'வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும், அத்துமீறிய வாழ்க்கையையும் மிக சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தைப் பிரதிபலித்த வண்ணம் சமுதாய இயக்கம் நேர்மையாக இயங்குகின்றது. இந்தவகையில் பெண்ணியத்தை ஆராய்வது என்பது அவசியமானதாகவும், நிபந்தனையானதாகவும் உள்ளது. ''தமிழக நாட்டுப் புறவியலில் பெண்கள்"36 என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் அந்த மக்களைப் போல் இயற்கையாக உள்ளது.
ஆணாதிக்கத்துக்கு எதிரான தூய முதலாளித்துவ ஜனநாயகத்தில் நின்று பெண்ணின் அவலத்தை முன்வைக்கின்ற போது, அங்கு கிராமியப் பெண்ணின் வாழ்க்கையை நிதர்சனமாக வெளிக் கொண்டு வருகின்றார். நாட்டுப்புற நிதர்சன வாழ்க்கையில் இருந்து எழும் அவலத்தின் காரணங்களையும், சமுதாயச் சுரண்டல் வடிவங்களையும் அப்பாடலில் இருந்து மிகக் கவனமாகச் சிலபகுதிகளைத் தேர்ந்துத் திட்டமிட்டு அகற்றியபோது (இது அவர் எழுத எடுத்து கையாண்ட ஆய்வு நூல்கள் வழியால் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இதனால் இந்த நூலை நான் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை எழுதும் போது முழுமையான நாட்டுபுறப் பாடல்கள் இன்மையால், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண் வெளிப்பாட்டை வெளிக் கொண்டுவருவதில் தவறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. இருந்த போதும் இந்தக் கட்டுரையின் முழுமை ஆணாதிக்கச் சமுதாயத்தைத் தோலுரிப்பதில் தவறு இழைக்கவில்லை.) ஏற்பட்ட திரிபுகளை மீறி, எந்த முதலாளித்துவ வண்ணக் கோட்பாட்டாளர்களையும் விட பெண்ணின் அவலத்தைப் புரிந்து வைப்பதுடன், பல்வேறு கடந்த கால ஆய்வுகளையும் தொகுத்து இணைத்துள்ள இந்நூல், மார்க்சிய விமர்சன நடைமுறை நோக்கில் முரண்பாடுகள் இருந்த போதும், இந்த நூலில் அவை முதன்மையான விமர்னத்துக்குரியவையல்ல.
கிராமியப் பெண்ணை ஓர் ஆயுளில் புரிந்து கொள்வதில் இந்த நூல் முக்கியமான பங்களிப்பைத் தருகின்றது. இதை அரசியல் ரீதியில் புரிந்து கொள்ளவும், மேலதிகமான தரவுகளையும் உள்ளடக்கி, கிராமப் பெண்ணின் ஆயுளையொட்டிய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள், பண்பாடுகள் என அனைத்தையும் பார்ப்போம். என்னால் படிக்க முடிந்த நாட்டுப்புறப் பாடல் எல்லைக்கு அப்பால் விரிந்த களம் முழுமையாக (இதில் பாடலின் உள்ளும், வெளியும் நீக்கிய நிலையில் படிக்கின்ற போது, முழுமையான கண்ணோட்டம் சிதைந்தே எனக்குக் கிடைக்கின்ற போது அதன் வீச்சு மந்தமாகின்றது.) இக்கட்டுரை கொண்டிருக்கவில்லை. அத்துடன் சுருக்கம் கருதி மிக அதிகமாகச் சுருக்கியே இக்கட்டுரை எழுதியுள்ளேன். விரிவாக எழுதும் போது பாடல்களின் அரசியல் எல்லையைப் பரந்த தளத்தில் விரித்து பார்க்க முடியும் என்பதும், அதன் உள்ளடக்கம் அரசியல் வீச்சைக் கொண்டு ஆயுதபாணியாகும் என்பதையும் மறுக்கவில்லை. பல்வேறு விடயங்களை இந்நூல் கவனத்தில் எடுப்பதால், அரசியலில் முன்னேறிய பிரிவைக் கவனத்தில் கொண்டு இந்த கட்டுரையை ஆழமான செறிவான வகையில் தொகுத்துள்ளேன்.
இந்தக் கட்டுரையில் எடுத்தாளப்பட்ட பாடல்கள் பெரும்பாலானவை மேல் குறித்த நூல் எனக்கு முழுமையாகத் தந்ததுடன், இந்த நூலை எழுத அந்தப் பாடல்களின் ஒழுங்கான தொகுப்பும் கூட உதவியது என்பதையும் குறிப்பிடுவது அவசியமாகும். நாட்டுப்புறப் பாடல்கள் பழைய பல சமுதாயத் தொடர்ச்சியில் தன்னை வெளிப்படுத்தும் போது, பின்தங்கிய சமூகமாக (நாகரிகச் சமூகத்துக்கு வெளியில்) இருந்ததால், இருப்பதால் அவை மனிதத்தன்மையை ஆழமாக வெளிப்படுத்துகின்றது.
இந்த மொழி தொடர்பாக ஜோசப் ஸ்டாலின் ''மொழி ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தின் - அது புதிய அடித்தளமாகவோ பழைய அடித்தளமாகவோ இருக்கலாம் - பெறுபேறு அன்று. அது அச்சமுதாயத்தின் வரலாற்றுக் காலம் முழுவதினதும், பல நூற்றாண்டுகள் காலமாகப் (அச்சமுதாயத்தினரிடையே காணப்பட்ட) பல்வேறு பொருளாதார அடித்தளங்களின் வரலாறு முழுவதினதும் பெறுபேறு ஆகும். அது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினாலே, தோற்றுவிக்கப்பட்டதன்று. அது முழுச் சமுதாயத்திலுள்ள சகல வர்க்கங்களினாலும் நூற்றுக்கணக்கான பரம்பரைகளின் முயற்சிகளினாலும் தோற்றுவிக்கப்பட்டதாகும்."37
மனிதன் தன்னை ஒழுங்கமைப்பது என்பது சுயேட்சையான கற்பனை இருப்பில் அல்ல. சமுதாயத்தின் இயக்கத்தில் இருந்து அங்கு எப்படி சமுதாயப் பிளவுகள் உள்ளதோ, அதில் இருந்தே அனைத்துச் செயலும் உருவாகின்றன. இந்தத் தளத்தில் தான் சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. சிறுவர் சிறுமிகளிடையே தொடக்க விளையாட்டுகள் எல்லாம் பொதுவாக உள்ளது. அது போகப் போக சாதி ரீதியாகவும், இன ரீதியாகவும், பால் ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும்... பிளந்து செல்லுகின்றது. பால் ரீதியாகப் பிளந்து போன விளையாட்டுகள் ஆண், பெண்ணின் கடமையைப் பிரதிபலிக்கின்றது.
இந்த வகையில் பெண் குழந்தைகளின் விளையாட்டுகள் ''பல்லாங்குழி, தாயம், சட்டிப்பானை வைத்து விளையாடுதல், பூப்பறிக்க வாறியா, ஒருகுடம் தண்ணி ஊத்தி...."36 போன்றன. பெண்ணின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றது. ஆண் குழந்தைகளின் விளையாட்டுகள் ''கோலிக்குண்டு, பம்பரம், பட்டம்விடுதல், கிட்டிப்புள், பலிஞ்சடுகுடு (கபடி), பச்சக் குதிரை..."36 போன்றன ஆணின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றது. ஆண் - பெண் குழந்தைகள் சேர்ந்த விளையாட்டுகள் ''கீச்சுக் கீச்சுத் தாம்பாளம், பூசணிக்காய், குலைகுலை முந்திரிக்காய், கல்லாமண்ணா, கொக்கோ, ஜோடியாட்டம், நான்குமூலை..."36 போன்றன ஆண் - பெண்ணின் குடும்பம் மற்றும் கூட்டுச் சமூகக் கண்ணோட்டத்தில் விளையாட்டுகள் பிரதிபலிக்கின்றன.
இந்த விளையாட்டுகள் படிமுறையாக வளர்ச்சி பெறுகின்ற போது, பால் ரீதியான பிளவு கூட்டு வடிவ விளையாட்டு வடிவங்களையே இல்லாததாக ஆக்குக்கின்றது. இவைத் திட்டவட்டமான சமுதாயத்தைப் பிரதிபலித்து பால் ரீதியாகப் பிளந்து செல்லுகின்றது. ஆணின் பலம், ஆளுமை போன்றவற்றைக் குறித்து விளையாட்டுகள் பிரதிபலிக்க, பெண்ணின் பலவீனம், குறுகிய தளம் என்ற எல்லைக்குள் இவை பிரதிபலிக்கின்றது. பெண்களின் வயது செல்லச் செல்ல சமையல் செய்வது, கழுவுவது, அடுக்குவது, கடவுள் வழிபடல் அதையொட்டிய சடங்குகளை செய்து விளையாடுதல், அப்பா - அம்மா விளையாட்டு, குழந்தைக்குச் (பொம்மை) பால் ஊட்டல், வளர்த்தல், சீராட்டுதல்... என்று பெண்ணின் விளையாட்டுகள் ஆணில் இருந்து விலகிச் செல்லுகின்றது.
இந்த வகையில் தண்ணி ஊத்தி என்ற விளையாட்டில் பெண்கள் இருவர் ஒரு பெண்ணைச் சிறைபிடிக்கின்ற போது, மற்ற பெண்கள் அவளை விடுவிக்க பேரம் பேசுவார்கள். எந்தப் பொருள் சார்ந்த பேரத்திலும் சம்மதிக்காத போது, ''உன் கணவன் பெயரைச் சொல்லு"36 என்று அணியின் தலைவி கோருவாள். இதன் போது சிறுமி தனது முறைப் பையனின் பெயரைக் கூறுவாள். இதையடுத்து அப்பெண் விடுதலை செய்யப்படுவாள்.
இந்த விளையாட்டில் வரும் பாடல் வரிகளைப் பார்ப்போம்.
''இம்புட்டுப் பணம் தாறேன் விடுடா துலுக்கா"
இதற்குச் சிறைவைத்த பெண்கள்
''விடமாட்டேன் மலுக்கா"36
— என்று பதில் கூறுவர். இந்த வரிகளைக் கொண்டு முகமதிய அரசர்கள் பெண்களைச் சிறைப் பிடித்ததைக் காட்டுகின்றது என்ற விளக்கம், வெறும் சொற்களைக் கொண்டு கூறுவதாகும், மேலும் இது தவறாகும். அத்துடன் இந்துப் பெண்கள் என்று குறித்து அவர்கள் கைப்பற்றவில்லை. உலகில் எல்லாப் படையெடுப்புகளிலும் சொந்த மதப் பெண்களையும் சிறைப்பிடித்து அனுபவித்தது போல் சிறைப்பிடித்தல் என்பது பொதுவான நிகழ்ச்சியாகவே இருக்கின்றது. இதைக் காணத் தவறி முன்வைக்கும் பல வாதங்கள் அர்த்தமற்ற வகையில் உள்ளது. இங்கு உள்ள வாதப்படி கைப்பற்றிய பெண்ணைக் கற்பழிக்காது அல்லது திருமணம் செய்யாது முறைப்பையனிடம் (எல்லாப் பெண்ணுக்கும் முறைப்பையன் இருக்கின்றது அல்லவா.) விட்டுவிட, எந்த ஆணாதிக்க அதிகார வர்க்கமும் உடன்பட்டது என்பது கற்பனையானது. ஏனெனின் இங்கு கைப்பற்றும் போதே மனித நாகரிகம் சிதைகின்றது. பின்னால் எப்படி மனிதத்தன்மையுடன் விடுவித்திருக்க கூடிய நாகரிகம் ஏற்பட்டிருக்கும்.
இங்கு துலுக்கா, மலுக்கா போன்ற சொற்கள் இந்து மத ஆதிக்கப் பண்பாட்டில் குடும்பத்திற்கிடையிலான திருமணத்தை வலியுறுத்த, மதம் கடந்த திருமணத்தைத் தடுக்க உருவானதாக இருக்கமுடியும். இதுவும் அத்துமீறிய சம்பவத்தில் நடந்த நிகழ்ச்சிகளை உள்ளடக்கியே இவை பரிணமித்திருக்கும். இது ஒரு முகமதிய மதப்பிரிவிலுள்ள ஒரு மனிதனுடன் சம்பந்தப்பட்ட காதல், சொத்துரிமை, குடும்ப வடிவத்தை அத்துமீறிய சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஆதாரமாக இருந்திருக்கும். நிலப்பிரபுத்துவ ஆதிக்கப் பிரிவுகளின் இறுக்கமான திருமணக் கட்டுப்பாடு மீதான நிகழ்ச்சிகள், மீள நடத்திக் காட்டப்படும் விளையாட்டாக மாறியிருக்கும். இந்த விளையாட்டில் இறுதியில், ''கடேசில வந்தவளை பூப்போட்டுப்பிடி" என்ற வரிகள் எதைக் காட்டுகின்றன? பாரம்பரியத் திருமண முறையையே பெண்களுக்கு விளக்கப்படுத்தப்படுகின்றது.
பெண்கள் பருவ வயதடைந்த பின் அவர்களின் இடையே நடக்கும் திருமணத்தை அவளையொட்டிய வயதுப் பெண்கள் திருமணம் செய்ய விடாது தடுப்பது போன்ற பாசாங்குகளில், முறைப்பையன் சிறையெடுத்து திருமணம் செய்வது போன்ற விளையாட்டுகள் பெண்ணுக்கு விளக்கிக் காட்டப்படுகின்றது. முறைப்பையன் தான் உன் கணவன் என்பதையும், மற்றவன் அல்ல என்ற ஒழுக்கத்தையும் தனிச் சொத்துரிமை அமைப்பு வடிவம் விளக்குவதே இந்த விளையாட்டின் விதியாகின்றது. இதுவே பெண்ணின் இறுதி முடிவாக எதார்த்தத்தில் இன்று உள்ளது.
சிறுபிள்ளை விளையாட்டில் இருந்து பெண் தனது பருவத்தை அடைகின்ற, அதாவது முதல் மாதவிடாய் வெளியேறும் நிகழ்ச்சியைப் பூப்படையும் நிகழ்ச்சி அல்லது வயதிற்கு வரல் அல்லது சாமத்தியம் அடைதல் என்ற வடிவில் பெண்ணுக்கு முன் வருகின்றது. இது பெற்றோரின் கண்காணிப்பு அக்குழந்தை மீது அதிகரிக்கும் வகையில் மாறுகின்றது. அக்குழந்தைக்குச் சொந்த உடல் ஆணை விட அழுக்கானதாகவும், தீட்டுக் கொண்டதாகவும் புகட்டுகின்றது. இனி வெளியில் செல்லும் காலம், விளையாடும் காலம், ஆண்கள் உடன் பழகும் காலம் முடிவடைவதைத் தெளிவாகப் புகட்டுகின்றது.
பெண்ணில் இருந்து வெளியேறும் இறந்த கரு முட்டைகளின் கழிவு, பெண்ணை வெளியேற முடியாத சிறைக்குள் தள்ளுகின்றது. இங்கு அவளைத் தனியறையில் விட்டு ஆவிகளின் பாதுகாப்பு சார்ந்து இரும்பு, துடைப்பான், செருப்பு போன்றவற்றைக் கொண்டு பெண்ணைக் காவல் வைக்கின்றனர். இதன் மூலம் அவளைப் பயந்த வெகுளித்தனத்துக்குள் அடிமைப்படுத்துகின்றனர். தனது சொந்த வயதையுடைய பெண் குழந்தைகளுடன் கூட உறவைத் துண்டிக்கும் வகையில் தனிமைப்படுத்தி, வேறுபடுத்தி வைக்கக் கோருகின்றது. அத்துடன் பெண்ணின் கடமைகள் புகட்டப்படுகின்றது. வீட்டுக்கு வெளி, உள் கடமையில் தெளிவாகச் சில வரையறைகள் உருவாகின்றன.
இந்தச் சாமத்தியச் சடங்குகளில் அப்பெண்ணின் அருகில் முறைப்பையனின் சகோதரி அல்லது அது போன்ற முறையுள்ள பெண்ணை அமரச் செய்து நடத்தும் விளையாட்டு போன்ற திருமணம், உண்மையில் பெண்ணின் அடுத்தகட்டக் கனவை அதாவது முறைப்பையனுடன் உடனே திருமணத்தைத் தெளிவாகக் கோர வைக்கின்றது. அத்துடன் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதையும் சமுதாயம் தெளிவாக்குகின்றது. இது குழந்தை மணத்தைச் சட்டப்படி ஒழித்ததின் பின் உருவான புதியவகையான குழந்தைத் திருமணமாகும். இது பழைய குழந்தை மணத்தைச் சீர்திருத்தம் செய்து பாதுகாக்கின்றது.
சாமத்தியச் சடங்கு நிகழ்ச்சியின் இறுதியில் நாத்தனார் முறையிலான பெண் விளக்குமாற்றால் (துடைப்பான்) விரட்டியடிப்பது போன்ற நிகழ்ச்சியானது வீட்டில் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புகட்டி கண்காணிப்பைத் தெளிவாக்குகின்றது. இந்த நிகழ்ச்சியில் கடைப்பிடிக்கும் பல அம்சங்கள் பெண்ணைக் கொடியஆவி அல்லது கெட்ட நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் அவள் பீடித்துள்ளாள் போன்ற பிரமையூடாக, அவளை மற்றவரில் சார்ந்து இருக்க புகட்டுகின்றது. இவை எங்கிருந்து வெளிப்படுகின்றன?
பெண்ணின் சொந்தக் கற்புரிமையை ஆணாதிக்கக் கற்பொழுக்கம் கற்பழிப்பாகச் சூறையாடும் போது, பெண்ணின் வாழ்வு சீரழிந்து போகின்றது. மேலும் ஆணாதிக்கச் சமுதாயத்தில், பெண்ணின் பாதுகாப்பு பெற்றோரின் கடமையாக மாறிவிடுகின்றது. இளம் பருவப் பெண்கள் சொந்தக் கற்புரிமைக் கண்ணோட்டத்தில் இயல்பாகப் பழகி கொள்ளும் உறவை, ஆணாதிக்கக் கற்பொழுக்கம்; சூறையாடிக் குதறுகின்றது. இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் குழந்தையின் கற்புரிமையைப் புரிய வைப்பதற்குப் பதில், அதைப் புரியாத அடக்குமுறைய+டாகப் புகட்டுகின்றனர். அதேநேரம் அதன் கொடூரத்தைப் பெண்ணுக்கு ஆழ்ந்த அர்த்தத்தில் அடி ஆழத்தில் மட்டும் அதைக் கூற விரும்புகின்றனர். இது பாலியல் பற்றி பேசுவதில் உள்ள இயல்பான ஆணாதிக்கத் தடை குறுக்காக வந்துவிடுகின்றது. இதனால் கற்புரிமை குழந்தைக்கு முன் அடக்குமுறையாக மாறுவதுடன், பெற்றோரின் இறுக்கமான நடத்தைக்கும் இட்டுச் செல்லுகின்றது. இதை எப்படி கிராமிய மக்கள் இயல்பாகக் கையாளுகின்றனர்? எனப் பார்ப்போம்.
''தண்ணிக்குப் போ மகளே
தடம் பாத்து போ மகளே
முட்டாளுப்பையங்கண்டா
முகங்கொடுத்துப் பார்க்காதே
பாசங்கலந்துவரும்
பலபேரும் மோக்கும் தண்ணி
நீரும் கலந்துவரும்
நிண்ணு மோக்க நேரமாகும்"36
— என்ற வரிகளில் ஆணாதிக்கக் கற்பு பாதுகாப்பு என்பதை விட, ஆணாதிக்கக் கற்பு சூறையாடும் அச்சமே மேலோங்கி நிற்கின்றது. பாசமாகப் பேசி பெண்ணின் கற்புரிமையைக் குதறும் ஆணாதிக்கக் கற்பு அடக்குமுறையைத் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது. பெண் தனது சொந்தக் கற்புரிமையைக் கையாளுவதற்குப் பின்னால் உள்ள நயவஞ்சகமான சமுதாயத்தைப் புரிந்தே முன் வைக்கின்றனர். ஆனால் எதார்த்தத்தில் இந்தப் பக்கத்தைக் கோட்பாட்டுப் பெண்ணியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணுக்குக் கற்புரிமை உண்டு என்பதை மறுத்து, ஆண் வழியில் ஆணாதிக்க வழியில் மட்டும் புரிந்து பெண்ணுக்கு மறுப்பது நடைமுறையாக உள்ளது. இதை விரிவாகக் கீழே தனியாக ஆராய்வோம்.
பாடல் வரியில் பாச வார்த்தையூடாகப் பெண்ணை அடைய நினைக்கும் ஆணின் போக்கில் உள்ள, இரட்டைத் தன்மையை ஆணாதிக்கச் சமுதாயம் விளக்குவதில்லை. ஏமாற்றுக்கும், மோசடிக்கும் அப்பால் உண்மையான அன்பையும், காதலையும் வேறுபடுத்தி அறியும் தன்மையைப் புகட்டாது பொதுமைப்படுத்தும் போது, இங்கு பெற்றோருக்கும், குழந்தைக்குமிடையில் அடிப்படையான முரண்பாடு எழுகின்றது. இயல்பான உணர்ச்சியில் அன்பை, ஆதரவை, காதலை அணுகும் குழந்தைக்கு இயல்பில் பொதுவாக ஆணைக் குற்றம் சாட்டும் போது, அதை மறுத்த குழந்தை தவறு இழைக்கத் தூண்டுதலாகி மற்றவனால் பயன்படுத்த முடிகின்றது. பெற்றோர் இந்த முரண்பாட்டை வேறுபடுத்தாத போது வன்முறையாளனாக மாறுகின்றனர்.
பெண்களின் திருமணம் மற்றும் தேவைகளை ஆணாதிக்கச் சமுதாயம் பூர்த்தி செய்யாத போது, அதைப் பெண் வாய்விட்டே கேட்க முடியாத நிலையில், அதை நினைத்தே தனக்குள் அழுந்திப் புலம்புவது நிகழ்கின்றது. இது பல்வேறு தேவைகள் குறித்து எழுகின்றன. இது பகிரங்கமாக அவளையறியாமல் வெளிப்படும் போது பேய் பிடித்துவிட்டதாக ஆணாதிக்கச் சமூகம் விளக்கம் கொடுத்து அதற்குப் பேய் ஓட்டுகின்றனர். இந்த வகையில் பெண் தனது திருமணத்தைக் கோருவது அநாகரிகமான செயலாகும். இவை வெளிப்படும் போது பேயின் செயலாக வரிந்து காட்டப்படுகின்றது. பேய் எல்லாம் பெரும்பான்மையாகப் பெண்ணுக்கு வருவதுடன், பேய்ப் பாட்டுகள் எல்லாம் பெண்ணைக் குறித்து இருப்பதும் தற்செயலானவையல்ல. இவை ஆணாதிக்க அமைப்பின் கொடூரத்தினால் ஆனவையாகும். இதைப் பேய்ப்பாடல் மூலம் பார்ப்போம்.
''கன்னி மேல - இந்த
கன்னி மேல வந்த
காரணத்தச் சொல்லோணும்
நாத்து நடப் போனப் பெண்ண - ஒங்
காத்து பட்ட காரணத்தச் சொல்லோணும்
பச்சப் புள்ள பயந்திட - அவ
பாவத்தக் கேக்கணு -ம்
கேப்பியா?
நீ
யாரு பெத்த மகளோ"12
''இப்போ - ஒன் தங்கச்ச
ஒன்முன்னால
தலைவிரி கோலமா -ஒ (ன்)
தங்கச்சி ஆடுறாளே
தவிச்சி ஆடுறாளே
பார்க்கப் பரிதாபமடா
பச்சப்புள்ள மயங்குதே
.. .. ..
பொண்ணு வேணுமன்னு நா (ன்)
பொலம்பித் திரிய வில்லே
பொழப்பு கெட்ட போக்கிரிக்கு
பொண்ணு எங்கு வெதச்சிருக்கு
ஆத்தா திட்டிப்புட்டா - நா(ன்)
ஆத்தாம அரளிக் கொட்ட தின்னு
அவிஞ்சு போயிட்டேன் (அழுகை)
.. .. ..
பேயா அலையுரேன் ஒரு
பேச்சுத் து(ன்)ணைவேணுமின்னு - எனக்கு
பொண்ணு வேணும்!"12
இதைத் தொடர்ந்து மற்றொரு பேயோட்டும் பாடலையும் காணலாம்.
''இந்த
பொண்ணு மேலே - இந்த
பூவரச பொட்டு மேலே
வந்தது யாரப்பா?
எந்த ஊரு
.. .. ..
கன்னிய கடிச்சக்
காரணத்தை கவனமா சொல்லோணும்
.. .. ..
பொண்ணா பொறந்து - ஒரு
புரோசனுமில்லாமப் போயிட்டேன்
.. .. ..
அஞ்சாறு நாளில
அவரப் பாக்கணும்
.. .. ..
ஆவியா அலையுறேனே!
அவரைத் தேடுறேனே
பட்டு சேல உடுத்தி - நெத்தியிலே
பொட்டு வச்சு நேரே வாரேன்
அவர வரச்சொல்லு - நா(ன்)
அவசரமாக பார்க்கணும்
பார்க்கணும்
அம்மா தாயே
அரச்சுனரு பெத்த மகளே
அழுகாம இருந்தியன்னா
அவரு வந்திருவாரு - சேதி
சொல்லியிருக்கு சீக்கிரமா
வந்திருவாரு
வெட்கப் படாம
வெளியே போயிரு தாயே
இன்னக்கி இருந்து
ஒன்பதாம் நாள்
ஊரு எல்லையில் ஒனக்கு
கண்ணாளம்
பந்தியில பிறந்தாம - நா(ன்)
பட்டுச் சேல கொண்டாரேன்
பொட்ட வேணுமின்னா
பூவும் வேணுமென்னா
.. .. ..
