''வாடகைத் தாய்" ''அவன் - அவள் - அது" என்ற தலைப்புகளில் குழந்தையைப் பணத்துக்குப் பெற்றுக் கொடுத்தலைப் பற்றி எழுதுகின்றன பல பத்திரிக்கைகள். இதில் ஆணின் விந்தை வாடகைத் தாயின் கருவுடன் சேர்த்தல் அல்லது இருவரும் உடலுறவு கொள்ளல் மூலம் நடக்கின்றது. சிலவேளை வாடகைத் தாய் குழந்தையைக் கொடுக்க மறுத்து நீதி மன்றம் வரை செல்வதும் நிகழ்கின்றது. (21.7.1997)34
மனிதன் எதையெல்லாம் சந்தைப்படுத்த முடியுமோ அதை எல்லாம் சந்தைப்படுத்தத் தயங்கியதில்லை. இதில் சொந்தக் குழந்தையை விற்றலில் தொடங்கி விந்துக்களை விற்றல், வாடகைத் தாயாக இருத்தல் என்று பல வடிவத்தில் இன்று பணம் திரட்டுகின்றனர். ஏழைக் குழந்தைகளைக் குறிவைத்து வாங்குவதும், விற்பதும் என்பது தத்தெடுப்பின் பின்னாலும், சில வேளைகளில் கடத்தல் மூலமும் நடப்பதைக் காண்கின்றோம். ஏழைக் குடும்பத்தின் வறுமை குழந்தையை விற்கத் தூண்டுகின்றது. இதற்கு என உருவாகியுள்ள பொறுக்கித் தின்னும் தரகுக் கூட்டங்கள் ஆசை காட்டியே குழந்தைகளை அபகரித்தும், கடத்தியும் பணக்காரர்களுக்கும், வெள்ளை இனத்தவர்களுக்கும் விற்றுப் பணம் சம்பாதிக்கின்றனர். வெள்ளை இன மற்றும் பணக்காரக் கும்பல், சிலர் இவர்களைத் தன் சொந்தக் குழந்தையாகப் பயன்படுத்த, பலர் தமது பாலியல் தேவைக்கு இக்குழந்தைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்கின்றது. மேற்கில் இதற்கு எதிரான போராட்டம் அதிகரித்து வருவதால் தத்தெடுப்புச் சட்டம் மிகக் கடுமையாகி வருகின்றது.
மறுபுறம் குழந்தை இல்லாதவர்கள் விந்து மாற்றுவது என்பது புதிய வியாபாரமாகியுள்ளது. இது சொந்த மனைவியெனின் வேறு ஆணின் விந்தைப் மனைவியின் கருப்பையில் வைப்பதும், சொந்தக் கணவனின் விந்து எனின், விந்தை இரவல் தாயில் வைத்து பெறுவதும் அல்லது உடலுறவு நேரடியாகக் கொள்வதும் என்ற நிலைகளில் இது வியாபாரமாகியுள்ளது. பெண் வேறு ஆணுடன் உடலுறவு விலக்கப்பட்ட நிலையில் விந்து வைப்பதும், ஆண் வேறு பெண்ணுடன் நேரடி உடலுறவு மூலம் குழந்தையைப் பெறுவதும் என்ற இரட்டை வேறுபாட்டை ஆணாதிக்கம் சுவீகரித்துள்ளது.
உலகத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியிலும், தடுப்பூசி இன்றியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட காரணமான இப்பணக்காரக் கூட்டம்தான் தத்தெடுப்பு என்ற கூத்தையும் நடத்துகின்றது. சமூகத்தின் குழந்தையைச் சொந்தக் குழந்தையாகப் பார்க்கமுடியாத தனிச் சொத்துரிமைக் கண்ணோட்டம் அவர்களைக் கொல்வதையிட்டு அலட்டிக் கொள்ளாது நியாயப்படுத்துவதாக உள்ளது இவர்களின் ஜனநாயகம். இவர்கள் ஏற்படுத்திய ஏழ்மையிலும், வறுமையிலும் சொந்த உடலை விற்றுப் பிழைப்போரைச் சார்ந்து குழந்தையைப் பெறுவது என்பது நிச்சயம் பணத்திமிர்தான்.
இரவல் தாய்க்கும், விந்தைக் கொடுத்தவருக்கும் இடையில் சிலவேளைகளில் நடக்கும் பணப்பேரம் சகிக்கமுடியாத அளவுக்கு நாற்றம் கண்டவை. இதைச் செவ்வன செய்து முடிக்க கௌரவமான நிறுவனங்கள் சட்டப் பாதுகாப்புடன் காப்புறுதி நிறுவனங்களாகவும், வேறு வடிவிலும் உதித்தெழுந்து பணத்தில் கொழுக்கின்றன.