இயற்கையை மறுப்பதிலேயே ஆணாதிக்கம் கருக்கொள்கின்றது. இன்று உலக மயமாதல் தனது சந்தைப்படுத்தலைத் தீவிரமாக்க இயற்கை அழிப்பைப் பிரதானப்படுத்துகின்றது. பெண்களை இயற்கைக்கு மாறாக அடிமைப்படுத்திய நிலையில், ஆண்கள் இயற்கையில் இருந்;து அன்னியமயமாதல் அதிகரித்தது. பெண் இயற்கையைச் சார்ந்திருத்தல் நெருக்கமானது. மனிதத் தேவையை மீறி இயற்கையை ஆண், அடிமைப்படுத்தியும், கட்டுப்படுத்தியும், அழித்தும், சூறையாடியும், சொத்துரிமையை, அதிக உபரியை இயற்கைக்கு விரோதமாகச் செயற்கையாகக் கட்டுப்படுத்தினான்.
இந்த நிலையில் பெண் இயற்கை மீது சார்ந்து வாழ்தல் இயல்பானதாக இருந்தது. பெண்ணின் தனிச் சொத்துரிமை மறுக்கப்பட்டு, வீட்டுவேலைகளுடன் கட்டுப்படுத்தி இயற்கையின் மறு உற்பத்தியுடன் அடிமையாக்கிய நிலையில் பெண் இயற்கை மீது வாழ்தல், சார்ந்திருத்தல்தான் அவளின் ஒரே ஆதாரமான வாழ்வாகியது.
ஆண் வேட்டைக்குச் சென்று இயற்கையை மிதமிஞ்சி அழித்த போது, பெண் வீட்டில் இயற்கையைச் சார்ந்து உற்பத்தியில் ஈடுபட்டாள். ஆணின் அறிவியல் கண்டு பிடிப்புகள் பெண்ணைப் பிச்சைக்காரி ஆக்கியது.
மேற்கத்தியக் காலனி ஆதிக்கம் பெண்ணின் இயற்கையைச் சார்ந்த உணவு, நீர் போன்றவற்றைக் கிடைத்தற்கரிய பொருளாக்கியது. நவீனக் கண்டுபிடிப்புகள் உலகமயமாதலாகப் பெண்ணிடம் மேலும் கடின உழைப்பைக் கோருகின்றது.
பழைய தந்தை வழிச் சமூகத்தில் ஆணின் உழைப்பில் வாழ்ந்த பெண் இன்று கூலியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் இரட்டைச் சுமைக்குள் தள்ளியுள்ளது இன்றைய சமூகம். மூன்றாம் உலக நாடுகளில் பெண் இயற்;கையான காடுகளில் விறகு சேகரிப்பு, இயற்கையான நீர்த் தேக்கத்தில் நீர் சேகரிப்பு எல்லாம் நவீன ஆணாதிக்கத்தின் இயற்கை அழிப்பால் பெண்ணின் இயற்கை உழைப்பைக் கடுமையாக்கியுள்ளது.
பணம் தான் எல்லாம் என்ற நிலையில் இயற்கையைச் சார்ந்த பெண்ணின் வாழ்க்கை பெறுமதியற்றதாகக் கேவலமாக ஆக்கிவிட்டது. இயற்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் உபரி பெறுமதியை உற்பத்தி செய்வதில்லை என்ற வகையில் சமூகக் கருத்தும், விளக்கமும் கொடுக்கப்படுகின்றது. இயற்கையைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவம் எதுவுமற்ற ஒன்றாகக் காட்டப்படுகின்றது. இயற்கையைப் பெண்ணுக்கு ஒப்பிடக் கூடிய தாய் என்பதால், இயற்கையை மறுக்கும் அதே காரணத்தால் பெண் மறுக்கப்படுகின்றாள்.
நவீனத்துவம் (முதலாளித்துவம்);, பின்நவீனத்துவம் (ஏகாதிபத்திய உலக மயமாதல்) வளர்ச்சியின் வெற்றி என்பது இயற்கையையும், பெண்ணையும் சூறையாடிய ஆணாதிக்கச் சுரண்டல் சமூகமாகும்.
நவீன அறிவியலின் தந்தையான பேக்கனின் (கி.பி. 1561-1626) திட்டம் இயற்கையை அழித்து, பெண்ணைச் சூறையாடி உருவானதே, இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்கச் சமூகம். கி.பி.1951-இல், பாரிங்டன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட பேக்கன் புத்தகத்தின் பெயர் ''காலத்தின் ஆண்மை உதயம்"5 ஆகும். நவீனத்துவம் வரை ''பெண்மைத் தத்துவத்தோடுத் தன்னை ஐக்கியப்படுத்;திக் கொண்டிருந்த பழைய அறிவியலில் இருந்து இந்த ஆணாதிக்க அறிவியல் வெகுவாக வேறுபட்டிருந்தது"5 என்பது தெளிவான எதார்த்தமாகும். ''உற்பத்தியைக் கைக்கொள்ளுவதற்காக இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பேக்கன் கொண்டிருந்த கனவு"5 நனவாகியுள்ளது. மேலும் அவரின் கொள்கை ''இயற்கை இனியும் அன்னை இயற்கையல்ல" என்பதாகும்.
இயற்கை சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வைச் சிதைத்ததால், உலகில் 40 கோடி பெண்கள் சிறிய மூடிய குடிசைக்குள் விறகு அடுப்புகளை பயன்படுத்துவதால், அவர்கள் சுவாசிக்கும் புகை மூலம், ஆபத்தான நிலையில் வாழ்வதுடன், இதற்குட்பட்டுத் தமது ஆயுளையும் குறைத்துக் கொள்கின்றனர். பெண்களின் வீட்டுக் கடமை ஆணாதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவு, அவர்களின் வாழ்க்கையை நோய்க்குள்ளும், மரணத்தினுள்ளும் தள்ளிச் செல்லுகின்றது. வறுமையும் இதனுடன் இணைகின்ற போது, மூடிய குடும்ப அமைப்பு போல், சுற்றுச் சூழல் பெண்ணை மேலும் இறுக்குகின்றது. இயற்கையை அழித்து உலகமயமாதல் வேகம் பெற, பெண் மேலும் ஒடுங்கி சிறுத்து வாழ வேண்டிய நிலைமையால், அவளின் இயற்கை சார்ந்த சுகாதாரம் சிதைந்து போகின்றது.
இயற்கையைச் சார்ந்து மனிதன் நீடித்த காலத்திலும், பின் பெண் அதன் மீது சார்ந்திருந்த எல்லா நிலையிலும், அது சார்ந்த பொருளாதாரமும், கலாச்சாரப் பண்பாடுகளும் இயற்கை மீது மனிதனின் பிடிப்பைப் பாதுகாத்தது. இந்தப் பண்பாடு, கலாச்சாரங்கள் சுரண்டலுக்குத் தடையாக இருந்த நிலையில் நவீனத்துவம் இதற்கு எதிராகப் பாய்ந்தது. இது நீடித்த ஆணாதிக்கத்தில் பெண்ணுக்கு இருந்த சில இயற்கை ஆதாரங்களையும் பறித்து கூலியாகவும், எதுவுமற்ற பிச்சைக்காரியாகவும் ஆக்கியது.
இந்த இடத்தில் செவ்விந்தியத் தலைவர் சுமோகலாவின் இயற்கையையும், பெண்ணையும் ஒப்பிட்டுப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. ''நிலத்தை உழுமாறு என்னைக் கூறினீர்: ஒரு கத்தியை எடுத்து எப்படி என்னால் என் தாயின் மார்பகத்தை அறுக்க முடியும்? புல்லை வெட்டிக் காயவைத்து, வைக்கோலை விற்று காசாக்கி, வெள்ளை மனிதனைப் போல பணக்காரனாகச் சொன்னீர்கள்: என் தாயின் தலைமுடியை நான் எங்ஙனம் வெட்டிச் சாய்ப்பேன்"5 என்று கேட்டான் சுமோகலா.
