ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு சார்ந்து இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பசுமைப் புரட்சியானது இங்கு வாழ்ந்து வந்த பெண்ணின் வீட்டு வேலையையும், வறுமையையும், கூலி உழைப்பையும் கடுமையாக்கி உள்ளது. நிலத்தில் ஏகாதிபத்தியத் தேவைக்கான உணவு தயாரிப்பு, மிருகத்தில் ஏகாதிபத்திய நுகர்வு, காட்டில் ஏகாதிபத்தியத் தேவைக்கான காடழிப்பு ஆகியவை பெண்களின் சுமையைப் பல மடங்காக்கியது. ஆனால் இது மறைமுகமான ஏகாதிபத்தியத் தாக்குதல் என்பதால் வெறும் ஆண்களாக அல்லது உள்ள+ர் ஆட்சியாளராகக் காட்டுவது இன்றைய பல பெண்ணியல்வாதிகள் போல் அல்லது பின்நவீனத்துவவாதிகள் போல் காட்டுவதும், திசை திருப்புவதும் நிகழ்கின்றது. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது.
காடழிப்பு என்பது காட்டை நோக்கி பெண்கள் விறகுக்காக நீண்ட தூரம் அலைவதை நிபந்தனையாகக் கோருகின்றது. ஆப்பிரிக்கப் பெண்கள் தண்ணீர் மற்றும் உணவைத் தங்களின் நிறையை விட 20 சதவீதம் அதிகமாகத் தலையில் வைத்து நீண்ட தூரம் சுமந்து செல்கின்றனர். ''கிழக்காப்பிரிக்காவிலுள்ள குடிகளில் தன் நிறையை விட இருபது கிலோ ஓர் ஆணினால் சுமக்கக் கூடிய அதிகப் பட்ச எடையாக இருந்தது. ஆனால் அவர்களின் பெண்களோ 5, 10 மைல் தொலைவிற்குத் தன் நிறையை விட ஐம்பது கிலோ எடை விறகு சுமந்து வருவது காணப்படுகின்றது. இந்தியாவில் இவ்வாறு 10 மைல் தொலைவிலிருந்து நீரும், விறகும் சுமந்து வருவதை இன்றும் காணலாம்;. அஸ்ஸாமிலிருக்கும் காசி பெண்கள் இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்;"83
இவ்வுதாரணம் பெண்ணின் உடல் வலிமைக்கு எடுத்துக்காட்டானதாக இருந்த போதும், சிறுவயதில் இருந்தே பெண்ணின் கடின உழைப்பு இதற்கு வித்திடுவதையும், பெண்ணின் வாழ்க்கைச் சுமையையும் எமக்குக் காட்டுகின்றது. பூர்சுவா பெண்ணியல்வாதிகள் உடல் வலிமையைக் காட்டிப் பெருமைப்படும் அளவுக்கு (நிறைய உடல் வலிமை சார்ந்த உதாரணங்களை இந்நூல் தருகின்றது), இவை அவர்களின் நலனுக்குரிய விசயமாக இருக்கலாம்;. ஆனால் பாட்டாளி பெண்ணுக்கு இது வேறு விசயம். பெண்ணால் எல்லாம் முடியும் என்று நிறுவப் போதுமானதாக இருந்த போதும், இதன் பின்னான வாழ்க்கை அவலமானது. சமுதாயச் சுமைகள் எப்படி பூர்சுவா அல்லாத பெண்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதை எமக்குத் துல்லியமாகக் காட்டுகின்றது. ஒரு பகுதி பெண்களின் வாழ்க்கை என்பது நீண்ட தூரம் அலையக் கோருகின்றது. இந்தப் பெண்களின் கோரிக்கையைப் பற்றி எந்தப் பூர்சுவா பெண்ணியமும் கவலைப்படப் போவதில்லை.
