ஜப்பானில் பெரும் பணக்காரர்கள் ஆசிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த பின் கைவிடப்படுவது சாதாரணமாக உள்ளது. இந்தப் பாலியல் தரகில் ஈடுபடும் இரகசிய நிறுவனங்கள் மட்டும் 700 உள்ளன. இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியா என்ற பெண் வழக்கு தொடர்ந்து போராடியதால் இது அம்பலமானது. (1.5.1991)6 பெண்ணை ஏமாற்றி, பாலியலை அனுபவிப்பது என்பது உலகம் தழுவிய போக்காக உள்ளது. இங்கு எப்போதும் பெண் தற்காப்பு நிலையிலும், ஆண் எப்போதும் தாக்குதல் நிலையிலுமே அணுகுகின்றனர். இது சில விதிவிலக்காக ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடையே பெண்ணும் தாக்குதல் கட்டத்துக்கு மாறிவிடுவது உண்டு.
ஆணாதிக்கம் பெண்ணுக்கு மட்டுமான ஒருதாரமணத்தில் உருவான திருமணங்கள், காதல்கள்.... பெண்ணின் பண்பாடாக, கலாச்சாரமாக நீடிக்கின்றது. இந்தத் திருமணங்கள், காதல் மேலான பெண்ணின் அளவு கடந்த நேர்மையைப் பலதாரமணத்தில் வாழும் ஆண் தனது சொந்த மனைவிக்கு, காதலிக்கு முன் வைத்தபடி, தான் மீறத் துடிப்பது எதார்த்தமாக உள்ளது. ஆண் அனுபவிக்க முடிகின்ற பலதார மணத்தைப் பெண் விரும்பினாலும் சமுதாயத்தை மீறி விடமுடியாது. இந்த மீறல் சமுதாய ரீதியாக அல்லாத அனைத்துத் தளத்திலும் ஒருதார மணத்தை மீறுகின்ற போது, அது விபச்சாரமாக மாறிவிடுகின்றது. இந்த விபச்சாரம் ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரப் பண்பாட்டுப் போக்கில் வழிகாட்டுகின்றது.
பெண் தனது திருமணத்தில் அல்லது கூட்டு வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை விட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் எல்லா நிலையிலும் அது பகிரங்கத் தளத்தில் நிகழ்வது போராட்டத்தின் பகுதியாகின்றது. இரகசியமான உறவுகள் அல்லது மீறல்கள் பலவீனமானப் போராட முடியாத பெண்களின் சில பொதுத் தன்மையாக இருந்தாலும், இதில் எதிர் கால வாழ்க்கை மீதான பயமும் காணப்படுகின்றது. இதை அணுகும் போது இது முரண்பாடற்ற எல்லா நிலையிலும் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இரகசியப் பகிரங்க உறவுகளின் விபச்சாரத்தனத்தை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
பெண் தனது ஜனநாயகத்தை அல்லது உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளும் வழியில் பகிரங்கமான போராட்டத்துக்குப் பதில் இரகசியமான அன்றாடத் தீர்வுகளில் இரண்டு போக்குகள் இருப்பதை நாம் அவதானமாகப் (கவனமாகப்) புரிந்து கொள்ள வேண்டும்;. நுகர்வுத் தளத்தில் விபச்சாரத்தைக் கொண்ட போக்கும், மறு தளத்தில் குறைந்தபட்ச உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளும் போக்கும் காணப்படும்.
இந்த முக்கிய விடயம் கிராமப் புறங்களில் அரசியல் ரீதியில் மக்களை அணிதிரட்டப் போகின்றவர்கள் கிராமத்தில் இது போன்று நிகழும் போது அல்லது சொந்த இயக்கத் தோழரின் குடும்பத்தில் மனைவி அல்லது மகளின் அல்லது சகோதரியின் பிரச்சினைகளில் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டியுள்ளது. இதில் ஒரு பெண் அணுகுவதற்கும், ஆண் அணுகுவதற்கும் இடையில் பக்குவத் தன்மையில் வேறுபாடு காணப்படுகின்றது. இதில் பொதுவாக ஆணின் வளர்ச்சியின்மை சுயவிமர்சனத்தைத் தடுக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகின்றது. இது பற்றிய எனது சில அனுபவங்கள், அவதானிப்புகள், சிலரின் விமர்சனங்களின் ஊடாகவே ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அணுகவேண்டியதைப் பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.