மற்றொரு செவ்விந்தியத் தலைவனின் கடித வரிகளைப் பார்ப்போம்;. ''எங்களுக்கு இதுவரை தெரியும்: பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். ஒரு குடும்பத்தின் இரத்தத்தைப் போல அனைத்துப் பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பூமியிலுள்ள உயிரினச் சங்கிலி வலையை மனிதன் நெய்யவில்லை. அவன் அதில் ஒரு நூல் அவ்வளவே"5 என்பதன் பின் இந்த ஆணாதிக்க உலகம் இயற்கையை மறுத்துச் சூறையாடிய போது பெண்ணின் இயக்கம் பெறுமதியற்றதாக ஆக்கப்பட்டது. இந்த வரிகளின் பின்னால் உள்ள ஆழ்ந்த கருத்துகளை எந்த நவீன, பின்நவீனத்துவக் கோட்பாடும் உள்வாங்கியதில்லை. இதை மறுத்து அழித்தன. ஆனால் மார்க்சியத்தின் அடிப்படையையே மார்க்ஸ் இதில் இருந்துதான் ஆரம்பிக்கின்றார் என்பதே இதன் ஆழமான சிறப்பாகும்.
இந்தியா சட்டக் கழகத்தின் சத்ரபதி சிங் 'கடந்த (19-ஆம்) நூற்றாண்டின் இறுதி வரையிலும் அதற்கு முந்தைய வரலாற்றுக் காலங்களிலும் இந்தியாவின் 80 சதவீதம் இயற்கை வளங்கள் பொதுச் சொத்தாகவும் 20 சதவீதம் மட்டுமே தனிச்சொத்தாகவும் பயன்படுத்தப்பட்டது"5 என்ற கருத்துக்கள் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் இயற்கையைத் தற்பாதுகாப்பாகக் கொண்டு வாழ்ந்த வாழ்வைக் காட்டுகின்றது. இன்று இயற்கையை, தனியார்மயமாகிய இயற்கையை நலம் அடித்த ஆணாதிக்கத்தின் அழிப்பால் பெண் மேலும் ஒடுக்கப்படுகின்றாள்.
இந்தியாவின் இந்து மதவெறி ஆட்சியாளர்கள் (டீ.து.P.) உலக வர்த்தகக் கழகத்துடன் இரகசியமாகச் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அண்மையில் அதாவது 31.3.2001-இல் 1,429 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இது அண்மையில் அமெரிக்கப் பத்திரிக்கையில் வெளியானதைத் தொடர்ந்து அம்பலமானது. ஜனநாயகப் பாராளுமன்றம் என்று கூறிக் கொள்வதில் கூட விவாதிக்காத இந்த ஒப்பந்தம், மக்களின் அடிப்படை பொருட்கள் மீதான உரிமையை, உற்பத்தியைப் பறித்துள்ளது. இதில் ஒன்று, பால் இறக்குமதி செய்ய ஒத்துக் கொண்டதன் மூலம் அதையொட்டிய பொருட்கள் மீதான அனைத்து சுய உற்பத்தியையும் முடிவுக்கு வரவுள்ளது. இது இந்திய ஏழைப் பெண்களின் ஆதார வறுமையைத் தீவிரமாக்க உள்ளது.
இந்தியாவில் உள்ள ''8 கோடி பெண்கள் ஓரிரு மாடுகளை வைத்து 7,500 கோடி டன் பாலை உற்பத்தி செய்து"(16.3.2000)6, தமது ஏழ்மையைப் போக்க முயலும் பெண்களை மேலும் வறுமைக்குள் இந்த ஏகாதிபத்திய நலன்கள் மூலம் தள்ளிவிட்டுள்ளனர். இந்து சுயராஜ்ஜியம் பெண்ணுக்கு எதிரானது என்பதையும், அது ஏகாதிபத்தியத்தின் தரகுகள் தான் என்பதையும்;மீள நிறுவியுள்ள அதேநேரம், இயற்கையாகப் பெண் கண்டுபிடித்த மிருக வளர்ப்பின் ஊடாக, ஆணாதிக்கத்துக்கு வெளியில் பொருளாதார ரீதியாக இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமான வாழ்க்கையையும் கேவலமாக்கி, ஏகாதிபத்தியப் பிச்சையைச் சார்ந்து வாழ மொத்தக் குடும்பத்தையே அடிமைப்படுத்தியுள்ளனர்.
பெண் இயற்கையைச் சார்ந்து குழந்தையைப் பெற்று வளர்த்தது முதல், அதையொட்டி இயற்கையில் சார்ந்து உணவைத் தேடிய போதும், பாரம்பரியமாக விதைகளைச் சேகரித்த போதும், அவளின் உழைப்பு தனியுடைமைச் சந்தையில் பெறுமதியற்றதாக இருந்த நிலையில், அவ்வுழைப்பு சமூக மதிப்பற்றதாகியது. தனியுடைமை பெண்ணின் உழைப்பைப் பெறுமதியற்றதாக்கிய நிலையில், தனியுடைமையின் உற்பத்தியில் சுரண்டும் வர்க்கத்தால் ஆணின் உழைப்பு பெறுமதியாக்கப்பட்டதால், ஆண் பெண்ணுக்கு இடையில் ஆணின் உழைப்பு தனியுடைமையின் ஆதிக்கத்தால் பெண்ணின் முன் மதிப்புக்குள்ளாகியது. இந்த நிலையில் பெண்ணின் இயற்கை சார்ந்த உழைப்பு தனியுடமை சமுதாயத்தில் பெறுமதியற்றதாகக் காணப்பட்ட சமுதாயப் போக்கில், அதன் சமூகப் பிரதிநிதியாக மாறிய ஆண் முன் பெண்ணின் உழைப்பு மதிப்பற்றதாகியது.
ஆண்கள் வேட்டையில் கழிக்க, பெண்கள் நிலைத்த இடத்தில் தங்கியிருந்த போது சுற்றுப்புறத்தை முற்றாகத் தமக்கு இசைவாக மாற்றியமைக்க தொடங்கினர். சொந்த வாழ்விடத்தை மெருகுவூட்டுவதில் பல கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக நிகழ்த்தினர். இந்த வகையில் கட்டிடக் கலையை மனிதச் சமுதாயத்துக்கு வழங்கியது பெண்களேயாவர். மனைவி என்ற பெயரில் உள்ள மனை என்ற வீட்டைக் குறிக்கும் சொல், பெண்ணின் குடியிருப்புக்குரிய கட்டிடக் கலையின் கண்டுபிடிப்பைப் பறைசாற்றுகின்றது. ஆணாதிக்கம் பெண்ணை வீட்டில் பூட்டிய போது மனைவி என்ற கருத்துறையூடாகப் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். இதே அடிப்படையில் தான் பல்வேறு பெண்ணிலைவாதிகளும் கருதி எதிர்க்கின்றனர். ஆனால் வீடு என்பதன் பின்னுள்ள பெண்ணின் உரிமை, கண்டுபிடிப்பை ஆணாதிக்கம் கொச்சைப்படுத்தி சிதைத்த வரலாற்றை எதிர்க்காத பெண்ணியம், ஆணாதிக்கத்தைத் தனது அரியணையாகவே கொள்கின்றது.
சிவப்பு இந்தியர்களிடையே ஆதிக்க மதமான கிறித்துவ ஆக்கிரமிப்பு மதவாதி ஒருவர், ஐரோப்பிய நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தமது கோயில்களைக் கட்டியது பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளார். அதில் ''இங்கு கட்டடிங்களெல்லாம் பெண்களாலேயே கட்டப்படுகின்றது. ...நாங்கள் ஒருமுறை எமது வீட்டு வெளிச் சுவரினைக் கட்டுவதற்கென கற்களை அடு;க்க ஓர் ஆணினை வேலைக்கு அமர்த்திய போது பாவம், அவனைச் சுற்றிப் பெண்களும், சிறுவர்களுமாய் ஒரே கேலியும், கலாட்டாவுமாகப் போய்விட்டது. ஓர் ஆண் கட்டிடவேலை ஏதாவதொன்றில் ஈடுபடுவது அவ்வளவு அபத்தமாகத் தோன்றியதால் அவனைப் பரிகாசம் பண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்"83 இது போன்ற வேறு பல உதாரணங்களை இந்நூல் கொண்டுள்ளது.
