முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத இந்நாடுகளில் பெயரளவிலான ஜனநாயகம் கூட கிடையாது. இதன் வெளிப்பாடாகப் பெண்களின் நிலை என்பது ஐயத்துக்கு இடமின்றி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்துக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளாள். இருந்த போதும் இப்பெண்கள் இயற்கையையொட்டியும், ஒருதாரமணத்துக்குள் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் முடிவதால் மேற்கைவிட தன்னளவில் நிம்மதியாகக் கூட்டு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கின்றாள்.
நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணின் சுயச்சிந்தனையை விலங்கிடுவதால் பெண்ணின் தெரிவுகள் முதல் அனைத்தும் வளர்ப்பு மிருகத்தின் நிலைக்குத் தாழ்ந்துள்ளது. வளர்ப்புப் பண்ணைகளில் மிருகத்தின் பாலியல் பூர்த்தியை எப்படி வளர்ப்பவன் தீர்மானிக்கின்றானோ, அதேபோல் பெண்ணின் பாலியலை ஆணாதிக்கச் சிந்தனை கட்டுப்படுத்தித் தீர்மானிக்கின்றது.
பிறந்தது முதல் அது பெண்ணா? ஆணா? என்ற தெரிவிலேயே இவை தீர்மானமாகிவிடுகின்றது. பண்ணையின் தேவையை ஒட்டிச் சினைப்படுத்தும் மனிதன், பெண்ணையும் தனது தேர்வுக்குட்படுத்தி பிள்ளையைப் பெற ஆணாதிக்கம் வழிகாட்டுகின்றது. அடக்கமான, ஒடுக்கமான, நாணம் கொண்ட (நானாம் (மூக்குச்சரடு) பூட்டிய மாடுபோல) நிலப்பிரபுத்துவப் பெண் கணவனுக்குத் தலைகுனிந்து சேவகம் செய்யவும், அதேநேரம் ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யவும், ஒருதலைப்பட்சமான, ஒரு பக்கமான காதலை, அன்பைச் சொரியவும், ஒருதாரமணத்தைப் பேணவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள். அதே நேரம் ஆணின் உழைப்பைச் சார்ந்து வாழவும் கோரப்பட்டாள்;. சொந்த உழைப்பை நல்குவது அடங்காப்பிடாரித்தனமாகவும், அதில் வாழ நினைப்பது குடும்பப் பெண்ணின் பண்பு அல்ல என்றும் பலவகையான விளக்கத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ளாள்.
விவசாயத்தைச் சார்ந்த கூட்டுக் குடும்பம், நிலப்பிரபுத்துவத்தால் நிலத்தில் இருந்து நிலமற்ற கூலியாக மாற்றிய போது, கூட்டுக் குடும்பம் பண்பியல் மாற்றத்தைச் சந்தித்தது. இக்குடும்பத்தில் பெண்ணின் உழைப்பு பெறுமதி வாய்ந்த கூலியைப் பெற்ற போது, ஆணைச் சார்ந்த பொருளாதாரக் குடும்பக் கண்ணோட்டம் மாற்றம் கண்டது. பெண்ணின் ஆளுமை என்பது வளர்ச்சி பெற்றது. இருந்தபோதும் பற்றாக்குறை, குடும்பத்தில் குழந்தைகளைப் பராமரிக்க போதுமான கூலியின்மை ஆகியவை அப்பெண்ணை ஆணைச் சார்ந்திருக்க நிர்ப்பந்தித்தது. இதைப் பாதுகாக்க ஆதிக்கம் பெற்ற நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கக் கூட்டுக் குடும்ப அமைப்பு, பெண்ணின் உரிமை பற்றி சிறுமைப்படுத்தியது. இந்தப் பண்பாடு அடிமட்டக் கூலிப் பெண்களை இரட்டைத் தளத்துக்குள் வாழ நிர்ப்பந்தித்தது.
