின் நிலைக்கு மாற்றுகின்றது. தனது பண்பைத் தன் எதிரானதின் பண்பாக மாற்றிக் கொள்கிறது. இது முரண்பாட்டின் ஒத்த இயல்பின் இரண்டாவது கருத்தாகும்.''67


முரண்பாட்டு விதியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத வரை ஆணைப் பெண்ணுக்கு எதிராக நிறுத்துவது பண்பாகின்றது. ஆண் பெண்ணுக்கு இடையில் இருக்கக் கூடிய ஒத்த இயல்புகளும், முரண்பட்ட இயல்புகளையும் கவனத்தில் கொள்ளாத, அவை மாறிக் கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருப்பதைக் கண்டு கொள்ளாத கோஷங்கள் இயங்கியல் மறுப்பை நிலை நிறுத்துகின்றது. ஆண் பெண்ணின் எதிரியல்ல. அது போல் பெண் ஆணின் எதிரியல்ல. மாறாக ஆணாதிக்கச் சிந்தனையே பெண்ணின் எதிரியாக உள்ளது. இது பெண்ணிலும் உள்ள ஆணாதிக்கம் பெண்களுக்கு எதிராக உள்ளது. பண்பாட்டு கலாச்சாரப் பொருளியல் தளத்தில் அநேகப் போராட்டக்களத்தில் பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்கக் கண்ணோட்டத்தைத் தனிப்பட்ட ஆண் அல்லது பெண் எதிர்த்து போராடும் போது ஆண் அதை எதிர்ப்பது நிகழ்கின்றது. இங்கு தனிமனிதன் என்ற வகையிலோ அல்லது பால் ரீதியிலான பிளவிலோ ஆணாதிக்கத்;துக்கு எதிரான போராட்டத்தில் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாக ஆண் அல்லது பெண் ஆணாதிக்கத்துக்கு எதிரான சிந்தனை மட்டுமே பால் வேறுபாட்டைக் கடந்து ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றது.
ஆண் பெண் என்ற முரண்பாடும், வேற்றுமையும் பாலியல் உறுப்பிலும், அதன் மீதான நடத்தையிலும், அதன் மீதான விளைவிலும் மட்டும் இருக்க முடியுமே ஒழிய மனிதப் பண்பாடுகள், சிந்தனைகள், உழைப்புகள், கலாச்சாரங்கள், செயல்களில் பிளவு இருக்கமுடியாது. இன்று பிளவுபட்டுள்ள இவைகளை அகற்றும் போராட்டத்தில் ஆண் பெண்ணின் குறிக்கோள் ஒன்றை நோக்கி நகரவேண்டும்;. இதை மறுத்து ஆணாதிக்கத்துக்குப் பதில் பெண்ணாதிக்கத்தைக் கோரின் அது உண்மையிலேயே ஆணாதிக்கம் நீடித்திருக்க கோருவதாகும்.


இன்று பல பூர்சுவா மற்றும் அராஜகப் பெண்ணியல்வாதிகள் மற்றும் ஏகாதிபத்தியப் (பின்நவீனத்துவக்) கோட்பாட்டாளர்களும், ஆணாதிக்கத்துக்கு எதிரான ஆண் பெண் இணைந்த சமூகத்தைக் கோருவதற்குப் பதில் பெண்ணாதிக்கத்தை முன் வைக்கின்றனர். இவர்களே பெண்ணின் சுதந்திரமான உடல் கட்டுப்பாடு என்ற கோஷத்தின் கீழ் ஆண் எதிர்ப்பின் ஊடாகக் கரு அழிப்பை நியாயப்படுத்துகின்றனர். இயற்கையின் தெரிவான பாலியல் வேறுபாட்டைக் கொண்ட பாலியல் நடத்தைக்குப் பதில் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் என்ற ஆண் எதிர்ப்பு அல்லது பெண் எதிர்ப்பு கோஷத்தை முன்நிறுத்தி ஓரினச்சேர்க்கைக்குக் கோட்பாட்டு விளக்கம் கொடுத்து ஆணாதிக்கத்தைத் தக்க வைக்கின்றனர்.