ஆண் கட்டிடக் கலையின் தந்தை அல்ல. பெண் கட்டிடக் கலையின் தாய் என்பது நவீன அறிவுலகுக்கு முன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தங்கள்தான். கடினமான உழைப்புகளில் பெண்கள் ஈடுபட்டது மட்டுமின்றி, ஆண்களைவிட உடல் வலிமையில் மேம்பட்டும் இருந்தனர். பெண் வீட்டைச் சுற்றிய பணிகளில் அதிகமாக ஈடுபட்ட போது ஆண்கள் வெளியில் அதிகமாக உழைத்தனர். வெளிவேலை இலகுவான வழியில் இருக்கின்ற நிலைகளில் ஆணின் வலிமை குறைவானதாக இருக்கின்றது. இது மிகவும் செழிப்புள்ள நிலங்களில் பெண்ணின் உழைப்பு இலகுவாகின்றது. அந்த நிலையில் அவர்கள் அடுத்த கட்டச் சமுதாய வளர்ச்சிக்கான புற நிலையை அடைகின்றனர். பெண்கள் கட்டிட வேலைகளில் ஈடுபட்டதுடன் அதில் நிகழ்த்திய கண்டு பிடிப்புகள் பெண்ணின் கடின உழைப்பைக் கோருகின்ற போது, ஆணை விட உடல் வலிமையைப் பெறுவது இயல்பாகின்றது. அங்கு வாழும் ஆண், இப்படி ஈடுபடாத நிலையில் பெண்ணை விட உடல் வலிமையற்றவனாக மாறுகின்றான்.
பெண் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் அறிவியலால் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளையும், அறிவியலையும் ஆணினால் அலைந்து திரிந்த நடைமுறையால் பயன்படுத்தவோ, தெரிந்து கொள்ளவோ முடியாததாக இருந்தது. ஆனால் ஆண் இயற்கையாக நீண்ட தூரம் சென்றதால் புதிய பொருட்களைப் பெற முடிந்தது. புதிய உயிரினங்களை அறிய முடிந்தது. ஆனால் தாவரங்கள் பற்றி அறிவின்மையால் அதை விருத்தி செய்ய முடியவில்லை. நீண்ட தூரம் செல்லாததால் பெண்ணின் தாவரக் கண்டுபிடிப்புகள் எப்போதும், ஓரிரு தாவர வகையாக மட்டுமே இருந்தது. இதனால் தொடர்ந்து தாவரவியல் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் குறித்த தாவரத்துக்குள் மட்டும் வளர்ச்சியையும், அதே நேரம் உணவில் குறித்த உணவு மட்டும் கிடைத்ததாலும் உடல் வலிமையை மந்தப்படுத்தியது. ஆனால் ஆண் போகுமிடம் எல்லாம் இறைச்சி முதல் கிடைக்கும் உணவுகளை உண்டதால் வலிமையானவனாகப் பலம் பெற்றான்.
தனிச் சொத்துரிமையிலான சமுதாயமும் அதற்கு முந்திய வளர்ச்சியில் பெண்ணின் கண்டுபிடிப்புகளை ஆண் தெரிந்து கொள்ள தொடங்கியது முதல், அதை ஆண் விரிந்த பரப்பில் பயன்படுத்தக் கூடிய ஆணின் இயக்கம், பெண்ணுக்கு இயற்கையாகவே தடையாகியது. ஆண் இவைகளை விரிந்த தளத்தில் பயன்படுத்திய போது, அவனால் புதிய கண்டுபிடிப்புகளை நடத்த முடிந்தது. தனிச் சொத்துரிமை மற்றும் உபரி இதன் வாயிலாக ஆணுக்கு அதிக பலத்தைப் பொருளாதாரத் துறையில் முதன் முதலாக வழங்குகின்றது. பெண்ணின் நீடித்த இயற்கையான தரித்த வாழ்வும் சுற்றுப்புறமும் இதற்கு எதிரானதாக இருந்தது. அத்துடன் பெண்ணின் கண்டுபிடிப்புகள் மீதான அறிவியல் காரணங்களைப் படிப்படியாகத் தெரிந்து கொள்கின்ற போது, பெண் பற்றி மதிப்பு ஏற்பட்ட காரணக் காரியத் தொடர்புகள், புதிய அறிவியல் விளக்கத்தால் சிதைகின்றது.
உலகமயமாதல் இயற்கையாக மனிதர்கள் பாவிக்கும் பலவிதமான பொருட்களை, நவீன ஆய்வுக் கூடத்தில் பரிசோதித்து அதன் உள்ளடக்கத்தை விளக்கி, அதைத் தனது அறிவியல் கண்டுபிடிப்பாக்கி மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி, அதற்கு வரிகட்ட நிர்ப்பந்திக்கும் இன்றைய போக்கு, அன்றைய ஆணாதிக்கம் பெண்ணின் அறிவியலைப் பறித்ததன் தொடர்ச்சியான வளர்ச்சிதான். அன்று விளக்கங்கள் ஆண்களால் ஏற்பட்ட போது (இங்கு ஆண்களுக்கு விரிந்த வட்டத்தில் அலைந்து திரிந்த இயக்கம் இதைச் சாதகமாக்குகின்றது) பெண்ணின் அறியாமை மீது அடிமை முத்திரை குத்தப்பட்டது. இதில் இருந்து தான் பெண்ணைச் சமூக உழைப்பில் ஈடுபடுத்துவது, பெண்ணின் விடுதலைக்கு அவசியமாகவும், நிபந்தனையாகவும் உள்ளது. சமூக உழைப்பு தனிச் சொத்துரிமையால் விபச்சாரம் செய்யப்படும் நிலையில் அதை எதிர்த்து போராட வேண்டிய பணி இங்கு அடிப்படையாகின்றது.
புதியவைகளைக் கண்டுபிடித்ததிலும் பெண்களின் பங்கு தீர்க்கமானதாக அனைத்து மனித முன்னேற்றத்திலும் இருந்துள்ளது. நீயூகினி மக்களின் மொழியில், ''இரு குச்சியினால் நெருப்பை மூட்டும்; செயலுக்கு வழங்கப்படும் சொல் ~தாய் நெருப்பு தருகின்றாள்| எனப் பொருள் படவுள்ளது. கிடைக் குச்சியைத் ~தாய்| என்றும், செங்குத்துக் குச்சியைப் ~பிள்ளை| என்றும்"83 குறிப்பிடுகின்றனர். அது போல் ''பெண்கள் நெருப்பினைத் தமது தோண்டுகழியினைக் கை நகங்கள், கை விரல்கள் போன்ற பலவிடத்திலும் ஒளித்து வைத்திருக்கின்றனர் என்ற பல கட்டுக் கதைகள் உண்டு."83 இப்படி இன்னும் பல கதைகள் உண்டு.
காட்டுமிராண்டி கால இடைக்காலத்தில் நீர் வாழ் உணவுகளை உண்ண அடிப்படையாக இருந்த நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பெண்ணினதாக இருக்க விசேடமான, தனித்துவமான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை. அப்படி எதுவும் இருக்கவில்லை. ஏனெனின் ஆண், பெண்ணுக்கிடையில் இனவிருத்தியைத் தவிர, எந்த வேலைப் பங்கீடும் இருக்கவில்லை. மரங்களிலும், நிலத்திலுமாக வாழ்ந்த மனிதன் இறைச்சியையும், தாவரத்தையும் சார்ந்து வாழ்ந்த நிலையில் நெருப்பு பற்றிய அறிவு பெண்ணின் தனித்த சொத்தாக இருக்கும் என்ற வாய்ப்பும், விளக்கமும் கற்பனையானது. இயற்கையாகக் கிடைத்த நெருப்பைப் பாதுகாப்பதன் மூலமும், இடம் மாற்றிக் கொண்டு செல்வதன் மூலமே நெருப்புப் பயன்பாடு இருந்திருக்கும்.
பின்னால் நிலைத்து வாழத் தொடங்கிய சமுதாயத்திலேயே வீடு சார்ந்த சுற்றுப்புற உழைப்பில் தான் பெண் நெருப்பைக் கண்டுபிடித்திருக்க முடியும். உராய்வின் மூலம் நெருப்பு உண்டாகும் முறை தற்செயலான இயக்கத்தில் இருந்தே பெறப்பட்டது. அரைதல், உரஞ்சுதல், துளையிடுதல் போன்ற உழைப்பில் தற்செயலான விளைவுகளில் நெருப்பு உருவாகியது. இதைப் பெண் தொடர்ந்து உருவாக்கக் கூடிய சக்தியைப் பெற்றாள். அதை நுட்பமாக அனுபவ வாயிலாகப் புரிந்து கொண்டாள். ஏன்?; என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இதைப் பெண்ணின் தனித்துவமான ஆற்றல் என்பதன் ஊடாகப் பெண்ணின் மதிப்பு உயர்ந்தது. அதிக காலம் வேட்டையில் கழித்த ஆணுக்கு இது புதிராகவே இருந்திருக்கும். ஆண் நினைத்த மாத்திரத்தில் பெண் போல் நெருப்பை உருவாக்க முடியாத அனுபவ இன்மை பெண்ணை நெருப்பின் பிம்பமாக்குகின்றது. இதனால் வெளி ஆதிக்கம் பெறாத இயற்கை சார்ந்த மொழிகளில், நெருப்பைப் பெண்ணின் பெயரில் அழைக்கப்படுவது இயல்பானதாக இருக்கின்றது. ஆணாதிக்கம் அற்ற இயற்கை மொழிகளில் இவைகளைக் காணமுடியும்.
