கடந்த 30 வருடங்களாக இலங்கைப் பெண்களை உலுக்கிய உலுக்கு, இலங்கை வரலாற்றுக்குப் புதியதாகும். நிலைமைகள் திடீர்திடீரென அதிர்வலைகளை ஏற்படுத்தும் வண்ணம் மாறியது, மாறிய வண்ணம் இருக்கின்றது. இவை பல முரண்பட்ட வௌ;வேறு சூழ்நிலைகளில், வேறுபட்ட பிரதேசம் சார்ந்து தன்னை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.
இந்த வகையில் பெண்களின் நிலைமையை ஆராய உலகளாவிய மாற்றங்கள் பற்றிய பார்வை மிக முக்கியமானதாகும்;. கி.பி.1970-களில் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலைத் தீவிரப்படுத்த, அரைக்காலனிகளை நவகாலனியாக்கி நேரடிக் காலனியாக்கத்தை நடைமுறைப்படுத்தும்; கட்டமைப்புகளைத் தீவிரமாக்கினர். இலங்கை இந்தக் கட்டத்தின் ஊடாகத் தன்னை மாற்றியமைப்பதுக்கு உள்ள+ர் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு இசைவாக்கமடைந்தது. சில நாடுகளில் இடைக்கட்டமின்றி நகர்வதும் சாத்தியமாகக் கூடியதாக இருக்கின்றது. அதாவது காலனிகள் முன்பைவிட தெளிவாகப் பண்பு ரீதியாக, அரசியல் பொருளாதாரக் காரணங்களால் வேறுபட்டே இருக்கும் என்பதை உலகமயமாதல் தெளிவாக்குகின்றது.
நேரடியான ஆக்கிரமிப்பு என்பது விதிவிலக்கான ஒரு வடிவமாக ஏகாதிபத்திய முரண்பாட்டின் தீவிரத்தில் மட்டும் நிகழும் ஒரு வடிவமாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்பே நாடுகள் காலனிகளாக மாறிவிடுவது சாத்தியமானது என்றளவுக்கு, உள்ள+ர் அமைப்பு வடிவமே நேரடியாக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகி வருகின்றது. காலனியாக்கத்தைக் கட்டியாள்வது உள்நாட்டவனா? அல்லது வெளி நாட்டவனா? என்பதே வேறுபாடாகக் கொண்ட இந்தப் பண்பு மாற்றம், அடிப்படையில் வேறுபாடற்ற ஒரே ஏகாதிபத்தியத்துக்கு அல்லது தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரே மாதிரி காலனியாக்கச் சேவையைச் செய்கின்றது.
இங்கு அன்னிய நாட்டவன் ஆக்கிரமித்து ஆள்வதை மட்டும் கொண்டு காலனியாக்கத்தை வரையறுப்பது தவறானதாகி விடுகின்றது. ஏனெனின் தேசங்கள் தமது சுயஅடையாளத்தைத் தமது பொருளாதார அமைப்பு சார்ந்து இழந்து விடுகின்றன. இவை அன்னிய ஏகாதிபத்தியம் அல்லது தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அமைப்பு சார்ந்து, தேசங்களின் சமூகப் பொருளாதார வடிவங்கள் சிதைக்கப்படுகின்றன. இந்தச் சிதைவில் மேலும் மேலும் பரந்த தளத்தில் முரண்பட்ட ஏகாதிபத்தியம் மற்றும் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து நிற்பதைக் கைவிட்டு, குறித்த அதீதச் சூறையாடலைச் சார்ந்து காலனியாக்கம் வேகம் பெறுகின்றது.
உலகப் பொருளாதார அமைப்பு உலகமயமாதலால், பொருளாதாரக் கட்டமைப்பு தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு இசைவான வகையில் திட்டமிடப்படுகின்றது. இது நேரடியாக ஏகாதிபத்தியத்தின் குறித்த நலனைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாகத் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஊடாகவே ஏகாதிபத்திய நலனைப் பூர்த்தி செய்கின்றது. இது ஏகாதிபத்திய நலனை இரண்டாம் பட்சமாக்கித் தேசத்தின் நலனைத் தூக்கியெறிகின்றது. இதனால் நேரடியான காலனியாக்கத்தை நோக்கி வேக நடைபோடுகின்றது. அதாவது உலகப் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு நிறுவனங்களை மையமாக வைத்து நகர்வதால், ஏகாதிபத்திய முரண்பாடுகளைத் தாண்டி, சில பன்னாட்டு நிறுவனங்களின் தேவையுடன் உலகம் தன்னை உருட்டுகின்றது. தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்தியத் தேசிய நலன்களுக்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்தியத் தேசிய நலனைச் சிதைக்கின்ற வழியில் காலனியாக்கம் உள்ள+ராக வேகம் காண்கின்றது. முரண்பாடுகள் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்குள் தீவிரம் காண்கின்றது. இது ஏகாதிபத்தியத்தின் நலன்களை ஏகாதிபத்திய எல்லை கடந்து தனதாக்குகின்றது.
கடந்து வந்த ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவால், தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடு ஏகாதிபத்திய நாடுகளைப் பிரதிபலிக்கின்ற வரைதான், நேரடி ஆக்கிரமிப்பு இன்றி காலனியாக இருப்பதைத் தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஏகாதிபத்தியத் தேசத்தைக் கடந்து, தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களிடையினதாக மாறிவிடும் போது, நாடுகளின் மொத்தப் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் போது, காலனியாக்கம் புதியவடிவில் உருவாகி விடுகின்றது. இந்த இரு போக்கில் எது முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றதோ, அந்த வளர்ச்சி தான் காலனியா? அல்லது நவகாலனியா? அல்லது அரைக்காலனியா? என்பதை இன்று தீர்க்கமாகத் தீர்மானிக்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்து தீவிரமாக இருக்கின்ற போது, தேசங்களின் நலன்கள் ஊசலாடுவதும் ஏகாதிபத்திய முரண்பாட்டால் ஏற்படுகின்றது. இது நவகாலனித்துவ, அரைக்காலனித்துவ எல்லைக்குள் தேசிய நலனைத் தக்கவைக்கின்றது. இதனால் இங்கு காலனியாக்கல் நேரடி ஆக்கிரமிப்பினூடாக வெளிப்படும். இது முந்திய காலனிய வகைக்கு ஒப்பானது.
பன்னாட்டுத் தேசம் கடந்த நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடு மூலதனத்தின் குவிப்பால் சந்தையை முழுமையாக எல்லாத் துறையிலும் கைப்பற்ற மோதும் போது, தமக்குள் குடும்பமாகக் கூட்டுச் சேர்ந்து மற்றவற்றை விழுங்குகின்றன. அதே நேரம் தனக்குள்ளும் அவை ஆணாதிக்க வழியில் செரித்து விடுகின்றன. இது ஒற்றைத் தளத்தில் வளர்ச்சி பெறுகின்ற போது, அதை நோக்கி தேசங்கள் சிதைந்து கைக்கூலியமைப்பாக மாறுகின்ற போது, அந்நாடுகள் உள்ள+ர் ஆட்சியாளர்களினால் ஆளப்படும் புதிய வகையான காலனியாக மாறிவிடுகின்றது.
உலகவங்கி முதல் உலகமயமாதல் அமைப்புகள் எல்லாம், ஏகாதிபத்தியத் தேசிய அமைப்பைத் தாண்டித் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இங்கு தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஏகாதிபத்தியத் தேசிய நலனைப் பிரதிபலிக்கும் எல்லையில் மட்டும் தான், உலகமயமாதல் அமைப்புகள் ஏகாதிபத்தியத் தேசிய நலனைப் பிரதிபலிக்கின்றன. இதைத் தாண்டி நிற்கும் போது உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை, தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன. எந்தளவுக்குச் சுய ஆற்றலை நாடுகள் இழக்கின்றதோ அந்தளவுக்கு, அவை காலனியாக்கத்தை, நாடுகளைக் கைப்பற்றாமலே உருவாக்கி வருகின்றன. இங்கு அரைக் காலனிய, நவகாலனியக் கட்டத்திய தேசிய நலன்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டு, காலனியப் பொருளாதார நலன்கள் சுரண்டும் வர்க்கத்துக்குச் சார்பாகத் தீவிரப்படுத்தப்படுகின்றன. இந்தக் காலனியாக்கத்தை அடையாளம் கண்டு கொள்ளாதவரை, போராட்டத்தில் சிதைவுகள் ஏற்பட்டு, பிற்போக்குத் தேசியங்கள் அடிப்படை மதவாதங்கள் புரட்சியின் அடிப்படையில் முதன்மை பெறுகின்றன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளில்; எழுந்த வர்க்கப் போராட்டத்தின் திசைவிலகல், பாரிய நெருக்கடிகளைத் தொடரலையாக மாற்றியுள்ளது. கி.பி.1960-களில் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட திரிபுவாதத்தை எதிர்த்து, இலங்கையில் திரிபுவாதக் கம்யூனிஸ்டு கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, புரட்சிகரமான போராட்டப் பாதை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து இறுகிய சாதியமைப்பைத் தகர்ப்பது முதல் மலையகத் தோட்டத் தொழிலாளரை அணிதிரட்டுவது வரை என போராட்டப்பாதை உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டப்பாதை இலங்கைச் சமூகத்திலுள்ள பல்வேறு சமூக ஒடுக்குமுறையிலும் தனது தீர்க்கமான தலைமையைக் கட்சி நிறுவியது. இது இலக்கியம் முதல் சமூகத்தின் பல்வேறு துறைகளில் வீச்சாகத் தன்னை அடையாளம் காட்டியது.