மஞ்சள் எடுத்துக்கிட்டு
மடி நெறைய அரிசியெடுத்து
.. .. ..
நல்ல பொண்ணெண்ணு ஒன்ன
நாலு பக்கமும் சொல்லேணும்
தெய்வப் பொண்ண்ணு
திசை யெல்லாம் சொல்லணும்"12
மேலும் தொடர்ந்து மற்றொரு பேயோட்டும் பாடலையும் காணலாம்.
''அழகு நட
அன்ன நட
மயிலு நட
பாக்கணுமா - நீ
பொண்ணாயிருருந்தா
சீர்வரிசை தாரேனம்மா
.. .. ..
தங்கச்சிக்கு
தெம்மாங்கு பாட்டுவேணுமா"12
மேலும் ஒரு பேயோட்டும் பாடலைக் காணலாம்.
''பச்சபுள்ள - இப்ப
பாவடா கட்டுது
அம்மான்னு சொல்லுது
அழகு ரதமா நடக்குது
இப்ப நீ
பொண்ண விட்டுட்டு
புறப்படணும் - இந்த
கண்ணாள விட்டுட்டு
கரையேறி போகணும்
ஒரு பாவம் செய்யாத
உத்தமி பொண்ணுமா
சின்ன பொண்ணுமா- ஒன்
சினமெல்லாம் தாங்காது"12
— என்று பேயோட்டும் பாடல்கள் பெண்ணின் நசுங்கடிக்கப்பட்ட மனித அவலத்தில் இருந்து பிறப்பதைக் காட்டுகின்றது. பெண்ணின் இயற்கை உணர்வுகள் ஆணாதிக்கச் சமூகத்தால் நலமடிக்கப்படும் போது, எல்லையற்ற உளறலாகப் பீறிட்டு வெடிக்கின்றது. இது சொல்ல முடியாததைச் சொல்லும் மொழியாக வெளிப்படுகின்றது. பேயோட்டுபவர்கள் இதைப் பரம்பரை பரம்பரையாக அனுபவரீதியாகச் சமுதாயத்தின் அவலத்தைப் புரிந்து பேயோட்டும் போது, பெண்ணின் பிரச்சினைக்குத் தீர்வாகத் தற்காலிகமான வாக்குறுதியைக் கொடுத்து அதை ஓட்டுகின்றனர்.
இங்கு மந்திரத் தந்திர வாதங்களைத் தாண்டிப் பேயோட்டுபவர் மனநோயைத் தீர்க்கும் மருத்துவராக இருக்கின்றார். ஆனால் சமுதாயத்தில் இதன் உள்ளடக்கம் பேயோட்டுவதாக நிகழ்வதால், ஆணாதிக்க அமைப்பு தனது குற்றத்தைக் கண்டுகொள்ள முடியாத அவலத்தில் பிரதிபலிக்கின்றது. இதனால் பேய் பிடிப்பது ஆணாதிக்கச் சமூக அவலத்தின் தோற்றமாகத் தொடர்கின்றது. தீர்வு அடையப்படாமல் பேயோட்டும் சடங்கு சீரழிவாகின்றது. பேயோட்டுபவர்கள் மனநோய் மருத்துவராக இருப்பதுக்குப் பதில் அதைக் கடந்து செல்கின்றார். பெண்களின் இயற்கையான உணர்ச்சிகள் தீர்க்கப்படாத ஆணாதிக்க அமைப்பில், பேயோட்டுவது தொடரத்தான் செய்யும்.
எல்லைப்புறத்தில நல்ல பொண்ணென்னு ஒன்ன
நாலு பக்கமும் சொல்லோணும்
தெய்வப் பொண்ணு
— இதில் திசையெல்லாம் சொல்லோணும் என்ற பேயோட்டலின் பின், கிராமிய எல்லைப்புறத்தில் காணப்படும் திருமணம் செய்யாத கொடூரத் தெய்வங்களாக்கப்பட்டு வழிபடும் பெண்களின் கதைகள், உண்மையில் ஆணாதிக்க அமைப்பு விளைவுகளின் பிம்பங்கள்தான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
பெண்கள் தமது திருமணத்தை எதிர்பார்த்து காத்து இருக்கக் கோருகின்றது. இங்கு இளமையை விரும்பும் ஆணாதிக்கத்தின் தேவைக்குட்பட்டு, இளமையில் பெண் தன்னை ஒருவனிடம் ஒப்படைப்பது நிபந்தனையாக உள்ளது. இந்த இளமை பெண்ணின் எதிர் காலத்தைத் திட்டவட்டமாகத் துல்லியமாக இட்டுச் செல்லும் கட்டமாகும். வயது செல்லச் செல்ல பெண்ணின்; கண்ணீர் வாழ்க்கையாகின்றது. பொருளாதார ரீதியில் பலமற்ற பெண் கணவனைச் சார்ந்து வாழ்வதும், பின் மகனைச் சார்ந்து வாழ்வதும் நிபந்தனையாக இருக்கின்ற போது, பொருளாதார ரீதியாக இறந்து போகக் கூடிய பெற்றோரை விட்டுச் செல்வது நிபந்தனையான திருமணமாகின்றது. இந்தத் திருமணம் இளமையில் சாத்தியமாகாவிட்டால் அப்பெண்ணின் வாழ்க்கை சிதைந்து போகின்றது. இப்படி வயது போய் திருமணத்தை எதிர்பார்த்து இருக்கும் கிராமியப் பெண்ணின் புலம்பலைக் கீழ்க்கண்ட பாடலில் இருந்து பார்ப்போம்;.
''மரிக்கொழுந்து நாத்துப்பாவி
அறுக்கப்பருவம் தப்பி
இருப்பு இருந்து வாடுறேனே"36
— என்று கண்ணீரின் பின்னால், பெண்கள் மீதான ஆணாதிக்கக் கொடூரம் அவர்களின் வாழ்வைச் சிதைப்பதையே இப்பாடல் வரிகள் காட்டுகின்றன. வாழ்வின் சிதைவுகள் மீதான அச்சம் காரணமாக, இயல்பாகவே பெண்கள் திருமணத்தைக் கோரி சடங்குகளையும், வழிபாடுகளையும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இச்சடங்குகள் பெண்கள் தம்மைத்தாம் இழிவுபடுத்தியும், தம்மைத்தாம் துன்புறுத்திக் கொள்வதின் ஊடாக நல்ல கணவனை, விரைவான திருமணத்தை அடையமுடியும் என்று நம்பிச் செய்கின்றனர்.
இந்த வகையில் கன்னிப் பெண்கள் தங்கள் வாழ்வில் திருமண மாலையை அணியவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் சில கடவுளுக்கு மாலை வாங்கி அணிவிக்கின்றனர். சிலர் நீராடிய ஈர உடுப்புடன் அரசமரத்தடியில் பிள்ளையாரை நீராட்டி அறுகம் புல்லால் மாலை அணிவிப்பர். சிலர் திருமணத்துக்குச் செல்வது போல் இரண்டு மாலை கொண்டு சென்று, ஒன்றைக் கடவுளுக்கும், மற்றதைத் தாமும் அணிந்து கொண்டு திருமணத்தைப் போலியாக நடத்துவர்.
இது போன்று கடவுளுக்குப் புதுப்புடவையும், தாலியும் கொடுப்பர். சில வழிபாட்டில் அரச மரத்தை ஆணாகவும், வேப்ப மரத்தைப் பெண்ணாகவும் வருணித்து திருமணத்தை நடத்தி தாலி கட்டுவார். இது போன்று சந்திரனைக் கன்னிப் பெண்ணாக வருணித்துத் திருமணம் நடத்துவர். இதுபோல் திருப்பாவை (திருவெம்பாவை) நல்ல கணவனைக் கோரி நடைமுறைப்படுத்துகின்றனர். கோவில்களில் நடைபெறும் கடவுள் திருமணத்துக்குக் கன்னிப் பெண்களை அழைத்து சென்று காண்பிப்பர். திருமணத்தைக் கோரி செய்யும் திருவாதிரை நோன்பில் பெண்கள் வீடுவீடாகச் சென்று பாட்டுப்பாடி கேவலமாகப் பிச்சையெடுத்து அதைச் சமைத்து பகிர்ந்து உண்ணுகின்றனர். ஒரு பெண்ணின் இழிவுத்தனத்தின் பக்கங்கள்தான் இவை.
இது இந்தியாவில் மட்டுமல்ல. நாகரிகமடைந்த இங்கிலாந்திலும் நத்தார் அன்று கன்னிப் பெண்கள் கையில் மெழுகுத்திரியைக் கொழுத்தியபடி ஆழக்கிணற்றை எட்டிப் பார்க்கின்றனர். அப்போது அங்கு நீரில் தெரியும் மெழுகுத்திரியின் பிம்பம் போல் மிகவிரைவில் திருமணமாகிச் சந்தோசமான வாழ்க்கையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்கின்றனர்.
இதுபோன்ற பெண்களின் இழிந்த வாழ்க்கையை எந்த ஆணும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஆணாதிக்கம் கொழுசுயேறி கொழுப்பேறி பெண்ணை அடிமையாக்கிச் சொத்துரிமையை மறுத்துபோது, பெண்ணின் வாழ்வுக்கான ஆதாரம் மற்றவனின் தயவாகியது. ஆண் உழைப்பின் சின்னமாக, சொத்துரிமையின் வாரிசாக இருப்பதால், பெண் ஓர் ஆணைச் சார்ந்து இருப்பது நியதியாகிவிட்டது. இது பிறப்பில் இருந்து தந்தையைச் சார்ந்தும், பின் கணவனைச் சார்ந்தும், இறுதியில் மகனைச் சார்ந்தும் வாழ்வதே பெண்ணின் ஆதாரமாகின்றது. இதில் இருந்துதான் பெண்ணுக்கு திருமணம் முக்கியமான அம்சமாகின்றது.
சீதனம், அழகு, இளமை, தகுதி, சாதி, மதம், குலம், கோத்திரம், வர்க்கம்... என்ற நீண்ட சமூகத் தடைகள் திருமணத்தின் எல்லையைக் கட்டுப்படுத்துகின்றது. இதனால் பெண் சுதந்திரமற்ற நிலையில், இதற்குள் பெண்கள் தம்மை வருத்தி, திருமணத்தை அடைவது விதியாகின்றது. திருமணத்தின் நோக்கம் என்பது இரண்டு மனிதர்களுக்கிடையில் இணைந்து வாழும் இயற்கையின் தேவை என்பது மறுக்கப்பட்ட எல்லா நிலையிலும், பெண் கண்ணீர் துயரத்தில் தன்னை வருத்தி, அழுந்திக் கிடக்க ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை உலகம் வழிகாட்டுகின்றது.
மகராஷ்டிரத்தில் சிலபகுதிகளில் திருமணம் என்பது நேரடியாக ஆண் வீட்டுக் கடமைகளைச் செய்வது குறித்தே கோரப்படுகின்றது. முதல் மனைவி வீட்டு வேலைகளைப் பகிர்ந்தளிக்க, அதற்குத் தேவையான பொருத்தமான மனைவிமாரைக் கண்டுபிடித்து ஆணுக்குத் திருமணம் செய்விக்கின்றாள். இங்கு திருமணம் என்பது வீட்டிற்குத் தேவையான வீட்டு மிருக வளர்ப்பு போல், பெண் குடும்பத்தில் இணைக்கப்படுகின்றாள். இங்கு ஆணின் தொழில் மற்றும் வீட்டு வேலையின் தேவையைப் பொறுத்து மனைவியின் எண்ணிக்கை இருக்கும்.
திருமணத்தைச் செய்யும் பெண் பொருளாதார ரீதியாகச் சுயமற்ற நிலையில் ஆண் வீட்டை நோக்கிச் செல்லுதல் நடக்கின்றது. இங்கு இப்பெண் முற்றுமுழுதாகப் புதிய சூழலுக்கு இசைவாகத் தன்னை மாற்றியமைக்காத எல்லா நிலையிலும் அவ்வாழ்க்கை நரகத்துக்குரியதே. ஆனால் சில சமூகத்தில் ஆண் பெண் வீட்டை நோக்கி வரும் போது ஆண் அப்படி மாற வேண்டியதில்லை. காரணம் ஆணின் பொருளாதாரப் பலம் இதைப் பாதுகாக்கின்றது. இந்தக் குடும்பத்தில் பெண் ஓரளவுக்குத் தாய் வீடு சார்ந்து துன்பத்தைக் குறைக்கின்றாள்.
திருமணம் என்பது பெண்ணின் பொருளாதார அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு பூவும் பொட்டுடன் வாழ்வதை வாழ்த்துகின்றனர். வாரிசு பல பெற்று இருக்க வாழ்த்துகின்றனர். இப்படி திருமணத்தில் பாடும் பாட்டைப் போல் வாழும் திருமணமான பெண் வாழ்த்திப் பாடும் பாடல்களைக் கீழே பார்ப்போம்.
''பூவும் மணமும் பொருந்திய தன்மை போல்
தேவியும் மன்னவனும் சேமமாய் வாழ்ந்திடுங்கள்
...
மக்கள் பதினாறும் பெற்று மங்கலமாய் வாழ்ந்திடுவீர்
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் கிளைத்து முன்னிய புகழடைந்து
நலமுடனே எந்நாளும் ஞானமுடன் வாழ்ந்திடுவீர்"36
— என்று திருமணத்தின் நோக்கம் தெளிவாக்கப்பட அதை விரிவாக்கி வாழ்ந்திட, இயற்கையின் வனப்பில் செழிப்பாக வாழ்பவைகளை உவமையாக்கிக் காட்டுகின்றனர். இவையனைத்தும் பெண்ணின் சுதந்திரமான தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்த்திப் பாடவில்லை. மாறாகக் குடும்பம் குடும்பத்தைச் சுற்றிய வடிவில் இதை வாழ்த்துகின்றனர். இங்கு பெண்ணின் கடமை ஆணாதிக்கத் தேவைக்குட்பட்ட வகையில் புகட்டுவதை அடிப்படையாகக் கொள்கின்றது.
இந்தத் திருமணத்தில் மணமகனின் முன் மணமகளை உயர்த்திக் காட்ட மணமகனுக்கு எதிராகக் கேலி செய்து பாடல்கள் பாடப்படுகின்றன. அதைக் கீழே உள்ள பாடலில் காணலாம்.
''கூடம் இருட்டுதையா கொற்றவனே உன்கறுப்பு
மணவிளக்கு இருட்டுதையா மன்னவனே உன்கறுப்பு
ஈச்சம் பழத்திலும் இருண்ட கறுப்பையா
நாகைப்பழத்திலும் நல்ல கறுப்பையா"36
— இதில் பெண்ணின் நிறம், அழகு, தகுதி, நடத்தை போன்றவற்றை உயர்த்திப் பாடும் போது மாப்பிள்ளையின் கறுப்பு இப்பாடலில் கேலிக்குள்ளாகின்றது. கறுப்பு பற்றிய இழிவுக் கண்ணோட்டம் விமர்சனத்துக்கு அப்பால் ஆண் பெண் உறவில் இவை ஆரம்பம் தொடங்கியே முரண்பாடான விடயமாக எதார்த்தத்தில் இருப்பதை இப்பாடல் வரிகள் காட்டுகின்றன. தொடர்ந்து கணவன் வீட்டில் பெண் சந்திப்பதைக் கீழே உள்ள பாடலில் பார்ப்போம்.
''பொண்டாட்டி புடவை என்றால் பிரியமாய்த் தோய்ப்பார்
தாயார் சொன்னால் தடியால் அடிப்பார்
தகப்பன் சொன்னால் தார்மார் பேசுவார்
பெண்டாட்டி சொன்னால் பிரியமாய்க் கேட்பார்"36
— இந்தப் பாடல் வரிகள் திருமணத்தில் பாடப்படும் போது பொதுவான ஆணாதிக்க வடிவங்களின் விளைவுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. பெண் மீதான வன்முறை, ஏசுதல், தாக்குதல் முதல் பாலியல் நுகர்வில் ஆணின் ஒருதலைப்பட்சமான கண நேர அன்புவரை தெளிவாக்கும் போது வாழ்வின் நடைமுறை கேலி செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, பெண் அதை இயல்பாகப் புரிந்து நடக்க இந்த வழமை அங்கீகரிக்கின்றது. பெண் முன் கூட்டியே இதை எதிர்பார்த்துச் செல்வதை இது காட்டுகின்றது. ஆனால் இது முதன்மை வடிவமாகத் திருமணத்தின் போது பெண் உணராவிட்டாலும் வாழ்க்கையில் இதுவே முதன்மையான முரண்பாடாகப் பெண்ணுக்கு இருக்கின்றது. ஆனால் இப்பாடலைப் பாடும் பெண் வீட்டைச் சார்ந்தோருக்கு இது தௌ;ளத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் வழக்கத்தையொட்டிய பண்பாட்டால் இப்படித்தான் என்ற வடிவில் இவை சம்பிரதாயமாக மாறிவிடுகின்றது.
தொடர்ந்து சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பெண் உயர் தளத்தில் இருந்து திருமணம் நடந்தால் அங்கு ஆணின் இயல்பைப் பாடல் மூலம் பாடுவதைக் கீழே பார்ப்போம்.
''மொட்டைத்தலை ராவுத்தருக்கு முன்குடுமி உண்டாச்சு
வட்டிலில் உண்டவருக்கு வாழைஇலை உண்டாச்சு
கந்தைகட்டி வாழ்ந்தவருக்கு கரைபட்டு ஜோடாச்சு
மந்தப்பசு மேய்த்தவருக்கு மாமனார் வீடாச்சு"36
— இதில் பொருளாதார ரீதியாக ஆண் கேலி செய்யப்பட, எப்படி மாமனார் தயவில் மைனராகின்றார் என்ற கிண்டல் சமுதாயத்தின் எதார்த்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகின்றது. பொருளாதார ரீதியாகப் பெண்ணும், ஆணும் எப்படி தத்தம் பாத்திரத்தைத் திருமணத்திலும், திருமணத்திற்குப் பின்னாலும் கடைப்பிடிக்கின்றனர் என்பது முதல் அதன் பண்புகளையும், விளைவுகளையும் இப்பாடல்கள் மூலம் சமுதாயத்துக்கு முன்கூட்டியே விளக்குகின்றனர்.
பெண் வீட்டில் இருந்து வரும் பாடலுக்கு மாற்றாக ஆண் வீட்டார் பாடும் பாடலைப் பார்ப்போம்.
''கூரைச்சுவர் ஏறி குதித்துவரும் மங்கைக்கு
புண்ணியமாப் போகுதென்று எங்களண்ணா தொட்டுத்தாலி கட்டினாரே
சோளக்கருது போலே எங்களண்ணா ஜோக்கா வளந்ததென்ன -
இந்தச்
சோத்துப்பானை தூக்கிமல எங்கிருந்து வாய்ச்சாளோ"36
— என்று ஆண் வீட்டார் எதிர்த்த பாடல் ஆணாதிக்கத்தின் வீச்சைக் காட்டுகின்றது. சுவரை ஏறிக் குதித்தவள் என்பது அடக்கமற்று, திமிர் பிடித்து அலைந்தவளைப் புண்ணியமாகக் கருதியே தொட்டு தாலி கட்டியவர் என்று கூறும் போது அண்ணன் தூய்மையானவன் என்ற கருத்தைக் காட்டுகின்றது. பெண் தூய்மையற்ற ஆண் தொடர்பு கொண்டவள் என்றும், ஆண் பெண் தொடர்பற்ற தூய்மை நிலையில் வாழ்ந்தவன் என்ற கருத்துப்பட பாடப்படும் வரிகள் இயல்பான சமுதாயத்தில் எதிர் நிலையில் இருந்த போதும் ஆணாதிக்கம் இதை மாற்றிக் கையாள்வதைக் காணமுடியும். அத்துடன் புண்ணியம் என்பது இரக்கப்பட்டு நடத்துவதால் பெண்ணின் சமமான பங்களிப்பு கீழ்நிலைப்படுத்தப் படுகின்றது. அப்பெண்ணைச் சோத்துப் பானையாக வருணித்ததன் மூலம் அவளை வீட்டு வேலைக்காரியாகவும், தண்டல் சோற்றுக்காரியாகவும் காட்டப்படுகின்றாள். எல்லாப் பாடல்களையும் பெண்கள் பாடுவது என்பது குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்;. ஆண் - பெண் வாழ்க்கையின் உட்சாரத்தை இதைவிட அழகாக யாரும் புரிய வைத்திட முடியாத பெண்களின் வளமையான பாடல்கள், இந்த ஆணாதிக்க உலகத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது.
திருமணத்தில் பெண்ணின் தாயைக் கேலி செய்து ஆணின் தாய் பாடும் பாடலைக் கீழே பார்ப்போம்.
''அரைத்துட்டு கீரைத்துண்டு அஞ்சாறுவீதம்
புலியஇலை பெருகத்தச்சி கறிசமைச்சி
புளியஞ்சாதம் பிசிறி வச்சி"36
''உங்க வீட்டுக் கல்யாணம் நல்லாயில்லை
போட்ட விருந்திலே நெய்யுமில்லை
இட்ட பாயாசத்திலே பாலுமில்லே."36
— இதில் ஆண் வீட்டுத் தாய் சமூகத் தகுதிப் பெற்று, பெண் வீட்டைத் தூற்றும் போது, திருமணம் என்பது பொருளாதாரம் என்ற விபச்சார நிலையில் நடப்பதைக் காட்டுகின்றது. பெண் மட்டுமல்ல பெண்ணைப் பெற்ற குடும்பமும் தூற்றப்படுகின்றது. ஆணின் சமூகத் தகுதி, பொருளாதார மேன்மையால் பெண்ணை அண்டி வாழ சமூகப் பொருளாதார அமைப்பு கோரும் போது, பெண் சார்ந்த அனைத்தையும் சிறுமைப்படுத்துவது இலகுவானதாக மாறுகின்றது. பெண் சார்ந்த குடும்பம் இவற்றுக்கு மௌனம் சாதிப்பதன் ஊடாக, ஆண் வீட்டைத் திருப்தி செய்வதில் அதிக முக்கியத்துவத்தை எடுக்கின்றனர். இது பெண் திருமணத்தின் பின் வாழ்க்கை பூராவும் தொடர்வதுடன், இதற்குள் பெண் சார்ந்த குடும்பம் அழுந்தி வாழ்கின்றனர்.
திருமணமான பெண்ணின் முதல் கடமை ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுப்பதே. இதைப் பெற்றுக் கொடுக்காத எல்லா நிலையிலும் பெண் தொடர்ச்சியாகக் கேவலமாகச் சிறுமைப்படுத்தப்படுகின்றாள். அத்துடன் பாலியலில் ஆண் விந்துதான் பாலினத்தை, அதாவது பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று வரையறுப்பதுடன், கருவின் உருவாக்க எல்லையையும் தீர்மானிக்கின்றது என்ற விஞ்ஞான உண்மையை மறுத்து, பெண்ணைக் குற்றஞ்சாட்டி ஒடுக்குவது நிகழ்கின்றது. ஆண் உடலுறவின் போது 1,850 இலட்சம் (18½ கோடி) விந்தணுக்களை வெளியேற்றுகின்றான். இது 800 இலட்சத்துக்கும் (8 கோடிக்கும்) குறைவாக இருந்தால் குழந்தை பிறப்பு கடினமாகின்றது. பெண் உறுப்பில் ஒரே ஒரு கருமுட்டைதான் கருப்பையை வந்தடைகின்றது. இது ஆணைப் போல் ஒவ்வொருமுறையும் வருவதில்லை. மாதம் ஒரேயொருமுறை வெளிவரும் கருமுட்டையுடன் இணையும் ஆணின் ஒரேயொரு விந்து, எந்த வகையானது என்பது மட்டுமே ஆண் அல்லது பெண்ணின் பால் வகையைத் தீர்மானிக்கின்றது. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் இதைப் பெண்ணை நோக்கி குற்றம் சாட்டுவது நிகழ்கின்றது.
இதனால் பெண்கள் துன்புறுகின்றனர். இதை நிவர்த்தி செய்ய சடங்குகளை, வழிபாடுகளைச் செய்கின்றனர். இதில் தூய்மையாக இருத்தல் அதுவும் மாதவிடாய் அல்லாத நாளாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கணவனுடன் உடலுறவு கொள்ளக் கூடாது. இப்படி தூய்மையாக இருத்தல் பல விடயத்தில் விரிந்து காணப்படுகின்றது. மாதவிடாய் காலத்தில் தூய்மையாக இருக்கவும், உடலுறவைத் தவிர்த்தும் இருக்க வேண்டிய பெண்ணை, அதேபோல் மற்ற நாளில் இருக்க கோருவது ஆணாதிக்கத்தின் திமிர் பிடித்த பார்ப்பனிய மரபாகும். பார்ப்பனிய வேதம் இதைக் கோருவதைப் பின்னால் ஆராய்வோம்.
