ஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.

ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற மூக்கால் சிந்தி சிணுங்கும் இக் கூட்டம், புலியல்லாத மாற்றுத் தளத்தில் கடந்த காலத்தில் எப்படி தான் நடந்து கொண்டது.

 

அரசியல் ரீதியாக எதையும் இன்று வரை வைத்தது கிடையாது. அதாவது மக்கள் தாம் போராடி, தமது சொந்த விடுதலை அடையும் வகையில், எந்த அரசியலையும் இந்த 'ஜனநாயக இலக்கிய வாதிகள்" வைத்தது கிடையாது. இதை எப்போதும் நிராகரித்தே வந்துள்ளது. இதை வைக்கும் போது, அதைத் தூற்றியது. வைப்பவருக்கு எதிரான தடையாகவும், தாக்குதலாகவும் கூட மாறியது. உண்மையில் எதை அவர்கள் ஜனநாயகம் என்றனரோ, அதையே அவர்கள் மறுத்தனர். இதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு. 

 

1. அண்ணளவாக 15 வருடங்களுக்கு முன்னம் 14வது இலக்கியச் சந்திப்பு பாரிசில் நடந்த போது, இது வெளிப்படையாக சந்திக்கு வந்தது. அந்த இலக்கிய சந்திப்பில் கருத்துக் கூற முடியாது என்று, எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை போட்டு தடை விதித்தனர். இது கூட்டத்தில் வைத்து கலைச்செல்வனால் அறிவிக்கப்பட்டது. ஒரு விடையத்தில் ஒரு நிமிடத்துக்கு மேல் நீ பேச முடியாது என்றனர். இது எனக்கு மட்டுமான சிறப்புத் தடை.  இதையடுத்து, நாம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.

 

அன்றும் இன்றும் ஜனநாயகம் வேஷம் போடும் ஜம்பவான்கள் எல்லாம் கூடியிருக்க, மௌனம் சாதித்து இதை ஆதரித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை சுதந்திரத்தை புலிகளிடம் மட்டும கேட்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அங்கு ராஜமரியாதையுடன்  கொலுவேற்று இருந்தார். 

 

இப்படி எனக்கும், நான் வைத்திருந்த கருத்து போக்குக்கும் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு முதல் புலம்பெயர் புலியல்லாத செயற்பாடுகள் கருத்துச் சுந்திரத்தை மறுத்தே வந்தது. இதுவே தான் எனக்கு எதிரான கல்வெட்டாகியது. இதுதான் இன்று வரையான பொதுவான நிலை. இந்த சீரழிவு தான், இன்று, எங்கும் எதிலும் அம்மணமாகி கிடக்கின்றது. அன்று என்ன நடந்தது என்பதை சமர் 7 பதிவாக்கியது. அதை தெரிந்து கொள்ள


1.இலக்கிய சந்திப்பும் மறுக்கபட்ட கருத்துச் சுதந்திரமும்

 

2.இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும்

 

3.இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்

 

2. பாரிலில் 29.09.2002 நடந்த குறும்பட விழாவில் இதே கலைச்செல்வன் எம்மீது வன்முறை நடத்த முனைந்தான்;. தீக்கொழுந்து என்ற ம.க.இ.க வின் படம் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென படம் இடையில் நிறுத்தப்பட்டது. கலைச்செல்வன் அறிவித்தான், இந்த படம் சில பெண்களுக்கு பார்க்க தலையிடிப்பதாகக் கூறினான். தமது வர்க்க அடிப்படையை படம் தகர்ப்பதை சகித்துக் கொள்ள முடியாத, பெண்களின் பெயரால் பார்வையாளர்களின் கருத்துக் கேட்காது நிறுத்தினான். தலையிடித்தால் வெளியில் செல்ல வேண்டியது தானே! கருத்துச் சுதந்திரத்தை கோரும் யாரும், இன்றுபோலவே அன்றும் இதைக் கண்டிக்கவில்லை.

