இன்றைய உலகில் பெண்கள் எப்படி உள்ளனர்? என்ற விவாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதனின் ஒவ்வொரு மாற்றமும் இயற்கையைச் சார்ந்து இருந்த போக்கில், மனிதனின் உழைப்பை ஒட்டி இயற்கையும் பாரிய மாற்றத்தைக் கண்டது. இம் மாற்றம் என்பது மாறிவந்த ஒவ்வொரு பொருளாதார மாற்றத்துடனும் தீவிரப்பட்டது. உடலியல் கூறுகளின் செயற்பாடுகள் ஒருபுறம் நிகழ்ந்தன. இயற்கையும், இயற்கை மீது மனித உழைப்பைத் தொடங்கிய போதும் மாற்றம் மேலும் தீவிரமடைந்தது.
இது மனிதனின் உழைப்பை மேலும் உயர்ந்த கட்டத்துக்கு வளர்த்த போது, அதையொட்டிய சிந்தனைகள் மாறிச் சென்றன. பொருள் உற்பத்தியில் புதிய உழைப்பு மீதான வளர்ச்சியை ஒட்டி உபரி அதிகரிக்க, உபரியானது மனிதச் சிந்தனையையும், மனிதனையும் அடிமைப்படுத்தியது. உற்பத்தியில் உபரியானது மனிதனுக்கு அதிகாரத்தையும, சொகுசு வாழ்க்கையையும ஏற்படுத்தியது. உபரியை அதிகமாகக் கொண்டவன் அதிகமான சொகுசுக்கும், அதிகாரத்துக்கும் உள்ளாகி மற்றவனைச் சிறுமைப்படுத்தினான். பொருளை உற்பத்தி செய்த மனித உழைப்பினை அடிமைப்படுத்தும் வடிவம் உற்பத்தி உறவில் தோற்றம் கண்டது. இதன் வளர்ச்சியில் அந்தச் சொகுசை, அதிகாரத்தை வழங்கிய உபரி உழைப்பின் உரிமையை உழைப்பில் பங்கு பற்றியவனுக்கு (உழைத்தவனுக்கு) மறுக்க, தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை தோற்றம் கண்டது. இதுதான் பெண்ணை அடிமையாக்கி, தனக்குரிய வாரிசுகளை உருவாக்க இணைமணத்தைச் சிதைத்து, ஒருதாரமணத்தைப் பெண்ணுக்கு மட்டும் திணித்தது.
இந்த ஒருதாரமணம் சார்ந்த குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்பத்துக்குள் கொண்டிருந்த காலத்தில் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு ஆதாரமாகயிருந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிரான முதலாளித்துவ அமைப்பு, கூட்டுக்குடும்ப அமைப்பைத் தகர்த்து ஒற்றைக் குடும்ப அமைப்பை உருவாக்கியது. முதலாளித்துவப் புரட்சி நடக்காத நாடுகளிலும் இதன் பாதிப்புகள் ஏற்பட்டதுடன் இரட்டை வடிவக் குடும்பங்கள் நீடித்தன, நீடிக்கின்றன.
இந்த நிலையில் தான் உலகமயமாதல் தீவிரமடைந்துள்ளது. இந்த உலகமயமாதல் பொருளாதார அமைப்பில் என்ன செய்கின்றது? எனப் பார்ப்போம். ஆரம்பத்தில், வரையறைக்குட்பட்ட தொடர்ச்சியில் தனக்குச் சேவை செய்யும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தை இந்தியா போன்ற காலனிய, அரைக்காலனிய நாடுகளில் உருவாக்கியது. இந்த வர்க்கம் தேசிய முதலாளித்துவத்தை நசுக்கிய அதே நேரம், தேசிய உற்பத்தியை விபச்சாரம் செய்யத் தூண்டியது. இதற்குத் துணையாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் துணைக்கு வைத்திருந்தது. ஏனெனின் தேசிய உற்பத்தியானது எல்லை கடந்த ஏகாதிபத்திய உற்பத்திக்கும், சுரண்டலுக்கும் எதிராக இருந்தது. (இதைத்தான் ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் கற்பிதம் என்கின்றனர்.) மேலும்தேசிய உற்பத்தியானது ஏகாதிபத்திய வருகையைத் தடைசெய்யத் தேவையான பலத்தைக் கொடுப்பதற்குத் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டது. இந்த வகையில் தேசிய முதலாளித்துவத்துக்கு எதிரான இரு கூட்டாளிகளும்(ஏகாதிபத்தியமும், நிலப்பிரத்துவமும்) கைகோர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை மேலும் ஒடுக்கினர்.
இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பு குடும்ப அமைப்பையும் பாதித்தது,பாதிக்கிறது. எல்லை கடந்த தலையீட்டையும், தேசிய பாதுகாப்புக்கு எதிரான உள்ள+ர் வடிவத்தையும் எதிர்த்து தேசிய முதலாளித்துவ வர்க்கம் போராடியது. ஏகாதிபத்தியம் எல்லை கடந்த சுரண்டல் பண்பாட்டைப் பின்பற்றி, தனிக் குடும்ப வடிவத்தில் இருந்து சீரழிந்த பண்பாட்டுச் சிதைவில் மற்ற குடும்பத்துக்குள் அத்து மீறுகின்றது. அதே நேரம் கூட்டுக் குடும்பம் பாலியல் சுதந்திரத்துக்குத் (மூலதனத் திரட்டலுக்குரிய தேசியக் கண்ணோட்டத்தில்) தடையான குடும்ப ஜனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்ட தனிக் குடும்பங்கள், தனிக்குடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது, உருவாகின்றது. இது சொந்தக் காலில் நிற்கமுடியாது (தேசிய முதலாளித்துவம் போல்) சிதைகின்றது.
உலகமயமாதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தரகு முதலாளித்துவ வர்க்கம் அவசியமற்றதாகின்றது. மாறாகத் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் நேரடியான தலையீடுகளின் மூலம் தேசங்களைச் சிதைக்கின்றது. இதனால் நிலப்பிரபுத்துவ வர்க்கம் அவசியமற்றதாகின்றது. இதற்குப் பதிலாகத் தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களும், பண்ணை விவசாயமும் ஆக்கிரமித்தது, ஆக்கிரமிக்கின்றது.
இதன் போது குடும்பமும் புதிய சிதைவுகளைச் சந்திக்கின்றது. ஊசலாடிக் கொண்டிருந்த தனிக் குடும்பமும், கூட்டுக் குடும்பமும் நீடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.
ஏகாதிபத்திய நாடுகளில் குடும்பம் என்பது ஒருதாரமண எல்லைக்குள் பலதாரமணம் என்பதாக உருவாகியுள்ளது. அதாவது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் வாழும் எல்லைக்குள் ஒரு தாரமணமும், அடுத்து, பிற உறவுகள் அனுமதிக்கப்பட்டுப் (விபச்சார எல்லையில்) பலதாரமணமாகவும் பால் வேறுபாடின்றி தொடர்கின்றது. திருமணம் செய்தாலும், செய்யா விட்டாலும் இதுவே பொதுவான தன்மையாக இருக்கிறது. இது ஏற்பட ஏகாதிபத்தியம் எல்லை கடந்த சூறையாடலைப் பலாத்காரத்துடனும், மூலதன ஆதிக்க ஜனநாயக வடிவிலும் தொடருகின்றது. பொதுவான அங்கீகாரத்தை மக்கள் அனுமதிக்கும் போக்கில் ஐரோப்பியக் குடும்பங்கள் தம்மைத் தாம் மீள ஒழுங்கமைத்துக் கொண்டபோது பலதாரமணம் ஒருதாரமணத்துக்குள் ஜனநாயக வடிவில் (இந்த ஜனநாயகம் வர்க்கப் போராட்டம் தீவிரமடையும் போது எப்படி பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டதோ அதுபோல்) அங்கீகாரமாகியது. இது மறுகோணத்தில் ஜனநாயகத்தின் கடைக்கோடியான ஊழல், காடைத்தனம்... போன்ற சாக்கடையாக விபச்சாரம் செய்கின்றதுபோல் பாலியலில் விபச்சாரத்தை ஜனநாயகமாக்குகின்றது. அதேநேரம் சொந்த நாட்டின் தேசியத் தன்மையைப் பாதுகாப்பதும் ஒருதாரமணத்தின் எல்லையாக உள்ளது.