குடும்பத்தின் ஓர் உறுப்பினர் புரட்சியில் பங்கு பெறும் நிலையில், குடும்பம் பங்கு பெறாத நிலையில் அல்லது அவரை மீறிய வகையில் குடும்ப நிகழ்வுகள் இருந்தால் அல்லது இவைகள் மீது கவனமின்றி இருத்தல் போன்றவற்றில் தோழர்களைக் கையாள்வது அல்லது சமூகத்தைக் கையாள்வதில் பொறுப்பு மிக முக்கியமானது. இதில் குடும்ப இரகசியம் பெண் சார்ந்து வெளியில் தெரியக் கூடாது என்ற ஆணாதிக்க வரையறைகள் அப்பெண்ணையே சிதைத்துவிடும் என்ற நிலையில் அதை மிக இரகசியமாகப் பொறுப்புடன் கையாள வேண்டும்;. இதைப் பரந்த அமைப்பு தளத்தில் கொண்டு சென்று விவாதிப்பது அவசியமற்ற ஒன்றாகும். ஏனெனின் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு, ஏற்றத் தாழ்வான அரசியல் வளர்ச்சி சமூகத்தில் இருந்து கொண்டிருப்பதால் ஆணாதிக்கத்தின் எச்சச் சொச்சத்துடனும் அல்லது ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சார எல்லையில் நீடிப்பதாலும் ஒரு பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்டம் அப்பெண்ணைப் பாதிக்கும். அக்குடும்பத்தைச் சிதைக்கும். ஏன் அமைப்பை நோக்கி வளர்ந்துவரும் ஒருவரின் இடைவெளியை அதிகரிக்கும்.
தனிப்பட்ட ஒரு பெண்ணின் விடயத்தைக் கட்சி மட்டத்தில் விவாதத்திற்கு எடுப்பது அபத்தமாகும். மாறாகப் பொதுவான அரசியல் விவாதங்கள், அறிவுரைகள் ஆரோக்கியமானவை. இது தோழமையை உயர்த்திக் கொள்ளவும், குடும்பத்தின் வேறு உறுப்பினர் பற்றிய விவகாரங்களைத் தோழமையுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவும் வளர்ச்சி பெறும்.
இனி விட்ட விடயத்தைப் பார்ப்போம்;. காதல் இன்றைய இளைஞனின் பலதாரமணத்தை நிறைவேற்றவுள்ள ஊடகங்களில் ஒரு வழி ஊடகம் ஆகும். பெண்ணைக் காதலிப்பதாக நம்பவைத்து உடலை அனுபவித்துக் கைவிடுவது பெரும்பாலான காதல்களில் நிகழ்கின்றது. பாடசாலை இறுதிக் காலத்தில் ஏற்படும் ஆண் - பெண் கவர்ச்சி மற்றும் உடல் உணர்ச்சிகள் விழிக்கின்ற போது அதை ஆண் எப்போதும் பெண்ணின் நேர்மையான காதல் உணர்வைப் பாலியல் தேவையில் ஏமாற்றுவது காணப்படுகின்றது. இதை ஒட்டி சிறுவர் -சிறுமிகள் பகுதியில் புள்ளி விபரத்துடன் ஆராய்வோம்.
இன்று உலகளவில் வறுமை மற்றும் பணத்தின் ஆதிக்கம் பெண்ணை விலைக்கு வாங்குவது போல, திருமணத்தின் பின் அல்லது முன் பாலியல் பண்டமாக்கி வீதியில் விடுவது அல்லது விபச்சார விடுதியில் தள்ளிவிடுவது பொதுப் போக்காக உள்ளது. குடும்பத்தின் வறுமையைத் தரகர்கள் சாதகமாக்கிப் பெற்றோருக்கு ஆசை காட்டி விபச்சாரத்துக்கு அல்லது திருமணம் என்ற பெயரில் பாலியல் நுகர்வுக்குள் தள்ளி பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர். காதல் என்ற நம்பிக்கையில் குடும்பத்திலிருந்து விலகி கள்ள உறவு, திருமணம் என்ற இணைப்பில் ஏற்படும் அனைத்துப் பாலியல் நுகர்வும், கைவிடலும் அப்பெண்ணை இச்சமூகம் இறுதியில் விபச்சார விடுதிக்குள் தள்ளி விடுகின்றது அல்லது அப்பெண் கடந்த நிகழ்வை மறைத்து வாழும் இரட்டைத் தளத்தில் தள்ளுகின்றது.
