ஆணாதிக்கம் சமூகப் பொருளாதார ரீதியாகப் பலம்பெறும்போது, மொழியிலும் அதன் செல்வாக்கு ஆழமாக ஊடுருவுகின்றது. இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, பால்வேறுபாடு வேறு பிரிந்த ரீதியில் இனம் கண்டு விளக்குவதற்கு அப்பால், ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து விளக்குவதாக மொழியுள்ளது. மொழி பாலியல் ரீதியாக வரையறைக்கு உட்பட்டும், வரையறைகளை மீறியும் பால்தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழியின் பயன்பாடு, அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு தொடர்பாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.
''மொழி மனிதனின் உற்பத்தி நடவடிக்கையுடன் நேரடித் ;தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையுடன் மாத்திரமல்லாது, அவனது தொழில் சம்பந்தப்பட்ட சகல துறைகளிலுமுள்ள நடவடிக்கைகளுடன் உற்பத்தி முதல் அடித்தளம் வரை, அடித்தளம் முதல் மேற்கட்டுமானம் வரையுள்ள சகல நடவடிக்கைகளுடனும் அது நேரடித் தொடர்புடையது. இதன் காரணமாக, உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை மொழி, உடனடியாகவும், நேரடியாகவும், அடித்தளத்தில் மாற்றம் ஏற்படும் வரை காத்திராமலும் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, மனித நடவடிக்கையின் சகல அம்சங்களையும் தழுவி நிற்கும் மொழியானது மேற்கட்டுமானத்தால் சுட்டப் பெறும் நடவடிக்கைகளிலும் பார்க்க விசாலமானது. அவற்றில் இது முற்று முழுதான அமைப்பைக் கொண்டது."39
தொல்காப்பியமும் ஆணாதிக்கமும்
மொழி, ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பில் தன்னைப் பிரதிபலிக்கின்றது. தொல்காப்பியர் பால்வகைகளைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.
''பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற்பால் பிரிந்திசைக்கும்"39
- என்று பால் வகைகளை ஆணாதிக்க வரையறைக்குள் நின்று வகைப்படுத்துகின்றார். தமிழ் மொழியின் பால் வகை இயல்பாக ஆணாதிக்க எல்லைக்குள் பால் பிரிவதை இது காட்டுகின்றது. தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்கள் இருப்பது போல், சமஸ்கிருதத்தில் மூன்று பால்கள் இருக்கின்றன. புலிங்கம், ஸ்திரிலிங்கம், நபும்சகலிங்கம் அதாவது ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்று மொழி பிரிகின்றது. இந்தி மொழியில் மேசை ஆண்பாலாக இருக்க, குதிரை பெண்பாலாக இருக்கின்றது. பேனா ஆண்பாலாக இருக்க, பென்சில் பெண்பாலாக இருக்கின்றது. இது மொழியியலில் சிறந்தவை, உயர்ந்தவை எல்லாம் ஆண்பாலையும், அதைவிடக் இழிந்தவை, குறைந்தவை எல்லாம் பெண்பாலையும் குறிக்கின்றன. மொழியியலில் தமிழில் ஆணாதிக்கப் பண்பு குறுகிய கண்ணோட்டத்தில் அல்லாது விரிந்த தளத்தில் பொருட்களை அடையாளம் காண, இந்தி - சமஸ்கிருதத்தில் குறுகிய பால் வேறுபாட்டில் மொழிக் குறுகிக் காணப்படுகின்றது. இங்கு தமிழில் பொருட்கள் பால் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. இந்தியில் பொருட்கள் பால்தன்மையைப் பெறுகின்றது. பிரெஞ்சு மொழியில் சொற்கள் பால் தன்மையைக் கொண்டிருக்கின்றன. வரைமுறையற்ற பால் தன்மையைக் கொண்டிருக்கின்றது. மேசை பெண்பாலாக இருக்க, குதிரை பெண்பாலாகவும், பேனா ஆண்பாலாகவும் பென்சில் ஆண்பாலாகவும் இருக்கின்றது. இதற்கு எந்த வரைமுறையும் மொழியியல் ரீதியாகவே கிடையாது. பிரஞ்சுமொழியில் பொருட்கள் ஆண், பெண், பலர் என்று மூன்றாகவே பிரிகின்றது. இங்கு பால் அற்ற அலி உருவாகவில்லை. தமிழில் அஃறிணை, உயர்திணையில் பிரிந்த மொழி, மனிதனுக்கும் மிருகத்துக்கிடையில் வேறுபாட்டைப் பிரதிபலிக்கின்றது. இது சமுதாயம் வளர்ந்து வந்த பாதையின் முரண்பட்ட தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழி பாலியல் ரீதியாகப் பால்தன்மைக் கொண்டே பிரதிபலிக்கின்றது. மொழியின் மீதான போராட்டம் சமூகப் பொருளாதார மாற்றத்துடன் தொடர்புடைய விடயமாக உள்ளது. ஆணாதிக்கச் சமூகம் ஒழியும் போது, பால் ரீதியான ஆண் - பெண் மொழிப்பிளவும் முடிவுக்கு வரும். இதற்கு முன் மொழியில் பொருளின் தன்மை மாறாமல் நடத்தும் மாற்றம் பிறிதோர் சொல்லால் பிரதியிடப்பட்டு, நீண்டகாலம் மொழிக்கு எதிரான சமுதாயப் போராட்டத்தை முடக்குவதாகவே இருக்கின்றது.
அ. திருக்குறளும் ஆணாதிக்கமும்
நாம் இனி இலக்கியத்தில் ஆணாதிக்கத்தை ஆராய்வோம். தமிழ், மொழி என்ற ரீதியிலும், இனம் என்ற ரீதியிலும், திருவள்ளுவரின் திருக்குறளை முன்னிலைப்படுத்துவது அதிகரிக்கின்றது. திருக்குறள் தனிச் சொத்துரிமையைப் பாதுகாத்தபடி ஆணாதிக்கத்தை ஒழுங்கமைத்ததுடன், அக்காலக் கட்டத்தின் சமுதாய ஒழுக்கத்தையும் சட்டத்திட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு தத்துவவியல் என்ற வகையிலும், இன்று காலம் கடந்த நிலையிலும் மாற்றாக முன் நிறுத்தப்படுவதாலும், இதன் பல பண்புகள் தொடர்வதால் பெண்ணியல் கண்ணோட்டத்தில் விமர்சனத்துக்குள்ளாவது அவசியம்.
திருக்குறள் அதிகாரம் 6 இல், பெண்களுக்கு மட்டும் விதிந்துரைக்கும் சட்டத் திட்ட ஒழுக்கக் கோவைகளைப் பார்ப்போம்.
''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை"40
கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் மழை பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம். இது ஆணாதிக்கத்தின் வெற்றிகளைப் பறைசாற்றுகின்றது. பெண்ணின் ஒழுக்கத்தைப் புனிதமாக்குகின்ற போதே அவளுடைய வார்த்தைகளின் மகிமை கற்பின் பின்னால் ஏற்கப்படுகின்றது. ஆனால், எதார்த்தத்தில் மழை பெய் எனச் சொன்னால் மழை பெய்திடுவதில்லை அல்லவா. இங்கு அவள் கற்பற்றவளாக மறைமுகமாக விளக்கப்படுகின்றது. பெண்ணின் சொற்களுக்கு எதார்த்தத்தில் சாத்தியமற்றதாகின்ற (சொன்னால் மழை பெய்வதில்லை) போது, கற்பிழந்தவளாகக் காட்டி அதனூடாக அவளின் வார்த்தைகளை இழிவுபடுத்தப்படுவது நடைமுறையாகின்றது. இதில் இருந்து தான் பெண் ஒட்டு மொத்தமாகக் கேவலப்படுத்தப்படுகின்றாள்.
இதில் இருந்து வளர்ச்சி பெற்ற இந்துப் பண்பாட்டில் சொந்தத் தந்தை இறந்தபின் வாரிசுரிமையான மகன் செய்யும் கிரியையில் பார்ப்பான் (ஐயர்) கூறும் மந்திரத்தில், சொந்தத் தாயை விபச்சாரியாக்கிக் கேவலமாக்குவது நிகழ்கின்றது. மக்களுக்குப் புரியாத தேவ பாஷையான அந்த சமஸ்கிருத மந்திரத்தைப் பார்ப்போம். ''யன்மே மாதா பிரலுவோப சரதி அனனு விருதா, தன்மே ரேதவற பிதா விரங்க்தா ஆபரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாவறா. ரங்கராஜ அஸ்மத பிதரே இதம் நமம, கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண."41 என்ற தேவ பாஷையின் தமிழ் ஆக்கம் ''என் தாய் ஒழுக்கங் கெட்டவள். அந்தரேதலை (வீரியத்தை) உமதாக நினைத்துக் கொண்டு விபச்சாரத்தில் பிறந்தவனாகிய நான் கொடுக்கிற இந்தப் பிண்டத்தைத் தன் மகனால் கொடுக்கப்படுகிறது என்று நினைத்து பெற்றுக் கொள்வாயாக."30 என்று சொந்தத் தாயையே இழிவுக்குள்ளாக்கும் தந்தை - மகன் உறவுமுறை பெண்ணை வக்கிரமாகச் சித்தரிக்கின்றது. பெண் பற்றிய வருணணை அவளை விபச்சாரியாகக் காட்டுகின்றபோதும், புணருகின்றபோதும், அப்பெண் தனது கற்புரிமைக்காகப் போராட வேண்டிய நிலையில் உள்ளாள். ஆணாதிக்கம் பெண்ணின் கற்புரிமையை மறுத்து, வருணிக்கும் கற்புக்குப் புறம்பாக, அப்பெண் தனது சொந்த நடத்தையைத் தீர்மானிக்கும் உரிமையை ஆணாதிக்கத்துக்கு எதிராக நிலை நாட்டிய போராட்டம் பெண்ணியத்தின் அங்கமாகின்றது. பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கச் சிந்தனை, பண்பாடு, மொழி அனைத்தும் கேவலமான மனித நடத்தைகளால் வரையறுக்கப்படுகின்றன. சமஸ்கிருத திருமண தேவ பாஷையான மந்திரத்தில் கூட ஆணின் வக்கிரப் புத்தியால் பெண் புணரப்படுகின்ற காட்சி சர்வ சாதாரணமாக எல்லா திருமணத்திலும் ஓதப்படுகின்றது.
''ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அக நிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா"41 என்ற தேவ பாஷையின் தமிழ் விளக்கம் ''ஸோமன் முதலில் இந்த மணப் பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி. உன்னுடைய நான்காவது கணவன்தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்"41 என்று பெண்ணை விபச்சாரியாகப் பட்டம் (பெண்ணின் கற்புரிமையைச் சூறையாடியபடிதான்) சூட்டியே மந்திரத்தின் வடிவங்கள் உருவாகின்றன. தொடர்ந்து இந்த தேவ பாஷை மந்திரத்தைப் பார்ப்போம். ''உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மவேறத்வா, அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸ்ஞ்ஜாயாம் கத்யா ஸ்குஜ!41 என்றதன் தமிழ் விளக்கம் ''விசுவாவசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக உன்னை வணங்கி வேண்டுகிறோம்.
முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக"41 என்று கூறும்போதே பெண் தொடர்ச்சியாகப் புணர்ந்தபடி வாழ்வதாக இழிவுபடுத்தப்படுகின்றாள். முதல் வயதிலுள்ள வேறு கன்னியை அடையக் கோரும்போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்றது. இதனால்தான் பல நாடுகளில் பிறந்தவுடன் பெண்ணின் பெண் உறுப்பு சிதைக்கப்படுகின்றதோ? இதனால்தான் சில ஆப்பிரிக்க நாடுகளில் பெண் உறுப்பைத் திருமணம் வரை தைத்து விடுகின்றனரோ? இந்தத் திருமண மந்திரத்தில் தொடரும் வரிகள் அருவருப்பான தொடர்ச்சியாக நீடித்து செல்லுகின்றன. பெண்ணின் பிறப்பு முதலே பெண் உறுப்பை மையமாக வைத்து மந்திர, தந்திர, சடங்குகள், பண்பாடுகள் எல்லாம் புணர்ச்சியை உள்ளடக்கி அடிமைப்படுத்துகின்றன. இழிந்த பிறவியாக, ஆணுக்குக் கீழ்ப்பட்டுச் சேவை செய்ய நிர்ப்பந்திக்கின்றன. இதை மீறுவது கற்பிற்குக் களங்கமாக வருணித்து, பெண்ணின் கற்புரிமை சூறையாடப்படுகின்றது. இதைத்தான் திருவள்ளுவர் கோருகின்றார். அதை மேலும் பார்ப்போம்.
''சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை"40
ஆணாதிக்க அடக்குமுறையை, ஒழுக்கத்தை, பண்பாட்டை வன்முறை மூலம் திணிக்காது பெண்களாலேயே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆணாதிக்கத்தை ஜனநாயக மயப்படுத்துவதைக் கோரும் பண்பாடுகள் தான் இவை. இதுதான் பெண்ணின் கற்புரிமைக்குப் பின்னால் ஆணாதிக்கக் கற்பை விபச்சாரம் செய்யக் கோரும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமாகின்றது. இன்று திருக்குறளை முன்நிறுத்தி நடத்தும் கூத்தும், சிலை வைப்பும், புத்தாண்டு வருடக் கணக்குகளின் பின் ஆணாதிக்கம் கோலோச்சுகின்றது என்பது தெளிவானது. தொடர்ந்து பார்ப்போம்.
''மனைத்தக்க மாண்புடையள் ஆகிதற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"40
கணவனின் வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்து, வாழ்க்கை நடத்துபவள் உண்மையான மனைவியாவாள். பெண் ஆணின் பொருளாதார அடிமை என்பதை இது காட்டுகின்றது. அதாவது ஆண் இந்தச் சுரண்டல் அமைப்பில் சுரண்டப்பட்டு நலிந்து கிடந்தாலும், இதை எதிர்த்து பெண் போராடக் கூடாது என்பதைக் கோருகின்றது. குடும்ப வறுமையை முன்வைத்து ஆணுடன் நடக்கும் போராட்டமும் சரி, சமுதாயத்துக்கு எதிரான பெண்ணின் போராட்டமும் சரி,; ஆணைச் சமுதாயத்துக்கு எதிராகப் போராட வைக்கும். அதுபோல் பெண் ஊதாரித்தனமாகச் செலவு செய்கின்றபோதும் ஆண் இந்த அமைப்பின் ஊதாரித்தனத்தை எதிர்த்து போராடக் கூடாது என்பதால், பெண்ணை வருமானத்துக்கு உட்பட்டு அடங்கி செலவு செய்யக் கோருகின்றது. ஒரு பெண் ஊதாரியாக இருந்தாலும் சரி, வறுமையில் வதங்கினாலும் சரி, இந்தச் சமுதாயமே காரணமாகும். இதே காரணம் ஆணுக்கும் பொருந்தும். ஆனால் பெண்ணை மட்டும் கோருவது ஏன்? உழைப்பின் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பதால்தான். தொடர்ந்து பார்ப்போம்.
''மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்."40
எவ்வளவு செல்வம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்குரிய பண்பு இல்லாதவள் அவனின் வாழ்க்கையைப் பயனற்றவள் ஆக்குகின்றாள்.
''இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை"40
நற்குணம் பொருந்திய மனைவியமையாவிட்டால் வாழ்க்கை சூன்யமாகிவிடும். இந்தப் பண்பு, மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதாக வரையறுக்கின்றது. ஒவ்வொரு குடும்பமும் இந்த அமைப்பின் அரசு வடிவமாகின்றது. ஒவ்வொரு ஆணையும் திருப்தி செய்யும் நடைமுறை மட்டும் போதும், இந்த அமைப்பைக் களங்கமின்றி பாதுகாத்துவிடமுடியும். பெண் பூர்த்தி செய்யாத நிலையில் ஆண் இந்தச் சமுதாயத்தில் பயனற்ற ஒரு உறுப்பு மட்டுமின்றி, இந்த அமைப்பின் தகர்வை வெளிக்காட்டுவதாகின்றது. ஆணின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயகத்தில், ஆண் இந்த அமைப்பின் சட்டத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளும் வடிவில், பெண் - ஆணை மதிக்கும் பண்பாட்டில் இந்த அமைப்பு படிமுறைவடிவில் கட்டுப்படுத்தப்படுகின்றது. மனிதனை மனிதன் அடக்கும் வடிவம் சிதைவின்றி பாதுகாக்க கோருவதே இதன் முழுவிளக்கமாகும். தொடர்ந்து பார்ப்போம்.
''மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு"40
கற்புடைய மனைவி நல்ல புதல்வர்களைப் பெறுவது பெண்ணின் அணிகலன் ஆகும்.
''பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்"40
கற்புடைய மனைவி கிடைப்பின் அதைவிட செல்வம் கிடையாது. அதாவது ஆணின் இரத்த வாரிசுரிமையை உறுதி செய்யும் உரிமையும், தனிச் சொத்துரிமை இரத்தவழியில் கடந்து செல்ல உதவுவதாக இந்த ஆணாதிக்கக் கற்பு உள்ளது. பெண்ணின் கற்புரிமை பறிக்கப்பட்டு, ஆணின் இரத்தக் கற்பு வாரிசுரிமை பாதுகாக்கக் கோரும் ஒழுக்கம் ஆணுக்கு அவசியமற்றதாகின்றது. சொந்த இரத்த வாரிசுரிமை குழந்தையை உறுதி செய்ய, சொந்த மனைவியிடம் முன்வைக்கும் ஆணாதிக்கக் கற்பு மட்டுமே அவசியமாகின்றபோது திருவள்ளுவர் என்ன விதிவிலக்கா?
''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தன் சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"40
தனது கற்பையும், கணவன் சேர்த்த புகழையும் அறவழியில் காப்பவள் உண்மையான பெண்ணாவாள். சமுதாய ரீதியாக ஆணாதிக்கக் கற்பை மீறி சொந்தக் கற்புரிமையை நிலைநாட்டும்போது சமுதாயத்தின் கூரிய தாக்குதலை எதிர்கொள்ள வைக்கின்றது. ஆண் தான் விதித்த ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை மீறி பெண் சொந்தக் கற்புரிமையைக் கையாளும்போது ஆணின் அதிகாரம் காக்கின்றது. இது ஆணுக்கு அவமானமாக, சமுதாயத்தின் கேவலமான பக்கமாக ஆணாதிக்க அமைப்பு கருதுகின்றது. பெண் தனது சொந்தக் கற்புரிமையைக் கையாளும்போது (இங்கு வேறு ஆணுடன் வாழ்ந்தாலும் அல்லது உறவு கொண்டாலும் அல்லது தனித்து வாழ்ந்தாலும்) அவளை விபச்சாரி என்று
பட்டம் சூட்டுகின்றது. இதைத்தான் திருவள்ளுவர் பெண்ணுக்குக் கொடுக்கின்றார். தொடர்ந்து திருவள்ளுவரிடம் ஒழுக்கம் பற்றிக் கேள்வி கேட்டுப் பார்ப்போம்.
''பெற்றான் பெறின்பெறுவர் பெண்டீர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகம்."40
பண்பும் கற்பும் உடைய பெண் கணவனுக்குச் சேவை செய்யின் மறுமையில் மேலுலகம் செல்வாள் என்கிறது பாடல் வரிகள். பெண் மண்ணுலகில் அனுபவிக்கும் துன்பத்துக்கு மேலுலகம் சுகத்தைத் தரும் என்பது, ஆணாதிக்கத்தின் இன்பத்தை நிஜவுலகில் பாதுகாக்க கோருகின்றது. ஆணுக்குப் பெண் செய்யும் சேவையைத் திருவள்ளுவர், பண்பின் இருப்பிடமாகவும், கற்பின் சொர்க்கமாகவும் கூறுவதன் மூலம், பெண் அடிமைத்தனத்தை நிலைநிறுத்தப் போராடுகின்றார். ஆணுக்குப் பெண் சேவை செய்யப் பிறந்த ஒரு அடிமைதான் என்பதைத் தாண்டி திருவள்ளுவர் கருத்துக் கூறிவிடவில்லை.
''புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை"40
கற்பில்லாத தலைவியைப் பெற்றவன் செருக்குடன் வீரத்தைப் பகைவருக்குக் காட்டமுடியாது. ஆணின் அதிகாரம், செல்வம் பெண்ணை அடக்கி ஆள்வதில் மையமிடுவதை இக்குறள் காட்டுகின்றது, போற்றுகின்றது. ஆண்மை பெண்மையை எவ்வளவு சிறுமைப்படுத்துகின்றதோ, அந்தளவுக்கு அந்தஸ்தும், அதிகாரமும் கிடைக்கின்றது. இன்றைய உலகில் அந்தஸ்துடன் கூடிய அதிகாரம் எல்லாம், ஆணாதிக்கத்தின் திமிர்த்தனத்தின் வெளிப்பாடுகள் என்பதை இது காட்டுகின்றது. பெண்ணின் ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தில், சொந்தக் கற்புரிமையைக் கையாளும் சுதந்திரத்தில், ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆணாதிக்க ஆண்மை இழந்து போகின்ற போது சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு ஜடமாகக் கூனிக்குறுகுகின்ற அளவுக்கு, பெண்ணடிமைத்ததனம் கொட்டமடிக்கின்றது. இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளின் ஊடாகக் கடைப்பிடிக்கும்படி கூறியுள்ளார். ஆணாதிக்க ஒழுக்கத்தைக் கட்டி காத்து பெண்ணை இழிவுபடுத்த வழிகாட்டி நின்றார், நிற்கின்றார். மனுவுக்கு எந்த விதத்திலும் குறைபாடு இல்லாத வகையில் திருவள்ளுவர் ஆணாதிக்கவாதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அதை மேலும் அதிகாரம் 91 இல் பார்ப்போம்.
''மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது"40
மனைவி சொல் கேட்பவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாததுடன், பயன்களையும் அடையமாட்டான்.
''பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக தரும்"40
இன்பத்திற்காகக் கடமை தவறி மனைவி சொல் கேட்பவன் செல்வம், ஆண்கள் எல்லோருக்கும் வெட்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
''இல்லாள்கட் டாழநஇத இயல்பின்மை எஞ்ஞானறும்
நல்லாருள் நானும் தரும்"40
ஆண் பெருமைக்குப் புறம்பாக மனைவிக்குப் பயந்து நடப்பவன் ஆண்கள் முன் தலைகுனிந்து நடக்க வேண்டும்.
''மனையானை யஞ்சு மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று"40
மனைவி சொல் கேட்பவன் அறம் செய்ய முடியாது, மறுமையில் பயன் பெறமாட்டான். அத்துடன் பெரியோர் மதிக்கமாட்டார்.
''இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றம்
நல்லார்க்கு நல்ல செயல்"40
மனைவி சொல் கேட்பவன் உறவினருக்கும், பெரியாருக்கும் உதவப் பயப்படுவான்.
''இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்"40
அழகிய தோளுடைய மனைவியிடம் அஞ்சுபவன் தேவர்போல் இனிய வாழ்க்கை நடத்தினாலும் மதிப்பைப் பெற மாட்டான்.
''பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடையப்
பெண்ணே பெருமை யுடைத்து"40
மனைவி சொல் கேட்டு செயல்படுபவன் ஆண்மையைவிட, நாணமுடைய பெண்ணின் பெண்மையே பெருமை பெற்றது.
''நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதான்
பெட்டாங் கொழுகு பார்"40
மனைவி சொல் கேட்பவன் நண்பர்களின் குறையைப் போக்கமுடியாது. தர்ம காரியம் செய்யமுடியாது.
''அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்"40
மனைவியின் அடிமையானவன் தர்ம காரியத்துக்குப் பொருளீட்டவோ, மற்றைய காரியங்கள் செய்யவோ முடியாது.
''எண் சேர்த்த நெஞ்சத் திடனுடையார்க் கொஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதமை யில்"40
நல்லெண்ணம் பொருந்திய அதனால் உயர் நிலை அடைந்தவர்களுக்கு மனைவியின் அடிமையாகும் அறிவின்மை இருக்காது.
- என்று திருவள்ளுவர் பெண்ணை இழிவுபடுத்தி, ஆணாதிக்கத்தை மெச்சியபோதே மனுதர்மம் மீள ஒருமுறை அரங்கேறுகின்றது. பார்ப்பனியக் கூத்துகள் ஒருபுறம் இன்று அரங்கேற, திருவள்ளுவர் முதல் கொண்டு அரங்கேறும் தமிழ்ப் பண்பாடு என்ற கூத்தின் பின் இவை பெண்ணின் இழிவாடலில் ஒன்றுபடுவதையே குறள் காட்டுகின்றது. பெண்ணின் சொல் கேட்பது ஆண்களின் ஆண்மைக்கு இழுக்கு என்பதும், அறிவீனத்தின் பண்பு என்பதும் கொடூரமானது, கேவலமானது. மற்றவனுக்குக் கொடுப்பதில் பெண் தடையான இழிபிறவி என்பது, ஆணாதிக்கத்தின் பொதுப்பண்பைத் தலைமாற்றி ஒட்ட வைப்பதாகும். ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமையூடாகச் சொத்துரிமையை மற்றவனிடமிருந்து பறித்து, கொடுக்காமையைக் கைக்கொண்ட நடைமுறை வாழ்க்கையை, பெண்ணுக்குத் திரித்து
சூட்டுவது திருக்குறளின் தனிச்சொத்துரிமையுடன் கூடிய ஆணாதிக்க வக்கிரமாகும்.
மக்களின் சொத்துரிமையைத் தனிச்சொத்துரிமையாகக் கைப்பற்றி, ஆணாதிக்கமாக வளர்ச்சிபெற்ற நிலையில், ஆண்வழிக் குடும்பம் பெண்ணின் சொத்துரிமையைக் கைப்பற்றி அடிமையாக்கியது. அதேநேரம், பெண்ணிடம் கைப்பற்றிய தனிச்சொத்தைப் பெண்வழி சமுதாயத்துக்குப் புறம்பாக, ஆண்வழி சமுதாய உறவினருக்கிடையில் அனுபவித்தபோது, பெண்ணின் எதிர்ப்புப் போராட்டம் இயல்பாக இருந்தது. இதை எதிர்த்து ஆண்வழிச் சமூகத்தை உருவாக்கப் போரிட்ட திருவள்ளுவருக்கு, பெண்ணினுடைய பெண் வழிப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில், பெண் எதிர்ப்பை வக்கரித்துக் காட்டும் ஆணாதிக்கக் குறள்தான் பெண் விரோதத் தன்மையில் வெளிப்படுகின்றது.
பெண் சொல் கேட்டு நடப்பவனை இழிவுபடுத்தவும், பெண்ணை விட அவ்வாணை இழிநிலைக்குத் தாழ்த்திவிடவும் திருவள்ளுவர் தவறவில்லை. ஆண், பெண் புத்தி கேட்டு நடந்தால், அவனின் ஆண்மையை ஆணுக்கு அடிமையான பெண்ணின் பெண்மையை விடக் கீழானது என்று திருவள்ளுவர் குறள் எழுதி, தனது ஆணாதிக்கத் திமிரைப் பறைசாற்றுகின்றார். இன்று சமுதாயத்தில் ஆண்களுக்கிடையில் நடக்கும் மோதலில், எதிரியைப் பெண் குறித்த உறுப்பினூடாகக் கீழ் இறக்கி திட்;டுவது அல்லது அது போன்ற சொற்களால் அவமானப்படுத்துவது இயல்பாக உள்ளது. இங்கு ஆணாதிக்கக் கொப்பளிப்புகள் பெண் அடிமைத்தனத்தின் மீதான ஆணாதிக்கத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்றன.
பெண்ணின் பாலியல் இன்பத்தைப்பெற அவள் சொல் கேட்பவன் என்றதன் மூலம், பெண்ணைப் பாலியல் இயந்திரமாகப் பயன்படுத்தக் கோருகின்றார், ~மாமேதை| திருவள்ளுவர். பெண்ணுடனான உறவை வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கருதும் திருவள்ளுவர், அதைத் தாண்டிய மனித உறவுகளைக் கொச்சைப்படுத்துகின்றார். பாலியல் இன்பத்தை நுகர்வுச் சந்தையில் பெறுவது போல் பெற்று, உறவைத் துண்டிக்கும் இழிநிலைக்குத் திருவள்ளுவர் வழிகாட்டுகின்றார். பெண், ஆணின் ஒரு பாலியல் அடிமையாக இன்பத்தைத் தருவதுடன், ஆணுக்குச் சேவை செய்யும் ஒரு வளர்ப்பு நாய்தான் என்பதைத் தாண்டி குறளின் ஒழுக்கம் செல்லவில்லை.
