சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.

 

 

இதைவிட முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விடயமாக ஒன்று இருக்கிறது. சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல. 80 களின் நடுப்பகுதியில் புலிகளின் அடாவடித்தனம் உச்சத்தில் இருந்ததை (அனுபவித்த) சிறுபத்திரிகைக்காரர்கள் அறிவர்… புலிதவிர்ந்த -சிலமணிநேர- வானொலி ஒலிபரப்பைக்கூட நடத்த முற்பட்டவர் அறிவர். இயக்கக் கூட்டங்களுக்குள் புகுந்தடித்தனர். புதிய வெகுஜன அமைப்புகளிலிருந்து சிறுபத்திரிகைக்காரர்களின் ஒன்றுகூடல்கள்வரை கண்காணித்தபடி இருந்தனர்.. செய்திப் பத்திரிகைகளை தடைசெய்தனர் அல்லது கடைகளில் விற்கவிடாது பயமுறுத்தினர்… குகநாதன் ஆரம்பித்த தமிழ்த் தொலைக்காட்சியை அபகரித்தனர்…இப்படிப் பல. இந்த அடாவடித்தன சூழல் சபாலிங்கத்தின் கொலையுடன் ஒரு புதிய வடிவம் (கொலைவடிவம்) எடுத்திருப்பதாக அவர்கள் கருதினர். இது தமது பாதுகாப்புப் பற்றிய கேள்விகளை இந்த வட்டத்துள் எழுப்பியதும், தாம் அனுபவித்துக்கொண்டிருந்த அராஜகத்தின் வளர்ச்சிப்பாதையாக இந்தக் கொலையைக் கண்டதையும், அதனால் அமைப்புவடிவமற்ற வட்டங்கள்; அதிர்ச்சியடைந்ததையும் புரிந்துகொள்ள முடியாத ஆய்வுகள் வரட்சிமிக்கது.

 

அன்று சமர் எழுதிய சபாலிங்கம் படுகொலை மற்றும் துண்டுப் பிரசுரம்01   துண்டுப் பிரசுரம்02 (இவை இப்பதிவில் தமிழரங்கத்தால் இணைக்கப்பட்டது)

 

காசு தராவிட்டால் ஊரிலை பார்த்துக் கொள்ளுறம் எண்டு மிரட்டிச் சாதித்த காலம் அது. மற்றைய இயக்கங்களிலிருந்து அகதிகளாய் வந்தவர்கள் வடிகால் தேடினர். இந்த நிலைமைகளுக்குள்ளால்தான் 40க்கு மேற்பட்ட சிறுபத்திரிகைகள் அரும்பி பிறிதானதொரு குரலுக்கான வெளியை இந்த அடாவடித்தனங்களுக்கூடாகவும் மெல்ல மெல்ல உருவாக்கின. அந்த வெளி சிறுபத்திரிகைகளாலும் சந்திப்புகளாலும் மெல்ல அகண்டு இன்று வானொலி இணையத்தளங்கள்வரை வந்ததே வரலாறு. சிறுபத்திரிகைக்காரர் மீதான தாக்குதல்கள், தேடகம் எரிப்பு, மனிதம் சஞ்சிகையை சட்டவிரோதமாக ரயில்நிலையங்களில் விற்றதாக சுவிஸ்பொலிசிடம் காட்டிக் கொடுத்தது… என புலிகள் இடறிக்கொண்டுதான் இருந்தார்கள். இதை ஒன்றும் மேற்கூறிய வட்டத்துக்குள் மட்டுமன்றி புலியரசியலோடு முரண்பட்ட தனிநபர்களின் திராணியோடும் சேர்த்துப் பார்க்கவேண்டும். காசுதரமாட்டம் செய்யிறதைச் செய் என்று முரண்டுபிடித்தும், எதிர்ப்பு அரசியல் (அல்லது நியாயம்) பேசியும் இந்த உதிர்pகள் செய்த செயற்பாடுகளையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. இவ்வாறெல்லாம் அடையப்பட்ட இன்றைய நிலைமைகளின் மீதேறி நின்று கொண்டு ரிபிசி தேனீ பாணியில் இன்று தேசத்தையும் மாற்றுக் கருத்துக்கான களத்தை உருவாக்கிவிட்டவர்களாக அல்லது வடிகால் வெட்டிவிட்டவர்களாக சித்தரிக்க முனைவது ஒரு புகலிடவரலாற்று மோசடி.

