Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _5.jpgஜனநாயகம் மறுக்கப்பட்ட மண்ணில் இருந்து வந்தோரும், வராதோரும் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனையில் இருந்து நழுவிய, அதேநேரம் அதற்கு எதிரான புலம் பெயர் இலக்கியத்தைப் படைப்பாக்கினர், படைப்பாக்குகின்றனர். இதேபோல் நாட்டிலும் எந்தவிதத்திலும் முரண்படாத போக்குகளைக் கொண்டு சமமாகவே வளர்ச்சி பெற்றன. இதன் போக்கில் பல இலக்கியங்களை, சில எழுத்தாளர்கள் பாலியல் பிரச்சனை மீது அதிகளவு எழுதத் தொடங்கினர். இன்று அதுவே இலக்கியம் என்றளவுக்கு விடயம் மாறிச் செல்கின்றது. பாலியல் பிரச்சனைகளை இவர்கள் எப்படி புரிந்து கொள்கின்றனர் என்பது முதல், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் முக்கியமானதாகின்றது.


இன்று அண்மைக் காலமாக இலக்கியத்தில் எழுதப்படும் பாலியல் எழுத்துக்கள் நாலாம் தரமான பண்பாட்டுச் சீரழிவின் வழியில் வெளிப்படுகின்றன. குறுகிய காலத்தில் எப்படி புகழ் அடைவது எனத் தேடியபோது, அதைப் பாலியல் பிரச்சனை மீது அன்றி பாலியல் வக்கிரங்கள் மீது தமது எழுத்தை எழுத அடையாளம் காண்கின்றனர். அதாவது ஐரோப்பாவில் தனது படங்களையும், பெயரையும், பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் போட்டுக் கதைக்க வேண்டும் என விரும்புபவன், மக்கள் கூடிய இடத்தில் நிர்வாணமாக ஓடுவதுபோல், இந்தியாவில், தலைவரின் பெயரில் தற்கொலை பண்ணுவதுபோல், இலக்கியத்துக்குப் புகழ் நோய் தொற்றி, பாலியல் வக்கிரத்தைப் படைப்பாக்கி வெளிவரத் தொடங்கியுள்ளது.


பெண் - ஆணின் பரிணாமத் தெரிவில் பாலியல் தூண்டலை, இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, இன்பத்தின் ஊடாகத் தூண்டிய இயற்கையின் போக்கில், மனித இனத்தின் தொடர்ச்சிக்கான ஆதாரத்தை மையமாக வைத்தே உருவானது. இந்தப் போக்கில் பெண்ணின் மார்பு, குழந்தைக்குப் பாலூட்டும் உறுப்பாக இயற்கைப் போராட்டத்தில், பரிணாமம் உருவாக்கியது. குழந்தை பெற்றவுடன் சுரக்கும் முதல் மஞ்சள் கடும் பால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் இயற்கையான உயிர் வாழ்தலின் போராட்டத்தின் பரிணாமத் தெரிவாக இருந்தது.


ஆனால், இன்று ஆண் - பெண் இனவிருத்தி உறுப்புகள், அதன் இன்பம் எல்லாம் இயற்கையை மறுக்கும் நுகர்வுக்கான பண்பாக, படைப்பாகக் காட்டப்படுகின்றது, சிந்திக்கப்படுகின்றது. அது ஒரு குழந்தையின் உருவாக்கத்துக்கான, மனித மறு உற்பத்திக்கான இயற்கையின் பரிணாமத் தெரிவு என்பதை இச்சமூகம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் மறுத்தாயிற்று. வெறும் இன்பத்துக்கான நுகர்வாகக் காணும் பாலியல், பண்பாட்டுத் தேவைக்கான பாலியலில் இருந்து சந்தைக்கான பாலியலாக மாறிவிட்டது.


சந்தையில் எப்படி பொருட்கள் தேவையில் இருந்து அன்னியப்பட்ட நிலையில் மனிதனின் வக்கிரமான கைகளில் சிக்கியதோ, அதன் போக்கில்  மனிதன் இயற்கைக்குப் புறம்பாக நுகர்கின்றானோ, அப்படி பாலியலில் ஆண் - பெண்ணுக்கு இடையில் நுகர்வுப் பண்பாடாகியுள்ளது.


பெண்ணின் மார்பகம் குழந்தைக்கான பால் கொடுக்கும் ஒரு இயற்கையின் பாதுகாப்பு என்பது மாறி, பெண்ணின் மார்பு பாலியலில்; ஒரு நுகரும் ஊடகம் என்ற ஒரு பண்பாட்டை மனிதச் சூழல் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இன்று மேலும் பெண்ணின் மார்பு சந்தைக்கான பொருட்களை விற்கும் ஒரு விளம்பரப் பாலியல், நுகர்வுப் பண்பாடாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிளுகிளுப்பூட்டுவதாகவும் மாறிவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் நுகர்வுக்காக ஆணைக் கவரும் எல்லைக்குள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, ஆணாதிக்கச் சந்தைப் பொருளாதாரம் திணிக்கின்றது. பெண்ணின் மார்பகம் குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஊடகம் என்பதைச் செயற்கை, மறுதலித்தாகி விட்டது. இறுதியில் அவை குழந்தைக்கான பால்சுரப்பி என்ற அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அதிலும் பூர்சுவாப் பெண்கள் தமது உடல் மீதான சுயக் கட்டுப்பாட்டுக் கோரிக்கையின் ஊடாக, இயற்கையை ஆணாதிக்க வழியில் அழித்து உயிரியலின் பொது உள்ளடக்கம், தனிமனிதச் சுதந்திரத்தின் பின் காணாமல் போய்விடுகின்றது.