மனைவி சொல் கேட்பவன் அல்லது பெண்ணுடன் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்பவன் மோட்சத்தை அடையமாட்டான் என்ற எச்சரிக்கை, மற்றும் பெரியோர் மதிப்பைப் பெற மாட்டான் என்பதன் ஊடாக, மனிதத் தன்மையுள்ள ஆண் மிரட்டப்படுகின்றான். இந்தப் பெரியோர் என்பது யார்? ஆணாதிக்கச் சமூகத் தகுதி பெற்ற தனிச் சொத்துரிமையின் கொள்ளைக்காரர்கள் ஆவர். பெரியவர்கள் என்பது ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையைச் சமுதாயத்திடமிருந்து சூறையாடிப் பெற்ற சமுதாயத்தின் இழிந்த பிறவிகள் ஆவர். மற்றவனை அடக்கி அதில் தம்மைப் பெரியவர்கள் ஆக்கிக் கொண்டவர்கள். மற்றவனை அடக்கியபோது கிடைத்த அறிவு, செல்வம், அதிகாரம் போன்றவற்றால் பெரியவர்கள் ஆனவர்கள். இவர்கள் சிந்தித்தப்படி மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தவன், உயர்ந்த சமூகத் தகுதியைப் பெற்றவர்கள் ஆவர். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை அல்லது பெண்ணின் வழி காட்டுதலில் வாழ்பவனின் வாழ்க்கையை, திருவள்ளுவர் திட்டவட்டமாக எதிர்த்துக் குறள் மூலம் ஆணாதிக்க அதிகார ஒழுக்கத்தைக் கோரினார். இதன் மூலம் பெண்ணை நாயினும் கீழான பிறவியாக இழிவுபடுத்தினர். ஆணாதிக்கக் குறள் என்பது ஆணாதிக்கச் சமுதாயத்துக்கு மட்டும் உதவக் கூடிய எல்லைக்குட்பட்டதுதான். ஆணாதிக்கத்துக்கும், தனிச் சொத்துரிமைக்கு எதிரான போராட்டத்தில் குறளும், அதன் ஒழுக்க விதிகளும், நொறுக்கப்படும்;. இன்று குறளை முன்னிலைப்படுத்தி, திருவள்ளுவருக்கு வைக்கும் சிலைகள், தமிழன் பெயரில் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையை, அதன் ஒழுக்கத்தை மீளவும் உறுதியான கோட்பாட்டின் ஊடாக நிலைநிறுத்துவதாகும். இதை மறுத்து, இதைத் தகர்க்கும் போராட்டத்தில், தனிச் சொத்துரிமைக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றி நிற்கும் பெண்ணியப் போராட்டத்தில், திருவள்ளுவரின் நிர்வாணமான ஆணாதிக்கத்தின் சில பக்கங்களை வர்க்க அரசியல்மயமாக்கும் முயற்சியின் சிறுபகுதியே இவையாகும்
ஆ. சங்க இலக்கியத்தில் ஆணாதிக்கம்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டை உள்ளடக்கிய காலமே சங்க இலக்கியக் காலமாகும். கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியமும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் எதார்த்த நிலைமைகள் ஊடாகப் பல தகவல்களைத் தந்துள்ளன. இந்த எதார்த்தம் கூட மேல்மட்டச் சமூகப் பிரிவுகளின் நிலையை மட்டுமே பிரதிபலிக்கின்றது. இதை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொண்டு, சமூக வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியம். பொருளாதார ரீதியாக நசிவுற்ற பிரிவுகளின் வாழ்க்கையில் ஆணாதிக்கக் கூறுகள் பலவீனமாகவும், பெண்வழிச் சமுதாயத் தொடர்ச்சிகள் ஆழமாக வேரூன்றி இருந்ததையும் கவனத்தில் கொள்வது அவசியம். சமுதாயத்தில் முரண்பட்ட பிரிவுகளிடையே உள்ள ஆழமான வேறுபாட்டின் மீது, ஆணாதிக்கக் கூறுகள் கூட வேறுபட்ட அளவில் இருப்பது எதார்த்தமாகும். சமூக முரண்பாட்டில் அதிகாரத்திலுள்ள பலமான பிரிவுகளின்; ஆணாதிக்கம் பண்பியல் ரீதியாக வளர்ச்சியுற்று இருக்கும் அதேநேரம், மற்றைய தளத்தில் நலிவுற்றும் காணப்படும்;. தொடர்ச்சியான இக்கட்டுரையின் பலபகுதிகளை இலகுவாக எடுத்த எழுத, தொகுக்கப்பட்ட பாடல் வரிகளை ~பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் - பிரேமா அருணாசலம்| என்ற நூல் துணையாக அமைகின்றது. இதைவிட பல நூல்களில் இருந்து இந்தப் பகுதியை ஆராய்வோம். அக்காலத்தில் காதல் எல்லை கடந்ததாக இருந்தது.
''எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்."42
இந்தத் தொல்காப்பியப் பாடல் சாதிகடந்த, நில எல்லை கடந்த காதலைக் குறித்து நிற்கின்றது. அரசு அமைப்புகளில், தொழில்கள், உழைப்புகள் எல்லை கடந்து விரிந்தபோது அங்கு காதலுக்கும், திருமணத்துக்கும் கட்டுபாடு இருப்பதில்லை. அங்கு ஆணும் பெண்ணும் விரும்புகின்ற வரையறை, குடும்ப இணைவைக் கோரியது. அறிமுகமில்லாத நிலையிலும் காதல் அவர்களை இணைக்கத் தயங்கவில்லை.
அன்று கற்பு திருமண விசுவாசத்தின் மட்டம் குறித்து, திருமணத்தின் பின்னான ஒழுக்கம் கோரப்பட்டது.
''கற்பெ ப்படுவது கரணமொடு புணரக்
கொள்ளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"43
அன்று கன்னிப் பெண்களிடயே கற்பு எதிர்பார்க்கப்படவில்லை. இன்று இந்தியாவில் சில பழங்குடி இனங்களிடையே கன்னியில் கற்புக் கோரப்படுவதில்லை. அவர்கள் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். (பார்க்க - இயல்பான புணர்ச்சி தெரிவுகள்) அன்று திருமணத்தின் பின் கணவனுக்கு விசுவாசமாக இருப்பதை ஆணாதிக்க ''கற்பு" கோரியது. ஆனால், பெண்ணின் கற்புரிமை அனைத்துப் பெண்களின் உரிமையாக இருந்தது.
பெண், ஆணின் அடிமையாக இருப்பது நிபந்தனையாக இருந்தது. மொழியின் இலக்கண வழியில் பெண்ணின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் ஏற்படுத்தினார். இந்த ஆணாதிக்க இலக்கணங்கள் பெண்ணின் வாழ்வு மீதான, தமிழச்சி மீதான சிறையாக மாறியது. அதைப் பார்ப்போம்.
''அச்சமும் நாணும் மடனும் முந்துறதல்
நிச்சமும் பெண்பாற் குரிய"44 (தொல்- பொ - 96)
''உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செய்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்று"44 (தொல்- பொ - 111)
''நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியல் பொறையும் நிறையும் ...
... கிழவோள் மாண்புகள்"44 (தொல்- பொ - 150)
பார்ப்பனியம் ஆழமாகத் தமிழ்நாட்டில் வேரூன்றாத காலத்துப் பாடல்கள் பெண்ணின் கற்பு, ஒழுக்கம், அறியாமையுடன் வாழ்வதே பெண்ணின் நற்குணமாகப் பிரகடனம் செய்த அதேநேரம்; பெண்ணின் நற்குணமாக அச்சம், நாணம், மடமையை அணிகலன்களாக்கினர். பெண் வீட்டு அடிமையாக ஆணுக்குக் கீழ்பட்டு வாழும் வாழ்வைத் தனிச் சொத்துரிமை வடிவில் உருவாக்கினர். இது உலகளவிலான பொதுப்பண்பாக இருந்ததால், இருப்பதால் எங்கும் பெண்ணின் நிலையை ஒரேமாதிரியாகவே ஆண்கள் மதிப்பிட்டனர். பெண் கடமையை உலகளவில் ஒரே சீராக வரையறுத்த ஆண்கள், சூழல் சார்ந்த உற்பத்தி வேறுபாடுகளில்தான் சில விதிவிலக்குகள் காணப்பட்டன. தமிழ் நாட்டில் பார்ப்பனியம் ஊடுருவிய போது ஆணாதிக்கம் இந்துமயமானது. இப்படி பெண்களை அடிமைப்படுத்தி பாடிய தொல்காப்பியர், ஆண்கள் விபச்சாரிகளை அணுகுவதை அங்கீகரிக்கின்றார்.
''காமக்கிழத்தி மனேயோள் என்றிவர்" (தொல். பொ - 144)
''மாயப் பரத்தை உள்ளிய வழியும்" (தொல். பொ - 145)
- என்று பாடும் தொல்காப்பியர், விபச்சாரம் சமூக அங்கீகாரமாக இருப்பதை மறுக்கவில்லை. பெண்ணின் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் பாடல்கள், ஆணின் விபச்சாரத்தைப் பெண்கள் ஏற்றுப்போகக் கோருகின்றன. இதை அவர் நூற்.171 இல், விபச்சாரியிடம் தாய் போல் பேசி அவளைத் தழுவி வாழவேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை கூறுகின்றார். இதை நியாயப்படுத்த ஆண் துன்பப்படவும், சோர்வு அடையவும் கூடாத வகையில் பெண் இணங்கிப் போகவேண்டும் என்று கூறுகின்றார். அதாவது ஆணின் விபச்சாரத்துக்குப் பாய்விரித்து ஊக்கம் கொடுத்து, அனுசரித்து நிற்க வேண்டும் என்பதைப் பெண்ணுக்குரிய நல்லொழுக்கமாகக் கூறுகின்றார்.
''அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
மகன்தா யுயர்புந் தன்னுயர் பாகுஞ்
செல்வன் பணிமொழி இயல்பாகலானஸ"44
(தொல். பொ.கற்பியல் - 33)
ஆணுக்கு அடங்கி, பாலியல் இயந்திரமாகிப் போகும் பெண்களைப் பரஸ்பரம் மதித்து உயர்வாகப் போற்றி வாழவேண்டும் என்று கோருகின்றார். விபச்சாரியைத் தொல்காப்பியர் ~மகன் - தாய்| என்று கூறுவதன் மூலம், வாரிசு வழியாக ஆணின் சமூக அடையாளத்தை உயர்த்திக் காட்டுகின்றார். ஆணைவிட உயர்ந்த அறிவும் தகுதியும் கொண்டிருந்தாலும், பெண் அடங்கி நடப்பதே பெண்மை என்கின்றார்.
''தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே"44
(தொல். பொ.அடி - 178)
ஆண் தன்னைப் புகழவும், பெருமை பேசவும் உரிமையுண்டு என்று கூறும் தொல்காப்பியர், பெண்கள் அப்படிப் பேசுவது பெண்மையின் சிறுமையென்கின்றார். பெண்கள் அடக்க ஒடுக்கமாக, நசிந்து வாழ்வதையே உயரிய பண்பாக முன்வைக்கின்றார். ஒரு பெண் தனது சொந்தக் காதல் வேட்கையைக் கூறுவது அழகு அல்ல என்று சட்டம் போடுகின்றார்.
''தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை"44
(தொல். பொ. அ - 116)
கணவனிடம் கூட பெண் தனது இயற்கையான பாலியல் தேவையைக் கோருவது, கூறுவது பெண்ணின் அடக்க ஒடுக்கமான நாணத்துக்குப் பங்கமானது என்பதை ஒழுக்கப் பண்பியலாக்குகின்றார். பெண்கள் வீட்டில் வாழ வேண்டியதன் தேவையையும், ஆண்களுக்குப் பணிவிடை செய்வதையும் பெண்ணின் பணியாக்குகின்றார்.
''முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை"44 (தொல். பொ - 37)
''எண்ணருங் பாசறைப் பெண்ணோடும் புணரார்"44
(தொல். பொ - 173)
பெண்கள் போருக்குச் செல்வது, வெளியிடங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டதை இந்த வரிகள் காட்டுகின்றது. பெண்ணைச் சமுதாய உழைப்பில் இருந்து அன்னியப்படுத்தியதன் மூலம், அவளின் கடமைகள் எல்லைப்படுத்தப்படுகின்றன. மூலதனத்தைத் திரட்டித் தரும் வழியில் ஆண்களின் கடமை விரிவாகின்றது. வெளியிடம் செல்வது முதல் பொருளுக்கான யுத்தம் செய்வது வரை ஆணின் பணியாக வரையறுக்கப்பட்டதன் மூலம், ஆணாதிக்கத் தனியுடைமை அமைப்பிலான சுதந்திரம், ஜனநாயகம் பெண்ணுக்கு மறுக்கப்பட்டதன் மூலம், பெண் மேலும் பலவீனமான பயந்த அடிமையாக்கி இழிவாக்கப்பட்டாள். மாறாகப் பெண்ணின் கடமை வரையறுக்கப்பட்டது.
''விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்"44
(தொல். பொ. அ - 150)
பெண் வருவோரை வரவேற்று உபசரித்து விருந்து கொடுத்து, சுற்றத்தாரை நயமாகப் பராமரிப்பதையே தமிழரின் பண்பாடு என்பது பெண்ணுக்கு இட்ட விலங்காகும். இந்த ஆணாதிக்கத் தமிழ்ப் பண்பாட்டின் பின்னால் பார்ப்பனியம் கைகோர்த்து ஒன்று கலந்தபோது அது இந்து ஆணாதிக்கமாக வளர்ச்சிபெற்றது.
சங்க இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. காதல் தொடர்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் என்ன கருத்தை முன்வைக்கின்றது எனப்பார்ப்போம்.
''யாவும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தாவே"42
இயற்கையான புணர்ச்சியற்ற நிலையில் பாடுவதாக அமைகின்றது. அதில் காதல் புணர்ச்சிக்கு எந்த வரையறையும் அவசியமற்றது என்பதையும், அன்பான நெஞ்சங்களின் இணைப்பே போதும் என்றும் கூறிநிற்கின்றது. இதுபோன்று நற்றிணைப்பாட்டு காதலைத் தொழில் சார்ந்து விரிந்த தளத்தில் நடந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
''இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீலநிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவுநாறுதும் செலறின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரின் செம்மலு முடைத்தே"42
- என்ற பாடல் தொழில் சார்ந்த நிலையில் எல்லைகடந்த, சாதிகடந்த திருமணம் நடப்பதைக் காட்டுகின்றது. அன்று பார்ப்பனியம் ஆழமாக ஊடுருவாத நிலையில், உழைப்பு சார்ந்து சாதியிருந்த போதும், பரம்பரை சாதி உறவு உருவாகி விடவில்லை. அதாவது குடும்ப வழியாகச் சாதி தோன்றாத நிலையில் உழைப்பு சார்ந்து சாதி உருவானபோது, திருமணம் பரந்த எல்லைக்குள் நடப்பதைத் தடுத்துவிடவில்லை. குடும்பம் சார்ந்த உறவுதான் குறுகியத் திருமணத்துக்கான ஊற்றுமூலமாகியது. திருமணத்தின் எல்லை விரிந்திருந்த போது, பெண்ணின் சுதந்திரமும் விரிந்த தளத்திலேயே இருந்தது.
''சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நடமாடு"42 என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியில் அறிமுகமற்ற ஒருவன் குடிக்க நீர் கேட்டு வந்தபோது , தாய் ஒருத்தி மகளை நீர் கொடுக்க அனுப்புகின்றாள். அவன் தனது வலக்கையைப் பிடித்தான் என்று பாடல் வரிகள் கூறுகின்றன. அவனின் முதுகைத் தாய் தடவுவதும், தாய் அவனைக் கள்வன் (களவு தொழிலைச் செய்த மக்கள் கூட்டம் கள்வர் சாதியாக இருந்தது.) மகன் எனக் கூறுவதும், அவர்கள் பாலான உறவையும் குறிப்பிடுகின்றாள். இந்தத் திருமணத்தில் ஆணே வெளியிடத்தில் இருந்து வருபவனாக இருக்கின்றான்;. அதாவது பெண்வழிச் சமுதாயத்தின் எல்லை ஆண் - பெண் வீடு தேடி வருவது அன்றைய மரபாக இருந்துள்ளது. பெண் தனது தாய்வழிப் பிரதேசத்தைத் தாண்டிச் செல்வது என்பது கிடையாது. பெண்ணின் வாழ்க்கை தாய்வழி நிலத் தொடர்களிலேயே வாழ்ந்தாள். இங்கு பல வெளியிடத்து ஆண்கள் வந்து போவதும், பெண் அவர்களைக் காண்பதும் இயல்பான நிகழ்ச்சியாகும்;. இந்த ஆண்களில் இருந்தே பெண் ஆணைத் தெரிவு செய்கின்றாள்;. ''மற்றிவன் மகனே தோழி" என்ற கருத்தின் மூலம் ஆணின் சமூகத் தகுதி எதையும் கோரவில்லை. உழைப்பு இயற்கை மீதே சார்ந்து இருந்ததால், உற்பத்திக்கான மூலம் அசையாச் சொத்தாக இருந்ததால், பெண்ணின் நிலையான சொத்தை நோக்கி ஆண் வரும்போது உழைப்பைத் தவிர பொருளாதார ரீதியாகத் திருமணத் தகுதி என்பது எல்லைப்பட்டது. ஆண், பெண்ணுக்கும் பெண்ணின் குடும்பத்துக்கும் அன்பளிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தது.
''சான்றோர் வருத்திய வருத்தம் தமது
வான்தோய் வன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள்
வருமுலை ஆகம் வழங்கினோ மன்றே
அஃதான்று, அடைபொருள் கருதுவார் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நற்றோர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே"42
ஆண், பெண் வீட்டை நோக்கிச் செல்லும்போது அன்பளிப்புகள் கொடுப்பது வழக்காக இருந்தது. இதன் மூலம்தான் பெண்ணை அடையமுடியும்;. இது இன்றைய ஆண் வழிச் சமூக நடைமுறைக்கு எதிரிடையானது. அத்துடன் பெண்ணின் குடும்பத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அகநானூறு பாடல் வரிகள் இதைத் தெளிவாக்கின்றன.
''பொன்னடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையின ளிருந்த ஆய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழப்பொருள் கலநிறை பொடுபின்னும்
பெறலருங் குரையளாயின் அறந்தெரிந்து
நாமுறை தேஎம் மரூஉப்பெயர்ந் தவனொடு
இருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணித்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்டிரன் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பாரவன் நமக்கே"42
பெண்ணின் தந்தையுடன் உப்பங் கழனியில் உழன்றாக வேண்டும்;. மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவேண்டும். அன்பைப் பலப்படுத்த வேண்டும். இந்த நிலையில் தான் பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணைத் தனக்கு தருவார்கள் என்றளவுக்கு ஆண் ஏங்குவதைப் பாடல் வரிகள் தெளிவாக்குகின்றன. அன்று, பெண் அடிமையாகி விடவில்லை. பெண் திருமணம் இன்றி கன்னியாகப் புழுங்கி சிதையவில்லை. ஆண் - பெண்ணை அடைவது என்பது, பெண்ணைத் திருப்தி செய்வதைச் சார்ந்திருந்தது. பெண்ணும் ஆணும் காதல் செய்து இருந்தாலும், அவர்கள் குழந்தையைப் பெற்று இருந்தாலும், ஆணை அந்தக் குடும்பத்தில் அங்கீகரித்து திருமணம் செய்வது என்பது பெரியவர்களின் ஆசியில் தங்கியிருந்தது. அன்று காதல் திருமணத்துக்குத் தடை விதிப்பது சமூகப் பண்பாடல்ல. குறுந்தொகை 51.4-6 இல், இதற்குச் சான்றாக உள்ளது.
''யானும் காதெலென யாவும்நனி வெய்யள்
எந்தையுமங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனோடு மொழிமே"42
ஆணும் பெண்ணும் விரும்பிக் காதல் செய்யும்போது சமூகம் அதற்குத் துணையாக, பக்கபலமாக இருந்துள்ளது. இன்றைய சமூகம்போல் காதலைக் குற்றமாகக் கருதவில்லை. கலித்தொகைப் பாடல் ஒன்றில்,
''தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லா முரத்தெழுந் தாறி
இருவர்கட் குற்றமும் இல்லையா லென்று
தெருமத்து சாய்த்தார் தலை"42
இது மாறிவந்த சமுதாய இயல்பைக் காட்டுகின்றது. காதலை எதிர்த்து நிற்கும் குடும்பம் பின் ஒத்துக்கொள்கின்றது. பெற்றோர் தனக்குப் பிடித்தவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்வதை விட, திருமணம் செய்பவர்களின் விருப்பத்துக்கு இணங்கிபோன நிலையைப் பாடல் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு சாதி, பொருள், மதம் என எதுவும் தடைவிதித்ததில்லை. அவர்களின் பரஸ்பர காதல் முதன்மையான அம்சமாக இருந்தது. ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை வளர்ச்சியின் விளைவால் பெண்ணின் கற்பு ஆண் சார்ந்து கோரப்படுகின்றது. தொல்காப்பியம் இதை வலியுறுத்துகின்றது.
''கற்புங் கபமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விரும்புறத் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்"42
பெண் கற்பைப் பாதுகாப்பதும், அதனூடாகச் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதும் அவளின் ஒழுக்கமாக இருந்தது. ஆணின் ஒழுக்கம் கோரப்படவில்லை. ஆணின் செயல்களைப் பெண் அங்கீகரித்து இணங்கிப் போவதே பெண்ணின் ஒழுக்கமாகியது. பரிபாடல் திரட்டு 1.18-21 இல்,
''பரத்தமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியவள்."42
ஆண், விபச்சாரியிடம் போய் வந்தாலும் பெண் அதைச் சகித்து வாழவும், கணவனுக்கு அன்பான பணிவிடை செய்யவும் ஆணாதிக்க ஒழுக்கம் பெண்ணுக்கு உபதேசிக்கின்றது. சங்கப் பாடல்கள் பெண்ணிடம் ஒழுக்கமாக ஆணாதிக்கக் கற்பைப் பலவாக, அடைமொழியூடாக முன் வைக்கிறது. ~நாணல்லது இல்லாக் கற்பு, வடுவில் கற்பு, மாசில் கற்பு, ஆறிய கற்பு, கடவுள் சான்ற கற்பு, அறஞ்சால் கற்பு, முல்லை சான்ற கற்பு, அடங்கிய கற்பு, நன்றி சான்ற கற்பு"42 என்று கற்பு பற்றிய கூற்றுகள் பெண்ணின் மாறிவந்த ஆணாதிக்கச் சமுதாய வளர்ச்சியைக் காட்டுகின்றது. புறநானூறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, அகநானூறு, சிறுபாணாற்றுப்படை, குறுந்தொகை ஆகியவற்றை இயற்றிய வௌ;வேறு காலக்கட்டத்தில் இந்தக் கற்பு ஒழுக்கம் மாறிய வடிவில் இருந்ததை இது காட்டுகின்றது. பெண்ணுக்கு இதைத் திணித்தபோது ஒரேயடியாகத் திணித்துவிடவில்லை. மெதுவாக, காரணக் காரியத் தொடர்பூடாக, பெண்ணைப் படிப்படியாக ஏற்க வைக்கப்பட்டது. கற்பு இன்று இருப்பது போல் அன்று இருந்ததில்லை. அன்று மாறிய பல்வேறு வடிவில் கால இடைவெளிகளில் பெண்ணிடம் படிப்படியாக ஏற்கவைத்து திணிக்கப்பட்டதையே இந்தக் கற்பு காட்டுகின்றது. குறுந்தொகை பாடல் 315 இல், பெண்ணின் கடமை ஆணின் ஒழுக்க மீறல்களைத் தாண்டி கோரப்படுவதைப் பார்ப்போம்.
''எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் றோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே"42
கணவன் விபச்சாரியிடம் செல்வதால் ஏற்படும் பெண்ணின் துன்பத்தைப் பெண்ணின் கடமை சாந்தப்படுத்துவதாக ஆணாதிக்க ஒழுக்கம் புகட்டுகின்றது. குழந்தையைப் பெறுவதன் மூலம் ஆணின் வாரிசை வளர்க்கும் பெண்ணின் இயல்பான தாய்மை உணர்ச்சியை அன்பின் இலக்கணமாக்கினர். சொத்துரிமையற்ற பெண் இயந்திரமானாள். இந்த இயந்திரத்தில் இருந்து கணவனின் வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் கடமையை ஐங்குறுநூற்றில் 405 பாடல்களும் எடுத்து இயம்புகின்றன. பெண்ணின் கற்பு வழியின் ஊடாக ஆணைப் புகழ்வது ஆணாதிக்க நரித்தனத்தில் ஒன்று. அதைப் பார்ப்போம்.
''செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ"44 (புறம் 3)
''மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவ"44 (புறம் 314)
"சேணாறு நறுநுதல் சேயிழை கணவ"44 (பதிற் 7:5)
''புரையோன் கணவ"44 (பதிற் 7.10)
கண்ணகியின் பெயரில் கற்பு எப்படி போற்றப்பட்டுப் பண்பாடாக்கப் பட்டதோ, அதுபோல்தான் சங்க இலக்கியம் சில பெண்களின் பெயரால் ஆணாதிக்கத்தை மறுதலையாக நிறுவுவது வழக்காக உள்ளது. பெண்ணின் விசேட கடமைகள் ஊடாக இவை போற்றப்பட்டது. அதேநேரம் வீரத்தாய் மகனைப் போர் முனைக்கு அனுப்புவதை வீரமாகப் போற்றும் பண்பு, உண்மையில் தாய்மை மீதான ஆணாதிக்கக் கடமையை முன்வைப்பதாகும்;.. தனிச்சொத்துரிமை யுத்தங்களில் தாய்மை காட்டும் எதிர்ப்பை, வீரத் தாயாகக் கட்டமைத்துக் காட்டும் நடத்தைகள் மூலம் யுத்தம் நியாயப்படுத்தப் படுகின்றது. தாய் மகன் இறந்த செய்தி கேட்டு போர்முனை சென்று கதறும் காட்சியைத் திசை திருப்ப, அம்பு எங்கே பட்டது என்று தேடுவதாகக் காட்டும் மரபு, உண்மையில் யுத்தக் கொடுமைக்குச் சமூக அங்கீகாரம் கோரிவிடும் விண்ணப்பமாகும்.
சொந்தக் குழந்தையை இழக்கும் எந்தத் தாய்மையும் மகிழ்வுறுவதில்லை. எவ்வளவுதான் நியாயமான போராட்டத்தில் மரணித்தாலும் தாய்மை ஜீரணிக்கமுடியாத துயரத்தைச் சந்திக்கின்றது. சுற்றத்தாரின் வாழ்வில் மாற்றத்தைச் சொந்த மகனின் இழப்பு ஏற்படுத்தும்போதே, இதனால் சுற்றத்தார் அப்பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதை அவளின் மகனையிட்டுப் பெருமைப்படவைக்கின்றது. இங்கு மரணத்தையிட்டு அல்ல அவனின் சமூக நோக்கத்தையிட்டே. இதுவே கணவனின் மரணத்திலும் பெண்ணின் நிலையாகும். ஆனால் பெண்ணியவாதிகள் மரணத்தையிட்டு ஆணாதிக்க யுத்த அமைப்பு வழங்கிய ~வீரத்தாய்| பட்டத்தை, பெண்ணின் பெருமை சேர்க்கும் பகுதியாக வருணிக்கின்றனர். இது ஆணாதிக்க யுத்தத்தை நியாயப்படுத்த, அதற்கான வீரர்களைத் திரட்ட பெண்களின் தாய்மையை அழிக்கும் மோசடியாகும். ''ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே"145 என்ற புறநானூற்றுப் பாடல் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் கடமையைப் பெண் வீரத்தினூடாகப் போற்றுவது உண்மையில் பெண்ணின் அடிமைத்தனத்தை மேலும் உறுதி செய்வதாகும்.
''பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து வதுவை அயர்த்தனை"44 என்ற அகநானூற்றுப் பாடல் 46 இல், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண்கள் வீட்டுக்குக் கூட்டிவந்து தமது மனைவியுடன் வைத்திருந்ததைக் காட்டுகின்றது. சொந்த மனைவி ஒருதாரமணத்தில் இருக்க, பலதாரமணத்தில் இன்பம் காணும் ஆண்கள், அதை வீடுவரை கொண்டு வரவும் தயங்கவில்லை. அதை நியாயப்படுத்தவும் சமுதாயம் பின்நிற்கவில்லை. ஆண்களின் பாலியல் இன்பம் வரைமுறையற்ற கோட்பாட்டால் நியாயப்படுத்தப்பட்டது. ஆண்களின் வாரிசைப் பெண் பெற்றுப் போடமுடியாதபோது, ஆண் மறுமணம் செய்யும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அதை மனைவியே முன்நின்று நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஐங்குறுநூறு பாடல் 292 இல்,
''நின்னினுஞ் சிறந்தவள் எமக்கே நீநயந்து
நன்மன அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே"44
பெண் குழந்தை பெறாவிட்டால் அவள் சமுதாய ரீதியாக இழிவாகக் கருதும் தனிச் சொத்துரிமை வாரிசு சமூக அமைப்பில், ஆணின் மலட்டுத்தனம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது இருந்தது. ஆண் ஆண்மையுள்ளவனாகக் கருதும் பொது சமூகக் கண்ணோட்டத்தில், பெண்ணின் பெண்மை வாரிசு வளங்கள் ஊடாகப் போற்றப்பட்டது. இந்த வாரிசைப் பெற்றுப் போடாவிட்டால் அவள் மலடியாகிவிடுகின்றாள்;. இந்த நிலையில் ஆணாதிக்கம் வரையறுத்த பெண்மையை ஆணாதிக்கம் கேவலப்படுத்தி சிறுமைப்படுத்துகின்றது. இந்த இழிவில் சமூகக் கௌரவம் இழந்து வேலைக்காரியாக, கொத்தடிமையாக வாழ்வின் இழிநிலைக்குத் தள்ளிவிடும் வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்க, கணவனுக்கு அவளாகவே முன்னின்று ஒரு திருமணத்தைச் செய்வதன் மூலம் மீள முயல்கின்றாள். மாற்றான் வயிற்றில் இருந்து பெறும் வாரிசு, தனக்கு எதிரான இழிவாடலைத் தடுக்கும் என்று நம்பி, கணவனின் பாலியல் மற்றும் வாரிசுரிமையை நிறைவுச் செய்ய முனைகின்றாள். ஆனால், மலட்டுத்தனம் ஆணுக்கும் உண்டு என்பது, அவளால் புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல்பூர்வமான சமூக அமைப்பில் அவள் வாழ்ந்துவிடவில்லை. பெண் கருவளம் இழக்கின்ற போது, அவளின் சமூகத் தகுதி தாழ்த்தப்பட்டுக் கேவலமாக்கப்பட்டாள்.
