பெண்ணை அடிமைப்படுத்திய தனிச்சொத்துரிமை ஆணாதிக்கப் போக்கில் பழமொழிகள் உருவாகின்றன. இவை சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகின்றன. இந்தப் பழமொழிகள் ஆணாதிக்க அமைப்பின் ஒழுக்கமாகின்றது. இதை ஆராய்வோம்.
''விதவை எதிரே வருவது அபச குணம்."37
இந்த ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் திருமணமே அவளின் உயிர் வாழும் தகுதியை அங்கீகரிக்கின்றது. சாதிய ரீதியாக, தாழ்ந்த சாதி மக்கள், உயர் சாதி தெருவில் நடப்பது எப்படி குற்றமோ, அதுபோல் விதவைக்கும் நிகழ்கின்றது. ஆண் அற்ற பெண், விதவை நிலையில் வீட்டில் அடைந்து வாழ வேண்டும் என்ற, ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தில் இருந்து இந்தப் பழமொழி சமூக நடைமுறை விளக்கமாகின்றது.
''கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்"37
- என்ற பழமொழி பெண்ணின் அடிமைத்தனத்தைப் பண்பாடாக்குகின்றது. கணவன் தான் பெண்ணுக்கு எல்லாம் என்ற விளக்கம், ஆணின் அதிகாரம் கட்டுப்பாடற்ற வகையில் அங்கீகரிக்கப்படுகின்றது. கணவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும், பெண் அவனுக்கு அடங்கி, அவனின் அடிமையாகச் சேவகம் செய்ய வேண்டும் என்பதையே இப்பழமொழி சமூக நடைமுறையாக்குகின்றது.
''சேறுகண்ட இடத்தில் மிதிச்சு, தண்ணிகண்ட இடத்தில் கழுவிப் போட்டுப் போறவன்தான் ஆம்பிளை"
- என்று சமூகம் விளக்கி நியாயப்படுத்தும்போது, ஆணின் பலதார மணம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஆண்களுக்குப் பல பெண்களை அனுபவிக்கும் உரிமையை வழங்கியது ஆணாதிக்க அமைப்பு@ பெண்ணுக்கு ஒருதார மணத்தை ஏற்படுத்தியபோது தனக்கு அதை விதிவிலக்காக்கியது. ஆண் விபச்சாரியிடம் செல்லவும், ஆணுக்குக் கற்பு அவசியமற்றதாகவும் கருதியதன் வெளிப்பாடே இந்தப் பழமொழியாகும்.
''தான் திருடி இதனால் பிறரை நம்பாள்"
- என்ற ஆணாதிக்க விளக்கம், ஆணின் விபச்சாரத்தைப் பாதுகாக்க பெண்ணையே குற்றம் சாட்டுவதாகும்;. பெண் ஆணிடம் கற்புரிமையை எதிர்பார்த்துக் கோரி போராடும்போது, அதை அவளுக்கு எதிராக மாற்றுவது ஓர் ஆயுதமாகும்.. அதாவது பெண் தான் திருடி என்பதால் பிறரை நம்பாள் என்பதன் மூலம், பெண் கள்ளப் பாலியல் உறவு கொள்பவள் என்பதால், சொந்தக் கணவனை நம்பாள் என்ற அர்த்தத்தைக் கொண்டே, ஆணாதிக்கம் பெண்ணை இழிவாடுகின்றது. தனது ஆணாதிக்க அதிகாரத்தைப் பெண் மீது நிறுவ, தனது விசேட உரிமையைத் தக்க வைக்க, பெண்ணை நிலை கலங்க வைக்க, அவளின் கற்புரிமை மீது எழுப்பும் பழமொழி குற்றச்சாட்டுகள், ஆணாதிக்க அமைப்பின் அச்சாணியாகும்.
