பொழுது போக்கு ஊடாகப் பண்பாட்டுக் கலாச்சாரத் தாக்குதல் சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் இன்று வேகமான தாக்குதலை நடத்துகின்றது. இது உலகளாவிய ஒரு பொழுது போக்கு பண்பாடு, கலாச்சாரம் என்ற எல்லையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் எகிறிக் குதித்தோடும் போது, கண்மண் தெரியாத சீரழிவைச் சமுதாயம் முன் எப்போதையும் விட சந்திப்பது எதார்த்தமாகியுள்ளது. இதில் பெண்ணின் நிலை என்பது நுகர்வுப் பண்பாட்டில் கீழ்நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுச் சீரழிக்கப்படுகின்றாள்.
அண்மையில், ஜெர்மனியில் செய்த ஆய்வில் 30 இலட்சம் பேர் தமது வாசிக்கும் ஆற்றலையும், எழுதும் ஆற்றலையும் இழந்துபோனார்கள். இது மேலும் அதிகரித்துச் செல்லுகின்றது. தொலைக்காட்சி முதல் அனைத்து மின்னணுவியல் உபகரணங்கள் சமூக வடிவமாகி, மனிதனை இயந்திரப் பார்வையாளனாக மாற்றி, அவனின் சுயஆற்றலை அழிப்பதனால் அடிப்படையான சிந்தனை, வாசிப்பு, எழுத்தாற்றலை இழந்து போகின்றான். உழைப்பு ஆற்றலை இயந்திரத்துக்கு அடிமையாக்கிய மனிதன், தனது சிந்தனைத் திறனையும் இழக்கின்றான்.
இத்தாலியில் செய்த ஆய்வின்படி 80 சதவீதமானோர் புத்தகங்களைப் படிப்பது அவசியமற்ற முட்டாள்த்தனமானது என்று கருதுகின்றனர். புத்தகங்கள் உணர்ச்சியற்றவை என்றும், மனித உறவுகளை ஏற்படுத்த தகுதியற்றது என்றும் கருதுகின்றனர். இது வயது போனவர்களின் வேலையென்றும், நேரத்தை வீணாக்குவது என்றும் கருதி தொலைக்காட்சி, திரைப்படம் (ஊiநெஅய) போன்ற ஊடகங்களையே சார்ந்து காலத்தைக் கழிக்கின்றனர் என்று ரிபூப்ளிகா என்ற பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபத்தான சமூகக் கண்ணோட்டம் மனித வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றது. அறிவியல் பூர்வமான சமூகத் தேவையை வாசிப்பு ஏற்படுத்தும். ஆனால் மனித ஆற்றலின் எழுதுதல், வாசித்தல், சிந்தித்தல், வெளிப்படுத்தல் ஆகிய ஆற்றலை இழிந்து, இயந்திர மனிதனாக மாறி உணர்ச்சிகளை இழந்து போகும் ஜடமாக மாற்றியமைக்கின்றது உலகமயமாதல் பண்பாடு.
இந்தச் சீரழிவு வேகத்தில், ''வாரந்தோறும் 10 கோடி மக்கள் டிஸ்னி திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். 80 கோடி மக்கள் டிஸ்னி புத்தங்களையும், சஞ்சிகைகளையும் வாசிக்கிறார்கள். 5 கோடி மக்கள் டிஸ்னி இசைத் தட்டுக்கள் அல்லது நடன இசையைக் கேட்கிறார்கள். 15 கோடி மக்கள் டிஸ்னி காமிக் வெளியீடுகளைப் கண்டு களிக்கிறார்கள்."30 இது ஒரு பன்னாட்டு வால்ட் டிஸ்னி நிறுவனம், கி.பி. 1985-இல், வெளியிட்டுக் கணக்கே இப்படி எனின் உலகளாவிய ரீதியில் கற்பனைக்கு எட்டமுடியாத வகையில் இவை அழுக்காக மனிதனை அப்பியுள்ளதை இது நிறுவுகின்றது. மெக்சிக்கோ பத்திரிக்கை எல் யூனிவர்சல் ஆய்வு ஒன்றின்படி 6 வயது முதல் 12 வயது குழந்தைகள் வாரம் ஒன்றுக்குத் தொலைக்காட்சி பார்க்கும் நேரம் 38 மணி நேரமாக இருக்க, பாடசாலை வகுப்பறையில் 23 மணிநேரங்களையே செலவு செய்வதாகக் கண்டறிந்துள்ளது.
இத்தாலியில் 21,000 குடும்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் இருந்து பத்து வயதுக்குட்பட்ட 40 லட்சம் குழந்தைகள் தொலைக்காட்சியின் முன் 2.5 மணி நேரம் மெய்மறந்து இருப்பதாகவும், ஆறு முதல் எட்டு மாதக் குழந்தைகளும் இந்தப் பழக்கத்துக்குள்ளாகியிருப்பதை அம்பலப்படுத்துகின்றது.31 இந்த வகையில் மேலும் கி.பி. 1970-இல், அமெரிக்கச் சிறுவர் சிறுமிகள் தங்களுடைய 14 வயதை அடைவதற்குள் 11,000 கொலைகளைத் திரைப்படத்தில் பார்க்கின்றனர். பிரிட்டனில் ஒரு மணிநேரத்தில் நான்கு வன்முறை காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். நடுஇரவில் தொலைக்காட்சியில் மணிக்கு 76 பாலுறவு (ளுநஒ) காட்சிகளைப் பார்க்கின்றனர். இந்தப் பண்பாட்டு விளைவுதான் மனிதனின் பொழுது போக்கு பண்பாடாக மாற்றம் காண்கின்றது. இதுவே பின்னால் சமுதாயப் பண்பாட்டுக் கலாச்சாரமாக, சுதந்திரமாக, நவீனப் பாலியலாக உருவாகின்றது. கற்பனை விஞ்ஞானக் கதைகள் எதார்த்தக் கண்டுபிடிப்புகளாக மாறுவதுபோல், பாலியல் வக்கிரங்கள் எதார்த்த வாழ்வின் ஆதாரமாக மாறுகின்றது. ஒவ்வொரு நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் இயற்கையைச் சிதைத்து உபரியைத் திரட்டுவது போல், ஒவ்வொரு பாலியல் வக்கிரமும் சமூக விபச்சாரத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு வாரத்துக்கு 27 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கின்ற குழந்தைகளிடையே அமெரிக்க உளவியல் அமைப்பு செய்த ஆய்வில், மூன்று முதல் 12 வயதிற்கிடையில் 8,000 கொலைகளைப் பார்ப்பதாகவும், ஒரு இலட்சம் வன்முறைகளைக் காண்பதாகவும் அறிக்கை கூறுகின்றது. இவர்கள் வளர்கின்றபோது, சமூக வன்முறை மற்றும் வீட்டு வன்முறையின் பொதுப்பண்பாக மாறி அது பெண்கள் மீதானதாகவும் பரிணாமிக்கின்றது. மற்றோர் ஆய்வை 10 முதல் 16 வயதுடைய 750 குழந்தைகளிடம் செய்த போது, பத்தில் ஆறு பேர் மிக இளம்வயதில் பாலியல் உறவு கொள்ள தொலைக்காட்சி தூண்டியதாகக் கூறியுள்ளனர். அதாவது தொலைக்காட்சிகளின் ஊடாகச் செல்வாக்கு செலுத்திப் பாலியல், பாலினம் பற்றிய வக்கிரத்தை இளம் குழந்தைகளுக்கு ஊட்டுவதன் மூலம், பண்பாட்டு ரீதியாக ஆணாதிக்கம் வக்கிரம் அடைகின்றது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவல் ஒன்றில், தொலைக்காட்சி வன்முறைக் காட்சிகளில், 73 சதவீதம் தனிநபர் வன்முறைகளை வெற்றிகரமான ஒரு நடத்தையாகக் காட்சிப்படுத்துகின்றது. இதேபோல் பிரிட்டீஸ் நிகழ்ச்சிகள் அதிகமான பாலியல் காட்சியை உள்ளடக்கி உள்ளதுடன், 41 சதவீதமான பெண்கள் இதை ஏற்றுக் கொள்கின்றனர். 75 சதவீதமான இளைஞர்கள் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.31
இங்கு பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவது, நிர்வாணமாக மாற்றுவது, அரைகுறை உடையில் காட்சிப்படுத்துவது, பெண்ணின் உறுப்புகளை முதன்மைப்படுத்துவது, காதலைக் கொச்சையாக்குவது, பாலியலை பண்டமாக்குவது, விளம்பரத்தில் பெண்ணின் பாலியல் உறுப்பைப் பொருளுக்கு ஒப்பீடு ஆக்குவது, பெண்ணின் மேல் ஆவலைத் தூண்டுவது, அழகை முதன்மைப் படுத்துவது, அன்பைப் பண்டமாற்றத்தில் குறுக்குவது, பாலியலை டிஸ்கோ வழியில் வக்கிரப்படுத்துவது.... என்று எல்லை இல்லாத வகையில் பெண் நுகர்வுச் சந்தையில் பொருளாக்கப்பட்டு;, ஆணாதிக்க நுகர்வால் சிதைக்கப்பட்டு இரசிக்கப்படுகின்றாள். இந்த வகையில்தான் உலகமயமாதல் பெண்ணை அடையாளப்படுத்துகின்றது. இந்த வகையில்தான் உலகச்சந்தை விபச்சார தளத்தில் காலை அகற்றுகின்றது. இங்கு பெண் அந்தச் சந்தையின் கவர்ச்சி காட்டும் மூலதனமாகும்;. இதை எதிர்த்துப் போராடாத பெண்ணியம் ஆணாதிக்கமாகும்.
