புற உலகின் வெளிப்பாடான இயக்கத்துக்கு வெளியில் மனிதச் சிந்தனை தனக்குள், தன்னளவில் வெளிப்படுவதில்லை. புற உலகில் நடக்கும் மாற்றத்தையொட்டி மனிதச் சிந்தனை அனைத்துத் துறைகளிலும், புற உலகு மீதான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட விதத்தில் மனிதன் வெளிப்படுத்துகின்றான், சிந்திக்கின்றான்;. இதைத் தாண்டிய சிந்தனைத் தளம் கிடையவே கிடையாது.
இந்த வகையில் பாலியல் பற்றிய அறிவும், அதன் வெளிப்படுத்துதலும் புற உலகின் வெளிப்பாடாகவே மனிதனுக்குள் வெளிப்படுகின்றது. இது மாறுபட்ட சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மனிதச் சிந்தனையில் வெளிப்படுகின்றது. இந்த வெளிப்பாடுகளின் விளைவுகள், குறித்த பாலியல் நடத்தை மீது மட்டும் தொழிற்படுவதில்லை. மனிதனின் புறச் சூழல் பாதிப்பின் விளைவாக வெளிப்படும் பாலியல் நடத்தைகள் எல்லாம் மாறிக் கொண்டிருப்பதுபோல் மாறிய வண்ணம் நீடிக்கின்றது.
சமுதாயத்தின் பல்வேறு பாலியல் நடத்தைகள் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், போராட்டங்கள், தனித்து அதன் மீதான மாற்றத்தால் மட்டும் மாற்றி விடுவதில்லை.
ஆணாதிக்கச் சமுதாயத்தில் வெளிப்படும் ஆண் சார்ந்த பாலியல் ஆதிக்கம் வெறுமனே பாலியல் நடத்தை மீது கட்டமைக்கப்படுவதில்லை. மாறாக, புற உலகின் பொது வெளிப்பாட்டின் மீது, அது சார்ந்த குறித்த சமுதாய ஆதிக்கத்தின் மீது வெளிப்படுகின்றது. இந்தச் சமுதாயத்தில் நடந்து வரும் மாற்றங்கள், பெண்ணின் தொடர்ச்சியான போராட்டங்கள், பாலியலில் ஆணுக்கு நிகரான பாலியல் தெரிவுக்கான உரிமைகள் கூட புறச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகத் தான் இருக்கின்றது, நீடிக்கின்றது.
ஆணாதிக்கம் வழங்கும் பாலியல் சலுகைகள், பெண் போராடியெடுக்கும் பாலியல் உரிமைகள், ஆணாதிக்கத்துக்கு உட்பட்டுத் தெரிவு செய்யும் பாலியல் மாற்றுக்கள் என அனைத்தும் சுயாதீனமானவை அல்ல. மாறாக எப்போதும் புறச் சமுதாயத்தின் வெளிப்பாடாக, மாறுபட்ட வர்க்கக் கண்ணோட்டத்தின் விளைவாக உள்ளது.
சுதந்திரமான பாலியல் தெரிவாக நம்பும் தெரிவுகளும் கூட, நடத்தைகளும் கூட சமுதாயத்துக்கு வெளியில் சுயாதீனமானவையல்ல. மாறாக, சமுதாயத்தின், அதிலும் வர்க்கப் பிளவுகளின் வேறுபட்ட நடத்தைகளால் ஆனது. இந்த நடத்தைகள் கூட பொது வர்க்க எல்லைக்குள் தனிமனிதர்களின் புற உலக பார்வைக்கேற்ப தனித்தனியாகவும் கூட பிளவுபடுகின்றது.