ஒவ்வொரு வர்க்கப் பெண்ணும் தனது சொந்த நலனில் இருந்தே சமூகத்துக்கான கோரிக்கைகளைக் கோருகின்ற போது, அவை மக்கள் விரோதத் தன்மையாகி மற்ற பெண்ணுக்கு எதிராகி விடுகின்றது. பெண்களின் பொதுவான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யாத பொதுக் கோரிக்கைகள், சமூகக் கோரிக்கையாகி விட முடியாது என்பதை நாம் காணமுடியும்;. பெண்களின் வாழ்க்கைத் தரம் என்பது ஒன்றுபட்ட நிலைக்கு நகர்த்தக் கோருவதே முதன்மையானதும்,அடிப்படையானதுமாகும். இது தான் பெண்களை ஒன்று இணைக்கும் மையமாகும்.
ஐரோப்பாவில் வரைமுறையற்ற விபச்சாரத்தைக் கோரும் பெண்ணுக்கும், அடிப்படை தேவையான நீர் மற்றும் விறகைக் கோரும் பெண்ணுக்கும் இடையில் ஒன்றுபட்ட சமுதாயப் பார்வை எப்போதும் அபத்தமாகவே இருக்கும.; சமுதாயத்தின் அடிமட்டப் பெண்களின் வாழ்க்கையை உயர்த்தக் கோரும் கோரிக்கை தான் பெண்ணியத்தின் அடிப்படையான விடுதலைக்கு வழிகாட்டும். ஒவ்வொரு பெண்ணும் பெற்ற உரிமையை, அடுத்தப் பெண்ணுக்கு மறுக்கின்ற எல்லை வரை ஆணாதிக்கமே கோலோச்சும். அடிமட்டப் பெண்ணின் கோரிக்கையை உயர்த்தும் போதே சொந்த விடுதலையைச் சாத்தியமாக்கும்.
ஐரோப்பியப் பெண்ணும், பூர்சுவா பெண்ணும் (மூன்றாம் உலகத்தில் உள்ள பூர்சுவா பெண்) மூன்றாம் உலகப் பெண்ணுக்காகச் சொந்த நாட்டை எதிர்த்து போராடும் போதே, அது சாராம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாகின்றது. அது மூன்றாம் உலக நாட்டுப் பெண்களை மட்டுமல்ல, சொந்த நாட்டுப் பெண்களையும் விடுவிக்கும்;. ஆனால் எதார்த்தத்தில் ஐரோப்பியப் பெண்ணும், பூர்சுவா பெண்ணும் மூன்றாம் உலகப் பெண்ணின் கோரிக்கையை மறைமுகமாக மறுத்தபடி தான், சொந்த நாட்டுக் கோரிக்கையை (இதைக் கூட மூன்றாம் உலகப் பெண் மீது ஏகாதிபத்திய நாட்டுப் பெண்ணியம் மறைமுகமாகத் தனது பொருளாதாரப் பலத்தில் இருந்து திணிக்கின்றது.), மூன்றாம் உலகப் பெண்ணின் சுமையினால் கிடைத்த அடிமை நலனில் இருந்தே எழுப்பப்படுகின்றது. மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் மீதான சுமை மற்றும் சுரண்டல்தான,; ஐரோப்பியப் பெண்ணின் இன்றைய நிலையைத் தோற்றுவித்தது. இந்த உண்மையைக் கண்டு போராடாத பெண்ணியம் ஏகாதிபத்திய ஆணாதிக்கமாகும்.
ஐக்கிய நாட்டு நிதி நிறுவனத்தின் பத்திரிக்கையாகிய போப்ப+லை குறிப்பொன்றின் படி, ஆப்பிரிக்க-ஆசிய-பசுபிக் பிராந்தியப் தொழிலாளர் வர்க்கப் பெண்கள் வாரம் ஒன்றுக்கு ஆண்களை விட அதிகமாக 12 மணி நேரம் கடுமையாக உழைப்பதாகவும், இப்பெண்கள் கடந்த பத்து வருடத்துக்கு முந்திய வாழ்க்கைத் தரத்தைப் பேண, வாரம் ஒன்றுக்கு 60 முதல் 90 மணிநேரம் உழைக்க வேண்டிய அளவுக்கு வறுமை விதியாகி, கடந்த கால வாழ்வையும் இழந்து போய் உள்ளனர். பூதமாக வளர்ந்து வரும் ஜனநாயக உலகமயமாதல் செல்வத்தின் விளைவுதான் இது.