வீட்டில் தங்கியிருந்த பெண் நெருப்பைப் பாதுகாக்க தனது இருப்பிடத்தில் ஓர் இடத்தை உருவாக்கினாள். இதைத் தொடர்ந்து ஊரில் பொதுவான இடத்தில் அதைப் பாதுகாக்க தொடங்கிய போதும் பெண்ணே அதற்குப் பொறுப்பாக இருந்தாள். கடந்து சென்ற வரலாற்றில், ''விளைச்சலின் கடவுளான சாட்டேனின் மகளே வெஸ்டா (இங்கு வெஸ்டா என்பது தீயின் கடவுள்) என்று ரோமானியர்கள் நம்பினர். இவள் மணமாகாதவள் என்றும், குடும்பங்களைப் பாதுகாப்பவள் என்றும் அவர்கள் சங்கல்பித்தனர்.
ரோமானிய நகரங்களிலும், கிராமங்களிலும் வெஸ்டாவின் கோயில்களும,; அவற்றோடு இணைந்து பொது நெருப்புக் குண்டங்களும் இருந்தன. கன்னிப் பெண்களே தீயைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டனர். ரோமானியர்களுடைய வெஸ்டாவைக் கிரேக்கர்கள் ஹெஸ்டியா என்ற பெயரில் வழிபட்டனர். ஓளிம்பஸ் மலையில் பிற தேவதைகளுடன் இருக்கும் ஹெஸ்டியாவுக்கு யாகத்தின் ஒரு முக்கிய பங்கைக் கிரேக்கர்கள் அளித்தனர். கன்னி மாதாவான இந்தத் தேவதையை வழிபடுபவர்களான பெண்கள் திருமணம் செய்யாமல் கோயில்களில் தங்கினர்."7
பெண்ணினால் தீ கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்றில் பெண்களே தொடர்ந்து அதன் பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நெருப்பைச் சொந்த வீடு சார்ந்த உழைப்பிலும், உணவைப் பதப்படுத்துவதிலும் உள்ள அறிவைக் கண்டுபிடித்ததும் பெண்ணே. எதிரி விலங்குக்கு எதிராகவும், விவசாய நிலத்தை உருவாக்கவும் என எல்லாப் பயன்பாட்டையும் கண்டுபிடித்தனர். இதைப் புனிதமான மனித வளர்ச்சியின் முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதி, அதைப் பாதுகாக்க திறமைமிக்க கன்னிப் பெண்களைத் தெரிவு செய்து நியமித்தனர். அப்பெண்கள் அதைப் புனிதமாகக் கருதித் திருமணம் செய்யாது வாழ்ந்தனர். அதில் இருந்து திருமணம் செய்யாத கடவுள்களை உருவாக்கினர்.
ஆனால் ஆணாதிக்கம் உருவான போதே, நெருப்பு ஆண் அதிகாரத்தின் சின்னமாகியது. நெருப்புக்குப் பெண்கள், குழந்தைகள் பலியிடப்பட்டனர். ஆணாதிக்க ஒழுக்கத்தை மீறிய பெண்கள் சிலுவையில் இட்டு நெருப்பிடுவது முதல் உடன் கட்டை ஏற்றுவது வரை (இங்கு ஏறுவது அல்லது ஏற்றுவது) தீயில் ஆணாதிக்கம் கோலோச்சியது. இன்று இந்தியாவில் வரதட்சணைக் கொலைகள் பொதுவாக நெருப்பின் மூலம் அரங்கேற்றப்படுகின்றது. முந்திய வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்து, ஆணாதிக்கம் பெண்களிடம் கைப்பற்றிய நெருப்பை ஒலிம்பிக் பந்தயத்தில் (போட்டியில்) ஆண் மட்டும் ஏற்றும் நிலைக்கு உலகச் சமூகம் தரம் தாழ்ந்தது. பெண்ணின் கண்டுபிடிப்பு மற்றும் நீண்ட பாதுகாப்பிற்கு உட்பட்ட நெருப்பு பெண்ணிடம் இருந்து விலக்கப்பட்டது. பெண் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்ள இருந்த தடை மற்றும் தீபம் ஏற்ற இருந்த தடை ஆகியவை பெண்ணடிமைத்தனத்தின் மீது உருவான ஆணாதிக்க நாகரிகத்தின் வெளிப்பாடாகும். இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து ஆராய்வோம்.
காட்டு மனிதனாகக் காட்டில் வேட்டையாடி மனிதன் வாழ்ந்த காலத்தில், பெண் வீட்டில் குழந்தையின் தற்காப்பு கருதி பராமரிக்க நின்ற போது ஆண் வேட்டையில் ஈடுபட்டான். வீட்டில் இருந்த பெண், குழந்தை பராமரிப்புடன் சேகரித்த தானியங்களை மறு உற்பத்தியில் பயன்படுத்திய புதிய கண்டு பிடிப்புகளைப் பின்னால், ஆண்கள் பெண்ணின் அறிவியலைத் திருடித் தனது தனியுடைமைச் சொத்துக்கு உரம் ஆக்கினான். ஆணின் வேட்டைப் பொருளை விட அந்தச் சமூகத்தின் தேவையில் ''80 சதவீதத்தை"5 பெண் உற்பத்தி செய்வதை இன்றைய ஆய்வுகளின் மூலம் ஆதாரமாக லீயும், டிவோரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தென்அமெரிக்க ஒரினோகோ இந்தியர்களிடையே ஆண்கள் விவசாயத்தில் ஈடுபடாமை குறித்து அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மதப்பிரச்சாரகர்கள் ஏன்? என வினாவிய போது, ''பெண்கள் ஒரு தினையை விதைத்தால் இரண்டு அல்லது மூன்று காம்புத் தினை விளையும், அவர்கள் ஒரு மரவள்ளியை நட்டால் மூன்று கூடை மரவள்ளிக் கிழங்குகள் கிடைக்கும். அதெப்படியெனில் அவர்களுக்குத் தான் குழந்தைகளை உண்டாக்கவும் தெரியும், பயிர்களை உயிர்ப்பிக்கவும் தெரியும்;. எங்களுக்கு அவர்கள் அளவு அறிவு இல்லாததினால் இவற்றையெல்லாம் அவர்களே செய்யட்டும்"83 என்றார்கள். இது எமக்குப் பெண்ணின் உயர்ந்த நிலையைக் காட்டுகின்றது.
ஏங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் ''உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதும் மறுபக்கத்தில், குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றது"8 என்றார். இது பெண்ணின் மதிப்புக்குரிய வாழ்க்கையை ஏற்படுத்தியது. பெண்கள் உணவு மற்றும் இனப் பெருக்கத்தைச் செய்வதில் தலைமை தாங்கியதால் பெண் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கினாள். ஆண்கள் இதைச் செய்வதில் இருந்து ஒதுங்கிய தன்மையானது அவை 'பெண்ணின் கடமை என்பதால் அல்ல, ஆண்களுக்கு அது தெரியாது என்பதால் தான்". இதில் இருந்து தான் அவை பெண்ணின் உரிமையாக இருந்தவைகளை ஆணாதிக்கச் சமுதாயத்தில் கடமையாகின்றது.