 

சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அதை கண்டித்தும் அஞ்சலி செலுத்தியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூட்டாகப் பிரசுரத்தைத் தயாரித்து விட்டது சிறுபத்திரிகை வட்டம். அதை அவர்கள் வெளியில், ரயில்நிலையங்களில் நின்றெல்லாம் விநியோகித்த செயற்பாடுகளும் உண்டு. அதைவிட பாரிசில் இதே இலக்கியவட்டக்காரர்கள் அஞ்சலி கூட்டம் நடாத்தினார்கள். இந்தக் கொலையின் நினைவாக தோற்றுத்தான் போவோமா என்ற தொகுப்பும் புஸ்பராசாவின் உழைப்பில் வெளிவந்திருந்தது. இவற்றையெல்லாம் மறைத்து அல்லது மறந்து நாவலனால் கொல்லைப்புறக் கதையெல்லாம் எழுத எப்படி முடிந்ததோ தெரியவில்லை. அந்த நேரம் தேசம் நெற் இருந்திருந்தால் அதைப் பதிவுசெய்திருக்கும் என்று எழுதுவது கொஞ்சம் கோமாளித்தனமாக இல்லை?.

 

85 களின் மத்தியிலிருந்து 90களின் மத்திவரை மேற்கூறிய நிலைமைகளுக்கூடாக (கையெழுத்துப் பிரதியாகக்கூட) வந்துகொண்டிருந்த சிறுபத்திரிகைகளைப் புறந்தள்ளி, அந்நிய தேசத்தில் அகதிகளாய் வந்த சமூகத்தின் உணர்வுகள் வடிகாலற்றிருந்த காலத்தில் தேசம்நெற் உருவாகியதாகப் பதிகிறார் நாவலன். தோழர் சொல்லித்தான் எமக்கெல்லாம் இது தெரியவருகிறது. (1997 இல் தேசம் சஞ்சிகையாகவும் 2007 இல் தேசம் நெற் ஆகவும் பரிணமித்ததாக சேனன் தனது தரவுகளை பதிந்திருக்கிறார்).

 

பின்னூட்ட முறைமைகள் தமிழ் இணையத்தளப் பரம்பல் பற்றியெல்லாம் மாற்றுக்கருத்துகளுக்கு வெளியிலும் நாம் போய்ப் பேசியே ஆகவேண்டும். நாமறிய யாழ் இணையத்தளம் தேசம் நெற்றுக்கு முந்தியது. அதன் கருத்துக்களம்தான் (படிப்பு, தேடல் சாராத) பொதுப்புத்திப் பின்னூட்டக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது என்பது என் கணிப்பு. பதிவுகள் இணையத்தள (காத்திரமான) விவாதக்களம் தேசம் நெற்றுக்கு முந்தியது. தேசம் நெற்றில் பின்னூட்ட முறைமை சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதெல்லாம் ஒப்பீடு செய்து தேசம் நெற்றை இடைமறிப்பதற்கல்ல. புகலிட தொடர்பு ஊடகங்களினதும் மாற்றுக் கருத்துகளினதும் எனது சார்பிலான ஒரு சிறு வரலாற்றுப் பதிவுதான் இது.

 

தேசம் நெற் பற்றிய பார்வையை தனிநபர்களை மண்டைக்குள் வைத்துக்கொண்டு செய்தால் அது விமர்சனமாய்ப் பரிணமிக்காது. சான்றிதழ்தான் அச்சாகும். இதே சான்றிதழின் பின்பக்கங்கள் சேறடிப்புகளாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும்.

 

-ரவி

தேசம் வாசகர்