08132022
Last updateபு, 02 மார் 2022 7pm

முந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்"

இந்த 'ஜனநாயகம்" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்றது, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்" வைக்கப்படுவது கிடையாது.

 

இதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது.

புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ  முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை" என்கின்றனர்.   

மக்களின் விடுதலைக்கான அரசியலையோ, மக்களின் அவலங்களையோ மையமாக வைத்து, செய்திகளையோ கட்டுரைகளையோ கொண்டு வருவது கிடையாது. இதனால் தொழில் விரிவடையாது என்பது இந்த பொறுக்கிகளின் கணிப்பீடு.

அதாவது புலிகள் மக்கள் போராட்டம் சரிவராது என்று கூறி மக்களின் உரிமைகளை மறுத்து பாசிசத்தை முன்வைத்தது போல், புலியெதிர்ப்பு மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்று கூறி புலியை அழிக்கும் அரச பாசிட்டுகளை ஆதரிப்பது போல், தேசம்; இந்த இரண்டு பாசிசத்தையும் அண்டி வாழ்வது தான் பத்திரிகைத் தொழில் என்று தனது 'தொழில் நேர்மை" பேசுகின்றது. தேச விடுதலை, பயங்கரவாத ஒழிப்பு, ஜனநாயகம், சுதந்திரம், ஊடகவியல் என அனைத்தும், மக்களின் முதுகில் ஏறி நிற்கின்றது. 

இதன் வேர் ஆழமானது. மக்களை பற்றிப் பேசாத இலக்கியம் இலக்கிய சஞ்சிகைகள் இலக்கிய சந்திப்பாகி, அதுவே புலியெதிர்ப்பு தேனீயாகியது. பின் இது புலி-அரசு பின்னணியுடன் ரீ.பீ.சீயாக, இன்று வடிகட்டிய அரசு-புலி பாசிசக் கும்பலின் துணையுடன் தேசமாகி நிற்கின்றது. இந்த தேசத்தின் பின்னணியில் நிற்கின்ற பலரின் கடந்த காலம் முதல் நிகழ் காலம் வரை மர்மமானது. எந்த அரசியல் நீட்சியுமற்றது. திடீர் வரவாக அவை அமைகின்றது. கருத்துகளிலும் கூட இதே நிலை தான்.

ஒரு மர்மமான கும்பல், மர்மமான அரசியல் நோக்குடன், இரண்டு பாசிசத்தையுமே மாற்றுக் கருத்தாக கூறிக்கொண்டு, இதுதான் புலம்பெயர் புலியல்லாத மாற்று என்று கூறுகின்ற அரசியல் கபடமான உள் நோக்கத்துடன் அரங்கேற்ற முனைகின்றனர்.   

இவர்கள் எடுத்துவைத்து குதறும் விடையம், மனித விரோத செயல்களை மேலும் ஊக்குவிக்கின்றது. மனித வாழ்வை அழிக்கின்றவர்களின் சொந்த நடத்தைகளை நியாயப்படுத்தவும், மற்றவனுக்கு எதிராக அதை கூறி தாம் அதைத் தொடரவும் செய்கின்ற தர்க்க வாதங்களைத் தான், மாற்றுக் கருத்தாக இட்டுக்கட்டுகின்ற இழிவான செயலைத்தான் மொத்தத்தில் தேசம் நெற் செய்கின்றது. இதை செழுமைப்படுத்த அவதூறுகள், காழ்ப்புகளை அது அள்ளித் தெளிக்கின்றது

கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், பத்திரிகைச் சுதந்திரத்தின் பெயரில், புலியெதிர்ப்பின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில், வாசகர்களின் கருத்தின் பெயரில், ஜனநாயகம், சுதந்திரம் பற்றி பேசியவர்கள், பேசுகின்றவர்கள் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இதை மறுத்து நிற்பவர்கள் தான்.

1.புலி ஆதரவாக எழுதுபவன் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி பேச என்ன யோக்கியதை தான் இருக்கின்றது. ஆனால் தேசத்தில் அவர்கள் அதை தமது மேடையாக்கி கும்மியடிக்கின்றனர்.   

2.புலியெதிர்ப்பு பேசும் அரச ஆதரவு கைக் கூலிக் கும்பல் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி பேச, எந்த தார்மீக உரிமை தான் உள்ளது. ஆனால் தேசம் நெற்றில் அவர்கள் விசில் அடிக்கின்றனர். 

3.அரசு-புலியை எதிர்க்காது, அவர்களுடன் அல்லது அதில் ஒன்றுடன் ஏதோ ஒரு வகையில் கூடிக்கொண்டு லூட்டி அடிக்கின்றவர்கள, ஜனநாயகம், சுதந்திரம் பற்றி பேச என்ன தகுதி தான் இருக்கின்றது.? ஆனால் தேசத்தில் தனிப்பட்ட காழ்ப்புகளைக் கொட்டிக் கோஸ்டி கானம் பாடுகின்றனர்.

இதற்குத் தான் தேசம் கருத்துச் சுதந்திரம் என்கின்றது. இந்த அடிப்படையில் தான் விரும்பாத எதையும் அது அனுமதிப்பதில்லை. இது தான் தேசம்.

பி.இரயாகரன்
16.06.2008

தொடரும்


பி.இரயாகரன் - சமர்