குழந்தை பிறப்பு, வளர்ப்பு, வீட்டு வேலை மற்றும் சுற்றுப்புற உழைப்புகள் பெண்ணின் உரிமையாகக் கண்டுபிடிப்பாக இருந்தது. இது ஆணாதிக்கக் சமுதாயத்தில் பெண்ணின் கடமையாகியது. இயற்கையான வரலாறு பற்றி தெரிந்திராத பெண்ணியல்வாதிகள், இதை ஆண்கள் திணித்ததாகவும், இன்றைய நிலையில் அவைகள் பெண்ணின் கடமையாக இருப்பதை வைத்து காண்கின்றனர். ஆணாதிக்கம் கோலோச்சிய போது பெண்ணின் உரிமைகள் ஆணுக்குச் சேவை செய்யும் கடமையாக்கப்பட்டது. மனித உழைப்பு மனிதனின் கண்டுபிடிப்பாக, உரிமையாக இருந்ததைத் தனிச்சொத்துரிமை இன்று இயந்திரத்தின் உறுப்பாக்கி மூலதனத்துக்கு அடிமையாக்கியது போல் தான் இது நிகழ்ந்தது. பெண்ணின் மதிப்பார்ந்த உயர்ந்த வாழ்க்கையில் இன்றைய ஆணாதிக்கப் பெண்ணியம் எதை மறுக்கின்றதோ, அதில் இருந்து புரிந்து போராடாத வரை, ஆணாதிக்க உயர்வை நோக்கிய போராட்டமே பெண்ணியமாகி ஆணாதிக்க மயமாவது நிகழ்கின்றது.
மேலும்; லீயும், டிவோரும் பெண்களின் ஆளுமையையும் பெண்ணின் கண்டுபிடிப்புகளை ஒட்டி, ''உணவு சேகரிப்பிற்குத் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சி, வயதடைதல், பயன் தரும் பருவம், இனப்பெருக்கம் பற்றிய மிகத் தெளிவான அறிவு தேவை. தாவரங்களையும், விலங்குகளையும் தேவைக்குத் தக்கனவாகத் தேர்ந்தெடுத்து, வளர்த்தெடுக்கும் அவ்வறிவைப் பெண்கள் பெற்றிருந்தனர். பெண்களின் உணவு சேகரிப்பின் கண்டுபிடிப்புகள் என்பவை கலப்பைக்கு முந்திய தோண்டுகழி, தூக்குப் பைகள், கதிர் அரிவாள் மற்றும் பிற கத்திகள் ஆகியன ஆகும். உடைப்பு மற்றும் தூளாக்கும் கருவிகள் ஆகியவை உலர்த்த, வறுக்க, அரைக்க, கொதிக்க பயன்பட்ட தொழில் நுட்பங்கள் ஆகும். கூடைகள், குதிர்கள், சேமிப்புக்குழி (களிமண் சுவர் கொண்டது) போன்றவை உணவு சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தினர். இவை இன்னும் கூட தன்னிறைவு பெற்ற சமூகங்களில் பயன்பாட்டில் உள்ளன.
முர்டதக்கின் இனவியல் வரைபடங்களின் படி முன்னேறிய 142 தோட்டக்கலைச் சமூகங்களில், விவசாயம் 50 சதவீதம் பெண்களின் ஆளுகையிலும், 27 சதவீதம் ஆண்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டும் இருந்தது. இச்சமூகங்கள் ஐந்தில் ஒரு பங்கில் மட்டுமே ஆண்கள் வேளாண்மையில் முழு பொறுப்பாளர்களாக இருந்தனர். பெண்களே தாவரங்களையும், விலங்குகளையும் தேவைகளுக்கேற்ப கண்டுபிடித்து, தேர்ந்தெடுப்பூடாக இனக்கலத்தலைச் செய்தனர். பெண்கள் தான் கரணைகள் மற்றும் தாவரப் பகுதிகளை வெட்டி நடல் மூலம் பயிர் வகைகளைப் பரவலாக்கம் செய்தல், விதை சேகரிப்பும், தேர்ந்தெடுப்பும் நாற்றங்கால்களை அமைத்தல் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர்.மலைபடுகடாம்328,329-குறிஞ்சி 40-44-இல் ''ஆண்கள் வீட்டை விட்டு வேட்டை மேற்செல்ல பெண்கள் குழுக்களாகச் சேர்ந்து இரவு பகலாக வனவிலங்குகள், பறவைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்தனர்."9 இவ்வாறு சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றது. நாட்டுப் புறப்பாடல் பெண் சார்ந்து வேளாண்மை மீது தமது இயற்கை உணர்ச்சியை வெளிப்படுத்துவதைக் காண்போம்;
''தானா தன்னை தான தன்னை
தானா தன்னை தான தன்னை
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்க கையால் கும்மியடி
வயல் வாய்க்கால் செழிக்க வேனும்
வாழ்க்கை வளம் ஆகனும் (தை)
நெல்லு வெளைஞ்சதை பாருங்களேன்
நெல்லு கும்பிடு பாடுது பாருங்களேன்
கதிர் வெளைஞ்சதை பாருங்களேன்
கதிர் கண்ணு சிமிட்டுது பாருங்களேன்.."10
இன்று நிலத்துக்கோ, விளைச்சலுக்கோ எந்த விதமான உரிமையற்ற மக்களின், குறிப்பாகப் பெண்களின் வெளிப்பாடுதான் இது. கிராமியப் பெண்கள் எந்தளவுக்குச் சமூகத்தன்மை கொண்டு, தம்மை இயற்கை சார்ந்து வெளிப்படுத்துகின்றார்கள் என்பதை இந்தப் பாடல் காட்டுகின்றது. இந்தச் சமூகத் தன்மையை எந்தப் பூர்சுவா பெண்ணியமும் வெளிப்படுத்த முடியாத உயர்ந்த சுயநலமற்ற வெளிப்பாடாகும்.
ஸ்பேன்லி என்பவர் பெண்களின் கண்டுபிடிப்புகளைப் பின்வருமாறு பட்டியலிடுகிறார்: ~சாம்பலை உரமாகப் பயன்படுத்தியது, சிறு உழவுக் கருவிகளை வடிவமைத்தது, பயிர் சுழற்சி மற்றும் நிலச் சத்துக்களைத் திரும்பப் பெற பயிர் செய்யாமல் நிலத்தைச் சும்மா வைத்திருத்தல், வைக்கோலால் வேர்களை மூடி வைத்தல், உயர்ந்த நிலங்களில் சாகுபடி செய்தல், வளைதளப் பரப்புகளில் பயிரிடுதல், மரங்களை நடுவதன் மூலம் நீர்ப்பாசனம் மற்றும் நிலங்களைப் பாதுகாத்தல், இவை யாவுமே பெண்களால் கண்டறியப்பட்டது தான். மேலும் எட்டு வகைத் தானியங்களையும் உள்ள+ர் தேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியவர்கள் பெண்களே எனவும் கூறுகின்றார். (அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ், சோளம், பயிறு வகைகள், ராகி) வேளாண்மையில் 14,000 ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற பெண்ணிய அறிவு 20 ஆண்டுகளுக்குள் வெகு சில ஆண் விஞ்ஞானிகளால் உலகெங்கும் சிதைக்கப்பட்டது."5 தானியச் சேகரிப்பு மற்றும் தானியப் பாதுகாப்பில் பெண்களே இயற்கை விஞ்ஞானியாக விளங்கினர். பெண்கள் பற்றிய ஓர் ஆய்வில் விதை தேர்ந்தெடுப்பது நேபாளப் பெண்களின் பொறுப்பாக இருந்துள்ளது என்ற உண்மையை நாம் இன்று காணத் தவறி, போராட மறுப்போமாயின் இருக்கும் பெண்ணின் எச்சச் சொச்சக் கண்டுபிடிப்புகளும் அழிக்கப்பட்டுவிடும்.
பெண்ணின் சொத்துரிமை மறுக்கப்பட்ட அதேநேரம், ஆணின் தனிச் சொத்துரிமை பெண்ணை அடிமையாக்கிய நிகழ்வு தான், பெண்ணின் அடிமைக்கான முதல் நிகழ்வாகும். அதன் தொடர்ச்சியில் பெண் தனிமையில் ஆணாதிக்கச் சமூக அமைப்புக்குள் வீட்டிலும், வீட்டுச் சுற்றுப்புறத்திலும் சொந்த அறிவியலைத் தக்கவைக்கவும், தன் வயிற்றையும், குழந்தைகளின் வயிற்றையும் பசியாற்ற ஆணைச் சாராது வாழ இயற்கையைச் சார்ந்து,பெண்கள்மனித உணவுத் தேவைக்கான முக்கியமான கண்டுபிடிப்புகளை நடத்தினர். இந்தக் கண்டுபிடிப்புகள் குடும்ப அமைப்பில் பொருளாதாரத் தேவையைப் பூர்;த்தி செய்ததால் ஆண் மௌனமாக அதை ஏற்றுக் கொண்ட போதும், சிலவேளைகளில் அபகரித்தபோதும், பெண் தனது கண்டுபிடிப்புகளையும், அதன் பொருளாதாரப் பலத்தையும் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்தாள்.