கரு அழிப்பு இந்த ஆணாதிக்கச் சுரண்டல் சமூகத்தில் ஏற்பட்ட புண்ணிலிருந்து எழும் நாற்றத்தின் விளைவு தான் என்பதை அடையாளம் காட்டாத, அதற்கு எதிராகப் போராடாத அனைத்துக் கோட்பாட்டு விளக்கமும் ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பவைதான். இவை தொடர்பாக நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் சமர் என்ற மார்க்சியப் பத்திரிக்கையிலும், வேறு பல பத்திரிக்கையிலும் விவாதித்திருந்தேன். அதில் ஒரு தவறைச் செய்தது தொடர்பான ஒரு சுயவிமர்சனத்தையும் செய்திருந்தேன். அதாவது சாதாரண மக்கள் அன்றாட வாழ்வில் இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் போது கரு அழிப்புச் செய்வதைக் கோட்பாட்டாளர்களின் கரு அழிப்புடன் குழப்பி இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க தவறிய போதுதான் அத்தவறு ஏற்பட்டது. என்னுடன் விவாதித்த அனைவரும் இந்த வேறுபாட்டைச் சுட்டி காட்டியதில்லை. அதே நேரம் அவர்கள் கரு அழிப்பூடாகத் தமது ஆணாதிக்கக் கோட்பாட்டிற்கே விளக்கம் கொடுத்தனர்.


உலகளவில் 50 சதவீதமான கருத்தரிப்புகள் முன் கூட்டியே திட்டமிடப்படாதவை என உலகச் சுகாதார அமைப்பு கூறுகின்றது. பிரேசிலில் வருடம் ஒன்றுக்கு 1 கோடியே 30 இலட்சம் கருத்தரிப்பு நிகழ, 50 இலட்சம் கருத்தரிப்புகள் இரகசியமாக அழிக்கப்படுவதை உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகின்றது. குடும்பமாகக் குழந்தை பெறக் கூடிய நிலையில் வாழும் 71 சதவீதம் பிரேசிலியர்; கருத்தடையைப் பயன்படுத்துகின்றனர். இதில் 41 சதவீதத்தினர் கருத்தடையையும், 44 சதவீதத்தினர் மலடாக்கப்பட்ட நிலையில், இந்தக் கருஅழிப்பு உயர்ந்த பட்ச எல்லையில் காணப்படுகின்றது.


லெனின் 1914-இல் எழுதிய கட்டுரையில், ''நியூயார்க்கில் ஒரு வருடத்தில் 80,000 கருச்சிதைவுகள் செய்யப்பட்டன. பிரான்சில் மாதம் ஒன்றுக்கு 36,000 கருச்சிதைவுகள் செய்யப்பட்டன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஐந்து ஆண்டுகளில் கருச்சிதைவு இரண்டு மடங்காகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


நமது தலைமுறையினரை முடமாக்கி நாசப்படுத்திவரும் வாழ்க்கையின் இன்றைய நிலையை எதிர்த்து நாம் போராடுவதைவிட, மேலும் சிறப்பாக மேலும் ஐக்கியத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும், உறுதியுடனும் அவர்கள் ஏன் போராடக் கூடாது?


விவசாயி, சிறு கைத்தொழில் செய்பவர், அறிவாளி, ஆகியோருடைய குட்டிப் பூர்சுவாக்களின் உளப்பாங்கிற்கும், பாட்டாளியின் உளப்பாங்கிற்கும் இடையேயுள்ள தீவிரமான வித்தியாசமாகும் இது. குட்டி பூர்சுவா தான் அழிவை நோக்கி போய்க் கொண்டிருப்பதையும்...... கதியில்லாமல் அழிந்து வரும் அதன் எதிர்காலம் பற்றி நம்பிக்கையற்ற சோர்வும், கோழைத்தனமும் கொண்ட ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக அவன் இருக்கின்றான். செய்வதற்கு ஒன்றும் இல்லை.... நமது மனவேதனையை, கடுமையான உழைப்பை, நமது வறுமையை, நமது கேவலத்தை அனுபவிக்க குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்திருக்கக் கூடாதா? என்பதுதான் குட்டிப் பூர்சுவாவின் அழுகுரல்.