அரச மரத்தைச் சுற்றி 108, 1,008 தரம் சுற்றி வரும் பெண் அதனால் கருவுறுகின்றாள் என்ற நம்பிக்கைகள் அவளை நோக்கித் தள்ளுகின்றது. இதையொட்டிய பூசைகளின் போது புரோகிதரின் உதவியுடன் பெண் கருவுறுவது என்பது உண்மையில், அக்குழந்தையின் தந்தை சொந்தக் கணவன் அல்ல என்பதுதான் உண்மையாகும். குழந்தையைக் கோரி ஒரு நாளைக்கு ஒரு சங்கு பால் வீதம் குடித்து உண்ணாவிரதமிருப்பதும் நடக்கின்றது. அக்கம்பக்கத்து வீடுகளில் பிச்சையெடுத்து உண்பதன் மூலம் (ஆண் பிள்ளை) பிள்ளைவரம் கோருகின்றனர். மற்றொரு சடங்கில் நிலத்தில் உணவையிட்டு மிருகம் போல் வாயால் நக்கி உண்பதன் மூலம், தம்மை வருத்தி இழிவுபடுத்தி பிள்ளை வரம் கோருகின்றனர். நாகப்பாம்பு வாழும் புற்றின் அருகில் பால், முட்டை வைத்து பி;ள்ளை வரம் கோரி, சில நாட்கள் தொடர் சடங்குகளைச் செய்கின்றனர். சிலர் தொட்டில் ஒன்றை மரத்தில் கட்டி விடுவதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதேபோல் சில நோன்புகளின் போது சிறு குழந்தைக்கு உணவளிப்பதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஏழைக் குழந்தையைத் தத்தெடுப்பதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்று நம்புகின்றனர். குழந்தை இல்லாத பெண், குழந்தை பிறந்த வேறொரு தாய் வீட்டுக்குச் சென்று, அவ்வீட்டு அம்மிக் குழவிக்கு குழந்தையை போல அலங்காரம் செய்து, பின் அதைப் பிறந்த குழந்தைக்கு அருகில் வைத்து, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை எடுத்து உண்ணுகின்றாள். இதன் மூலம் குழந்தை பெறமுடியும் என்று நம்பிக்கைக் கொள்கின்றனர். இது போன்று சடங்குகள் பலவற்றைச் செய்யப் பெண்ணை நிர்ப்பந்திக்கின்றது.
ஆணாதிக்க அமைப்பில் ஆணாதிக்க வாரிசைப் பெற்றுக் கொடுக்கப் பெண் தன்னைத்தான் வருத்தி, கேவலப்படுத்தி, அழுந்திக் கிடக்க வேண்டியுள்ளது. ஆண்கள் இது போன்றவற்றைச் செய்வதில்லை. அப்படி எதுவும் செய்யின் பெண்ணுக்குத் துணைமட்டுமே நிற்கின்றான். கருவின் கருவளம் பெண்ணினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது என்ற ஆரம்பக்காலக் கண்ணோட்டம் ஆணின் பங்களிப்பைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஆணின் உதவி தேவை என்பதை அனுபவ ரீதியாகப் புரிந்த போதும் (இதில் தான் ஒருதாரமணம் உறுதிப்படுகின்றது.), ஆணாதிக்கக் கண்ணோட்டம் அதைத் தனக்கு எதிராக ஆண்மை இன்மை மீது வைக்க மறுத்தது. குழந்தை இல்லை என்றால் அது பெண்ணின் குறையாகக் காட்டி, ஆணாதிக்க ஆண்மையைப் பாதுகாத்தது. இதனால் பெண்ணைக் கொண்டு சடங்குகளை, விரதங்களைச் செய்விப்பதன் மூலம் நிவர்த்திக்கக் கோருகின்றது. பெண் இதில் தன்னைத்தான் தரம்தாழ்த்தி வாழவும், ஆணாதிக்கத்தைப் போற்றவும் இவை நிர்ப்பந்திக்கின்றது. குழந்தை இல்லாத நிலையில் ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை மலடியாகக் கேவலப்படுத்தும் போது, அப்பெண் அதை எப்படி சந்திக்கின்றாள்? என்பதைக் கீழே உள்ள பாடலில் இருந்து பார்ப்போம்.
''ஐயனால் கோயிலாண்டா ஆடுவெட்டப்போனா இடத்த
ஆட்டுக்கிடா நூறும் சுமந்தேன் - என் அன்னமே
ஆட்டுக்கிடா நூறும் சுமந்தேன்
என்ன என்ன சுமந்தாலும் என் கண்ணம்மா
கன்னரே வர்ணமுள்ள தேவரே
எனக்கு மைந்தன் ஒன்றும் காணமே - என்னன்னமே
எனக்கு மைந்தன் ஒண்ணும் காணமே"36
''மாடுபோகும் வழிகளில் மங்கநீரக்கட்டி வச்ச
மங்கையாள் பேரச் சொன்னா மாடுகள்ளுத் தீண்டல்ல"36
— இதில் தனக்கு ஒரு குழந்தை கிடைக்கவில்லை என்று பெண் புலம்பும் போது, கடவுளை நோக்கி செய்த சடங்குகளைச் சொல்லிப் புலம்புகின்றாள். தனது வேண்டுகோள்களையும், தானங்களையும் மிருகங்கள் கூட ஏற்கத் தவறி, குழந்தையைத் தரத் தவறுகின்றன என்று புலம்பும் சோகத்தைக் கண்ட ஆணாதிக்க அமைப்பு வெட்கித் தலைகுனிவதில்லை. குழந்தை பெறாமைக்கு ஆண் கூட நேரடிக் காரணமாக இருக்கும் சந்தர்ப்பத்தை நிராகரித்தபடிதான் பெண் வதைக்கப்படுகின்றாள். இந்த ஆணாதிக்க வதைகளில் இருந்து குழந்தையைப் பெற்று விடுபடும் பெண், இதைத் தனது குழந்தையின் தாலாட்டில் எப்படி விரதம் இருந்து பற்பல சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது என்பதைக் குழந்தையிடமே கீழே உள்ள பாடலில் வெளிப்படுத்துகின்றாள்.
''ஆறிரண்டும் காவேரி - என் கண்ணே
அதன் நடுவே சீரங்கம்
ஸ்ரீரெங்கம் ஆடி - என் கண்ணே
திருப்பாற் கடலாடி
மாமங்கம் ஆடி என்கண்ணே
மாசிக் கடலாடி
தைப்பூசம் ஆடி - என் கண்ணே
தவம் செய்ய வந்தவனோ
பட்டினி இருந்து - என் கண்ணே
பகவானைச் சேவித்து
மலைமேல் தவமிருந்து - எனக்கு
மயிலேறி வந்தவனோ"36
''அள்ளி மிளகு தின்னு
அறுபது நோன்பிருந்து
எண்ணிமிளகு தின்னு
எட்டுநாள் நோன்பிருந்து
கன்னி குமரியிருந்து
கண்டெடுத்த கண்ணோ"36
''பத்தெட்டு காலம் பகவானை சேவித்தோம்
ஈரேழுகாலம் ஈசுவரனை தியானித்தோம்
போன போன கோவிலெல்லாம் புத்திரனே வேண்டுமென்று
போகாத கோவிலுக்கு பொன் முடிஞ்சு போகவிட்டோம்"36
— இவைகள் இந்து வழிபாட்டில் இந்துப் பெண்களுக்கு மட்டுமல்ல, கிறித்துவ வழிபாட்டில் கிறிஸ்தவப் பெண்களும் ஆணாதிக்கத்துவ அமைப்பில் வாரிசைப் பெற்றுக் கொடுக்க விரதங்கள், சடங்குகளைச் செய்வதைக் கீழே உள்ள பாடலில் வெளிப்படுத்துகின்றனர்.
''நான் திங்கள் முழுகித் திருக்கோவிலுக்குப் போகையிலே
பவனிவரும் மரியாளும் திருவுள்ளத்தில் கொண்டாரோ
பவனிவரும் ஏசுநாதரும் மனமகிழ்ந்து கொண்டாரோ
மாதம் முழுகி நான் வேளாங்கன்னி போகையிலே
அன்னை கன்னிமரியாளும் மனமகிழ்ந்து கொண்டாரோ
அந்தோனியாரை மன்றாடிச் செபம் செய்து வந்தானோ"36
— என்று குழந்தை வாரிசு வேண்டி மதம் கடந்து பெண் துன்பப்படும் சோகத்தையே இது காட்டுகின்றது. பெண் கருவுறும் போதே கணவன் மற்றும் கணவன் வீட்டுக் குடும்பத்திடம் இருந்து முதன் முதலாக அன்பும், ஆதரவும் கிடைக்கின்றது. குடும்ப வாரிசை உருவாக்கும் இப்பணியின் முடிவு வரை பெண்ணுக்குக் கிடைக்கும் காலம்தான், பெண் புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழ்ந்த காலமாக இருக்கும். இதுவும் ஓர் எல்லைப்பாட்டைக் கொண்டது. பெண் கருவைச் சுமந்தவுடன் தாய் வீட்டை நோக்கிச் செல்லுகின்றாள். அங்கு நிம்மதியான வாழ்க்கை, ஆதரவு, அன்பு போன்றவற்றைப் புகுந்த வீட்டைவிட அதிகமாகப் பெறுவதன் மூலம், குழந்தையை மனச்சுமையின்றி பெறுவதுக்கு உதவுகின்றது. ஆனால் குழந்தையைப் பெற்றவுடன் குழந்தைக்குச் சீர் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தை, பெண்ணைப் பெற்ற குடும்பம் சந்திக்கின்றது.
கருவுறும் பெண்ணுக்கு மாசு அகற்றும் நிகழ்ச்சிக்காகச் ''சீமந்தம்"36 என்ற சடங்கு நிகழ்ச்சியைச் செய்வதுடன், பூச்சூடல் மற்றும் வளைக்காப்பு போடுதல் போன்ற சடங்குகளைப் பெண்ணுக்குச் செய்கின்றனர். பெண் கருவுற்று தாய் வீடு சென்று குழந்தை பெற்று திரும்புவது என்பது வேதனையான காலமாகும். வறுமை மற்றும் மருத்துவ வசதியற்ற கிராமப்புறத்தில் குழந்தைப்பேறு என்பது பெண்ணின் இறப்புக்குச் சமமானது. இதனால் தாய் வீட்டை நோக்கி பெண் செல்வது, மரணத்தை நோக்கிச் செல்வது போன்ற மனநிலையைப் பெண் அடைகின்றாள். அதை அவள் எப்படி வெளிப்படுத்துகின்றாள்? எனக் கீழே உள்ள பாடலில் இருந்து பார்ப்போம்.
''நான் தேய்க்கும் எண்ணெயெல்லாம்
ஏன் அருந்துரையே
ஆர்தேச்சிப் பார்க்கப்போறா"36
— என்ற வரிகள் ஊடாக ஆணின் ஆணாதிக்கத் தன்மையை வெளிப்படுத்துகின்றாள். தான் மட்டும் ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பதையும், ஆண் காதலிப்பதில்லை என்பதையும் இதன் ஆழ்ந்த அர்த்தத்தில் வெளிப்படுத்துகின்றாள். குழந்தைப் பேற்றில் இறந்தவுடன், தான் பாவித்த பொருட்களை எந்தப் பெண் அனுபவிக்கப் போகிறாளோ என்று புலம்பும் போது, அப்பெண்ணின் எதார்த்தம் நிர்வாணமாகின்றது. ஆண் தன் மனைவி இறந்தால் வேறொரு பெண்ணை அடுத்த கணமே, மீளத் திருமணம் மூலம் நிரப்பும் ஆணாதிக்கப் பண்பாட்டின் கொடூரத்தை இப்பாடல் வரியூடாகப் பெண் வெளிப்படுத்துகின்றாள்.
குழந்தை பெற்ற பெண்ணை மாசு நிறைந்தவளாகக் கருதி தனியறையில் பெண் குடும்பமே ஒதுக்குகின்றனர். மாசு அகற்றும் வரை அப்பெண் எதையும் செய்யமுடியாது. இந்த வீடு மாசு நிறைந்ததாகக் கருதி, சமூகம் தனித்துவமாக அணுகுகின்றது. இதன் போதும் பெண்ணை நோக்கி சடங்குகள் மீள நடத்தப்படுகின்றது.
இதன் அடுத்தக் கட்டமாகப் பெண் பெற்ற குழந்தைக்கு நன்றிக் கடனாகவும், அக்குழந்தையைப் பாதுகாக்கவும் புதிய சடங்குகளைப் பெண் தொடங்குகின்றாள். குழந்தைக்கு வழிபட்ட கடவுளின் பெயரைச் சூட்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்தால், குழந்தையின் கையால் மூன்று பிடி பணத்தைக் கோயிலுக்குக் கொடுக்கின்றனர். சிலர் குழந்தையின் நிறைக்குச் (எடைக்கு எடை) சமமான பொருட்களைக் கொடுக்கின்றனர். சிலர் மணி செய்து கொடுக்கின்றனர். இதன் போது கோயில் எல்லையில் தென்னை மரத்தை நடுவதன் மூலம் குழந்தை செழித்து வாழும் என்று நம்புகின்றனர். கரும்பில் துணியிட்டுக் கணவனும் மனைவியுமாகக் குழந்தையை அதில் இட்டுக் கோயிலைச் சுற்றி பின் அக்கரும்பைக் கோயிலுக்குக் கொடுப்பர். குழந்தையின் தலைமுடியைக் காணிக்கையாக்குவர். குழந்தையும், தாயும் பிச்சையெடுத்து ஒரு நாள் உண்பர். குழந்தைக்குப் பிச்சை என்று பெயரிடுவதன் மூலம் குழந்தையை இழிவுபடுத்தி நாவுறு கழிப்பர்.
சிலர் குழந்தைக்கு மூக்கு குத்தி ஆணாக இருந்தால் மூக்கன் என்றும், பெண்ணாக இருந்தால் மூக்கம்மாள் என்றும் பெயரிடுவர். இதனால் குழந்தைக்கு ஆசைப்பட்டு எமன் கவர்ந்து செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை. குழந்தையை வேறு ஒரு தாயிடம் கொடுத்துவிட்டுப் பின் தவிட்டைக் கொடுத்து குழந்தையை மீளப் பெறும் சடங்கும் நிகழ்கின்றது. குழந்தையைக் குப்பையில் கிடத்தி, பின் குழந்தைக்குக் குப்பை என்று பெயரிடுவர். இது போன்ற அனைத்துச் சடங்குகளிலும் பார்ப்பனியச் சொகுசு வாழ்க்கை வாழும் புரோகிதர் கூட்டம் இலாபமடைகின்றது. ஆணாதிக்க வாரிசுரிமையைக் கோரி அதைப் பாதுகாத்து வளர்க்கும் வழியில், பெண் எல்லா வகையிலும் தன்னை வருத்தவேண்டியுள்ளது. இதில் இயற்கை மற்றும் செயற்கையான அழிவைத் தடுக்க சடங்குகளை, வழிபாடுகளைத் தீர்வாக ஒட்டுண்ணிகள் முன்னிறுத்தியதன் மூலம், பெண் அதற்குள் அடிமையாக்கப்பட்டுள்ளாள். இதன் மூலம் ஆணாதிக்கம் செழித்து வாழ்கின்றது.
பிறந்த குழந்தை மீதான தாலாட்டில் பெண் தனது உள்ளத் துயரங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் அதே நேரம், இசை மற்றும் மொழி ஆளுமையை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. ஆணின் வாரிசுரிமையைப் பெற்றுக் கொடுத்ததின் மூலம் மலடி என்ற அவதூறில் இருந்து விடுபட்டதைத் தாலாட்டில் குழந்தைக்குச் சொல்லும் போது பெண்ணின் துயரம் நிர்வாணமாகின்றது.
புகுந்த வீட்டில் இருக்கும் கணவன்மாரின் சகோதரிகள், தமக்குப் போட்டியாக அண்ணன் மனைவி பொருளாதார ரீதியாக வந்ததாகக் கருதும் நிலையில் பெண்களுக்கிடையில் (கணவன் பார்வையில் மனைவி ஒ சகோதரி) மோதல் நீடிக்கின்றது. இதை மீறி குழந்தை பராமரிப்பில் வாரிசுரிமை, தவிர்க்க முடியாமல் அண்ணனைத் திருப்தி செய்யும் வகையில் சகோதரிகள் பராமரிப்பில் பங்கு கொள்கின்றனர். அதைக் குழந்தை பெற்ற தாய் தனது தாலாட்டில் பாடுவதைப் பார்ப்போம்.
''பட்டெடுத்துக்கண்ணே தொட்டிலிடப்
பாஞ்சாலிகண்ணே அத்தையிருக்க
பசியாத்திக்கண்ணே பால்கொடுக்கப்
பத்தினியார் கண்ணே இங்கிருக்க"36
அண்ணன் சகோதரிகள் ஆண்வழிக் குடும்பத்தில் தொடர்ந்து வாழமுடியாத நிலையில், குழந்தை பராமரிப்பு தான் புகும் இடத்தில் குழந்தையைப் பெற்று வாழும் ஆணாதிக்கச் செல்வத்தைப் பெற்றுக் கொள்ள அல்லது அதை நோக்கிய கனவில் ஆறுதலைக் கொடுக்கின்றது. இந்தப் பராமரிப்பில் தேவதாசிகள் அமர்த்தப்பட்டதைப் பெண் பெருமையாகப் பாடுகின்றாள்.
''சிலநோம்பு நாளையிலே உனக்குத் தாலாட்டுபவராக
மதுரைத்தாசிமார் எல்லோரும்"36
— என்ற பாடல் வரிகள் எமக்குச் சில விளக்கத்தைத் தருகின்றது. பெண் நோன்பு இருக்கும் போது, குழந்தை பராமரிப்பு உட்பட பெண்ணின் ஆணாதிக்கக் கடமைகளைச் செய்வதைத் தவிர்க்கவும், அதைத் தாசிமார் கொண்டு நிறைவு செய்ததையும் இது வெளிப்படுத்துகின்றது. இதற்குள் அத்தாசிமார் கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமாக இருந்தது.
பார்ப்பனிய இந்து மதம் தாசிமாரை உருவாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போதும் சரி, பார்ப்பன உடலுறவில் மோட்சம் கிடைக்கும் எனப் பெண்ணை நம்ப வைத்த போதும் சரி, ஆணின் பலதாரமணத்தை அங்கீகரித்த போதே இதற்குள் எல்லை அற்றதாகி விடுகின்றது. மனைவி குழந்தைப் பேற்றை நோக்கி தாய் வீட்டை நோக்கிச் செல்லும் போது, மனைவியின் தங்கை (அதாவது கொழுந்தி) கணவனைப் பராமரிக்கும் பணியில் இந்தப் பாலியல் அங்கமும் உள்ளடங்கியே இருந்தது. முன்பு மூத்தப் பெண்ணைத் திருமணம் செய்தால், பெண்ணின் தங்கைமார் அனைவரும் அவ்வாணின் மனைவிமாராக இருந்தது எல்லாம், இன்றும் சில விதிவிலக்குடன் காணமுடியும்.
குழந்தைப் பராமரிப்பில் கடவுள் எப்படி பங்களிக்கின்றார் என்ற வரிகளில் பெண்ணின் நிலையைக் கீழே உள்ள பாடலில் இருந்து பார்ப்போம்.
''ராமர் பசுவளக்க லட்சுமணன் பால்கறக்க
சீதை எளுந்திருச்சித் தீமூட்டிப் பால்காச்சி
சீதையம்மா மோர்கடைய - என்னய்யா
செல்லமகள் நித்திரையோ"36
— இங்கு பெண்ணின் கடமை சீதை வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. பெண்ணின் கடமை குசினிக்குள் என்பதை எதார்த்தமாக வெளிப்படுத்தும் இந்த வரிகள், பெண்ணின் அடிமைத்தனத்தையும் காட்டுகின்றது. பிறந்த குழந்தைக்கான இத்தாலாட்டுக் கல்வி ஆணாதிக்கக் கடமைகளை இந்த வரிகள் ஊடாக உணர்த்துகின்றது. இதை மேலும் பார்ப்போம். இதில் ஆண் குழந்தையை நோக்கிய தாலாட்டுப் பாடலில் ஆண் படிக்க பிறந்தவன் என்ற கண்ணோட்டத்தில் வெளிப்படுகின்றது. அதைக் கீழே காணலாம்.
''சென்னைப்பட்டணம் ஐக்கோடு - என் ஐயா நீ
செயிக்கப் பொறந்த கண்ணோ
பசுமலை பள்ளிகூடம் - என் ஐயா நீ
படிக்கப் பெறந்த கண்ணோ
எளுமலை பள்ளிகூடம் - என் ஐயா நீ
எளுதப் பொறந்த கண்ணோ"36
இதேபோது பெண்ணை நோக்கிய தாலாட்டுப் பாடலில் பெண் அழகுபடுத்தப்பட வேண்டியவள் என்பதைக் குறித்து வெளிவருகின்றது.
''பச்சை வளவி எடு - என் அம்மாளுக்கு
பலவர்ண மஞ்சள் தோடு
நீல வளவி தொடு என் அம்மாளுக்கு
நெளிவர்ணப் பச்சை தோடு"36
''நாளி நறுக்கு மஞ்சு - மீனாளுக்கு
நன்னாளி பச்சமஞ்ச
அரச்சு வளிச்சாளோ - மீனா
அஞ்சுவறுக் கிண்ணத்திலே
தேய்ச்சுக் குளிச்சானோ - மீனா
தொப்பமெல்லாம் பூமணக்க
கொத்தோடு சீவக்காயோ - மீனாளுக்கு
கொடத்தோட நல்லெண்ணை
அள்ளிக் குளிப்பாளோ - மீனா
அத்தனையும் பூமணக்க"36
— என்று இந்தத் தாலாட்டின் ஊடாக ஆண் - பெண் குழந்தையின் கடமைகள், ஒழுக்கங்கள் புகட்டப்படுகின்றன. சமுதாயத்தின் ஆணாதிக்கப் படிமானங்கள் பிறந்தது முதல் தாலாட்டில் இருந்து வேறுபட்டுப் பிளந்து உருவாக்கப்படுகின்றது. சமுதாயத்தில்; பெண்ணின் நிலை, அவளின் கடமையை ஒட்டி வெளிப்படும் தாலாட்டுப் பாடல்கள் தன்னிச்சையான, சுயேட்சையான வெளிப்பாடுகள் அல்ல.
ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்பு எப்படி ஆண் பெண்ணின் கடமையைச் சமூகத் தன்மையாக்கியுள்ளதோ, அதைப் பிரதிபலித்தே தாய்மை கற்றுக் கொடுக்கின்றது. இதற்கு வெளியில் தாய்மைக்கு ஓர் உலகம் சுயேட்சையாக இருப்பதில்லை. இதில் இருந்தே, தன்னை அறியாமல் தாய் தனக்கு எதிராகவே குழந்தை வளர்ப்பில் ஆணாதிக்க நஞ்சைய+ட்டுவது நிகழ்கின்றது. சூறையாடும் பொருளாதார அமைப்பில் உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் மற்றும் நஞ்சையும் உள்ளடக்கி எப்படி உடலினுள் எம்மையறியாமால் உள்வாங்கி நோயைச் சந்திக்கின்றோமோ, அப்படித்தான் தாலாட்டிலும் ஆணாதிக்கம் இணைந்து போயுள்ளது. இது தனிச் சொத்துரிமையில் குழந்தைக்குச் சூறையாட கற்றுக் கொடுப்பதைக் கீழே வரும் பாடலில் இருந்து பார்ப்போம்.
''தங்கத் தொறவால்களாம் - என் கண்ணே
தனித் தாழ்ப்பாள் பூட்டுகளாம்
அதட்டித் தொறக்க நீ
அதிகாரி பொறந்தாயோ
வெள்ளி எழுத்தாணி வெண்கலத்தால் மைக்கூடு
தொட்டக்கணக்கெழுதும் துரைராஜா"36
சமுதாயத்தின் இயக்கங்கள், அதில் மேன்மையான வாழ்க்கையைக் கோரி, பாடும் தாலாட்டுப் பாடல்கள் மூலம் கனவுகாணும் தாய்மையின் பின்னால், ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை விளைவுகளை விதியாக்குகின்றது. இது பெண்ணை மட்டுமல்லாமல், மனித அடக்குமுறைகளை எதார்த்த அமைப்பு சார்ந்து, பரம்பரையாகத் தொடர வழிகாட்டுகின்றது.
பெண்கள் தமது பிறந்த வீட்டுப் பெருமையைக் குழந்தைக்குத் தாலாட்டின் ஊடாகச் சொல்வதில் தமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
''செக்கச்சிவப்பரோ உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகுசிரிப்பரோடே ஐயா நீ
அருமை மருமகனோ"36
''பட்டமரம் பாலூறும்
பாவல்காய் தேனூறும்
உத்தமனார் வாசலிலே
ஏலக்காய் காய்க்கும்"36
''இலநாலு பிஞ்சுதிரும்
ஐhதிக்காய் காய்ச்சிருக்கும் - உங்க
தாய்மாமன் வாசலிலே"36
''தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்னே விட்டு - உன்மாமன்
தாசிக்கே விட்டபணம் - ரெண்டு
தங்க மடம் கட்டலாமே
மே வீடாம் கீ வீடாம்
போகவர ரஸ்தாவாம்
தாசிகள் வந்திறங்க
தாமரைப் பூஞ்சோலை"36
இது போன்ற தாலாட்டு;கள் மூலம் பிறந்த வீட்டுப் பெருமையையும், பிரிந்த துயரத்தையும் சொந்தக் குழந்தையிடம் ஒப்பு வைக்கின்றாள். பெண்வழிச் சமுதாயத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தின் ஆணாதிக்கக் கொடூரம் பெண்ணை இழிவுபடுத்திய போது, புகுந்த வீட்டை விட பிறந்த வீட்டை நினைத்து ஏங்குவது இயல்பாகின்றது. சொந்தக் கணவன் தாசியிடம் போவதை அல்லது வேறு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பதை எதிர்க்கும் அதே நேரம், சொந்த வீட்டுப் பெருமையில் இவைகள் சிறப்பு பெற்றுப் புகழப்படுவதைக் காணமுடிகின்றது.