சமுதாயத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெண்ணின் பங்கை நாம் ரிக்வேதத்தில் காணமுடியும். ''பணிவுள்ள யுவதிகள், தருணனைப் பணிய அருகில் நிற்கிறார்கள். அவனை நீராட்ட ஊக்கமாகிறார்கள்...மூன்று ஸ்திரிகளான தேவிகள் துன்மாகாத தேவனுக்குச் சலப் பேரனுக்கு உணவை ஏந்துகிறார்கள்."7 உலகத்தைப் படைத்ததாக ரிக்வேதத்தில் கூறப்படும் அயாம்நபாத் என்ற கடவுள் பற்றிய உவமை வருணணையில் வரும் இவ்வரிகள், உணவை வழங்கியது பெண் என்பதையும், அவள் வீட்டு வேலைக்காரியாகப் பணிவான அடிமையாக இருந்ததையும் காட்டுகின்றது. ஆணாதிக்கச் சமுதாயம் கோலோச்சியதையும், அதே நேரம் பெண்ணுக்கு உணவு வழங்கும் ஆற்றல் இருந்ததையும் காட்டுகின்றது.
இன்று நவீனத்துவத்துக்குப் பிந்திய பின்நவீனத்துவ ஏகாதிபத்தியம் பெண்ணிடம் எஞ்சியிருந்த சொத்துரிமையைப் பறித்தெடுத்து, அவளின் கண்டு பிடிப்புகளைத் தனதாக்கியும், அழித்தும் வரும் புதிய போக்கை எத்தனை சமூகவியலாளர்கள், புரட்சிக்காரர்கள், பெண்ணியல்வாதிகள் அடையாளம் காண்கின்றன. பெண்ணியம் பேசும் பிரிவுகள் பெண்ணின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பறிக்கப்படும் போதோ, எஞ்சிக் கிடந்த அரை வயிற்று கஞ்சிக்கான பெண்ணின் சொத்தாக நீடித்த பொருள் வளங்களைக் களவாடிச் சூறையாடும் போதோ கண்டு கொள்வதில்லை.
உதாரணமாக இந்தியாவில் பெண்களின் கைகளில் இயற்கை விஞ்ஞானத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் 4 இலட்சம் நெல் வகைகள் இருந்தன. கடந்த 50 வருடத்தில் 30,000 இத்திற்க்கும் மேற்பட்ட நெல் வகைகள்5 இருந்தன. இதை இன்று ஏகாதிபத்தியம் தனது பரிசோதனை மையங்களில் அழித்து இயற்கை பரிணாமத்தையும், இயற்கையையும் எதிர்த்து நிற்க முடியாத ஓரினப் பயிராகவும், ஓரின விலங்காகவும் மாற்றி உருவாக்கி வருகின்றனர். இதைப் பிலிப்பைன்ஸ் மக்கள் ஏகாதிபத்திய விதை எனச் சரியாக அழைக்கின்றனர். பெண்ணின் அறிவியல், இயற்கைப் பாதுகாப்பு என அனைத்தையும் பறித்தெடுப்பதைப் பெண்ணியம் பேசுவோர் கண்டு கொள்வதில்லை. உச்சத்தொனியில் பூர்சுவா கோரிக்கைகளை உயர்த்தவும், கூச்சல் இடவும் தயாரானவர்கள், பெண் பின்நவீனத்துவப் பொருளாதார வழியில் மேலும் அடக்கப்படும் போது, அதே பின்நவீனத்துவ வழியில் அதற்குச் சார்பாகப் புலம்புகின்றனர்.
இன்று மூன்றாம் உலக நாடுகளில் பெண்ணின் சொத்தாக இயற்கை வளமும், அதன் மீதான அறிவியலும், விவசாயம் சார்ந்த அறிவியல், பொருளாதார ஆதாரங்கள் இன்னமும் நீடிக்கின்றன. இதற்கு எதிராக ஏகாதிபத்திய உலகமயமாதல் நாலு கால் பாய்ச்சலில் முரணின்றி அழிக்க முற்படும் நிலையில், பெண்ணியத்தைப் பாதுகாக்கப் போராடுவதும்,இன்றைய பெண்ணியத்தின் தற்காப்பைப் பலப்படுத்தவும், ஆணாதிக்கத்தை ஒழிக்கவும் உள்ள மிக முக்கியமான அரசியல் வழியாகும். பெண்ணிடம் இருந்து உரிமைகள் மேலும் பறிக்கப்படுவதை எதிர்த்து, அதை ஆதாரமாகக் கொண்டு போராடாத அனைத்துப் பெண்ணியமும், அனைத்துப் போராட்ட அரசியலும் ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பவை தான்.
இயற்கையை அழிக்கும் முதலாளித்துவச் சூறையாடல் ஆணின் உற்பத்திக்குச் சந்தைப் பெறுமானத்தைக் கொடுக்கும் வகையில் சமூக நுகர்வு வேட்டை கொண்டிருப்பதால், பெண்ணின் உழைப்பு உற்பத்தியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இது சமுதாயத்தின் பல மாற்றத்தைச் சந்தித்த நிலையில், பெண்ணை வீட்டு வேலைக்கு வெளியில் சுரண்டும் வர்க்கம்; கூலி உழைப்புக்குள் சுரண்டிக் கொழுக்க கொண்டு வந்த போதும், பெண் உழைப்பு பெறுமதியற்ற எல்லைக்கு உட்பட்ட வகையில் ஆணை விட பெறுமதியற்றதாகச் சுரண்டும் சமுதாயம் வரையறுத்துக் கொண்டது.
மனிதச் சமுதாயத்தில் அனைத்து உற்பத்தியும் இயற்கையில் உள்ள பொருட்கள் மீதான மனித உழைப்பால் உருவாக்கப்படுகின்றன. பொருட்கள் மதிப்பற்றதாக இயற்கையில் இருக்கின்றது. அவை எல்லா மனிதர்களும் உழைப்பில் ஈடுபட்டு, தேவைக்கு ஏற்ப பொருட்கள் பயன்பட்டுப் பெண்ணின் உழைப்பும், ஆணின் உழைப்பும் இணைந்து உழைப்பு எல்லையால் பெறுமதிப்புடையதாக மாற்றுவது, பெண்ணின் விடுதலைக்கு அடிப்படையானதும், மிக முக்கியமானதுமாகும்.
இந்த வகையில் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தில் பெண்ணின் உழைப்பை ஆணின் உழைப்புக்கு ஈடாகப் பெறுமதியாக்குவதும், அதேநேரம் பெண்ணின் இயற்கையைச் சார்ந்த உற்பத்தியின் மதிப்பற்ற நிலைக்கு ஆணின் உழைப்பைத் தரம் இறக்க வேண்டும். இது நீண்ட நெடிய பாதையூடாக மாறிச் செல்லும். அதாவது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பெண்ணியக் கோரிக்கைகள் ஆணாதிக்க இயற்கை மறுப்பு பெறுமதியைக் கோருவதுக்குப் பதில், ஆணின் ஆணாதிக்க உழைப்பின் மதிப்பைப் பெண்ணின் பெறுமதியற்ற இயற்கை நிலைக்கு மாற்றக் கோரி, போராட வேண்டும். இது அல்லாது பெண்ணின் உழைப்பை ஆணின் மதிப்புக்குக் குறைக்கக் (இங்கு கூலியைக் குறித்தல்ல) கோரும் (ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் உயர்த்தக் கோருவது) கோரிக்கைகள் ஆணாதிக்கத்தைத் தக்க வைத்த பூர்சுவாக் கோரிக்கையாகும். இது இயற்கைக்கு எதிரானது.