எவ்வளவுக்கு அவை புரட்சிகரமாக இருந்த போதும், அரசியலை ஆணையில் வைத்து, பாட்டாளிவர்க்க ஆயுதம் ஏந்திய புரட்சிகரமான மக்கள் சர்வாதிகாரப் பாதையைக் கட்டியமைப்பதைத் தனது அரசியல் பணியாக்கத் தவறியது. அதாவது வீரம் செறிந்த பொருளாதாரப் போராட்டங்கள் அரசியல் புரட்சியாகி விடாது என்ற வரலாற்றுப் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேற தவறியது. மிகவும் முன்னேறிய புரட்சிகரமான பல பகுதிப் போராட்டங்களை முன்னெடுத்த கட்சி, அதன் அரசியல் வழியை உறுதி செய்யும் தலைமையை நிறுவத் தவறியது.
இதன் விளைவாகக் குட்டிப் பூர்சுவா தீவிரவாதப் புரட்சிகர வீச்சு எழுந்தது. இந்தவகையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நபர்கள் சேர்ந்து மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.) உருவானது. சண்முகதாசன் தலைமையில் இருந்து விலகிச் சென்ற பிரிவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, எதைக் கட்சி செய்யத் தவறியதோ, அதை முதன்மைப்படுத்தித் தனது பூர்சுவா அரசியல் மீது ஆயுதபாணியாக்கியது. இந்த அமைப்பு இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய தனது நிலைப்பாட்டைத் தமிழ் என்ற மொழி எதிர்ப்பாக உள்ளடக்கி வெளிப்படுத்திய நிலையில், மெதுவாக இனவாத அடிப்படையை உள்ளடக்கி, சிங்கள இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு உருவானது.
இந்த அமைப்பு கிராமப்புற விவசாய இளைஞர்களையும், மத்தியதர வர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வேகமாக, உடனடிப் புரட்சி பற்றிய கனவுகள் உடன் சேகுவாராவின் திடீர்ப் புரட்சித் தத்துவத்துடன் தன்னை ஆயுதபாணியாக்கியது. இந்த நிலையில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த திரிபுவாதக் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டுஅரசு, சுயத் தேசியம் பற்றிய கொள்கைகளை அமுலுக்கு வெம்பிப் போன வழிகளில் கொண்டு வந்தது. சுரண்டும் வர்க்கங்களை ஒழிக்காமல், அவர்களின் தயவில் இருந்தபடி உருவாக்கப்பட்ட சில சுயப்பொருளாதாரத் திட்டங்கள், சில குட்டிப்பூர்சுவா மற்றும் நிலப்பிரபுத்துவப் பிரிவுகளின் நலனை மேம்படுத்திய அதே நேரம், அடிமட்ட மக்களின் வாழ்வைச் சிதைத்தது. அத்துடன் தரகு மற்றும் அன்னிய நிலப்பிரபுத்துவப் பிரிவுகளின் எதிர்ப்பையும் சந்தித்தது.
இலங்கையில் இடைநிலையில் இருந்த பிரிவுகளின் ஆதரவையும,; பணப்பயிர் மற்றும் அடிப்படையான உணவு உற்பத்தியில் ஈடுபட்ட சில பிரிவுகளின் ஆதரவையும் பெற்ற அரசு, நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டையும், வறுமையையும் விதைத்தனர். இதனால் சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. சிங்களக் கிராமப்புற விவசாயிகளின் வறுமை அதிகரிக்க, யாழ்குடா நாடு மற்றும் வன்னி சார்ந்த பணப்பயிர் விவசாயம் புதிய பணக்காரர்களை உருவாக்கியது. அதாவது அடிமட்ட மக்களின் பொருளாதாரத்தைப் பட்டினியில்; இட்டு, இடைமட்டச் சக்திகளில் சில பிரிவுகளின் நலன்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அடிமட்ட மக்களிடம் அதி உயர்விலைக்குப் பொருட்களின் இறக்குமதியற்ற தட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பொருட்களை விற்றதன் மூலம், இடைத்தட்டின் சிலபகுதிகள் தம்மைப் புதிய பணக்காரர்களாக உறுதி செய்தனர்.
இந்த வளர்ச்சியில் தான் அரசு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. வறுமை மற்றும் பொருளாதார மந்தத்தினால் ஏற்பட்ட வேலையின்மை மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.) போன்ற குட்டிப் பூர்சுவா கட்சிகள் புரட்சியை நோக்கி கவரப்பண்ணியது. இதைத் தடுக்க, இளைஞர்களைத் திசை திருப்ப பல்கலைக்கழக அனுமதியில் இனவாத அடிப்படையைப் புகுத்தியது. அதே நேரம் மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.) சொந்தப் பூர்சுவாத்தனத்தில் தனிமைப்பட்டு வீரச் சாகசத்தில் ஈடுபட, அதை இலங்கை அரசு ஆயுத முனையில் அழித்தொழித்தது. அதில் 20,000 இளைஞர்கள் பலியிடப்பட்டனர். இதில் கணிசமானோர் பெண்கள் ஆவர். இலங்கையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு, அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தியது. இந்த அழித்தொழிப்பின் போது தமது பிள்ளைகளை இழந்தும், சிறைகளை நோக்கியும் சென்ற தாய்மையின் சிந்தனை, போராட்டம் பெண்களை வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தது. அரசு சார்ந்த அதிகார வர்க்கத்தினை நேரடியாக முதன் முதலாகச் சந்தித்த பெண்கள், அதன் சுவடுகளில் இருந்து தம்மை விடுவித்துவிட முடியவில்லை. இதற்கு எதிரான தொடர் சூழ்நிலைமைகள் தொடர்ச்சியாக மாறிமாறி வந்த வண்ணம் நீடிக்கின்றது.
சிங்கள இளைஞர்களைத் திருப்தி செய்ய உருவாக்கப்பட்ட பல்கலைக் கழக இனவாத அனுமதி முறை, தமிழ் இளைஞர்களைப் புதிய போராட்டத்தில் இறக்கியது. நீண்ட காலமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவாதக் குடியேற்றங்கள் மீது எந்தவிதமான எதிர்ப்பையும் முன்னெடுக்காத பூர்சுவா பிரிவு, தனது நலன்கள் மீது பாதிப்பு ஏற்பட்ட போது அதன் வீச்சு பரந்த ஆதரவுத் தளத்தைக் கைப்பற்றியது. யாழ்குடா சார்ந்து எழுந்த இந்த எழுச்சியின் ஆதரவு, யாழ் மக்களின் கல்வி பற்றிய அரசு தொழில் சார்ந்த படித்த அதிகார வர்க்கப் பிரிவு கண்ணோட்டத்தில் இப்போராட்டம் வெளிப்பட்டது.
இந்த நிலையில் தான் இலங்கையின் மாறிவந்த நிலைகள் மீது கட்சி தனது கவனத்தைக் குவிக்கத் தவறியது. அதன் மீதான போராட்ட அரசியல் திசை வழியில் தலைமை தாங்கி முன்னெடுக்கத் தவறியது. இதனால் தமிழ் இனவாதமும் (இயக்கங்கள்), சிங்கள இனவாதமும் (மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.)) இலங்கையின் புரட்சிகரமான பாத்திரத்தைக் கைப்பற்றி, பூர்சுவா எல்லைக்குள் சீரழித்தது. இவை நீண்ட 30 வருடத்தில் பல மாற்றத்தை, அழிவுகளைச் சந்தித்த போதும், அவர்கள் தான் இலங்கையின் அரசுக்கு மாற்றான புரட்சிகர வேடத்தை வழங்குகின்றனர். இது இனவாத அரசு சார்ந்து இனவாத எல்லைக்குள் தன்னை நிலை நிறுத்தி நிற்கின்றது.