தாய்மாமனிடமும் ஒரு பெண் தன்னைப் போல் புகுந்த வீட்டு வேதனையை அனுபவிப்பாள் என்ற உணர்வைவிட, குழந்தைக்குப் பெருமைப்படுத்தக் கூடிய தகுதியாக இவைகளைத் தாய்மை போற்றுகின்றது. குழந்தை இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணைக் காதலிப்பதற்;குப் பதில், பலதாரமணத்தில் வாழ இந்தத் தாலாட்டுகள் அங்கீகாரத்தை மறைமுகமாகக் கொடுக்கின்றது. தாலாட்டின் எல்லை விரிந்த பாடல்கள் நிறைந்து இருக்கின்றன. பெண் தனது சோகத்தை, தனது துன்பத்தை, தனது ஆத்திரத்தை எப்படி வெளிப்படுத்துகின்றாள் என்பதைக் கீழே வரும் பாடலில் இருந்து பார்ப்போம்.
''மாமனால் காட்டுக்கு உங்களத்தை
அரிப் பிறக்கப் போகையிலே
பெட்டிபிடுங்கி - உங்க மாமன்
பிறகரையே எறிஞ்சிடுவார்"36
— இதில் கணவனின் சகோதரி (நார்த்தனார்) தனது கணவனிடம் பொருளாதார ரீதியாகத் தனது உரிமையைப் பறித்து பங்கு பெறுவதை எதிர்த்தும், தனது கணவரின் தந்தையை எதிர்த்தும், தனது சகோதரன் தனக்காக நிற்பதாகத் தாலாட்டில் குழந்தையிடம் ஒப்புவிப்பதன் மூலம் அவமதித்த திருப்தி கொள்கின்றாள். புகுந்த வீட்டை வெறுத்துப் பாடும் இந்தத் தாலாட்டுகள் ஒருதாரமணத்தின் வன்முறையை வெளிப்படுத்துகின்றது. இந்தத் திருமணங்கள் ஆணுக்கு மட்டும் சார்பான ஜனநாயக விரோதத்தைப் பெண்ணுக்கு உள்ளடக்கி வக்கரித்துக் கிடப்பதைக் காட்டுகின்றது. இதைப் பெண் புலம்பக் கூடிய நிலை தாலாட்டாக இருப்பதால், அதை அப்பட்டமாகச் சொல்லிவிடுகின்றாள். சொந்தத் தந்தையையிட்டுக் குழந்தைக்குத் தனது தாலாட்டில் கூறுவதையும் காணலாம்.
''சாமத்திலே பூத்த பூவு - மச்சான்
சாமத்திய பூ நானிருக்க
சாறிப்போன பூவுக்குத்தான் -மச்சான்
சந்து சந்தா நீ சுத்தலாமோ"36
— என்று பெண் மட்டும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் காதலிப்பதையும், ஆண் பலதார மணத்தில் காதலை விபச்சாரம் செய்வதையும், இந்தத் தாலாட்டை விட சிறப்பாக எதுவும் சொல்லிவிடவில்லை. பெண் தனது இயற்கையான பாலியல் தேவையை இழந்து நிற்பதையும், ஆண் விபச்சாரிகளைத் தேடி அலைவதுடன், வீதிவிதியாகப் பெண் வேட்டையில் அலைவதையும், தாய்மை குழந்தையிடம் சொல்லிப் புலம்புவதையும் கண்டு எந்த ஆணாதிக்கச் சமுதாயத்திடமும் இரக்கத்தை ஏற்படுத்திவிடுவதில்லை. ஆண் தனது பாலியல் சுகத்தை இழக்க என்றுமே தயாராக இருந்ததில்லை. ஆனால் பெண் அதை இழக்கவும், சுகத்தைத் தியாகம் செய்யவும், ஆணுக்குச் சேவை செய்யவும் அடிமைப்படுத்தப்படுகின்றாள்.
ஒரு பெண் தனது குழந்தையை ஆணுக்குப் பதில் பெண்ணாகப் பெற்றுவிட்டால் அவள் சந்திக்கும் வேதனையைத் தனது பெண் குழந்தையிடமே தாலாட்டில் சொல்வதைப் பார்ப்போம்.
''என் கண்ணே! நீ
பொண்ணாய் பொறந்தாயல்லோ
ஆணா நீ பொறந்தா
எம் புருசன் அடிப்பானோ
மாமிக்காரி கொடுமையல்லோ
மாமங்காரன் சண்டாளன்
என் கண்ணே என்
துயரமெல்லாம் அதிகமாச்சே"36
— என்று ஆணின் வாரிசான ஆண் குழந்தை பெற்று எடுக்காத பெண் தனது புகுந்த வீட்டில் துயரங்கள் அதிகமாவதை இப்பாடலில் சொல்கிறாள். பெண்ணைப் பெற்ற பெண்ணுக்கு அடி, உதை, கொடுமை, அவமதிப்புடன் கூடிய கடினச் சேவை செய்யும் உழைப்பும் பரிசாகக் கிடைக்கின்றது. இதைத்தான் இந்தத் தாலாட்டின் ஊடாகப் பெண் சொல்லிப் பாடுகின்றாள்.
பெண் சொத்துரிமையின் வாரிசாக அல்லாது சொத்தைக் கொண்டு செல்பவள் என்ற வகையில் வெறுக்கும் ஆணாதிக்க வாரிசு சொத்துடைமைச் சமூகம், இதைக் கொண்டுவரக் கூடிய ஆணைப் பெற்று எடுப்பதில் சார்ந்து நிற்கின்றது. பெண் சீதனமாகச் சொத்தைப் புகுந்த வீட்டுக்குக் கொண்டு செல்பவள். அதே நேரம் ஆண் அதைக் கொண்டு வரப்பண்ணுபவன். இதில் நிலம் போன்ற அசையா சொத்துகள் ஆணைச் சார்ந்து நிலைப்பவையாக உள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகக் குற்றவாளியாகக் காண்பதும், குற்றம் சாட்டுவதும் தவறாகும். இது சூறையாடும் தனிச் சொத்துரிமை அமைப்பின் ஜனநாயக வடிவமாகவும், விளைவாகவும் இருக்கின்றது. அதன் அங்கமாகவே பெண்ணுக்கு எதிராக இக்கொடூரம் நிகழ்கின்றது.
ஆண் பெண் பிறப்பின் அடிப்படையைத் தீர்மானிப்பது ஆணில் உள்ள விந்துதான் என்பது விஞ்ஞான உண்மையாகும். கரு உருவாகும் முன் தனித்தனியாகக் காணப்படும் விந்தில் 22 சோடி பண்பின் கீறுகளையும், ஒரு பால் கீற்றையும் கொண்டே இருக்கின்றது. இதில் ஆணுக்கு வேறுபட்ட இரண்டு கூறுகளும், பெண்ணுக்கு ஒரே தன்மையான இரண்டு கூறுகளும் காணப்படுகின்றது. ஆணிடமிருந்து எந்தத் தன்மையான கூறு பெண்ணுடன் இணைகின்றது என்பதே ஆண் பெண்ணை தீர்மானிக்கின்றது. இந்த ஆண் பெண்ணின் இணைவைப் பார்க்க படத்தில்.
சுரண்டும் வர்க்கத்தால் பொருளாதார அமைப்பே சூறையாடப்பட்டுக் கிராமப்புறங்களை வஞ்சிக்கப்பட்டு உருவான வறுமையில் குழந்தை பிறப்பை எண்ணி, தாய்மை தனது தாலாட்டில் பாடுவதைக் கீழே பார்ப்போம்.
''முத்துச்சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா
வெத்துகுடிசையிலே விளையாட வந்தாயோ
ஏழைக்குடிசையிலே ஈரத்தரைமேலே
தாழம்பாய்போட்டுத் தவழ்ந்தோட வந்தாயோ
தரைஎல்லாம் மேடுபள்ளம் தவழ்ந்தால் உறுத்தாதோ
பளிங்கால் அரண்மனையும் பவளத்தால் மாளிகையும்
பணக்காரன் வீடிருக்கப் பஞ்சனிடம் வந்தது ஏன்
பச்சரிசிச் சோளம் பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்துந்தன் பசிதீர்க்கப்பாத்தாலும்
பருத்தி விதை இல்லையடா பசும்பாலைத்த ரலையடா
ஆணிடம் இருந்து X குரோமோசோம் பெண் கரு மூட்டையுடன் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கும். X X
ஆணிடம் இருந்து Y குரோமோசோம் பெண் கரு மூட்டையுடன் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
— பெண்
X Y — ஆண்
ஆட்டுப்பால் ஊட்டியுனை ஆதரிக்கப் பார்த்தாலும்
ஆடுகடிக்கும் மரம் அத்தனையும் மொட்டையடா
பிள்ளைப்பால் ஊட்டியுனைப் போசனைகள் செய்திட
கொள்ளையுத்தம் பஞ்சங்குரங்காயிப் போனேன்டா
நெல்லைப் பதுக்கி வைத்து நிட்டுரம் பண்ணிடுவார்
கொல்லை வழிப் போகாது குடிசைவழி வந்தாயோ
ஏழைக் குடிசையிலே ஏன் பிறந்தாய் செல்வமுத்தே
எத்தனையோ சீமாட்டி ஏங்கித் தவங்கிடக்க
என் வயிறுதான் தேடி ஏன் பிறந்தாய் செல்வமுத்தே"38
— என்று தாய்மையின் மகத்துவத்தை இங்குதான் பெண் வெளிப்படுத்துகின்றாள். இயற்கையாகத் தாய்மை குழந்தைக்கு உணவ+ட்டும் ஆழ்ந்த மனிதப் பண்பு, ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை சமுதாயத்தில் மறுக்கப்படும் மனித உரிமை மீறலாகிவிட்ட நிலையில் பெண் அதைச் சொல்லித் தாலாட்டுகின்றாள். இயற்கை மனிதனின் தனிப்பட்ட சொத்தானபோதே, அதன் மேலான உழைப்பும் மனிதனிடம் இருந்து அன்னியமானது. இதனால் இங்கு வறுமை மனித உரிமை மீறலாக இருப்பதை ஜனநாயகம் மறுக்கின்றது. வறுமையை ஜனநாயகமாகக் காட்டுவதன் ஊடாக, மனிதர்களை மூலதனத்துக்கு அடிமைப்படுத்தி அற்பப் பிறவிகளாக்குகின்றனர்.
குழந்தையின் வறுமை சாதியைப் போல் பிறப்பிலே தீர்மானமாகி விடுகின்றது. ஏழைக் குடிசையின் நிலைமை, அதில் குழந்தையின் வாழ்க்கை, அங்கு நிலவும் பட்டினி, சுற்று வட்டாரம் ஊடாக இந்த ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை உலகத்தைப் புரிந்து வெளிப்படும் தாலாட்டை, எந்தப் பெண்ணியமும் வெளிப்படுத்த முடியாத சொந்த வக்கிரம்தான், இந்தச் சமுதாயம் நீடித்து நிலைநிறுத்தும் வறுமை என்ற ஜனநாயகச் சர்வாதிகாரமாகும். ஜனநாயகத்தின் வடிவம் வறுமையைக் கட்டமைத்துப் பாதுகாத்து வைத்திருக்கும் சர்வாதிகாரமாகும். இந்தச் சர்வாதிகாரத்தில் நபர்கள் மாறுகின்றனர், ஆனால் வடிவம் மாறுவதில்லை.
கிராமப்புறப் பெண் சொந்த ஆணாதிக்கத் துயரத்தை சந்தித்தபடி, குழந்தையின் மீதான தாய்மை பட்டினியின் மீது இரத்தக் கண்ணீரைச் சுரக்கின்றது. சொந்தத் தாய்ப்பால் வற்றி அதில் இரத்தம் கண்டிப்போகும் மனித அவலத்தில் பெண் சிக்கி விடுகின்றாள். குழந்தையினுடைய பசியின் கதறல் தாய்மையைத் தாண்டி, யாரையும் நெஞ்சுருக வைக்கமுடியாத தனிச் சொத்துரிமை கொள்ளை நோயில் பீடிக்கப்பட்டுள்ளனர். தாய்மை சொந்த வயிற்றில் இருந்து பிறந்த பிஞ்சின் கதறலைக் கண்டு, அதைச் சொல்லியே தேற்றிவிட தாலாட்டுகின்றாள். இந்தத் தாலாட்டுக்கு முன் எந்த மனிதாபிமானமும் தன்னை நிலைநிறுத்த முடியாது.
இந்த உலக வறுமையில் ஒரு பெண் குழந்தையைப் பெறுகின்ற போது, அந்தத் தாய்மையின் பால்வற்றி இரத்தம் சுண்டிப் போன நிலையில், நெஞ்சுருகி விட்ட கண்ணீர் கொண்டு வளர்த்து எடுக்கும் பெண்ணின் வாழ்க்கை உலகத்தில் எதற்கும் ஈடு இணையற்றது. சுகபோகமாகக் குழந்தையைப் பெற்ற சொகுசு பூர்சுவா பெண்ணியம், மற்ற பெண்ணைச் சூறையாடியே இதை ஏற்படுத்துவதால் இந்த அவலத்தை, தாய்மையின் பண்பைப் புரிந்து கொள்ளமுடியாது சீரழிகின்றனர். இதனால் தனிச்சொத்துரிமைக்கு எதிராகப் போராட மறுக்கின்றனர்.
வறுமை மற்றும் சமுதாய நலனை முன்வைத்து, சில கிராமப்புறத்தில் பெண்கள் தமது வாழ்வின் பழைய தொடர்ச்சிகள் பலவற்றைத் தொடர்ந்து சடங்குகளாகச் செய்கின்றனர். இதில் மிருகவளர்ப்பு, விவசாயம், அதை ஒட்டி மழை கோரி நடத்தும் சடங்குகள் பெண்ணின் கண்டுபிடிப்புகளை மட்டுமின்றி, அதன் ஆதி உரிமையையும் இது வெளிப்படுத்துகின்றது.
மழையை வேண்டி ஏழு பெண்கள் நிர்வாணமாகச் சுற்றி நின்று பிட்டத்தைத் தட்டியபடி (கும்மி ஆட்டம்) ஆடுகின்றனர். இச்சடங்கில் ஆண்கள் கலந்து கொள்ளவோ, பங்கு கொள்ளவோ முடியாது. இங்கு பெண்களின் பிறந்த உறுப்பின் வளத்தன்மையை, வானத்துடன் ஒப்பிட்ட சடங்கின் மூலம் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஊடாக இச்சடங்கைச் செய்கின்றனர்.
~மழைக்கஞ்சி| காய்ச்சும் நிகழ்ச்சியூடாக மழையைக் கோருகின்றனர். அரிசியைப் பிச்சையெடுத்து, பொதுவாகக் கஞ்சி காய்ச்சி அதைச் சேர்ந்துண்டு, மழை பெய்யாது போகும் துயரத்தைச் சொல்லி, புலம்பி ஒப்பாரி வைக்கின்றனர். இதன் பின்னால் தாம் இறப்பது நிகழும் என்று சொல்லி இடுகாடு நோக்கி செல்வர். இதன் போது ஆறுதல் சொல்லிக் கூட்டி வரும் நிகழ்ச்சி போல், மழை வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். இங்கு எப்போதும் ஆணாதிக்கச் சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பில் எது அங்கீகரிக்கப்பட்ட பெண்ணின் வளமையாக உள்ளதோ, அப்பெண்கள் மட்டுமே இதில் பங்கு கொள்ளமுடியும். அதாவது கன்னிப் பெண்கள், பல குழந்தைகளைப் பெற்ற தாய் போன்றவர்கள் பங்கு கொள்ளும் இந்நிகழ்ச்சியில் விதவை, மலடி போன்றவர்கள் பங்கு கொள்ளமுடியாது. பெண்களின் இயற்கையான வரலாற்றுச் சடங்கில் கூட ஆணாதிக்கப் பண்பாடுகள் புகுந்திருப்பதை இவை காட்டுகின்றது.
''ஊசிபோல் மின்னல் மின்ன
ஊரிக் கிணறு தண்ணிவர
பாசிபோல் மின்னல் மின்ன
பாங்கிணறு தண்ணிவர
சட்டியிலே மாகரைத்து
சந்தையெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியவில்லை
கொள்ளை மழை பெய்யவில்லை
கிண்ணியிலே மாகரைத்து
கங்கையெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியவில்லை
கொள்ளை மழை பெய்யவில்லை
மோழி பிடிக்கும் தம்பி
முகம் சோர்ந்து போகுதம்மா
கலப்பை பிடிக்கும் தம்பி கை சோர்ந்து நிக்குதம்மா"38
— இதில் மழையைக் கோரி பெண்கள் தமது துயரத்தைச் சொல்லி புலம்புவதைக் காட்டுகின்றது. உழவின் அடிப்படையான வாழ்க்கையைச் சார்ந்து நாட்டுப்புறப் பாடல் நிதர்சனமாக வெளிவருகின்றது.
விவசாயத்தின் விளைவைக் கோரி ~முளைப்பாலி|36 என்ற திருவிழாவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் பங்கு கொள்கின்றாள். ஒரு சட்டியில் 18 வகையான தானியத்தை விதைத்து எல்லோரும் ஒரு வீட்டில் அதை வைப்பர். இதை வயது போன மூதாட்டி ஒருவர் தண்ணீர் ஊற்றி வளர்ப்பார். எட்டாம் நாள் அதை மாரியம்மன் கோயிலில் கொண்டு வந்து, அடுத்த நாள் அதை ஊர்வலமாக ஊருக்குள் எடுத்துச் சென்று நீரில் மிதக்க விடுவர். இந்த ஒன்பது நாளும் ஓர் இடத்தில் கூடி செடியின் வளர்ச்சி, அதன் விளைவு பற்றி கும்மியடித்து வருணித்து அதன் வளத்தைப் போற்றிப் பாடுவர்.
~மதுக்குடம்|36 என்ற சடங்கில் ஐந்து அல்லது ஏழு பெண்கள் கோயிலி;ல்; தங்கி நோன்பு இருப்பர். இரண்டு அல்லது மூன்று வாரம் சென்ற பின்பு கள் (மது) நிறைந்த குடத்தை ஊர்வலமாகக் கொண்டு சென்று கோயிலில் படைத்த பின் தொடங்கும் திருவிழா ஆகும். இது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கோரி நிகழ்வனவாகும்.
~அவ்வை நோன்பு|36 ஆண்களுக்குத் தெரியாமல் இரகசியமாக இரவில் பெண்கள் கூடிச் செய்வதாகும். இது வறுமைப்பட்ட பெண்களின் துயரத்தைப் போக்க செய்யப்படுகின்றது. உப்பில்லாத அரிசி மாவில் சமையல் பாத்திரப் பண்டங்கள், கிழவன் - கிழவியின் உருவங்கள், ஆண் பெண் பாலியல் உறுப்புகள், மண்டை ஓடுகள், பாடை முதலியவற்றைச் செய்து வெந்நீரில் வேகவைத்து, அதைப் பெண்கள் மட்டுமே உண்பர். விடிவதுக்கு முன் நடத்தப்படும் இச்சடங்கில் பெண்கள் தமது பிறப்புறுப்பை இயற்கைக்குக் காட்டுவதாகவும், நிர்வாணமாகச் செய்வதாகவும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் இவைகள் பெண்ணின் வாழ்விலும், சமுதாய வாழ்விலும் துயரத்தைப் போக்க நடைபெறுகின்றது.
பெண்ணின் பலவிதமான சடங்குகளில் சமுதாய நலன் முதன்மை பெறுகின்றது. இயற்கையை ஒட்டி வாழ்ந்த பெண் அதை வளமாகக் கண்டு சடங்குகளைச் செய்த போது, சொந்தச் சமுதாயத்தின் நலன் முதன்மையான குறிக்கோளாக இருந்தது. அதுமட்டுமேதான் வாழ்வின் ஆதாரமாகப் பெண் முன் இருந்தது. இந்த வகையில் இந்தச் சடங்குகள் தனிச்சொத்துரிமை வடிவத்துக்கு எதிரானது. ஆணாதிக்க அமைப்புடன் கூடிய ஜனநாயக அமைப்பை இது கேள்விக்குள்ளாக்குகின்றது. பெண்ணின் வளமையுடன் கூடிய இயற்கை அது சார்ந்த வாழ்க்கை தகர்க்கப்படுகின்ற போது, இந்தச் சடங்குகள் அழிக்கப்படுகின்றன. பெண்ணின் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கையைத் தனியாக இந்தத் தலைப்பைத் தொடர்ந்து பார்ப்போம்;. இந்தச் சடங்கின் பின்னால் அறிவியலுக்குப் புறம்பாகப் பல நிகழ்ந்த போதும், பெண்ணின் உயர்ந்த சமூகக் கண்ணோட்டம் ஈடு இணையற்றது. இதை எந்தப் பூர்சுவா பெண்ணியமும் கூட கொண்டிருப்பதில்லை. அந்தவகையில் இவைகள் பாட்டாளி வர்க்கப் பெண்ணியத்தின் அடிப்படைக் கூறுகளாக இருப்பதைக் காணமுடியும்.
பெண்கள் தமது வாழ்வின் ஆதாரத்தைப் பெருக்க சடங்குகள் பலவற்றை உற்பத்தி மீது சார்ந்து செய்ததுடன், கடுமையான உடல் உழைப்பிலும் ஈடுபட்டனர். அதை அவள் உழைப்பில் ஈடுபடும் போது கூட்டாகப் பாடி உழைப்பது, அவளின் வலிமையை உயர்த்தியது. அதை எப்படி பாடினாள் என்பதைக் கீழே பார்ப்போம்.
''காடுவெட்டி கல்பொறுக்கி
கம்புசோளம் தினைவிதைச்சி
மேடுவெட்டி முள்பொறுக்கி
முத்துச் சோளம் தினைவிதைச்சி
வெள்ளான உழுதுவர
வேடர் மக்கள் தினைவிதைக்க"36
— என்று வாழ்க்கைச் சுழற்சியில் வெளிவரும் நாட்டுப்புறப் பாடல்கள், இசைகள் எந்த அங்கீகரிக்கப்பட்ட கலைஞனின் மனித விழுமியத்தையும் விட உயர்ந்து நிற்கின்றது. உழைப்பும், உழைப்பு சார்ந்த பொருள் மீதான கலையும் எதார்த்தத்தில் இயல்பாக வெளிவரும் போதும், அவை மக்கள் கலையாக மாறிவிடுகின்றது. இங்கு எதார்த்தத்தில் துன்பம், துயரம், சந்தோசம். இலாபம், நட்டம் என எதையும் தமது கலையில் தவிர்ப்பதில்லை. தனது மனதில் படுவதை அப்படியே பாடுவதால், நாட்டுப்புற இலக்கியம் நேர்மையான சமூகக் கண்ணாடியாக மிளிர்கின்றது. புத்தக இலக்கியவாதிகள் தமது வர்க்க நலனைக் கொண்டு வெட்டிச் சுருக்கி இலக்கியவாதியாவதால், அது வக்கரித்து ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்வதாக இருக்கின்றது.
பெண்கள் உற்பத்தியில் ஈடுபட்டதும், அதில் ஆணைப் போல் கடுமையாக உழைப்பதையும், பல்வேறு மக்களின் உழைப்பையும் தமது பாடல் வரியின் ஊடாக வெளிக்காட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து கீழே வரும் பாடலில் இருந்து பார்ப்போம்.
''மூச்சிபிடிச்சி போடடி குட்டி
முத்துமணிக் குத்திச் சோறாக்கணும்
ஆச்சுதா அத்தே சாயங்காலம்
அள்ளிக்கோ இந்தா சருகுமணி
மச்சான் வருவான் போடடி குட்டி
மாளலியா இன்னும் நெல்லு குத்தி"36
— இந்தப் பாடலில் இருந்து பெண்கள் உணவு சமைக்க வீட்டில் நெல் குத்தும் போதுகூட, கூட்டான வகையில் உழைப்பதையே காட்டுகின்றது. அத்துடன் தமது கணவனை எதிர்பார்த்து நிற்கும் தன்மையை மேலோங்கி காட்டி, உழைப்பு இலகுபடுத்தப்படும் போது கிராமப்புறப் பெண்ணின் இணைமணத்தின் ஆழமான அன்பு, காதல் வெளிப்படுகின்றது. வஞ்சகமற்ற, சூதற்ற கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம், சொந்த உழைப்பில் எந்தச் சுயநலத்தையும் கையாள்வதில்லை. அதுபோல் தமது அன்பு, காதல் என அனைத்திலும் நாகரிக வக்கிரங்களை வெளிப்படுத்துவதில்லை. இவைகளில் இருந்து வெளிவரும் நாட்டுப்புறப் பாடல்கள் மனித மேன்மையை உயர்த்தி நிற்கின்றது.
கூலிக்கு உழைக்கும் போது சுரண்டலின் கோரத்தையும், பச்சைக் குழந்தைக்குப் பால் கொடுக்க அனுமதிக்காது நேரகாலமின்றி உழைப்பின் சுரண்டலையும், இந்த உழைப்பைச் சார்ந்து தண்டிப்பதையும் நாட்டுப்புறப் பாடலூடாகப் பாடுவதில், தமது எதிர்ப்பை அவர்களுக்கு முன்னாலேயே வெளிப்படுத்துவதில் நாட்டுப்புறப் பெண்கள் பின்நிற்கவில்லை.