பெண்ணின் உடல் கட்டுப்பாடு என்பது சொந்தப் பாலியல் தெரிவு மீது, தனது அணிகலன்கள் மீது, சொந்த வடிவமைப்பு மீது, சொந்த உழைப்பு மீது, சொந்தச் சிந்தனை மீது சார்ந்தது. ஆனால், இரண்டாவது மனிதனுடன் பங்கு பெறும் நிகழ்வுகள் தொடங்கியவுடனேயே அது சமூக நிகழ்வாகி விடுகின்றது. சமூக நிகழ்வாக மனித நிகழ்வுகள் இருப்பதால் சமூகச் சுதந்திரத்துக்கு உட்பட்டே தனிமனிதச் சுதந்திரம் இருக்க முடிகின்றது. உடல் உறுப்புகளின் தனிமனிதச் செயல்கள் கூட சமூகக் கூட்டு செயலுக்கு உட்பட்டே இருக்க முடிகின்றது. இல்லாத தனிமனிதனுடைய கோரிக்கைகள், அடிப்படையில் ஆணாதிக்க வகையைச் சார்ந்தவை. இங்கு சமூக இயக்கம் சார்ந்த விடயத்தைச் சொந்த உடல் கட்டுப்பாடு சார்ந்தது என்ற வாதம் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியத் தனிச்சொத்துரிமை கோட்பாட்டு எல்லைக்குட்பட்டது.


தனிமனிதன் சமூகத்துக்குப் புறம்பாக, சுதந்திரமாக இருப்பதாகக் கூறுவதும், பாசாங்கு செய்வதும், அதைக் கோருவதும், எப்படி சுரண்டும் நலன்களுடன் தொடர்புடையதோ, அதேபோல் பெண்ணின் உடல் கூறும், அது சார்ந்த செயல்பாடும் காணப்படுகின்றது. ஆணாதிக்கம் ஆண் சார்ந்து தனது உடற்கூறு மீது பெண்ணின் சுதந்திரத்தை மறுத்து எதைச் சுதந்திரமாக இருக்கின்றதாகக் கூறுகின்றதோ, அதையே பெண் கோருவது பெண்ணிய ஆணாதிக்கமாகும்;.


இதையொட்டிய லெனின் கூற்றொன்றைப் பார்ப்போம். ''... போராடுவது, உணவையும் உடைகளையும் கொள்முதல் செய்தல் 'தனியாரது' விவகாரமாகுமென்றும், வாங்குதலும்  - விற்றலும் ~என்னை மட்டுமே பொறுத்த நடவடிக்கையாகுமென்றும்| கருதுமாறு மக்களுக்குக் கற்றுத் தந்த கேடுகெட்ட அந்தப் பழங்காலத்திலிருந்து துண்டித்துக் கொள்வதற்காகப் போராடுவது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் போராட்டமாகும்; சோஷலிஸ்டு உணர்வுக்கும் முதலாளித்துவ - அராஜகவாதத்   தன்னியல்புக்கும் இடையிலான போராட்டமாகும்."51  சமுதாயத்தில் இருக்கும் தனிமனிதச் சுதந்திரங்கள் அபத்தமானவை. இந்தக் கோரிக்கைகள் அடிப்படையில் பூர்சுவா எல்லையில் சீழ்படிகின்றவைதான். உடல் கட்டுப்பாட்டைச் சமூகத்துக்கு எதிராக வைக்கின்ற போது அதற்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஆதாரமாகின்றது. இந்தப் போராட்டம் கோட்பாட்டில் அராஜகவாதமாகத் தொடங்குகின்றது. இது வரலாறு முழுக்க நீடித்த, நீடிக்கின்ற வர்க்கப் போராட்டமாக இருப்பது தற்செயலானவையல்ல. இது வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான சந்தர்ப்பவாதத்தின் அராஜகக் கோட்பாடாகும்.


இரண்டாம் நபர் சம்மந்தப்படாத வரைதான் சொந்த உடல் மீதான சுதந்திரம் நீடிக்கின்றது. சம்மந்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரமென்பது ஒன்றை மறுப்பதாக இருக்கின்றது. தனிமனிதன் உலகில் எப்படி வாழவோ, நீடிக்கவோ முடியாது என்பது எதார்த்தமானதாகும். அப்படி மனிதனின் வாழ்வு கூட்டுச் சமூக எல்லையில் மட்டும் நீடிக்கமுடிகின்றது. சமூகக் கூட்டுக்கு உட்பட்டுதான் தனிமனிதச் சுதந்திரம், உடல் கட்டுப்பாடு நீடிக்கமுடியும். ஆனால், எல்லா அராஜகப் பெண்ணியமும், கோட்பாடுகளும் சமூகத்துக்குப் புறம்பாக உடல் கட்டுப்பாட்டைக் கொண்டு செயல்படுவதாக நடிக்கின்றன, கோருகின்றன.


பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், சிதைப்புகளை எதிர்த்து போராடுவதற்கு மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. ஆனால், அதை மறுக்கும் எல்லா அராஜகப் பெண்ணியவாதிகளும் தனிமனித விடுதலையை முன்தள்ளுகின்றனர். தனிமனிதன் திருந்துவதன் மூலம் உலகத்தை மாற்றக் கோருகின்றான். தனிமனித (பெண்) உடல் கட்டுப்பாட்டைப் பெறுவதன் மூலம் ஆணாதிக்கத்தை ஒழிக்கமுடியும் என்கின்றனர். தன்னளவில்தான் சுதந்திரமானவர்களாகக் கற்பனை பண்ணுகின்றனர். இதைப் பொதுக் கோட்பாடாக்குகின்றனர். இவர்கள் தமது சொந்த அராஜகக் கோட்பாட்டில் இருந்து மக்கள் திரளமைப்பை மறுக்கின்றனர். இவர்களின் புரட்சிகரமான சொற்கூச்சலுக்கு இடையில் இலகுவான கற்பனையில் தம்மைத்தாம் விடுவித்ததாகக் கற்பனை பண்ணி,  கற்பனைப் போதையில் மிதக்கின்றனர். இதை முன்நிறுத்தியே, மக்களை அணிதிரட்டிப் போராட முயல்பவர்களைக் கேலி செய்து திருத்ததை முன்வைக்கின்றனர், மார்க்சியத்தின் மீது வேண்டுகோள்களை விடுக்கின்றனர். மார்க்சியத்தைத் திருத்தி, திரித்த ஆணாதிக்கத்தை ஒழிக்க தனிமனிதக் கற்பனையில் அழைக்கின்றனர்.


தனிமனிதக் கற்பனைகள், நினைவுகள் போதையாகின்ற போது அதைச் சுயேட்சையான செயலாக எண்ணத் தொடங்குகின்றனர். இந்தச் சமூகத்தில் இருந்து அன்னியப்படுவது அதிகரிக்க, தாம் தம்மளவில் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டதாகக் கூறுவதுடன், மற்றவருக்கும் அதைப் போதிக்கின்றனர். இது கோட்பாட்டளவில் அராஜகவாதமாகும். இது தம்மளவில் உடல் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், செயல் படுவதாகவும் பிரகடனம் செய்கின்றது. ஆனால் உண்மையில் இது மிக மோசமான ஆணாதிக்க எல்லைக்குள்  ஆணாதிக்கமயமாகின்றது. ஆணைப்போல் தன்னையும் மாற்றிக் கொள்கின்றது. இது ஆணாதிக்கச் சமூகத்தில் போட்டியிடுவதன் மூலம் தன்னைப் புரட்சியாளனாகக் காட்டிக் கொள்கின்றது. இது பெண்ணின் விடுதலைக்கு எதிரானதாக இருப்பதால் எப்போதும், ஆணாதிக்கத்தை விளைவாக்குகின்றது. ஆணாதிக்க அமைப்பைத் தகர்க்காத அனைத்து கோமாளித்தனங்களும் புரட்சிகர வேஷங்களின் பின் சொந்த நுகர்வை அதிகளவுக்கு அனுபவிப்பதைக் குறிக்கோளாகக் கொள்கின்றது.


இயற்கையின் பரிணாமத் தெரிவை, செயற்கையில் ஆணாதிக்கம் தனது சுரண்டும் நலனில் படிப்படியாக மாற்றிய சமூகப் பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரப் போக்கில் இருந்து ஆணை விடுவிப்பதற்குப் பதில், பெண் அதற்கு இசைவாகத் தன்னையும் மாற்றிக் கொண்டாள். அதற்கு இசைவான விளக்கங்களையும் பெண் கொடுக்கத் தொடங்கினாள். இதன் உச்சத்தில், இதன் போக்கில் பெண்ணின் உடல் மீதான பெண்ணின் கட்டுப்பாடு பற்றிய கூச்சலும், சுதந்திரம் பற்றிய பிதற்றலும் எழுந்தது.


ஒரு பெண் தன் உடல் மீதான கட்டுப்பாட்டை ஜனநாயக எல்லைக்குள் கோரிக்கையாகக் கோரும் போதும் சரி, அதை ஆண் கொண்டுள்ள போதும் சரி (இங்கு ஆணின் சுதந்திரம் என்பது ஆணாதிக்கச் சமுதாயச் சுதந்திரத்தைக் குறிக்கின்றது. தனிமனிதன் இதற்கு வெளியில் சுதந்திரமாக இருக்க முடியாது.) இவை இந்த  ஆணாதிக்க எல்லைக்குள்ளான சுரண்டும் சமுதாயத்தால் எல்லைப்படுத்திய சுதந்திரம்தான்.