இதற்குள் இந்தியா போன்ற நாடுகளின் சாதிக்கட்டமைப்பை ஆராயின் பார்ப்பனிய ஆணாதிக்கப் பண்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்ததில்லை. ஆதிக்கப் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமும், முரண்பாடுகளும் கூர்மையாக இருந்த போதும், ஆதிக்கம் பெற்ற சாதியின் பண்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் பல்வேறு தளத்தில் எப்படி புகுந்ததோ, அதுவே அடிமட்ட பெண்ணுக்கும் நிகழ்ந்தது. இப்பெண்கள் அதிகளவுக்குச் சுதந்திரமாக மற்ற பெண்களைவிட வாழ்ந்த போதும், ஆதிக்கம் பெற்ற நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பொருளாதாரப் பலம், அடிமட்டப் பெண்களை விடுவிக்காது ஆணாதிக்கச் சிறையில் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த அடிமட்டப் பெண்களின் சுயமான முடிவுகள், விவாகரத்துகள், மறுமணம், சுயமான உழைப்பு, சுயமான ஆணைத் தெரிவது என்பது மிக இலகுவாக நிகழ்கின்றது. பொருளாதாரப் பற்றாக்குறையும், குழந்தைகளின் பராமரிப்பும் இப்பெண்களின் கைகளை விலங்கிடுகின்றது. ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களின் நேரடி ஆதிக்கமும், அடக்குமுறையும் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது என்பது மிகக்கடினமானதாக உள்ளது. ஆனால் அது பண்பியல் கலாச்சார வழிகளில் புகுகின்ற போதும், அவை தீவிர முரண்பாட்டின் போது தகர்கின்றது. இதில் நாட்டுக்கு நாடு பல வேறுபாடுகள் உள்ளன. ஆப்பிரிக்கப் பெண்களில் பலதாரமணம், இலகுவான முறையில் விவாகரத்து, பெண்ணைச் சார்ந்து பொருளாதார ரீதியில் ஆண் வாழ்தல் (ஆண்கள் வேலையின்றி ஊர் சுற்றும் போது பெண்கள் சிறு விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தைப் பராமரிக்கின்றனர்.) போன்றன அடிமட்டப் பெண்களின் உரிமையாக உள்ளது. இது தென் அமெரிக்காவிலும் உள்ளது. தந்தை யாரெனத் தெரியாத குழந்தைகளைப் பெறுவது குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை.
இதன் எச்சச் சொச்சத்துடன் புதிதாகக் காலனித்துவமும், நவகாலனித்துவமும் முதலாளித்துவப் புரட்சி நடக்காத நாடுகளில் புகுந்த போது மாற்றங்கள் பல ஏற்படுத்த நிர்ப்பந்தித்தது, நிர்ப்பந்திக்கின்றது. காலனித்துவ ஆட்சிகளின் போது பல நாடுகளில் போலி ஜனநாயகத்தில் சில கூறுகளை எதிர்ப்பின்றி சுரண்டுவதுக்குச் சலுகையாகச் சமுதாயத்தில் புகுத்தினர். இது மேல்த்தட்டு வர்க்கத்தின் ஜனநாயகப் பிரிவுகளின் குடும்பத்துக்குள்ளும், வெளியிலும் பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கைகளை எழுப்பத் தூண்டுகோலாகியது.
இந்தக் கோரிக்கை தமக்கு மட்டுமானதாக மேல்மட்ட பெண்கள் எல்லைப்படுத்திக் கோரியதன் மூலம், காலனித்துவ வாதிகளின் விசுவாசமான ஒரு வர்க்கமாக மாறி அதிகாரத்தில் பங்கு கொண்டனர். இந்த ஜனநாயக அதிகார வர்க்கத்தின் ஆதிக்கப் பண்பாடுகள் அடிமட்ட பெண்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னால் காலனித்துவ ஆட்சிகள் வர்க்கப் புரட்சியைத் தடுக்க, பெயரளவிலான போலி பாராளுமன்ற ஆட்சியைச் சுதந்திரத்தின் பெயரில் பரிசளித்து சென்ற போதும் பெண்ணின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்தப் போலி சுதந்திரத்தைப் பெறுமுன் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டங்களின் போது, பெண்ணுக்குச் சுதந்திரத்தின் சார்பாக வழங்கிய வாக்குறுதிகள் கூட, போலிச் சுதந்திரத்தின் பாதுகாவலராக மாறிய முன்னாள் சுதந்திர வீரர்கள் வழங்க மறுத்தனர்.