இன்று இந்தியாவில் பசுமைப் புரட்சியின் பின் பெண்கள் நீருக்காகப் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைச் சேகரிக்க வேண்டிய அளவுக்கு நிலத்தடி நீரைப் பாலைவனமாக்கியது ஏகாதிபத்தியம். மேலும் அது ஏகாதிபத்தியப் பணப்பயிர்களின் ஊடாக அடிப்படை உணவுத் தேவையை மறுத்து பட்டினிக்குள் நகர்த்தி வருகின்றனர்.
''இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் 57 மாவட்டங்களில் 43 மாவட்டங்கள் கடினமான நீர்ப் பற்றாக்குறையில் சிக்கி உள்ளது. கி.பி.1960-இல், நீர்ப் பற்றாக்குறையில் இருந்த கிராமங்கள் கி.பி.1972-இல், இரு மடங்கானது. ஹமீர்பூரில் முதலில் மாட்டு வண்டியில் நீர் கொண்டு வரப்பட்டது.பின் அது நிறுத்தப்பட்ட நிலையில், இன்று பெண்கள் 15 முதல் 20 மைல் தூரம் நடந்து சென்றே நீரைச் சேகரிக்கின்றனர். தார்குலா மாவட்டத்தில் நீர்ப் பற்றாக்குறையால் அங்கு உள்ள எந்த ஆணையும் பெண் திருமணம் செய்ய தயாராக இல்லை. திருமணம் செய்தால் நீரின் தேடுதல் எண்ணிக்கைக்கு ஏற்ப இரட்டிப்பாகத் தேவைப்படுவதுடன், அதைப் பெண்களே சேகரிக்க வேண்டிய வேலைச் சுமையையும், வாழ்க்கைத் தியாகத்தையும் செய்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீர்ப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. இது ஏற்பட்ட கி.பி.1975-இக்கும் கி.பி.1982-இக்கும் இடையில் 18 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. சில இடத்தில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. தண்ணீர் கொள்ளையடிப்பைத் தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது அவசியமாகின்றது. ஏன் நாகரிகமான கி.பி.2000 ஆம் ஆண்டில் கூட இந்து வானரங்களின் ஏகாதிபத்தியத் தரகு ஆட்சியில், ''குஜராத் மாநிலத்தின் 26 மாவட்டங்களில் 17-இலும், இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களில் 27-இலும், ஆந்திராவில் 18 மாவட்டங்களிலும் பஞ்சமும்,வறட்சியும் தலைவிரித்தாடுகின்றது."6 அண்ணளவாக 9 கோடி மக்கள் நீர் இன்றி நீருக்காக அலையவைத்துள்ளது சூறையாடும் உலகமயமாதல். ஏகாதிபத்தியக் கொள்ளைக்காகக் காடுகளை அழித்தும், ஆறுகளின் போக்கைச் சிதைத்தும், பணப்பயிருக்காக நிலத்து நீரை உறிஞ்சிய வறண்ட பூமியில், மக்களை நீர் இன்றியே கொன்று போடும் ஜனநாயகத்தை இட்டு கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர, யாரும் புலம்புவது கூட இல்லை
இந்தியாவில் இன்றைய காலத்தை மிக துல்லியமாக நாட்டுப்புறப் பாடல்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
''ஒலகம் அப்ப இருந்தது மாதிரி
இப்ப இருக்கா
ஆத்திலே தண்ணி மோந்து
ஆகாசம் தீர்ந்தது அந்தக்காலம் - இப்ப
குழாயடி தண்ணி வேண்டி
குடுமிச் சண்டை போடுறோம் இந்தக்காலம்"12
தண்ணீர்ப் பற்றாக்குறை இயற்கை அழிப்பில் தொடங்கி சூறையாடும் போது, பெண்களிடையே புதிய சண்டையை ஏற்படுத்துகின்றது. அத்துடன் ;குழாயடி நீண்ட நேரம் இதற்காகக் காத்துக் கிடந்து, போராட வைக்கின்றது. இது சுற்றுவட்டார உறவையே சிதைக்கின்றது.
ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க, உலகவங்கி கட்டளைப்படி செயல்பட்ட எத்தியோப்பிய என்ற ஆப்பிரிக்க நாடு பஞ்சத்தால் 10 இலட்சம் மக்களைக் கொன்றது. மேலும் 80 இலட்சம் மக்களைப் பாதித்தது. இதற்கு முக்கிய காரணம் ஆவாஷ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் ஆகும். பணக்கார எத்தியோப்பியர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கம்பெனிகள் கரும்பு, பருத்தி மற்றும் வாழைப்பழச் சாகுபடிகளில் கொள்ளை லாபம் பெற, இவ்வணைகள் நீரை வழங்கின."5 (சுருக்கப்பட்ட என் குறிப்பு)
உலகில் 280 கோடி மக்கள் குடிக்கச் சுத்தமான தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். இப்படியிருக்க உலகில் மனித உரிமைக்காக வீணாகக் கண்ணீர் வடிய அழுபவர்களும் சரி, பின்நவீனத்துவ எடுபிடிகளும் சரி உலகவங்கியின் ஏகாதிபத்திய நுகர்வுக்கும், கொழுத்தப் பணத் திரட்டலுக்கும், எத்தியோப்பியாவில் பத்து இலட்சம் மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டதையிட்டு ஒரு சொட்டுக் கண்ணீரும் வடித்ததில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம் போராடும் போது, அதை மனித உரிமை மீறலாக ஜோடித்து சேறடிப்பதில் கண்ணும் கருத்துமாக ஏகாதிபத்தியத்துக்காகச் சேவை செய்ய வெட்கப்பட்டதில்லை.
உலகில் வறுமைக்குக் காரணம் அதிக ஜனத்தொகையும், உணவு இன்மையுமே என திரித்துக் காட்டுகின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன?13
அட்டவணை: 3-இல் காணலாம்.
மொத்த உலகில் தனிநபருக்கான
உற்பத்தி வருடப் பங்கு
முக்கியமான கிழங்குநான்கு வகைகள் 49.68 கோடி டன் 82.8; கிலோ
(உருளைக் கிழங்கு..)
முக்கியமான உணவு 171.69 கோடி டன் 286.15 கிலோ
மூன்று வகைகள் (அரிசி, சோளம், கோதுமை)
முக்கியமான குடி பானம் 1,88,05,000 டன் 1.8 கிலோ
மூன்று வகைகள்(கோப்பி, தேநீர், கொக்கோ)
எண்ணெய் விதை 10.41 கோடி டன் 17.35 கிலோ
நான்கு வகைகள் மீன் 9.62 கோடி டன் 16 கிலோ
சீனி 12.12 கோடி டன் 20.2 கிலோ
துணி 161.64 கோடி டன் 269.4 கிலோ
முதல் மூன்று முக்கிய உணவு மற்றும் கிழங்கு சராசரியாக ஒரு நாளைக்கு வயது வேறுபாடு இன்றி ஒரு கிலோவை வழங்குகின்றது. இதைவிட மற்ற உணவுகள் எல்லாம் சேர்கின்ற போது உணவுப் பற்றாக்குறை என்பது கற்பனையானது. ஆனால் எதார்த்த வாழ்க்கையில் உணவு மக்களுக்குக் கிடைப்பது கற்பனையாக உள்ளது.
மேலும் இறைச்சி, பழம், மரக்கறி, மீன் போன்றவற்றின் உற்பத்தி எப்படிப் பட்டினியைக் கோரும்? இங்கு ஜனத்தொகையல்ல வறுமைக்குக் காரணம்;. மாறாக ஒரு பகுதி மக்கள் கூட்டத்தினர் மிகையான நுகர்வும், அதன் மீதான ஊதாரித்தனமும் தான் வறுமைக்குக் காரணம். அத்துடன் சுரண்டும் வர்க்கம், பதுக்கல் வர்த்தகம் போல் கடலில் கொட்டியும், நிலத்தில் புதைத்தும், எரித்தும், பதுக்கியும் சந்தைவிலையை உயர்த்த முயல்கின்றன. இதன் மூலம் உணவை மக்களுக்குப் பற்றாக்குறையாக்கி, விலையை உயர்த்தி பட்டினிக்குள் தள்ளுகின்றனர். வறுமையை உற்பத்தி செய்வது என்பது சுரண்டும் வர்க்க நலன்களுடன் தொடர்புடையது. இது மூலதனத்தைத் திரட்டிக் கொடுக்கின்றது.