''இந்திரரை நோக்கியல்லோ எடுத்தோம் சாந்துலக்கை
காலையில் வந்த மக்கள் கால்கடுக்க நிற்கின்றோமே
வெள்ளனவே வந்த மக்கள் விரல் கடு;க்க நிக்கின்றோம்."36
''நட்டகுறை நட்டு கூலி வாங்கி முடி
கூலியைக் குறைத்துக் குறைமரக்காலிட்டார்"36
''தண்ணி கருத்திருச்சி
தவளை சத்தம் கேட்டிருச்சு
புள்ளை அழுதிருச்சு
புண்ணியரே வேலைவிடு"36
''கணக்கு குறைந்ததால்
களைக்காட்டு மேஸ்திரி
கட்டிவைத்து அடித்தானம்மா"36
''தண்ணி கருத்திருச்சி
தவளை சத்தம் கேட்டிருச்சு
புள்ளை அழுதிருச்சு அம்மாடி அம்மாடி
புண்ணியரே வேலைவிடும் தன்னானே தன்னானே
அடியாதீங்க புடியாதீங்கா
அந்நியரா நெனக்காதீங்க
கங்காணி வந்ததுமே அம்மாடி அம்மாடி
கணக்கை முடிச்சிருங்க தன்னானே தன்னானே
தொட்டிலிலே புள்ள அழுக
தொயந்து நான் வேலை செய்ய
துப்புக் கெட்ட மொதலாளி அம்மாடி அம்மாடி
தொலையாம நிக்குறானே தன்னானே தன்தனனே
கொல்லுறான் வேலையிலே
கொறைக்கிறான் சம்பளத்தை
காணாம ஓடிப்போனா அம்மாடி அம்மாடி
கைவிலங்கு போடுறானே தன்னானே தன்தனனே
அஞ்சுமணி நேரம் வரை
அல்லி நான் வேலை செய்ய
அறிவு கெட்ட மொதலாளி அம்மாடி அம்மாடி
அசையாம நிக்கிறானே தன்னானே தன்தனனே"10
— என்று தமது துன்பத்தைப் பாடும் போதும், அதைப் பெண்களிடமே சொல்லுவது இயல்பாக உள்ளது. சமுதாயத்தின் தாய்மை மற்றும் பெண்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியில் துயரத்தைக் கூட ~அம்மா| என்ற உச்சரிப்பினூடாகக் கூறுவது பல பாடல்களில் காணமுடியும். துயரத்தை உருவாக்க காரணமான ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்புக்கு எதிரான, இயல்பான, தன்னியல்பான உணர்வியல் ரீதியில் தமது எதிர்ப்புப் பாடலில் அம்மாவிடம் பொதுவாகக் கூறுவது இயல்பாக உள்ளது.
கடின உழைப்பு சுரண்டப்படுவதும், அதை ஈவிரக்கமின்றி கூலியை வெட்டிச் சுரண்டுவதும் என பாடல் வரிகள் எல்லையில்லாத ஆழ்மையைக் காட்டுகின்றது. முதலாளியின் மனிதாபிமானமற்ற சுரண்டல் குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கூட மறுக்கின்றது. எந்தவிதமான மனிதப் பண்பாடும் அற்ற மற்றவனின் உழைப்பைப் பறித்தெடுக்கும் மனித விரோதத்தை ஏற்றுக் கொள்ளும் எந்த மனிதனும், ஒரு மிருகத்தைவிட கேவலமான பாத்திரத்தை இந்தச் சமுதாயத்தில் ஆற்றும் போது, நாட்டுப்புற மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதைத் தமது பாடல் வரியின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் உழைப்பை முன்கூட்டியே முதலாளிக்கு கடனாகக் கொடுக்கும் உழைக்கும் வர்க்கம், அதை மீளப் பெற்றுக் கொள்வதற்கு போராட வேண்டியிருப்பதையும், அதை வெட்டிக் குறைப்பதைத் தடுப்பதுக்கும் போராட வேண்டியிருப்பதை இந்தப் பாடல் அம்பலப்படுத்துகின்றது. எந்தப் புத்தக இலக்கியவாதியையும் விட இவ்விலக்கியங்கள் சிறந்த மக்கள் இலக்கியமாக உள்ளது. ஆனால் இது சுரண்டல் அமைப்பினால் சேறு அடிக்கப்படுகின்றது. பெண்கள் தமது உழைப்பினூடாக இன்பம் துன்பம் என்று அனைத்தையும் பகிர்கின்றனர். தமது காதலைக் கூட உழைப்பில் தனித்தப் பெண் கூட ஒருமுகப்படுத்தி பாடிவிடும் இலக்கிய ஆற்றல், எந்த நாகரிகக் கலைஞனிடமும் இருக்க முடியாத இலக்கியச் செல்வமாக இருக்கின்றது. அதை பார்ப்போம்.
''நாத்தெடுக்கப் பேறேனின்னு ஏலெலம்பா ஏலெலம்
நாத்தெடுக்கப் பேறேனின்னு ஏலெலம்பா ஏலெலம்
தாளுகத்த கேட்டா ஓடி ஏலெலம்பா ஏலெலம்
நாத்தெடுக்கத் தெரியாத ஏலெலம்பா ஏலெலம்
நாத்தெடுக்கத் தெரியாத ஏலெலம்பா ஏலெலம்
நடுவரப்பச் சுத்துறாடோடி ஏலெலம்பா ஏலெலம்
மச்சான் அழகுக்கும் மான்கொம்பு மீசைக்கும்
ஏலரிசிபல்லுக்கும் நான் என்ன சொல்லிக்
கூப்பிடும்"36
— என்று தமது காதலை வெளிப்படுத்திப் பெண்கள் பாடும் பாடல் மூலம், தம்மை அலட்சியப்படுத்தும் ஆணை நெருங்கிவர கோருகின்றது. இந்தக் காதலில் பெண் தனது உறுதியை வெளிப்படுத்தும் போது, கலைநயத்துடன் கூடிய போராட்ட உறுதி வெளிப்படுகின்றது.
''காவல் இருந்தால் என்ன கல்லு வெடி போட்டாலென்ன
இம்சை படுத்திட்டாலும் நான் எசமானிடம் வந்திடுவேன்
பச்சை மயங்குகிறேனே கொடி வாடுறேனே - நான்
இம்சைபட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுறேனே"36
— என்று பாடும் போது அந்தக் காதலின் பின்னால் சுயநலம் இருப்பதில்லை. பெண் தனது காதல் மீதான நேர்மையான வடிவத்தை, நாகரிகச் சமுதாயக் காதலில் இருந்து வேறுபடுத்தி வெளிப்படுத்துகின்றாள். இந்தக் காதல் எதையும் விலையாகவோ, பண்ட மாற்றத்தையோ கோருவதில்லை. இக்காதல் உழைப்பை ஒத்த உறுதியுடன் பீறிட்டு வெளிவருவதாகும். பெண்கள் மீது நடத்தும் பாலியல் வன்முறையைக் கூட சொல்லி பாடும் பாடல்களை, பெண்கள் உழைப்பின் போது வெளியிடுகின்றனர்.
''கண்ட கண்ட இடமெல்லாம்
கண்ட கண்ட பெண்ணைக்
கையைப்பிச்சிழுப்பான்"36
— என்ற வரிகள் ஆணாதிக்கம் அத்துமீறி; பெண்ணைக் கற்பழிப்பதை வெளிப்படுத்துகின்றது. பெண்களைக் கேலி செய்கின்றபோது, அதைச் சொல்லியும் பெண்கள் தமக்குள் அதைப் பகிர்ந்து பாடுவதன் மூலம், இந்த நாட்டுப்புறப் பாடல் எமக்குச் சமுதாயத்தின் ஒருமித்தப் போராட்ட மார்க்கத்தைத் தெளிவாக்குகின்றனர்.
''கடலைப்பருப்பு போல ரெண்டுபெரு வெடலப்பய
பொழுதடஞ்ச நேரமெல்லாம் பொம்பரணி பேசுறானே"36
— இதில் பெண் தனது கற்புரிமையைப் பாதுகாக்க ஆணாதிக்கக் கற்பழிப்புக்கு எதிராக அறை கூவுவதைக் காட்டுகின்றது. பெண் தனது நேர்மையான ஒத்துழைத்த காதலையும் சரி, அவளின் அனுமதியற்ற பாலியல் வன்முறையையும் சரி, ஆணின் ஒருதலைப்பட்சமான அத்துமீறல் பெண்ணின் கற்புரிமையைச் சிதைப்பதாக இருக்கின்றது. இதை மேலும் கீழேயுள்ள பாடலில் இருந்து பார்ப்போம்.
''கரும்பு திங்கற நாளையிலே நமக்கு கசப்புவந்து நேர்ந்ததென்ன
கரும்பா வணங்கினேனே கருத்தமத யானையிடம்
துரும்பா உளறுறேனே துன்பம் வச்ச திங்கலையே
தானாவிரும்பினயே என்னத் தலகவுர வச்சுட்டயே"36
ஒரு பெண்ணின் தூய்மையான அன்பைக் காதலை ஏமாற்றிச் சுவைக்கும் ஆணாதிக்கம், இங்கு பெண் விரும்பிய உறவாக இருந்த போதும், பெண்ணின் கற்புரிமையைக் கற்பழிக்கின்றது. பெண் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் தலைகுனிந்து, கூனிக்குறுகி வாழ வேண்டிய அவலத்தை ஏற்படுத்திய ஆணை, தனது நாட்டுப்புறப்பாடல் ஊடாகச் சாபமிட்டுப் பாடவும் பின்நிற்கவில்லை. அந்தச் சாபமிடலைக் கீழே உள்ள பாடலில் காணலாம்.
''என்னைக் கெடுத்தவனை எனக்குமதி சொன்னவனை
சொகுசைக் குழைந்தவனை சுத்தாதோ என்பாவம்
கட்டப்பய குட்டப்பய கட்டமண்ணு தாண்டிப்பய
விசுவாசம் கெட்டப்பய வி;டானே ஒற்றவழி"36
— என்று தான் காதலித்து பெருமைப்பட்ட ஆண், தனது கற்புரிமையை, காதலை நயவஞ்சகத்தால் ஏமாற்றி மோசடி செய்யும்போது, அப்பெண்ணின் ஓர்மம் மிக்க போராட்டம் எழுகின்றது. அவனின் அழகைத் திட்டி அதை இழிவுபடுத்துகின்றாள். இந்த நிலையில் சமுதாயம் தன்னை வழிநடத்த தவறியதைக் கூறிப் புலம்புவதும் வெளிப்படுகின்றது. ஆணாதிக்க உலகத்தின் கோரத்தை, ஏன் தனக்கு முன்கூட்டியே அறிவுறுத்தவில்லை? என்று சமுதாயத்தின் பக்கம் குற்றம் சாட்டுகின்றாள். அந்தக் குற்றச்சாட்டைக் கீழே உள்ள பாடலில் காணலாம்.
''எலுமிச்சம் பழமென்று எடுத்தேனே கைநிறைய
கசக்கும் எட்டி என்று கண்டவங்க சொல்லலையே
காப்புக்கழண்டதையா கைவளையல் கழண்டதையா
கோப்புக் குலஞ்சதய்யா கோலமுழிப் பாவியாலே"36
— என்று தனது கற்புரிமையைச் சூறையாடிய வாழ்வின் சிதைவால், இதைச் சமூகத்துக்கு எச்சரிக்கை விட்டுப் பாடுவது இயல்பாகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தின் சூறையாடும் பாலியல் வேட்கை மற்றும் பெண் மீதான ஆணாதிக்கக் கற்புக் கோட்பாடு என இரண்டையும் எண்ணிப் பாடும் நாட்டுப்புறப்பாடல், பெண்ணின் போராட்டம் நீறுபூத்த நெருப்பாக இருப்பதைக் காட்டுகின்றது.
பெண்ணின் தெரிவு இன்றி நடத்தப்படும் கட்டாயத் திருமணங்கள் அல்லது பெண்ணின் அபிப்பிராயம் இன்றி முடித்து வைக்கும் திருமணத்தின் பின்னான வாழ்க்கையில் முரண்பாடு ஏற்படுகின்ற போது அங்கு ஒருதாரத் திருமணத்தினை எதிர்த்து, தனது கணவனுக்கு அப்பால் ஓர் ஆணைச் சொல்லிப் பாடும் பாடலைக் கீழே பார்ப்போம்.
''மாமன் மகனிருக்க மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே"36
ஒரு பெண் சொந்த உறவுகள், சுற்றுவட்டாரம், பிறந்த மண் ஆகியவற்றைப் பிரிந்து அன்னியமான ஒருவனுடன் வாழ்க்கைப்படும் போது, நேரும் துன்பத்தை அவள் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அன்னியமான சமூகமாக இது இருக்கின்றது. இங்கு அன்னியமான மண் மற்றும் சுற்றுவட்டார இயற்கையுடன் கூட சொல்லிவிட முடியாத முரண்பாட்டை அவளுக்கு ஏற்படுத்துகின்றது.
இந்த நிலையில் வாய் பேசும் பெண்ணாகிய எனக்கு ஒரு பேயனைக் கட்டிவைத்ததை எதிர்த்துப் பாடுகின்றாள். மாமன்மகன் என்பது அறிமுகமான உறவுக்குள் எந்த முரண்பாட்டையும் குடும்பச் சுற்றுவட்டாரத்துக்குள்ளேயே சமூக அங்கீகாரத்துடன் தீர்க்கமுடியும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்ற போதே, கணவன் அல்லாத ஆணை முன்நிறுத்தி முதன்மைப்படுத்தி கணவனை இழிவுபடுத்துகின்றாள். இது ஆணாதிக்க ஒருதாரக் குடும்ப அமைப்புக்கு எதிரான இயல்பான தன்னெழுச்சி வகைப்பட்ட போராட்டமாகும். அத்துடன் மாமன்மகன் அல்லது சாமிக்கே மாலையிட்டு இருக்க முடியும் என்பதன் ஊடாக, இந்த வாழ்க்கையின் நரகலை விடவும் திருமணம் இன்றியே வாழ்ந்திருக்க முடியும் என்பதைச் சொல்வதன் மூலம் ஒருதாரமணம் அதிர்வுறுகின்றது. இதை மேலும் கீழே உள்ள பாடல் மூலம் பார்ப்போம்.
''நாடெல்லாம் சுத்தி வந்து
நல்லபிள்ளையில்லை யென்று
கொணங்கெட்ட மாப்பிள்ளைக்குக்
கொண்டி கொடுத்தார் - எங்களண்ணை
கொண்டி கொடுத்தார்"36
— இங்கும் கணவனை எதிர்த்து அவமானப்படுத்துவது வெளிப்படுகின்றது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவு வாழ்க்கையில் பிரதிபலிக்கின்ற போது, தனிப்பட்ட ஆணில் அதைப் பெண் உணருகின்றாள். இதனால் அந்த ஆணாதிக்க விளைவைத் தனிப்பட்ட இயல்பாகக் கண்டு திருமணத்தை மறுக்கின்றாள். இந்த ஆணாதிக்க அமைப்பின் விளைவில் இருந்து பெண்கள் யாரும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதும், ஆணாதிக்க விளைவைப் பெண் கொடுமையாக உணர்ந்து அதை மறுத்தபடி, ஆணாதிக்கச் சமூக காவியாகவும், விளைவுகளைத் தானும் வெளிப்படுத்துபவளாக இருப்பதில் இருந்து சுதந்திரமாக இருக்க முடியாது என்பதைச் சமூகத் தளம் புரிந்து கொள்வதில்லை. இதனால் நாட்டுப்புறப்பாடல் தனி ஆணைக் குற்றம் சாட்டுகின்றது. ஆனால் இது கூட்டுச் சமூகப் பாடலாகின்ற போது சமூகத்தன்மையைச் சொந்த அனுபவம் ஊடாக வெளிப்படுத்துகின்றது. இதை மேலும் கீழே வரும் பாடலிலிருந்து பார்ப்போம்.
''சோளச்சோறு தின்னமாட்டேன் சொன்னபடி கேக்க மாட்டேன்
நரைச்ச கிழவன் கிட்ட நானிருந்து வாழமாட்டேன்"36
— என்று திருமணத்தை எதிர்த்துப் பெண்கள் பாடுகின்றனர். சொத்தற்ற பெண், ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டில்; இழிவுபடுத்தப்பட்ட பெண், ஆணாதிக்க இளமையை, அழகை இழந்த பெண்கள் மீது அதிக வயது இடைவெளியுடன் கூடிய திருமணத்தைச் சமூகம் கட்டாயப்படுத்துகின்றது. இங்கு பெற்றோர் பெண்ணை எப்படியாவது, யாருக்காவது கொடுத்துவிட்டால் நிம்மதி என்ற ஆணாதிக்கச் சமூக வெளிப்பாட்டில் நடத்தப்படும் திருமணத்தை, அதன் துயரத்தை அனுபவிக்கப் போகும் பெண் எதிர்த்து நிற்பதை இப்பாடல் வரிகள் காட்டுகின்றன. இத்திருமணம் நடந்த பின் நடந்த நிகழ்வுகளை எப்படி பெண் வெளிப்படுத்துகின்றாள் என்பதைக் கீழே பார்ப்போம்;.
''மேலண்டத்தெருவுலடி - ஏய் நான்
மேனியாத்தான் பொண்பொறந்தேன் - நான்
மேனியாத்தான் பொண்பொறந்தேன்
கீழண்டத் தெருவுலடி - ஏய்நான்
கிழவனுக்கே வாக்குப்பட்டேன்
கிழவனுக்கே வாக்குப்பட்டேன்
வாக்குப்பட்ட மூணாநாத்து - ஏய் தாத்தாவுக்கு
வவுத்துவலி வந்திடுச்சி
வவுத்துவலி வந்திடுச்சி
வவுத்துவலி வந்த மூணாநாத்துடி - ஏய் தாத்தாவுக்கு
விழுப்புரந்தான் ஏத்துங்கடி
விழுப்புரந்தான் ஏத்துங்கடி
ஏத்துன மூணா நாத்துடி - ஏய் தாத்தா
கால ரெண்டியும் கௌப்பிக்கினான்
கால ரெண்டியும் கௌப்பிக்கினான்"36
— இதில் இயற்கை உணர்வுகளுக்குப் புறம்பான கட்டாயத் திருமணத்தை எதிர்க்கின்ற போது, சொந்தக் கணவன் இறப்பதை விரும்பி பாடுகின்றாள். சொந்தக் கணவனைத் தாத்தாவாக்கியதுடன், தான் ஒரு பெண் என்பதை உணர்த்துகின்றாள். ஒரு பெண்ணுக்கு இருக்க கூடிய இயற்கையான உணர்வுகளை, இந்தச் சமூக ஒருதாரக் கட்டாய மணங்கள் சிதைக்கின்ற போது, அதன் விளைவுகளின் தனிப்பட்ட நபர்கள் இறந்து போவதைக் கோரி அல்லது இறந்து விட்டதாகக் கற்பனை பண்ணி பாடுகின்றனர். இங்கு கிராமப்புறப் பெண்கள் இந்தத் திருமணத்தை எதிர்க்கின்ற போது, பூர்சுவா வர்க்கத்தில் பணக்காரக் கிழவரைப் பெண்கள் தேடித் திருமணம் செய்து சொத்துக்காகக் கொல்லுவது அல்லது இறப்பதை எதிர்பார்த்து இருப்பது என்ற இரு நேர் முரணான சமுதாயத் தன்மைகள் வெளிப்படுகின்றன. கிராமிய வாழ்க்கையில் இந்தத் திருமணங்கள் நடக்கின்ற போது, ஏழைப் பெண் உழைத்து வாழும், இயற்கை தேவையைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கையை எண்ணியே போராடுகின்றாள். பெற்றோர் தீர்மானித்து ஏற்படுத்திய திருமணத்தைப் பெண் பின்னால் அறியும் போது, அந்த ஆணைப்பற்றி அறிவதில் முதல் கவனம் எடுக்கின்றாள். இதன்போது அந்த ஆண் நோயாளியாக இருந்தும் தன் தலையில் கட்டிவைக்கும் சமூக அடக்குமுறையைக் கண்டு, இந்தத் திருமணத்தைத் தடுக்க பாடுவதைக் கீழே வரும் பாடலில் பார்ப்போம்.
''கட்டாதேடா கட்டாதேடா
காசங்கொண்ட குட்டரோகி
பாக்காதேடா பாக்காதேடா
பாவங்கொண்ட குட்டரோகி"36
ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆணின் குறைகளை எல்லாம், பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம் நிவர்த்திக்க முடியும் என்ற கண்ணோட்டம் பெண்களைப் பலிக்கடாவாக்குகின்றது. திரைப்படம் முதல் எல்லா இடமும் இதை நம்ப வைப்பதில் புழுத்துப்போயுள்ளது. சமுதாயத்தில் ஒரு மனிதனாக மதிப்பிட முடியாது சீரழிந்த போனவனைக் கூட, பெண்களின் தலையில் கட்டிவைத்து அழவிடும் சமூக நடத்தைகளை இட்டு, தனிப்பட்ட பெண்கள் புலம்பும் போதே இந்தப் பாடல்கள் துயரத்துடனும், கோபத்துடனும் வெளிப்படுகின்றன. இது இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் மீது விழும் சாட்டையடியாகத் தெறிக்கின்றது. சமுதாயத்தின் ஆணாதிக்க அவலத்தை இனியும் சகிக்க முடியாது என்ற நிலையில் பிரிந்து வாழவும் துணிகின்றாள். அதைப் பார்ப்போம்.
''இந்தத்தாலி கட்டிக்கமாட்டேன்
இனி இருந்து வாழமாட்டேன்"36
— என்று கணவனிடமே கூறும் பெண் தனது போராட்டத்தை நேரடியாகவே முன்வைக்கின்றாள். இந்தப் போராட்டத்தின் முன்னும் பின்னுமாகப் பெண் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
''பெண் : அட எத்தனையோ புத்திகளை எடுத்துரைத்து சொன்னாலும்
நித்தம் போயி குடிக்கிறியே நீயும் ஒரு ஆம்பளையா
ஆண் : கஷ்டப்பட்டு சம்பாரிச்சு காசுபோட்டு நாங்குடிச்சா நஷ்டமடி உந்தனுக்கு நாசமத்த சிரிக்கி - அடி
மூடிக் கொள்ளடி வாய சும்மா முனு முனுக்காத வாய
பெண் : அட கையிலொரு காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை
நஞ்சக் குடிக்கிறியே நாசமத்த பயமவனே
ஒனக்கு ஒரு பெண்டாட்டி - ஒன்
ஒழுங்குக்கொரு வப்பாட்டி
ஆண் : தாருமாரா பேசினாக்கா தகராரு வந்து சேருமடி
கோபம் வரச் சொன்னாக்கா
கொலை பழி வந்து சேர்ந்திடுமே - அடி
உன்னோடு என்ன பேச்சு இப்ப விலகிப் போடி சீச்..சீ
பெண் : அட கந்தத் துணி பொறக்கி கடைக்குகடை நூல் பொறுக்கி
பீத்தத்துணி பொறக்கி பீத்தாதடா ஒம்பட்ட - அட
ஒனக்கும் எனக்கும் வம்பு ஊர் சிரிக்க போகுது நம்பு
ஆண் : புத்திமதி சொன்னாக்கா போட்டுருவேன் மண்டையிலே
கோபம் வரச் சொன்னாக்கா கொலை பழி வந்து சேர்ந்திடுமே - இப்போ
விலகிப் போயி நில்லு இப்போ ஒடயப் போகுது பல்லு
பெண் : கணக்கு மெத்த கேக்காதடா காரியத்தில் ஒண்ணுமில்லை
எடுத்தாடி வெலக்குமாத்த இவங்கணக்கத் தீர்த்துவிட - அட
ஒனக்கு எதுக்கு மீசை - இப்ப கட்டுத் தீர்வக் காசை"10
பெண்ணுக்கும் ஆணுக்கும் நடைபெறும் போராட்டத்தில், ஆண் பெண்ணைப் பெண்மையில் அடங்கி வாழக் கோரும் போது, பெண் ஆணின் ஆண்மையைக் கொச்சைப்படுத்திக் கிண்டல் செய்கின்றாள். இங்கு ஆண் வன்முறையைப் பிரயோகிக்க அறைகூவும் போது, பெண் எதிர் வன்முறையைப் பிரகடனம் செய்கின்றாள். உழைக்கும் அடிமட்டப் பெண்களின் குடும்பங்களில் காணப்படும் இந்த நிலைமை, எந்தப் பூர்சுவா பெண்ணாலும் நினைத்துப் பார்க்க முடியாத போர்க் குணாம்சம் கொண்டவையாகும். ஆணின் ஆண்மையைக் கேலி செய்து குடியைக் கிண்டல் செய்யும் பெண், அதன் விளைவை நுணுக்கமாகப் புரிந்து கொள்கின்றாள்;. ஆணாதிக்க ஆண், தலித் கோட்பாட்டாளர்கள் எல்லாம் குடிப்பது தலித் விடுதலையின் அங்கத்துடன் கூடிய பண்பாடு என்ற மனித விரோதக் கேவலத்தை, கிராமியப் பெண்ணின் இந்த நாட்டுப்புறப் பிரகடனங்கள் சவால் விடுகின்றன. பெண் ஆணின் அனைத்து ஆணாதிக்க வடிவங்களையும் கேவலப்படுத்தும் போது, ஆணாதிக்க அமைப்பு அதிர்ந்து குலுங்குகின்றது. இதை அரசியல்மயப்படுத்தி அமைப்பாக்கும் போது ஆணாதிக்க அஸ்திவாரம் தகர்ந்து போகும். இந்த வன்முறையின் அடுத்தக் கட்டத்தைப் பெண் சமூகத்தளத்தில் எடுத்துச் சொல்லுகின்றாள். அதை அவள் எப்படி முன்னெடுக்கின்றாள் என்பதைக் கீழே வரும் பாடலில் பார்ப்போம்;.