வர்க்கப் பேதம் பெற்ற தொழிலாளியின் கண்ணோட்டம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இவ்வழுகுரல்கள் எவ்வளவு மனப்பூர்வமாகவும், உளமார்ந்ததாகவும் இருந்த போதிலும் அவற்றால் தன் உணர்வு மழுங்கடிக்கப்படுவதை அவன் அனுமதிக்க மாட்டான்;.... நாம் நன்மைக்குரியவர்கள். போராடுவதற்காக நாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டோம், வேகமாகக் கற்று வருகிறோம்....நமது குழந்தைகள் நம்மைவிட நன்றாகப் போராடுவர். அவர்கள் வெற்றியும் பெறுவர்.... 'நமக்குக் குழந்தைகள் இல்லையென்றால் அந்த அளவிற்கு நல்லதாகப் போயிற்று' என்று பீதிக்குரலில் அல்லது மெதுவான குரலில் வெளியிடும் உணர்ச்சியற்ற அகம்பாவம் பிடித்த குட்டிப் பூர்சுவா தம்பதிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நவீன-மால்தூஸ் விவாதத்திற்கு நிபந்தனையற்ற எதிரிகள்தான் நாம். இதுதான் பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குரல்.


கருச்சிதைவுக்கு எதிரான அல்லது கருத்தடை முறைகள் பற்றி பிரசுரங்கள் வினியோகிப்பதற்கு எதிரான சட்டங்களை நிபந்தனையின்றி தடை செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருவதிலிருந்து நமது மேற்சொன்ன நிலை நம்மை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. இத்தகைய சட்டங்களெல்லாம் ஆளும் வர்க்கங்களின் கபட நாடகமே. இந்தச் சட்டங்கள் முதலாளித்துவத்தின் புண்களை ஆற்றுவதில்லை. அவை அவற்றை ஆற்றமுடியாத புண்களாகவே மாற்றுகின்றன.''60


கரு அழிப்புக்கான காரணங்கள் அனைத்தும் இந்த ஆணாதிக்கத்தின் கொடூரமான பண்பால் ஏற்படுபவை என்பதை மறுப்பவர்கள்தான், அந்தப் பண்புக்கு எதிராகப் போராட மறுப்பவர்கள்தான் கரு அழிப்பைப் பெண்ணியத்தின் கூறாக ஆண் எதிர்ப்பில் இருந்து பெண்ணை நோக்கி வைக்கின்றனர். கரு அழிப்பு ஆணாதிக்கத்தின் விளைவுகள் என்பதால் அதற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கோட்பாட்டு ரீதியாகக் கரு அழிப்புக்கு எதிரான பிரச்சாரத்தை ஆணாதிக்கத்துக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுகின்றது. சாதாரண மக்கள் கரு அழிப்பு செய்யும் போது அந்த மக்களுக்கு இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பின் துன்பத்தைப் புரியவைத்து கரு அழிப்பு தீர்வு அல்ல என்பதையும் விளக்குகின்றது. கோட்பாட்டு விளக்கம் கொடுக்கும் கருஅழிப்பு வாதிகள் கரு அழிப்புக்கான ஆணாதிக்கப் பண்பை எதிர்த்து கரு அழிப்பைத் தடுப்பதுக்குப் பதில் நியாயப்படுத்துவதன் மூலம் எப்படி கரு அழிப்புக்கான ஆணாதிக்கக் கூற்றைப் பாதுகாக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துவதில் பாட்டாளி வர்க்கம் உறுதியாகப் போராடும்.