''பேயானாலும் தாய், நீரானாலும் மோர்"50
''பேய் பிள்ளையானாலும் தாய் தள்ளி விடுவாளா"50
தாய்க்கும், குழந்தைக்கும் இடையில் உள்ள பந்தத்தைக் காட்டுகின்றது. தாய்மையின் உன்னதமான உணர்வுகளையும், கூட்டுச் சமூகக் கண்ணோட்டத்தையும் சமுதாய ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்றது. ஆணின் வாரிசுரிமையைப் பெற்றுப்போடக் கோரும் சமுதாயத்தில், தாய்மையின் பண்புகள் சிறுமைப்படுத்தி வெறும் இயந்திரமான இயக்கத்தைக் குழந்தைப் பேற்றில் ஆணாதிக்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால், அந்தக் குழந்தையைக் கருவில் சுமப்பதில் இருந்து தாய்மை அடையும் உணர்வுகள் சார்ந்து, குழந்தை மீதான இயற்கையான கூட்டுத் தன்மையினால், பெண் உயர்ந்த மனிதத் தன்மையைக் கொண்டு வாழ்கின்றபோது, இப்பழமொழிகள் ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தை மீறி பெண்ணின் உயர்வைப் போற்றுகின்றது.
''பெண் என்றால் பேயும் இரங்கும்" பெண் பற்றிய ஆணாதிக்க அமைப்பின் தாழ்வுக் கண்ணோட்டமாகும். பெண்ணை ஆணாதிக்கம் அடிமையாக்கி, அவள் ஆணின் தயவில் வாழ்கின்றபோது ஏற்படும் அவமானகரமான துன்பங்களையும், துயரத்தையும் பிரதிபலித்தே இப்பழமொழிகள் உருவாகுகின்றன. ஆணாதிக்க அமைப்பில் பெண் அடிமையாக உழல்வதைக் கண்டு அனுதாபப்பட்டுக் கதைக்கின்ற போது, ஆணாதிக்க அமைப்பில் சீர்திருத்தத்தை அமைதியாக, மென்மையாகக் கையாளுகின்ற ஆணாதிக்க வடிவத்தைக்கோரும் கண்ணோட்டத்தில் இப்பழமொழி பெண்ணின் அடிமைத்தனத்தை, பெண்ணின் இரண்டாவது நிலையை உறுதி செய்து பாதுகாக்கின்றது. பிச்சைக்காரனுக்கு அனுதாபப்பட்டுப் பிச்சை போடும் மனிதன், எப்படி சமூக மாற்றத்துக்குப் பதில் பிச்சை போடுவதன் மூலம் சமூகக் கடமையைப் பூர்த்தியாக்கு கின்றானோ அதுபோல், இப்பழமொழிகள் பெண்ணின் அடிமைத்தனத்தை உறுதி செய்கின்றது. பெண் பற்றிய தாழ்வுக் கண்ணோட்டம் இதன் உள்ளடக்கமாகத் தொடர்வதையும், அதனால் அனுதாபப்படுவதும் இதன் பொது சமூகக் கண்ணோட்டமாகும்.
''பேயும் அறியும் பெண் சாதி பிள்ளையை" என்று கூறுகின்றபோது பெண்ணின் அடிமைத்தனம் பறைசாற்றப்படுகின்றது. மாட்டுக்குக் குறியிட்டுத் தனிச் சொத்துரிமையை அடையாளப்படுத்துவதுபோல், தாலி முதல் பொட்டு வரை பெண்ணின் மீதான ஆணின் அதிகாரத்தை, அடையாளத்தை, அடிமைத்தனத்தைக் குத்தி காட்டும் வழக்கமாகட்டும், ஊருக்கும், உலகத்துக்கும் அறிவித்து திருமணம் செய்வதாகட்டும், எல்லாம் பெண்ணின் மீதான ஆணின் முத்திரை குத்தப்படுகின்றது. இதன் வழியில் வாரிசுரிமையும், பெண்ணின் அடிமைத்தனமும் உறுதி செய்யப்படுகின்றது. பெண் மூலம் குழந்தை அடையாளம் உறுதி செய்தது போய், ஆணாதிக்க அமைப்பில் ஆண் மூலம் பெண்ணையும், குழந்தையையும் அடையாளம் காணும் ஆணாதிக்கம் நிலவுவதை, இந்தப் பழமொழி பறைசாற்றி நிற்கின்றது.
''பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல" ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய, ஆணுக்குச் சேவை செய்ய, பெண்ணின் அடிமைத்தனம் கொண்ட துணை, வாரிசைப் பெற்றுப் போட ஒரு பெண்ணின் தேவை, ஆணாதிக்க அமைப்பில் ஆணின் உரிமையாகின்றது. இது இல்லாத நிலையில் ஆணின் வாழ்க்கை கடுமையானதும், வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமற்றதும் என்பதையே இப்பழமொழி கூறி நிற்கின்றது. மனைவி இல்லாத நிலையில் அர்த்தமற்ற வகையில் பைத்தியமாக, ஒழுங்கற்ற வாழ்வை வாழ்வான் என்பதன் ஊடாக, பெண்ணின் அடிமைத்தனமான கடின உழைப்பு வெளிப்படுகின்றது.
''அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு" என்ற ஆணாதிக்க அமைப்பில் வாரிசுரிமை ஊடாகக் குழந்தையைக் காண்பது புலப்படுகின்றது. தாய் பெற்ற குழந்தையின் அடையாளம் தந்தையூடாகக் காண்பது, பெண்ணின் இழிவான நிலையைக் காட்டுகின்றது. ஒரு பெண் பெற்று எடுக்கும் குழந்தையின் தந்தையைப் பெண் மட்டுமே உறுதி செய்ய முடியும். ஆனால் தனிச்சொத்துரிமை ஆணாதிக்க அமைப்பில் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஒருதாரமணத்தில், ஆணின் வாரிசைச் சமூகம் குறித்துக் காட்ட இப்பழமொழி உதவுகின்றது. ஆணின் பலதாரமணத்தில் விரிந்த எல்லை இதற்கு எதிரான தன்மை கொண்டபோதும், பெண்ணின் கற்புரிமை மீதான ஆணின் கற்பு அதிகாரம் வாரிசுரிமையை ஆண் சார்ந்து உறுதி செய்கின்றது. குழந்தை மீதான பெண் உரிமை மறுக்கப்பட்டு, ஆணின் உரிமையை உறுதி செய்யும் ஆணாதிக்க விளக்கத்தை இப்பழமொழி உறுதி செய்கின்றது. இன்றைய குருட்டுப் பெண்ணியம் ஆணாதிக்கமய மாதலில் சலுகைக்காகப் போராடுகின்றபோது, குழந்தை மீதான பெண்ணின் உரிமையை ஆணாதிக்க வழியில் கைவிட்டுச் செல்வது ஒருபோக்காக உலகமயமாதல் பாதையில் அதிகரிக்கின்றது.
''உனக்காகச் சாப்பிடு. ஊருக்காக உடுத்து" என்ற பழமொழியில் உடுத்துதல் தொடர்பான கண்ணோட்டம் தெளிவாக விளக்கப்படுகின்றது. மற்றவர்களுக்காக உடுக்கும் கண்ணோட்டம் மேவி நிற்பதைத் துல்லியமாக, துலாம்பாரமாக நிர்வாணமாக்குகின்றது. உடுப்பு உடல் ஆரோக்கியம் சார்ந்து, சூழலைச் சார்ந்து மட்டும் போடப்பட வேண்டிய நிலையில், கவர்ச்சி காட்ட, மற்றவரைக் கவர என்ற நிலைக்குத் தரம் தாழ்ந்து மாறிவிட்டது. ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடியுடன் உடுப்பு மானத்தைக் காக்கும் ஓர் ஊடகமாக இருந்தது போய், அதையும் உரிந்து காட்டும் கவர்ச்சிகர உடுப்பாக்கி, வக்கரித்துக் காட்டும் நிர்வாண வக்கிரக் கவர்ச்சியில் சந்தைப் பொருளாதாரம் மக்களை வக்கரிக்க வைக்கின்றது.
''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்" என்பதன் மூலம் பெண்ணின் பாரம்பரியமிக்க கடமை, பண்பாடு ரீதியாக நியாயப்படுத்தப்படுகின்றது. சில கடமைகள் பெண்ணுக்கு உரித்தானவை என்பதையும், இதை அவளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும், ஆணாதிக்கப் பண்பாட்டு வழியாக இப்பழமொழி விளக்குகின்றது.