 

இடைவேளையின் போது, பார்வையாளனின் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இங்கும் நான் தான் அதைக் கண்டித்தேன்;. அப்போது கலைச்செல்வன் பலர் முன்னிலையில் என்னை தாக்குவதற்கு வந்ததுடன், வாயில் வந்தமாரி தாறுமாறாக தூற்றினான். இன்று கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் தேசத்தில் தூற்றுவது போல் தூற்றினான்;. அவன் முகத்துக்கு நேரே கையை ஓங்கி வன்முறைக்கு முயன்ற போது, அதை தடுக்க நாம் கையைக் கூட உயர்த்தாது, அமைதியாக பார்வைச் சுதந்திரத்தை கோரி அதை  அம்பலப்படுத்தினோம்;. இந்த சம்பவத்தை ஓட்டி, அன்றும் இன்றும் ஜனநாயகம் பேசும் யாரும் வாய் திறக்காமல் அதை ஆதரித்தனர்.


அன்று நாம் எழுதியவை பதிவானது.

1.வர்க்கத் தீ எரிகின்ற போது அதை அணைக்க முதலாளித்துவ வாக்கம் வக்கரிக்கின்றது.

 

2.வலிந்து தேர்ந்தெடுத்த மனித வாழ்வை மறுக்கும், அற்ப ஆசை சார்ந்த கோட்பாடுகளை, விமர்சனம்சுயவிமர்சனம் செய்யாத அஞ்சலிகள் அனைத்தும் போலித்தனமானவை


3. 2006 இல் நடந்த சபாலிங்கம் நினைவுக் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது, புலியெதிர்ப்பு ராகவன் திடீரென எனக்கு நேரம் முடிந்துவிட்டதாக அறிவித்து பேசவிடாது தடுத்தார். இந்தளவுக்கும் நேரக்கட்டுப்பாடு எதுவும் நிகழ்ச்சியில் இருக்கவில்லை.  மற்றவர்களை விட குறைந்த நேரத்தை எடுத்த நிலையில், எனக்கு மட்டும் இப்படி திடீரென்று அறிவிக்கப்பட்டது. நான் பேசுவதையும், தாம் அம்பலப்படுவதையும் தடுக்க விரும்பினர். இங்கும் கூட அன்றும் இன்றும் ஜனநாயகம் பேசக் கூடியிருத்த கும்பல் வாய் திறவாது, அதை அதை ஆதரித்தது.

 

4. 2007 பாரிஸ் தலித் மாநாட்டில் வாகசர் கருத்து தொடங்கிய போது, அனைவருக்கும் சமமான நேரம் என்று அறிவித்து (கருத்துக்கல்ல தலைக்கு), கருத்துச் சுதந்திரத்தை மறக்க ஒரு போடு போட்டனர். பேச விரும்பமற்றவனையும் வில்லங்கமாக அலம்ப வைத்தனர். இதை நாம் ஆட்சேபித்தோம். மாறுபட்ட கருத்துக்கு சம உரிமையையும், விவாதச் சுதந்திரத்தையும் வழங்க நாம் மட்டும் கோரினோம். இது மறுக்கப்பட்டது.

 

கருத்துச் சுதந்தரம் கருத்துக்கல்ல, கலந்து கொண்ட அனைவருக்கும் சமஉரிமை என்று கூறியதன் மூலம், கருத்துச் சுதந்திரத்தை தலித் மாநாடு மறுத்தது. மாறுபட்ட கருத்தின்றி, விவாதச் சுதந்திரமின்றி, தலித் மாநாடு திட்டமிட்ட வகையில் குறுகிய நோக்கில் அரங்கேற்றப்பட்டது. இதை நாம் மட்டுமே கண்டித்ததுடன், இதையும் நாம் மட்டுமே எதிர்த்துப்போராடினோம்;. கருத்துச் சுதந்திரம் கருத்துக்கே ஒழிய, நபருக்கல்ல என்ற விடையத்தை இன்று நாம் மட்டும் தான் முன்வைத்துப் போராடுகின்றோம்.

 

அன்று தலித் மாநாட்டையும், அதன் மக்கள் விரோத தன்மையையும் அம்பலப்படுத்தி எழுதியவை  

 

1.பாரிஸ் தலித் மாநாடு, தலித் மக்களை உணர்வுபூர்வமாக பிரதிநித்துவப் படுத்துகின்றதா?

 

2.தலித் மாநாடும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும்

 

3.பாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்

 

4.'தேசியம் எதிர் தலித்தியம்" ? 'தேசியம் எதிர் மார்க்சியம்" ?