பெண்கள் கோரும் சுதந்திரமும், ஆண்கள் வைத்துள்ள இந்தச் சமூகத்தின் ஆணாதிக்கச் சுதந்திரமும் பாலியல் நடத்தைகளை அதன் இயற்கையான தளத்தில் இருந்து அழித்துள்ளன. பாலியல் தேவையில் இருந்து பாலியல் நடத்தையைத் தீர்மானிப்பதற்குப் பதில், புறச் சூழலைத் தீர்மானிக்கும் சந்தைப் பொருளாதாரம் பாலியல் பண்பாட்டை வெளிப்படுத்தும்போது, இந்த வெளிப்பாடுகள் மனித நடத்தைகள் ஆகின்றன.


ஆணினதும், பெண்ணினதும் உறுப்புகள் எந்த நிலையில் தனது பொருளாதாரச் சந்தையைப் பலப்படுத்த, பயன்படுத்த முடிகின்றதோ, அதற்குட்பட்ட பாலியல் பண்பாடுகளைப் புறச் சமூகநிலை ஏற்படுத்துகின்றது. உறுப்புகள் மீதான பாலியல் எதிர் பார்வைகள், நோக்கங்கள் புறச் சூழலைச் சுற்றியுள்ள சமூகப் பொருளாதார நிலைக்குட்பட்டு வினையாற்றலைச் செயற்கையில் தூண்டவும், கோரவும் செய்கின்ற போக்கில் பல்வேறு பாலியல் போக்குகள், நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
பாலியல் நடத்தையைத் தீர்மானிக்கும் புறச் சூழலில் புரட்சியால் மாற்றம் ஏற்படும்போது அனைத்துப் பாலியல் நடத்தைகளும் கூடத் தலைகீழாக மாறுகின்றன. இது மாறும் பொருளாதார அமைப்புகளிலும் கூட மாற்றத்தை நிர்ணயிக்கின்றது. மேற்கிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் காணப்படும் பாலியல் வேறுபாடுகள் இதற்குள் திணறுகின்றது. இன்று உலகமயமாதல் ஆக்கிரமிக்கின்றபோது தீவிரமான மாற்றத்தைப் பாலியல் கோருகின்றது.
பாலியல் பற்றிய இந்தப் பார்வைகளை ஒட்டி லெனின்,


''..... வலிமை மிக்க அரசுகள் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் இச்சகாப்தத்தில், பழைய ஆதிக்க உறவுகள் பிய்த்தெறியப்படுகின்றபொழுது, ஒரு மொத்தச் சமூக உலகமும் அழியத் தொடங்குகின்றபொழுது, தனி மனிதனுடைய புலனுணர்ச்சிகள் சீக்கிரமாக மாற்றமடைகின்றன. பலவகையான இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கும் தாகம் தடுக்க முடியாத சக்தியைப் பெறுகிறது. திருமண மற்றும் பாலுறவு வடிவங்கள் - முதலாளித்துவ அர்த்தத்தில் - இனிமேல் திருப்தியளிப்பதில்லை."52 (பக்கம்-63)


இந்த நிலையில் புலம்பெயர் சமூகம் (ஈழத் தமிழர்) சொந்த மண்ணில் நிலப்பிரபுத்துவச் சமூகப் பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தில் இருந்து, மேற்கு நாடுகளின் முதலாளித்துவ - ஏகாதிபத்தியச் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டில் தன்னை இன்று நிலை நிறுத்தியுள்ளது. சொந்த நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகமற்ற நிலப்பிரபுத்துவக் கூட்டுக் குடும்பச் சிதைவில் இருந்து, தனிமனித ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தும் முதலாளித்துவ ஏகாதிபத்தியச் சமூகத்துக்குள் வந்துள்ளோம்.


இந்த இரு தளப் போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் புலம்பெயர் சமூகத்தின் ஒருபகுதி மண்ணின் கலாச்சாரத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்றும், மறுபகுதி வாழும் மண்ணின் (புலம் பெயர்ந்த மண்) கலாச்சாரத்தைச் சீரழிவுக் கலாச்சாரமாகவும் பார்க்க, விளக்கத் தொடங்கும்போது, அதையொட்டி இலக்கியங்களும் வெளிப்படுகின்றன. இதன் போக்கில் ஒன்றை ஒன்று எதிர்த்தும், பாதுகாத்தும் நடக்கும் பாலியல் பற்றிய வாதப்பிரதிவாதம் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றது, மாறிவிடுகின்றது.


நிலப்பிரபுத்துவப் பாலியல் நடத்தை சார்ந்த ஒழுக்கத்துக்கும்  -பண்பாட்டுக்கும், ஏகாதிபத்தியப் பாலியல் நடத்தை சார்ந்த ஒழுக்கத்துக்கும் - பண்பாட்டுக்கும் உட்பட்டு வெளிவரும், பாலியல் சார்ந்த இலக்கியத்தில் 99.99 சதவீதமான விளைவு என்பது நிலப்பிரபுத்துவக் காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்தியும், ஏகாதிபத்திய நாலாம் தரச் சீரழிவுப் படைப்பைச் சுதந்திரமானதாகவும் காட்டியே பிரசவிக்கமுடிந்தது, முடிகின்றது.