ஒருதாரமணம் ஏகாதிபத்திய வடிவமாகவும், தேசிய வடிவமாகவும் பொருளாதார எல்லைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியம் எல்லை கடந்து சூறையாடும் போது தனக்குள் தேசிய வடிவத்தையும், சூறையாடும் எல்லை கடந்த வடிவத்தையும் (பாலியலில் குடும்பத்துக்குள்ளான பாலியலும், விபச்சாரப் பாலியலும்) கொண்டு உள்ளது. இதற்கு ஆதாரமாக இவை ஏகாதிபத்தியக் குடும்பத்திலும் பிரதிபலிக்கின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் எல்லை கடந்து இணையும் போது புதிய சுரண்டும் குடும்ப இணைவும் (விபச்சாரவழி நுகர்வுப் பாலியல்), மரபான குடும்பச் சிதைவையும் அடிப்படையாகக் கொள்கின்றது. இது குடும்பமல்லாத பாலியலை அடிப்படையாக்குகின்றது. இதில் இருந்து பாட்டாளி வர்க்கக் குடும்பம், குடும்பம் அல்லாத கண்ணோட்டத்திலும் இருந்து மீளத் தகவமைகின்றது.
ஏகாதிபத்தியமல்லாத நாடுகளில் தேசியம் குடும்பத்தை, கூட்டுக் குடும்பம் மற்றும் பலதாரக் (விபச்சாரக்) குடும்பத்துக்கு மாற்றாக முன்நிறுத்துகின்றது. இது தேசிய முதலாளித்துவத்தின் நீடிப்பு வரை தனிக் குடும்பங்கள் ஆதாரமாகின்றது. இதில் இருந்தும் பாட்டாளி வர்க்கக் குடும்பம் தகவமைகின்றது.
பாட்டாளிவர்க்கம் மட்டுமே தேசிய முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் பொருளாதார வர்க்கப் போராட்ட வடிவமாக இருப்பதால், குடும்பத்தின் பாதுகாப்புக்குக் குரல் கொடுக்கின்றது. கூட்டுக் குடும்பத்திலும், தனிக் குடும்பத்திலும் ஜனநாயகத்தைக் கோரியும், விபச்சார வடிவில் பாலியல் அன்பு, காதல் ஆகியவற்றைச் சிதைப்பதை எதிர்த்தும், குடும்பத்தை மாற்றியமைப்பதன் ஊடாக நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்தியப் பாலியல் வடிவத்துக்கு மாற்றாகக் குடும்பத்தை முன்நிறுத்துகின்றது. இங்கு குடும்பத்தில் கோரும் ஜனநாயகம் ஆண் பெண்ணின் இணைமணத்தை அடிப்படையாகக் கொண்டும், ஒருதாரமணத்தில் ஏற்படும் முரண்பாட்டில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டும் விவாகரத்தை முன் வைக்கின்றது. இந்தக் குடும்பம் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பைத் தனது பாலியலில் கொண்டு ஆதாரமாகின்றது. மேற்கில் திருமணத்துக்குள்ளும், வெளியிலும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட இணைமணத்தைப் பாட்டாளி வர்க்கம் ஆதாரமாகக் கொள்கின்றது. இங்கு ஜனநாயக விபச்சாரத்தை எதிர்த்து ஐக்கியத்தை முன்நிறுத்துகின்றது. இங்கு சுயநிர்ணயம் என்பது ஐக்கியத்தை ஆதாரமாகக் கொள்கின்றது.