கரு அழிப்பைச் சட்டவிரோதமாகச் செய்யும் போது, அதற்குத் தண்டனையை கொடுக்கும் போது அதைப் பாட்டாளி வர்க்கம் எதிர்த்து இந்த ஆணாதிக்கக் கொடுமையால் ஏற்பட்ட இந்த அவலத்தை இந்தச் சட்ட அமைப்பு பாதுகாக்கின்றது என்பதை அம்பலப்படுத்தும்;. அதேபோல் கரு அழி;ப்புக்குச் சட்ட அங்கீகாரம் அரசு கொடுக்கும் போது இது எப்படி கரு அழிப்புக்கான ஆணாதிக்க காரணத்தைப் பாதுகாக்கின்றது என்பதையும் அம்பலப்படுத்தும்.


கரு என்பது ஆணுக்கு எதிரான பெண்ணின் உடல் சார்ந்த சுதந்திரமான விடயமல்ல. ஆண் பெண்ணின் சேர்க்கையில் உருவாகும் கரு ஆண் - பெண் இருவரின் பங்களிப்பில் உருவாகின்றது. இதைப் பெண்ணின் உடல் தாங்குகின்றது என்பது இயற்கையின் தேர்வு. இதை ஆண் பெண் மீது திணித்ததல்ல. ஆனால் ஆணாதிக்கச் சிந்தனை சார்ந்த உணர்வு அதைப் பெண் மீது சுமையாக மாற்றுகின்றது. இதை ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிராகக் குழந்தையின் பிறப்புக்குப் பிந்திய வாழ்வு மீதாக மாற்றியமைக்கப்பட போராட வேண்டுமே ஒழிய ஆணுக்கு எதிராகப் பெண்ணை நிறுத்துவது சமூகச் செயல்பாட்டை மறுக்கும் புதிய உலகமயமாதல் ஆணாதிக்கக் கண்ணோட்டமாகும். இதில் ஆண் - பெண் உறவின் பின்னால் உருவாகும் கருவின் மீதான முடிவைப் பெண்ணும் சரி, ஆணும் சரி எடுக்கமுடியாது. ஏனெனில் அது மூன்றாவது உயிரொன்றின் விடயமாகி விடுகின்றது.


கடந்துவந்த சமூகங்கள் பலவற்றில் குழந்தைகள் இயற்கையின் சீற்றத்தைத் தடுக்கவும், மனிதர்களின் வாழ்வு தளைக்கவும் பலிகொடுக்கப்பட்டனர். இது பல வரலாறுகளில் பல ஆயிரம் பேரைப் பலி கொடுத்ததற்கு உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தங்கள் வாழ்வைப் பாதுகாக்க இதை நியாயப்படுத்தினர். தமது வாழ்வில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அறிவின்றி அல்லது அறியாமையில் அல்லது ஏமாற்று மோசடிக்காரர்களின் சொகுசு பிழைப்பிற்குக் குழந்தைகளைப் பலி கொடுத்தனர். இதை இன்று நாம் காட்டுமிராண்டித்தனம் என்று அறிவோம். அதே போல் கருவில் உள்ள குழந்தையைப் பெண் கொல்ல உரிமை உண்டு என்பது அதற்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல. ஆணாதிக்கத்தால் பெண்ணின் இருண்ட வாழ்க்கையைப் போக்க குழந்தையைப் பலி கொடுத்து ஆணாதிக்கத்தை விட்டுப் பெண்கள் வெளியே வந்தார்களா? அல்லது வரலாறு முழுக்க கோடி கோடியாகக் கருவில் அழிக்கப்பட்ட போது அத்தாய்மார்கள் ஆணாதிக்கத்துக்கு வெளியில்தான் வாழமுடிந்ததா? இல்லை. ஒருக்காலும் இல்லை. அதே ஆணாதிக்க நுகத்தடியின் கீழ் துன்பம் தொடர்வதாகவே இருந்தது, இருக்கின்றது. இன்று குறைவாகக் குழந்தை பெற்றால் வறுமை ஒழியும். இதன் மூலம் குழந்தையின் அனைத்து ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற விளம்பரங்களை, கோட்பாட்டு விளக்கங்களை ஏற்று கருத்தடைச் செய்தவர்களுக்கு, வறுமை ஒழிந்ததா? இல்லை. மாறாக அதிகரித்து செல்லுகின்றது. இது போல் தான் கருவை அழித்தவர்களின் நிலையும் உள்ளது.