பெண் ஆணுக்காக அலங்காரம் செய்யவேண்டும் என்பது மரபு. கணவன் வீடு வரமாட்டான் எனத் தெரிந்தால் அல்லது வெளியூர் சென்றால் பெண் தன்னை அலங்கரிப்பது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. அடக்க ஒடுக்கமாகக் கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது, அழகு குறித்த பார்வை ஆணுக்குச் சொந்தமானது. நற்றிணை பாடல் 42 இல்,
''... மெலென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய"44
பூச்சூடுவது, அலங்காரம் செய்வது என்பது குறித்த கணவனுக்கு மட்டும் செய்யும் காலம் சங்ககாலம். இன்று பெண் அலங்காரம் செய்வது மொத்த ஆண் சமூகத்துக்கும் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. ஆண்கள் கண்குளிரப் பெண்ணை அனுபவிப்பது என்ற நிலைக்கு, உலகமயமாதலின் அழகுராணி போட்டி முதல் மாடல் வரை நீண்டு கிடக்கின்றது. இந்த வழியில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தான் அலங்கரிக்கின்றாள். நாம் ஏன் அலங்கரிக்கின்றோம் என்ற சூடுசுரணையற்ற பண்பாட்டில், பெண்ணின் அலங்காரம் ஆணாதிக்கத்தின் பாலியல் வக்கிரத்தைப் பூர்த்தி செய்கின்றது. பெண்கள், ஆண்கள் இரசிக்கின்ற அழகியாகின்றனர். இது ஒருதார மணத்தைத் தாண்டிச் செல்லுகின்றது. அன்று பெண் கணவனுக்காக அலங்கரித்தபோது, பெண்ணின் உணர்வுகளைப் புறக்கணித்தது. இன்று பெண் தன்னை அலங்கரிக்கின்றபோது, பெண் சமுதாயத்தின் பாலியல் பண்டமாக்கப்படுகின்றாள். இங்கு இதைப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையாக்கியதன் மூலம், பெண்ணின் சுயஉணர்வை ஜனநாயகம்;, சுதந்திரத்தின் பின்னால் ஆணாதிக்கம் விபச்சாரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.
பெண்கள், ஆண்களின் அன்பைப் பெற யானையின் எச்சிலை உண்ண வேண்டும் என்ற மத ஆணாதிக்க விளக்கங்களை அன்றைய பெண் கொண்டிருந்தாள். பரிபாடலில் 19 ஆம் பாடல்44 இதை விளக்குகின்றது. பெண் கணவனின் எச்சில் சோற்றை உண்டு வாழ்வது அவளின் விதியாகியது. கணவன் உண்ட கோப்பையில் மிச்ச மீதிகளை உண்டு தனது அடிமைத்தனத்தை எடுத்துக்காட்டுவது பெண்ணின் உயர்ந்த பண்பாகச் சமூகம் கருதியது. சொத்துரிமையை இழந்த பெண், தனிச்சொத்துரிமை அமைப்பில் ஆணிடம் பொருளாதார ரீதியாகச் சார்ந்து வாழவேண்டிய நிலையில், அந்த ஆணின் எச்சில் சோற்றை உண்டு வாழ்வதன் மூலம், அவளின் அடிமைத்தனத்தை ஜனநாயகப்படுத்தியது. இதனூடாக எதிர் கேள்வி அர்த்தமற்றதாகியது. சொத்துரிமையை ஆணின் உயிராக்கி, அதைப் பெண் சார்ந்து வாழ குறுந்தொகையில் 135 -ஆம்பாடல் ஒழுக்கமாக்குகின்றது.
''வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்"44
ஆணின் உயிர் சொத்துரிமை தரும் உழைப்பாக இருக்க, பெண்ணுக்கு எச்சில் சோறு போடும் கணவன் பெண்ணின் உயிராக இருக்கின்றான். ஆண் மூலதனத்தை உயர்ந்த சமூக வடிவமாகக் காண்கின்ற தனிச்சொத்துரிமை அமைப்பில், பெண் கணவனைத்தான் உயர்ந்த தெய்வமாகக் காண்கின்றாள். ஆணாதிக்க அமைப்பில் ஆணுக்குச் சொத்துரிமை அதிகாரத்தை வழங்க, பெண் அதை இழந்து ஆணின் அடிமையானாள். இதையொத்த இன்னொரு வரியைக் குறுந்தொகையில் பார்ப்போம்.
''ஞாயிறு அணையன் தோழி
நெஞ்சி அணைய என் பெரும் பணைத்தோளே"44
இங்கு ஆண் சூரியனாக இருக்க பெண் சூரியனை நோக்கித் திரும்பும் நெருஞ்சி மலர் என்று காட்டும் உவமைகள், பெண்ணின் சொத்துரிமையற்ற நிலையைக் காட்டுகின்றது. ஆண் எப்படி சூரியனாகின்றான்;. உழைப்பை உயிராக்குகின்றான். பெண்ணுக்கு உழைப்பு மறுக்கப்பட்டு, வீட்டில் ஆணின் கடமையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், பெண் ஆணின் அடிமையாகின்றாள்;. பெண் சொத்துரிமையை, உழைப்பைக் கொண்டு வாழும்போது இந்த ஆணாதிக்கத்தின் அன்றைய உவமைகள், வரைமுறைகள் அர்த்தமற்றுப் போவதைக் காணமுடியும்;. ஆணை நோக்கிப் பெண் நெருஞ்சி மலராகத் திரும்பவேண்டியதில்லை. அதுபோல் பெண் உழைப்பை உயிராகக் கருதமுடியும்.
பெண்ணின் கற்பு பற்றி மூன்று வரையறைகள் சங்க இலக்கியத்தில் கோரப்பட்டன. அவை தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு ஆகும். இவை பெண்ணின் ஒழுக்கமாக, பண்பாடாக, மேன்மையாகக் கருதப்பட்டது. கணவன் இறந்ததை அறிந்து உடன் இறப்பது தலைக்கற்பாகவும், கணவனின் சிதையில் உடன்கட்டை ஏறுவது இடைக் கற்பாகவும், கணவன் இறந்த பின் நோன்பு ப+ண்டு வாழ்வது கடைக்கற்பாகவும் இருக்கின்றது. இதில் ஏதோ ஒன்றை இன்றும் பெண்களைக் கடைப்பிடித்து ஒழுகக் கோருகின்றது ஆணாதிக்கம். உடன்கட்டை ஏற்றும் வழக்கம் இந்து மத வக்கிரத்தின் தொடர்ச்சியாக இன்றும் நடத்தப்படுவதுடன், இறந்தவரின் பெயரில் கோயில்களை அமைக்கின்றனர். பொதுவாக விதவைக் கோலம் இன்றும் பெண்ணுக்குப் பல்வேறு பழக்க வழக்கங்களை, ஒழுக்கங்களைச் சுமத்தி, அவளின் வாழ்வை ஆணாதிக்கம் சிதைக்கின்றது. சங்க இலக்கியம் பெண்ணுக்கு எது சாத்தியமோ அதை அமுல் செய்தது. அதைப் போற்றியது. அதைப் பார்ப்போம்;. புறநானூறு பாடல் 246 இல்,
''பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
கடையிடைக் கிடைத்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கொட் டீமம்
நுமக்கரி தாகுக தல்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்தென வரும்பற
வள்ளித ழவிழ்த்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே"44 (புறம் 240)
''ஆடநடைப் புரவியுங் களிரும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அரகா ஆய அண்டிரன்
கோடு ஏந்து அல்குல் குறந்தொடி மகளிரொடு
காலன் என்னம் கண்ணிலி யுய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன்."44
''கூந்தல் கொய்து குறந்தொடி நீக்கி
அல்லி உணவில் மனையோடு"44 (புறம் 250)
கணவனை இழக்கின்ற பெண் எப்படி பலவகையில் வாழ்ந்தாள் என்பதைக் காட்டுகின்றது. பார்ப்பன (இந்து) மதம் தமிழ்ப் பகுதியில் ஆழமாக வேரூன்றும் முன்பே, விதவையின் பல்வேறு கோலங்களைச் சங்க இலக்கியம் அம்பலப்படுத்துகின்றது. அதாவது தமிழ்ப் பண்பாட்டின் ஆணாதிக்கம் எப்படி கோலோச்சியிருந்தது என்பதையும், அதனுடன் பார்ப்பனியம் பின்னால் ஒன்றிணைந்ததையும் காட்டுகின்றது. கணவன் உயிருடன் வாழும் காலம் தாண்டி மரணத்தின் பிறகும் பெண்ணின் கற்பு கோரப்பட்டது. பெண்ணை மொட்டையடித்து, ''நீர்சோற்றைக் (புறம் 246)"44 கொடுத்து, சகலவிதமான அலங்காரங்களையும் நீக்கி, ஆணாதிக்க அழகியலில் இருந்து தனிமைப்படுத்தியதன் மூலம், பெண்ணின் பாலியல் நாட்டம் நலமடிக்கப்பட்டது. மறுதளத்தில் உயிருடன் நெருப்பில் இறக்கியது, ஆணாதிக்கம். இதனூடாகத்தான் பெண்ணின் ~கற்பு| ஆணாதிக்கத்தால் வலுக்கட்டாயமாகப் பாதுகாக்க முடிந்தது. இவை சமூக வடிவமாகிப் பொதுப் பண்பாகியபோது, இதை மீறுகின்ற நிகழ்ச்சிகள் சமூகப் புறக்கணிப்புக் குள்ளாகி, சமூக அவமானத்தைப் பெண் சந்தித்தாள்;. இதனால் இதைப் பெண் கடைப்பிடித்து வாழ்வது சமூகத்தில் உயிர்வாழ்வதற்கான நிபந்தனையாகி, இது பெண்ணின் ஒழுக்கமாக மாறிவிடுகின்றது. பெண்ணின் கடமைகளை அன்றே திட்டவட்டமாக ஆணாதிக்கம் தீர்மானிக்கின்றது.
''ஈன்றுபுறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"44
குழந்தை பெறுவது பெண்ணின் கடமை என்ற வரையறை பெண்ணின் கரு ஆற்றல் மீது திணிக்கப்படுகின்றது. இயற்கையான பெண்ணின் கரு ஆற்றலை, பெண்ணின் கடமையாக ஆணின் வாரிசைப் பெத்துப்போடும் ஒழுக்கமாக்குகின்றது ஆணாதிக்கம். ஆணின் கடமை மூலதனத்தைத் திரட்டி, அந்தத் தனியுடைமை அமைப்பின் சான்றோன் ஆக்குவதில் முடிகின்றது. இதைப் பெண் செய்ய சமூக அங்கீகாரம் கிடையாது. பெண் நினைத்தாலும் சொத்துரிமையற்ற பெண்ணால், கல்வி மறுக்கப்பட்ட பெண்ணால் நினைத்துக் கூட பார்க்க முடியாதவாறு சமூக இருப்பு பெண்ணை அடக்கி வைத்துள்ளது. ஆணின் அதிகாரம் சொத்துடைமை சார்ந்து சமூக அங்கீகாரம் பெற்றதுபோல், சொத்தற்ற பெண்ணின் அடிமைத்தனத்தை அதே சமூகம் கீழ்த்தள்ளி அங்கீகரிக்கின்றது. இதில் இருந்து ஆணுக்கு அடங்கி, ஒடுங்கி, சொற்கேட்டு ஆணாதிக்கக் கடமைகளை நிறைவு செய்வதே பெண்ணின் கடமையாகின்றது.
''தகவுடைய மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்"(பரிபாடல் 20-88.89)45
கணவன் பெண்ணை அவமதித்தாலும், புறந்தள்ளினாலும் அதைப் பெண் சகித்து, கணவனின் தயவை எதிர்பார்த்து வாழ்வதே பெண்ணின் சிறப்பாக ஆணாதிக்க ஒழுக்கமாக்கியது. இது இன்றுவரை பொது எதார்த்தமாக உள்ளது.
''நல்கா யாயினும் நயனில செய்யினும்
நின் வழிப் படூஉம்என் தோழி" (நற்-247) 44
ஆணுக்கு அடங்கி, சகித்து வாழும் வாழ்க்கையூடாகப் பெண்ணின் விவாகரத்துரிமை மறுக்கப்படுகின்றது. ~கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்| என்ற நடைமுறை சார்ந்த பழமொழி, அன்று தனிச்சொத்துரிமை வளர்ந்து வந்த சமுதாயத்தில் தொடக்கி வைக்கப்பட்டதைச் சங்க இலக்கியம் நிர்வாணமாக்குகின்றது. ஆணின் ஒழுக்கம் பற்றி பெண் கேள்வி கேட்கமுடியாது. பெண்ணின் ஒழுக்கத்தை ஆண் கேட்பதைப் பெண் மனப்பூர்வமாக விரும்பி ஏற்று நடக்கவேண்டும். அடக்குவதும், அடங்கிப்போவதும் பொதுவான ஒழுக்கமாகி ஜனநாயகமாகியது. இது சமூக அங்கீகாரம் பெற்ற வடிவமாகியது. பெண் அடங்கிப்போகும் இயல்பு பெண்ணின் அணிகலனானது.