பொதுவாகச் சிறு பத்திரிக்கைகள் முதல் பெரிய பத்திரிக்கைகள் வரை தொலைக்காட்சி, திரைப்படம், நடனம், சிறு நாவல் முதல் பெரிய நாவல்கள் மர்மக் கதைகள், கவிதைகள், சிறு உரைகள், ஓவியங்கள், பாடல்கள், பெண்ணிய எழுத்துகள், பாலியல் நூல்கள் என எங்கும், எதிலும் பெண் பாலியல் பண்டமாக விவரிக்கப்படுவதுடன், ஒரு பாலியல் பொருளாக வருணிக்கப்படுகின்றாள். அதாவது பெண்ணின் மனிதத்தன்மை பாலியல் அங்கமாகவும் இதன் ஊடாக இரசிக்க, நுகர, வக்கிரத்தை பிரதிபலிக்க, வன்முறைக்கு உள்ளாகக் கூடி நுகரவும், கழிந்து விடக் கூடிய ஒரு பொருள் என்பதைத் தாண்டி மனிதத்துவத்தை மறுத்து உலகின் எல்லா இடமும் இதுவாகிவிட்டது. இதை கேள்வி கேட்காத வேரறுக்காத போராட்டம் பெண்ணை விடுவிப்பதில்லை.
மேற்கில் ஜனரஞ்சகமாக எழுதும் கெரார்டு டி வில்லியர்ஸ் இது பற்றி எப்படி நியாயப்படுத்துகின்றார் எனப் பார்ப்போம். ''வாசகனை மகிழ்விப்பதும், அவன் சிறிது நேரம் ஒரு கனவு உலகில் சஞ்சரிக்க உதவுவதுமே எனது நோக்கம். இதைத் தவிர நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. இதில் நான் பெரும் வெற்றி பெற்றுள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஏராளமாகச் சம்பாதிக்கிறேன். இது என் வெற்றியின் முதல் அறிகுறி. இரசிகன் எதை விரும்புகின்றானோ அதையே நான் அவனுக்கு வழங்குகிறேன். மக்கள் ஒரு கனவின் பின்னால் ஓடுகிறார்கள். போதை மருந்துப் பழக்கம் என்றால் என்ன என்று நீங்கள் என்றேனும் யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? போதைப் பொருளுக்கு அடிமையானவனும் ஒரு கனவை நாடியே செல்கிறான். சலிப்பும், விரோதமும், குரோதமும் நிறைந்த சுற்றுச் சூழலிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறான் என்று கருதுகிறேன். தொழில் வகையில் நான் ஒரு சேர்மானக் குறிப்பை வைத்துள்ளேள். சமையலில் பயன்படுத்துகின்றோமே அத்தகைய குறிப்பு அது. வெற்றிக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. இந்தக் குறிப்பில் முதல் கலவைப் பொருள் வன்முறை. இரண்டாவது கலவைப் பொருள் காமவெறியிலிருந்து ஒரு சிட்டிகை. மூன்றாவது கலவைப் பொருள் சிற்றின்ப உலகிலிருந்து சில நறுமணச் சாமான்கள். இந்தச் சேர்மானங்களிலிருந்து உருவாகும் தயாரிப்பைத்தான் ஜனங்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்."30
மக்களைப் போதையில், கனவில் முடமாக்குவதன் மூலம் மூலதனம் தன்னைத்தான் மெச்சுகின்றதன் வெளிப்பாடுதான் மேலுள்ளது. மக்கள் மந்தைக் கூட்டமாக இருக்க சில மேய்ப்பாளர்கள் உலகத்தை ஆளவும், நுகரவும் கொடுக்கும் போதையுடன் கூடிய இலக்கியக் கழிசடைகளையே வெற்றியின் பிரகடனமாக்குகின்றனர். மக்கள் இப்படி இருக்கும் வரை இவைதான் உலகின் ஜனநாயகமாகவும், பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் நீடிப்பது தவிர்க்க முடியாதது. உலகமயமாதல் தனது ஆதிக்கப் பொருளாதாரச் சூறையாடலைத் தீவிரமாக்க சகல பண்பாட்டுக் கலாச்சாரப் பொழுது போக்கு அம்சங்களும் இந்தவகையில் சீரழிவுக்குள் இட்டுச் சென்றுதான், மனித எதிர்ப்புகளை முடமாக்கி முடக்க முடிகின்றது. தம்மை எழுத்தாளர் என்று வேஷம் போட்டு ஆடும் பல எழுத்தாளர்கள் எழுத்து சுதந்திரத்தின் பின் ஆற்றிவரும் கேவலங்கள், மனிதனைக் கீழ்நிலை பாத்திரத்துக்குத் தரம் தாழ்த்தி அதில் குளிர் காய்வதே ஆகும். மறுபுறம் இந்தமாதிரி எழுதுபவர்களைப் பாதுகாத்தும், எழுத்தாளர்களை வர்க்க எல்லைக்குள் பார்க்க மறுத்தும், அவர்கள் மீது பாட்டாளிவர்க்கம் சர்வாதிகாரத்தைக் கையாள்வதை எதிர்த்தும், தம்மையும் தமது வர்க்கத்தையும் சீரழிவுக்குப் பின்னால் குளிர் காய்ந்தபடி முண்டு கொடுக்கின்றனர்.
பெண்ணும், பெண்ணின் பாலியல் உறுப்பும், அற்பக் காமவெறியும் இல்லை என்றால் 99.99 சதவீதமான மக்கள் தொடர்பு சாதனங்கள் உயிர் வாழ முடியாது. தம்மை இந்தச் சமுதாயத்தின் முன்னணி எழுத்தாளர், முன்னணி கலைஞர்கள் என்றுகூறிப் பிழைக்கவும் முடியாது. அந்தளவுக்குப் பெண்ணைப் பற்றிய வக்கிர (இது சுதந்திரத்தின் எழுத்தாகவும், இந்தச் சமுதாயத்தின் ஆதாரமாகவும் உள்ளது.) எழுத்தாக, அதில் ஆணாதிக்கக் கொப்பளங்களில்தான் அசிங்கப்பட்டு உள்ளது.
