இரவைத் தின்ற

பகற் பொழுதொன்றில்

தன்னை,

குண்டொடு வெடித்திடத் தேம்பியழுதாள் ஒருத்தி!

அப்பாவித் தமிழிச்சி "ஐயோ அம்மா!"வெனப்

புலம்பிச் சிதறினாள் எவனுக்காகவோ!

பற்றை,நாகதாளி>கள்ளி>

எருக்கலை,ஆமணக்கு,ஈச்சை நிரம்பிய ஈழம்

புகைபடியக் குருதி கொட்டி

விரிந்து,குவிந்து

பலரைச் சிறைப்படுத்திப் பட்டுணியிட்டு

பங்கருள் திணித்தது.

புலிகள்,சிங்கங்கள் கழுகாய்மாறி

அவர்கள் நிணத்தைப் புசித்தன

நாய்கள்

ஒன்றையொன்று கொன்றுண்டு அகம் மகிழ்ந்தன!!

இன்னுஞ் சிலர்

அவர்களிலொத்தவர்களைத் தேடியலைந்து

ஈற்றில் முழு ஈழத்தவர்களையும்

புசிப்பதற்காய் முடிவுகட்டிக் குண்டெறிந்தார்கள்

அதையும் விடிவுக்கானதெனச் சில புத்திசீவிகள்

விண்கட்டிப் பட்டம் ஏற்றினார்கள்

கழுகாய் மாறிய புலிகளில் சிலர்

ஐரோப்பாவரைப் பறந்து

புகலிடத் தமிழரின் புதை குழி தோண்டினர்

ஈழப்போர் நான்கு அவசியமென்றபடி!

எனினும்,

காலக் கொடுவாள்

தன் கோரப் பாச்சலை

அவர்கள் சிரசுகளில் ஓர் நாட்பாய்ச்சும்!!

பள்ளமும் திட்டியுமாய்

சமன்பட மறுக்கும் அராஜகம்

தினமும் ஒரு புதிய அரும்பாய்

மக்களின் எழிச்சியைத் தூண்டும்.

சமாந்தரமாய் முளைவிடும்

புதிய ஜனநாயகம்!

மூச்சிறைக்க இடறி விழும் புலிப் பாசிசம்

உணர்ந்தொதுங்கும் சிங்கம்,

தலை குத்தி மண் கவ்வும் இனவாதம்

காலமிதைக் கவிதையாய் வடிக்கும்.

உருத்தெரியாது அழிந்துவிடும் ஆயுதங்கள்

உப்புக்கு நிகராகா ஈழக் கோசம்!

புதுவாழ்வின் ஆசையின் எச்சத்தில்

மனிதம் முளையெறியக் காத்திருக்கும்,

அந்த நாளைப் படைப்பதற்குத் தோழர்கள் கரங்கள்

செங்கொடி தாங்கும்

அப்போது

தவழ்புனல் குருதி நெடிலிழந்து குதூகலிக்கும்

எங்கள்

குழந்தைகள் அதுள் தப்படிப்பார்!

அவர்கள் பெற்றோர்

எடுப்பார் கலப்பை,

எருதுகளெங்கும் உழைத்துதவும் எங்கள் வாழ்வுக்கு,

காகங்கள் யாவும்

களிப்பாய்ப் பாட

கருங்குழற் பெண்கள் பட்டுத் தரிப்பார்,

பருவப் பயல்கள் அவரிடம் பதுங்க

எங்கள் தேசம் இனிதாய் மலரும்

இனியும் ஒரு வாழ்வு எங்களுக்குண்டென

இளையவர்கூடுவர் இதயம் மலர!

கோவில்கள் எங்கும் குழலும்,

கொட்டும் தவிலும்,சங்கும் ஒலிக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.06