ஆணின் நிலையைப் பெண்ணின் இயற்கை நிலைக்குத் தரம் உயர்த்த வேண்டும். அதாவது ஆணாதிக்கத்தால் பெண்ணிற்கு ஏற்பட்ட சில தவறான, இயற்கைக்குப் புறம்பான அம்சங்களைக் களைந்த படி, ஆணின் சில நல்ல இயற்கை சார்ந்து, பெண் சார்ந்து உள்ள அம்சங்களை உள்வாங்கிய படி ஆணைத் தரம் உயர்த்தி பெண் -ஆண் ஒன்று இணைய வேண்டும்;. எப்போதும் பெண்ணில் பெரும்பான்மையான அம்சங்களும், ஆணில் சிறுபான்மையான அம்சங்களும் இயற்கை சார்ந்து உள்ளதால் பெண் சார்ந்து ஆண் நிலையை மாற்றப் போராட வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் பல பெண்ணிலைவாத அமைப்புகள் எதிர் நிலையில் ஆணாதிக்கம் சார்ந்து, ஏகாதிபத்தியத் தனிச்சொத்துரிமை சார்ந்த முன்னேற்றத்தை அனைத்துத் துறையிலும் முன்வைக்கின்றனர்.
பொதுவாகப் பெண்ணின் இயற்கை சார்ந்த அம்சங்கள் அடிநிலையில் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களிடையேயும் நீடிக்கின்றன. மத்தியதர மற்றும் மேற்பட்ட பிரிவு பெண்களிடம் இயற்கையை மறுத்த ஆணாதிக்க அம்சம் ஆண்களை விட சற்று குறைவாக உள்ளதுடன், இதைக் குறைபாடாக உணர்ந்து ஆணாதிக்கத்தை நோக்கி முன்னேறுவதிலும், போராடுவதிலும் போட்டி போடுகின்றனர்.
உதாரணமாக அடிநிலைப் பெண்கள் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த பின் உண்ணும் பழக்கம், பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஆணாதிக்கத்துக்கு எதிரானது. ஆணை அந்த நிலைக்கு, அதாவது பகிர்ந்து உண்ணும் நிலைக்குத் தரம் உயர்த்துவதன் மூலம் தான் பெண்ணை மதிக்கும் பண்பாடும், மற்றவர்களை மதித்து வாழும்; பண்பாடும் உருவாகும்;. இதுதான் இயற்கை. ஆனால் இந்தப் போக்கு மேல்தட்டுப் பெண்களிடம் கிடையாது. அவர்களும் ஆணாதிக்கவாதிகள் போல் தனியுடைமைக் கண்ணோட்டத்தில், பெண்களிடம் நீடித்த சமூகப் பகிர்வுக் கண்ணோட்டத்தைக் கைவிட்டு,ஆணைப் போல் பெண்ணும் ஆணாதிக்க உலக நோக்கில் சீரழிந்துள்ளனர்.
இது போன்று ஒவ்வொன்றிலும் இயற்கை சார்ந்த சமூகப் பெண்ணியத்தைப் பாதுகாக்கப் போராடும் அதேநேரம், சமூக இயக்கம் ஆண் - பெண் வேற்றுமையில் இயற்கை சார்ந்து அடையாளம் கண்டு கொள்வது அவசியம். ஆணாதிக்கத்தின் பக்க விளைவுகளினால் இயற்கைக்கு மாறானதை இனம் கண்டு கொள்வதும், அதை எதிர்த்து இயற்கையைக் கோரிப் போராடுவதும் பெண்ணியத்தின் மிக கூர்மையான அடிப்படையான விசயமாகும். இவை அல்லாத அனைத்தும், இந்த ஆணாதிக்க எல்லைக்குள் சரணடைவை அல்லது சலுகையைக் கோரும் ஆணாதிக்க வரையறைகளேயாகும்.
பெண்ணின் அறிவியல் விழிப்புகள் இயற்கை சார்ந்தது. ஆணாதிக்கத்தை எதிர்த்து இயற்கை உற்பத்தியில் இருந்து பெண்ணின் கோரிக்கைகள் இயற்கையாக வந்ததால், பெண்ணின் விழிப்புணர்ச்சி தனியுடைமை சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்டன. இதனால் பெண்ணின் விழிப்புணர்ச்சி ஏற்படாது இருக்க பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண்ணின் அறிவு வளர்ச்சி பெற்ற அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக, அவர்களைச் சூனியக்காரி என்றும், வேறு வகையிலும் அழித்து ஒழிக்கப்பட்டனர். இங்கிலாந்தில் வியாதியைக் குணப்படுத்தும் இயற்கை சார்ந்த பெண்கள் சூனியக்காரிகளாகப் பலியிடப்பட்டனர். இந்த நிலையில் அறிவைப் பெற்ற பெண்கள் தம்மை வெளிக்காட்ட பயந்து மௌனம் சாதித்தனர். நாலு விசயத்தைத் தெரிந்து பேசும் பெண்களையும், கேட்கும் பெண்களையும் அடங்காப்பிடாரிகளாக, வாய்ச்சாலக்காரிகளாகக் காட்டுவதெல்லாம் இன்றும் தொடர்கின்றது.
இன்று சுரண்டும் கல்வியைப் பெண்ணுக்கு அனுமதித்த சுரண்டும் வர்க்கம் இதற்குள்ளான சிந்தனையையும், எல்லையையும் வரையறுக்கின்றது. நாலு விசயம் சுரண்டும் அமைப்புக்கு வெளியில் தெரிந்தாலும், அவள் இந்தச் சமூகத்தின் முன் கேவலத்துக்குரிய பிறவி தான். கல்வியில் இன்றும் சுரண்டல் எல்லையைத் தாண்டிச் சிந்திப்பதை மறுக்கின்றது, இந்த ஆணாதிக்கச் சமூகம்.
அடிமட்டப் பெண்ணின் இயற்கை சார்ந்த அறிவியல் என்பது இன்றும் இயற்கையைச் சார்ந்து உள்ளது என்பது மிக முக்கியமானதாகும். ஒரு கிராமத்திலோ அல்லது காட்டிலோ வாழும் கிராம அல்லது காட்டு வாழ் மக்களின் தேவைகள், அறிவுகள் இயற்கை சார்ந்து உள்ளதால் இவை பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ஒரு வருடத்தில் 27 வகையான இலைத் தாவரத்தை உண்டு வருகின்றனர்.
ஏகாதிபத்தியச் சுரண்டல் கல்வி அறிவற்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 37 வகையான தாவரங்களின் பெயரை இருளப் பெயர் கூறி அடையாளம் காட்டியதோடு, அதன் பயன்பாடுகளையும் விளக்கினான்.11 இந்த வகையில் கல்வி இயற்கையை நோக்கியா? செயற்கையை நோக்கியா? என்பது பற்றிய அடிப்படை கேள்வி பெண்ணியத்தின் முன் எழுப்பப்பட வேண்டியுள்ள நிலையில் ஆணாதிக்கம் கோலோச்சுகின்றது. பெண்ணிடம் காணப்படும் இயற்கை சார்ந்த மருத்துவத்தை எடுத்தால், பாரம்பரியமாகத் தெரிந்து வரும் மருத்துவக் கல்வி, ஆணாதிக்கத் தனியுடைமைச் சமுதாயத்தில் மதிப்பற்றதால் அக்கல்வியும் கூட மதிப்பற்றதாகின்றது. வைத்தியராகும் கனவுடன் பூர்சுவா வர்க்கம் அலையும் போது, அடிமட்டப் பெண்களிடம் காணப்படும் இயற்கை மருத்துவம் பண மதிப்பற்றதால் அது ஆணாதிக்கத் தனியுடைமை மருத்துவத்தால் அழிக்கப்படுகின்றது.
மிருக வளர்ப்பில் பெண்கள், தாயை இழந்த குட்டிகளுக்குத் தன் சொந்த முலையில் பால் கொடுப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அத்துடன் மருத்துவ அறிவையும் பெற்று இருந்தனர். தாவரங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளின் விளைவுகளைக் கொண்டு, கண்டறிந்த விளைவுகள் மாற்றத்தை ஏற்படுத்திய போது, அவை சூனியமாக விளக்கப்பட்டது. இது பற்றி ஆப்பிரிக்க வாசிகளிடம் கேட்ட போது ''சில விளைவுகளை ஏற்படுத்தும் மூலிகைகளைப் பற்றி அறிதலும், அவற்றைக் கலந்து தேவையான விளைவைப் பெறுதலும்"83 என்று விளக்கினர். ஆனால் இன்று சூனியம் முற்றாகத் திரிபடைந்து போனது ஏன்? ஆணாதிக்கம் கோலோச்சிய போது பெண்ணின் அரிய சமுதாய நோக்கம் கொண்ட கண்டு பிடிப்புகள், தனிச் சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் இலாபத்தைத் தரக் கூடியவைகளை ஆண் படிப்படியாகக் கைப்பற்றிக் கொள்கின்றான். ஆண் அதை ஆணாதிக்க நவீனக் கண்டுபிடிப்பின் ஊடாக மேலும் மேம்படுத்தி மருத்துவமாக மாற்றிய அதே நேரம், பெண்ணின் மருத்துவச் சக்தியைச் சூனியமாக்கி அன்னியப்படுத்தினான்.