இன்று உலகளவில் பொதுப்படையாக இரண்டு பிளவுபட்ட சமுதாயக் கண்ணோட்டம் வெளிப்படுகின்றது. முதலாவதாகக் கூட்டுச் சமுதாயக் கண்ணோட்டமும், இரண்டாவதாகத் தனிமனிதச் சமுதாயக் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றன. இந்த இரு சமுதாயப் போக்கிலும் கூட பாலியல் நடத்தைகள் இதற்கு இசைவாக வேறுபட்டுக் காணப்படுகின்றது. அதிலும் இது மேற்கு நாடுகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையில் கூர்மையாக வேறுபடுகின்றது.
மேற்கில் பாலியல் நடத்தைகள் சுதந்திரமானதாக இருப்பதாகப் பாசாங்கு செய்தபடி, சமுதாயத்தின் விளைவுகளான தனிநபர் சமூகச் கண்ணோட்டத்தின் பொதுப் போக்கில், இரண்டு வர்க்கப் பிரிவுகளும் நுகர்தலை முன்னிலைப்படுத்தி பாலியலை நுகர்கின்றனர். இங்கு மனிதர்களுக்கு இடையில் நுகர்தலில் காணப்படும் வேட்கை, சமுதாயத்தில் சூறையாடும் சமூகப் போக்குக்கு இசைவாக ஒருவரையொருவர் அதிகம் நுகர்தலைக் குறிக்கோளாகக் கொண்டு பாலியலை வெளிப்படுத்துகின்றனர்.
மறு தளத்தில் மூன்றாம் உலக நாடுகளில் பாலியல் சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கைக்கு ஏற்ப, அதுவும் கூட்டுக் கண்ணோட்டத்தில் வெளிப்படுகின்றது. ஆனால், பாலியலில் ஆணாதிக்கம் பெண்ணின் கூட்டுக் கலவியை மறுப்பதால் பெண்ணின் பாலியல் பூர்த்தியாக்கப்படுவதில்லை. ஆணின் கூட்டுக் கலவிக்குப் பெண் ஒத்துழைக்கும் மனிதப் பண்பை, ஆணாதிக்கம் ஆணின் தனித்த நுகர்வாகச் சீரழித்து விடுகின்றது. அதாவது மூன்றாம் உலக நாடுகளில் பெண்ணின் பகிர்ந்து உண்ணும் கூட்டுப் பண்பும், இதற்கு எதிரான ஆணின் பண்பும் முரண்பட்ட சமுதாயச் சிந்தனைகள் எப்படி கூட்டாக உள்ளதோ, அது பாலியலிலும் வெளிப்படுகின்றது. மேற்கில் தனிச் சொத்துரிமையில் பெண் நுகர்வோராக மாறியதால், மூன்றாம் உலகப் பெண்ணை விட அதிகமான சுதந்திரம் உள்ளவளாகக் காட்டப்படுகின்றது. இது பொருட்களை நுகர்வது போல் பாலியலிலும் சுதந்திரம் கொண்டதாகப் பிரமையை ஏற்படுத்துகின்றது.
இந்தப் போக்கு என்பது பெண்ணியல் நோக்கில் பெண்ணுக்கு எதிரானதாகும். பெண், ஆணைப் போல் நுகர்வோராக மாறுவது பெண்ணை விடுவிக்காது. மாறாக நுகர்வோராக ஆண் - பெண் பரஸ்பரம் மாறும்போது மனிதச் சமுதாயத்துக்கு எதிரான கண்ணோட்டமும், அதற்கு அஸ்திவாரமும் ஆகிவிடுகின்றது. பெண்ணின் கலவி முறை என்பது கூட்டுக் கலவியை முன்வைத்து ஆணை நோக்கி கோருவதாக இருக்க வேண்டும். இது பல பெண்ணியவாதிகளால் கவனத்தில் எடுக்கப்படவே இல்லை.