பெண்: ''பாருங்களேன் பாருங்களேன் பஞ்சாயத்துக்காரங்களே
பாய விரிச்சுத் திண்ணையிலே படுத்துக் கெடந்தேனே இந்த
பாவி மனுஷன் அடிக்கறானே பசிவெறியாலே - எனக்கு
பட்ட எடம் வீங்கிப் போச்சு பணியாரம் போலே
கள்ளுலெ பூச்சி கெடந்தா கலக்கிக் கலக்கிக் குடிக்கிறாண்டி
சோத்திலே கல்கெடந்தா சொந்தப் பெண்டாட்டியை அடிக்கறாண்டி"
ஆண்: ''சட்டிமுட்டி கழுவவில்லை
சமையல் வேலை செய்யவில்லை
வெட்டிப் பயமகளக் கட்டி
வெட்கக் கேடு ஊரக்குள்ளே
வெரட்டப் போறேன்
தாலியறுத்து வெதவையப்போல - நான்
வெகு பணத்தை இழந்துவிட்டேன்
பொண்டாட்டியாலே
பெண்: ''கேளுங்கய்யா நாயத்தை ஒரு
நையாப்பைசா கொடுப்பதில்லை
பாய விறிச்சுப் போட்டு
படுத்திருந்தேன் திண்ணையிலே
பாவி மனுஷன் அடிக்கறானே
பசிவெறியாலே - இப்ப
பட்டஎடமெல்லாம் வீங்கிப் போச்சு
பணியாரம் போல"10
ஆணாதிக்க அமைப்பில் உருவான ஆண்கள் பஞ்சாயத்தில் பெண்கள் தமது கணவன் அடித்ததையும் அதன் விளைவை உவமையூடாக விளக்கிச் சொல்லும் போதும் அங்கு நீதி கிடைக்காது என்பதால் (ஏனெனின் ஆணாதிக்கப் பஞ்சாயத்து அல்லவா) பாடலின் இறுதியில் பெண்களிடமே சொல்லி முறையிட்டு ஆதரவு கோருவது இயல்பாகின்றது. ஆண்களின் மதுப் போதையின் போது எதையும் குடிக்கத் தயாரான சமூகச் சமரசத்தை அம்பலப்படுத்தியும், தனது தனிப்பட்ட ஆளுமைக்கு அப்பாற்பட்ட வறுமை, கலப்படம் போன்றவற்றால் படும் துன்பத்தையும் வெளிப்படுத்துகின்றாள்.
இங்கு ஆணாதிக்கத்தின் நேரடி பிரதிநிதியான ஆண், வறுமை, கலப்படம் போன்றவற்றால் ஏற்படும் விளைவுக்கான தீர்வாகப் பெண்ணை அடிக்கின்றான். ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சமுதாயத்தை எதிர்த்துப் போராட வேண்டிய ஆண் சமரசமான தீர்வாகப் பெண்ணை அடிக்கின்றான்;. இது நேரடி சமூக விளைவாக இருக்கும் போது சமூகக் கவனத்தைக் குவிக்கின்றது. ஆனால் முதலாளித்துவப் பெண்ணியல்வாதிகளின் தீர்வுகளும் ஆணாதிக்க ஆண் அடிப்பது போன்றுதான் அவர்களின் தீர்வுகள், சமரசங்கள் எதார்த்தத்தில் இருப்பது நடைமுறையாகும். இது கருஅழிப்பாக இருந்தாலும், ஓரினச்சேர்க்கை அங்கீகரிப்பாக இருந்தாலும், வாக்குரிமையாக இருந்தாலும் விதிவிலக்கு இருப்பதில்லை. இந்த வன்முறையைத் தாங்க முடியாத நிலையில் தப்பியோட நினைக்கும் பெண்ணின் தீர்வின் போது, அவள் எப்படி அதை வெளிப்படுத்துகின்றாள் என்பதைக் கீழே பார்ப்போம்.
''கான மிளக வச்சுக்
கறிக்குமசால் கூட்டி வச்சுக்
கொழும்பு ஒறைக்குதிண்ணு - என்னக்
கதவடைச்சுக் கொல்லுதாரே
அறியாத ஊரிலேயேத்
தெரியாத வாக்கப்பட்டேன்
அடியாதிங்க புடியாதிங்க - நான்
விடியாம ஓடிப்போறேன்"36
— இதில் தான் எப்படி உனக்காகக் கஷ்டப்பட்டு கறிவைத்தேன் என்று சொல்லி அடிப்பதையிட்டுக் கணவனிடம் சொல்லிப் புலம்புகின்றாள்;. உனக்குச் சமைக்கும் வீட்டு வேலைக்காரியாகச் சமைத்துப் போடுவது பிடிக்கா விட்டால், உன்னைவிட்டே ஓடிப் போய்விடுகின்றேன் என்று கூறி அடிப்பதை நிறுத்தக் கோருகின்றாள். பெண்ணின் இயந்திரத்தனத்தையும் அதன் திருப்தியையும் கோரி ஆண் அடையும் கண்ணோட்டம், சுரண்டல் வர்க்கத்தின் நோக்கில் இருந்து இது பிரதிபலிக்கின்றது. வறுமை மனிதனை ஆழ்த்துகின்ற துன்பத்தையும் அதில் பெண் அனுபவிக்கும் துயரத்தையும் எந்தக் கலைஇலக்கியமும், நாட்டுப்புற இலக்கியத்துக்கு நிகரானவையல்ல. அதைத் தொடர்ந்து பார்ப்போம்.
''அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே என்னை
பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலிபேசுதே
பொள்ளாச்சி சந்தையிலெ வெள்ளாட்டை வித்துபோட்டு
நல்லதுணி வாங்கித்தாம்மா
செல்லகண்ணு சந்திரிகா
சிலுக்குச் சட்டை போட்டுவாரா
சினிமாக்காரி மாடலுன்னு
... ... ..
மத்தியானக் கஞ்சிக்குத்தான்
பள்ளிக்கூடம் போகச்சொன்னேன் ...
ஆடுமாடு மேய்க்கிறதுக்கு
வயசுனக்கு இல்லையுன்னு.."10
— என்று வறுமையைக் கூறும் இப்பாடல் பலவிதமான அவலங்களை உள்ளடக்கி நீண்ட பாடலாக வெளிப்படுகின்றது. ஏழ்மையை, பாடசாலையில் ஆளுமையை வெளிப்படுத்தும் பணக்காரக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இருந்து, திரைப்பட வக்கிரத்தில் ஒப்பிடும் போது வறுமை கூனிக்குறுகுகின்றது. திரைப்படத்தில் அரைகுறை ஆடை ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்த பெண்களை அதற்கு நிர்ப்பந்தித்த போது, அங்கும் அந்தப் பெண்மையும் சமூகப் பெண்மையும் தனது கற்புரிமையை எண்ணிக் கலங்க தவறவில்லை. ஆனால் இன்னுமொருபிரிவு இதை மூலதனம் திரட்டும் ஊடகமாகக் காணும் போது ஆணாதிக்கம் அப்பெண்ணில் கொக்கரிக்கின்றது. ஏழ்மையில் போட உடுப்பின்றி, மாற்ற உடுப்பின்றி, கிழிந்து தொங்கும் ஓட்டைய+டாக, நாகரிகச் சமூகம் தேடுவது வக்கிரம் என்பதையும் இப்பாடல் துல்லியமாக வெளிக்காட்டுகின்றது. இப்படி நிறையப் பாடல்களை வறுமையை ஒட்டிக் காணமுடியும்.
திருமணம் செய்த பின் தமது சொந்தக் கணவன்மார் வேறு பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதைக் கூட, கூட்டு உழைப்பில் பெண்களுடன் பாடிப் பகிர்ந்து அதை எதிர்ப்பது நாகரிகச் சமுதாயத்துக்கு முரணானது. கீழே அதைப் பார்ப்போம்.
''ஊரநல்லா பொண்ண உறங்கட்டண்டி - ஏலம்மே ஏலம்
உறங்கட்டண்டி - ஏல சிங்காரம்
ஓ புருஷ பொண்ண தூங்கட்டண்டி - ஏலம்மே ஏலம்
ஓ புருஷ பொண்ண தூங்கட்டண்டி - ஏல சிங்காரம்
சன்னலையு பொண்ண திறந்து வைய - ஏலம்மே ஏலம்
திறந்து வைய - ஏல சிங்காரம்
சமுககாளத்த பொண்ண போட்டு வைய - ஏலம்மே ஏலம்
சாரப்பாம்பு பொண்ண ரூபம் கொண்டு - ஏலம்மே ஏலம்
ரூபம் கொண்டு - ஏலசிங்காரம்
சாமத்துல பொண்ண இங்கு வந்துறே - ஏலம்மே ஏலம்"36
பெண் தனது ஒருதலைப்பட்சமான ஒருதாரமணத்தில் இருக்கின்ற போது அதைப் பகிரங்கமாகச் சொல்லி, சமூக எதிர்ப்பை ஆதரவைக் கோரும் பாடல்களின் போது அந்த இடத்தில் உழைக்கும் பெண்கள் முழுவதுமாகப் பங்கு கொள்ளுகின்றனர். ஆணாதிக்கப் பாலியல் வேட்கையினுடைய பொதுத் தன்மையின் அனுபவ விளைவால் பெண்களுக்கிடையில் இது முரண்பாட்டை ஏற்படுத்துவதில்லை. இதனால் இப்பாடல்கள் இயல்பான சமூக இசைவடிவத்தையும், உழைப்பின் ஆற்றலையும் பொதுமைப்படுத்தி உழைப்பை வேகப்படுத்துகின்றது. இதை மேலும் கீழுள்ள பாடலில் இருந்து பார்ப்போம்.
''குதிரைவால் கதிரபோல குறிச்சபொண்ணு நானிருக்கேன்
கூறுகெட்ட அந்த மகள் குறத்தியோட சகவாசம்
முள காப்பழம்போல முத்தத்துல வந்து நிக்கான்
மூதேவி அத்தைமகன் மூளியிடம் சகவாசம்"36
சொந்த அத்தை மகனே வேறொரு பெண்ணுடன் கூடிக்குலாவும் ஆணாதிக்கப் பண்பாட்டைப் பெண் ஏற்றுக் கொள்வதை மறுத்துப் போராடுகின்றாள். பெண்ணை ஒருதாரமணத்தின் கட்டுக்குள் காவல் காக்கும் ஆண், அதை மீறும் போது பெண்ணால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. தனிச்சொத்துரிமை அமைப்பில் செல்வம், மனைவி என அனைத்தும் ஆணின் சொத்தாக எப்படி இருக்கின்றதோ, அதையே மனைவி கணவன் மீதான உரிமையிலும் முன்வைப்பதையும், அதைக் கணவன் மீறும் போது எதிர்த்துத் திட்டுவதையும் பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. இதை மேலும் பார்ப்போம்.
''மதுரைக்குப் போகாதீங்க மாங்கா தேங்கா வாங்காதீங்க
மதுரை கண்ட தேவடியா மறக்க மருந்து தந்திடுவா"36
— என்று எச்சரிக்கும் பெண் ஆணைத் தனது நினைவாக வாழக் கோருகின்றாள். இதை மீறி ஆண் சோரம் போகும் போது, சொந்தக் கணவன் இறப்பதே தனது வாழ்க்கையின் நிம்மதியைத் தரும் என்று சொல்லி பாடுகின்றாள்.
''நல்லபாம்புக்குட்டி போல வல்லாரைக் கைப்போட்டா
திண்டுக்கல்லு மூலையிலே திண்ணுப்போட்டேன் கரும்புச்சக்கை
அடிக்கணும் குளிரு காய்ச்சல் ஆறுமாசம் ஒரு வருஷம்
எடுக்கணும் பாடைகட்டி என்மனசு பாலாக"36
— இதில் தன்னைக் கைவிட்டு வேறு பெண்ணுடன் சகவாசம் செய்யும் ஆணை நீண்ட காலம் கஷ்டப்பட்டுச் செத்துப் போக வேண்டும் என்று கோருகின்றாள். அப்போதுதான் தனது மனது பாலாக மாறும் என்ற அங்கலாய்ப்பைச் சொந்த மனப்புண்ணில் இருந்து பெண் வெளிப்படுத்துகின்றாள். இங்கு இவை வஞ்சகமாக அல்லது நேர்மையாக மனதில் பட்டதைச் சொல்லி புலம்பும் போது அந்த ஆண் திருந்தி வரமாட்டானா என்ற ஏக்கமும் தொங்கி நிற்கின்றது. ஆணாதிக்கப் பலதாரமண எல்லையில் ஆண்கள் பல பெண்ணைச் சொந்த வீட்டிலேயே கொண்டு வந்திடும் போது அங்கு சண்டை சாதாரணமான இயல்பாகின்றது.
''கக்களத்தி சுட்டபுட்டு - ஏலெலம்படி ஏலம் அது
சாக்கடை தான் சேறுபோல - ஏலெலம்படி ஏலம்
அல்லாரும் கட்டபுட்ட - ஏலெலம்மபடி ஏலம் அது
எத்தி எறக்குங்கடி - ஏலெலம்படி ஏலம்
சக்களத்தி சுட்ட புட்டை - ஏலெலம்படி ஏலம்
சாக்கடையில் கொடுங்கடி - ஏலெலம்படி ஏலம்"36
கணவன் தனது சுக - போகத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி கொண்ட குடும்பம் சண்டைகளில் நிறைந்து நிம்மதியை இழந்து விடுகின்றது. முதல் மனைவி தனது கணவன் மீது உரிமை கொண்டாட, கணவன் இளைய மனைவியின் இளமை மீது நாட்டம் கொண்டு திரிய இந்தச் சண்டை தீவிரமாகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பில் திருமணத்தின் எல்லைக்குள் பரஸ்பரம் உரிமை கொண்டதாக இருக்கின்ற போது, வேறு ஒருத்தி அதில் பங்கு கோரும் போதும், கொள்ளும் போதும் மோதல் வலுக்கின்றது. முதல் மனைவியைப் பொறுத்த வரை கணவனும் சரி, வந்த பெண்ணும் சரி எதிரியாகவே, தன் உரிமை மறுக்கும் வடிவமாகவே கண்டு போராடுவது இயல்பாகின்றது. இங்கு கணவனின் அன்பை, காதலை, உழைப்பின் உரிமையைப் பெறுவதில், முதல் மனைவி, இரண்டாவது மனைவியுடன் போட்டி போடுமளவுக்கு, இந்த ஒன்றுக்கு மேற்பட்ட பலதாரத் திருமண வடிவம் நிர்ப்பந்திக்கின்றது. இதனால் மூத்த மனைவி தனது கணவன் இறந்து போக கோருகின்றாள்.
''என்னெய விட்டுவிட்டு - நீ
இளையதாரம் கட்டுனியே
போறஇடத்திலயே - உன்னை
பூநாகம் தீண்டாதோ"36
— என்று மூத்த மனைவி கணவனை இறந்து போகச் சபிக்கும் போது ஆணாதிக்க அமைப்பின் கோரமுகம் நிர்வாணமாகின்றது. ஒரு பெண்ணின் இலட்சியமே கணவனை அடைவது என்ற ஆணாதிக்கப் பண்பாட்டில் சிக்கிய பெண் அதுவும் நொறுங்கும் போது, அவள் எல்லாவற்றையும் இழந்து போராடுவது இயல்பாகின்றது. பெண்ணின் ஒரேயொரு குறிக்கோள் கணவனை அடைவதாகப் பண்படுத்தப்பட்ட நிலையில், அதை இழக்கின்ற போது அனைத்தின் மீதும் அவள் கோபம் இயல்பாகின்றது. இந்த வகையில் தனது கணவன் மீது யார் யாரெல்லாம் கொள்ளும் உரிமைகள் அனைத்தின் மீதும், பெண் போராடுவது அவளது விதியாகி விடுகின்றது. இது குறுகிய வட்டம் கொண்ட பார்வையாக இருந்தாலும், இதற்கான காரணம் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் வரையறுக்கப்பட்ட குறிக்கோளுக்குள் வாழக்கோருவதில் இது வெளிப்படுகின்றது. இந்த வகையில் சொந்த மாமியாரை எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது.
''அரிசி படியளந்து என்ன அழச்சிவந்த மாமியத்த ஒன்ன ஒரு
அரண புடுங்குமோ நீபெத்தபுள்ளகிட்ட நான்
அச்சமத்து வாழுவனோ"36
''அரிசி சிறை எடுப்பான் எங்கள் அண்ணன்
எங்க அண்ணி சோறாக்க நோக்குண்ணாளே"36
பெண் சகித்து வாழும் நிலையில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனது விடுதலைக்கான பாதையாகக் காண பின்நிற்பதில்லை. மாமியார் இறந்த போது சாபம் இடுகின்றாள். சமையலுக்கான பொருட்களைக் கூட மாமியார் உரிமை கொண்டாடி படி அளக்கின்ற போது, சொந்தக் கணவனின் உழைப்பு மீதான உரிமை பறிபோகின்றது. இங்கே வீட்டுப் பொருட்கள் மீதான உரிமை இழந்து வீட்டுக்கு வரும் வேலைக்காரியாக, கணவனின் படுக்கையைப் பகிரும் விபச்சாரியாகத் (இங்கு பணம் செலுத்துவதில்லை) தள்ளப்படுகின்றாள். சமுதாயத்தில் வேலைக்காரிக்கோ, விபச்சாரிக்கோ இருக்கும் உரிமை திருமணமான பெண்ணைவிட அதிகமாகும். கணவன் வீட்டில் புகுந்த பெண் ஒவ்வொன்றுக்காகவும் போராடுவது தவிர்க்க முடியாத புதிய சூழலாக இருக்கின்றது. இங்கு அவள் சந்திக்கும் முதல் தடை மாமியாரும், கணவனின் சொந்தச் சகோதரிகளுமே ஆகும். இதனால் அதன் தளத்தில் போராடுவது புகுந்த அந்தக் கணத்திலேயே தொடங்குகின்றது. அன்னியப்பட்ட மண்ணில், சூழலில், ஆதரவற்ற தளத்தில் தொடங்கும் போராட்டத்தில் எப்போதும் தோற்றுப் போவது நிகழ்கின்றது. இதில் இருந்து விலகிச் செல்ல பெண் நினைக்கின்றாள். அப்போது அவள் அதைச் சொல்லி பாடுவதைக் கீழே பார்ப்போம்.
''கொண்டவனால் குத்தமில்லை
மாமி கொடிசியில்ல
மத்தரால் குத்தமில்லை
நாத்தி கொடிசியால
நானிருந்த வாழமாட்டேன்"36
இந்தப் பிரிவு என்பது மேலும் அவமானகரமானதாகவே ஆணாதிக்க அமைப்பில் வெளிப்படுகின்றது. சொந்தப் பெற்றோர் ஏற்க மறுக்க, சமூகம் பெண்ணை அடங்கிப் போக கோரும், சமூக அமைப்பில் பெண் எதையும் தாங்கும் சக்தி கொண்டவளாகக் காட்டிச் சகித்து வாழக் கோரும். ஊரில் இல்லாததையா நீ கண்டு விட்டாய் என்று சொல்லி தூற்றும். எந்த நிலையிலும் பெண் புகுந்த வீட்டுக் கொடுமைகள் அனைத்தையும் தாங்கி வாழ்வதே சமூக ஒழுக்கமாக இருக்கின்றது. இதில் இருந்து மீள தற்கொலை செய்வது அல்லது அதற்குக் காரணமானவர்களை இரகசியமாகக் கொல்லுவது என்ற இரண்டையுமே, தனிப்பட்ட பெண் தேர்ந்தெடுக்க சமூகம் மறைமுகமாக உந்தித் தள்ளி அங்கீகரிக்கின்றது. பெண் சந்திக்கும் வாழ்க்கைத் துயரத்தை எப்படி பெண் வெளிப்படுத்துகின்றாள்? என்பதைக் கீழே வரும் பாடலில் பார்ப்போம்.
''கடுகு உருண்டுவர - எம்மா
கனத்த மழை பேஞ்சு வர - நான்
கடுகுப் பொறுக்குவேனோ
கனத்த மழையத் தாங்குவேனோ
கருவூரான் சாலையிலே
கட்டிலும் மெத்தையும் போட்டிருக்க - நான்
கருவூரான் பெத்த மக
கஷ்டப் பட்டத யாரறிவார்
விசுவூரான் சாலையிலே
வீடும் காடும் இருந்திடவே - நான்
வீமர பெத்த மக
வேதனைப்பட்டத யாரறிவார்"10
— என்று பெண்களின் துன்பங்கள் அழுந்தி போவதை இந்த உலகம் அறிந்துவிடவில்லை. ஒவ்வொரு பெண்ணினதும் துன்பங்கள் வெளிவராத உலகத்தில் ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறப்பதையே இந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றது. சொந்த வீட்டில் கிடைக்கும் எதிர்ப்பு எப்படிப்பட்டது? எனப் பார்ப்போம்.
''அண்ணன்: உன் கணவன் இல்லாம
ஓடிவந்த வயணம் என்ன?
கூடி வாழமுடியாமா
குறைகள் வந்த வயணமென்ன?
பெண்: கொண்டவனும் சண்டாளனே
கொழுந்தனும் கொடும்பாவி
மாமியாரும் மனக்குரங்கு - அங்க
மாமன் கொஞ்ச ஆதரவு
நாகமலை தூரமண்ணே
நானிருந்து வாழமாட்டேன்
அருமையான அண்ணணிண்ணா - நீயும்
ஆடுமாடவித்துக்கட்டு
அண்ணன்: ஆடுமாடு விக்கமாட்டேன்
அங்கபணம் கட்டமாட்டேன்
அருமையான தங்கையிண்ணா - நீயும்
அருங்கிணத்தைத் தேடி விழு
அவள்: தாயில்லாக் குறையல்ல
தனிமையில வாடுதனே
தங்கிவாழ முடியாம
தவித்துநான் வாடுதனே"36
— இதில் பெண் புகுந்த வீட்டுக் கொடுமையுடன் கோரும் சீதனம் போன்றவற்றை முன்வைத்து அண்ணனிடம் சொத்தை விற்று தரும்படி கோருகின்றாள். தனிச்சொத்துரிமை வாரிசான அண்ணன் கிணத்தில் வீழ்ந்து சாவு என்று, சொத்துரிமை மீதான உரிமையில் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகின்றான். கணவனும், கணவன் வீட்டுக் குடும்பமும் புகுந்தவள் மூலம் தனிச்சொத்துரிமையைக் கைப்பற்ற விரும்பும் அதே தளத்தில், சொத்தை அண்ணன் கொடுக்க மறுப்பது என்ற போராட்டத்தில், பெண் பந்தையம் வைக்கப்படுகின்றாள். பெண் மூலம் பெறும் சொத்துக்குப் பெண் உரிமை கொண்டாட முடியாது. அதை அவள், அவளின் விருப்பத்தை மீறிக் கொடுக்கத்தான் முடியும். பெண்ணை வேலைக்காரியாக வீட்டு இயந்திரமாக அடைத்து வைத்திருக்க தண்டப் பணம் கொடுக்கவேண்டும். அதுபோல் பெண்ணை வைத்திருக்கும் பெற்றோர் அதைச் சேர்க்க வேண்டும். பெண் வேண்டத்தகாத பிறவியாக அவளின் பிறப்பிலேயே கருதப்படுகின்றாள். இந்தவகையில் பெண் பிறப்பு முதலே அவமானப்படுத்தி ஒடுக்கப்படுகின்றாள்.
சீதனம் பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகமாக மாறிவந்த காலக்கட்டத்தில் ஆண் சீதனம் கொடுப்பதே முதலில் இருந்துள்ளது. இதையும் நாட்டுப்புறப் பாடல் தனது எச்சச்சொச்சத் தொடர்ச்சியில் சமுதாய நடைமுறையில் வெளிப்படுத்த தயங்கவில்லை. ஓர் ஆண் தனது மனைவிக்குச் சீதனம் கொடுத்து திருமணம் செய்ததையும், அவளுக்குக் கஞ்சி காய்ச்ச தெரியவில்லை என்று கூறுவதையும் கீழே உள்ள பாடல் வெளிப்படுத்துகின்றது.
''301 வாங்கி முடிஞ்சு வைச்சுக்கிட்டாள்
கஞ்சி காய்ச்ச தெரியயில்லை
உன்கழுத்தை கட்டி நான் அழவா!39
இதுபோன்று மற்றொரு பாடலும் ஆண் பரிசம் போட்டதை வெளிப்படுத்துகின்றது.
''பெண்களுக்கு பரிசம் கேட்டு
ஆண்கள் வந்து பரிசம் போட்டு
அழகு அழக திருமணங்கள் அப்போ
...