நாட்டு வைத்தியம் நவீன மருத்துவத்தின் முன் இன்று உதைக்கப்படுவது போல், பெண்ணின் மருத்துவமான சூனியம் சிறுமைப்படுத்தப்பட்டது. குழந்தை பராமரிப்பு, பிரசவம் போன்றதில் இருந்து மிருக வளர்ப்பு, பயிர் செய்வது வரையில் சந்தித்த அநேகமான நெருக்கடிகளுக்கு, இயற்கை சார்ந்து கண்டறிந்த மருத்துவம் ஆணின் சொந்தம் அல்ல. அவை பெண்ணின் உயிராதாரமான பாதுகாப்பை வழங்கிய வளர்ச்சியின் கண்டுபிடிப்புக்கு ஊடாகப் பெண்ணின் உரிமையாக இருந்தது. இன்று ஆணாதிக்கச் சமுதாயத்தில் அதுவும் களவாடப்பட்டது. சூனியம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி இன்று அடித்துக் கொல்லும் அளவுக்குச் சிறுமைப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து பெண்கள் மீளவும், இயற்கை சார்ந்து போராடவும் வேண்டியுள்ளது.
''மெக்ஸிகோ மக்கள் மத்தியில் பெண்களே மிகச் சிறந்த அகராதிகள் என்னும் பழமொழி இன்றும் வழக்கில் இருக்கின்றது."83 இதன் மூலம் சமுதாய அறிவினைப் பெண்கள் திரட்டி வைத்திருந்ததைக் காட்டுகின்றது. ஆண்கள் அலைந்து திரிந்து கண்டவற்றைப் பெண்களுக்குக் கூறிய போது, அவைகளையும், தனது உற்பத்தி மற்றும் சுற்றுப்புறத்தில் பெற்ற அறிவையும் இணைத்து, சந்ததி சந்ததியாய் எடுத்துச் சென்ற ஓர் உன்னதமான தகவல் மையமாக, தகவல் கடத்தியாகப் பெண்கள் திகழ்ந்தனர். இன்று வரை கூட இயற்கை சார்ந்து வாழும் பெண்களிடம் மட்டும் அவ்வறிவு எஞ்சிக் கிடக்கின்றது. வரலாற்றில் இன்று சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஆணாதிக்கக் கல்வி, இயற்கையான அனைத்துக் கல்வியையும் தனக்கு அடிமைப்படுத்திச் சிதைத்து தனக்குச் சேவகம் செய்யவும் அல்லது அழித்து நாசமாக்கியும் உள்ளது. இயற்கை அறிவு மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியான அறிவுகளை இழிவுபடுத்தி பார்க்கும் பண்பும், அவைகள் மீதான அழிவை வேகப்படுத்தியுள்ளது. பெண்களின் தொடர்ச்சியான அறிவைப் பல்வேறு பண்பாட்டுக் கலாச்சாரத் தொடர்ச்சியில் இருந்து மீளப் புனரமைப்பதே புரட்சியின் அடிப்படையான வர்க்க நலனை உறுதி செய்யும் மார்க்கமாகும்.
இன்று ஆணாதிக்கத் தனியுடைமைச் சமூகம் பெண்ணை ஒடுக்கிய நிலையில் பெண் தன்னிடம் தக்க வைத்துள்ள இயற்கை சார்ந்த கல்வியைப் பாதுகாக்கவும், ஆணின் இயற்கை மறுப்பு ஆணாதிக்கக் கல்வியை இயற்கை சார்ந்த பெண்ணிய நிலைக்கு மாற்றப் போராட வேண்டும். இன்று ஆணாதிக்க அறிவியலில் 80 சதவீதம்5 உலகை ஆளும் ஆணாதிக்கத் தனியுடைமைச் சுரண்டல் சமூகத்தைப் பாதுகாக்க தேவையான ஆயுதக் கண்டுபிடிப்புக்குப் பயன்படுகின்றது. இதே நேரம் இலாப நோக்கம் கருதி ஆணாதிக்கம், பெண்ணின் அடிப்படை வாழ்வு சார்ந்த அறிவியல் இயற்கைகளை, மையங்களைச் சூறையாடி அழித்த காடுகளினால் மண் அரிப்பு, நீர் அரிப்பு, சூறையாடல்... போன்றவற்றால் உலகில் 150 கோடி மக்கள் பட்டினிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடிமட்டப் பெண்ணின் அறிவியல் என்பது சமூக அடித்தளத்தைப் பாதுகாக்க, வாழ்வை மேம்படுத்த இயற்கை சார்ந்து உள்ளது. அறிவியல் ரீதியில் அடிமட்டப் பெண்ணின் இயற்கை சார்ந்த அறிவியல் நிலைக்கு, ஆணாதிக்க அறிவியல் மாற்ற வேண்டிய நிலையில் பெண்ணியம் தன்னை அடையாளம் காட்டிப் போராட வேண்டும்.
இன்று இயற்கையில் இருந்து உருவான பயிர்கள் இயற்கையில் பரிணாமத்தினைச் சுயப் பாதுகாப்பு கொண்டு, தனது இயற்கையின் உயிர் வாழ்தலைக் கொண்டிருந்தன. இது மற்ற உயிரினத்துடன் அக்கம் பக்கமாகக் கூடி வாழ்ந்தன. இதன் மீது இலாப நோக்கம் கொண்டு நடத்திய தாக்குதல் ஊடாகக் கலப்புப் பயிரினத்துக்குப் பதில் ஒற்றைப் பயிரினத்தைச் செயற்கை முறையில் உருவாக்கி இயற்கை அனைத்தையும் அழித்தனர். இது இயற்கையை எதிர்த்து நிற்க முடியாது பலத்த அழிவுகளையும், பஞ்சத்தையும் விளைவாக்கியது.
இதையே மனிதனின் மீது கையாளும் ஏகாதிபத்தியச் சுரண்டல் பெண்ணையும், ஆணையும் பிளந்து ஒற்றைத் துருவம் ஆக்கி வருகின்றது. கூட்டு வாழ்வுக்குப் பதில், தனி மனிதர்கள் வரலாற்றின் ஓட்டமாக மாற்றிய பண்பாடு பெண்ணை வறுமையிலும், தனிமையிலும் சிதைக்கின்றது. பெண்ணிடம் இருந்த தற்காப்பு குடும்பத் தெரிவை ஆணாதிக்கம் அடக்கி ஆள்வதில் இருந்து மீட்சியாகக் காட்டிப் பெண்களை விபச்சாரச் சமூக அமைப்புக்குள் இயற்கைக்கு மாறாக வழிநடத்துகின்றன, ஏகாதிபத்திய ஒற்றைத் துருவச் சுரண்டல்கள்.
இயற்கையில் இருந்து மனிதன் பிரித்து எடுக்கப்பட்டான். காட்டில் இருந்த மிருகங்கள், ஆறுகள் பிரிக்கப்பட்டன. சமூகத்திலும், இயற்கையிலும் இருந்து ஆண் பிரிக்கப்பட்டான். ஒவ்வொன்றையும் இயற்கையில் இருந்து செயற்கையாக, அதாவது அனைத்தையும,; குறிப்பாக ஆண்-பெண்ணைக் கூடத் தனித்தனியாக வளர்க்கப்பட்டனர். இயற்கையில் இருந்து பணம் உருவாக்கப்பட்டது. அது தனிநபர்களின் கைக்கு மாற்றப்பட்டது. அது தனிநபரின் சொத்தாக இயற்கை, பெண் என அனைத்தும் தனிச் சொத்துரிமை சார்ந்து மனித உளவியலால் சிதைக்கப்படுகின்றது. இதன் நீட்சியில் இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்தச் செயற்கை ஒழுங்கை இயற்கை சார்ந்து புரிதல் கொண்டு சமூக விடுதலையின் உயிர்மூச்சாக அரசியல் மயமாக்கிப் போராட வேண்டும். இதை மறுப்பது ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பதாகும்.