''வை எயிற்று ஐயள்மடந்தை" (நற் -2)44
கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய பெண் என்ற வருணனையூடாக அழகிய பதுமையாக, ஆணின் விளையாட்டுப் பொம்மையாகப் பெண் வருணிக்கப்படுகின்றாள். இன்று மாடல், அழகுராணிப் போட்டி, விளம்பரங்கள் தோறும் வரும் பெண்கள் இந்தப் பண்பில் நோக்கப்படுவதும், காட்டப்படுவதும் நிகழ்கின்றது. இதையே சாதாரணப் பெண்கள் கடைப்பிடிக்கவும், இதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதும் நிகழ்கின்றது. ஆண்கள் இதை அடிப்படையாகக் கொண்டே பெண்ணைக் காண்பதும், அணுகுவதும், எதிர்பார்ப்பதும் நிகழ்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டே திருமணம், கருஅழிப்பு, விவாகரத்துகள், வைப்பாட்டிகள், கட்டற்ற சுதந்திரமாக வாழ்ந்து விபச்சாரம் செய்வதுமென பல்வேறு ஆணாதிக்கப் பண்பாட்டு விளைவுகளை வந்தடைகின்றனர், சந்திக்கின்றனர். சங்ககாலம் பெண்ணிடம் கோரிய அணிகலன்கள் சில இன்றும் வழக்கில் உள்ளன.
''உயிரினும் சிறந்த நாண்" (நற்-17)44
''சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே" (நற்-15)44
- என்பதன் மூலம் பெண்ணின் அணிகலன்கள் ஒழுக்கமாகின்றது. ஆணுக்கு அல்லாது பெண்ணுக்குத் திணிக்கப்பட்டவைகள், பெண்ணின் பண்பாக, கலாச்சாரமாக மாறிவிடுகின்றது. இந்த இயல்புக்குள் பெண் தன்னை இசைவாக்கமடைந்து வாழத் தலைப்படுகின்றாள். இதை மீறுவது ஆணாதிக்கத்தின் முன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மீறும்போது அவளைப் பெண்ணாக ஆணாதிக்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அடக்கமற்ற, நாணமற்ற பெண்ணாகக் காட்டி, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி அன்னியப்படுத்துகின்றது. பெண்ணை ஆணாதிக்க அழகியல் கோலத்தில் சங்க இலக்கியம் வருணிக்கத் தயங்கவில்லை. இன்றைய உலகமயமாதல் கோருவதைப் போல் பெண்ணின் வரையறைகள் அன்றும் கோரப்பட்டது.
''நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளே துணையுடைய திரண்ட நார் உரித்தாற் போன்ற மாமை நிறத்தை உடையவள். குவளை போன்ற அழகிய குளிர்ந்த கண்களையும் பெரிய தோளையும் உடைய இளமகள்" (நற் -6)44
தினைப் புறத்தைக் காவல் செய்யும் மழவர் தானியங்களைத் தின்று அழிக்க வந்த பன்றி முதலிய விலங்குகளை அம்பு எய்து கொன்று, மீண்டும் விலங்குகளின் உடலிலிருந்து பறித்தெடுத்த அம்பு போன்ற செவ்வரி பரந்த குளிர்ச்சியுடைய கண்களையும் நல்ல பெரிய தோளையும் உடையவள்."44
பெண்ணின் அலங்காரம், அழகியல், உடல் கட்டு போன்ற அனைத்தும் ஆணாதிக்க இரசனை, ஆணாதிக்க அமைப்புக்கே உரியதேயாகும். இங்கு பெண் சுதந்திரமான அழகை வெளிப்படுத்துவதில்லை. அழகு பற்றிய வரையறை சமூக எல்லைக்கு உட்பட்டது. ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பில் அழகும், அதன் வெளிப்பாடும், வெளிப்படுத்துதலும் ஆணின் இரசனைக்குட்பட்ட எல்லையால் வரம்பிடப்படுகின்றது. ஒரு பெண் பெண்ணாக இருப்பதன் அழகியல் எல்லையைக் கொண்டிருக்காதவரை, அப்பெண் ஆணாதிக்கச் சமூகத்தில் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றாள். ''உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு" (பாடல் கொ.வே.5) என்று ஒளவையார் (அளவுக்கு அதிகமாக உண்ணாது விடுதல் பெண்களின் உடலழகைப் பேணும் வழியாகும்;). கூறுகின்றார். (இதழ் 1998-4.4)
சங்ககால இலக்கியத்தில் புகழ் பெற்ற புலவர்களில் 26 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் ஒளவையார் முக்கியமானவர் என்பதுடன் இவரின் 58 பாடல்கள் முக்கியமான நூல்களில் இடம் பெற்றுள்ளது. பெண்கள் அழகு பற்றி ஒளவையாரின் கண்ணோட்டம் ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிபலிப்பாகும். பெண் எப்படி பாலியல் பண்டமாக இருக்க வேண்டுமெனக் கற்றுக் கொடுப்பதே பெண்ணின் உடல் பற்றிய வரையறையாகும்; ஆணுக்கு இதை ஒளவையார் கூறிவிடவில்லை. இதன் மூலம் ஆணின் காமப் பசிக்குத் தீனிபோடும் வகையில் பெண்ணின் உடல் வரையறைகளை ஆணாதிக்கம் சமூகப் பண்பாடாக்கியது. இதையே ஒளவையார் பெண்களின் ஒழுக்கமாக, கடமையாகக் கூறுவதன் ஊடாக, ஆணின் பாலியல் தேவையைப் பெண் நிறைவேற்றுவதன் அவசியத்தை மறைமுகமாகக் கோருகின்றார்.
சங்க இலக்கியத்தில், ''ஈன்று புறந்தருதல்"28 பெண்ணின் கடமையாகக் காட்டி பிள்ளையைப் பெற்றுப் போடுவதே ஒழுக்கமாகியபோது, ஆணாதிக்க வாரிசுரிமையைப் பூர்த்தி செய்யும் வழியில் பெண் அடிமையாகினாள். ஆணாதிக்கச் சமுதாயத்தின் பண்பாடு இந்த வகையில் பெண்ணின் உரிமைகளைத் தனக்கு அடிமையாக்கியது. பெண் உடல்சார்ந்த வெளிப்பாடுகளைச் சிறுமைப்படுத்தி, மறுதளத்தில் அதன் உள்ளார்ந்த, உயர்ந்த சமூக மதிப்பு இழிவாக்கப்பட்டது. சகல தமிழ் இலக்கியங்களும் ஆணாதிக்கத்தைப் போற்றி, அதைக் கடைப்பிடிக்கக் கோரி புதியவடிவில் அதைச் சமூகமயமாக்கினர். சங்க இலக்கியம் தனிச்சொத்துரிமை அமைப்பின் பாதுகாப்பிலும், ஆணாதிக்கத்தைப் பெண்ணுக்குத் திணித்ததிலும் உருவானது என்பது மறுக்கமுடியாது. ஒழுக்கங்களை உபதேசித்தல், நல்வழிப்படுத்தல்கள், விளக்கங்கள், புகழ்பாடுதல் எல்லாம் இந்த எல்லைக்குள் கையாளப்பட்டவைதான். அக்காலத்தின் சமூக நிலையைச் சங்க இலக்கியம் நியாயப்படுத்தி வெளிவந்ததன் ஊடாக, அக்காலத்துக்கேயுரிய ஆணாதிக்கம், தனிச்சொத்துரிமை அமைப்பைத் தோலுரித்து காட்டுகிறது, அதனூடாக இன்றைய தொடர்ச்சியை நிர்வாணப்படு;த்துகின்றது.
இ. திருப்பாவையின் ஆணாதிக்க வக்கிரம்
ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் கணவனை வேண்டிப் பாடப்படும் பாடலாக, வழிபாடாக, மார்கழி மாத வழிபாடு அமைந்துள்ளது. ஆண்டாள் திருமணம் செய்யாது, தனது இயற்கையின் துயரத்தைக் கடவுளின் மேல் போட்டுப் பாடிய பாடல்கள்தான் இவை. ஆணாதிக்க அமைப்பில் ஒரு பெண் மீதான கற்பு பற்றிய புனைவுகள், பெண்ணின் இயற்கை உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சமூக இறுக்கம் கொண்டவை. ஒரு பெண் தனது பாலியல் தேவையைச் சமூகத்தை மீறி நடைமுறை ரீதியாகத் தீர்க்கும்போது, அவளை விபச்சாரியாகவும், பின்னால் விபச்சாரத் தொழிலுக்குரிய பெண்ணாகவும் மாற்றிவிடுகின்றனர். இங்கு பெண்ணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆண் தனது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில், பெண்ணைப் பயன்படுத்தக் கூடிய விபச்சார நோக்கில் தான் அணுகுவதும் நிகழ்கின்றது.
இந்த நிலையில் அநாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, தந்தை ஸ்தானத்தில் ஒரு ஆண் எடுத்து வளர்த்த வாழ்வில் ஆண்டாள் பாலியல் தேவையை, ஆணாதிக்கச் சமூகம் பூர்த்தி செய்யமுடியவில்லை. திருமணம் இன்றி வாடிய ஆண்டாள் தனது துயரத்தில் கண்ணனைக் காதலனாகக் கொண்டு பாடிய பாடல்கள் எல்லையற்ற விரசத்தைக் கொண்டவை. ஆண்டாளின் வழிபாடு மட்டும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யாத நிலையில், ஆணாதிக்கக் கண்கொண்டு பெண்ணின் உறுப்பு சார்ந்து அதை நடத்தையாக்கிப் பாடிய பாடல்களைப் பெண் பாடுகின்றபோது தன்னைத்தான் இழிவுபடுத்துவதாகவும், ஆண் பாடுகின்ற போது பெண்ணைக் கொச்சைப்படுத்துவதாகவும் அமைகின்றன.
ஆண்டாளை நாயன்மார்களில் ஒருத்தியாக மாற்றிய இந்துமதம், பெண்களின் கற்புக்கான வேலியாக, ஒழுக்கத்தின் காவலாக இதைக் கண்டு கொண்டதன் மூலம், பெண்கள் தமது பாலியல் தேவையை இறைவனிடம் சொல்லிப் புலம்பும்படி வழிகாட்டியது. தீர்வற்ற கற்பனையான நினைப்பை நினைத்துவாழ, பெண்களைச் சிறுமைப்படுத்தும் வழிபாட்டு எல்லைக்கு இதன் ஊடாக ஆணாதிக்கம் வழிகாட்டுகின்றது. இந்த வக்கிரத்தைப் பார்ப்போம்.
''குற்றமொன் றில்லத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே போதராய்"38
- என்ற பாடல் வரிகளில் ''புற்றர வல்குல் புனமயிலே போதராய்" இதன் அர்த்தம் என்ன எனப் பார்ப்போம். புற்றில் வாழ்கின்ற பாம்பின் படத்தைப் போன்ற வடிவம் உடைய பெண் உறுப்பு உடைய பெண்ணே! எழுந்து வா! என்று ஒரு பெண்ணைக் கூப்பிடும் பாடல் வரிகளை, ஆண் பாடுவது கிராமங்களில் நடக்கின்றது. கேவலமாக நித்திரை பாயில் வைத்தே பெண்ணை இப்படிச் சொல்லி கூப்பிடும் பண்பாட்டை எப்படி அனுமதிக்கின்றோம். இதைப் பெண் உறுப்பை ஒப்பிடும் சிறந்த இலக்கிய உவமை என சிலர் வாதிடலாம். ஆனால் வீதிக்குவீதி, சந்திக்குச் சந்தி பெண்களின் உறுப்பைச் சொல்லி கதைப்பதும், வருணிப்பதும் இதன் போக்கில்தான் என்பதை நாம் மறுக்கமுடியாது. ஒரு பெண்ணைப் பெண் உறுப்பு வழியாகக் காண்பதும், விழிப்பதும் ஆணாதிக்க வக்கிரத்தின் கோரமான பக்கமாகும். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க மறுத்து, அவளை உடல் உறுப்பு வழியாக, புணர்ச்சிக்கான ஒரு பொருளாகப் பார்த்து பாடும் இந்த வரிகள,; மனிதக் குலத்தின் இழிவான ஆணாதிக்கப் பண்பாடும் நடத்தையுமாகும்;. இது எல்லா சமுதாயத்தினதும் பொதுவான இயல்பாகும். இன்றைய சினிமா மொழியே இப்படியாக இருப்பதும் விதிவிலக்கல்ல அல்லவா?
இந்தப் பாடலில் அடுத்து கண்ணனின் மனைவியிடம், கணவனின் படுக்கையில் பங்கு கேட்டு விண்ணப்பிக்கும் பாடலைப் பார்ப்போம்.
''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
இதன் அர்த்தம் படுக்கை அறையில் குத்துவிளக்கேற்றிய நிலையில், அழகிய படுக்கை மெத்தையில் ஏறிய கண்ணன், நப்பின்னை மீது பாய்கின்றான். பலவாறு சுகம் கண்டவன் அவளின் முலை மேல் தனது தலையை வைத்து படுத்திருக்கின்றான். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா?
இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண்ணின் சுகம் ஆண் சார்ந்தது என்பதையும், பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது. இயற்கையான பாலியல் தேவை மறுக்கப்பட்ட நிலையில், ஆண்டாள் கண்ணனைப் புணர்ந்து வாழ ஆசைப்படும் எண்ணம் தெளிவாக வெளிப்படுகின்றது. கடவுளாக இருக்கின்ற கல்லுக்கான காரணம், அவனுடைய மனைவியின் புணர்ச்சி மோகம் தடுப்பதாகப் பாசாங்கு செய்வதன் மூலம், உண்மையான புணர்ச்சி நடக்காத உள்ளக் குமுறலின் உணர்வு வெடித்துக் கிளம்புவதைக் காட்டுகின்றது. இங்கு பாடல் வரிகள் ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்தில் இருந்தே, பெண்ணின் மார்பு பற்றியும் புணர்ச்சிக் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இன்றைய பெண், வீடுதாண்டி பிறிதோர் ஆடவனைச் சந்திக்கின்ற போது, அவனின் பாலியல் தேவைக்கு இலகுவாகப் பலியாவது சமூக நடைமுறையாக உள்ளது. இங்கு சமூகத்தில் ஆண்களுடன் வாழ்கின்ற பெண் ஆணிடம் பலியாவது இல்லை. ஆண்டாள் தனது முதல் சந்திப்பே கண்ணன் என்ற ஆணாக (கடவுள்) இருப்பதால், அவனிடம் தன்னைப் பலியாக்குகின்றாள். இது மட்டுமே நினைப்பால் பாலியல் தேவையைப் பூர்த்தியாக்கும் உணர்வைக் கொடுக்கின்றது. வாழ்க்கையை இதற்;குள் ஓட்டிவிடுகின்றாள், சமூகத்தின் முன் சிறந்த கடவுள் பக்திமான். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவன் தனது பாலியல் உணர்வுக்கு வடிகால் தேடும் ஓர் இடமாகும். இதை அவள் உணர்வாக்கிக் கனவு காண்கின்றாள். இதை நியாயப்படுத்தி கண்ணதாசன் தனது ''அர்த்தமுள்ள இந்து மதம்" பாகம் இரண்டில் கூறுவதைப் பார்ப்போம்;
''வாரணம் வந்ததாம், பூரணப் பொற்குடங்கள் வந்தனவாம், தோரணம் நாட்டினார்களாம். வாழை, கமுகு தொங்கவிடப்பட்ட பந்தலாம். இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்தார்களாம்... மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம்;.." என்ற ஆண்டாள் தனது பாலியல் தேவைக்காகக் கண்ணனைத் திருமணம் செய்யும் வழியில் கனவு கண்டு பாடுகின்றாள். அவனின் உறுப்புகளின் சுவைபற்றிக் கூட நினைத்து பாடுவதைப் பார்ப்போம்.