மாறாக, மேற்கில் (ஏகாதிபத்தியத்தில்) மாறிய சமுதாயக் கண்ணோட்டத்தில் நுகர்வு என்பது முதன்மைப்பட, அதை ஒட்டிப் பெண்ணின் நுகர்வுக் கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டனவே, ஒழிய பெண்ணின் கூட்டுவாழ்க்கை முன்னிலைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் பொருளாதார நுகர்வில் பல தெரிவுகள் எப்படி சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அதேபோல் ஆண்-பெண், பல ஆண்-பெண்ணைப் பாலியலில் நுகரும் போக்கு பண்பாடாக அதைநோக்கி ஆவலாகத் தூண்டப்படுகின்றது. அதேநேரம் ஆணைப் போல் வாழும் ஜனநாயகக் கோரிக்கைகள் சிலவற்றை வென்றெடுத்த பெண்ணியம் நுகர்வுக்குள் தனது விடுதலையை வெளிப்படுத்தியதே ஒழிய, கூட்டு வாழ்வுக்கு ஆணை வென்றெடுக்க அல்லது தனிமனிதக் கண்ணோட்டத்தை அழித்தொழிக்க முடியாது, பெண்ணியம் ஆணாதிக்கமாகித் தோற்றுப்போனது. இதுதான் மேற்கில் பெண்ணியத்தின் பொது வெளிப்பாடு. இந்த எல்லைக்குள் இன்று பல தத்துவங்கள் கோரிக்கைகள் முளைக்கின்றனவே, ஒழிய பெண்ணிய விடுதலைக்காகப் பெண்ணியக் கூட்டு வாழ்க்கைக்கு ஆணை முன்னேற்றத் தவறியுள்ளது. அத்துடன் இந்த நுகர்வுப் பண்பாடு என்பது பெண்ணியத்தின் கூட்டு வாழ்க்கைக் கண்ணோட்டத்துக்கு எதிராக, புதிதாகத் தோன்றி, ஆணாதிக்கமாக மாறியுள்ளது.
ஒரு மனிதன் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கலவியில் ஈடுபடும் போது அதன் வெற்றி - தோல்வி என்பது தனித்த அவர்களின் வெளிப்பாட்டில் தீர்மானகரமாவதில்லை. மாறாகக் கலவி தொடர்பாக அவர்கள் மீது புற உலகம் எதைக் கொடுத்துள்ளதோ அந்த எல்லைக்குள்தான் பாலியல் வெற்றி, தோல்வி முடிவாகின்றது. ஒரு மனிதனுக்குப் பதில் இருவர் இதில் ஈடுபடுவதால் வெற்றி - தோல்வி இருவரின் பாலியல் பற்றிய புற உலகப் பார்வையில் ஒருமித்த பார்வை அல்லது விலகல், பாலியல் வெற்றியை அல்லது தோல்வியைத் தீர்மானிக்கின்றது. இன்றைய பாலியல் நெருக்கடிகள் புற உலகம் சார்ந்த தனிநபரின் சிந்தனை விலகலில் தான் தீர்மானகரமாகின்றது. தனிமனிதர்கள் வெறும் இயந்திரமாகப் புற உலகம் சார்ந்து இயங்கும் கருவியாகி விடுகின்றான். இது உலகம் முழுக்கவும் பொதுவானதாக உள்ளது.