இந்தப் பூர்சுவா புரட்சி பற்றிய மாயையின் பின் எழுந்த மாயையுடன் கூடிய ஆயுதப் போராட்டம் என்றுமில்லாத வகையில் பெண்களைத் தனக்குள் உள்வாங்கியது. அதே நேரம் தேசம் தனது தேசியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியத்திடம் அடகு வைத்து, பெண்களை அதீதமான வகையில் சுரண்டுவதன் மூலம் உழைப்பை விபச்சாரமாக்கியுள்ளது.
இந்த நிலையில் அரசு சாராத 3,000 தன்னார்வ அமைப்புகள் இனம், மொழி, சாதி, யுத்த எல்லை கடந்து ஊடுருவியுள்ளது. ஒரு புறம் பூர்சுவா இயக்கச் சிதைவுகள், மறுபுறம் ஏகாதிபத்தியக் கைக்கூலி அரசு சாராத தன்னார்வ அமைப்புகள் இலங்கையின் மொத்தப் புரட்சிகரச் சூழ்நிலைமைகளையும் ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக்கி, தேசத்தின் தேசியத்தைச் சிதைத்து அழிக்கின்றனர். இந்த வகையில் தன்னார்வக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் பலவற்றை உள்ளடக்கிப் பெண்ணியம் பேசத் தயங்கவில்லை. இதன் விளைவை ஆராய்வோம்.
கி.பி.1971-இல், மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.)யின் கிளர்ச்சிக்கு முன்பே அரசின் அழித்தொழிப்பு தொடங்கியதைத் தொடர்ந்து, 20,000 பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். பல ஆயிரம் பெண்கள் தம் குழந்தைகளை, கணவனை இழந்து தவித்தனர். ஆனால் சமுதாய ரீதியாக இலங்கைச் சமூகம் எதையும் குறைந்த பட்சத் தீர்வைக் கூடப் பெறவில்லை. இந்தக் கிளர்ச்சியையொட்டி நடந்த கைதுகள், படுகொலைகளை ஒட்டி, சண்முகதாசன் தலைமையிலான கட்சி தடைசெய்யப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த அரசு பயங்கரவாதத்தைத் தொடர்ந்து கட்சி தனது கடந்த புரட்சிகரப் போராட்ட வரலாற்றைக் கைவிட்டுச் சிதையத் தொடங்கியது. இந்தச் சிதைவு சமுதாயத்தில் புதிதாக எழுந்து வந்த முரண்பாடுகளை இனம் கண்டு தலைமை தாங்க முடியாத சூழ்நிலையுடன் வேகம் கண்டது.
மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.) இயக்கமானது கைது மற்றும் சிறை வாழ்க்கையில் இருந்து மீண்டு, புதிதாகத் தன்னை மீளக் கட்டியமைத்தது. இம்முறை அதீதமான தீவிர இனவாதத்துடன், அதீதமான தனிநபர் பயங்கரவாதத்துடன் தன்னை மீள ஒழுங்கமைத்தது. அண்ணளவாகக் கி.பி.1971-இல், ஒரு கிளர்ச்சியைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் பலமான ஓர் அமைப்பாகத் தன்னை ஒழுங்கமைத்தது. பல கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். தமிழ் ஈழப் பகுதியில் இனவாத அரசுக்கு எதிராகத் தீவிரம் பெற்றிருந்த யுத்தத்தை அரசு ஒடுக்க ஆயுதப் படைகளை வடக்கு மற்றும் கிழக்கில் குவித்திருந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு, மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.) ஆயுதபாணியாவதில் முழுமூச்சாக இருந்தது. இந்த ஆயுதபாணி வடிவம் முன்பைவிட தனிநபர் தாக்குதலில் அதிக கவனம் செலுத்தியது. மக்களை அணிதிரட்டுவதைக் கைவிட்டுக் கொரில்லா தாக்குதலூடான தனிநபர் அழித்தொழிப்பு பாதையைத் தெளிவாக முன்வைத்து ஒரு பயங்கரமான நிலைமையை வடக்கு மற்றும் கிழக்கு அல்லாத இடங்களில் தோற்றுவித்தது.
இதைச் சாதகமாகக் கொண்டு அரசு பயங்கரவாதம் அதே பாணியிலான தனிநபர் அழித்தொழிப்பைக் கையாளத் தொடங்கியது. இந்தத் தனிநபர் அழித்தொழிப்பை யார் செய்கின்றனர்? என்பதை அடையாளம் காணமுடியாத அராஜகவாத வன்முறையில் நாட்டை இட்டுச் சென்ற முழுப் பொறுப்பும் அரசியல் ரீதியாக மக்கள் விடுதலை முன்னணி (J.V.P.)யையே சாரும். மக்கள் விடுதலை முன்னணி (J.V.P.) தன்னுடன் முரண்பட்ட நபர்களைக் கூட படுகொலை மூலம் அழித்தொழித்தது. இவை எல்லாவற்றையும் அரசும் பயன்படுத்தி, தனது எதிரிகளைக் கொன்று ஒழித்தது. இந்த அழித்தொழிப்பு யுத்தம் இரண்டு ஆண்டுகளாகக் கி.பி.1988-1989-இக்கும் இடையில் தீவிரம் கண்டது. இதற்குச் சாதகமாக இந்தியப் படைகளின் வருகை சாத்தியமாகியது.
இந்தியப் படைகள் வடக்கு மற்றும் கிழக்கு யுத்தமுனையில் யுத்தத்தில் ஈடுபட, இலங்கைப் படை தென்பகுதியில் தனது அழித்தொழிப்பைத் தீவிரமாக்கியது. இந்த அழித்தொழிப்பில் சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலானோர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P.).யின் முக்கிய தலைவர்கள் முதல், பலர் கொல்லப்பட்டனர். இந்த யுத்தம் தென்பகுதி சமூகத்தில் பரந்த தளத்தில் பெண்கள் மீதான சுமையை அதிகரித்தது. இளம் தந்தையை இழந்த அனாதைகளின் சமூகப்பிரிவையும், கணவனை இழந்த விதவைகளின் சமூகப் பிரிவையும் தென்பகுதியில் தோற்றுவித்தது. இந்த யுத்தத்திலும் எண்ணிக்கையில் மதிப்பிட முடியாத பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அதே நேரம் பலரைச் சிறையில் அடைத்ததன் மூலம் இன்னுமொரு பெண்கள் கூட்டம் சிறையை நோக்கிய வாழ்க்கைக்குள்ளாகியது.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் யுத்தம் ஆரம்பம் முதலே தனிநபர் அழித்தொழிப்பை ஆணையில் வைத்தது. பல்வேறு குழுக்கள் தமது பூர்சுவா கண்ணோட்டத்தில் வேகமான புரட்சி பற்றிய பிரமையுடன், தாக்குதலை அரசியலாக்கித் தம்மைக் கட்டமைத்தனர். கி.பி.1983-இல், இனக் கலவரத்தைத் தொடர்ந்து எழுந்த எழுச்சியை இந்தியரசின் ஆயுதப்பயிற்சியூடான விஸ்தரிப்புவாத அணுகுமுறை, இயங்கங்களைத் திடீர் வெம்பிய வீக்கத்துக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் யாழ் போராட்டமாக, யாழ் தலைமையாக வளர்ச்சி பெற்ற போராட்டம், ஆயுதக் கவர்ச்சிவாத இராணுவ நடவடிக்கையூடான அழித்தொழிப்பில் நிலைநிறுத்தும் அரசியல் வடிவத்தில், அதிகாரத்தைப் பெறுவதற்கான ஆதரவுத் தளம் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் பூர்சுவா வர்க்கத்தின் வெளிப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் சாதிக் கண்ணோட்டம் கொண்ட (இங்கு தீவிரமான போக்கு இருக்கவில்லை. மாறாகப் பொதுவான சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டு இது இருந்தது.) ஆணாதிக்க இயக்கமாக எழுச்சி பெற்றது. இந்தியாவின் ஒருதலைப்பட்சமான தனது ஆதரவு குழுவுக்கான ஆயுதப் பயிற்சியை எதிர்த்து, ஆயுதபாணியாவதை விடுதலைப்புலிகள் தனியாக அதே பாணியில் மேற்கொண்டனர்.