''ஏ வெண் சங்கே: நீ சொல்"46 ''அவனின் வாய் இதழில் கற்பூரம் மணக்குமா? கமலப்பூ மணக்குமா? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்திக்குமோ"46 ''ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே!"46 என்று கூறி வாயின் சுவையை ஆண்டாள் கேட்கின்றாள்;. சங்கு ஊதும் கண்ணனின் வாய் மணத்தைச் சங்கிடம் கேட்கும் போது, ஆண்டாளின் பாலியல் அவலம் தெளிவாக வெளிப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பு பெண்களை நலமடித்ததன் விளைவில் எழுந்ததே, திருப்பாவை. இது பெண்ணின் இயற்கைத் துயரத்தைச் சொல்லும் அதேநேரம், ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தையும் எதார்த்தமாக அக்காலத்திற்கேயுரிய வகையில் வெளிப்படுத்துகின்றது.
ஈ. திருமந்திரத்;தில் ஆணாதிக்கம்
சித்தர்களில் திருமூலர் முக்கியமானவர். அவரால் இயற்றப்பட்ட பாடல்கள் பல ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு சார்ந்தவை. பெண்களின் ஒழுக்கம் பற்றிய வரையறைகளைக் கொண்டு, பெண்ணை இழிவுபடுத்த பின்நிற்கவில்லை.
''இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயிலும்
மயலுறும்வானவர் சாரஇரும் என்பார்
அயலுறும் பேசி அவன்றொழிந் தாரே"47
இதன் அர்த்தம் ''அழகு பொருந்திய வாழ்க்கையுடைய இளம் பெண் யானையை ஒத்த பெண்கள், மழையைக் கண்ட புல்போலத் தளிர்த்திருந்த போதிலும், மயங்கிய தேவரையொப்பார் வந்து பொருந்தும் முன்னமே புணர்ந்தவரை வெளியே இரும் என்று சொல்வர், மேலும் குறிப்புமொழியால் வெளியேறச் சொல்லி நீங்கிப் போவர்"47 என்று பெண்ணை ஆணாதிக்கம் இழிவு செய்கின்றது. ஆணின் பலதார மணத்தில் உழலுகின்ற ஆண்கள், பெண்ணைப் பாலியல் நுகர்வில் அனுபவிக்கின்ற போக்கில், பெண்ணின் எதிர்ப்பைக் கொச்சைப்படுத்தும் போதே இந்தப் பாடல் எழுகின்றது. பெண்ணை நுகர விரும்புகின்ற ஆணுடன் படுக்க தயாராக வேண்டும் என்ற பொதுவிபச்சார ஆணாதிக்கக் கண்ணோட்டமும், பெண் மூடிக்கட்டிப் பாதுகாக்கும் தனிச்சொத்துரிமை, கற்பு பற்றிய கண்ணோட்டமும் முரண்பட்ட போதும், ஒரே ஆணாதிக்க ஆண் வேறுபட்ட பெண்களிடம் கோரும் நடைமுறை சமூக வடிவமாகக் காணப்படுகின்றது. தனது மனைவியைக் கற்புள்ளவளாக எதிர்பார்க்கும் ஆணாதிக்கம், பிறர் பெண்டிரைப் பொது படுக்கைக்கு அழைக்கும் விபச்சாரத்தைக் கோரும் முரண்பட்ட போக்கை வெளிபடுத்தும்போது, அது ஆணாதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டது என்பதையே இப்பாடல் காட்டுகின்றது. இதை மேலும் பார்ப்போம்.
''இலைநல வாயினும் எட்டி பழுத்தாற்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறவல்செய வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே"47
- இதன் அர்த்தம் ''இலை முதலியவற்றால் அழகாயுள்ள எட்டிமரம் குலையாகப் பழுத்திருத்தாலும், அக்குலையில் கவர்ச்சியுடையதாகிய பழத்தைப் பறித்து உண்ணலாகாது, அதுபோல, முலையால் கவர்ச்சியைக் காட்டிப் புன்முறுவல் செய்வார்மேல் அவரது கவர்ச்சியில் ஈடுபடாது விலகிவிட வேண்டும். அவ்வாறு அவர்பால் செல்லும் மனத்தினையும் கடியவேண்டும்" என்று பெண்ணை இழிவுபடுத்துகின்றார். ஏதோ ஆண்களைக் கவர முலையைக் கொண்டு திரிவதாகப் பெண்களைக் காட்டும் ஆணாதிக்கம், சொந்த மன வக்கிரத்தை எதிர்மறையாக்குகின்றது. பெண்கள் இதைப் பிடிக்க திரிவதாக இன்றைய பின்நவீனத்துவச் சாக்கடைகள் திருமூலரின் திருமந்திர வழியில் கூறும்போது, ஆணாதிக்க ஒற்றுமை மற்றும் பெண்பற்றிய ஒத்த ஆணாதிக்கக் கண்ணோட்டம் பிரதிபலிக்கின்றது. பெண்ணின் முலை ஒரு பால் சுரப்பி என்பதை ஆணாதிக்கம் மறுத்து, அதைக் கவர்ச்சி காட்டுவதாகவும், பிடிக்கக் கோருவதாகக் காட்டுகின்ற நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய வெளிப்பாடுகள் கேவலமான மனிதச் சிந்தனை வக்கிரங்கள்தான்;.
''பாலன் பசியாறும் பால் முலையடா சண்டாளா"
- என்று மட்டக்களப்பு நாட்டுப்புறப் பாடல் ஆணாதிக்க வக்கிரத்தை இழிவாக்கிக் காட்டுகின்றபோது, முலைபற்றி நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தைப் பெண் எள்ளி நகையாடுகின்றாள். ஆண்கள் பெண்களின் பால் சுரப்பியைப் பாலியல் நுகர்வு அடிப்படையில் உருவகிக்கும் சிந்தனைப் பண்பாடுகள், பெண்ணையும் பாதிக்கின்றது. ஆனால், அதை ஆண்தான் தனது ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை வக்கிரத்தில் இரசிக்கின்றான், கோருகின்றான் என்பது எதார்த்தமாகும். இங்கு பெண் சார்ந்த குருட்டுப் பெண்ணியம் கவர்ச்சி காட்டுவதைக் கோட்பாடாக, உரிமையாகக் கூறுகின்ற போது, ஆணாதிக்கம் பெண்ணின் இயற்கையை விற்கின்ற, வாங்குகின்ற நுகர்வு வக்கிரத்தில் பெண்ணியத்தைக் கோட்பாட்டு ரீதியாகச் சிதைத்து, நகர்த்தியதைக் காட்டுகின்றது.
''மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனையுகு நீர்போற் சுழித்துடன் வாங்குங்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே"47
இதன் அர்த்தம், ''பிறர் மனை செல்வோர் அம்மனைக்குரிய மாதரை நாடினால், மலைச்சுனையில் புகுகின்ற நீரில் மூழ்குவாரைச் சுழிக்குள் சிக்க வைத்தல் போல, காமச்சுழலில் சிக்க வைத்துவிடும், கனவு போல அம்மாதர் மாட்டுச் சிறிது சுரக்கின்ற அன்பை, நனவு போல உண்மையானது என்று விரும்புதல் கூடாது."47
இங்கும் பெண் ஏதோ கவர்ந்து இழுப்பதாகப் பெண் மீது குற்றம் சாட்டுவது நிகழ்கின்றது. பலதாரமணத்தில் ஆணின் உரிமையே விபச்சாரத்தை உருவாக்குகின்றது. பெண்ணின் உரிமை மறுப்பே விபச்சாரம் செய்ய வைக்கின்றது. பெண் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு, பாலியல் ரீதியாக நலமடிக்கப்பட்ட நிலையில் விபச்சாரத்தின் பொதுத்தன்மை சமூக வடிவமாகின்றது. ஓர் ஆண், தனது மனைவியைத் தாண்டி பாலியல் இன்பத்தை விபச்சாரியிடம் பெறச் செல்லுகின்றபோதும் சரி, விபச்சாரி அதிகத் திருப்தியைக் கொடுக்கின்றாள் என்றாலும் சரி, தனியுடைமை, தனியார்மயமாக்கல் போல் காணப்படும் சிறந்த வாங்கும் - விற்கும் சந்தை உறவுகளே காரணமாகும். குடும்பத்தில் ஆண் - பெண்ணின் வரையறுக்கப்பட்ட கடமைகள், உணர்வுகள், பாலியல் நடத்தையில் வரைமுறைக்குள் தம்மை ஈடுபடுத்த நிர்ப்பந்திக்கும்போது, சுதந்திரமான பாலியல் ஈடுபாடு இருப்பதில்லை. ஆண் கோருகின்ற உரிமையும், கடமையும், உணர்ச்சியும் பெண் கோருகின்ற உரிமையும், கடமையும், உணர்ச்சியும் முரண்பட்ட வடிவில் ஆணாதிக்க எல்லையில் நெருக்கடியாகுகின்றபோது, பாலியல் இன்பம் நலமடிக்கப்படுகின்றது. இது விபச்சாரத்தில் சுதந்திரமாக இருப்பதால் ஆண் அதன் அடிமையாகின்றான்;. இது போன்று ஆண் - பெண்ணின் கள்ள உறவுகள் பூரணமான திருப்தியை, மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இருக்கின்ற ஆணாதிக்கக் குடும்ப அமைப்பே விபச்சாரத்தின் மூலமாகும். ஆண் - பெண் சுதந்திரமான மனிதர்களாக, சுதந்திரமான இணைவாக, கடமையும் உரிமையும் கோராததாக மாறுகின்றபோது விபச்சாரம் அற்றுவிடும். பாலியல் நெருக்கடி அருகிவிடும்;. இதைவிட்டு விபச்சாரியைக் கவரும் பேயாகக் காட்டுவதும், ஆணுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதும் ஆணாதிக்க அமைப்பின் பாதுகாப்பை முன்னிட்டுத்தான்;. விபச்சாரத்தை உருவாக்கிப் பாதுகாப்பவனே அதைப் பெண் மீது குற்றம் சுமத்தி, ஆணை ஒழுக்கவாதியாகக் காட்டுவது ஆணாதிக்க நிதிக் கோவையாகும்;. ஆண்களின் கற்பு கேள்விக்கு அப்பாற்பட்டதாக விளக்கும் ஆணாதிக்கம், விபச்சாரத்தைச் சமூக வடிவமாக்குகின்றது. ஆணின் கற்பு விதிவிலக்காகின்றபோது விபச்சாரத்தை நாடவைக்கின்றது. பெண்ணின் கற்பு கேள்விக்குட்பட்டு ஒழுக்கமாகின்றபோது, விபச்சாரம் அதன் அடிப்படையாகின்றது. இதுபோன்ற ஆணாதிக்க விளக்கங்கள் எல்லையற்று காணப்படுகின்றது.
உ. சமயம் சார்ந்த பெண் வெறுப்பு - ஆணாதிக்கம்
திருவாசகப் பாடல்களைப் பாடிய நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் தனது ஆணாதிக்க வக்கிரத்தில் இருந்து, பெண்களைக் காமத்தின் உருவகமாகக் கண்டு பெண் வெறுப்பை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.
''கொள் ஏர்(ப்) கள(வு) அகலாத் தடங் கொங்கையர்
கொவ்வைச் செவ்வாய் வின்ளேன் எனினும்..."43
''கொழுமணியோர் நகையார் கொங்கைக் குன்றிடைச்
சென்று குன்றி விழுமடியேனை..."43
''முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்ப
மூழ்கி விதவைச் செய்வேனை..."43
''சுரள்புரி கூழையர் சுழலிற் பட்டுன் திறம் மறந்திங்
கிருள்புரியாகையிலே கிடந் தெய்தனன்"43
பெண்ணை அங்க அங்கமாகச் சித்தரித்ததுடன், பெண்ணின் உறுப்புகளைக் கூட, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் மாணிக்கவாசகர் வருணிக்க தவறவில்லை. இதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. பெண்களைக் குற்றம் சாட்டியபடி, கடவுளிடம் இதில் இருந்து மீள அருள்கோருகின்றார். அந்த ஆண் கடவுள்களும் இதைப் போன்று வக்கிரமானவர்கள் என்பது ஒருபுறம் இருக்க, பெண் கடவுள்களும் இதையொத்த வெளிப்பாடுடையவர்கள் என்பதற்குத் திருஞான சம்பந்தரின் பல தேவாரப் பாடல்கள் சான்றாக இருக்கின்றன. திருஞானசம்பந்தர் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை வருணித்துப் பாடிய பாடல்கள் பல. மாணிக்கவாசகர் பெண்ணின் வாயை வருணிக்கின்றபோது, இன்றைய அழகு சாதனத்தின் உள்ளடக்கம் வெளிப்படுகின்றது. ஆண்கள், பெண்களின் உதடுகளை வருணித்த வழியில் விரும்பியதைப் பூர்த்தி செய்யவே, இன்றைய சொண்டு மை சந்தைக்கு வருகின்றது. ஆணாதிக்க அழகியல் நோக்கில் சொண்டு மை சந்தைக்கு வந்தததற்கு, மாணிக்கவாசகரின் அன்றைய ஆணாதிக்க வருணிப்புகள் அடித்தளமாகின்றன. ஆணாதிக்கத்தின் பெண்ணைப் பற்றிய விளக்கங்கள் கொச்சைத்தனமானவை. அதைப் பண்பாடாகக் கொண்டு அதில் இருந்து பெண் மீது வெறுப்பைக் கக்குகின்றன. இதையே மாணிக்கவாசகர் தனது ஆணாதிக்கப் பாடலாக முன்வைக்கின்றார்.