இப்ப ஆம்பிளைக்கு, இப்ப ஆம்பிளைக்கு பரிசம் போட்டு
ஐந்த பவுன் நகைகேட்டு அநியாயம் பண்ணுங்கிறாங்க இப்ப
நாடு சும்மா, நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்"39
இன்றைய ஆணாதிக்கச் சமூகத்துக்கு முந்திய சமுதாயத்தில் பெண் கேட்டு ஆண் சென்றதை நாட்டுப்புறப்பாடல்கள் தெளிவாக வெளிக் கொண்டு வருகின்றது. இன்று எதிர் நிலையில் பெண் ஆணைக் கேட்டு செல்வதுமட்டுமின்றி, சீதனக் கொடுமையும் சேர்ந்ததையும் மேலே உள்ள பாடல் காட்டுகின்றது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவன் இறக்கின்ற போது பெண் விதவைக் கோலத்தை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். விதவை என்பதுக்கு ஆண்பாலில் சொல் அற்ற நிலையில், இது தனிச்சொத்துரிமையில் பெண் மட்டும் கடைப்பிடிப்பதன் மூலம், சொத்து ஆண் வழியில் உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டது. இங்கு பெண் இறந்த கணவனின் வெறும் நுகர்வுப் பொருள் சார்ந்த சொத்துதான். கணவன் இறந்தால் அலங்கரிக்கப்பட்டுப் பின் அலங்கோலப்படுத்தப்படுகின்றாள். முன்பு கணவனின் சிதையில் ஆயிரம் ஆயிரமாக ஏற்றி எரித்த இந்து மதம் காலத்தால் எதிர்க்கப்பட்டதால், நவீன அடக்குமுறைகள் பெண் மீது திணிக்கப்பட்டது. ஆணாதிக்கச் சமூகத்தால் விதவையாக்கப்பட்ட பெண், தனது வாழ்க்கையின் துயரத்தைச் சொல்லிப் பாடும் போது அத்துயரங்கள் எல்லையற்றவையாகும். ஆத்துயரங்களைக் கீழே வரும் பாடலில் காணலாம்.
''காந்தத்துக் கண்ணாடி
கடம்பா மணிவிளக்கு
காத்தடிச்சா மங்காது - என்
கவலைசொன்னா மங்கிவிடும்
...
காச்சமரம் கீழிருந்து என்
கவலையைச் சொல்லிவிட்டால்
காச்ச மரமெல்லாம் - என் ஐயா
காய்மாறிப் போயிருமே"36
— என்று சொல்லிப் புலம்பும் போது ஒரு மரத்தின் இயல்பே தனது சோகத்தைக் கேட்டால் மாறி விடும் என்று கூறுமளவுக்கு, ஆணாதிக்கம் வக்கிரம் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றாள். ஆணாதிக்கத்திடம் சொன்னால் எதுவும் நடக்காது, ஆனால் ஒரு மரம் அதைக் கேட்ட சோகம் தாளாது தன்னையே மாற்றிவிடும் என்பதை இப்பாடல் அழகாகவே வெளிப்படுத்துகின்றது.
ஆணாதிக்கத்தை ஒழிக்க வன்முறையைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதில்லை என்பதை இப்பாடல் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்த வன்முறை தனிப்பட்ட ஆணின் மேல் அல்ல ஆணாதிக்கச் சமூகம் மீது என்பது தெளிவானது. இந்த ஆணாதிக்க அமைப்பின் அடிப்படை மீதான வன்முறைதான் பெண்ணை விடுவிக்கும் என்பதும் தெளிவானது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் துயரங்களைச் சொல்லி மரம் போல் மாறிவிட முடியாது என்பதை, பெண் அனுபவ ரீதியாகப் புரிந்து தன்னியல்பாகப் பாடும் போது, வன்முறையின் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகின்றது. இதை அனுபவிக்கும் பெண் சொல்லிப் புலம்பிப் பாடுகிறாள். இது தீர்வைத் தருவதற்குப் பதில் மன ஆறுதலைக் கொடுக்கின்றது. இந்தத் துயரத்தை மாற்ற, மறுத்து போராட எழுகின்ற போது தீர்வும் கிடைத்துவிடும் என்பது எதார்த்தமாகின்றது.
பெண்கள் தமது இயற்கையின் தேவையை ஒருதாரமணத்தில் தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் வேறு ஆண்கள் உடன் உடலுறவு கொள்வது நிகழ்கின்றது. இதைத் தாண்டி கணவனின் சகோதரர்களுடன் உடலுறவு கொண்டு வாழும் பழைய சமுதாயத் தொடர்ச்சிகள் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள், சாதி கடந்த ஆண்கள் என்று பல தளத்தில,; உடலுறவுகளைப் பெண்கள் கொண்டிருந்தனர். இதில் நிர்ப்பந்தத்தின் மூலம் ஒருபுறம் நிகழ, மறுதளத்தில் விரும்பிச் செய்வது என இரு தளத்தில் இவை நிகழ்ந்துள்ளது, நிகழ்கின்றது. தனது கணவன் இறந்தால், தான் அவனின் சகோதரன் மூலம் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று சொல்லி பாடுவதைப் பார்ப்போம்.
''கோயிலுக்குப் போகவேனும்
கொண்டவனும் சாக வேணும்
கொழுந்தனார் பையங்கிட்ட - குட்டி கிளியா
கொம்மாளங் கொட்டலாமே போடுகாந்தம்"36
— என்று கணவனின் சித்திரவதையில் இருந்து விடுபட நினைக்கின்றாள்;. எப்போதும் திருமணம் செய்யாத எல்லா நிலையிலும் ஆண் பெண் உறவில் இருக்கும் அன்பும், காதலும், நெருக்கமும் திருமணத்தில் இருப்பதில்லை. ஏனெனின் திருமணத்தில் உருவாகும் குடும்பத்தில் ஆண் பெண்ணுக்கான கடமைகளே முதன்மையாக முன்னிலைக்குக் கொண்டுவருகின்றது. இது ஆண் பெண் என இருவருக்கும் குடும்பம் நெருக்கடியான வாழ்வாக மாறிவிடுகின்றது. இந்த உரிமைகள் கடமைகள் மீது வன்முறையும், நாட்டமின்மையும் ஏற்படுகின்றது.
இந்தக் குடும்ப எல்லைக்குள்;; சமுதாயப் பொருளாதார அமைப்பே திடீரென புதியவடிவில் பண்பியல் மாற்றமாகப் புகுந்து அனைத்தையும் மாற்றி விடுவதால், ஆண் பெண் பிளவு தீவிரமான பண்பியல் மாற்றத்தைச் சந்திக்கின்றது. ஆண், சமுதாயத்தின் விரிந்த தளத்தில் வாழ்வதுடன் பலதார மணத்தில் இருக்கும் வாய்ப்புகளில் தன்னைச் சமாளித்துக் கொள்ள, பெண் இதில் இருந்து தப்பிச் செல்ல முனைகின்றாள். பெண் தனது முந்திய காதலனுடன் ஓடிவிட நினைத்து அதை வெளிப்படுத்துகின்றாள்.
''வெள்ளமாடு ரெண்டுகட்டி மன்னவா நாம
விருந்தாசலம்போவலாம் மன்னவா
கீழத்தெருவிலேயே கிழவனுக்கே மாலையிட்டேன்
மாலையிட்ட நாள் முதலா மன்னவரைக் கண்டதுண்டோ"36
— என்று தனது சுய வாழ்வின் அவலங்களில் இருந்து தனது காதலனுடன் வாழ்வதாகக் கற்பனை செய்து பார்க்கின்றாள். பெண் தான் காதலித்தவனை விட மற்றவனின் தேவையைப் பூர்த்தி செய்ய நிர்ப்பந்திக்கும் திருமணத்தில் பெண் அன்னியமாகி விடுகின்றாள். இதனால் அதைக் கடந்து வாழ நினைத்து பாடும் பாடல், எதார்த்த ஆணாதிக்க வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இங்கு பெண்ணுக்கு நிறைய பட்டங்கள் காத்துக் கிடக்கின்றன. அப்படி வெளிவந்தாலும் அவள் யாரிடம் சரணடைந்தாளோ, அவன் அப்பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பானே ஒழிய மனைவியாக அல்ல. இங்கு ஆணாதிக்கக் கற்பு சமூக வடிவில் பெண்ணை இழிவுபடுத்துகின்றது. இந்த இரண்டு தளத்திலும் பெண்ணின் கற்புரிமை கேவலப்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் கிராமப்புறத்தில் பெண்கள் திருமணத்தில் அதிருப்தியுற்று, புதிய வாழ்க்கையைத் தேடுவது சர்வசாதாரணமாக உள்ளது. எந்தளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டாலும் அது இயல்பான நடத்தையாக உள்ளது. இதில் இருந்து தனது சொந்த வாழ்க்கை மீதான அவலங்களின்; போது, புதிய கணவனைத் தேடப் போவதாகப் பெண்கள் பாடல் மூலம் சூளுரைப்பது நிகழ்கின்றது. அதைக் கீழ்க்கண்ட பாடல் நிர்வாணமாக்குகின்றது.
''ஒன்ன விட்டு நான் வேற பிரிந்து கயித
ஒரு புருஷன் நானு தேடப்போறேன்."36
— என்று பெண் கூறும் போது, கிராமப்புறப் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் பெண்ணின் துணிச்சலான கருத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால் பெண் அலட்சியப்படுத்தப்படும் எல்லா நிலையிலும் பெண் தனது வாழ்வை உதறியெறிய முன்வருகின்றாள். இந்த வாழ்க்கையில் இருந்து மீளமுடியாத நிலையில் அல்லது தமது இயற்கையின் தேவையைப் பூர்த்தி செய்யும் போக்கில், திருமணத்துக்கு வெளியில் ஆணாதிக்கச் சாதி கடந்து உடலுறவில் ஈடுபடுவது நிகழ்கின்றது.
''ஜோதி கிட்ட நா பேசினதால
ஜாதிகெட்டவ - ஊர்
வாயி நீள எ(ன்)
உசுரு உப்பு மில்லாம
சப்புன்னு போச்சே
சாவுத் தேடிப் போனே(ன்) - இப்ப
ஆவியா அலையுறேனே"40
இந்தப் பேய் ஓட்டும் பாட்டின் மூலம் சாதி கடந்து உடலுறவு கொண்ட பெண் ஊராரின் அவதூற்றால் இறந்து போனதைக் காட்டுகின்றது. இந்த மாதிரியான அவதூறுகளையும் தாண்டி உறவுகள் நீடிப்பதை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிக் கொண்டு வருகின்றது.
''எழுவதியா லொண்டு
ஏண்டி கொசப்பெண்ணே
எடயண்ட போனே
பாலுவார்ப்பார் என்று
பட்சம் வைத்துப் போனேன்
...
தயிரு வாப்பான் என்று
தயவுசெஞ்சி போனேன்
சொல்லாதீங்க ஆண்ட
செப்பு பண்ணித்தாரேன்
...
ஏறி விளையாட
எருது பண்ணித்தாரன்
...
குந்தி விளையாட திரை பண்ணித்தாரன்
...
பாத்து விளையாட
பதும பண்ணித்தாரன்"36
— என்று பெண் பாடும் போது, இயற்கையின் தேவைகள் எதார்த்தத்தில் எல்லை கடந்து நிற்கும் போது சமூகக் கட்டுப்பாடுகளை மீறுவது இயற்கையாகின்றது. இந்தப் பெண்ணின் மீறல் எதார்த்தத்தில் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமைச் சமூகத்தில் என்பதால், ஆணின் தேவையை அடிப்படையில் பூர்த்தி செய்வதாக மாறுகின்றது. இது பகிரங்கமான பொது விபச்சாரத்துக்குப் பதில், இரகசியமான விபச்சார நிலைக்கு இது தன்னைத் தரம் குறைக்கின்றது. இயற்கை சார்ந்த தேவையை வக்கரிக்கச் சென்று பண்ணி உந்தித் தள்ளும் திரைப்படம் மற்றும் சீரழிவின் பண்பாட்டில் ஏற்படும் கவர்ச்சிகரமான பாலியல் நாட்டம், நீண்டு நீடிப்பதில்லை. பெண் தரப்பிலும் இது அலுத்துப் போகும் போது, ஆண்தளத்தில் பெண் மீதான அதிகாரமாக, அடக்குமுறையாக இந்த உறவு வளர்கின்றது. இதைப் பெண் எதிர்த்து பாடுவது அடுத்தக் கட்டத்தில் நிகழ்கின்றது.
''அடி அம்மட்டச்சி கொழுப்பு - சல
வண்ணாங்கிட்ட போனா
வானாங்கோ லெடுத்து
சாடுறானாம் வண்ணான்
போடுங் கோலெடுத்து
பொளக்குறானாம் வண்ணான்"36
இதன் மூலம் ஆணாதிக்கம் சாதி கடந்து, வர்க்கம் கடந்து, இனம் கடந்து, நிறம் கடந்து பெண் மீதான ஆணின் பார்வை பொதுமைப்படுத்துவதையே, பெண் தனது சொந்த எதிர்ப்பினூடாக நிதர்சனமாக எடுத்துக் காட்டுகின்றாள். ஆண் தனது தேவையைப் பூர்த்தி செய்யும் வரை காதலிப்பதும், அன்பு செலுத்துவதும் என்ற நிலையைக் கடந்த பின்பு, ஆணாதிக்க அதிகாரமாகப் பெண் மீது ஏவப்;படுவது இயல்பாகின்றது. ஓரினச்சேர்க்கை போன்றவற்றில் கூட இதுதான் நிகழ்கின்றது.
தனிச் சொத்துரிமை அமைப்பில் தனிமனிதச் சுதந்திரம், மற்றவனின் மீதான அடக்குமுறையைக் கோரும்; உள்ளார்ந்த அடிப்படை விதி, சமுதாயத்தில் எந்தத் தளத்திலும் அதிகாரத்தைத் திட்டவட்டமாக நிறுவுகின்றது. இது குறித்த விடயம் மீது வன்முறையைக் கையாளுகின்றது. அடுத்து பரந்த தளத்துக்கு மாறிச் செல்லுகின்றது. பெண் வேலைக்குச் செல்லும் வேலைத் தளத்தில், அதிகாரப்பிரிவுகள் முதல் சமுதாயத்தின் அனைத்து ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அதிகாரப் பிரிவும், பெண் மீதான புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அணுகுகின்றது. இதைப் பெண்கள் தமது நாட்டுப்புறப்பாடல் ஊடாக வெளிப்படுத்தத் தவறவில்லை.
''கண்ட கண்ட இடமெல்லாம் கண்ட பொண்ணெக்
கையைப்பிடிச்சிழுப்பான்"36
— என்று கூறும் போது பெண்ணுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பில்லாத இந்த ஆணாதிக்க ஜனநாயகத் தனிச் சொத்துரிமை அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. பாதுகாப்பு தனது சொந்தத் தற்காப்பில் இருப்பதை எச்சரிக்கின்றது. சமூக அரசு அமைப்பில் நம்பிக்கை இழந்து, சொந்தத் தற்காப்பை முன்நிறுத்தி சமூகப் பாடலாக வெளிப்படும் போது, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒன்றுபட்ட கண்ணோட்டம் போராட்டம் இயல்பாக வெளிக் கிளம்புகின்றது.
இந்தச் சமூகம் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை ஜனநாயகத்தால் உருவாகின்ற போது, இதனால் பாதிக்கப்படும் பெண்கள் தமது சொந்தக் குழந்தைகளின் தந்தை, இந்த ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் அதிகாரிதான் என்பதை ஒப்புக் கொள்கின்றாள். இந்தத் தனிச்சொத்துரிமை அமைப்பில் பாலியல் அத்துமீறல் அதிகார வடிவில், சொத்துரிமை வடிவில் பெண்ணை இருண்ட பொருளாதார வாழ்வியலின் பின் கற்பழிக்கின்றது. இது அநேகமாக வெளியில் பெண் கூற முடியாத தனிச் சொத்துரிமை, வறுமையுடன் கூடிய அவலம் தடுக்கின்றது. இதனால் அதைச் சகித்துக் கொண்டு, அத்துமீறிப் பிள்ளையைப் பெத்துப் போடுகின்றாள். இதை அப்பெண் தனது பாடல் மூலம் வெளிப்படுத்துவதைப் பார்ப்போம்.
''பேருக்குப் பெரிய எசமான்
பேர்போன சின்ன எசமான்
எசமான் கொடுத்தபுள்ள
சிரிக்குதடி இடுப்புமேலே"36
— என்று பெண் தனது குழந்தையைச் சொல்லி ஆணாதிக்க எசமானத் தனத்தை கேலி செய்கின்றாள். ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமைச் சமூகத்தின் மதிப்பும், புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கையின் பின் இந்த வக்கிரத்துடன் கூடிய ஏதோ ஒரு போக்கு காணப்படுவது இயல்பாக உள்ளது. சமுதாய அடக்குமுறையின் சின்னமாக இருக்கும், அந்தப் புகழுக்குரிய வாழ்வின் பின், அவலமான கண்ணீர் கொண்ட விரிந்த உலகம் வீங்கிக் கிடப்பதே எதார்த்தமான உண்மையாகும். இதைத்தான் இந்த நாட்டுப்புறப்பாடல்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. நாட்டுப்புறப் பாடல்கள் பெருமளவுக்குப் பெண்களினால் பாடப்படுவது வழக்காக உள்ளது. ஆண்கள் தொழில் தேடி நீண்ட தூரம் சென்றதாலும், செல்வதாலும் பெண்கள் வீட்டில் தங்கி நின்ற இந்தக் குறிப்பான காரணங்களுடன், மேலும் ஆணாதிக்க அமைப்பின் சொந்தச் சோகத்தைப் பெண்கள் சொல்லிப் புலம்புவதுமாக நாட்டுப்புறப் பாடல் பெண்ணின் வெளிப்பாடாகியது.
பெண் தனது வாழ்வின் சோகத்தைச் சொல்லிப் புலம்பி ஒப்பாரி வைப்பது தன்னியல்பாக இருந்தது. இதைப் பெண் மரண நிகழ்வில் ஒப்பாரிப்பாடல் மூலம் சொல்லி புலம்புவதன் ஊடாகச் சமூக அவலத்தை வெளிப்படுத்துகின்றாள். ஆண்கள் இப்படி ஒப்பாரி வைப்பது ஆண்மைக்கு இழுக்காகக் கருதுவதால், நாட்டுப்புற இசையின் உள்ளடக்கம் பெண்ணை அதிகம் சார்ந்து நிற்கின்றது. ஆண்கள் உழைப்பை ஒட்டி மட்டுமேதான் பாடுவதும், சமூக அவலத்தையிட்டுப் பாடுவதோ, ஒப்பாரி வைப்பதோ சமூக இழுக்காகக் கருதுவதால் நாட்டுப்புற இசையின் மூலம் (அடிப்படை) பெண்ணாக இருக்கின்றாள்;. ஆண்கள் அண்ட மறுத்து இழிவாகக் காட்டப்படும் ஒப்பாரிப் பாடல் மூலம் இதை மேலும் பார்ப்போம்.
''அம்மாவும்ஆள் அனுப்ப
முந்தானை விரித்துப்போட்டு
முகத்தின் மீது போட்டழுவாள்
அக்காவுக்கு ஆள் அனுப்ப
பம்பை தலைவிரிச்சு
பாடை மீது போட்டழுவாள்
...
வாய்க்கரிசி கொண்டுவந்து
வழிநெடுக கல்பார்ப்பாள்
வாய்க்கரிசி தீர்ந்து போக
வந்தவழி திரும்பிவிடுவாள்"36
— என்று பெண் தான் இறந்து போகும் போது என்ன நிகழும் என்பதைக் கற்பனை பண்ணி தனது துயரத்தைப் போட்டுடைக்கின்றாள். தாய்வழிச் சமூகம் தனக்காக எப்படி கண்ணீர் விட்டு அழுகின்றது என்பதையும், தனது தாய்; வழி அல்லாதவை எப்படி தன்னைப் புறக்கணிக்கின்றது என்பதையும் இந்த ஒப்பாரியில் சொல்லிப் புலம்ப பெண் தயங்கவில்லை.
இது சமுதாயத்தில் பொதுவாகப் பெண்களின் இயல்பான உணர்ச்சியாக, வெளிப்பாடாக இருப்பதும், இது பெண் வழிப் பெண்ணையும் பொதுமைப்படுத்தும் போது இது முரணாக இருப்பதில்லை. இதில் இருந்துதான் பெண் பெண்ணை ஆணாதிக்க வழியில் ஒடுக்கும் போது, பெண் ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவைத்தான் வெளிப்படுத்துகின்றாளே ஒழிய, உள்ளுணர்வுகளால் உந்தப்பட்டுச் செய்வதில்லை என்பதைக் காட்டுகின்றது. சொந்தத் தாயின் இழப்பின் போது அவள் தாய்மையைப் போற்றி ஒப்பாரி வைத்து புலம்புவது நிகழ்கின்றது.
''நெய் ஊட்டி வளர்த்த உன்
நேசத்தை நான் மறவேன்
பால்ஊட்டி வளர்த்த உன்
பாசத்தை நான் மறவேன்
குடத்தோட தண்ணீர் எனக்குக்
குளிர வார்த்தாலும்
தாய் வார்த்த தண்ணீர்போல்
தாகந் தணியா தெணை"36
— என்று தாய்மையின் தாய்மைப் பண்பை, அதன் தியாகத்தைச் சமுதாயத்தின் எந்த வடிவமும் முன்நிற்க முடியாது. இந்தத் தாய்மை தன்னியல்பான இயற்கையான உள்ளுணர்வால் உந்தப்பட்டுச் செய்யும் மனிதப்பண்புகள் ஈடு இணையற்றவையாகும்;. இதை இன்றைய நாகரிகச் சூறையாடல் குழந்தைக்கு மறுத்து, இயந்திரத்தனத்தில் பெண்ணியத்தைப் போதிக்கும் போது, கிராமத்தில் தாய்மை இயற்கை சார்ந்து நிற்பதையே இந்த ஒப்பாரி காட்டுகின்றது. தாயை இழந்த பின் எமது சமுதாய வழிகாட்டியை இழந்து போன துயரத்தைப் பெண்கள் சொல்லிப் புலம்பும் போது, பெண்; சமுதாய வழிகாட்டியாக இருக்கும் முன்னணிப் பாத்திரத்தைக் காட்டுகின்றது.
''ஏவினா அன்னியிலே நாங்கள் எழுந்து முடியறியோம்
கல்தூணின் கீழருந்து கல்பிக்க வேண்டாமோ
பொண் தூணின் கீழிருந்து புத்திசொல்ல வேண்டாமோ"36
— என்று பாடி தன்னை வளர்த்தெடுத்த மேன்மையைப் போற்றுவதில் பெண்கள் தமது ஒப்பாரியில் பின்நிற்கவில்லை. அதே நேரம் தமது திருமணத்தில் சீதனம் முதல் பல்வேறு திருமணக் கொடுமைகளைக் கூறி, தாய்மை பெற்ற கஷ்டத்தைச் சொல்லிப் புலம்புவதுடன், தான் அந்தத் திருமணம் மூலம் துன்பம் அடைய தாய்தான் காரணம் என்று கூறிக் குற்றம் சாட்டவும் பின்நிற்கவில்லை. இது போல் தந்தை இறக்கும் போதும் சொல்லி அழவும் தயங்கவில்லை.
''மாமன் மகனுக்குன்னு
மச்சிலியும் பொம்பொறந்த
என்னைப் பெத்த அதிகாரி பண்ணுனது
மாமன் கௌயவுட்டு
மறு கொடயா மாலையிட - என்னொட
மனச்சலிப்பும் கொள்ளையடா"36
''மட்டஞ்சிறிசிலே நான் மலரையிலே நல்ல பூவு என்னை
மலரவச்சுப் பார்க்காம மங்கவச்சுப் பாத்தீகளே"36
''ஆனைகுடிக்காது அகமூடி நல்லதண்ணி - இந்த
அரும்பாவிச் சீமையிலே
என்னைப் பெத்த மாதா - என்னை
அள்ளிக் குடிக்க வச்சு"36
தாயார் பொறந்த இடம் தாளாம்பூக்கச்சேரி
தாலி பொருத்தமில்லையே எனக்குத் தாய்மாமன் சொந்தமில்லையே
மாட்டடைக்கும் பட்டியிலே நீ பெத்த மங்கையாள போட்டடைச்சு
மாடுபடும் துன்பமெல்லாம் இந்த மங்கையாள் நிக்குறேனே"36
தனது திருமணத்தில் தனக்குத் தேர்ந்தெடுத்த போதே தாய் தவறு இழைத்ததைக் குற்றம் சாட்டிப் புலம்பும் போது, ஆணாதிக்க அமைப்பின் கொடூர முகத்தை எமக்கு வெளிப்படுத்துகின்றது. இந்த ஆணாதிக்கச் சமூக தளத்தில் திருமணம் என்பது எங்கு நடந்தாலும் எப்படி நடந்தாலும் அது ஆணாதிக்க எல்லைக்குள்தான் நடக்கின்றது, நடக்கமுடியும். இதில் தாயை மகள் குற்றம் கூறிப் புலம்பும் போது தனது தாய்மாமன் மீதான திருமணத்தைக் கோருவதன் மூலம் துன்பத்தில் இருந்து மீண்டுவிடமுடியும் என்று நம்புகின்றாள்; இது அடிப்படையில் துன்பத்தைக் குறைக்கவும், போராடி வெல்லவும் தாய் மாமன் உறவு வழிவகுக்கின்றது. உறவுக்குள்ளான திருமணம் தாய்வழி சார்ந்து அதிகப் பாசத்தை, நெருக்கத்தை வெளிப்படுத்த முடியுமே ஒழிய ஆணாதிக்க அமைப்பின் பொது ஒடுக்குமுறையை இல்லாததாக ஆக்கிவிடுவதில்லை. திருமணத்தில் ஏற்பட்டத் துன்பத்தை ஒட்டி தாயைக் குற்றம் சாட்டிப் புலம்பும் அதே நேரம், திருமணத்தில் ஏற்பட்ட துன்பத்தைச் சொல்லிப் புலம்பவும், ஆதரவாக வரவேற்கும் தாய் இறந்து போனதையிட்டு, அதனால் தனது துன்பம் பெருகுவதைக் சொல்லியே ஒப்பாரிப் பாடல்கள் எழுகின்றன.