எப்போதும் பாட்டாளி வர்க்கம் இணைமணத்தை முன்நிறுத்துகின்றது. இந்த இணைமணத்தில் மறுக்கப்படும் ஜனநாயகத்தை எதிர்த்து விவாகரத்தையும், இணைமணத்தில் ஜனநாயகம் விபச்சாரத்தைச் செய்யும் போது ஐக்கியத்தையும் முன்நிறுத்துகின்றது.
ஏகாதிபத்தியமல்லாத நாடுகள் மீதான ஏகாதிபத்தியப் பொருளாதார ஊடுருவல் ஆக்கிரமிப்பு என்பது, தேசம் என்ற வடிவத்துக்குள் ஊடுருவிய போது மறுதளத்தில் எதிர்ப்பற்ற விபச்சாரத்தை அனுமதித்தது.
இந்தப் போக்கு குடும்ப அமைப்பிலும் உருவாகியுள்ளது, உருவாகின்றது. இதில் இருந்தே தனிக் குடும்பம், கூட்டுக் குடும்பம் ஆகியவை தனது ஒருதாரமண எல்லைக்குள் இருந்தபடி சிதைந்து வருகின்றது. இது ஏகாதிபத்தியக் குடும்ப வடிவங்களில்; இருந்து வேறுபட்டுள்ளது. ஏகாதிபத்தியக் குடும்பத்தில் ஒருதாரமணம் என்பது பலதாரமணமாகச் சூறையாடும் அங்கீகாரத்தில் இருந்து உருவானது. இது மற்ற நாடுகளில் சூறையாட அனுமதிக்கும் விபச்சாரத்தில் இருந்து உருவானது. இதன் பொதுப் பண்பும், விளைவும் ஒன்றாக இருந்த போதும், குடும்ப வடிவத் தெரிவுகள் ஒன்றாக இருந்த போதும், இதன் வேறுபட்ட பொருளாதாரத் தன்மைகள் வேறுபட்ட சீரழிவுகளுக்கு இட்டுச் செல்கின்றது.
ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிவு பொதுவாக நாடு தழுவிய வடிவில் இருக்கும் போது, மற்ற நாடுகளில் மேல் மட்டத்தில் இது காணப்படுகின்றது. கீழ் மட்டம் அதை நோக்கி எதிர்ப்பு இன்றி இருக்கும் போது விபச்சார நிலைக்கு மேலும் சீரழிகின்றது. ஏகாதிபத்திய நாட்டில் நுகர்வு அடிப்படையில் பரந்துபட்ட மக்களிடம் தேவையை ஒட்டிப் பொதுவானதாக இருக்கும் போது, ஆண் பெண்ணை நோக்கிய நுகர்வு பொதுத் தன்மையில் கோருகின்றது. ஆனால் மற்ற நாடுகளில் நுகர்வு பரந்துபட்ட மக்களின் தேவையை மறுத்து நுகரும் போது, ஆண் பெண்ணை நோக்கிய நுகர்வு ஏமாற்று, மோசடி ஊடாகச் சூறையாடுவதன் மூலம் நிகழ்கின்றது. அதாவது ஏகாதிபத்தியம் மற்ற நாடுகளைச் சுரண்டி, சொந்தத் தொழிலாளர் வர்க்கத்துக்குச் சலுகைகள் வழங்கி தன்னைப் பாதுகாக்கின்றது. இதனால் மற்ற நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் நசிவுறுகின்றது. இது பாலியலில் அதையொட்டிய வடிவில் தேவைக்குள்ளும், தேவை மறுப்பிலும் ஊடுருவும் போது பாலியல் விளைவுகள் வேறுபடுகின்றது.