''ஆட மாட்டாத தேவடியாள் தெருகோணல் என்றாளாம்" கடவுளின் பெயரில் கோயில்களில் விபச்சாரத்துக்குத் தள்ளப்படும் பெண்கள், ஆடிப் பாடியே விபச்சாரம் செய்ய ஆணாதிக்க இந்து மதம் கோருகின்றது. அவள் சமுதாயம் மீது கருத்து கூறவோ, அபிப்பிராயம் சொல்லவோ எந்தத் தகுதியையும் மறுக்கும் இப்பழமொழி, பெண்ணின் பரதக் கலையில் இருந்து விபச்சாரம் பண்ணும் வடிவில் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்துகின்றது. தேவடியாளாக, ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பணக்காரர் மற்றும் பார்ப்பனர்களால் பலாத்காரமாக உருவாக்கப்படும் கண்ணுக்கினிய அழகிய பெண்கள், மற்றைய பெண்களில் இருந்து விதிவிலக்காகக் கருத்துரைக்கும் வாழ்வில், அவளின் அபிப்பிராயத்தைப் பெண் என்ற அடிப்படையில் நின்றும், சமுதாயம் மீதான எதிர்ப்பென்ற அடிப்படையில் நின்றும் வெளிவருவதைத் தடுக்கும், ஆணாதிக்கக் கொச்சைப் பழமொழிதான் இது.
''ஊருக்கொரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்" இது அப் பெண்ணின் மீதான ஆணாதிக்கத்தின் விரிந்த பாலியல் ஆதிக்கத்தைக் காட்டுகின்றது. ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரினதும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும், பெண்ணின் நிலையைக் காட்டுகின்றது. சமுதாய ரீதியாக ஆணின் பலதார மணத்தைக் கோயில் சார்ந்து தேவடியாள் (தேவன் ª அடியாள்) மூலம் ஆண்கள் அடைந்ததை, அடைவதைச் சமூக அங்கீகாரமாகக் கொண்டு இருக்கும் போது, ஊருக்கு ஒரு பெண் இருப்பின் அவளின் துன்பத்தை விளக்குவதே இப்பழமொழி.
''தந்தை எவ்வழி தனயன் அவ்வழி" என்பது ஆணாதிக்க வாரிசுரிமையையும், ஆணாதிக்க வழியையும், தந்தையுரிமை வழியில் நியாயப்படுத்துவதே இப்பழமொழி. வாரிசுகள் செய்யும் ஆணாதிக்கத் தவறுகளை, தந்தையின் ஆணாதிக்கச் சமூகப் பரம்பரையூடாக இனம் காட்டி அங்கீகரிக்கும் சமூக வெட்டு முகம், தாய்வழிக்கு எதிராக இப்பழமொழியைக் கையாளுகின்றது.
''தான் திருடி அசல் வீடு நம்பமாட்டாள்" பெண்ணின் கற்பு மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தை ஆண் வழியில் கொச்சைப்படுத்தி, பாதுகாக்கின்றது. பலதார மணத்தில் திளைக்கும் ஆண் மீதான பெண்ணின் போர்க்குரலைக் கொச்சைப்படுத்த, அதைப் பெண் மீது திருப்பும் இப்பழமொழி, பெண்ணின் கற்புரிமையைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்துகின்றது. ஆணின் கற்பு மீது கேள்வி எழுப்புபவள், தனது சொந்தச் சோரம் போகும் அனுபவத்தில் இருந்து கேட்பதாக, ஆணாதிக்கம் பெண்ணைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்த இப்பழமொழி உதவுகின்றது. சமுதாயத்தில் ஆணாதிக்கம் பெண்ணை இழிவாடும் வெட்டு முகத்தை இது பிரதிபலிக்கின்றது.
''தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு, பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு" என்றதன் மூலம் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஆணின் சுகபோகத்தை இனம் காட்டுகின்றது. தாய் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீட்டில் இருந்து, மகளின் ஒழுக்கத்தை, ஆணாதிக்கம் வரையறுத்து, புதிய அடிமையை இனம் காண்பதை இப்பழமொழி பிரதிபலிக்கின்றது.
''நல்ல மாட்டிற்கு ஓர் அடி, நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்" பெண் மீதான ஆணாதிக்க வரைமுறையற்ற உரிமையை விளக்குகின்றது. பெண்ணுக்கு ஆண் கட்டளையிடும்; போது, கேள்வியின்றி அடங்கி வாழக் கோரும் இப்பழமொழி, இந்த ஆணாதிக்க அமைப்பில் ஆணின் தனித்துவத்தை எடுத்து இயம்புகின்றது.
''பிரியமில்லாத பெண்டிலிலும் பேய் நன்று" ஆணின் அடிமையாக மறுக்கும் பெண் பற்றி இப்பழமொழி இழிவுபடுத்துகின்றது. ஆணுக்குக் கட்டுப்பட்டு கட்டுப்பெட்டித் தனமாக வாழ மறுக்கும் பெண்ணை, பேய்க்கு ஒப்பிடும் ஆணாதிக்கம், ஆணுக்கு அடங்கி சேவை செய்யக் கோருகின்றது.