மனிதனுக்கு இடையில் வன்முறையும், காமவெறியும், வக்கிர இன்பமும் தான் இந்தச் சமுதாயத்தில் எழுத்தின் சுதந்திரம் ஆகும். மனிதனுக்கு இடையிலான வர்க்க வன்முறையை மறுத்து இட்டுக்கட்டப்பட்டுக் காட்டப்படும் வன்முறைகள், அதை நியாயப்படுத்த கவர்ச்சியான பெண், பெண்ணின் உறுப்பு, பெண்ணின் புணர்ச்சி எல்லாம் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையைப் பாதுகாக்க, வளர்த்து எடுக்க, பறித்தெடுக்க, அடக்க எனப் பல விடயங்கள் உலகமயமாதலின் மூலதன வெற்றிக்காக அரங்கேற்றப்படுகின்றது. கதாநாயகர்கள் - வில்லன் உறவு என்பது எப்போதும் சுரண்டும் வர்க்கக் கதாநாயகனின் மனிதாபிமானம் மீதும், அவனின் சட்டப் பாதுகாப்பின் மீதும், அதன் நீதியின் மீதும் கட்டியமைக்கப்படுகின்றது. இங்கு நீதி, சட்டம், மனிதாபிமானம் போன்றன மூலதன ஆதிக்க ஆணாதிக்கக் கனவுகளின் பின்னால்; சமுதாயம் சுண்டியிழுக்கப்படுகின்றது.
பெண்ணை வீரத்தில் இருந்து பலவீனம் வரை காட்டும் போது, வீரம் பாலியலின் வக்கிரத்திலும், பலவீனம் பாலியல் பதுமையிலும் அரங்கேற்றப்படுகின்றது. இந்த இரு எல்லைக்குள்ளும் தான் அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் உலகமயமாகின்றது. இது வேறுபட்ட தலைமுறை, பொருளாதார அமைப்புக்கு ஏற்ப ஆணாதிக்க இரசிப்பு வேறுபட்டு எல்லையாகின்றது. இது காலத்துக்குக் காலம் மாறியே வந்துள்ளது.
பழைய ரோமன் ஆட்சிகளில் உயர்மட்ட ஆண்கள் - பெண்கள் வெளிப்படுத்திய வக்கிரங்களை இன்று மனித நாகரிகம் அவமானமாகப் பார்க்கின்றது. ஆனால் அதை வேறு வடிவில் இரசிக்கின்றது. ரோமன் காலத்தில், ''விளையாட்டு அரங்கங்களில் மிருகங்களைப் புணரச் செய்தும், மனிதர்களைக் கலவி பண்ண வைத்தும், அதை ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து கண்டு - களித்து மகிழ்ந்தார்கள். வகை வகையான உணவுத் தயாரிப்புகளைத் தின்று கொண்டிருக்கின்ற சுவை இன்பத்தை நீண்ட நேரம் அனுபவித்துக் களிப்பதற்காக, வயிறு நிறைந்துவிட்ட போதிலும், வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்து விட்டு, மீண்டும் வந்து விருந்து மேஜை முன் அமர்ந்து உண்பதில் முனைந்தார்கள். இதற்கு வசதியாக ரோமாபுரி மாளிகைகளில் விருந்து மண்டபங்களை ஒட்டி, வாந்தி எடுப்பதற்கென்றே தனித் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. காம உறவுகளில் வக்கிர முறைகளை அனுஷ்டிப்பதில் உற்சாகம் கொண்டிருந்தார்கள்."30
இந்த அளவுக்கு மனித நாகரிகம் ஒருபுறம் உணவுக்கு வழியின்றி வாழவும், மற்றொரு புறத்தில் சுரண்டவும் உருவாக்கிய ஜனநாயக உலகில், ஆடம்பரப் பண்பாட்டுச் சீரழிவு, பொழுது போக்குகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து திரட்டிய மூலதனத் திரட்சியிலேயே நடத்தமுடிந்தது. மிருகம் முதல் மனிதன் ஈறாகப் பாலியல் தேவையைக் கட்டுப்படுத்தி, அடக்கிப் பின் அதை வக்கிரமாக்கிப் புணரவிட்டு இரசித்த பண்பாடுகள் முடிவுக்கு வந்துவிடவில்லை, இன்றும் தொடர்வது எதார்த்தமாக உள்ளது. மாறாக அவை மேலும் மேலும் நவீன வகையில் மேம்படுத்தப்பட்டன. ஆண் பெண் இருவரும் அவரவர் இரசனைக்கு ஏற்ப மாற்றப்பட்டுவிட்டது.
ஆண்கள் இருக்கும் இடத்தில் பெண் ஆபாசக்கலை நடனங்கள் ஆண்களுக்கு என்றும், பெண்கள் இருக்கும் இடத்தில் ஆண் ஆபாசக் கலை நடனங்கள் பெண்களுக்கு என்றும் அமர்களப்படுத்தப்படுகிறது. இதைப் பெண் அனுபவிக்கும் சுதந்திரமாகவும், கோரிக்கையாகவும் நியாயப்படுத்திப் பெண்ணியல் அமைப்புகள் தளம் போடுகின்றனர். இந்த மாதிரி சுதந்திரமான பெண்களுக்காக நடத்தப்படும் ஆண் நடனச் சாலை முதலாளி ஒருவரின் கூற்றைப் பார்ப்போம். ''பெண்கள் ஏன் இங்கே வருகிறார்கள் என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அது இயல்புக்கு மாறானது என நான் எண்ணவில்லை. இங்கே இருக்கின்ற பெண்களில் எவருக்கேனும் ஏதோ ஒருவிதக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று நினைக்க மாட்டேன். இதில் ஒன்றிரண்டு விபரீதப் பிறவிகள் இருக்கலாம். ஆனால், முக்கியமாக, இவர்கள் சந்தோஷமாய் பொழுது போக்கவே இங்கு வருகிறார்கள். சிரித்து மகிழலாம் என்பதற்காகவே இங்கே வருகிற சில மூதாட்டிகளை எங்களுக்குத் தெரியும். அவர்கள் 65 வயதும் அதற்கு அதிகமான வயதும் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயதானவர்கள் வழக்கமாக அவர்களுடைய பேரன்மார்களைப் போன்ற இளம் வயதுடைய இந்தப் பையன்களோடு சரசமாடுவதில் அவர்கள் தீங்கில்லாத ஓர் உணர்ச்சிப் பரவசத்தை அடைவதாகத் தோன்றுகின்றது."30
இது போல் எதிர்த் தரப்பு ஆண்களைக் கவர பெண் நிலையங்களும் வக்கிரத்தைக் கொட்டுகின்றன. பாலியல் வக்கிரக் கலை ஆட்டங்கள், நிர்வாண ஆட்டங்கள் என்று எல்லையில்லாத போக்கில் உலகமயமாதல் ஆண் - பெண் வேறுபாடு இன்றி தனிமையிலும், வக்கிரத்திலும் பொதுமைப்படுத்தியுள்ளது. பகிரங்கமான உடலுறவுக் காட்சிகள், வீடியோ, தொலைக் காட்சி, திரைப்படம், விசேட மண்டபங்கள் என பலவாகக் குவிந்து போயுள்ளது. ஆண் - பெண் புணர்ச்சியை இரசிக்கவும், வக்கிரப்படுத்தவும் வக்கிரப்படுத்தியதைக் காட்சிப்படுத்தியதன் மூலம் புணர்ச்சி கூட நுகர்வுப் பண்டமாக்கப்பட்டுவிட்டது. இது குடும்பத்தில் புணர்ச்சி மீதான அதிருப்திக்கு வித்திட்டுள்ளது. நுகர்வும், வக்கிரமும் இணைந்து இரசிக்கப்பட்ட பொழுதுபோக்கு என்பது, போலித்தனமான விளம்பரத் தளத்தில் மக்கள் தொடர்பு சாதனங்கள் மக்களின் பண்பாடாக, கலாச்சாரமாகப் புகுத்தியுள்ளது. ஆனால் எதார்த்தத்தில் இவை விளம்பரத்துக்கே உரிய ஏமாற்றும் பொய்மை ஆகும். இன்று எதார்த்தமாகாமல் போகின்ற போது பாலியல் திருப்தியின்மை, அவநம்பிக்கை போன்றன உளவியல் தாக்குதலுக்கு உள்ளாகி மேலும் மேலும் ஆண் - பெண் பிளவைச் சிதைத்து உருவாக்குகின்றது. இதற்கு மாற்றாகப் பாலியல் வக்கிரம் புணர்ச்சி வடிவில் பொழுது போக்காக, பண்பாடாக, கலாச்சாரமாக உருப்பெறுகின்றது.