இதன் போது சில இயக்கங்கள் பெண்களை உள்வாங்கிய போதும் அங்கு பெண்களைச் சமுதாயத்தின் பொதுவான ஆணாதிக்க மேலாண்மையிலே கையாண்டனர். இப்படி இயக்கத்தில் இணைந்த பெண்களை இயக்கத் தலைமை தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தியது முதல் இழிவாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன. விடுதலைப்புலிகள் பெண்களை இயக்கத்தில் இணைப்பது போராட்டத்துக்குப் பாதகமானதாக இருக்குமென விளக்கம் கொடுத்தனர். பெண்கள் பாலியல் அடிப்படையில் போராட்டத்தைச் சிதைக்கும் கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பெண்களை இயக்கத்தில் வைத்திருக்க முனையவில்லை. ஆதலால் வெளிவட்ட ஆதரவுத் தளத்தில் மட்டும் வைத்திருந்தனர். கி.பி.1985-களில் யாழ்ப்; பல்கலைக்கழகத்திலும், மற்ற இடங்களிலும் வழக்கம் போல் தமிழ் மக்களின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றில், பெண்கள் மீதான ஒழுக்கக் கோவை ஒன்றை எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் வடமராச்சியில் பெண்கள் அணியும் நீண்ட பாவாடையை (புடவை) அனைத்துப் பெண்களும் அணியக் கோரியதுடன், பெண்கள் சைக்கிள் ஓட்டுவது தடை செய்யப்பட்டது. இவை ஆணாதிக்கப் பண்பாடு, கற்பு கோட்பாட்டைப் பாதுகாக்கும் அடிப்படையில் எச்சரித்து பல விசயத்தை உள்ளடக்கியிருந்தது. இதற்கு எதிராகப் பல எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து மௌனமாகிப் போனது.
இக்காலத்தில் பெண்கள் கூட்டம், கூட்டமாக நிர்வாணமாகப் புதைக்கப்பட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்படாத இவர்கள் இயக்கத்தில் சேர்ந்த பெண்கள் அல்லது சிங்களப் பெண்களாக இருக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தது. இவர்கள் பாலியல் ரீதியாக முன்கூட்டியே சிதைக்கப்பட்ட பின்பே புதைக்குழிக்கு அனுப்பப்பட்டதை, உடல்களின் நிலைமை உறுதி செய்தது. இதன் பின்னணியில் இயக்கங்கள் இருந்தது திட்டவட்டமாகத் தெரிந்ததே. அக்காலக்கட்டம் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ் குடாநாடு என்பது இருந்தது குறிப்பிடத்தக்கது. எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைக்கும் அந்த உடல்கள் உள்ளாக்கப்படாமலும், அடையாளம் காணப்படாமலும், மீளவும் இயக்கங்களால் அழிக்கப்பட்டன.
இயக்க மோதல்கள் அதிகாரத்தைக் கோரித் தீவிரமானதைத் தொடர்ந்து, இந்த உட்போராட்டத்தில் மற்ற இயக்கங்களை விடுதலைப்புலிகள் அழித்த போது, ஆட்சேர்ப்பில் புதிய நெருக்கடியை விடுதலைப்புலிகள் சந்திக்க வேண்டியிருந்தது. அறிவியல் பூர்வமாகச் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வயது வந்த இளைஞர்கள் முன்புபோல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைவதைத் தவிர்த்தனர். இதனால் வயது குறைந்த இளைஞர்கள் இணையும் தன்மையால் விடுதலைப்புலிகளில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில் பெண்களை இணைத்துக் கொள்வது இலகுவான விசயமாக இருந்தது. ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்கு வழங்க மறுத்த புரிந்து கொள்ளும் அறிவியல் இன்மை மற்றும் ஆணாதிக்கக் குடும்பக் கட்டுப்பாட்டை மீறி வீட்டுக்கும், சமூகத்துக்கும் வெளியில் வாழத் துடிக்கும் பெண்ணின் இயல்பான தன்மையைக் கொண்டு விடுதலைப்புலிகள் பெண்களை உள்வாங்குவது இலகுவான விசயமாகியது.
கி.பி.1986-1987-ஆம் ஆண்டுகளின் இயக்க அழிப்புகளும், அதன் பின்னால் இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிகழ்ந்த மாற்றங்களையும் தொடர்ந்தே, விடுதலைப்புலிகள் பெண்களை அதிகளவில் தம்முடன் இணைக்கத் தொடங்கினர். இவைபற்றி தனியாக இந்தப் பகுதியைத் தொடர்ந்து ஆராய்வோம். யுத்தத்தின் மிகப் பெரிய பங்களிப்பைப் பெண் விடுதலைப்புலிகள் வழங்கும் வகையில் பெண்களின் சக்தி பலமானதாக விடுதலைப்புலிகளுக்குள் மாறியது. தமிழ் மண்ணில் ஆயுதம் ஏந்திய பெண்கள் வேறு சில இயக்கத்தில் இருந்த போதும், விடுதலைப்புலிகளில் தான் ஒழுங்கமைந்த வகையில் தனியான தலைமையில் தனியான படைகளாக உருவாகினர். இந்த மாற்றம் யாழ் குடாநாட்டு ஆணாதிக்க மரபில் பாரிய ஒரு சிதைவைக் கொடுப்பதுக்குப் பதில், குறித்த பெண்களுக்குள் மட்டும் இந்தச் சிதைவை எல்லைப்படுத்தியே ஏற்படுத்தியது. போராட்டம் மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட இளைஞர்களிடம் இருப்பதால், மாற்றங்களில் இருந்து சமூகம் எட்டவே(தூரமாகப்) பழைய பாணியில் தன்னை ஒழுங்கமைத்தது. இயக்கங்களில் இருந்து விலகி சாதாரண வாழ்வை வாழ விரும்பும் பெண்ணை, சமூகம் மற்ற பெண்ணின் கற்பு பண்பாட்டில் இருந்து வேறுபடுத்தியே பார்த்தது. அதே நேரம் அப்பெண், எல்லா இயக்க ஆண்களும் இயக்கத்தை விட்டு விலகிய போது எது நடந்ததோ, அதே போன்று பெண்களும், ஆணுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக் கொள்வதும் நிகழ்கின்றது.
இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது இயக்க எல்லை கடந்து 20,000 பேருக்கும் மேற்பட்ட சொந்தப் போராளிகளை யுத்தத்திலும், உள்முரண்பாட்டிலும் (இயக்கங்களுக்கிடையிலும், இயக்கத்துக்குள்ளும்) கொல்லப்பட்டனர். இதில் கணிசமான பகுதியினர் பெண்கள் ஆவர். இந்த இழப்புக்குப் பின்னால் தாய்மை, பாரிய கண்ணீர் கொண்ட சோகம் ஒன்றையே வாழ்வாக்கியது. இங்கு கணிசமான பகுதி இயக்கங்களின் அழித்தொழிப்பிலும், இயக்கங்களின் கைதுகளையும் தொடர்ந்து சொந்தக் குழந்தையை மீட்க அலையும் நிகழ்வே வாழ்வாகியது. இந்த அழித்தொழிப்பு 10 முதல் 15 வருடங்கள் வரை கடந்தும் முடிவுக்கு வந்துவிடவில்லை. யாழ் பூர்சுவா கண்ணோட்டம் கொண்ட சுயநலம் பிடித்த சமுதாயத்தில், இயக்கத்தை நோக்கி செல்லும் குழந்தைகளை மீட்கும் வழியிலும், பெண்கள் தம்மைப் பரிதாபத்துக்குரிய ஜீவனாக்கி விடுகின்றனர்.
பொதுவாகச் சிங்கள இனவாத யுத்தம் இலங்கையில் 50,000-இத்திற்;கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் பலியிட்டுள்ளது. இதனால் பெண்கள் தம் குழந்தைகளையும், கணவர்களையும் இழந்து நடுவீதிக்கு வந்துள்ளனர். விதவைகளின் எண்ணிக்கை சமூகமயமாகி வருகின்றது. உதாரணமாக ''மட்டக்களப்பு மாவட்டத்தில் 10,000 விதவைகள்"26 வாழ்வதாகச் சில ஆய்வுகள் நிறுவுகின்றன. இதில் பெரும்பகுதி 29 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதைத் தாண்டி மேற்கு நோக்கி 5 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். இதைவிட கொழும்பை நோக்கியும், இந்தியாவை நோக்கியும் நடந்த புலம் பெயர்வில் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் ஆண்கள்-பெண்கள் எண்ணிக்கையில் இயற்கை சமநிலை குலைந்து, பெண்கள் அதிகரித்து காணப்படுகின்றது. பொதுவாக யுத்தம் ஆண்களை அதிகமாகப் பலியிடுவதாலும், யுத்தத்தில் ஆண்கள் அதிகமாகப் பங்களிப்பதாலும், புலம்பெயர்வில் ஆண்கள் அதிகமாகப் புலம்பெயர்வதாலும் வடக்கு மற்றும் கிழக்கு நிலைமையைத் தலைகீழாக்கியுள்ளது.