''பிள்ளைக்கு உபாத்தியாயரும் பெண்ணுக்கு மாமியாரும்" ஆணாதிக்கம் சார்ந்த, ஆண் வீடு புகும் பெண் மீதான மாமியாரின் கொடுமையை, ஆணாதிக்க அமைப்பின் ஜனநாயக அதிகார வடிவமாக இருக்கின்றது. திருமணம் செய்த பின் ஆண் வீடு வரும் பெண்ணை அடங்கி வாழ, மாமியார் வேடம் ஊடாக தனது அதிகாரத்தை ஆணாதிக்கம் நிறுவுகின்றது. ஆணாதிக்கச் சமூக அமைப்பு சமுதாயத்தை ஒழுங்குபடுத்த உருவாக்கிய பல்வேறு அதிகார வடிவங்களில், மாமியார் பாத்திரமும் ஒன்றாகும்.
''பிள்ளை வரத்துக்குப் போனவிடத்தில் புருஷனைப் பறி கொடுத்தது போல" ஆணாதிக்க வாரிசைக் கோரி நிர்ப்பந்திக்கும் ஆணாதிக்க அமைப்பில், பிள்ளை வரம் கோரி ஆணாதிக்கக் கடவுள்கள் வாழும் இடம் செல்லும்போது, அங்கு பெண் மீதான அத்துமீறல் பிள்ளை வரத்தினூடாக நிகழ்கின்றது. பழைய சமுதாயத்தில் பிள்ளை வரம் அற்ற பெண்களை, பார்ப்பன முனிவர்களுடன் அனுப்பி, அவர்களுடன் படுக்க விட்டு வாரிசைப் பெற வழிகாட்டிய பார்ப்பன மதம், இன்று அதையே இந்து மதத்தின் ஊடாகச் செய்கின்றது. பக்தியின் பின்னால் ஏமாற்றி, பெண்ணின் கற்புரிமையைச் சூறையாடுவதும், மறுதளத்தில் பிள்ளை கோரிய ஆணாதிக்க நச்சரிப்பு தாங்காது பெண் சோரம் போவதையும் இப்பழமொழி காட்டுகின்றது.
''பெண்டாட்டி கால்க்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு", ''கல்யாணம் கட்டினால் கால்க்கட்டு பிள்ளை பெற்றபின் வாய்க்கட்டு" ஆணாதிக்க அமைப்பில் திருமணம் ஊடான பெண்டாட்டி பாத்திரம், பெண்ணுக்குக் கால்க்கட்டாக அமையும் சிறையையும், பெண் குழந்தையின் பசித்த வயிற்றுக்கான சமூக அடித்தளத்தையும் இப்பழமொழி பெண் மீது ஒழுக்கமாக்குகின்றது. ஒரு பெண் சமுதாயத்தில் வாழும் நிலையை இது காட்டுகின்றது. ஆணாதிக்க அமைப்பு பெண்ணை எப்படியான நிலையில் வைத்து நடத்துகிறது என்பதும், இந்தச் சமுதாயத்தில் பெண்ணின் அவலமும் நிர்வாணமாகின்றது. ஆனால், பழமொழி பெண்ணை நிர்ப்பந்தித்த ஒழுக்கமாகப் போதிக்கின்றது.
''பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்த இடம்" பெண்களைப் பண்பாட்டு வேலி ஊடாக வீட்டில் சிறை வைக்கும்போது, நெருங்கி வாழும் பெண்களிடையே, சமூகப் பங்களிப்பு சிதைகின்றபோது, பெண்களின் புகைச்சலான நச்சரித்த வாழ்க்கை பெண்களிடையே வெடித்துக் கிளம்புகின்றது. பொருளாதார ரீதியாகப் பலவீனமான பெண், பற்றாக்குறையால் பல பெண்களிடையே பகிர்கின்றபோது ஏற்படும் மனக் கசப்பான தனியுடைமை நெருக்கடிகள், பெண்களிடையே பூசலைத் தோற்றுவிக்கின்றது. ஆண், பெண் மீது செலுத்தும் அதிகாரம், அடக்குமுறை சமுதாய ரீதியாக மீற முடியாத பண்பாட்டால், அவை பெண்களுக்கிடையில் வெடிக்கின்றது. ஆணாதிக்க அமைப்பு பெண்ணைச் சிறை வைத்து அடக்கி ஒடுக்கி, கையேந்தி வாழ வைப்பதன் ஊடாக, நச்சரிப்பான இருண்ட வாழ்க்கையையும், புகைச்சல் கொண்ட பெண்களையும் உருவாக்கிய பின், அதையே பெண்ணுக்கு எதிரான பழமொழியூடாக ஆணாதிக்கம் கொச்சைப்படுத்துகின்றது.
