Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுஸ்மிதாசென் உலக அழகு ராணியாக தெரிவானதை ஒட்டி மொடல் உலகம் பற்றி பணம், புகழ்... பற்றி பெருமையாக விவரிக்கப்படுகின்றது இந்தியா டுடே. (21.10.1994)34 மேலும் ''அலிகள் அழகுப் போட்டி" ''மூன்றாம் அழகு" என்ற தலைப்புகளில் தன்னார்வ அமைப்புகள் எயிட்ஸ் விழிப்புணர்வை முன்வைத்து நடத்திய அழகுப் போட்டியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளது. (6.5.1997)34


அழகு என்பது வரையறைக்குள் உள்ளாக்க முடியாது என்பதை உலகமயமாதல் தலைகீழாக்கியுள்ளது. மனிதனுக்கு மனிதன் அவனின் வேறுபட்ட வாழ்க்கை சூழலை ஒட்டியும் பலவிதமான காரணத்தாலும் அழகு பற்றி வௌ;வேறு விதமான பார்வையை மனிதன் கொண்டிருந்தான். ஆனால் சந்தைத் தளம் இதைத் தலைகீழாக்கியுள்ளது.

 

அழகு என்பதற்கு உலக அழகுராணிப் போட்டி வழங்கும் தகுதி அழகின் வரையறையாகிப் போனது. உலகமயமாகிப் போன அழகியின் தகுதி ''நீலக் கண்கள், கூர்மூக்கு, மெல்லிய உதடுகள், வெளுத்த உடல், 5.8 அல்லது 5.9 அங்குல உயரம்..."58 இதையொட்டி உயரம், உடுப்பு, காலணி (சப்பாத்து)... என எல்லாம் அதற்கு இசைவாக மாறி வருகின்றது. அழகியாக இருக்க மெல்லிய இடை உடையவளாக இருப்பது பண்பாடாகின்றது. முன்பு ஒரு பெண்ணுக்கும் மொடலுக்கு இடையில் 8 சதவீத வேறுபாடு இருந்தது. இன்று அது 23 சதவீதம் வேறுபாடாக அதிகரித்துள்ளது. இது இருதளத்திலும் போட்டிபோட்டு, முன்னும் பின்னுமாக மெலிந்து ஆணாதிக்கக் கவர்ச்சிக்காகச் சீரழிகின்றனர். இதனால் பொதுவாகப் பெண்கள் உடல் வளர்ச்சி குன்றிய பலமற்ற நிலைக்குத் தரம் தாழ்ந்து செல்கின்றனர். இது ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் ஆணின் தேவை மற்றும் பண்பாட்டை நியாயப்படுத்துவதுடன், ஆண் பலசாலியாக இருப்பது மேலும் கூர்மையடைகின்றது.


சென்னை மாணவர் - மாணவிகள் மீது செய்யப்பட்ட ஓர் ஆய்வில் 60 சதவீதம் பேர்59 தாம் அழகாகவே இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கியிருந்தனர். அந்தளவுக்கு உயரம், நிறம், கண், வாய் மூக்கு, மார்பு... என பெண்ணின் அங்கம் அங்;கமாகச் சித்தரித்தே உலகின் அழகியல் தீர்மானிப்பது போக்காக மாறியுள்ளது.


பெண்கள் ஐரோப்பா முதல் இந்தியா வரை குதிக்கால் போட்ட (ஹைஹில்ஸ் காலணி) சப்பாத்து போட்டே உயரத்தைக் கூட்டி அழகியாகத் துடிக்கும் காட்சிகள் நிர்வாணமாக உள்ளது. இது போல் பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் இந்தப் படாதபாட்டைப் படுத்தும் அளவுக்கு அழகு வியாபாரமாகியுள்ளது. அழகியாகத் துடிக்கும் மனப்பான்மை, அதில் தோற்றவர்கள், அதை எட்டிப்பிடிக்க முடியாதவர்கள் அழகியல் குறிப்புகள் உடன் எட்டி நிமிர்ந்து செய்யும் கோமாளித்தனங்கள் பெண்களையே மனநோயாளியாக ஆக்கியுள்ளது.


உதட்டு மை, கண் மை, வாசனைத் திரவியம் (சென்ட்);, பவுடர், வாசனை எண்ணை, நிறத்துக்கு ஏற்ற உடுப்பு, செருப்பு (சப்பாத்து), அதற்கு ஏற்ற குடை, அதற்கு ஏற்ற கைப்பை, உயரத்தைக் கூட்ட குதிக்கால் சப்பாத்து, மார்பை நிமிர்த்த அல்லது பெரிதாக்க அதற்கு ஏற்ற செருகல்கள் (சிலிகான் மார்புகள்) என்று பெண்ணின் இயக்கமே இதுவாகி விடுகின்றது. பொழுது போக்கு இதற்குள் அழுந்திப் போகின்றது. பெண்ணின் அறிவு இதுவாக மாறி விடுகின்றது. இவை எல்லாம் ஆண்களின் கண்ணைக் குளுமைப்படுத்த, கவர, வீம்புபண்ண, ஆடம்பரத்தை வெளிக்காட்ட என எல்லாத் தளத்திலும் சீழ்ப்பிடித்துப் போயுள்ளது. இதை மிகக் கடுமையாக ஏற்றுக் கொள்வோரில் பெரும்பான்மையான பெண்கள் ஒருதாரமணத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பதும் முரண்நிலைதான்.


தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நிதி ஆதாரத்துடன் அவர்களின் கோட்பாட்டு வழிகாட்டலில் செயல்படும் இவர்கள் எயிட்ஸ் விழிப்புணர்ச்சி என்று காரணம் கூறிய படி அலிகளுக்குள் நடத்தும் நாடகங்கள் எல்லாம் ஆணாதிக்க வழிப்பட்டவைதான். பெண் பற்றிய ஆணின் கற்பனை, அதை ஒட்டிய அலி பற்றிய ஆணின் வக்கிரம் இவைகள் எல்லாம் ஆணின் இரசனைகள். இவை எல்லாம் ஆணின் கலைத்தென்றல் ஆகும். பெண்பற்றிய ஆணின் கலைத் தனத்தை விமர்சிப்பது சிலருக்குக் (பின்நவீனத்துவ முதல் தன்னார்வக் குழுக்கள் வரை) கெட்ட கோபம் வரலாம். ஆனால் இந்த இரசனையும், கலைப் பார்வையும் நொறுக்கப்பட வேண்டும். ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும்.
பெண்ணைப் பெண்ணாக, அதாவது மனிதனாக வாழ அங்கீகரிப்பது என்பது இந்த ஆணாதிக்கக் கலை ஒடுக்கு முறையில் சாத்தியமற்றது. எல்லா ஆணாதிக்க அழகியல் கலை இரசனையும், இலக்கிய இரசனையும், பொருள் இரசனையும் என அனைத்தையும் மீட்க ஒடுக்கப்பட்ட பெண்ணை அவளின் சிறையில் இருந்து மீட்கப் போராடும் வர்க்கப் போராட்டத்தில் மட்டுமே சார்ந்துள்ளது. இதைப் பாட்டாளி வர்க்கம் மட்டுமே சாதிக்க முடியும்.