ஒரு குடும்பத்தில் அல்லது தனிமனிதப் பாலியல் நடத்தையில் இலக்கியங்கள் முதன்மை கொடுக்கும் விடயம் தனிமனிதச் சுதந்திரம் என்ற தனிமனித வாதங்களே. அதாவது சமூகத்தில் தனிமனிதனின் பாத்திரம் என்ன?; சமூக இயக்கத்தால் தனிமனித நடத்தைகள் எப்படி பாதிக்கின்றன? என்ற விடயத்துக்கு அப்பால், சமூகத்துக்குப் புறம்பான தனிமனிதச் சுதந்திரம் சார்ந்த பாத்திரச் சித்தரிப்புகளைப் பாலியல் புரட்சியாக்குகின்றனர்.


சமூகத்துக்குப் புறம்பாகச் சிலர் சுதந்திரமாக வாழும் உலக ஒழுங்கு எப்படி அனைத்தையும் தனிமனிதனில் இருந்து மொத்தச் சமூகத்துக்கும் தீர்மானிக்கின்றனவோ, அதேபோல் பாலியல் இலக்கியமும் சமூகத்தில் இருந்து அல்லாது தனிமனிதப் பாலியல் நடத்தைகளை, வக்கிரங்களைச் சமூகத்தின் நடத்தையாக்கக், கோரியும் தம்மை வெளிப்படுத்துகின்றன.


சமுதாயத்தில் ஆண் - பெண் உறவுகளில், ஆண் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை நாடுவது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண் அப்படி அணுகுவது சமூக ரீதியில் மிக மோசமான நடத்தையாகக் காட்டப்;படுகின்றது. ஆனால், இது ஐரோப்பியச் சமூகங்களில் இன்று  சமூகக் குற்றமாக, மீறலாகப் பார்க்கப்படுவதில்லை. இதையே பெண்ணுக்கான உரிமையாக, சுதந்திரமாக வைப்பதன் மூலம், பொது மகளிர் நுகர்வுக் கண்ணோட்டத்தின் பொதுப்போக்கில்  விபச்சாரத்தை முன்தள்ளுகின்றனர்.


ஆண் - பெண் பாலியலில் ஏற்படும் நெருக்கடிக்கான தீர்வு என்ன? அதன் படைப்பு எல்லை என்ன? என்ற கேள்விகளில் சமூக விலகல்கள், அதாவது ஐரோப்பியப் போக்குகள் தீர்வை வழங்குமா?


இல்லை. ஒருக்காலும் இல்லை. இதை லெனினுடைய விளக்கத்தில் இருந்து பார்ப்போம்;. ''பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இளைஞர்களின் மாறிய அணுகுமுறை ''கோட்பாடு ரீதியானது" அது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. பலர் தங்களுடைய நிலை 'புரட்சிகரமானது' 'கம்யூனிச' நிலை என்று கூறுகிறார்கள். அது உண்மை என்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். ஒரு வயோதிகனாகிய என்னை, இது கவர்ச்சிக்கவில்லை. நான் சிடுசிடுப்பான சந்நியாசி அல்ல. எனினும் இளைஞர்களின் - பல சமயங்களில் பெரியவர்களில் கூட - ~புதுப் பாலுறவு வாழ்க்கை|  என்றழைக்கப்படுவது எனக்கு முற்றிலும் முதலாளித்துவ வர்க்கத் தன்மை உடையதாக, பழைய முதலாளி வர்க்க விபச்சார விடுதியின் மற்றொரு இரகமாகத்தான் தோன்றுகிறது. இதற்குக் கம்யூனிஸ்டுகளான நாம் புரிந்து கொள்கின்ற சுதந்திரமான காதலுக்கும் இதற்கும் கடுகளவு ஒற்றுமை கூட இல்லை. கம்யூனிசச் சமுதாயத்தில் ஒருவருடைய உடற்பசியைத் தீர்ப்பதும், காதலுக்காக ஏங்குவதும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பதைப் போன்றதே என்ற பிரபலமான தத்துவத்தை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். நம்முடைய இளைஞர்கள் இந்த 'ஒரு டம்ளர் தண்ணீர்' தத்துவத்தைத் கேட்டு வெறியடைந்து விட்டார்கள்...... பிரபலமான 'ஒரு டம்ளர் தண்ணீர்' தத்துவத்தை நான் முற்றிலும் மார்க்சியம் அல்லாத தத்துவமாகக் கருதுகின்றேன். மேலும் அது சமூக விரோதமானது என்று நான் கருதுகின்றேன். பாலுறவு வாழ்க்கையில் மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை. கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும் - உயர்ந்த மட்டமோ, தாழ்ந்த மட்டமோ - வெளியாகின்றன. பாலுறவுக் காதல் வளர்ச்சியடைந்து, மேலும் நாகரிகமடைவது எவ்வளவு முக்கியம் என்பதை ~ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்| என்ற நூலில் சுட்டிக் காட்டினார்..... ''பாலுறவு விவகாரங்களில் அடக்கமின்மை முதலாளி வர்க்கத் தன்மையே. அது சீரழிவின் அறிகுறி."52 (பக்கம் 64-65) என்றார் லெனின்.