பெண்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாகத் தமிழ் மக்கள் மாறியுள்ளனர். அத்துடன் யுத்தம் சார்ந்த வறுமை மேலும் சமூக அவலத்தைத் தீவிரமாக்கியுள்ளது. பெண்கள் வடக்கு மற்றும் கிழக்கில் தீர்மானகரமான சக்தியாக இன்று மாறியுள்ளனர். இது விடுதலைப்புலிகளின் போராட்டத்திலும் சரி, மக்கள் வாழ்விலும் சரி பொதுவான நிலைமையாகும். குடும்பத்தின் பொறுப்பை ஆண் துணையின்றி பெண்ணே பொறுப்பெடுப்பது தவிர்க்க முடியாத விளைவாகியது. இதனால் பெண்கள் வீட்டுக்கு வெளியில் வருவதை நிபந்தனையாக்கியது. புலம்பெயர்வில் கூட பொருளாதார ரீதியாகப் பலமான பிரிவு முதலில் வெளியேறுவதால், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவு வடக்கு மற்றும் கிழக்கில் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு நிலைமையில் பெண்கள் அதிகமான சமூக இயக்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதும், ஆணாதிக்க மரபை மாற்றிவிடவில்லை. விடுதலைப்புலிகளின் அரசியல் இதைச் செய்யும் வகையில் இல்லாததுதான் இதன் பிரதான அம்சமாகும். இதை விடுதலைப்புலிகளின் கட்டுரையில் ஆராய்வோம்.
பெண்கள் சமூகத்தின் பெரும் சக்தியாக மாறியதால் சில மரபான ஆணாதிக்கப் பண்பாடுகளைச் செயலிழக்க வைத்துள்ளது. ஆணின் பொருளாதாரப் பலம் சார்ந்து குடும்பம் என்ற கண்ணோட்டம் சிதைந்துள்ளது. பெண்ணே குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் பாதுகாக்க முடியும் என்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. ஆண்கள் பாரம்பரியமாகச் செய்து வந்த பல விசயங்களைப் பெண்கள் செய்வது என்ற நிலைக்குப் பொதுப் புறநிலைமை மாற்றியுள்ளது. அதே நேரம் மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த யாழ் சார்ந்த கணிசமான மேட்டுக்குடிக் குடும்பங்கள், வெளிநாட்டுப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்தல் என்ற நிலையில் யாழ் பகுதியில் புதிய வடிவமும் வழக்கில் வந்துள்ளது.
மொத்தத்தில் பெண்கள், சமூகத்தின் பொருளாதார நெருக்கடி, ஆண் துணையற்ற ஆணாதிக்கச் சமூகத் தனிமை, யுத்த அவலங்கள் என்ற நீண்ட துயரத்தில் சிக்கிவிடுகின்றனர். இதில் இருந்து மீண்டுவரும் பாதை எதையும் இந்தப் பெண்கள் கொண்டிருக்கவில்லை. இதற்குள் இயற்கையான பாலியல் தேவை மிகக் கடினமான ஆணாதிக்க ஒழுக்கக் கட்டமைப்புக்குள் நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. இளம் வயது விதவைக் கோலம், புலம் பெயர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கை, பிரதேசத்துக்கிடையிலான போக்குவரத்துத் தடை, திருமணம் செய்ய ஆண் இன்மை, வறுமை ஆகியவை பாலியல் நெருக்கடியை உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இவை எந்தச் சமூக ஆய்வுக்கும் இதுவரை உட்படாத விடயமாகவே இன்னமும் உள்ளது. இதற்குத் தீர்வு அற்ற நிலைமை பொதுவாக இருக்கின்றது. இதில் இருந்து பாரம்பரியமான ஒருவனுக்கு ஒருத்தி மற்றும் கற்புக் கோட்பாட்டை மீறுவது நிகழ்கின்றது. இது கணிசமான பிரிவை இரகசியமான வகையில் பாலியலில் ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டை மீறுவது பொதுவான நிலைமையாக உள்ளது. இதற்கு எதிராகக் கடுமையான சமூகத் தண்டனைகளையும், இயக்கத் தண்டனைகளையும் நியாயப்படுத்தி பத்திரிக்கைகளில் சில செய்திகள் வெளிவந்த போதும், இது தீர்க்கப்பட முடியாத சமூகப் பிரச்சினையாகியுள்ளது.
உழைப்பதுக்கு உழைப்பு மறுக்கப்பட்டு, பசிக்கும்போது உணவைக் களவு எடுத்து உண்பதுக்குத் தண்டனை வழங்கின் எப்படி அநீதியாகுமோ, அப்படித்தான் இயற்கையான பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதும் நிகழ்கின்றது. இதையொட்டி, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாகக் குற்றம் சாட்டுவது தவறாகும். இரகசிய உறவுகள் ஆணாதிக்க மரபில் இருந்து வந்ததாகும். யுத்தத்தில் இது ஒரு பொதுவான பிரச்சினையாக முன்னிலைக்கு வந்துள்ளது அவ்வளவே. விடுதலைப்புலிகள் இதை ஒரு பிரச்சினையாகக் கருதாததும், இந்த நிலைமையைத் தீவிரமாக்க போராட்டம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காத காரணமே, புலிகளின் மீதான அடிப்படையான விமர்சனமாகின்றது. இங்கு மையமான பிரச்சினை ஆணாதிக்க அமைப்பு வடிவமே. இது காலாகாலமாக இருந்து வருகின்றது. இதுவே இரகசிய உறவுகளை உற்பத்தியாக்குகின்றது. இதை மாற்ற போராடாததுதான் விடுதலைப்புலிகள் மீதான விமர்சனமாகின்றது.
இது ஒருபுறம் நிகழ, மறுதளத்தில் மேற்கில் இருந்து வரும் பணம் சார்ந்த சமூகச் சீரழிவும் பாலியலில் நிகழ்கின்றது. பகட்டான வாழ்வு, அது சார்ந்த விபச்சார அத்துமீறல்கள் சமூகத்தைச் சீரழிக்கின்றன. கொழும்பு சார்ந்து புலம்பெயர்ந்த பெரும்பாலானோரும், இந்தியா சார்ந்து புலம்பெயர்ந்த கணிசமான பிரிவினரும் இந்தப் பகட்டு வாழ்வில் சமூகச் சீரழிவைப் பொதுத் தன்மையாக்குகின்றனர். கொழும்பைச் சுற்றிலும் நவீன விபச்சார விடுதிகள், மஜாஜ் மையங்கள் வெளிநாட்டுப் பணம் சார்ந்து, ஆயிரக்கணக்கான இளம் சிங்களப் பெண்களை வைத்து தமிழ் இளைஞர்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்ப்பதில் மையமிட்டுள்ளது. இன்று இலங்கையில் நாள் ஒன்றுக்கு ''1000 கரு அழிப்புகள்"(28.5.2000)27 சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நிகழ்கின்றது. இதில் திருமணம் செய்யாதவர்களின் கரு அழிப்பு 50 சதவீதமாகும். அந்தளவுக்குச் சமூகச் சீரழிவுகள் விரிவாகியுள்ளது.
கொழும்பில் புலம் பெயர்ந்த கணவனிடம் போய் சேரும் கனவுடன், பெண்கள் நீண்ட காலமாகத் தங்கி நிற்பதும், இங்கும் பாலியல் அத்து மீறல்கள் நடைபெறுவதும் காணப்படுகின்றது. இதில் இருந்தே புலம் பெயர்ந்த தமிழன் தான் திருமணம் செய்யும் பெண்ணைத் தன் சொந்தத் தாயுடன் விட்டு வந்ததைப் பெருமைப்பட பீற்றுகின்றான். சட்ட விரோதமாகப் புலம் பெயரும் கணிசமான பெண்கள் விரும்பியும், கட்டாயப்படுத்தியும்,பாலியல் ரீதியில் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இதனால் தான் புலம்பெயர்ந்த தமிழன் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ய மறுக்கின்றான்;. இதைச் சொல்லியே பெண் தேடுகின்றான். இங்கு பெண்களைப் பொதுமைப்படுத்தி இழிவாக்குவது புலம்பெயர்ந்த ஆணாதிக்கப் போக்காக மாறியுள்ளது.
இந்தியாவில் அரசின் அகதி முகாம் சார்ந்து பெண்கள் வறுமை காரணமாக, இந்திய அதிகார வர்க்கத்தாலும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தாலும் பலாத்காரம் செய்யப்படுவது பொதுத் தன்மையாக உள்ளது. சிங்கள இனவெறி ஆணாதிக்க இராணுவக் கற்பழிப்புகள் ஒருபுறம் நிகழ, மறுதளத்தில் பெண்களின் சகலவிதமான கற்புரிமையையும் கொச்சைப்படுத்தி இரசிக்க முனைகின்றது. இந்திய இராணுவமும் இதைச் செய்ய பின்நின்றதில்லை. சில பகிரங்கமாக, பொதுவான அரசியல் போராட்டமாக மாறிய போதும், எண்ணிக்கைக்கு வராத பெண்கள் கற்பழிக்கப்பட்டு மௌனமாகியுள்ள அதே நேரம், கணிசமான பகுதியினர் உடல் ரீதியாகவே அழிக்கப்பட்டனர். போராட்டத்தையும் சொந்தச் சுயத்தையும் இழந்து இந்திய, இலங்கை அரசுகளின் கைக்கூலியான இயக்கங்கள் உதிரியாகவும், இயக்கமாகவும் பெண்களைக் கற்பழிப்பதும், உடலை அழிப்பதும் என பெண்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைத்துள்ளனர். விடுதலைப்புலிகளில் சேர்ந்த பெண்கள் காதல் செய்வது, திருமணம் செய்வது போன்றவற்றில் உள்ள கடினமான போக்கு பெண்களின் இயற்கையான உணர்வுகளைத் தகர்க்கின்றது.