காலனித்துவவாதிகளுடன் மோத, சமரசம் செய்து கொள்ள தமது சொந்த ஆணாதிக்க வர்க்க நலனுக்குப் பயன்படுத்திய ஜனநாயகக் கோஷங்களைக் கைவிட்ட இவர்கள், நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்கக் கூறுகளைப் பாதுகாப்பதையும், தீவிரப்படுத்துவதையும் தமது கடமையாகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர்.
குறைந்தது தேசிய முதலாளித்துவப் புரட்சியையும், தேசிய முதலாளித்துவ நாட்டையும் உருவாக்குவதற்குப் பதில் காலனித்துவத்தின் பொம்மை அரசாக நீடித்தனர். ஏகாதிபத்தியக் காலனித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் செய்து கொண்ட அதே சமரசத்தை இவர்களும் செய்து கொண்ட போது பெண்ணின் உரிமைகள் மறுக்கப்பட்டன.
காலனித்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய தரகு முதலாளித்துவ வர்க்கம் ஒன்றை ஏகாதிபத்தியம் தனது காலனித்துவத்தின் போதே உருவாக்கி அதனிடம் ஆட்சியைக் கைமாற்றியது என்பதும், அந்த வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் செய்த கூட்டின் மூலம் இரு பண்பாட்டு ஆணாதிக்க வழிகளில் பெண்ணை அணுகியது. ஏகாதிபத்தியத் தரகு முதலாளித்துவம் தமது பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய முதலாளித்துவத்தையும் அதன் ஜனநாயகத்தையும் மறுப்பது, ஒடுக்குவது நிபந்தனையானது.
இதனால் பெண் மீதான நிலப்பிரபுத்துவப் பண்பாட்டையும், ஏகாதிபத்தியப் பண்பாட்டையும் பொருளாதாரப் பண்பாட்டுடன் மாற்றியமைத்தது. இந்த மாறுதல் என்பது நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் கிராமத்தையும், ஏகாதிபத்திய ஆதிக்கம் நகரத்தையும் சார்ந்து பெண்ணின் இரு பண்பாட்டுத் தளத்தை ஒன்றுடன் ஒன்று ஊடுருவியபடி உருவாக்கியது. கிராமத்தில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனமும், நகரத்தில் ஏகாதிபத்தியத் தரகு ஆணாதிக்கச் சீரழிவும் என சமுதாயத்தின் இரு பண்பாட்டு வடிவங்களை ஒன்றை ஒன்று சார்ந்தும் விலகியபடியும் உருவாக்கியது.
ஏகாதிபத்திய (பின்நவீனத்துவ) உலகமயமாதல் என்பது தரகு முதலாளித்துவத்தை ஒதுக்கிய படி நேரடியான தேசம் கடந்த தலையீட்டைத் தொடங்கி, மறுகாலனியாதிக்கத்தை நிதி மூலதனத்தை ஆதாரமாகக் கொண்டு நிறுவி வரும் நிலையில், இந்த இரு ஆணாதிக்கப் பண்பாட்டு நிலைகளும் தீவிரமான ஐக்கியத்தையும், முரண்பாட்டையும் உருவாக்கியுள்ளது.
தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கச் சக்திகள் பாசிசமாக ஆணாதிக்கப் பண்பாடுகளை முன்வைத்து, ஆட்சிகளை முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயக வழிகளிலும், இராணுவ வழிகளிலும், புரட்சி வழிகளிலும் கைப்பற்றுவதும், அதே நேரம் ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை மறைமுகமாகப் புகுத்துவதும் என்ற இரட்டைத் தன்மை எல்லா நாடுகளின் பொது விதியாகியுள்ளது.
இன்று நகரங்களின் நுகர்வுப் பண்பாட்டுக்குள் செல்லும் நடுத்தரவர்க்கமும், அதற்கு மேற்பட்ட பிரிவின் மக்கள் கூட்டமும், அந்த மக்களின் பின்னால் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்கமும், முரண்பாட்டுடன் சிலவேளைகளில் ஐக்கியத்துடன் புதிய குடும்ப வடிவங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த வடிவங்கள் விபச்சார வடிவிலும், இயந்திரத்தனத்திலும் இணைந்து விலகுகின்றன. பின்னால்; சிலவற்றை ஆதாரத்துடன் விவாதித்துள்ளேன் பார்க்கவும்.