உதாரணத்துக்கு, பொதுவாக ஆணின் பாலியல் நடத்தைகளில் கலவிக்கு முன்பே விந்து வெளியேறிவிடுகின்றது. இது சில ஆண்களின் நோயாகக் கருதப்பட்டு மருந்துகளை நுகரும்படி உலகம் சிபாரிசு செய்கின்றது. ஆனால் அந்த ஆணின் புற உலகம் தழுவிய, பெண்ணின் பாலியல் உறுப்பு பற்றிய வக்கிரங்கள் தான், அவனின் பாலியல் செயலை நோயாளியாகக் காட்டிவிடுகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்படும் பெண் புதிய பாலியல் நெருக்கடியைச் சந்திக்கின்றாள். இது பல புதிய பாலியல் விளைவுகளை, பல புதிய சமுதாய நடத்தைகளை, போராட்டங்களை .. விளைவிக்கின்றது. பெண்ணின் பாலியல் நடத்தையில் கூட இது பிரதிபலிக்கலாம். பெண்ணின் ஆரோக்கியமான பாலியல் நடத்தையை எதிர்பார்க்கும் ஆணின் புற உலகப் பார்வையை, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இருந்து பெண் புரிந்து கொள்ளத் தவறின் அல்லது ஆணாதிக்கப் பண்பாட்டுக் கட்டுப்பாட்டால் கூட பாலியல் நடத்தையில் நெருக்கடி ஏற்படும். இப்படி பல பாலியல் நடத்தையில் உள்ள நெருக்கடிகள் புறச் சமுதாய விளைவாக உள்ளதால் இந்தச் சமுதாயத்தின் பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படாதவரை பாலியல் நெருக்கடி என்பது புற உலகம் சார்ந்து புரிந்து கொள்ளும் வடிவில் தொடரும்.
பாலியல் வெற்றி என்பது பாலியல் பற்றி அனைத்து நடத்தையிலும் ஒருமித்த பார்வை உள்ளவர்களிடம் மட்டும் பொதுவாகச் சாத்தியமானது. அதாவது புற உலகம் சார்ந்த சிந்தனை மீது பாலியலில் ஒத்த பார்வையும், மாறிவரும் சமுதாயத்தின் போக்கில் இரு பகுதியிலும் தொடர்ந்த ஒத்த பார்வையும் வெற்றிக்கு முன்நிபந்தனையாகும். ஆனால் வர்க்க ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாகி உள்ள சமுதாயத்தில் இது பூர்த்தியாவது என்பது, ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில், வர்க்கக் கண்ணோட்டத்தில் ஒத்த பார்வையை முன்நிபந்தனையாகின்றது. வர்க்கக் கண்ணோட்டத்தை நேரடியாக வெளிப்படுத்தாத மத்தியதர வர்க்கப் பிரிவில் பெண்ணியல் கண்ணோட்டம் ஆணாதிக்கம் சார்ந்து வெளிப்படுவதால், அதேநேரம் தனிமனிதச் சமுதாயக் கண்ணோட்டம் வர்க்கத்துக்கு எதிராக வெளிப்படுவதால் நுகர்வுக் கண்ணோட்டம் பாலியல் நெருக்கடியின் தோற்றுவாயாக உள்ளது.
பாலியல் நெருக்கடிக்குப் பொதுவாக ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் காணப்படும் பிளவு அடிப்படையாக உள்ளது. இதைத் தாண்டி ஒத்த ஆணாதிக்கக் கண்ணோட்டமும், நுகர்வுக் கண்ணோட்டமும் இணைந்த தனிமனித வாதத்தால் பாலியல் நெருக்கடிக்கு உள்ளாகின்றது. பாலியல் வெற்றி என்பது ஆணாதிக்கத்தைக் கடந்த ஒரேயொரு நிலையில் மட்டுமே சாத்தியமானது.
இன்றைய பாலியல் போக்கில், மேற்கில் ஆண் - பெண் இருவரும், மூன்றாம் உலகில் ஆண்களும் தத்தம் பாலியல் நடத்தையில் இருந்து காதல், அன்பு என்ற குறைந்த பட்ச சமூக அடிப்படையைக் கூட இழந்த நிலையில் நுகர்வு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் உலகில் தொடர்ந்து பெரும்பான்மையான பெண்களும், சமுதாயத்தின் உழைக்கும் மக்களும் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் முடிகின்றது. நிலப்பிரபுத்துவத்தின் பண்பாடாக உள்ள இவ்விடயம் ஏகாதிபத்தியப் பண்பாட்டால் அச்சுறுத்தப்படுகின்றது.