அதாவது தேவையில் இருந்து அல்லாது நுகரும் ஆசைகளில் இருந்து புறப்படும் பாலியல் நாட்டங்கள் சீரழிவுக்கான முதற்படியாகும். இன்று பாலியலை நுகர்வுத்தளத்தில் நுகர்கின்றபோது அது பெண்ணை விடுவிக்கவில்லை. மாறாகச் சுரண்டலை அதிகரிக்கின்றது. இதில் பெண் போட்டி போட முயல்கின்றாள். முன்பு ஆண் மட்டும் நுகர்ந்த போக்கில் பெண் நுழைந்தது என்பது சமுதாயச் சீரழிவின் புதிய வடிவமாக உள்ளது. முன்பு விபச்சாரம் என்பது பாலியலைப் பணத்துக்கு வாங்குவது என்பதை ஒதுக்கியபடி, இப்போது சமுதாயமே விபச்சாரத்தின் எல்லையில் பாலியலை வைத்து சுரண்டுகின்றனர். இந்தப் போக்கு பாட்டாளிவர்க்கத்தின் கோரிக்கையல்ல. முதலாளித்துவ வர்க்கத்தின் இழிவான ஆபாசமான  நிர்வாணாமாகும். ஐரோப்பியச் சமூகங்களில் இன்று பாலியலை மிக இலகுவாக அனுபவிக்கும்போது, அங்கு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சுரண்டுவதில் போட்டி போடுகின்றனர். இந்த உறவுக்கு முந்திய பிந்திய உறவுகள் வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் இடையில் சந்தைப்படுத்தும் போக்கில் நிலவும் உறவைத் தாண்டியது அல்ல, ஒரு பாலியல் உறவு என்றளவுக்குச் சமுதாயம் சீரழிந்து போனது. எல்லாவற்றையும் பொருளாகவும், நுகர்வாகவும் காண்பதும் நுகர்வதும் இச்சமுதாயத்தின் பொதுப் போக்காகும். இது புதிய பாலியல் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றது.


ஆண் - பெண் ஏன் பாலியல் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளுகின்றனர் எனப் பார்ப்போம்;. பாலியல் பற்றிய சிந்தனை தனது சொந்த மனநிலை சார்ந்து மனதில் இருந்து உருவாவதில்லை. மாறாகப் புற உலகின் சுற்றுச் சூழலில் ஏற்படும் ஆணாதிக்க விளைவுகளில் இருந்து, நுகர்வுப் பண்டமாய் இலாபநட்ட நோக்கில், பாலியல் பற்றிய சிந்தனையும்  அதையொட்டிய உளவியல் மனப்பாங்கும் ஏற்படுகின்றது.  இதில் ஆண் - பெண் உளவியல் மனப்பாங்கு புரிந்து கொள்ளும் தளத்தில் வேறுபட்ட நிலையில் உள்ளதால், பாலியல் பற்றிய எதிர்பார்ப்பு வேறுபடுகின்றது.  பாலியல் நடத்தைகளில் உடலின் ஒவ்வொரு அங்கமும் எந்த மாதிரியான வகையில் இயங்கவேண்டும், ஒவ்வொரு உறுப்பும் என்ன மாதிரி செயல் ஆற்ற வேண்டும் என்ற உளவியல் மனப்பாங்கு எதிர்பார்க்கின்ற போக்கில், முரண்பாடு ஏற்படுகின்றபோது பாலியல் நெருக்கடி ஏற்படுகின்றது.


இதன் மீதான எதிர்பார்ப்புகளை ஆண் - பெண் பேசித் தீர்க்க முடியாத ஆணாதிக்க மனப்பாங்கும் சொத்துரிமைக் கண்ணோட்டமும், ஆணையும் - பெண்ணையும் ஒரு குடும்ப அமைப்புக்குள் நெருக்கடிக்குள்ளாக்கின்றது. ஆனால், குடும்பத்துக்கு வெளியில் ஏற்படும் இரண்டாவது உறவில், ஆணாதிக்க உலகில் இருந்து மீறி இரு தரப்பும் பாலியல் நடத்தையில் ஈடுபடும்போது (இங்கு ஆணாதிக்கத்தில் இருந்து அல்ல. மாறாக ஆணாதிக்க ஒழுக்கத்தை மீறி), முன்முயற்சியுள்ள பாலியலில் இரண்டு மனிதரின் விருப்பங்கள் பூர்த்தி செய்யும் பண்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனாலும் இங்கு இந்த உறவுக்குள் நுகர்வுக் கண்ணோட்டமும், பயன்பாட்டுத் தன்மையும் ஊடுருவிக் காணப்படுகின்றது. இது விபச்சார மட்டத்துக்குக் கீழ் இறங்கிய வகையிலும் அவர்களின் சமூகப் பொருளாதாரப் பார்வைக்குட்பட்டும் நடக்கின்றது.


இந்தப் பாலியல் நடத்தையிலும் கூட, புறச் சமூக உளவியலே செயல்; ஆற்றுவதால், புற உலகின் போக்கில் புதிய பாலியல் எதிர்பார்ப்பு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. 