நுகர்வுப் பண்பாட்டில் சிக்கும் இம்மக்களின் பெண்கள் பாலியலில் அதீதமான நுகர்வுக்குள் செல்வது தவிர்க்கமுடியாதது ஆகியது. இதனால் நிலப்பிரபுத்துவப் பாலியல் ஒழுக்கத்தை மீறத் தொடங்கியது. திருமணத்துக்கு முன் உறவு, திருமணம் அற்ற பாலியல் வாழ்க்கை, மறுமணம், விவாகரத்து, பகிரங்கமாகவும், களவாகவும் வேறு ஆண்கள் உடன் தொடர்பு, டிஸ்கோ பாலியல்.... என ஏகாதிபத்திய எல்லை வரைக்கும் இது வளர்ச்சி பெற்றுவிட்டது.
ஏகாதிபத்திய நாட்டில் இது ஏற்படும் போது பெண் பொருளாதார ரீதியில்;, ஆணாதிக்கத்திடம் இருந்து பெற்ற முதலாளித்துவச் சீர்திருத்தச் சுதந்திரம், அப்பெண்ணின் ஒரு பகுதியைச் சுயநிர்ணயக் குடும்ப அமைப்புக்குள் இட்டுச் சென்றது.
ஆனால் முதலாளித்துவச் சுதந்திரம் அற்ற, சமுதாய ரீதியில் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் அற்ற, அன்னியனின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு இன்றி விபச்சாரம் செய்யும் சமுதாய நடைமுறைகள், பெண்ணையும், பெண்ணியத்தையும், பாலியலையும் விபச்சார எல்லைக்குள் வாழ வழிகாட்டியுள்ளது. பெண்ணை ஆண் பயன்படுத்துவதும், அதில் பெண், தானும் நுகர்வதாகப் பாசாங்கு செய்வதும் பொதுப் பண்பாகியுள்ளது.
சமுதாயம் தனது முதலாளித்துவ வழிகளில் முற்றி ஏகாதிபத்திய வழியில் பண்பாட்டைப் பெறுவதற்குத் தவறி, அதைப் பெறுகின்ற போது அது வெம்பி பழுத்துவிடுவது என்பது வெள்ளிடைமலை. இந்த வெம்பலைக் கடைவிரித்து உள்ள சமூக நிலையில் ஆணாதிக்கம் பற்றிய பெண்ணியக் கோட்பாடுகள், இலக்கியங்கள் இந்த வெம்பலில் இருந்தும், ஏகாதிபத்திய அழுகலில்; இருந்தும் கூட்டுப் பழரசமாக வெளிவருகின்றது.
இது ஒருபுறம் இருக்க, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமும் அதில் வாழும் பெண்களும், இந்த ஆதிக்கம் பெற்ற வெம்பல் ஏகாதிபத்தியச் சீரழிவின் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் பிடிகளில் ஆதிக்கத்துக்குள் பாதிக்கப்படுகின்றனர். திரைப்படத்தை எடுத்தால் இந்த இரண்டு கூட்டுக் கலவை கலை விபச்சாரக் குணாம்சத்துடன் வெளிப்படுவதும், அதை இரசிக்கும் நிலப்பிரபுத்துவப் பண்பாடும் ஏகாதிபத்தியத்தால் ஒருமையாக்கி ஜனநாயக வடிவம் கொடுக்கப்படுகின்றது. நடனங்கள், பாடல்கள், காட்சிகள், கருவின் உள்ளடக்கம், அழகியல் என எல்லாம் இந்தக் கலை விபச்சாரத்தில் உருவாக்குவதன் ஊடாக ஏகாதிபத்திய வெம்பல் சீரழிவுப் பண்பாடு உலகமயமாக்கப்படுகின்றது.