இந்தியாவில் பாடசாலையில் இவ்வக்கிரங்கள் வெதும்பி நிறைந்து வழிகிறது. இரவு நிகழ்ச்சிகளின் போது திடீர் என மின்விளக்கை (டiபாவ) அணைத்து (ழகக) பெண்கள் மீது தமது பாலியல் வக்கிரத்தை ஆண்கள் செய்வது அல்லது பெண்கள் பாடசாலை எனின் ஆண்கள் மீது பெண்கள் செய்வது என புழுக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றிய ஆதாரப்பூர்வமான பதிவுகள் உள்ளன. இந்த அத்துமீறிய பாலியல் வன்முறைக்குக் கடிவாளத்தை உலகமயமாகும் பொதுப் பண்பாட்டுக் கலாச்சாரம் கொடுக்கின்றது. இவை பெற்றோர் முதல் பொலிஸ் மந்திரி ஈறாகப் பெண்கள் முதல் ஆண்கள் வரை பலாத்காரமாக அல்லது அதிகாரம், பணம், செல்வாக்கு ஊடாக மறுப்பு இன்றி நிர்ப்பந்தித்து அனுபவிப்பது, நாட்டுக்கு நாடு வேறுபட்டவகையில் ஒரேமாதிரி நிகழ்வது தொடர்கின்றது. ஒரு தலைவர் இறந்தால் மதக் கலவரம், சாதிக் கலவரம், ஓர் அதிகாரியின் விசாரணை, ஆசிரியரின் குருத் தன்மை, பெற்றோரின் உரிமை, மேல் அதிகாரி, அரசியல் வாதியின் செல்வாக்கு என எங்கும், எதிலும் பெண் மீதான பாலியல் வக்கிர வன்முறை பொழுது போக்காக, பண்பாடாக, கலாச்சாரமாக மாறிவிட்டது. இது இன்று பெண்ணால் ஆண்கள் மீதும் நடத்துவது என்ற புதிய வடிவத்துக்கும் சிதைந்துள்ளது. அத்துடன் ஓரினச் சேர்க்கை ஆண் - பெண் வேறுபாடின்றி இது பரந்த தளத்துக்கு விரிந்துள்ளது.
இவை எல்லாவற்றிலும் பொருளாதார அடிக்கட்டுமானம் மீது அதிக ஆளுமை செலுத்தியது திரைப்படங்கள் தான். திரைப்படப் பொழுதுபோக்குக் காட்சிகள் பல நியாயமான உலகில் எதார்த்தத்தில் மனிதப் பண்பாடாகி விடுகின்றது. உலகத்தை உலுக்கும் அளவுக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் திரைப்படம் கற்றுக் கொடுத்த போதும் பின்னால் அதைச் செய்த குற்றவாளிகள் திரைப்படம் மூலம் தான் என்பதை ஒத்துக் கொண்ட போதும், தயாரிப்பாளர்களைத் தண்டனைக்கு உள்ளாக்காத ஜனநாயகம் தான் உலகமயமாதலாகும்.
கி.பி. 1985-இல், 1,200 முதல் 1,300 கோடி முறைகள் மக்கள் வருடம் தோறும் திரைப்படத்துக்குச் செல்வதைப் புள்ளிவிபரம் காட்டியது. எந்தளவுக்குத் திரைப்படம் செல்வாக்குள்ள பொழுதுபோக்கு அம்சமாக மாறி, மனிதப் பண்பாட்டைத் தீர்மானிக்கின்றது என்பதை இது காட்டுகின்றது. இதை மேலும் ஆதாரமாகக் காண்போம்.
1985-இல், ஓர் ஆங்கிலேயனின் 70 வருட ஆயுளில் 12 வருடத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவு செய்கின்றான். அமெரிக்கன் நாள் ஒன்றுக்கு 6.2 மணிநேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவு செய்கின்றான். 95 சதவீதமான ஜப்பானியன் தினசரி தொலைக்காட்சி பார்க்கின்றான்;. பிரான்சில் 87.4 சதவீதம் பேர் தமது ஓய்வைத் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவு செய்கின்றார்கள். தொலைக்காட்சி, திரைப்படம் மனிதனின் உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதுவே பல பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் உற்பத்தி செய்கின்றது. இது இருக்கும் பொருளாதார எல்லைக்குள் தன்னைத் தகவமைக்கின்றது. இந்தப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க சுதந்திரம், ஜனநாயகத்தின் பின் ஒளிந்து கொள்கின்றது. திரைப்படம் மனிதனின் நியாயத்தைப் பேசுவதற்கு எதிராகக் கற்பனைப் புனைவுகளை ஊடறுத்து மனிதனுக்குள் புகுத்துகின்றது. இது மனிதனின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கின்றது, போதையாக்குகின்றது.
இந்தப் போதையில் விளையாட்டும் ஒரு முக்கிய பங்களிக்கின்றது. பிரான்சில் உள்ள முக்கிய தொலைக்காட்சிகள் ஐந்திலும் கி.பி. 1996-இல், விளையாட்டுக்கு ஒதுக்கிய நேரமே 2,504 (ஏறக்குறைய நூறு நாட்களைவிட அதிகம்) மணிநேரமாகும்.32
இந்தளவுக்கு விளையாட்டுக்குள் வாழ்க்கையை முடக்கி, பார்வையாளன் ஆக்கி, தொலைக்காட்சி முன் மனிதர்களை உட்கார வைத்து பொழுது போக்க வைக்கப்படுகின்றனர். பல தொடர் விளையாட்டுகளைப் பல கோடி செலவில் நடத்த, வாழ்க்கையை உட்கார்ந்து விளையாட்டில் பொழுதைக் கழிப்பவனின் பார்வையைச் சுரண்டி, விளையாடுபவர்கள் கோடீஸ்வரர்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் சம்பளப் பட்டியலை மாற்றி விளையாட்டு வியாபாரமாகி விட்டது. அத்துடன் இவ்விளையாட்டு என்பது விளம்பரம் என்ற வகையில் நுகர்வைத் தூண்டும் ஓர் இலகுவான ஊடகமாக மாறிவிட்டது. இந்த ஊடகங்களைப் பயன்படுத்தும் சுரண்டும் வர்க்கங்கள் இந்த விளையாட்டின் ஊடாகக் கோடி கோடியாக மூலதனத்தைச் சுருட்டுகின்றன.