இதனால் பெண் எப்போதும், காதலின் போது அல்லது திருமணத்தின் போதுக் கதைப்பதைத் (பேசுவதைத்) தவிர்த்தல் அல்லது உடலுறவில் ஈடுபடுவதை மறுத்தல் ஆகியவை தற்காப்பாக உள்ளன. நம்பிக்கை என்பது அநேகமாக நகர்ப்புறங்களில் நம்பிக்கை மோசடியாகின்றது. அது அப்பெண்ணின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளிவிடுவதாக மாறுகின்றது. பெண் எப்போதும் பதிவுத் திருமணத்தை அல்லது அச்சமூக அங்கீகாரம் பெற்ற திருமணமுறையை முன் நிபந்தனையாக உடலைத் தொடுவதற்கு நிபந்தனையாக்குகின்றாள்;. திருமணங்கள், காதல்கள் எந்தளவுக்கு அபத்தங்களாக உள்ளது என்பதையும், போலித்தனமாக உள்ளது என்பதையும் இது காட்டுகின்றது. அதாவது திருமணத்தைச் சட்டங்கள் தான் பாதுகாக்கும் ஊடகமாகவும், பெண்ணின் ஒருதார மணத்தின் காவலனாகவும் இருப்பது எதார்த்தமாக உள்ளது. தூயகாதல், சுதந்திரக் காதல்.... என்பது எல்லாம் பெண்ணின் தற்காப்புக்குள் தட்டுத் தடுமாறுகின்றது. காதல் விபச்சாரமாக மாறுவதா? அல்லது சொந்தத் துணையா? என்பதைப் பெண் தனது தற்காப்பில் மிரண்டு போய் கையாள்கின்றாள். சின்ன விலகல் காதலை விபச்சாரமாக்கி விடுகின்றது. இங்கு பெண்ணின் தற்காப்பு தனது உடலைப் பாதுகாக்கும் விபச்சாரத்திற்கு எதிரான போக்கில் உள்ளது. இது மேற்கில் உள்ள பெண்ணின் காதல் இந்தத் தற்காப்பைக் கைவிட்டுள்ளது. சமூகப் பொருளாதாரம் விபச்சாரத் தளத்தில் உள்ளதால் பெண் தன் உடலைக் காதலின் பின் ஆண் அனுபவித்து, கைவிட்டுச் செல்ல, அவ்விபச்சாரத்தையிட்டுக் கவலையற்ற போக்கு வெளிப்படுகின்றது.
இதற்கு மாற்றாக இணைந்து வாழ்தல் விபச்சாரத்துக்குப் பதிலிடையாக உள்ளது. இது திருமணத்திலும், வெளியிலும் சட்டப்பாதுகாப்பு இன்றி ஆண் பெண்ணின் சொந்தத் தேர்வுகளின் மேன்மையால் நீடிக்கின்றது.
இங்கு காதல் விலகல் விபச்சாரத்தையும், உண்மையான தேர்வுகளையும் அதன் எல்லைக்குள் நிகழ்த்துகின்றது. ஆனால் இங்கு தற்காப்பு கிடையாது. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தாலும் அங்கு பெண்ணின் தற்காப்பு விபச்சாரத்துக்கு எதிராக உள்ளது.
இந்த வேறுபாட்டைச் சந்தைப் பொருளாதார நுகர்வுத்தளம் தீர்மானிக்கின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் மேற்தட்டு நுகர்வுப் பிரிவுகள் தற்காப்பைக் கைவிட்டு நுகர்வு விபச்சாரத்தைக் கையாள்கின்றனர்.
ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ வடிவத்திற்கும், ஏகாதிபத்திய முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பொருளாதாரத் தளத்தில் உள்ள வேறுபட்ட இதன் உட்கூற்று தளத்தில்தான் காணமுடியும். இதில் தற்காப்பும், சரணடைவும் பெண்ணுக்குரிய பண்பாடாகின்றது, கலாச்சாரமாகின்றது. ஆண் இதில் அப்பொருளாதாரத்தின் பலதாரமணத்தில் நின்று தாக்குதல் கட்டத்தில் குறித்த பண்பாட்டு வேறுபாட்டுடன் பெண்ணை அனுபவிக்கத் துடிக்கின்றான். இத்தாக்குதலில் மேற்கு பெண்கள் சரணடைந்தும், மூன்றாம் உலகக் கிராமத்துப் பெண்கள் தற்காப்பிலும் நீடிக்கின்றனர்.