தமிழ்ப் பெண்களின் நிலைமை எல்லையில்லாத துன்பத்தில் ஆழ்த்தி, அழுந்தி வாழ வைக்கின்றது. இந்த இடைவெளிகளில் நிவாரணம் என்ற பெயரில் புகுந்து கொள்ளும் ஏகாதிபத்திய நிதி ஆதாரத்தில் இயங்கும்; கைக்கூலி அமைப்புகளான தன்னார்வக் குழுக்கள் பெண்கள் மத்தியில் கடைவிரித்துள்ளது. இவர்கள் பெண்களின் பிரச்சனைகளைத் திசை திருப்பி ஏகாதிபத்தியத் தேசியச் சிதைப்புக்கு வழிகாட்டுகின்றனர்.
தென்பகுதிகளில் வாழும் சிங்களப் பெண்கள் மக்கள் விடுதலை முன்னணி (து.ஏ.P) அழித்தொழிப்பு ஊடாகச் சந்தித்த நெருக்கடிகளைத் தாண்டி, சிங்கள இனவாத யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி, பெண்கள் மனநோயாளிகளாக மாறுகின்றனர். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் 30 முதல் 50 ஆயிரம் சிங்கள இளைஞர்களைப் பலி கொடுத்த தாய்மைக்கு, எந்த இனவாதமும் பரிகாரம் வழங்கி விடவில்லை. யுத்தமுனையில் சிக்கியுள்ள இரண்டு இலட்சம் இளைஞர்களின் தாய்மை மற்றும் மனைவியின் சோகம் எல்லையில்லாத மனித அவலத்தைச் சமூகமயமாக்கியுள்ளது. பாலியல் நெருக்கடி முதல் நாள்தோறும் வரும் யுத்தத் தோல்விகள், வெற்றிகள் ஆகியவை தாய்மையின் கண்ணீருக்கிடையிலான அவலத்தின் பிறப்பாகின்றது. இந்தப் புத்திரச் சோகத்தைச் சிங்களக் கூலிப்படை இனவாதம் தீர்த்து விடவில்லை. இதைவிட சிங்களப் பொதுமக்கள் மீதான எல்லைப்புற இயக்க அழித்தொழிப்புகள் ஈவிரக்கமற்ற மனிதப்பண்பாட்டைக் கொண்டவை. இது பெண்களைச் சமூக அகதியாககுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகளால் கட்டாயப்படுத்திப் புலம்பெயர வைத்த முஸ்லிம் மக்களின் அவலம், பெண்களைச் சமூக வறுமைக்குள் தள்ளிச் சென்றுள்ளது. இது தமிழ், சிங்களப் புலம்பெயர்வுகளிலில் பொதுவாக இருந்த போதும், அவர்களைப் பாதுகாக்க பலமான அரசு வடிவமாக விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் இருந்தளவுக்கு, முஸ்லிம் மக்களிடத்தில் அது இல்லை. பொதுவாகவே வேறுபட்ட தன்மையில் நடந்த புலம் பெயர்வுகள் பெண்களின் வறுமையைத் துல்லியமாகத் தீவிரப்படுத்தியதன் ஊடாக, பாலியல் ரீதியாக ஆண்களுக்கு இசைந்து அடிபணிந்து போகும் தன்மை அதிகரித்துள்ளது. யுத்தத்தில் ஈடுபடும் கூலிப்பட்டாளமான இனவாத இராணுவத்தின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய, எல்லைப்புறச் சிங்களப் பெண்களையும், இதற்காக அரசே உருவாக்கி விடும் பெண்களையும் தாண்டி, இராணுவத்தில் பெண்களையும் இணைத்து, பாலியல் விபச்சாரத்தை இராணுவம் சார்ந்து உருவாக்கிச் சமூகத் தன்மையாக்குகின்றனர்.
இன்று மொத்தத்தில் விபச்சாரம் பல்துறை சார்ந்து விரிவாகியுள்ளது. நிலங்கா ஜயசூரியா செய்த ஆய்வில், (இதற்காக அவர் மிரட்டப்படுகின்றார்.) ''இலங்கையில் 10 இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை"(இலக்கம்-168)11 உறுதி செய்துள்ளார். வெளிநாட்டில் கடின உழைப்பில் உருவாகிச் சொந்த நாட்டுக்குள் சொகுசாகச் செல்லும் பணம், உலகமயமாதலால் தீவிரமாகும் வறுமை, யுத்தச் சீரழிவுகள் விபச்சாரத்தைச் சமூகத்தன்மையாக்குகின்றது.
மறுதளத்தில் பெண்களின் சமூக வறுமையைப் பயன்படுத்தி உழைப்பை அற்பமாகச் சுரண்டுவதில் இலங்கை அரசு யுத்தத்தின் இனவாத முகமூடியின் பின்னால் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லையற்ற சுதந்திரமான, ஜனநாயகச் சுரண்டலை நடத்த உருவாக்கப்பட்டவையே சுதந்திர வர்த்தக வளையம் ஆகும். கி.பி.1998-இல், கைத்தொழில் அமைச்சின்(அமைச்சகத்தின்) அறிக்கையின்படி, கி.பி.1997-ஆம் ஆண்டில்,890 தொழிற்சாலைகளில் 2,80,000 பேர்களைத் தொழிலாளிகளாகக் கொண்டு இயங்கியது, சுதந்திர வர்த்தக வளையம். அது இன்று கி.பி.1997-ஐப் போல் ஆறு மடங்காக (அண்ணளவாக 13 இலட்சம் தொழிலாளர்களாக)அதிகரித்துள்ளது. 80 சதவீதம் திருமணம் செய்யாத உடல் வலுவுள்ள இளைய தலைமுறையினரின் உழைப்பைச் சுரண்டி, இலங்கையின் ஆடையேற்றுமதியில் 52 சதவீதத்தை இவை ஈடுசெய்கின்றன. இன்று மொத்த ஏற்றுமதியின் அளவு 245 கோடி அமெரிக்க டொலராகும் (19.3.2000)18 (அண்ணளவாக 17,150 கோடி இலங்கை ரூபாயாகும்). இப்பணம் தேசம் கடந்து பன்னாட்டு மூலதனத்தில் போய்ச் சேருகின்றது. இங்கு வேலை செய்யும் பெண்களைப் பொது விபச்சாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்று, சுரண்டலை இலங்கைச் சமூகத் தளத்தில் இருந்து அன்னியமான வகையில் கோரமாக்கியுள்ளது.
இங்கு கிராமப்புற விவசாயச் சிங்களப் பெண்கள் தமது வாழ்வின் வறுமையைப் போக்க, அற்பக் கூலிக்கு மாரடிக்கக் கொண்டு வரப்பட்ட அவர்களை, மேற்கத்திய மிருகப் பண்ணைகள் போன்று வாழும் வாழ்க்கையில் சிக்க வைத்து பாலியல் ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும் சுரண்டுவதை எந்த மனித உரிமையும் கண்டு கொள்ளவில்லை. இலங்கையின் சட்டத்துக்குப் புறம்பான ஒழுங்கில் இங்கு இலட்சக்கணக்கில் சுரண்டப்படும் பெண்கள், திருமணம் செய்ய முடியாத அவலத்தில் சிக்கிவிடுகின்றனர். திருமண விளம்பரமே, சுதந்திர வர்த்தக வளையத்தில் வேலை செய்யாத பெண்ணைக் கோரி விண்ணப்பிக்கும் அளவுக்கு, ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டில் அப்பெண்களின் கற்புரிமை பலாத்காரமான சுரண்டல் வழிகளில் சிதைக்கப்பட்டிருப்பதை நிர்வாணமாக்குகின்றது.
இந்தச் ''சுதந்திர வர்த்தக வளையத்தில் தொழில் புரியும் பெண்களில் 92 சதவீதமானோர் சொந்த இடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து சிறைக் கொட்டகைகள் போல் இருக்கும் நெரிச்சல்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற இழிந்து போன மக்களாக வாழ்கின்றனர். இங்கு தொழில் புரிவோரில் 52.7 சதவீதத்தினர் ஏதோ ஒரு விதத்தில் மனப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். (இலக்கம்-174)11 உலகமயமாதலின் குறியீட்டுச் சின்னமாக, அழுகல் பிடித்த சீழ்களாக இந்தப் பிரதேசமே மாறிவிட்டது. மக்கள் மனநோயாளிகளாக, ஆணாதிக்க வக்கிரங்களைத் தேய்த்துக் கொள்ளவும், வக்கரித்து பார்க்கவும், இரசிக்கவும் ஏற்ற இடமாக, பண்பாட்டுக் கலாச்சார ரீதியாக இங்கு தொழில் புரியும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டனர்.