இந்தப் பொருளாதார வடிவம் என்பது பண்பாட்டுக் கலாச்சார வடிவத்தில் ஆழமாக ஊடுருவுகின்றது. ஏகாதிபத்தியப் பொருளாதாரப் பலம் என்பது, அதன் பண்பாட்டுக் கலாச்சாரம் என்பது ஆழமாக எல்லை கடந்து செல்லுகின்றது. இந்தப் பண்பாட்டுக் கலாச்சாரம் என்பது மற்ற நாடுகளின் எல்லையைக் கடந்து, தனிமனிதனைச் சுரண்டவும், அந்த உரிமையைக் கோரும் வகையிலும் ஏகாதிபத்தியம் நியாயப்படுத்தி ஊடுருவுகின்றது.
இந்தப் பண்பாட்டுக் கலாச்சார அம்சங்கள் பெண்ணையும் உள்ளடக்கி வரும் அதே நேரம், ஆண் பெண்ணை அனுபவிக்கும் ஒருதாரமணத்தில் பலதாரமணத்தையும், அதில் விபச்சாரத்தையும் உள்ளடக்கியே நியாயப்படுத்தப்படுகின்றது. இதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் உலகமயமாதல் உள்ள போது பெண்ணின் நிலை மேலும் தரம் தாழ்ந்துள்ளது. ஒருதாரமணத்தில் பலதாரமணத்தைப் பெண் அடைகின்ற அதே நேரம், இது விபச்சாரக் கட்டத்துக்குத் தரம் தாழ்ந்தும் பெண் மேலும் நுகர்வுப் பண்டமாக மாறி விடுகின்றாள், மாறிவிட்டாள்.
ஏகாதிபத்திய உலகமயமாதல் உற்பத்தியைத் தேவையில் இருந்து மேலும் அன்னியப்படுத்தி நுகர்வுக்குள் பொருட்களை நகர்த்தி பண்பாட்டுக் கலாச்சாரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆண் பெண் உறவும் தேவைக்குப் பதில் நுகர்வுக்குள் மாறிவிட்டது. ஒருதாரமணத்தில் தேவைக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச உணர்வுகளையும் பலதாரமணம் நுகர்வுக்குள் சீரழித்துள்ளது.
நுகர்வின் எல்லை என்பது முடிவற்ற வேட்கையால் உந்தப்படுவது போல், பாலியல் நுகர்வு மனிதனை அலைக்கழிக்கின்றது. தேவையின் உறவுக்குள் இருந்த திருப்தி என்பது அழிக்கப்பட்டு, நுகர்வுக்குள் திருப்தியற்ற அதிருப்திகளை உருவாக்கியுள்ளது. இது குடும்பச் சிதைவுகளைச் சீரழிவின் வழிகளில் எல்லையின்றி வழிகாட்டுகின்றது. தேவை அதையொட்டிய திருப்தி என்பது உலகமயமாதலில் வரையறுக்க முடியாதது போல், குடும்பத்தின் பாலியல் சிதைந்துள்ளது. இது மனித உளவியலைச் சிதைத்துள்ளது. உளவியல் ரீதியாகச் சிதைந்து போன, போகின்ற மனிதனின் பண்பாடுகள், கலாச்சாரங்கள், முடிவுகள், சிந்தனைகள் விகாரமாகின்றது. சமூகத்தின் இயற்கையின் தன்மையை ஆராய மறுக்கும் போது இதை ஆதாரமாகக் கொண்டு கோட்பாடுகள் உருவாகின்றன. விடுதலையை இதில் இருந்து தேடுவது அதிகரிக்கின்றது. இன்று பெண்ணிய விடுதலையை இதற்குள் தீர்த்துக் கொள்ள பெண்ணை ஆணாதிக்க மயமாக்குவது அதிகரிக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்துகின்றது. இதை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தில் இக்கோட்பாடுகள், நடைமுறைகள் அனைத்தும் ஆணாதிக்கத்துக்கு எதிரானது என்ற வகையில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே பெண்ணியமாகின்றது.