ஒரு நாளைக்கு உலகில் உண்ணப்படும் சில பொருட்களின் அளவை ஆராய்வதன் மூலம் இந்த வறுமையின் மூலத்தை அறிய முடியும். ஒரு நாளைக்கு 200 கோடி முட்டைகள் உண்ணப்படுகின்றன. 16 இலட்சம் டன் சோளத்தையும், 7.27 இலட்சம் டன் உருளைக் கிழங்கும், 15 இலட்சம் டன் அரிசியும், 300 கோடி டன் தேநீரையும் உட்கொள்கின்றனர். செல்வந்தர்கள் பதப்படுத்தப்பட்ட 2.7 டன் மீனை ஒரு நாள் உணவாக உட்கொள்கின்றனர். மனிதன் சராசரியாக 2,000 கலோரி உணவை உண்ண வேண்டியிருக்க, மேற்கு நாட்டவன் 4,000 கலோரி உணவை உணணுகின்றான்; அதேநேரம் ஆப்பிரிக்கன் சராசரி 1,800 கலோரி உணவையே உண்ணுகின்றான்;. இது அடி, மேல் என வர்க்கத் தளத்தில் பிரியும்; போது இதன் அளவு மேலும் அகலமாகும். வறுமையைப் போக்க உணவு இருந்தும், அவை அளவுக்கு மீறி மிதமிஞ்சி நுகரப்பட்டு அழிக்கப்படுகின்றது.
வறுமை ஒழிப்பு என்பது உலக உற்பத்தியைச் சமமாகப் பகிர்தலில் தொடங்கி, தேவைக்கு ஏற்ப எடுப்பதை நோக்கிப் போராடவேண்டும்;. இதுமட்டுமே பெண்ணின் வறுமைக்கு முடிவுகட்டும்.
ஒரு நாட்டில், ஒரு மக்கள் கூட்டத்தில், ஒரு குடும்பத்தில் பசியும் பட்டினியும் ஏற்படின் அது பெண்களையும், குழந்தைகளையுமே அதிகமாகப் பாதிக்கின்றது. ஆணாதிக்கப் பண்பாடு, கலாச்சாரம் இதன் ஊன்று கோலாக ஆணை விட பெண்ணையும், குழந்தையையும் கூர்மையாக நிர்ப்பந்திக்கின்றது. இன்று மூன்றாம் உலக நாடுகளில் நீடிக்கும் பட்டினிக்கு ஏகாதிபத்தியப் பொருளாதார நலன்களே காரணமாகும். தனது தேவைக்கும், தனது மூலதனக் குவிப்புக்கும் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு ,அதையொட்டி வாழ்ந்து வந்த மக்கள் கூட்டம், குறிப்பாகப் பெண்களின் ஆதாரமான எஞ்சிய இயற்கை சார்ந்த சமூகச் சொத்துகளை ஏகாதிபத்தியங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது வறிய மக்கள் பிரிவுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை உணவை வழங்கிய இயற்கை மற்றும் அது சார்ந்த அறிவியல் எல்லாம் சூறையாடப்படுகின்ற இக்காலத்தில் அது பெண்களுக்குப் பட்டினியையும், கலாச்சாரச் சிதைவையும் வழங்குகின்றது. அத்துடன் பல மடங்கு வேலைச் சுமையையும் ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தி ஆணாதிக்கக் கொடூரத்தைப் பெண்கள் மீது தீவிரமாக்கியுள்ளது.
வளமான நிலங்கள், நீரின் செறிவான வாழ்விடங்கள் சார்ந்து பெண் சொந்தத்தில் தனது தேவையையும், குழந்தைகளின் தேவையையும் சுயமாகத் தீர்த்துக் கொள்ள கூடி, பொருளாதாரக் கலாச்சாரச் சமூகத் தன்மையை, ஏகாதிபத்தியப் பொருளாதார உலகமயமாதல் சூறையாடி வருவதையிட்டு, எந்தப் பெண்ணிலைவாதமும் அந்தப் பெண்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரும் விட்டதில்லை. பூர்சுவா பெண்கள் தமது நுகர்வுப் பண்பாட்டு, கலாச்சாரத்தில் இருந்தபடி ஆணாதிக்கமாகத் தம்மை மாற்றக் கோரி ஆணாதிக்கத்துடன் அதன் பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்துடன் முரண்படுகின்றார்களே ஒழிய, இவர்களுடன் ஒப்பிடும் போது அடிமட்டப் பெண்களின் இயற்கை சார்ந்த குறைவான ஆணாதிக்கத்துக்கு உட்பட்டுள்ள இயற்கை சார்ந்த பெண்ணியத்தைப் பாதுகாக்கப் போராடுவதில்லை.