பொழுதுபோக்கு என்பது இதற்கு வெளியிலும் உருவாகின்றது. பிரான்சில் 1.05 கோடி பேர் பொதுவான சமூக வேலையில் ஈடுபட, அதற்கான அமைப்புகளை உருவாக்கி அதில் இணைந்துள்ளனர். இது கடந்த இரண்டு வருடத்தில் 15 இலட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மாதம் 23 மணி நேரத்தை இதற்குச் செலவு செய்கின்றனர். கி.பி. 1990-ஐ விட இது இன்று மூன்று மணி நேரம் அதிகரித்துள்ளது.33 (28.3.1999)
மேற்கில் சமூக அமைப்புகள் உதிர்த்தெழுவது வடிவமாக மாறிவிட்டது. இங்கு இந்தச் சமூக அமைப்புகள் என்பது பல பிற்போக்கு முதல் முற்போக்கு வரை நீண்டு காணப்படுகின்றது. படு பிற்போக்கான நிறவெறி அமைப்பு முதல் வர்க்க எதிர்ப்பு அமைப்புகள் வரை நீண்ட பலவடிவ அமைப்புகள் உருவாகுவதும், அதன் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதும் அதிகரிக்கின்றது. கூட்டுவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் ஏற்பட்ட இடைவெளியும், பிளவும் தமது தனித்தன்மையின் தனித்துவத்தால் தனிமைப்பட்ட மனிதர்கள், தவிர்க்க முடியாமல் வெளியில் சமூக அமைப்பில் இணைவதும் புதிய சமூக அமைப்பைத் தொடங்குவதும் தவிர்க்க முடியாத நியதியாகின்றது. இவைகளில் வக்கிரத்தின் எல்லையில் இருந்து சமூக நோக்கம் வரை விரிந்து கிடக்கின்றது. ஆனால் பெரும்பாலானவை வெறும் பொழுதுபோக்குக் கண்ணோட்டத்துடன் தமது தனிமையைத் தற்காலிகமாகத் தவிர்க்கவே கூடுகின்றனர். இந்தக் கூடுதலில் அதிகளவுக்குத் தனிச்சொத்துரிமையிலான சமூகக் கண்ணோட்டம், தனிப்பட்ட நலன் அதிகமாகப் புரையோடிப் போய் ஒரு பூர்சுவாத்தனத்தில் கௌரவமான பழகும்முறைகளே பொதுவாக இருக்கின்றது.
அடுத்து மேற்கில் பாடசாலை மாணவர்களின் பொழுதுபோக்கை ஆராய பிரான்சில் பாடசாலை விட்டு வீடு வந்த பின் 11-19 வயது மாணவ மாணவிகளின் பொழுது போக்கு என்ன என்பதை அட்டவணை-6-இல், பார்ப்போம்;.33 (13.2.1999)
அட்டவணை-6
தொலைக்காட்சி பார்த்தல் -72 சதவீதம்
பாடம் படித்தல் -52 சதவீதம்
வீடியோ விளையாடுதல் -23 சதவீதம்
பொதுவாகத் தொலைக்காட்சி பார்த்தல் ஒரு பெரும் பொழுது போக்காகவே உள்ளது. இந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது இந்த வயதுள்ள சமூகத்தின் மேல்மட்ட மாணவர் மாணவிகளின் காதல் பற்றியதும், பாலியல் கிசுகிசுகளின் வக்கிர மொழிகளையும் உள்ளடக்கிய மேலும் அந்தக் கூட்டத்தின் நுகர்வுகள் எப்படி அரங்கேறுகின்றன? என்பதைக் காட்சிப்படுத்தி பொழுது போக்குகின்றனர். அமெரிக்கத் திரைப்படத்தால் நிரப்பப்படும் இளசுகளின் காட்சியில் பாலியல் ஒழுங்குகளை மீறியமுறையில், பாலியல் சேட்டைகளும் அதன் வக்கிரங்களும் காட்டப்பட்டு உளவியல் ரீதியாக அவர்கள் போல் (அதாவது நடிப்பவர்கள் போல்) பார்ப்பவர்கள் பொம்மைகள் ஆக்கப்படுகின்றனர்.
உலக அழகுராணிப் போட்டிக்குப் போனவர்களும், வெற்றிப் பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் ஆடை அவிழ்த்துப் போட்டு நடிக்க முடிந்தவர்களும், மொடலில் தன்னை அரைகுறையாகக் காட்ட முடிந்தவர்களும், விளையாட்டில் முன்னணியாகி மவுசு குறைந்தோர்களும் எனச் சமூகத்தின் இழி நடத்தைகள் எல்லாம், யார் யாரெல்லாம் பணத்துக்கு முன் எதையும் செய்ய துணிந்தார்களோ, அவர்களைக் கொண்டு நடத்தும் தொடர் கூத்தைத் தான் இந்த மாணவ மாணவியர் கூட்டம் கண்ணுற்று, பொழுது போக்கி இரசிக்கின்றனர். இந்தப் பொழுதுபோக்கு சமூகப் பண்பாக, கலாச்சாரமாகப் பின்னால் விருட்சமாகக் கிளம்புகின்றது.
அடுத்து காட்சிப்படுத்தப்படும் கார்ட்டூன்கள் (கேலிச்சித்திரங்கள்) பாலியல், ஆணாதிக்கம், நிறவாதம், ஆதிக்கவாதம், மதவாதம், வன்முறை, சுரண்டல் ஆதிக்கம், பணக்கார அழகியல் கவர்ச்சி.... எனச் சமூகத்தின் ஆதிக்கம் சார்ந்து எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் திட்டமிட்டே முன் தள்ளப்படுகின்றது. வன்முறை, பாலியல் இதைவிட்டால் கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) கிடையாது.
இவ்வளவு வக்கிரத்தைக் கொட்டித் தீர்க்கவும், அதை எதார்த்தத்தில் செய்து பார்க்கவும் வீடியோ விளையாட்டுகள் பொழுது போக்கு அம்சத்தில் புகுந்து கொண்டது. இதில் வியட்நாம் மீதான தாக்குதலை நடத்துவது முதல் கம்யூனிஸ்டுகளை அழிப்பது, முஸ்லிம் மதத் தீவிரவாதத்தை ஒழிப்பது என, நேரடியான வீடியோ விளையாட்டுத் தாக்குதல்கள் முதல் சகல வீடியோ விளையாட்டுகளும் மாணவர்களின் பொழுதுபோக்கின் பின் அரசியலாகின்றது.
பெரியவர்கள் உலகமயமாதல் ஜனநாயகத்தின் பின் ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்குள் எதைச் செய்கின்றனரோ, அதைச் சிறுவர்கள் விளையாட்டாகச் செய்கின்றனர். இதில் பெண்கள் மீதான ஆடை உரிவுக் காட்சி, நிர்வாணக் கலைக் காட்சி, ஆபாசக் கலை நடனங்கள், பெண்ணைக் கற்பழிப்பது, பெண்ணின் உறுப்புகளை விரும்பியவாறு பயன்படுத்துவது, வக்கரித்த வகையில் கையாள்வது என வீடியோ விளையாட்டுகள் குவிந்து, அதுவே சமுதாயப் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் ஆகிவிட்டது. இவை எல்லாம் பொழுது போக்கில் விளையாடியே கற்றுக் கொடுக்கப்படுகின்றது. பெண் ஆணாதிக்கத்தின் பயன்பாட்டுப் பொருள் என்பதை, அதைத் தனிப்பட்ட விளையாட்டுச் சுதந்திரமும் ஜனநாயகம் அமுல்படுத்துவதை, இந்த ஜனநாயகத்தில் மீறமுடியாது என்பதை இவை தெளிவாக்குகின்றது. ஆண்களைப் பெண்கள் பயன்படுத்த கூடிய விளையாட்டுகளையும் உருவாக்கி விடுகின்றனர். பெண்கள் இதை ஒழிக்கப் போராடாதவரை, தனியுடைமை சமூகத்தில் சலுகை கோருகின்ற போது, ஆணாதிக்கம் பெண்களுக்கும் அவைகளைத் தாராளமாக உருவாக்கிச் சந்தைப்படுத்தி விடுவதில் ஆணாதிக்கப் பெண்ணியம் துணையாவதன் மூலம், ஆணாதிக்கச் சுரண்டல் வர்க்கம் கொழுக்கின்றது. இந்தப் பண்பாடுகள் அனைத்துத் துறைக்குள்ளும் புகுத்தப்படுவதுடன் மூன்றாம் உலக நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மூன்றாம் உலக மேட்டுக்குடியும் வாலையாட்டியபடி துடித்து பதைத்து, கவ்விக் கொள்வதை விரைவு படுத்துகின்றது.