மாமன் மகன் திருமண உறவைப் பெண்கள் தமது ஒப்பாரிப் பாடல் மூலம் கோருவதும், அது மறுக்கப்பட்டு இருப்பதும் தாய் வழிச் சமூகத்துக்கும், தந்தை வழிச் சமூகத்துக்கும் இடையேயான பிளவைக் காட்டுகின்றது. தாய்வழித் திருமணம் பெண்ணுக்கு நிம்மதியை, ஆறுதலை வழங்கும் என்ற நம்பிக்கைகள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பிரதிபலிக்கின்றது. இதனால் பெண் தாய்வழித் திருமண உறவைப் பெரிதும் விரும்பிக் கோருவதும், அதைச் செய்ய மறுத்த பெற்றோரைக் குற்றம் சாட்டுவதும் தவிர்க்கமுடியாத இயல்பாகின்றது. சொந்தத் தாய் தந்தையின் இறப்பில் கூட, சோகத்தை விட நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்களை முன்னிலைப்படுத்தி அதற்கு நேரடி காரணமான பெற்றோரைக் குற்றம் சாட்டுவதற்குப் பின்நிற்கவில்லை.
''பொறந்த மாளிக்குப் போனேண்ண - என்ன பெத்த
மாதா இருந்தாண்ணா
மண்ணு போடும் திண்ணையிலே - என்
மன்னவரக் குந்தவப்பா
மக்களுக்குச் சீரிடுவா"36
— என்று சொல்லி தனது இழப்பை வெளிப்படுத்துகின்றாள். இந்தப் பாடல்கள் ஆணாதிக்க அமைப்பின் மீது எழுகின்ற பெண்ணின் துன்பங்களின் துயரங்களின் எதார்த்த வெளிப்பாடாகும். இனி தனது தாய் வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் புதிய துன்பத்தையும் வெளிப்படுத்த தயங்கவில்லை.
''கும்பிகொதிக்குதுண்ணு - நான் பெத்தவாச
குடிக்கத் தண்ணி கேட்டென்னா
கொடமும் எறவயில்லை - என்னைக்
கொள்ளடமும் போகச்சொன்னா"36
— என்று ஆணாதிக்க அமைப்பின் தொடர் துயரத்தின் பிரதிநிதியாகப் பெண் இருப்பதையும், அதில் கிடைத்த ஆதரவை இழந்து போவதைப் பெண்ணால் தாங்கிக் கொள்ளமுடியாத சோகத்தையும் சொல்லித் தனது இழப்பை வெளிப்படுத்துகின்றாள். இந்த நிலையில் தனது சொந்தத் தாயின் உயிரற்ற உடலை எடுத்துச் செல்லும் போது கடைசிமுறையாகவும், சொந்த ஆணாதிக்கத் துயரத்தையும், தாயின் அரவணைப்பையும் சொல்லிப் புலம்புவது மிகுந்தச் சோகத்தை வெளிப்படுத்தக் கூடியவை.
''பச்சபுள்ளேகாரி - என்ன பெத்த அம்மா
பலசோலி காரியம்மா
பாடைநிறுத்தம்மா - என்
பாதரவைச் சொல்லியழ
தேரை நிறுத்தம்மா - உன்
திருமுகத்தை நான் பார்க்க"36
— என்று பெண்ணின் இழிநிலையில் இருந்து இவை வெடித்துக் கிளம்புகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் உரிமையாக இருப்பவை இழக்கின்ற போது, அவை சோகத்தை ஆணாதிக்க வழியில் பன்மடங்கு ஆக்குபவையாக இருப்பதைப் பெண் தனது சொந்தத் துயரத்திற்கு ஊடாக வெளிப்படுத்த தயங்கவில்லை. இந்த வகையில் கணவனை இழக்கும் போது ஏற்படுகின்றது.
''நீலக்கல்லு வாசப்படி
நின்னழகுமண்டபமாம்
நின்னழுது வூட்டவந்தா
நீசத்தண்ணிபஞ்சமாச்சே"36
— என்று பெண் சொல்லிப் புலம்பும் போது, பொருளாதார ரீதியாக மற்றொரு ஆணுக்கு உரிமையற்று, அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியதை எண்ணி வெம்பி வெடிக்கின்றாள். கணவன் இருந்த காலத்தில் கணவனின் அடிமையாக இருந்த பெண்ணின் திருமண உரிமை சார்ந்த அதிகாரம், கணவன் இறப்புடன் முடிவுக்கு வருவதுடன், கணவன் சார்ந்த சகோதரனின் தயவைச் சார்ந்து நிற்க வேண்டிய புதிய நிலைக்குத் தரம் தாழ்வதை, கணவனின் இறப்பு பிரகடனம் செய்கின்றது. அத்துடன் அப்பெண் அணிந்திருந்த சகலவிதமான சமுதாய இயல்பான அணிகலன்களையும்; இழந்து போகின்றாள்;. கணவனின் பிணத்தின் முன்பே மனைவியைச் சுமங்கலியாக்கி, உடனே அதை நாசப்படுத்துவதை (அமங்கலியாக்கி) அந்த மரணத்தில் கூட ஆணாதிக்கம் இரசித்து வக்கரித்துச் செய்வதன் மூலம் பெண்ணின் விதவைக் கோலத்தைப் பண்பாடாக்கிச் சிலுவையில் ஆணி அறைந்து சமூக வடிவமாக்குகின்றனர். அப்போதே அதை அப்பெண் கூறிப் புலம்புவதன் மூலம், தனது இன்பத் துன்பங்கள் எப்படி மற்றவனின் தயவில் அழிகின்றது என்பதை ஒப்பாரி மூலம் கூறத் தயங்கவில்லை.
''ஆரங்கிரவுக்கையும்
ஆனைமுகம் தங்கக்காப்பு
அதட்டிக் கட்டயிலே - என்
அங்கம் ஒடுங்கிப்போகுதே
சேலய அவுறுங்கடி - எனக்கு
சித்தாடயத் தாருங்கடி - என்
பட்டை அவறுங்கடி
பழந்துணியைத் தாருங்கடி"36
— இதன் மூலம் பெண்ணின் பாலியல் நடத்தைகள் தீர்மானகரமாகத் தடைசெய்யப்படுகின்றது. ஆணாதிக்க வாரிசுரிமையைப் பெத்துப்போட்ட பெண், அதைத்தாண்டி கணவனின் பின் கூட வாழமுடியாத இருட்டு வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்படுகின்றாள்;. சாதாரண வாழ்க்கையில் திருமணம் மற்றும் சுமங்கலி பெண்ணின் பாலியலை அழகுபடுத்துவதன் மூலம், ஆணாதிக்கம் அதை நோக்கிக் கவரப்படுகின்றது. இந்தச் சாதாரண நடைமுறையைத் தம்மையறியாமல் பெண்கள் செய்விக்கப்படும் போது, இதை இதற்காகவே என்பதை எடுத்துக் கூறுவது அபத்தமாக இருக்கலாம்;. ஆனால் கணவன் இறக்கும் போது மனைவிக்கு இது மறுக்கப்படுவதன் நோக்கம் திட்டவட்டமாகத் தெளிவானது.
இங்கு பெண்ணின் சகலவிதமான இயற்கை மற்றும் செயற்கை அழகு அழிக்கப்படுவதன் மூலம், சாதாரணப் பாலியல் நாட்டம் தடுக்கப்படுகின்றது. பெண்ணின் இயற்கை உணர்வுகள் தனிச்சொத்துரிமை இரத்தத் தந்தையுரிமை வாரிசுகளுக்காக நலமடிக்கப்படுகின்றனர். இதனால் சமுதாயத்தில் விதவைக் கோலம் பூணுகின்ற புதிய பெண் உருவாக்கப்படுகின்றாள். இது ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாகும். இதனால் இந்தப் பெண் சமுதாய பங்களிப்பில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப் படுகின்றாள். முதலில் ஆணாதிக்கச் சமுதாயத்தில் அடிமையாகத் தனிமைப்பட்டுக் கிடந்த பெண்ணை, விதவையாக்கியதன் மூலம் தனிமைக்குள் ஒடுங்கிக் கிடக்கச் சபிக்கப்படுகின்றாள். இதையும் அப்பெண் தனது ஒப்பாரியில் சொல்லிப் புலம்பத் தயங்கவில்லை.
''வீதிவழிவந்தால் விலகிவர வேண்டுமென்பார்
வீதிவந்தால் வெட்கமல்லோ வீட்டிலிருந்தால் துக்கமல்லோ
வாசல்வழிவந்தால் மறைந்துவர வேண்டுமென்பார்
வாசல் வந்தால் வெட்கமல்லோ மறைந்திருந்தால் துக்கமல்லோ"36
பெண் இப்படி சொல்லி ஒப்பாரி பாடும் போது, ஆணாதிக்கச் சமூகம் இதைச் செய்ய கொக்கரித்து நிற்கின்றது. இதைக் கண்டு இரங்க தனிச் சொத்துரிமை அமைப்பு நொறுங்க வேண்டியதன் அடிப்படையான உள்ளடக்கம் தொங்கிக் கிடக்கின்றது. பெண் சமுதாயத்தின் முன் வாழும் தகுதி இழந்து ஒடுங்கி, பொந்தில் ஒழிந்து வாழ ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்பு நிர்ப்பந்திக்கின்றது. அந்தளவுக்கு விதவை அலங்கோலமான வகையில் இழிவாக்கப்பட்டுச் சித்தரிக்கப்படுகின்றாள். அதேநேரம் இந்த ஒப்பாரியின் போதே தனது கணவன் தன்னை ஒதுக்கி வேறு பெண்களுடன் வாழ்ந்ததைச் சொல்லிப் புலம்பத் தயங்கவில்லை. ஒப்பாரியின் போதே தனது வாழ்வின் துயரங்கள் எல்லாவற்றையும் சொல்லிப் புலம்புவதன் மூலம் சமூகத்தின் முன் கொட்டிவிடுகின்றாள்.
''வெள்ளிக் குடைபிடிச்சு
விளையாடும் நாளையில
விசனம் தெரியல்லை
வெக்காளம் தோணுலியே - இந்த
வேசிமுள்ளு ராசருக்கு
விரல் கொடுத்த நாள்முதல
விசனம் தெரியுதுங்க
வெக்காளம் தோணுதுங்க"36
ஆணின் பலதார மணத்தின் விளைவால், ஒருதார வாழ்வில் வாழும் பெண் தனது துயரத்தை, இழப்பை எண்ணி ஒப்பாரி வைக்கின்றாள். ஆண்கள் பலதாரமணத்தில் இருக்கும் வரை, ஒருதாரமணத்தில் வாழும் பெண் புறக்கணிக்கப்படுவது இயல்பானதாகும். தமது பாலியல் தேவைகள் பலதாரமணவடிவில் பூர்த்தியாவதால், மனைவியின் பாலியல் தேவைகள் மறுக்கப்படுகின்றது. இது ஒருதாரமணத்தின் சிதைவை உள்ள+ராகவே வேகப்படுத்துகின்றது. சில சமுதாயத்தில் குடும்பப் புகழை எடுத்துக் காட்ட ஆணின் பலதாரமணத்தைப் புகழும் வழக்கும் இருக்கின்றது. இது நிலப்பிரபுத்துவத் தனிச் சொத்துரிமை அமைப்பின் வீங்கிப் போன அதிகாரத்தைப் பறைசாற்றும் ஆணாதிக்கத்தின் கெக்கலிப்பைப் புகழும் பண்பாடாகின்றது. இது மறு தளத்தில் பெண் மீது கௌரவமாக ஏற்றுப் புகழத் திணிக்கின்றது. இதற்கு மாற்றாக அடிமட்ட உழைக்கும் பெண்கள் மற்றும் கீழ்ச் சாதிப் பெண்கள், சொந்தக் கணவனின் கொடுமையைச் சொல்லி ஒப்பாரியில் தூற்றுவது நிகழ்கின்றது.
''கல்லுமேலே கல்லடுக்கிக்
கல்லுமேலே நின்னழுதா
எங்கப்பன் ஊட்டுக்
கரும்புத்தோட்டம் போய்ப்பாயும்
ஆணாகப்பிறந்திருந்தா
அம்பெடுப்பேன் குண்டெடுப்பென்
பெண்ணாகப் பிறந்தகுறை - தான்
யாரிடம் போயழுவேன்" 36
— என்று தனது கடின உழைப்பு மற்றும் கணவனின் கொடுமையைச் சொல்லி, ஆணாகப் பிறந்திருந்தால் கணவனைக் கொன்றிருப்பேன் என்று கூறுமளவுக்குப் பெண்ணின் உழைப்பாற்றல் பெண்ணுக்குத் தைரியத்தைக் கொடுக்கின்றது. உழைப்பு பெண்ணுக்கு வழங்கிய எதிர்க்கும் ஆற்றல் அதிகாரம் இன்மையால் சோர்ந்து போகின்றது. பெண்ணாக இருப்பதால் அம்பெடுக்கவோ, குண்டு எடுக்கவோ முடியவில்லை என்பது தான் அதன் உள்ளடக்கம். அதிகாரம் ஆணிடம் இருப்பதை நாட்டுப்புற இலக்கியத்தைத் தாண்டி வேறு எந்த இலக்கியமும் தெளிவாகக் கொண்டு வந்துவிடவில்லை. கொடுமையைச் சந்திக்கும் நாட்டுப்புறப் பெண், தனது உழைப்பு ஆற்றலால் அதை எதிர்த்து நிற்கின்றாள். அதை முடிவுகட்ட தன்னிடம் அதிகாரம் இல்லை என்பதைக் கூறுவதன் மூலம், முதலாளித்துவப் பெண்ணியல்வாதிகளின் புரட்டுக்களை, தன்னியல்பான நடைமுறை சார்ந்து அனுபவ ரீதியாக நாட்டுப்புற ஒப்பாரி அம்பலப்படுத்துகின்றது.
உழைப்பு, அதிகாரம் இரண்டும் இன்றி ஆணாதிக்கத்தை ஒழிக்கமுடியாது என்பதை ஒப்பாரி வெளிப்படுத்தும் போது, இந்த இயற்கையான உள்ளுணர்வுடன் பாட்டாளி வர்க்கம் ஒன்றி நிற்பதன் அடிப்படைதான், மார்க்சியத்தின் நீடித்த வெற்றியாகும். சமுதாயத்தின் உள்ளடக்கங்களைத் தனது சொந்தச் சோக வாழ்வின் ஊடாக அனுபவரீதியாகத் தன்னியல்பாக வெளிப்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்களில், நடைமுறைகள் சரியான முறையில் உட்கிரகிப்பதின் மூலம், அதை அரசியல்மயமாக்குவதன் மூலம் மக்கள் ஆயுதபாணியாக்குவது இயல்பான இயற்கையாக அமையும். தொடர்ந்து பெண்ணின் ஒப்பாரிப் பாடல்களைப் பார்ப்போம்.
''ஆரணம் மைதானம்
அகலக்கரை முந்தானை
அண்ணனில்லாத் தங்கைக்கு
ஆடிவந்தா என்னாகும்" 36
— என்று அண்ணன் இறக்கின்ற போது தனக்கு அண்ணன் செய்த உதவிகளை எண்ணி, அதை இனி யார் செய்யப் போகின்றனர்? என்பதைச் சொல்லிப் புலம்புகின்றாள்;. ஆணாதிக்க அமைப்பில் பெண் மீது திணித்த சீதனக் கொடுமையில், அண்ணன் தனக்காகக் கடினமாக உழைத்து வாழ்ந்ததைச் சொல்லி தங்கை புலம்பும் போது, பெண்ணின் மனிதாபிமானமான கண்ணோட்டம் ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானதாக வெடித்துக் கிளம்புகின்றது. பெண் சொந்தச் சகோதரனை இழக்கின்ற போது, ஆணாதிக்க அமைப்பினால் ஏற்படும் பல்வேறு துயரங்களைச் சொல்லிப் புலம்பும் எதார்த்தத்தைப் பெண், ஒப்பாரி மூலம் பிரதிபலிக்கின்றாள்.
''நான் எட்டுரூபா செப்புக்குடம்
எல்லையிலே வெள்ளிக்குடம் - இன்னைக்கு
எழுதுகிற தம்பி இருந்தா - ஒரு
எதிராளியத் தேடமாட்டேன்
ஏங்கி அழுவமாட்டேன்
நான் பத்துரூபா செப்புக்குடம்
பாதையிலே வெள்ளிக்குடம்
படிக்கிற தம்பியிருந்தா - ஒரு
பங்காளியத் தேடமாட்டேன் - இன்னைக்கு
படிக்கிற தம்பி கண்மறைய - ஒரு
பங்காளியை தேடுறம்மா - இந்த
பாவிகுறை தீரவம்மா"36
ஒரு பெண் ஆணாதிக்கச் சமுதாயப் பாதுகாப்பைப் பெற்று வாழ வேண்டியவள் என்று ஆணாதிக்க அமைப்பு பெண்ணுக்குக் கூறிக் கட்டுப்படுத்தும் போது, அங்கு பெண் சுதந்திரமற்ற அடிமையாக இருக்கின்றாள் என்பது தௌ;ளத் தெளிவானது. மறுதளத்தில் ஆணாதிக்க அமைப்பின் ஆணாதிக்கக் கொடூரங்களை எதிர் கொண்டு, பெண் ஆணின் உதவி கோருவது என்ற இரு எதிர் நிலைக் கண்ணோட்டம் நீடிக்கின்றது. இரண்டும் பெண்ணிடம் இருந்தே எதிர்ப்பும், ஆதரவும் எழுகின்றது. முதலாளித்துவப் பெண்ணியம் பெண்ணின் பாதுகாப்பை இந்த ஆணாதிக்க அமைப்பில் ஆண் சார்ந்து நிற்பதை, கோருவதைக் கொச்சைப்படுத்துகின்றது. ஆணாதிக்க அமைப்பில் வாழ்ந்தபடி, பெண் பாதுகாப்பை வேறிடத்தில் பெற்றுவிடமுடியாது.
ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பாலியலைச் சூறையாடுவதும், கொடுமைப்படுத்துவதும் இயல்பான எதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் பெண்ணின் பாதுகாப்பு பெண் தனது இரத்த உறவினூடாக நாடுவது தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதைக் கொச்சைப்படுத்துவது பெண்ணியமல்ல. ஆனால் பெண்ணின் பாதுகாப்பு ஆணுக்கு உட்பட்டது என்று இருக்கும் ஆணாதிக்க அடிமைத்தனத்தை இதில் இருந்து வேறுபடுத்தி பார்ப்பது அவசியமாகும். மேல் உள்ள ஒப்பாரியில் ஒரு பெண் தனது பாதுகாப்பில் தனது சகோதரனின் பங்கை மிகவும் துல்லியமாகக் கொண்டு வருகின்றாள். தம்பி இறக்கின்ற போது இந்த ஆணாதிக்க அமைப்பில், தான் விரும்பாத ஓர் எதிராளியின் தயவைச் சார்ந்து பங்காளியாகி வாழ வேண்டிய துயரத்தைச் சொல்லி புலம்பும் போது, ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றாள். இங்கு தான் பெண்ணின் கற்புரிமை ஆணாதிக்கக் கற்பியலில் இருந்து வேறுபடுகின்றது. இவை ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாக இருக்கின்றதால், அந்தச் சமுதாயத்தின் நீடிப்புவரை இவையிரண்டும் அக்கம்பக்கமாக எல்லாத்துறையிலும் நீடிக்கின்றது.
இதை மார்க்சியம் மிகவும் துல்லியமாக வேறு பிரித்தறிகின்றது. ஆனால் மற்ற பெண்ணியக் கோட்பாடுகள் பெண் சார்ந்து இதை வேறு பிரிப்பதை மறுத்து, ஆணாதிக்கம் சார்ந்து திட்டவட்டமாக உலகமயமாதலின் பண்புக்கு இசைவாக இருக்கின்றனர். ஆணாதிக்க விளைவுகளை எதிர்த்து பாதுகாப்பைக் கோரும் பெண்ணையும், ஆணாதிக்க விளைவுகளைத் தனதாக்கி அதை உரிமையாகக் கோரும் பெண்ணையும் வேறு பிரித்தறியாத வரை பெண்ணியத்தின் ஆணாதிக்க இயல்புகளையும் வேறு பிரித்தறிய முடியாது. நாட்டுப்புறப் பெண்ணின் பாடல்கள், ஒப்பாரிகள் இந்த இரண்டு கூறுகளையும் நடைமுறை சார்ந்து, துல்லியமாக வேறுபட்ட வகையில் அணுகி வெளிப்படுத்துகின்றது.
கணவனின் தாய் இறக்கின்ற போது, அதாவது மாமியார் இறக்கின்ற போது பெண் தான் அனுபவித்தத் துன்பத்தைத் தனது வசையுடன் கூடிய கேலியும் நையாண்டியுமாகத் தனது ஒப்பாரியில் வெளிப்படுத்துகின்றாள். அதைக் கீழ்க்கண்ட பாடல் நிறுவுகின்றது.
''உச்சிக்கே எண்ணெய் அறியேன்
உளுந்துவடை தானறியேன்
ஊரார் சிரிப்பாரென்று
ஒப்புக்கு அழுகின்றேன்."36
''என்னத்தை பொணத்தை
அப்பாகூடப்பிறந்த
கப்பல் அரிசி அத்தை
நீ செத்தால் நிசமல்லே
தெருக்கோடி கடந்தால்தானே நிசமாகும்
அத்தை செத்தாள் பொத்தையிலே - நான்
அடித்து விழுந்தேன் மெத்தையிலே"36
ஆணாதிக்க அமைப்பில் ஆணுக்கு அடிமைப்பட்டுப் பெண் சொத்துரிமையிழந்து நசுங்கி வாழும் நிலையில், கணவனின் தாய் மூலம் மேலும் துன்பமுற்று நசிந்து கிடக்கும் பெண், மாமியாரின் இறப்பை இப்படித்தான் குதூகலித்து வரவேற்பது நிகழ்கின்றது. மாமியாரின் அதிகாரத்தில் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாது, உழுந்து வடை நாளாந்த உணவில் இருந்தும் கூட கிடைக்காது. அந்த நிலையில் மாமியார் இறந்தது என்பது நடிப்பாகக் கூட இருக்கும் என்பதைச் சொல்லித்தான் புலம்புகின்றாள். புலம்பும் போது ஊரார் சிரிப்பார் என்ற காரணத்தால் ஒப்புக்கு மாரடிக்கின்றாள். ஆனால் அதையும் சொல்லி அழாவிட்டால் உண்மையாகிப் போய்விடுமோ என்று அஞ்சிவிடுகின்றாள். மாமியாரின் மீதான குற்றச்சாட்டாக, அதன் வெளிப்பாடாக இருந்த போதும், மாமியார் ஆணாதிக்க அமைப்பின் தௌ;ளத் தெளிவான பிரதிநிதிதான்.
மாமியார் தனிச்சொத்துரிமை ஆணாதிக்க அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு பொம்மைப் பாத்திரம்தான்; நடைமுறை ரீதியாக எதார்த்தவாதியாக இருக்கும் பெண் நேரடியாக மாமியாரின் இறப்பின் போது, நேரடியாகக் கொடுமை ஒழிவதைக் கண்டு பூரித்துப் போகின்றாள்;. ஆனால் மாமியார் இறந்தது கண்டு ப+ரித்த அதே பெண் மீளவும் தனது மகனின் மனைவிக்கு மாமியாராக வருவது என்பது ஆணாதிக்க அமைப்பின் விளைவாகின்றது. ஆணைச் சார்ந்து பெண் இருப்பதால் பொருளாதார ரீதியாக மாமியார், மருமகள் சொத்துரிமை சார்ந்து போட்டியிடுவதும், அடக்குவதும் தனிச்சொத்துரிமையின் உள்ளடக்கமாகின்றது. இந்தவகையில் பெண்ணின் மீதான பல்வேறு கொடுமைக்கு ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்பு காரணமாகும். பெண் தனது பலத்தைப் பிரகடனம் செய்யும் விதம் உயர்ந்த சமூகக் கண்ணோட்டம் கொண்டவை.
''நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்"41
பெண் தனது பலத்தை, போராடும் ஆற்றலை எச்சரிக்கையாக விடும்போது அதன் பலம், சமூகத்தின் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாத தன்மை கொண்டவை. எந்த நாகரிகப் பெண்ணியமும் இயற்கையான எதார்த்தப் பெண்ணியத்தின் வீச்சை அதன் உள்ளடக்கத்தைப் பெறமுடியாதவகையில், பெண்ணின் நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் பொருள் நிறைந்தவை. இவை அரசியல் ரீதியாக ஒழுங்கமைப்பதைப் பாட்டாளி வர்க்கம் செய்யும் போது, இயற்கை சார்ந்த அந்தப் பெண்ணியமும், இயற்கை சார்ந்த பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்து மாபெரும் சக்தியாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்த வகையில் நாம் போராடும் போது நாட்டுப்புறவியலில் உள்ள பெண்களின் பல்வேறு பாடல்களை இனம் கண்டு எடுத்து, அவைகளை அரசியல் மயமாக்க வேண்டிய நிலையில் உள்ளோம்;.