இந்த இயற்கை சார்ந்த பெண்ணிய வாழ்வுகள் என்பது முதலாளித்துவப் பெண்ணிலைவாதிகள் முன் அர்த்தமற்ற, பெறுமதியற்ற விசயங்களே. அதாவது சுரண்டும் வர்க்கம் பணம் பண்ணமுடியாத அனைத்தையும் பெறுமதியற்றவை என எப்படி மதிப்பிட்டு, அதைப் பண்பாட்டுக் கலாச்சாரமாக்குகின்றனரோ, அதையே இன்றைய பெண்ணியல்வாதிகள் அடிமட்ட மக்களின் அடிப்படை ஆதாரங்களைப் பெறுமதியற்றவையாகக் கண்டு ஏகாதிபத்திய வழியில் எட்டி உதைக்கின்றனர்.
ஏகாதிபத்தியங்கள் உலக வறுமையை மதிப்பிடும் போது தமது நுகர்வுப் பொருட்களை வாங்க முடியாத மக்கள் கூட்டத்தையே வறுமைக்குள் உள்ளவராக மதிப்பிட்டு, அந்த மக்களின் இயல்பான, இயற்கையைச் சார்ந்த நிறைவான அடிப்படை நுகர்வைப் பூர்த்தி செய்யும் வாழ்வு ஆதாரங்களை மறுத்து, இவை உபரியைத் திரட்டித் தரமுடியாத ஏகாதிபத்திய வறுமையின் மதிப்பீட்டுக்குள் அழிக்கப்படுவது வேகமாகியுள்ளது. இதே போன்று இன்றைய பெண்ணியல்வாதிகள் தமது பூர்சுவா பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்தில் நின்றபடி, அடிமட்ட மக்களின் இயற்கையான, இயற்கையைச் சார்ந்த ஆணாதிக்கமல்லாத பெண்ணியத்தை, பெண்ணியம் அல்லாத ஆணாதிக்கம் என்று அடையாளம் காட்டி, அப்பெண்களின் மீதான ஏகாதிபத்திய அழிப்பை அங்கீகரிக்கின்றனர். அதாவது செயற்கையாகக் கட்டியமைக்கப்பட்ட ஆணாதிக்க உலகமயமாதலின் பண்பாட்டில், அதற்குள் பெண்ணின் உரிமையை அடையாளம் காட்டியும், கோரியும் போராடக் கோரும் பெண்ணியம், உலகமயமாதலுக்கு எதிரான இயற்கையை ஆதாரமாகக் கொண்ட மக்களின் பெண்ணியத்தை மார்க்சியம் அல்லாத எந்தப் பெண்ணியமும் அடையாளம் காணவுமில்லை, காட்டியதுமில்லை, போராடவுமில்லை,போராடியதுமில்லை. மாறாக இதை அழிப்பதில் இந்த ஆணாதிக்க உலகமயமாதல் செயற்கையான இயற்கை மறுப்பு பொருளாதாரப் பண்பாட்டில் இருந்தபடி, பூர்சுவா பெண்ணியல் கோரிக்கையை முன்வைத்து ஆணாதிக்கத்திடம் பங்கு கேட்டுத் தம்மை இணைத்துக் கொள்ளக் கோருகின்றனர். இதை மறுத்து மார்க்சியப் பெண்ணியம் போராடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இயற்கையின் மீது, அது சார்ந்த மனித வளர்ச்சிக்கும், தமது வாழ்வு ஆதாரங்களைப் பாதுகாக்கவும் இயற்கை சார்ந்து போராடிக் கொண்டு இருக்கும் அந்தப் பெண்களின் விடுதலைக்கான பாதை மட்டுமே, பெண்ணியத்தின் சரியான அரசியல் மார்க்கமாகும்.