இப்படி எத்தனை சம்பவங்கள்? பலர் இதனால் சந்தித்த அவலங்கள் பல. பெண்களை பாலியல் ரீதியாக கூட இவர்கள் பயன்படுத்தினர். சிலர் இதனால் பணம் சம்பாதித்தனர். இதையெல்லாம் யார் எங்கே எப்போது கண்டித்தனர். ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம் தமது குறுகிய சொந்த தேவைக்கு ஏற்ப, இவர்கள் பயன்படுத்தும் சொற்கள் தான்.

 

இந்த கும்பல்கள் கருத்துக்கு சுதந்திரத்தை மறுக்கின்றனர். தமது பிற்போக்கு அரசியலுக்கு ஆபத்தானது என்பதை, புரித்து கொண்டு எதிர்க்கின்றனர். கருத்துக்கு அல்ல நபருக்கே சுதந்திரம் என்று கூறும் மக்கள் விரோதிகள், தமது பாசிசத்தை இப்படியும் அரங்கேற்றுகின்றனர்.

 

மக்கள் சார்புக் கருத்தை எதிர்க்கின்றவர்கள், அப்படியொன்றும் இல்லை என்று மறுக்கின்றவர்கள், மக்கள் கருத்தை தடுத்து நிறுத்தவே நபருக்கு சுதந்திரத்தைக் கோருகின்றனர். கருத்துச் சுதந்திரத்தை நபரின் சுதந்திரமாக திரித்து ஆட்டம் போடுகின்றனர். இதைத்தான் தேசம் தூக்கி நிறுத்தி ஆட்டம் போடுகின்றது.  

 

இதன் மூலம் தேசம் சமுதாயத்துக்கு திட்டமிட்ட வகையில் தீங்கு செய்கின்றது. புலிப் பாசிசத்தையும் அரச பாசிசத்தையும் தனது சொந்த ஆட்டத்துக்கு ஏற்ப தாளம் போட வைக்கின்றது. 

 

சமுதாயம் தனது சொந்த வழியில் தாம் போராடி தீர்வு காண்பதை மறுக்கின்ற தேசம், அதை 'புனைவு" என்கின்றனர். தேசம் "புனைவு" என்று கருதுவதை மறுத்து, மக்களின் விடுதலையைக் கோருபவர்களின் தனிமனித 'விம்பத்தை" தனிநபர் தாக்குதல் மூலம் தகர்க்க கோருகின்றனர். இதற்கு ஏற்பவே தேசம் கட்டமைக்கப்பட்டது. புலி மற்றும் புலியெதிர்ப்பு கூடாரமாக கட்டமைக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் விடுதலையைக் கோருவதை கூட்டாக எதிர்த்து நிற்க, தேசம் அறை கூவல் விடுத்தது.

 

இதையே தேசம் தெளிவாக மக்கள் போராட்டம் என்பதை 'புனைவாக" அடையாளப்படுத்தி, புலியையும் புலியெதிர்ப்பையும் தனக்குள் அரவணைத்துக் கொண்டது. மக்கள் போராட்டத்தை முன்வைப்பவனின் 'விம்பத்தை" தகர்க்க, தனிநபர் அவதூறை 'தொழில் நேர்மையின் பெயரில் உமிழ்கின்றனர். இது தான் தேசம். இது தான் தேசத்தின் நோக்கம். மக்கள் சார்ந்த அரசியல் எந்த விதத்திலும் எந்த வழியிலும் உயிர்க்கக் கூடாது என்பதே, தேசத்தி;ன் அரசியல் இலட்சியம். அதாவது பாசிசத்தின் இலட்சியமாகும்;. இப்படி இரண்டு பாசிசம் ஒன்றாக கூடி நிற்கும் இடம் தான் தேசம். இதையே 'ஊடகவியல்" என்றும், இதையே 'தொழில் நேர்மை" என்றும் சொல்ல முனைகின்றனர். இதன் மூலம் தாம் பாசிட்டுகளல்ல, வாசகர்கள் மட்டும் தான் என்று தமக்குத்தாமே மூகமுடி போட்டு காட்ட முனைகின்றனர். இப்படி பாசிசத்தின கூடாரமாகி, மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் இயக்கப்படுகின்றது.   

    

பி.இரயாகரன்
16.06.2008