''பெண்ணுக்குப் பொன் இட்டுப் பார். சுவருக்கு மண் இட்டுப் பார்" ஆணாதிக்க அழகியல் அமைப்புப் போகத்தை நோக்கி பெண்ணை அழகுபடுத்தி, அதில் பெண்ணை இலயித்துப் போக நிர்ப்பந்தித்தனர். பெண்ணை அழகுபடுத்தி, நிர்வாணப்படுத்தி, கவர்ச்சி காட்ட நிர்ப்பந்தித்த தனிச்சொத்துரிமை அமைப்பின் எல்லா வளர்ச்சிக் கட்டமும் விபச்சாரமாகி வரும்போது, அதைப் பெண்ணிண் சுதந்திரமாகக் காட்டி, அழகுபடுத்துவதில் தள்ளிச் சீரழித்தது. பெண் சிதைந்து நெருப்பாகி எரிகின்றபோது, அதற்கு எண்ணெய் ஊற்றுவது ஆணாதிக்க அமைப்பின் தவிர்க்க முடியாத உள்ளடக்கமாகும்;. பெண்ணின் அழகு, கவர்ச்சியில் நவீனப்பட, பெண் அதில் ஆணாதிக்க, பிரதிநிதியாக, அழகு சாதனத்தை ஆணாதிக்கச் சுதந்திர, ஜனநாயக எல்லையில் கோரத் தொடங்குகின்றாள். இது கட்டுப்படுத்த முடியாத எல்லையில், இப்பழமொழி பெண்ணைச் சுட்டி வருகின்றது. தனிச்சொத்துரிமை மூலதனம் தொடர்ச்சியாக, விரிவாக ஊக்குவிக்கும் போக்கில், மூலதனத்தை உற்பத்தி செய்யும் உழைப்பாளர்கள் முன் இது ஒரு போராட்டமாக, சொந்த மனைவிக்கு எதிரான கண்ணோட்டமாக மாறுவதை இப்பழமொழி பறைசாற்றுகின்றது.
''பேதமை யென்பது மாதர்க் கழகாம்" அறிவற்ற முட்டாள்தனம் கொண்ட, வெகுளித்தனமான மந்த குணம் கொண்ட நடத்தையே, பெண்ணின் அழகு என்பதை இப்பழமொழி கோருகின்றது. சமூக அறிவின்றி, கணவனைக் ''கண் கண்ட தெய்வமாகப் போற்றி" வாழும் சமூக அடிமைத்தனத்துடன் கூடிய, நசிந்து, இழிந்து வாழும் பேதைமை வாழ்க்கையே, பெண்ணின் அழகு என்பதை இப்பழமொழி பெண்ணுக்கு எடுத்துரைக்கின்றது.
''வேண்டாப் பெண்டாட்டியின் கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்" மனைவியால் வெறுக்கப்படும் கணவன் மீது பெண் எல்லாவற்றின் மீதும் குற்றம் காணும் சமூக நடைமுறையை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இது ஆண் - பெண் என்று பரஸ்பரம் வெறுப்புற்றோர் செய்யும் பொதுவான நடைமுறையாகும். ஆனால், அதைப் பெண் மீது மட்டும் சுட்டிக்காட்டும் பழமொழி, இந்த ஆணாதிக்க ஒருதாரக் குடும்ப அமைப்பின் வெட்டுமுகத்தைக் காட்டுகின்றது. வெறுப்பு உருவாகின்றபோது, அனைத்தையும் குற்றம் சாட்டும் நடைமுறை, தனிச்சொத்துரிமை அமைப்பின் பொதுப்பண்பாகும்;. ஆனால், அதைப் பெண் மீது மட்டும் சுமத்தும் ஆணாதிக்கச் சமூக அமைப்பு, ஆணைத் திட்டவட்டமாக இந்தப் பழமொழியூடாகப் பாதுகாக்கின்றது.