இந்தியாவில் நாகரிகமானவர்கள் என அழைக்கக் கூடியவர்கள் இரவுக் களியாட்ட விடுதியில் (நைட் கிளப்) ஜோடிக்கு 500 ரூபாய் கொடுத்து ''விடியவிடிய ஆட்டம்" போடுகின்றனர். (23.7.1997)34 இந்த நாகரிகம் சொந்தப் பண்பாட்டை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி தூக்கியெறிகின்றது. ஏகாதிபத்திய நாட்டில் எல்லாப் பண்பாட்டுச் சீரழிவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதும், அதை ஜனநாயகமாகக் காட்டிக் கூத்தடிப்பதும் விதிவிலக்கற்ற வழக்காகிவிட்டது. டிஸ்கோக்கள், கபாரே மண்டபங்கள், நவீன விபச்சார விடுதிகள், நவீன புளுபிலிம் அரங்குகள்.... என எண்ணற்ற வடிவங்கள் முளைத்தெழுகின்றன. இங்கு எல்லாப் பெண்களும் காட்சிப்படுத்தப்படுகின்றனர். பெண் பாலியலின் மையமாக்கப்படுகின்றாள். பெண் நிர்வணமாக்கப்படுகின்றாள். பெண் வக்கிரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றாள்.
உதாரணமாக ஐரோப்பாவில் நிர்வாணமான பெண் மீது மலம் துடைக்கும் பேப்பர் (மலம் துடைக்கப்படாத பேப்பர்) மூலம் சுற்றப்பட்டு மேடையில் நிறுத்தப்பட்ட நிலையில், பணக்கார ஆண்கள் - பெண்கள் சபையில் உள்ள வாயு அழுத்தம் (காற்று) மூலம் பெண்ணை நிர்வாணமாக்க ஜனநாயகப்பூர்வமாகப் போட்டி போடுகின்றனர். இதில் மூலதனம் உயர்வகை சபையினைப் பல ஆயிரம் பெறுமதியில் சந்தைப்படுத்துகின்றது. இந்தச் சந்தைப்படுத்துதல் கொழுத்த மூலதனமாகின்ற போது, இந்த ஜனநாயகம் அதன் எல்லைவரை சட்டப் பாதுகாப்பை சுதந்திரத்தைச் சட்டப்பூர்வமாக்குகின்றது. ஆனால் பெண்ணின் உடல் பெண்ணின் சுதந்திரமான காட்சிப்படுத்தலுக்குள்ளாகி வக்கரிக்கும் போது, மூலதனம் நாகரிகமான பண்பாட்டைப் பரிமாறிக் கொள்கின்றது. இதில் பெண் மீது வீசப்படும் காகிதப் பணம், பின்னால் அவளின் சுதந்திரமான உடல் பற்றி பிதற்றவும், கோட்பாட்டு விளக்கமும் கொடுக்கின்றது. அத்துடன் இது கட்டற்ற தீவிரப் பெண்ணியத்தின் பகுதியாகின்றது. இம்மண்டபங்களில் மேடையமைத்து, கம்பி (இலகுவானது) நட்டு அதில் அரைகுறை நிர்வாணப் பெண் கம்பியுடன் புணர்வதான காட்சிகள், செயல்கள் என பலப்பலவாக, வண்ண வண்ணமாக (வகைவகையாக) மனிதனின் வக்கிரத்தின் எல்லையை விரித்து செல்வதன் மூலம் இது பின்னால் நாகரிகமாகின்றது.
இதில் ஆணை மட்டும் இன்றி பெண்ணையும் ஈடுபடுத்த ஜனநாயகத்தைத் திரித்து, கொச்சைப்படுத்தி வழங்குவதன் மூலம், பெண்ணின் சுதந்திர இரசனைக்காக ஆணை நிர்வாணமாக்கிக் கண்ணுற வைப்பதன் மூலம் வக்கரித்த பாலியல் வக்கிரத்தில் உறைந்து போகின்றது. பெண்ணின் நிலை என்பது ஆண் வக்கிரத்தின் தனிப்பட்ட ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் கற்பனைக்கு உட்பட்டவைதான் என்று வரையறையாகின்றது. இதுபோல் பெண்கள் ஆண்களை இரசிக்க அனுமதிப்பதை உலகமயமாதல் எந்த எதிர்ப்பும் இன்றி, ஆணாதிக்கச் சுதந்திரச் சுரண்டல் வர்க்கம் ஆவலோடு உருவாக்கிக் கொடுத்தது, கொடுக்கின்றது.
சுரண்டலை எதிர்த்து போராடாத மார்க்சியமல்லாத பெண்ணிலைக் கோட்பாடுகள் பெண்ணை மட்டுமல்ல ஆணையும் அனுமதித்ததன் மூலம், ஆண் பெண் சமத்துவத்தை ஏற்படுத்தியதாகப் பீற்றிக் கொண்டு, இதைப் பாதுகாப்பதன் மூலம், அந்தப் பெண்ணியம் ஆணாதிக்கத்துக்கு விபச்சாரம் செய்து சரணடைகின்றது. பொழுது போக்கில் பெண்ணை மட்டுமல்ல ஆணையும் கூட இழிவுபடுத்த தயங்காத ஆணாதிக்கச் சுரண்டல் நலன்களே உலகமயமாதலின் பண்பாட்டுக் கலாச்சாரம் ஆகின்றது. இதையே ஜனநாயகத்தின் பண்பாடாக வைக்கின்றது. இதுவே சொர்க்கத்தின் புண்ணியப் ப+மி என நாலு நாய்கள் கவ்விச் செல்லவும், நியாயப்படுத்தவும் கிடைக்காமலா, முற்போக்கு உலகம் உயிர்வாழ முடியும்.