பெண்ணின் ஒருதலைப்பட்சமான காதல், அன்பு, ஒருதாரத் திருமணம் என்பன இதனால் பந்தாடப்பட்டுச் சமுதாயத்தை, விபச்சாரம் மட்டும் கொண்ட சமுதாயமாக மாற்ற நாலுகால் பாய்ச்சலில் எம்பிப் பாய்கின்றனர். இதனால் பெண்ணின் எஞ்சிய உரிமைகள் கூடப் பறிபோகின்றது. வாழுகின்ற சமுதாயத்தில் சொத்துரிமை எப்படி தனிமனிதனிடம் இருந்து அவனை அறியாமலேயே இழந்து போகின்றதோ, அதுவே பாலியலிலும் நிகழ்கின்றது. ஆதி மனிதன் இயற்கையின் சொந்தக்காரனாக இருந்தான். இதுவே அவனின் சொத்தாக இருந்தது. பின்னால் இன்று சொத்து அற்ற வர்க்கம், சொத்துடைய சுரண்டும் வர்க்கத்துக்கு உழைக்க மட்டும் பிறந்த ஜடமாகிவிட்டது. அவனின் உரிமை, சொத்தென்பது பிறருக்கு உழைக்கும் எல்லைக்குள் தான். இது போல் பாலியலில் இருந்த வரைமுறையற்ற புணர்ச்சி என்பது பின்னால் நிபந்தனையாகி இன்று நுகர்வதுக்கு மட்டும் பயன்படும் சீரழிவாகியுள்ளது. இயந்திரமான புணர்ச்சியை உருவாக்கிய அதே நேரம், மனிதப் பண்புகளைச் சூறையாடி அழிவுக்கு உள்ளாக்குகின்றது. இந்த இயந்திரமான புணர்ச்சியை முன்பு ஆண் மட்டும் கொண்டிருந்ததை இன்று பெண்ணுக்கும் சேர்த்து உலகமயமாக்கியுள்ளது. இந்தப் புணர்ச்சியில் வக்கிரத்தை விகாரப்படுத்துவது பாலியலின் ஆதாரமாகியுள்ளது.
இது மேற்கு அல்லாத சமுதாயத்தில் வெம்புகின்றபோது ஆணும் பெண்ணும் மேற்கைவிட மேலும் மோசமான குடும்பச் சீரழிவையும், பாலியல் சிதைவையும் ஏற்படுத்தி மனநோயாளிகளை இதன் தளத்தில் உருவாக்குகின்றது. மேற்கு அல்லாத பெண்களின் இந்த அவலம் என்பது மேற்குச் சூறையாடலின் வெட்டுமுகம் தான்.
இந்த இடத்தில் மேற்கு அல்லாத ஆணாதிக்க எதிர்ப்பு பெண்ணியக் கோட்பாடுகள் இந்த எல்லைக்குள் வெம்பக் கோருவது அதிகரித்துள்ளது. ஏகாதிபத்திய வெம்பல் சீரழிவுகளைப் பெண்ணின் விடுதலையாகவும், நிலப்பிரபுத்துவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை ஆணாதிக்கமாகவும் காட்டுவது இலகுவானதாகி விடுகின்றது. அதாவது உற்பத்தியில் ஏகாதிபத்தியத்தின் மிகையான உற்பத்தியை நிலப்பிரபுத்துவத்தின் சிறு உற்பத்திக்கு எதிராக நிறுத்தி எப்படி வெற்றி பெறுகின்றனரோ, அதையே ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பெண்ணியத்தால் முன்நிறுத்தப்படுகின்றது.
இயற்கையின் தேர்வை மறுத்த ஆணாதிக்க விளைவுகளை எல்லாம் பெண்ணுக்கும் அங்கீகரிக்கக் கோரும் பெண்ணியக் கோட்பாடுகள், இதையே ஜனநாயகமாக முன்நிறுத்துவது பொதுவான வெம்பலுக்குச் சாதகமானதாக உள்ளது. பெண்ணின் இக்கோரிக்கையை வரைமுறையற்ற புணர்ச்சிக்குள் நிறுத்துவதும், சுயநிர்ணயத்தை மறுப்பதும் சாத்தியமாகின்றது. இதைத் தேசியத்தில் இன்று தேசிய முதலாளித்துவத்துக்குப் பதில், ஏகாதிபத்தியத் தேசியத் தரகாகப் போராடுவது போல் பெண்ணின் சுயநிர்ணயத்துக்குப் பதில் வரைமுறையற்ற விபச்சாரத்தை வெம்பலின் போக்கில், இன்றைய ஏகாதிபத்தியப் பெண்ணியம் முன் நிறுத்துகின்றது. இதை அதற்குள் ஆராய்வோம்.