இன்று பாலியல் திருப்தியின்மையால் ஏற்படும் விவாகரத்துக்கள், ஓரினச் சேர்க்கைகள், செயற்கையான உபகரணப் பயன்பாடுகள், மருத்துவ ரீதியான தேடுதல்கள், மனநோயாளிகள்... என சமூகத்தின் போக்கில் வெளிப்படும் பிரச்சனைகள் தனிமனிதச் சிந்தனையின், விளைவின் பிரதிபலிப்புகள் அல்ல. மாறாக, சமுதாயப் போக்கில் அதன் பிரதி விளைவுகளாக மனிதச் சிந்தனையின் பிரதிபலிப்புதான் இவைகள் ஆகும். இவைகளுக்கான தீர்வுகள், உண்மையில் வெளி உலகு சார்ந்த புறச் சமுதாயப் போக்கில் சார்ந்துள்ளதே ஒழிய தனிமனித உள்ளத்தைச் சார்ந்தது அல்ல. தனிமனிதர்கள் புற உலகின் போக்கில் சார்ந்து, அல்லது எதிர்த்து புற உலகக் கண்ணோட்டத்தில் பாலியல் போக்கைப் பிரதிபலிக்க முடிகின்றது. இதில் எப்படியான பாலியல் ஆரோக்கியமானது என்பதைப் புற உலகின் மீதான விமர்சனம், நடைமுறை மட்டுமே பூர்த்தி செய்கின்றது. உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் புற உலகு சார்ந்து வெளிப்படும் பாலியல் சிந்தனையை ஆரோக்கியமாக, வெற்றிகரமாகக் கையாள, புற உலகம் சார்ந்த பாலியலை ஆரோக்கியமாகப் பார்க்கும் சமுதாயம் அவசியமாகின்றது.
இன்றைய சினிமாவைப் பார்க்கின் மேற்கிலும், மூன்றாம் உலகிலும் பெண் பற்றிய உடல் அங்கப் பார்வைகள், பாலியலின் நடத்தை குறித்த வெளிப்பாடுகள் ஆணின் முன், இரண்டு வேறுபட்ட சமுதாயத்திலும், வேறுபட்ட வடிவில், வேறுபட்ட பொருளாதார வடிவங்களுக்குள்ளும், வேறுபட்டுப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பிரதிபலிப்பு தன்னுடன் பாலியல் நடத்தையில் ஈடுபடும் பெண்ணிடம் இல்லாதபோது ஆணின் பாலியல் நோக்கம் சமுதாயத்திலும், தனக்குள்ளும் கேள்விக்கு உள்ளாகின்றது. இது பெண்ணின் தளத்திலும் நிகழ்கின்றது. இதற்குப் புறம்பான பாலியல் நோக்கம் சிந்தனையின் பிரதிபலிப்பில் நெருக்கடிக்கு உள்ளாகின்றது.
இன்றைய சினிமா மற்றும் பெண்ணின் விளம்பரங்கள் பெண்ணின் அங்கங்கள் ஆணின் நுகர்வுக்குரிய வகையில், அதாவது பார்த்தல், தொடுதல், அனுபவித்தல், கேட்டு அனுபவித்தல் என்ற எல்லைக்குள் வரையறுத்து விடுவதால் ஆணின் நுகர்வு வேட்கை புறச் சூழல் விளைவால் தூண்டப்படுகின்றது. இந்தத் தூண்டுதல் வரையறுக்கப்பட்ட பாலியல் நடத்தையில் தோல்விக்கான முதல்வழியைத் தொடங்குகின்றது. பெண்ணின் தளத்தில் ஆணின் வீரம், திடகாத்திரமான உடல், ஆணின் அன்பளிப்புகள்.. போன்ற எதிர்பார்ப்புகள் பெண்ணின் முன் தள்ளப்பட்டு இது பாலியல் அனுபவிப்பில் இவற்றைக் காணமுடியாதபோது, பாலியல் நெருக்கடிக்குள்ளாகின்றது.