மலையகப் பெண்களின் நிலைமையோ சகிக்கமுடியாத தொடர்ச்சியான வாழ்க்கை முறைக்குள் வாழ்கின்றனர். மலையக மக்கள் சார்ந்து ஆட்சியைப் பிடிக்கும் எச்சில் நக்கிகள் அந்த மக்களின் போர்க் குணமிக்க போராட்டத்தை அன்னிய ஏகாதிபத்தியத்துக்கும், இனவாத அரசுக்கும் காட்டிக் கொடுத்து நக்கிப் பிழைக்கின்றனர். இதனால் எந்தவிதமான மாற்றத்தையும் சொந்தக் குடியிருப்பு வசதியில் இருந்து, தமது அன்றாட வாழ்வின் சிறிய முன்னேற்றத்தைக் கூடப் பெற்றுவிடவில்லை. கூலிப் பெண்களை வேலை வாங்கும் அதிகாரிகளின் பாலியல் தேவைக்குக் கட்டாயப்படுத்துவதும், வேலை செய்யும் இடத்தில் குழந்தைக்கு நிம்மதியாகப் பால் கூட கொடுக்க முடியாத ஆணாதிக்க வக்கிரத்தை எதிர் கொண்டும் வாழும் பெண்கள், குடும்பத்தின் வறுமையுடன் கூடிய கடின உழைப்பின் மீதான சுமை காரணமாக, ஆண்களின் போதைக்குள் நெரிந்து அடிவாங்கி வாழ்கின்றனர். ஆனால் இனவாதக் கண்ணோட்டத்தில் நடத்தப்படும் கீழ்த்தரமான நிரந்தரமான கருத்தடை அறுவைச் சிகிச்சை என்றுமில்லாத வேகத்தில் அவர்களை வந்தடைகின்றது.
கி.பி.1998-இல், 4,880 பேர் வாழ்ந்த ஒரு தோட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வை அட்டவணை-5-இல், பார்ப்போம். (7.5.2000)27
அட்டவணை - 5
1.தோட்டத்தில் மொத்தக் குடும்பம்
2.15-49 வயது குடும்பம்
3.பெண்சத்திரச்(கருத்தடை) சிகிச்சை
4.ஆண்சத்திரச்(கருத்தடை)சிகிச்சை
5.தற்காலிகக் குடும்பத்திட்டம்
1 2 3 4 5
பிள்ளைகள் இல்லாதோர் 124 99 - - -
01 பிள்ளை உடையோர் 208 190 - - 16
02 பிள்ளை உடையோர் 350 282 149 3 9
03 பிள்ளை உடையோர் 319 233 191 8 4
04 பிள்ளை உடையோர் 140 89 58 2 -
05 பிள்ளை உடையோர் 94 23 19 - -
மொத்தம் 1,235 916 424 13 29
ஒரு குழந்தையுடனேயே சத்திரச்(கருத்தடை) சிகிச்சை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் மிகமோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தில் இவை தீவிரமாகக் கையாளப்படுகின்றது. இனவாதத்துடன் கூடிய ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தில் நடத்தப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு என்ற பண்பாடு அவர்களிடையே நாகரிகப் பண்பாட்டு வழியில் குழந்தை சார்ந்து திணிக்கப்படுகின்றது. வறுமைக்கும், இயற்கைக்கும் உள்ள நேர்விகிதப் பிறப்புவிதி மறுக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கையின் கருவளம் அழிக்கப்படுகின்றது.
ஏகாதிபத்தியம் உலகளவில் சொந்த நாட்டில் குழந்தை பிறப்பை ஊக்குவித்து பண உதவிகளை விரிவாக்கிய படி, மற்ற நாடுகளில் குறிப்பாக ஏழைகள் இடையே அறிவியலுக்குப் புறம்பாக நிரந்தரமாகக் கருத்தடை செய்கின்றனர். இதற்கு ஏகாதிபத்தியக் கைக்கூலி அமைப்புகளான தன்னார்வக் குழுக்கள் தீவிரமாக இயங்குகின்றன. அதைவிட அரசு இதைத் திட்டமிட்டு அமுல் செய்கின்றது. உலகமயமாதலின் உலக வங்கி சிறப்பு நிதி ஆதாரங்களை உருவாக்கி, கைக்கூலி தேசிய அரசுகளைக் கட்டளையிட்டு அமுல்படுத்துகின்றது.நாட்டில் தற்போது இருக்கும் கைக்கூலி அரசுகள் மதம், இனம், வர்க்கம் சார்ந்து இதைத் தீவிரமாக்கி அமுல் செய்கின்றன. அதேநேரம் உலகமயமாதல் பண்பாட்டில் குழந்தை பெறுவது அநாகரிகமானது என்ற பொதுக் கண்ணோட்டம் பண்பாட்டு ரீதியாகப் புகுந்து விடுகின்றது. ஒரு குழந்தை அல்லது இரண்டை மீறி குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் கேவலமாகப் பார்க்கப்படுகின்றாள். இது காட்டுமிராண்டித்தனமான நடத்தையாக நோக்கப்படுகின்றது.
அதாவது ஒட்டுமொத்தத்தில் குழந்தை என்பது தனிப்பட்ட நபர்களின், ஆடம்பரப் பொழுதுபோக்கு வாழ்க்கையை ஒட்டிய நாகரிகத்தின் எல்லைக்குட்பட்ட விடயமாக மாறிவிடுகின்றது. இந்த உலகமயமாதல் பண்பாடு இலங்கையில் ஊடுருவி, சமுதாயத்தைப் பண்பாட்டு வழியில் சிதைக்கின்றது. மறுதளத்தில் பலாத்காரம், ஆசை காட்டுதல், ஏமாற்றுதல், மோசடி, பணத்தைக் கொடுத்தல் போன்ற பல வழிகளில், மறைமுகமான கட்டாயப்படுத்தல் ஊடான வன்முறையின் ஊடாகக் கருவளம் சிதைக்கப்படுகின்றது.
ஏகாதிபத்தியத்துக்குத் தேசிய (இலங்கை) வளத்தைத் தாரை வார்த்து கொடுப்பதால் சொந்த நாட்டில் ஏற்படும் வறுமையால் பிழைக்க வழியற்ற மக்கள் கூட்டம் தொழில் தேடி மத்தியக் கிழக்கை நோக்கி ஓடுகின்றனர். மிக கடினமான உழைப்புக்கும், சர்வதேச உழைப்புக்கும் எந்தவிதமான சட்டப் பாதுகாப்பையும் பெற முடியாத கொத்தடிமைகளாக நாட்டைவிட்டு, மேற்கைத் தவிர்ந்த நாடுகளுக்குச் செல்லுகின்றனர். இந்த வகையில் புலம்பெயர்ந்து தொழில் புரிவோர் எண்ணிக்கை ''10 இலட்சமாக" (இலக்கம்-177)11 இன்று உள்ளது. இதில் பெரும்பகுதி பெண்களாக இருக்கின்றனர். இவர்கள் மத்திய கிழக்கிலும், சிங்கப்பூரிலும் தொழில் செய்கின்றனர். கி.பி.1997-1998-இல், ''3 இலட்சத்துக்கும் அதிகமானோர்"11 தொழிலுக்காகப் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்தப் புலம்பெயர்வுகள் பாரம்பரியமான குடும்ப அமைப்புகளைச் சின்னாபின்னமாக்குகின்றன. ஒரு பெற்றோர் புலம் பெயர்வதன் மூலம், புலம்பெயர் நாட்டுக்குப் பெண்கள் போகும்போது பாலியல் ரீதியாக அதிகமான அச்சுறுத்தலுக்கும், வன்முறைக்கும் உள்ளாகின்றனர். பெண்கள் புலம் பெயரும் போது குடும்பச் சிறுமிகள் பாலியல் ரீதியாகச் சொந்தக் குடும்பத்தின் கணிசமான அங்கத்தவராலேயே சிதைக்கப்படுவதும், சிறுவர்கள் ஓரினச் சேர்க்கைக்குள் அழிக்கப்படுவதும் நிகழ்கின்றது. அத்துடன் கணிசமான ஆண்கள்; அன்னியப் பெண்களை நாடிச் செல்வதும் அல்லது கற்பழிப்பதும் அதிகரிக்க, விபச்சாரம் ஒரு தொழிலாக மாறிவிடுகின்றது.