பெண்ணின் உரிமை என்பது பின் உரிமை என்பது கூட ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணாதிக்க எல்லைக்குள்தான் உயிர் வாழ்கின்றது. மேற்கிலும், மூன்றாம் உலகின் மேட்டுக்குடியிலும் பூர்சுவா ஆணாதிக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் கலாச்சாரச் சிந்தனை வட்டத்துக்குள் தான் ஒவ்வொரு பெண்ணும் கரு அழிப்பைச் செய்கின்றாள். வறிய மக்கள் மீது கரு அழிப்பு ஆணாதிக்க வடிவில் மேட்டுக்குடியால் ஏகாதிபத்திய வடிவில் திணிக்கப்படுகின்றது. பெண் சுதந்திரமாக ஏகாதிபத்தியச் சிந்தனை தளத்துக்கு வெளியில் சிந்திக்க முடியாது.


அப்படி சிந்திக்க முடியுமெனின் அது ஏகாதிபத்தியத்துக்குச் சார்பான சிந்தனையிலும், பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான சிந்தனையிலும் தான் சிந்திக்க முடியும்;. இவ்வுலகில் எதிரானது என்பது பாட்டாளி அல்லது முதலாளி என்ற எல்லையில் மட்டுமே சாத்தியம். மற்ற வர்க்கங்களில் முதலாளி அல்லது பாட்டாளியின் சார்பு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்;. ஏகாதிபத்திய இலாபநோக்கிலான மருத்துவக் கொள்கை, ஜனத்தொகை கொள்கை, குடும்பக் கொள்கை... போன்றவற்றைத் தாண்டி பெண்ணின் கரு அழிப்பு நடப்பதில்லை. குறைந்த பட்சம் பெண்ணின் உரிமையாக இருந்தாலும், பெண்ணின் உடல் சார்ந்த விடயமாக இருந்தாலும், அது இந்த ஏகாதிபத்திய அமைப்புக்குட்பட்டது என்பது அல்லவா உண்மை. இங்கு சுதந்திரம் என்பது ஏகாதிபத்தியச் சமூக அமைப்பிற்கு வெளியில் பெண்ணிடம் தனித்து எப்படி இருக்கமுடியும்? இதை எந்தப் பெண்ணியல்வாதியும் கூறுவதில்லை. சமூகத்துக்கு (ஆண் - பெண்) வெளியில் சுதந்திரம் என்பது கற்பனையானது. இங்கு ஆணும் சரி, பெண்ணும் சரி சுதந்திரமாகத் தனித்துவமாக வாழமுடியாது. இங்கு சுதந்திரம் என்பது ஆணாதிக்கத்துக்கு உட்பட்டது. இது எதிராக அல்லது ஆதரவாக மட்டுமே இருக்க முடியும். இங்கு ஆணாதிக்கத்துக்கு எதிரானது என்பது ஆணாதிக்க விளைவுக்குக் காரணமான ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுவதே ஒழிய, விளைவுகளைத் தலையில் வைத்து கூத்தடிப்பதுதல்ல.


கூரியர் பத்திரிக்கை செய்தியொன்றில் உலகில் 100 ஆண்களுக்குப் பெண்கள் 106 ஆக இருக்க, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கொரியா போன்ற நாடுகளில் இது 94 ஆக இருக்கின்றது. இது கொரியாவில் 1982-இல், 94 பெண்களாக இருந்தது 1989-இல் 88-ஆகக் குறைந்துள்ளது. அதாவது சிசுக் கொலை, கருஅழிப்பு காரணமாக ஆசியாவில் 10 கோடி பெண்கள் காணாமல் போயுள்ளனர். கட்டற்ற உலகமயமாதல் பெண்களை ஆணாதிக்கமயமாக்கி உள்ளதுடன், அதன் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகின்றது. இந்த நிலையில் கரு அழிப்பைப் பெண்ணின் உரிமையென்றும், கரு அழிப்பைப் பெண்ணின் சுதந்திரம் என்றும் கூறும் ஆணாதிக்கப் பூர்சுவா கோரிக்கையின் பின்னால், மௌனமாகப் பெண்கள் கோடி கோடியாகக் காணாமல் போய்விடுகின்றனர்.