பாலியல், சமுதாயப் பொருளாதார அமைப்புக்கு ஏற்ப, பொருளாதார நலன்களில் வென்றவர்கள் தமது பொருளாதார வெற்றிக்கான தேவையை ஒட்டிக் கையாளும் ஆண் - பெண் உறுப்புகள் பற்றிய வரையறைக்குள்தான், பாலியல் நடத்தைகள் கட்டமைக்கப்படுகின்றன. இது அடிப்படையில் பாலியல் நெருக்கடியின் தோற்றத்தை அறைகூவுகின்றது.
தேவைகளில் இருந்து பாலியல் நடத்தைகள் கட்டமைக்கப் படவில்லை. இந்தக் கட்டமைப்பு ஆண் - பெண்ணின் கூட்டுக் கலவியாக இருக்கும். மாறாகப் பாலியல் நடத்தைகள் நுகர்வை நோக்கிய வகையில், சந்தையில் பொருட்களுக்கு எது நிகழ்கின்றதோ, அதே வழியில் நிகழ்கின்றது. இன்று பொருட்கள் மீதான நுகர்வுத் தேவைக்கு வெளியில் நுகர்வுக்காகத் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு, அனைத்து சிந்தனைத்தளமும் அதன் போக்கில் உருவாக்கப்படுகின்றன. ஒரு பொருளின் மீதான நுகர்வு முடிவின்றி, அதே மற்றொரு பொருளை நுகரத் துடிக்கும் சமுதாயத்தின் விளைவான தனிமனிதச் சிந்தனைப் போக்கே பாலியலை நுகர்வாகவும், அதை மாறிமாறி வேறுபட நுகரவும், தனிமனிதச் சிந்தனை புற சூழலில் இருந்து கோரவும், சிந்திக்கவும், நடத்தையுமாக முன்தள்ளுகின்றது. இன்று பல பாலியல் பற்றிய ஆய்வுகள், கோரிக்கைகள், விமர்சனங்கள், நடத்தைகள் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சமுதாயத்தின் தனிமனிதனின் சூறையாடும் பொருளாதார நலன்களில் இருந்து வெளிப்படுகின்றது. இந்த தனிமனித நடத்தைகள், சிந்தனைகள் வெளியில் உள்ள புறச் சமூகப் பொருளாதார அமைப்புக்கு இசைவானதாக, அதைப் பலப்படுத்துவதாகப் பிரதிபலிக்கின்றது.
சரியான பாலியல் நடத்தைகள் என்பது சுற்றுச்சூழலிலுள்ள தனிமனிதச் சூறையாடும் நுகர்வுப் பொருளாதார அமைப்புக்கு எதிரான சிந்தனையில், நடைமுறையில் பாலியல் நடத்தையை ஆராயவும், சிந்திக்கவும், நடத்தைகளைத் தீர்மானிக்காத வரை உருவாக முடியாது. பாலியல் நடத்தைகளின் எல்லை இந்தப் பொருளாதார அமைப்பின் எல்லையால்தான் அதாவது புறநிலை சார்ந்த வாழ்நிலையையொட்டிய சிந்தனையில் உதிப்பதால் தீர்மானமாகின்றது. எனவே இந்தப் புறச் சமுதாயப் பொருளாதார அமைப்புகளை மாற்றக் கோராத அனைத்து பாலியல் கோரிக்கையும், அந்தப் பொருளாதார எல்லைக்குட்பட்ட பாலியல் நுகர்வுக் கோரிக்கைகளே. பொருளாதார அமைப்பை மாற்றக் கோருவதும், அதற்கு இசைவான பாலியல் கோரிக்கையுமே, ஆரோக்கியமான சமூக நோக்கம் கொண்ட தேவையிலான பாலியலாக இருக்கும். இதற்காகவே நாம் போராடக் கற்றுக் கொள்ளவும், மற்றதை இனம் கண்டு கொள்ளவும் வேண்டும்.