இன்றைய குடும்பங்களில் ஏற்படும் பாலியல் நெருக்கடிகள் குடும்பத்துக்குள் காணப்படும் ஆணாதிக்கச் சமூகப் பார்வை, ஆண் - பெண் இரு தளத்திலும் வரையறுக்கப்பட்ட ஒழுக்க எல்லை இதற்கான தூண்டும் கருவியாக உள்ளது. மறுதளத்தில் புற உலகம் பாலியல் நடத்தைகளை, நுகர்வுக் கண்ணோட்டத்தில் கலப்பற்ற சிற்றின்பப் பாலுணர்ச்சி உறவுகளைக் கோரும் பாலியல் வக்கிரங்கள், குடும்பத்துக்குள் புதிய பாலியல் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றது.


இதற்கு வெளியில் குடும்பங்கள் பிரிந்து வாழும் பல்வேறு சூழல்கள் அதாவது வெளிநாட்டில் வேலை, பொருளாதார நெருக்கடிகள், மனித உணர்வை இழந்த பொருளின் உறுப்பாகும் நுகர்வுப் பொம்மைத்தனம், நிரந்தர இராணுவம், குடியுரிமையை மறுத்து குடும்பத்தைப் பிரிக்கும் அரசுகள், குடும்பத்தைச் சேர்க்க இழுத்தடிக்கும் போக்குகள், திருமணத்துக்குத் தடையான சீதனம், பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத ஆணாதிக்கச் சமூக ஒழுங்கு, கட்டாயத் திருமணங்கள், அகதி வாழ்க்கை........  போன்ற பற்பல காரணங்கள் குடும்ப நெருக்கடியின் அங்கமாக உள்ளன. இவை அனைத்துமே சமூக ரீதியானவையே ஒழிய தனிமனிதன் சார்பானவை அல்ல. இந்த நெருக்கடியில் சிக்கும் ஆண் - பெண்ணின் பாலியல் நடத்தைகள், ஒழுங்கு மீறல்கள் தனிமனிதனின் குறித்த செயலாற்றலும் அல்ல.


இந்த மாதிரியான நிலைமையில், அத்துமீறும் பாலியல் நடத்தை மீது இந்த ஆணாதிக்கம் சமூகத் தண்டனையை வழங்கும்போது, இது தனிமனிதர்கள் மீது நடத்துவது எப்படி கடுமையான விமர்சனத்துக்குரியதோ,  அதேபோல் இதைப் போற்றும் செயலும், நடத்தையும் அதே அரசியல் வழிப்பட்ட வழியில் உள்ளதுடன் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்குரியதும் ஆகும். தனிமனிதர்கள் சமூக நிகழ்வுகளின் மீதான தனித்த நடத்தைகளில் குற்றவாளியாக இருப்பது ஒரு சிறுபங்கு மட்டுமே ஒழிய உண்மையான குற்றவாளி இந்தச் சமூகமேயாகும். இந்தச் சமூகம் என்கின்றபோது சுரண்டும் சமூக அமைப்பே.  இதேபோல் தனிமனித ஒழுக்க மீறல்கள் சமூகத்தில் இருந்து ஏற்படுவதால் தனிமனித நியாயப்படுத்தல்கள் சமூகத்தின் குற்றங்களை நியாயப்படுத்தி, சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கோட்பாடுகளைக் கோரப்படுவதாகி விடுகின்றது.


அடுத்து, புற உலகின் நுகர்வுப் பண்பாட்டில் சிக்கிக் கொண்ட உலகம் தழுவிய சமூகப் பொருளாதாரப் போக்குகளில், ஒன்றுக்கு மேற்பட்ட அதே பொருட்களை விதம்விதமாக அடிக்கடி மாற்றிக் கொண்டு நுகரக் கோரும் பண்பாட்டில் பாலியல் மீறல்கள் நடக்கின்றன. இது ஐரோப்பியச் சமூகங்களில் இயல்பான போக்கில் அங்கீகாரம் பெற்ற சமூகப் பொருளாதாரப் பண்பாடாகியுள்ளது. ஆனால், எமது சமுதாயங்களில் இது நகர்ப்புறங்களில் அதிகரித்த அளவில் ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் கலாச்சார, பொருளாதாரச் சூழலால் பலாத்காரமாகத் திணிக்கப்படுகின்றது. இதற்கும் மரபான நிலப்பிரபுத்துவக் குடும்ப அமைப்பில் இருக்கும் ஒழுங்குக்கும் இடையிலான போராட்டம், புறச் சமூக நிலையால் பந்தாடப்படுவது அதிகரித்துள்ளது.


இவை நேரடியான பாலியல் நடத்தை சார்ந்த பாலியல் மீறலாக உள்ள அதேநேரம் பாலியல் அல்லாத பாலியல் மீறல்களைப் பார்ப்போம்.