ஆண்கள் புலம் பெயர்கின்ற போது கணிசமான பெண்கள், வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்வதென பல தளத்தில் சமூகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. பெண்ணின் ஒழுக்கம் இங்கு அடிப்படையான கேள்வியாக மாறிவிடுகின்றது. பெண்கள் மீதான கற்பு பற்றிய ஆணாதிக்கக் கண்காணிப்பு சந்தேகத்தைச் சமூகத் தன்மையாக்கி, பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் கட்டுகின்றது. அதாவது சமூகத்தின் பல்வேறு கூறுகளில் காணப்படும் நெருக்கடிகளில் நடக்கும் சம்பவங்கள், பொதுவான சமூகப் பார்வையாகி விடுகின்றது.
புலம் பெயர்ந்த சமூகத்தின் புதிய தலைமுறை இரண்டு முக்கியமான விடயத்தைக் கைவிட்டுள்ளது. பாரம்பரியமாகச் சாதியை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட திருமணத்தையும், ஆணாதிக்கக் கற்புக் கண்ணோட்டத்தையும் அலட்சியப்படுத்துகின்றது. இது பாரிய முரண்பாட்டை ஆணாதிக்கத் திருமண முறையில் ஏற்படுத்தியுள்ளது. இந்த முரண்பாடு பெற்றோருக்கும், பிள்ளைக்குள்ளும் தீவிரமாகிப் போவதால் குழந்தைகள் வேகமாகச் சுய முடிவை எடுக்கின்றனர். இது அறிவியல் பூர்வமாகவும், சீரழிவு ரீதியாகவும் என இரண்டு நேர் எதிரான பண்பாட்டுக் கண்ணோட்டத்தை உருவாக்குகின்றது. ஆணாதிக்கக் கற்பு என்பது நொறுங்கிப் போகின்றது. முரண்பாட்டின் தீவிரம் பெண்களை வீட்டை விட்டே ஓட வைக்கின்றது. அநேகமாக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் சீரழிவு வாழ்க்கைக்குள் பெண்களைத் தள்ளிவிடுகின்றது.
போராட்டத்தில் பங்கு பெற்றாது ஒதுங்கி, பின் கொழும்பு போன்ற பிரதேசத்தில் சுயமாக வெளிநாட்டுப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த பெண்கள் இங்கு திருமணம் முடித்து வருகின்ற போது, இங்கு உள்ள வாழ்க்கையைச் சகித்துக் கொள்வது மிக கடினமாக மாறிவிடுகின்றது. அங்கிருந்த சொகுசு ஆடம்பரத்துடன் கூடிய சுகபோக வாழ்க்கை, இங்கு மிக இறுக்கமான, கடின உழைப்புடன் கூடிய நீண்ட நேர வேலைகள் காரணமாகவும், மரபாக வாழும் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்ட இறுக்கமான ஆணின் பார்வைக்கிடையிலும் ஏற்படும் முரண்பாடு, குடும்பத்தை விட்டே பெண்கள் ஓடுவது சர்வசாதாரண சம்பவமாகின்றன. இலங்கையில் யுத்தப் பிரதேசத்திலும், யுத்தமற்ற பிரதேசத்திலும் ஏற்பட்ட வௌ;வேறு விதமான பெண்களின் சுயேட்சைத் தன்மை, புலம்பெயர் ஆண் சமூகத்துக்கு எட்டாத, புரியாத விடயமாகின்ற போது, அங்கு இருந்து வரும் பெண்ணின் நடவடிக்கைகள் ஆணின் பார்வையில் அத்துமீறலாகின்றது. இதனால் குடும்பங்கள் இறுக்கமான தீவிரமான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. ஆணின் பார்வையில் வளர்ச்சி ஏற்படாத அதே நேரம், பெண்ணின் சீரழிவு என்ற இரு நேர் எதிரான தன்மை எதிரும் புதிருமான நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது.
இலங்கையில் பெண்கள் சந்திக்கும் நெருக்கடி பல தளங்களில் சமூகச் சீரழிவுகளைக் கொண்டு வருகின்றது. பாலியல் பற்றி வீங்கி வெம்பிய கண்ணோட்டம், சமூகத்தின் இயற்கையான உணர்வுகளின் பாதிப்புகள், தவிர்க்க முடியாமல் கருஅழிப்பைச் சமூகமயமாக்குகின்றது. சமூகச் சிதைவால் கொழும்பை அண்டிய ஓரிரு பகுதியில் மட்டும் ''சட்டவிரோதமாக நாள் ஒன்றுக்கு 500 முதல் 700 கருஅழிப்பு"(இலக்கம்-145)11 நடைபெறுகின்றது. இது ஒட்டுமொத்த இலங்கையில் பார்ப்பின் இதன் தாற்பரியம் மிகப்பெரியது. ஒட்டுமொத்தச் சமூகச் சிதைவு மீளமுடியாத நாட்டின் அவலமாகின்றது.
பிரிட்டீஸ் வாராந்தர மருத்துவ அறிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, 10.6.2000 தி இலன்செட் (வுர்நு டுயுNஊநுவு) பத்திரிக்கை தகவல் ஒன்றின் படி, சிங்கள இனவாதச் சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் இனக் கைதிகளில், ஆண்-பெண் வேறுபாடின்றி 20 சதவீதம் பேர் பாலியல் ரீதியாக (கற்பழிப்பு உட்பட) வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக 17 பேர் கொண்ட மருத்துவர் குழு நேரடியாகச் செய்த ஆய்வு ஒன்றின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்தியக் கொள்கைக்காக இனவாதத்தைச் சமூக மயமாக்குகின்றனர். இந்த யுத்தத்தின் திரைக்குப் பின்னால், மக்கள் பண்பாட்டுக் கலாச்சார ரீதியாகச் சிதைக்கப்படுகின்றனர்.
இந்த இனவாத யுத்த முகமூடியின் பினனால்; இலங்கை அரசு உலக வங்கியின் உத்தரவுப்படி, தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தமிழ்-சிங்கள இன முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மதவாத அடிப்படையில், அவரவர் மத, இனக் கொண்டாட்டத்தை, இனம், மதம் சார்ந்து மட்டும் வேலையற்றதாக மாற்றியதை, எந்தவகையான எதிர்ப்புமின்றி அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த உதாரணம் போன்று கல்வியில் மாணவர்களுக்கான ஆசிரியர்களின் எண்ணிக்கையை உலக வங்கி குறைக்க கோரிய போது, இன ரீதியாக இரண்டு மடங்கு இடைவெளியில், தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இப்படி பல செயல்களை உலக வங்கி உத்தரவுக்கேற்ப இலங்கை இனவாத அரசு இனவாத யுத்த முகமூடியின் பின்னால் செய்து வருகின்றது.
இலங்கையில் உலகமயமாதலைத் தீவிரப்படுத்த இனவாத யுத்தம் அடிப்படையான உள்ளடக்கமாகின்றது. இது சிங்களத் தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இனவாத எல்லைக்குள் முடுக்கிவிடுவதன் மூலம், சொந்தத் தேசியம் ஏகாதிபத்தியத்துக்கு இனம் கடந்து தாரை வார்க்கப்படுகின்றது. இதை எந்த வெட்கமும், மானமும் இன்றி விடுதலைப்புலிகளும், மக்கள் விடுதலை முன்னணி(து.ஏ.P.)யும் நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடு கொள்ளவில்லை. ஆள்பவன் யார் என்பதைத் தாண்டி, தேசத்தின் தேசியப் பொருளாதாரம் ஏகாதிபத்தியத் தேசம் கடந்த பன்னாட்டுச் சூறையாடலுக்கு எதிரானதாக இல்லாத வகையில், தேசியப் பொருளாதாரம் அழிக்கத் துணைபோகின்றனர்.
பெண்கள், தேசியச் சிதைவில் தமது கற்புரிமையை விபச்சாரத் தளத்தில் சிதைக்க ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எல்லையில்லாத வகையில் பெண்களின் அவலம் சமூக அவலமாகியுள்ளது. எங்கும் பெண்கள் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாகச் சுயத்தை இழந்து அன்னியப்படுகின்றனர். மற்றவரின் தயவு, அண்டி வாழும் வாழ்க்கை என பெண்கள் இழிநிலைக்கு மேலும் மேலும் தாழ்ந்துள்ளனர், தாழ்ந்து செல்லுகின்றனர். இலங்கையில் பெண்கள் மூச்சுவிட முடியாத சுமையில் சிக்க, அதை ஏகாதிபத்தியத் தன்னார்வக் குழுக்கள், ஏகாதிபத்தியம் கழிக்கும் மலத்தைக் கொண்டு, அதை மூலதனமாக்கி அதற்குச் சேவை செய்ய, பெண்களை அடுத்த கட்டத்துக்குச் சிதைத்துச் செல்லுகின்றனர்.