இந்தக் கூத்தடிப்புகளின் சில பக்கங்களை மேலும் பார்ப்போம். அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஒன்றின் அறிக்கையில், இந்தியாவில் 10 இலட்சம் பெண் குழந்தைகளை 1981 முதல் 1991 வரை கருவில் அழித்துள்ளனர். இதுபோல் சீனாவிலும் பத்து இலட்சம் பெண் குழந்தைகளைக் கருவில் வைத்து அழித்துள்ளனர். இந்தியாவில் 1981 முதல் 1991 வரையில் 4 முதல் 6 வயது வரையிலான 40 இலட்சம் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் காணாமல் போயுள்ளனர்.55 சீனாவில் வருடம் ஐந்து இலட்சம் பெண் சிசுக்கள் கருவில் வைத்தே கொல்லப்படுகின்றனர். (16.7.1991)6 யூனிசேவ் அறிக்கையின் படி நாலு கோடி பெண்கள் இந்தியாவில் காணாமல் போயுள்ளனர். இது கருவிலும், கருவிலிருந்து பிறந்த பின்னும் அழிக்கப்பட்டதால் நிகழ்ந்துள்ளது. உலகில் ஜனத்தொகை பிறப்பால் 100 ஆணுக்கு 106 பெண்ணாக இருக்க இந்தியாவில் 94 ஆக உள்ளது.45 ஆப்பிரிக்காவில் 1980-இல், ஆண் பெண் விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,015 பெண்கள் இருக்க, இந்தியாவில் 931 ஆக இருக்கின்றது.5


இன்று பெண்களை இழிநிலையாகக் கருதுவதுடன் பெண் என்றால் கருவில் அழிப்பதும், பிறந்தபின் கொலை செய்துவிடுவதும் என்ற நிலை வேகமாகப் பரவிச் செல்கின்றது. உதாரணமாகச் சேலம் மாவட்டத்தில் 1,250 குடும்பத்தை எடுத்து ஆய்வு செய்த போது 750 குடும்பத்துக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர்வாழ்கின்றது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.48 இலங்கையில் 1989 முதல் 1993 வரையான காலத்தில் பதிவான கருஅழிப்புகளில் பெண் குழந்தை எனத் தெரிந்து 4,000 பெண்கள் கருவிலேயே கொல்லப்பட்டனர். (28.8.1994)27


NAGO DE SARVEY

 

என்ற ஜப்பானிய ஆய்வு நிறுவனம் 1969-இல், செய்த ஆய்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்த பெண்களில் முப்பது சதவீதத்தினர் கருக்கலைப்புக்குப் பின் பல நோய்களைச் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. இது போன்று கனடா நாட்டு ஆய்வு ஒன்றில், மூன்றில் ஒரு பெண் கரு அழிப்பின் பின் குழந்தைப் பேறே இல்லாது போயுள்ளனர். 15.7.1970 ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில், நடந்த ஐந்து கோடி கரு அழிப்பில் பாதி சட்டவிரோதமாக நடந்தது என எடுத்துக் காட்டுகின்றது. கருஅழிப்பில் வருடம் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர்.(6.9.1998)27