இன்றைய ஆண் - பெண் காதல், மற்றும் திருமணங்கள் அவர்களின் விரும்புவனவற்றில் ஏதாவது ஒரு கூறில் மட்டும் பொதுவாக இணைப்புக் குள்ளாகின்றனர். பணம், கல்வி, அந்தஸ்து, எளிமை, அழகு, எதிர்பாராத ஒரு சந்திப்பு, தற்செயலான ஒரு பார்வை, தொடுதல்... போன்ற ஏதாவது ஒன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதில், இது போன்று இருவருக்கும் முன்னிலைப் பாத்திரம், கதைக்கும்முறை, பழகும்முறை, கவர்ச்சி............. போன்ற ஆயிரம் விடயங்களில் ஒன்று கூட ஒரு குடும்பத்தை உருவாக்குகின்றது. இந்த உருவாக்கத்திலேயே குடும்பம் நெருக்கடியைச் சந்திக்கின்றது. குறித்த துறை மீதான இணக்கத்துக்கு அப்பால் மற்றைய துறையில் ஏற்படும் முரண்பாடு ஆண் - பெண்ணின் பிளவுக்கான காரணமாகின்றது. குறித்த ஐக்கியத்துக்கான விடயத்துக்கு அப்பால் உள்ள விடயங்களில் எழும் முரண்பாட்டை, வெளியில் இருந்து மற்றொருவர் தீர்க்க முற்படும்போது குடும்பத்துக்குள் அதன் மீதான முரண்பாடு, மற்றவர் மீதான பாலியல்  ஆர்வத்தையும்  நடத்தையையும் தூண்டும் போக்கு உருவாகின்றது. ஏனெனின் அந்த உறவில் காணப்படும் பாலியல் அணுகுமுறை உரிமைக்கு வெளியில் இலகுவாகவும், ஆணாதிக்க உரிமைக் குடும்ப அமைப்பில்  கடினமானதாகவும் ஆணாதிக்கப் போக்கு ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் மீதான மனிதப் போக்குகள், ஊசலாட்டங்கள், தெரிவுகள் இந்தச் சமூகப் போக்கின் வெளிப்பாடாக உள்ளது. இந்தப் பாலியல் போக்கின் தெரிவுகள் அனைத்தும் சமூகப் பொருளாதார, பண்பாட்டின் மாற்றங்களை ஒட்டிய எதிர்வினைகளாகப் பிரதிபலிக்கின்றது.


ஆரோக்கியமான பாலியல் நடத்தை, தெரிவு, போக்குகள் என்பது இன்று உள்ள ஏகாதிபத்தியப் பாலியல் நடத்தையையும், நிலப்பிரபுத்துவ நடத்தையையும் எந்தளவுக்கு விமர்சித்து, அதற்கு மாற்றான பாலியல் போக்கை எப்படி தெரிவு செய்கின்றோம் என்கிற சமூகப் பார்வை கொண்ட பாலியலாகும். இந்த ஆரோக்கியமான பாலியல் என்பது சமூகப் பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரப் புரட்சிகளில் மட்டுமே வெற்றியைத் துல்லியமாக்கும். அந்தப் பண்பாட்டுக் கலாச்சாரப் பாலியலைப் புரிந்து கொண்ட பாலியல் கோரிக்கைகளை ஏற்கும் இலக்கியங்கள் மட்டுமே உண்மையான, ஆரோக்கியமான, இலக்கிய மற்றும் பாலியல் புரட்சியாகும்.


பாலியல் ஈடுபாட்டை நுகர்வில் இருந்து, தேவைக்கு ஏற்ப மாற்றுவதும், பாலியல் உறுப்புகளை நுகர்வுச் சந்தையில் இருந்து மீட்டு எடுப்பதும், சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து பாலியல் நடத்தைகள், பண்பாடுகளை மீட்டு எடுக்கும் பாதையில் சமுதாயத்தை முன்னோக்கி நகர்த்தவேண்டும். அத்துடன் ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் மீதான பாலியல் நடத்தையை மறுதலித்துப் போராடுவது அவசியமும் நிபந்தனையுமாகும்;. இதைப் பாதுகாத்தபடி பெண் இதைக் கோரின் அதையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


இன்றைய சமூகப் பாலியல் விளைவுகளால் ஏற்படும் பாலியலில் தனிநபர் விலகல், சமூக விலகல்களை இதன் கண்ணோட்டத்தில் அணுகவும், தேவையான போது விமர்சிக்கவும் தயங்கக் கூடாது. ஒரு தனிமனிதனின் பாலியல் தேவையை இருக்கின்ற சமூக ஒழுங்கில், அதன் போக்கில் மீறி அணுகும் போது, அதனை நியாயப்படுத்துவதற்குப் பதில், இச்சமூக அமைப்பில் அதற்கான காரணத்தை முதன்மை கொடுத்து எதிர்க்கவேண்டும். ஒவ்வொரு விலகலின் பின்பும் இச்சமூக அமைப்பு காரணமாக உள்ளதால், அதன் மீதான விமர்சனம் என்பது சமூகத்தைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும்.


அவ்வாறு இல்லாது விலகலில் நின்று அதை நியாயப்படுத்தும் அனைத்தும், இச்சமூக அமைப்புக்குள் தீர்வை அதன் வழியில் நியாயப்படுத்துவதாகும். அது இருக்கும் ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் பாலியலைச் சந்தைப் பொருளாக்கி நியாயப்படுத்தும் பாலியல் கோட்பாடாக்கி விடுகின்றது.