மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்;படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.

 

 

 புலியை ஆதரிக்காத அனைவரும் துரோகி என்று கூறி புலி நடத்தும் அரசியல் படுகொலை போல், அரச ஆதரவு அல்லாத அனைத்தையும் புலியாக காட்டி படுகொலை செய்வது போல், இன்று நாம் இருதரப்பாலும் தமக்கு எதிரானவராக அடையாளம் காணப்படுகின்றோம்.   

   

நாங்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை. மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு, அரசும் புலிகளும் எப்படி காரணமாக இருக்கின்றனர் என்பதையே, நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி விமர்சித்து வருகின்றோம்.

 

எமது இந்த அரசியலை எதிர்கொள்ள, இவ்விரண்டு மக்கள் விரோதப் பிரிவினராலும் முடிவதில்லை. இதனால் நாம் தொடர்ச்சியாக தூற்றப்படுகின்றோம். முன்பு இவர்கள் எமது இந்த விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக தூற்றியவர்கள். இன்று எம்மை புலி என்றும், அரச கைக் கூலிகள் என்றும் தூற்றுகின்றனர். 

 

கடந்த காலத்தில் தனிநபர் முனைப்புகள் முதன்மை பெற்று, தனிநபர் ஊடாக அரசியல் வெளிப்பட்டது. அவர்கள் ஊடாக அவர்களின் அரசியல் இனம் காணப்பட்டு, அவை எம்மால் அமபலப்படுத்தப்பட்டது. இதையே அவர்கள் தனிநபர் தாக்குதல் என்றனர். இன்று அந்த நபர்களில் பெரும்பான்மையானோர் பேரினவாத அரசின் பின்நிற்கின்றனர். அரசு சார்பு குழுக்களின் அடிவருடிகளாகவும், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், அவர்களுடன் சேர்ந்தே புலம்பெயர் அரசியல் விபச்சாரம் செய்பவராக அனைவரும் அம்பலமாகி கிடக்கின்றனர். புலி ஒழிப்பை அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகக் கும்பலாக அம்பலமாகி நிற்கின்றது. புலம்பெயர் புலியல்லாத நிகழ்ச்சி நிரல்கள், அரச வேலைத் திட்டத்துக்கு ஏற்புடையதாகவே அமைக்கின்றது. இதற்கு மாறாக இவர்கள் எதையும் மாற்றாக முன் வைப்பதில்லை. எதைக் கதைத்தாலும், அதை ஆதரிப்பதில் போய் முடிகின்றது.

 

அரசுடன் சேர்ந்த நிற்கும் புலியல்லாத செயல்தளத்தை, மொத்தமாக இவர்கள் யாரும் விமர்சிப்பதில்லை. இதற்குள் உள்ள முரண்பாட்டின் மீது தான், தனிப்பட்ட காழ்ப்;புக்களை வாரி இறைக்கின்றனர். அரசு சார்பு பிரிவினருடன் இவர்கள் ஒன்றாக கைகோர்த்து ஆடிப்பாடுகின்றனர்.  

 

புலியல்லாத அரசியல் தளத்தில் செயல்படுபவர்களில் 99 சதவீதமானவர்கள், பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தான் இன்று செயல்படுகின்றனர். இவர்கள் தான் புலம்பெயர் சந்திப்புகளின் பெரும்பான்மையானவர்கள். இவர்களை பெரும்பான்மையாக  கொண்ட புலம்பெயர் புலி அல்லாத சந்திப்புகள், அரச ஆதரவு கொண்ட சந்திப்புக்களாகவே மாறிவிடுகின்றது. 

 

மாற்றாக மக்களுக்கு வைக்க, இவர்களிடம் சுயாதீனமான எந்த அரசியலும் கிடையாது. அரசுடன் இல்லாத ஒரு சதவீதத்திடம் கூட, அந்த அரசியல் அடிப்படை கிடையாது. இழுபடுதல், முரண்படுதல் என்று இதற்குள் ஓட்டிக்கொண்டு, இதற்கு துணை போகின்றனர்.

 

இந்தப் போக்கின் மீதான எமது விமர்சனம், எம்மை புலியாக காட்டி எம்மை தூற்ற வைக்கின்றனர். நாம் புலியொழிப்பு அரசியலை மறுப்பதும், அரச ஆதரவு நிலை எடுக்கத் தவறுவதுமே, அவர்கள் எம்மை புலியாக காட்டி தூற்ற போதுமான அரசியல் காரணமாக பார்க்கின்றனர். இதையே அவர்கள் விதவிதமாக சொல்லவும் கூட செய்கின்றனர்.    

  

வேடிக்கை என்னவென்றால், நாம் புலியை அரசியல் ரீதியாக அன்று தொட்டு இன்றுவரை காலம் இடம் சந்தர்ப்பம் பாராமல் இடைவிடாமல் தளர்வின்றி விமர்சித்த அளவுக்கு இலங்கையில் வேறு யாரும் புலியை விமர்சித்தது கிடையாது. நாம் புலியை அரசியல் ரீதியாக விமர்சித்தவற்றில் இருந்து பொறுக்கிய சொற்கள் பலவற்றைக் கொண்டு தான், புலியெதிர்ப்பு அரசுக்கு சார்பாக அதை திரித்துப் பயன்படுத்துகின்றது. புலியை நாம் தொடர்ச்சியாக அரசியல் ரீதியாக தளர்வின்றி விமர்சித்த அளவுக்கு யாரும் இன்று விமர்சிக்காத நிலையில், அரசு ஆதரவு பிரிவு எம்மை புலியாக முத்திரை குத்தி தூற்றுகின்றது.

   

மறுபக்கத்தில் நாம் அரசை அரசியல் ரீதியாக விமர்சித்த அளவுக்கு, அம்பலப்படுத்தியளவுக்கு யாரும் இதுவரை விமர்சித்தது கிடையாது. புலிகள் கூட அதைச் செய்தது கிடையாது. ஆனால் நாம் அரச கைக் கூலிகள் என்ற தூற்றப்படுகின்றோம்.

 

இப்படி இவ்விரண்டு மக்கள் விரோதத்துக்கும் எதிரான எமது போராட்டம், தனித்துவமானது. இந்த பாசிச வரலாற்றில் நாம் இரண்டு தரப்பாலும் தூற்றப்படுகின்றோம் என்றால், ஏன் நாம் இப்படி தூற்றப்படுகின்றோம் என்ற கேள்வி, எமது சரியான போராட்டத்தையே எடுத்துக் காட்டுகின்றது. மக்களுடன் நாம் மட்டும் தனித்து நிற்கின்ற தனிமை, எமது தனித்துவமான அரசியல் நிலை, மக்களின் நலனில் நாம் ஊன்றி நிற்கும் நேர்மையையும் துணிவையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றது. இதனால் தான் நாம் தூற்றப்படுகின்றோம் என்ற உண்மை, எமது போராட்டத்தின் வெற்றிக்கான படிகற்களாகின்றது.  

 

பி.இரயாகரன்
11.06.2008