ஆபாசத்தையும், காட்டுக் கூச்சல்களையும், மொழி அர்த்தமின்றியும், தாறுமாறான இசைக் குழப்பத்தையும் உருவாக்கி, அதைப் போதையாக்கி, அதில் மனித உணர்வுகளை அலைக்கழித்து செம்மறியாடாக மக்களைக் கூத்து போடவைக்கும் இசை கசெட்டுகளின் (ஒலிநாடா) விற்பனையை ஆராய்வோம். உலகில் பாட்டு கசெட் (ஒலிநாடா) விற்பனையை அட்டவணை:7 மூலம் காணலாம். (6.1.1991)34
அட்டவணை - 7
அமெரிக்கா 46.62 கோடி
இந்தியா 18 கோடி
சீனா 12.5 கோடி
இங்கிலாந்து 8.3 கோடி
ஜப்பான் 5.92 கோடி
உலகில் கோடிக்கணக்கில் மூலதனத்தைச் சுரண்டும் வர்க்கத்துக்குத் திரட்டிக் கொடுக்கும் பொழுதுபோக்கு இசை கசெட்டுகள் (ஒலிநாடா) எதை மனிதனுக்குப் பொழுது போக்கின் பின் புகுத்துகின்றது. 99.99 சதவீதமான இசை பெண்களை இழிவுப்படுத்தி அல்லது ஆபாசமாகக் கூச்சல் போட்டு வக்கிரத்தைப் பாலியலில் ஏற்படுத்தியே இந்தப் பொழுது போக்கு நுகர்வு மனித மூளைக்குள் புகுத்தப்படுகின்றது. சாதாரண திரைப்படத்தில் பெண்ணின் காட்சி, அதில் அவளின் ஆபாசத்தைப் (அழகு, கவர்ச்சி, மொழி, உடல், காதல், அன்பு, பாலியல் போன்றவற்றைப்) பண்பாடாக்குவது போல், இசை உலகம் தாறுமாறான கூத்தை இசையாக அரங்கேற்றுகின்றது. அதாவது ஒழுங்கை மறுக்கும் போக்கில் பின்நவீனத்துவ ஏகாதிபத்தியம் புதிய ஒழுங்கை ஏற்படுத்தும் வடிவில் இசை உலகில் இசையின் ஒழுங்கு சிதைக்கப்படுகின்றது. இவை டிஸ்கோ வகை கலவையாக, இசையில் மனித மூளைகளை அதிரடியாகக் குழப்பி, மூளையின் ஒழுங்கான கிரகிக்கும் தன்மையைச் சிதைத்து, ஒரு கிறுக்கத்தை (மயக்கத்தை) ஏற்படுத்தும் இசை உலகமயமாகி, பொழுது போக்கானது கிறுக்கு (மயக்க) நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. இந்தக் கிறுக்கத்தில் (மயக்கத்தில்) பெண் பற்றிய போலிக் காதல் சொர்க்கங்கள், அழகு பற்றி பெண்ணின் பிம்பங்கள், பாலியல் வக்கிர ஒப்பனைகள்..... என மனித விரோதத்தின் போக்கில் எல்லையற்ற இசை உலகம் விரிந்து போயுள்ளது.
இந்த இசை உலகில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறு வியாபாரங்கள் வரை தமது மூலதனத்தை மனிதனின் பொழுது போக்கில் கூட உபரியாகத் திரட்டிக் கொள்கின்றனர். கோடி கோடியாகத் திரளும் மூலதனத்துக்குச் சமூக அக்கறை இருப்பதில்லை. சமூக அக்கறை என்பது பொழுதுபோக்கில் அர்த்தமற்ற விடயமாக இன்று உள்ளது. இது ஆணாதிக்கத்தின் ஊற்று மூலமாக, அதைப் பாதுகாக்கும் ஊடகமாக உள்ளது.
மூலதனச் சந்தையைக் குழந்தைகள் மூலம் இந்த ஜனநாயகச் சுதந்திர நாகரிகத்தைக் கட்டமைக்கின்றது. இந்தச் சந்தை மூலதனத்தில் தொடங்கி அதைப் பார்ப்பவர்கள் ஈறாக யாரும் இதைபற்றி பேசுவதில்லை. கி.பி. 1980-களில் உலகு எங்கும் 264 பத்திக்கைகளில் 30 இலட்சம் குழந்தைகள்30 மாடல்களாக மூலதனக் குவிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இது குழந்தைகளுக்கான ஆணாதிக்க ஒழுக்கத்தையும், பாலியல் வக்கிரத்தையும் புகுத்துகின்றது.
சிறுவர்களுக்கு என உருவாக்கும் விளையாட்டுப் பொருட்கள், ஆண் பெண்ணுக்கு எனத் தனித்தனியாக இருவிதமான பொருட்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. உதாரணமாகக் கார் மேற்கில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக, சரிக்குச் சரியாக வைத்திருந்த போதும் ஒரு சிறு சிறுமியின் கண்ணோட்டத்தில் அது ஆணின் விளையாட்டுப் பொருளே. இதை எந்த பெற்றோரும் பெரிதாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாகச் சமூகம் பொழுது போக்கின் ஆணாதிக்கம் சார்ந்து, பிள்ளைகளின் பொழுது போக்கான தொலைக்காட்சி, சிறு கதைகள், விளம்பரங்கள்.... என பல நிகழ்வுகள் சிறுமிக்குக் காரை ஆணுக்குரியதாக அடையாளப்படுத்துகின்றது. ஆனால் எதார்த்தத்தில் இவை அப்படி இருப்பதில்லை. எதார்த்தத்தை மீறிய ஆணாதிக்கம் கட்டமைக்கப்படுகின்றது. ஆணாதிக்க ஒழிப்பை அதன் அடிப்படையில் மாற்றாத வரை பொருட்கள் பற்றிய எதார்த்தத்துக்குப் புறம்பான ஆணாதிக்கச் சிந்தனை ஊடுருவுவதைக் காட்டுகின்றது.
மறு தளத்தில் பொம்மை சிறுமியின் விளையாட்டுப் பொருளாக இனம் காட்டப்படுகின்றது. இதை மறுத்து எதிர் நிலையில் பெற்றோர் விளையாட கொடுக்கும் போது குழந்தை திட்டவட்டமாக மறுக்கின்றது. இந்த வகையில் ஆணாதிக்கம் என்பது பொருட்களின் பயன்பாட்டிலேயே தீர்மானிக்கும் வகையில் சிறுவர், சிறுமிகளிலேயே தீர்மானகரமாகி விடுகின்றது. குழந்தைச் சிந்தனையை அகலமாக்கும் முன்பே இருக்கும் பொருளாதார எல்லைக்குள் தன்னைப் புரிந்து கொள்கின்றது. தீர்மானகரமாகப் பொருளாதார அமைப்பிலும் அதையொட்டிய ஆணாதிக்கப் போக்கிலும், எந்தக் குழந்தையும் எதிர்த்து நிற்கமுடியாது ஆணாதிக்கத்தின் எல்லைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். இதில் இருந்து விடுபடுவது என்பது நடைமுறையில் அடக்கு முறைக்கு எதிராகவும், மறு தளத்தில் இந்த ஆணாதிக்கப் பொருளாதார அமைப்பைத் தகர்ப்பதிலும் சார்ந்துள்ளது.
இதைப் புரிந்து கொள்ளும் வடிவில் இருந்தே ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் வடிவமும் மாறுகின்றது. இந்த வடிவத்தை நடைமுறையில் புரிந்தவர்கள் தனி ஆணை எதிரியாகப் பார்ப்பதும், மறுதளத்தில் ஆணாதிக்கச் சமூக அமைப்பை எதிரியாகப் பார்ப்பதும் என போராட்டம் இருதளத்தில் எழுகின்றது. இது போராடும் போது எதிர் நிலையை எடுக்கின்றது. வேறுபட்ட சமூகக் கண்ணோட்டத்தை, போராட்டப் பாதையை ஒன்றில் இருந்து ஒன்றுவிலகி போராடுகின்றது.
தனிமனிதர்களை எதிரியாகக் காண்போர் அராஜகவாதிகளாகத் தம்மை ஒழுங்கமைக்கின்றனர். இவர்கள் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சிகளுக்கு எதிராகத் தம்மை முன்நிறுத்துகின்றனர். ஆண்-பெண் சமூகத்தில் ஆணையும், பெண்ணையும் பிளப்பதன் மூலம் உலகமயமாதலின் கோட்பாட்டுக்குள் இருதிசையில் இருந்து சென்று ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.