கனடாவில் 1990-களில் 1,05,000 கருஅழிப்புகள் வருடாவருடம் நடை பெற்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் கருஅழிப்புக்கு உள்ளாகின்றது.31 மும்பாய் பகுதியில் நடந்த ஆய்வில் 8,000 கரு அழிப்பில் ஒன்று மட்டுமே உடல் ஆபத்து எனக் கருதி செய்யப்பட்டதாகும். மீதி அனைத்தும் தமக்குப் பெண் குழந்தை வேண்டாம் என்ற காரணத்தால் அழிக்கப்பட்டன. (16.3.2000)20 ஆணாதிக்க விளைவால் ஏற்படும் கரு அழிப்புகளால் மீளவும் பெண் பாதிக்கப்படுவது பண்பாகின்றது. பொதுவாகக் கரு கண்டுபிடிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு (ஸ்கேன் மிஷின்) கருவில் குழந்தையின் பால் வேறுபாட்டை அடையாளம் கண்டு கொள்ளவும், அது பெண் எனின் அழிக்கவுமே பயன்படுகின்றது. பெண் சந்திக்கும் கொடுமைகள், பெண்ணைப் பெற்ற தாய் - தந்தை அனுபவிக்கும் சமூக நெருக்கடிகள், ஆண் வாரிசுரிமையைக் கோரும் ஆண் வழிச் சமூகம் ஆகியவை கருவிலேயே பெண்ணைக் கொன்றுவிடுவதில் தீர்வாகின்றது. இந்த வசதியற்ற வறிய பிரிவு பிறந்த பெண் குழந்தையைத் திட்டமிட்டே பட்டினி போட்டு அல்லது வேறு வழியில் கொன்று போடுகின்றது.


தாய்க்கே இருக்கக் கூடிய தாய்மையின் குழந்தை பாதுகாப்புணர்வு ஆணாதிக்கத்தால் சிதைக்கப்பட்டுப் பெண்ணின் உன்னதமான இயற்கை உணர்வுகளைக் கூட நலமடிக்க வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பாலியல் உணர்வு, இயற்கையாகவே உள்ள குழந்தை மீதான தற்காப்பு மற்றும் தன் உயிரைவிடக் குழந்தையைப் பாதுகாக்கும் உயிராற்றலான பண்பை நவீன அறிவியலும், ஆணாதிக்கக் கொடூரங்களும் சிதைத்து அதை மழுங்கடிக்கின்றது.


உலகில் நடைபெறும் பெருமளவான கரு அழிப்புகளில் பெரும்பாலானவை கருவில் பெண்பால் அடையாளத்துக்கூடாக நடப்பதைப் புள்ளிவிவரம் காட்டுகின்றது. இதனால் இந்தியா மற்றும் சீனாவில் அதிகமான பெண்கள் ஜனத்தொகையில் காணாமல் போகின்றனர். இந்த வகையில் சில வருடத்தில் கோடிக்கணக்கான பெண்கள் திட்டமிட்டே கரு அழிப்பில் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் மட்டும் 10,000 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்பனைக்காக வைத்திருந்த போது மீட்கப்பட்டனர். மீட்டதே இவ்வளவு எனின், மீட்காதது எவ்வளவு? என்ற நிலைமை கற்பனைக்கு எட்டாத நிலையை அடைந்துள்ளது. இதைப் பற்றி கம்யூனிச எதிர்ப்புக் கோட்பாட்டாளர்கள் கவலைப்படுவதில்லை. இதைத் தடுக்க கம்யூனிசம் வன்முறையைக் கையாளும் போது மட்டுமே, இந்த ஏகாதிபத்திய எடுபிடிகள் குரைக்கின்றனர்.


அத்துடன் கரு அழிப்பில் ஈடுபடும் பெண்களில் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர். கரு அழிப்பில் ஈடுபடும் பெண்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். பலர் கரு அழிப்புக்குப் பின்னால் கரு வளத்தையே இழக்கின்றனர். இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?


ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சார பொருளாதாரச் சுரண்டல் அமைப்பால் ஏற்படும் ஆணாதிக்க விளைவைக் கரு அழிப்பு ஊடாகத் தீர்க்க முனைந்து அதன் பக்கவிளைவுகள் சிலவற்றையே புள்ளிவிபர ரீதியாகக் காண்கின்றோம். பெண் கருஅழிப்பு ஊடாக விடுதலை பெறவில்லை. மாறாக மேலும் ஆணாதிக்கப் பிடியில் அழுந்துகின்றாள். பெண் நிரந்தரமாக விடுபடவேண்டுமாயின் ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தை வேரறுக்க போராட வேண்டும். அதுவே ஆணாதிக்க இடைத் தீர்வுகளையும் விட பெண்ணை வரலாற்று ஒடுக்குமுறையில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கும்;.