இன்னொரு படுகொலைக் களத்தை இந்த இலங்கையரசு செய்யத் துணியுமென்பதை நாம் அறிந்தேயிருந்தோம். அதைத் திரிகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்களப் பாசிசம். தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும் போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது? இத்தகைய கொலைகளின் பின்னே அடையவிருக்கும் இலக்கென்ன? இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கையின் நோக்கு? அல்லது தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?

கடந்த- தற்கால இலங்கையரசுகளின் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை barbarous என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது! இது காலவர்த்தமானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம். ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான கொடுங் கோன்மை மிக்கது. இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்து வரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும் அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும் கூடவே ழப்போருக்கான முனைப்புப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது. மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் விய+கத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது. இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தருணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.

இலங்கையின் இந்த அரசியலானது இன்னொரு இஸ்ரேல்-பாலஸ்தீனம் மெல்ல உருவாவதைக் காட்டிவருகிறது. மொழிவாரியாகவும் இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள் காலனித்துவக் கொடுங்கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு. நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே அந்நியர்களும் நம்மை- நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது. எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்- தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் தேசிய அபிலாசைளை நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள்! சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் இனவொதுக்கலுக்கு எதிரான தமிழ்த் தேசிய மனமானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது! இலங்கையின் மரபுரீதியான ஐதீகங்கள் மாற்றினத்தை சக தோழமையோடு பார்க்க மறுக்கும் ஒவ்வொரு தருணமும் பெருந்தேசியத்தின் வெற்றிக்குக் கனவு காண்கிறது! இந்தக் கனவின் பலனாக இரணுவத்தின் தேசபக்தியானது அதைக் கூலிப்படை ஸ்தானத்திலிருந்து விடுபட வைத்துத் தமிழர்கள் மேல் தினமும் ஏவிவிடப்படுகிறது!

இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறை யானது சாராம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது. இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது. இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன் பங்கு மெல்லத் தகர்ந்து வந்தது. என்ற போதும் இத்தகைய இன அழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான முகமூடி யுத்தமாக வெடிக்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.

இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும் பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் தருணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின்யுத்த நெருக்கடி ஒரு தேசமெனும்கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் விய+கமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரைஉடமையைமெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதாரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும். இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாதத்திடமிருந்து காக்க முனைவது மட்டுமல்ல மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும். இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு. எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள் மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் விய+கத்தையுங் கொண்டிருக்கிறது. இக்கொலைகளின் பின்னே நடந்தேறும் அரசியல்கள் சரிந்துவிழும் அமைப்பாண்மைகளை மேன்மேலும் விருத்திக்கிடவும் அவற்றைக்கொண்டே இருப்புக்கான இனக் குரோதங்களைப் புதுப்பிப்பதற்கும் சகல பிரிவுகளுக்கும் உதவும் அபாயமுமுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்

15.05.06