இந்தியாவில், ''இளைஞர்கள் ப்ளஸ் டூ - டேட்டிங்" என்ற தலைப்பில் ''பாய் பிரண்ட்" வைத்திருப்பது, கருக்கலைப்பு, டிஸ்கோ... என தொடரும் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் வாரிசுகளாக, மேல்த்தட்டுப் பூர்சுவா பெண்கள் மாறியுள்ளனர்.34 (21.10.19991)
இந்தப் பண்பாடு, உலகமயமாதல் ஊடாகத் தீர்மானகரமான பண்பாடாக வளர்கின்றது. மேற்கில் இழிந்துபோன இந்த நுகர்வு பாலியல் நடத்தைகள் மூன்றாம் உலக நாடுகளின், மேட்டுக் குடிகளின் பண்பாடாக மாறியுள்ளது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் வக்கிரமான பாலியல் வடிவத்துடன் ஐக்கியப்பட்ட இந்தப் போக்கு மிகவேகமாக ஊடுருவிச் செல்கின்றது. காதல், அன்பு என்ற நிலப்பிரபுத்துவப் பெண்ணின் உரிமையாக, உயிராக நீடித்த உறவுகள் பண்பாடுகள் எல்லாம் மறுக்கப்பட்டு, நுகர்வு என்ற எல்லையில் மேலும் பெண் நசுங்கி சிதிலமடையும் அளவுக்கு, வெறும் பொழுது போக்குக்குள் பெண்ணைப் பயன்படுத்த சுரண்டும் ஆணாதிக்கம் தயங்கவில்லை. இதிலும் பெண் ஆணாதிக்கமயமாக்கப்படுகின்றாள். பெண் மனிதத்துவத்தைத் தொலைத்து விபச்சார நிலைக்குள் நுகர்வாக ஆண் பயன்படுத்த, பெண் காதலையும் அன்பையும் இழந்து விடுவது நிபந்தனையாகின்றது.
இதில் இருந்து பெண்ணின் நிலையைக் கவர்ச்சியின் சின்னமாக, ஆபாசத்தின் குவியமாக, நுகர்வின் புள்ளியாகக் காட்டி, கற்பனைப் புனைவுகளில் கற்பழிக்கக் கோருகின்றது. இதை எதார்த்தத்தில் கோரி மனிதனை அலைய வைப்பதுடன், பலாத்கார வழியில் அதை அடைய துடிக்கிறது. இதை அணுஅணுவாக அனுபவிக்க அலைவது நடைமுறையாகியுள்ளது.
இந்த திரைப்படங்கள் பற்றி, ''அவளுக்காக" என்ற நாவலில், சு. சமுத்திரம் ''சினிமாவுல சம்பாதிக்கிற மாதிரி வேற எதுல சம்பாதிக்க முடியும்? ஒரு ரேப் சீன். சின்னஞ் சிறுசுகளைத் திருப்திப்படுத்திடலாம்; அதுக்காக ஓர் அழுகை. பெண்களுக்குத் திருப்தி. ஓர் மழை சீன். கிழடுகளுக்குக் கொண்டாட்டம். ஒரு கும்மாங்குத்து. சண்டியர்களை வரவழைச்சுடலாம். வாலிபர்களைத் திருப்திப்படுத்த ஒரு சில்க் சுமிதா, இல்லன்னா ஒரு அனுராதா. எல்லோருக்கும் திருப்தி. இதுக்குள்ளே கதைபண்ணி இலட்சம் இலட்சமாய்ச் சம்பாதிக்கிற தொழில் வேற எது இருக்கு? மேலும் என் வசனத்துலே படம் கண்டிப்பாய் ஓடும். ஏனென்றால் இரு பொருளிலே அவ்வளவு ஆபாசமாய் வசனம் எழுதியிருக்கேன். மூளையோ, மூலதனமோ அதிகம் இல்லாமல் இலட்சம் இலட்சமாய் சம்பாதிக்கிறதுக்கு வேற என்ன தொழில் இருக்கு?"30 என்று அழகாகவே திரைப்படம் வக்கிரத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். மனிதன் மனிதனாக முடியாத காட்டுமிராண்டித்தனத்தைச் திரைப்படம் புகுத்துகின்றது. பெண்களை ஆபாசமாகக் காட்டாத திரைப்படம் எதுவும் இன்று ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அப்படிக் கோரின் அது பிரச்சாரம் எனக் கூக்குரல் இட ஆயிரம் வாய்கள் போலி முற்போக்கின் பின்னால் தயாராகவே உள்ள இலக்கிய எழுத்துப் பண்பாடு இதன் ஆதாரமாகின்றது.
தொழிற்சாலை இயந்திரமயமானபோது தொழிலாளி அந்த இயந்திரத்தின் உதிரி உறுப்பானான். இயந்திரத்தை விட கீழ் நிலைக்குத் தாழ்த்தப்பட்டான். மேலும் நவீனக் கண்டுபிடிப்பாகக் கணினி, மின்னணுயுகம் இயந்திரத்துடன் ஒன்று இணைந்த போது, இயந்திர இராட்சத மிருகங்கள் மனிதனை வேட்டையாடும் திரைப்படங்கள் தொழில் நுட்ப நியாயப்படுத்தல் உடன், இயந்திரத்தின் முன் நெருக்கப்பட்ட பய பீதியில் இயந்திரத்தின் முன் அஞ்ச வைக்கப்படுகின்றான். இந்தச் திரைப்படத் தொழில் நுட்பத்தில் பெண் கூட பாலியல் கவர்ச்சியுடன்தான் இராட்சத இயந்திரம் கவர்ந்து மிரட்டி அழிக்கின்றது. திரைப்படத்தில் வரும் பல தோற்றங்கொண்ட பேய்கள் எப்போதும் கற்பழிப்புகள், உடல் உறவுகள், வக்கிரத்துடன் புணர்வது போன்ற காட்சிகளே திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்படுகின்றது.
மனித வரலாற்றில் யுத்தச் சாதனைகளை ஒட்டி வளர்ச்சி பெற்ற, அதனுள்ளான விளையாட்டுகள் யுத்தமுறை மாறிய போதும் விளையாட்டாகத் தொடர்ந்தன. இன்று நுகர்வுப் பண்டத்தின் மதிப்பைச் சந்தைப்படுத்தும் விளம்பர ஊடகமாக சீரழிந்து போயுள்ளது. மறுபுறம் குறைந்த பட்சம் எஞ்சிய உடல் உறுப்புகளைக் கொண்ட உடற்பயிற்சி மூலம் செய்த விளையாட்டுகள், புதிய யுத்த வழியில் கணினி விளையாட்டாக மாறி உடலில் பலவீனத்தின் அங்கமாக, இயக்கமற்ற நிரந்தர இயந்திரச் சாதன உறுப்பு போல் மூடச் சமூகத்தை உருவாக்கி வருகின்றது. மனிதனை இயந்திரத்தனமான அடிமையாக்கிய மூலதனம், உடல் செயற்பாட்டையும் அதன்வழியில் சிறுவயதிலேயே பழக்கப்படுத்துகின்றது.
சிறுவர் உழைப்பு எப்படி ஒரேமாதிரி தன்னையறியாமல் செயல்பட வைக்கின்றதோ அதேபோல் சிறுவர்கள் விளையாட்டுக் கணினியில் தன்னையறியாமல் ஒரு பாகமாக மாறுகின்றனர். இதன் மூலம் கணினியின் அடிமையாக்கி அதற்குக் கீழ்ப்படுத்துகின்றனர். அதாவது புதிய கணினி யுத்தமுனை கணினி விளையாட்டுகளையும், கணினி பாலியலையும் உருவாக்கியுள்ளது. இன்று இணையப் (iவெநசநெவ) பாலியல் என்பது மனித வக்கிரத்தின், அடுத்த உச்சமான தனிமை வாழ்வில் இயந்திரத்தனத்தை அடைகின்றது. ஆண் பெண் உறவில் இந்த இணையப் (ஐவெநசநெவ) பாலியல் மேலும் பாலியல் பிளவை ஒழுங்கமைக்கின்றது. மனிதனின் கூட்டு வாழ்க்கை அழிக்கப்பட்டு, வீட்டுக்குள் தனிமனித இயந்திர வக்கிர நுகர்வுக்குள் ஆண் பெண் உறவும், நடமாட்டமும் குறுக்கப்பட்டு வருகின்றது.