ஊ. சித்தர்களின் ஆணாதிக்கம்
இன்று சித்தர்கள் பற்றிய பலவித பிரமைகளைப் பலரும் விதைத்துவிட முயலுகின்றனர். மோசடிகள் மூலம் பொறுக்கித் தின்ற பார்ப்பனர்களின் சில செயல்களை எதிர்த்துக் கொண்டு உருவான சித்தர்கள், ஆணாதிக்கவாதிகளாகவும் பெண் மீது வெறுப்பு கொண்டோராகவுமே இருந்தனர். இன்று பார்ப்பனியத்துக்கு எதிராக முன்நிறுத்த முயலும் சித்தர்கள் ஊடாக, ஆணாதிக்கத்தைப் பூசி மெழுக அல்லது மௌனம் சாதிப்பதன் மூலம் சீர்திருத்தத்தையே சமுதாய மாற்றமாகக் காட்டமுயலுகின்றனர். ஆனால் பெண் வெறுப்பு கொண்ட சித்தர்கள் சமூக மாற்றத்தைச் சாதிக்க நேரடியாக வழிகாட்டமுடியாது. மாறாக, அக்காலத்தைப் புரிந்து கொள்ள, பார்ப்பனியத்தையும் அதன் கொடூரத்தையும் புரிந்துகொள்ள உதவமுடியும்;. இனி சித்தர்களின் பெண் வெறுப்பை, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்;. பாம்பாட்டிச் சித்தர் பெண்ணாசை என்ற தலைப்பில்,
''செண்டு முலைவண்டுவிழி கொண்ட மாதரழகை
...
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என உவமை வைத்துக் கூறுவார்
கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என்றே துணிந்து ஆடு பாம்பே
மலஞ்சொரி கண்ணை வடி வாழுக்கொழுப்பாக
வருணித்துச் சொல்வார் மதிவன்மை இல்லாதார்
குலநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே
சிக்குநாறுங் கூந்தலையே செலுமை வேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்கு நெக்கு உருகிப் பெண்ணை நெஞ்சில் நினைப்பாள்
நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே
நாறிவரும் எச்சில்தனை நல்லமுதென்றும்
நண்ணாஞ்சளி நாசிதனை நற்குமிழ் என்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கள்
கோன்நிலையை அறியார் என்று ஆடுபாம்பே"48
பெண் உறுப்புகள் பற்றிய இழிவுபடுத்தப்பட்ட, கேவலப்படுத்தபட்ட ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய விளக்கம்தான் இவை.
ஆண்களின் காமத்தையும் அதன் வக்கிரத்தையும் எதிர்ப்பதற்குப் பதில், பெண்ணைக் கொச்சைப்படுத்துவதன் ஊடாக ஆண்களின் ஒழுக்கம் கோரப்படுகின்றது. சமூக ஆணாதிக்க இழிவுகளுக்குப் பெண்ணைக் குற்றம் சாட்ட சித்தர்கள் தயங்கவில்லை. இதையொத்த பட்டினத்தார் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
''வாய்நாறுமூழல் மயிர்ச்சிக்குநாறிடு மையிடுங்கண்
பீநாறுமாங்கம் பிணவெடிநாறும் பெருங்குழிவாய்
சீதாறும் யோனி யழனாறுமிந்திரியச் சேறுசிந்திப்
பாய்நாறுமங்கையர்க்கோ லிங்ஙனேமனம் பற்றியதே"48
''நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முனரி மொடடென்றாம்
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
...
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சி திருக்கும் இடைக்கழி வாயில்
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி
புண்இது என்று புடவையை மூடி
...
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி
மலம் சொரியும் இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்த இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிது என வேண்டா
பச்சிலை இடினும் பக்தர்க்கு இரங்கி
...
பெண்ணாகி வந்தோரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடி தடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போதப் பொருள் பறிக்க
எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே!"43
இது போன்ற பல பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றது.
ஆண்களின் தவறுக்குப் பெண்ணைக் குற்றம் சாட்டுவது ஆணாதிக்க ஜனநாயகமாகும.;; இதுவே இன்றைய சமூக அமைப்பாகும்;. கற்பழிப்புகள் முதல் பெண் மீதான அத்து மீறல்கள் வரை பெண்ணின் மீதான குற்றமாக, அவளின் நடத்தை, உடுப்புகள், நடந்து கொண்ட முறைகள் என்று ஏராளமான விளக்கங்களின் ஊடாக இன்றும் ஆணாதிக்கச் சட்டம், ஆணைப் பாதுகாத்து பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. பெண்ணை இந்த எல்லைக்குள் தான் பூட்டி வைப்பதும், மூடிக்கட்டுவதும் என்ற ஆணாதிக்க நீதி சார்ந்த ஒழுக்கம் கோருகின்றது. கடவுளை நோக்கி துறவு மற்றும் ஏதோ ஒருவகையில் சமுதாய உழைப்பில் இருந்து அன்னியப்பட்ட பிரிவுகள், பெண்ணிடம் இருந்து விலகிய ஒழுக்கத்தை முன்வைக்கின்றபோது, அதை வைக்கின்ற ஆண் தவறுகின்றபோது, பெண் மீது குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் முலையை ~இந்தா பிடி| என்று திரிபவர்கள் என்று பின்நவீனத்துவ ஏகாதிபத்தியச் சாக்கடை கைக்கூலிகள் தலித்துகள் பெயரில் கூறும்போதும் சரி, இவற்றைப் போற்றி நியாயப்படுத்தி நிற்கின்ற போதும் சரி, எழுதுகின்ற போதும் சரி, பட்டினத்தார், பெண்கள் ~முலையால் மயக்கி| ஆண்களைச் சிதைப்பவர்கள் என்று கூறும் போதும் சரி, சினிமாவில் ''பிள்ளைக்குத் தாய்ப்பாலைத் தூக்கி கொடுக்கச் சொல்லு" (பெண்ணின் உறுப்பை ஒட்டி நிறைய பாடல்கள் சினிமாவில் உள்ளன) என்று பாடும்போதும் சரி, இவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.
பெண்ணின் உறுப்புகள் மீதான ஆணின் வக்கிரமான காமமாக ஆணாதிக்கம் வெளிப்படுகின்றபோது, பெண்ணைக் குற்றம் சாட்டுவது அல்லது அதைப் போற்றி அனுபவிப்பது என்று சமூகத்தின் வேறுபட்ட நடைமுறைத் தேவை கருதியே பெண்ணின் உறுப்புகளையும், அவைகளின் செயல்களையும், நடத்தைகளையும் விளக்குகின்றனர். ஆனால், இவ்வாறு வேறுபட்ட தளத்திலும் ஒரே நோக்கில் பெண்ணைக் காண்பது பொதுவாக உள்ளது.
எ. மகாபாரதத்தில் ஆணாதிக்கமும் பெண்ணியமும்
மகாபாரதத்தில் வரும் திரௌபதி பல சகோதரக் கணவன் முறையில் இருந்ததைக் காட்டுகின்றது. அருச்சுனன், வீமன் மனைவியர்கள் பல ஆண் மணத்தில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. இன்று இருக்கும் ஆணின் பலதார மணத்துக்குப் பதில் அன்று பெண்ணும் பல ஆண் மணத்தில் இருந்ததை மகாபாரதக் கற்பனை புனைவு இலக்கியம் சமுதாயத்தின் இயல்பில் இருந்து புனைந்து காட்டுகின்றது.
அல்லி அரசாணிமாலை புராணச் சார்பு கதைப் பாடலில் பாண்டியர்களிடம் கப்பம் வாங்கும் நீன்முகனை அல்லி ஏழு வயதில் அடக்குகின்றாள். பின் பட்டம் சூட்டிக் கொண்டு 12 வயதில் வேட்டைக்குப் புறப்படுகின்றாள்;. இதே நேரம் தவறு இழைத்த அருச்சுனன் கிருஷ்ணன் உடன் காட்டுக்கு வருகின்றான். அங்கு அல்லியைக் கேள்விப்பட்டதுடன் அவள் திருமணத்தை வெறுப்பதையும் அறிகின்றான்;. இவன் ஒரு தலைப்பட்சக் காதல்பட்டு அல்லி சேனை மீது கிருஷ்ணன் துணையுடன் மாய விலங்குகளை ஏவுகின்றான்.
அல்லி இதை எதிர்த்து அம்பு வீசுகின்றாள். அருச்சுனன் அம்பு பொறுக்கி கொடுக்கின்றான். அல்லி களைப்படைய, அருச்சுனன் அவளின் காலைப் பிடிக்க, அவன் ஆண் எனத் தெரிந்த அல்லி அருச்சுனனைத் துரத்துகின்றாள். கிருஷ்ணனுடைய சதி ஆலோசனைப்படி மருந்து கலக்கி அவள் பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பதை அறிந்த அல்லியின் சேனைப் பெண்கள் அவனைப் பிடித்து அல்லியின் ஆணைப்படி தண்டனை வழங்கப்படுகின்றது. கிருஷ்ணன் துணையால் அருச்சுனன் தப்புகின்றான். இப்படி அல்லிக்கும் அருச்சுனனுக்கும் இடையில் போராடுவதும், அல்லியின் வெற்றியைக் கிருஷ்ணன் துணையுடன் அருச்சுனன் தடுப்பதுமாகக் கதை தொடர்கின்றது. பின் அல்லியை நித்திரையில் கிருஷ்ணனின் துணையுடன் அருச்சுனன் கற்பழித்து விடுகின்றான்;. நித்திரையிலேயே தாலியும் கட்டி விடுகின்றான். தாலியை அறுக்கமுடியாத வரத்தைக் கிருஷ்ணன் இடம் அருச்சுனன் பெறுகின்றான். பின்னால் அல்லி இந்தப் போராட்டத்தில் பாண்டவர்களுடன் போர் செய்கின்றாள். அங்கு தந்திரமாகப் பிடித்து அல்லியைத் திருமணம் செய்கின்றான் அருச்சுனன். மீண்டும் அல்லி மதுரை சென்று அரசாள்கின்றாள்.
இந்த இழுபறி மற்றும் அருச்சுனன் கிருஷ்ணன் சதிகள் மூலம் பல பெண்களைக் கவர்ந்த நீண்ட கதையில் அருச்சுனன் அழகு பற்றி குறிப்பிடும் போது அல்லி கூறுவதைப் பார்ப்போம்.
''அழகு வேண்டுமென்று சொல்லி யாரடி காத்திருந்தார்
மாப்பிளை வேண்டுமென்று மயங்கினவர் யாரடி
கணவனை வேண்டுமென்ற காத்திருந்தவர் யாரடி
....................
மண்ணாண்ட ராசத்தி மனையாட்டி யாயிருந்தால்
பூமியாண்ட ராசத்தி பெண்சாதியாயிருந்தால்
கண்டார் நகையாரோ கலியுகத்தார் எசாரோ"49
பவளக் கொடியைக் கட்டாயப்படுத்தி அருச்சுனன் அடைந்தபோது, அருச்சுனன் கூறுவதைப் பார்ப்போம்.
''மகுடத் துரைச்சியவள் வாழ்வரசியல்லி நல்லாள்
அல்லியவளுடைய ஆண்மையுனக்கில்லையடி"49
அருச்சுனன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வராமையால் அல்லி படை எடுத்து வரும் போது அருச்சுனன் பயப்படுவதை ஒட்டி,
''மதிமயக்க மாச்சுது மாயவரே என்ன செய்வேன்
எங்கே யொளித்து இருப்பேன்காண் மைத்துனரே
நான் எமலோகம் போவேனோ ஏழுலகம் கொண்டவனே
பிரமலோகம் போவேனோ பெருமாளே சொல்லுமென்றாள்"49
அல்லி அருச்சுனனின் இயல்பை அறிந்து ''வேறொருத்தி வாசலுக்குச் சென்றால் வெட்டிப் போட்டுவிடுவேன்"49 என்று எச்சரித்த போது அருச்சுனன் பயப்படுவதைப் பார்ப்போம்.
''வெட்டத் துணிவாளே வீரியத்தைச் செய்வாளே
கணவனென்றும் பாராளே கண்டித்தும் போட்டிடுவாள்
................
உயிரிருந்தானாக்கால் உப்பு விற்றும் உண்ணலாம்"49
அல்லியிடம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட சுபத்திரை மீது வெறி கொண்டு துரியோதனன் அல்லி அரண்மனையை நோக்கி வரும் போது அவனைச் சித்ரவதை செய்வேன் என அல்லி கூறுவதைப் பார்ப்போம்;.
''கிளிமொழியீர் நானிருக்கக் கிலேசம் உமக்கேனோ
புலி போல நானிருக்கக் பூவைமீர் அஞ்சுவதேன்
ஆணையின் மத்தகத்தைச் சிங்கம் பிளப்பது போல்
அவனுடைய சேனைகளை அடியோடு கொள்வேனே
உதிரம் புரள வைப்பேன் ஓட்டுவேன் ஊரை விட்டு
...............
அங்கம் அழுகியவன் ஆவிகள் அற்றவிழச்
செய்கிறேன் பாருங்கள் தேர் விஐயன் தேவியரே"49
அல்லியிடம் சிக்கி கொண்ட துரியோதனனைச் சவுக்கு கொண்டு தண்டிக்கும் காட்சியை,
''....அல்லி சவுக்கெடுத்து சாடுகிறாள் ஆனமட்டும்
வஞ்சம் தெளியுமட்டும் வாழ்வரசி சாடுகிறாள்
கோபம் அடங்கு மட்டும் சாடி..."49
அல்லியின் மீது கிருஷ்ணன் என்ற இறைவன் துணையுடன் மாய நிலையில் நித்திரையில் கற்பழித்து கர்ப்பமாக்கிய நிலையில், வஞ்சத்தால் பிடித்த நிலையில், பாஞ்சாலி சொல் கேட்டு தாலி கட்ட சம்மதித்தபோது அல்லி கூறுகின்றாள்.
''கழுத்திலே தாலியது கட்டியிருக்கையிலே
வயித்திலே பிள்ளையது வந்துமிருக்கையிலே"49
- என்று கூறியே குழந்தைக்காகத் திருமணத்தைச் சம்மதித்தாள்.
இந்த சமயப் புராணக் கதையிலேயே ஒரு பெண்ணின் ஆளுமையைப் புலப்படுத்துகின்றது. பெண்ணின் அதிகாரம், சமூக அந்தஸ்து என்பன பெண்ணின் உயர்ச்சியைப் போற்றுகின்றது. பெண்கள் மீதான ஆண்களின் அத்துமீறல்களுக்குத் தண்டனை அளிப்பதும், அதை எதிர்த்துக் குரல் கொடுத்து வென்ற வரலாற்றைக் காட்டுகின்றது. ஆணாதிக்கச் சமூகம், பெண்ணாதிக்கச் சமூகம் என்ற இரு தளத்திலான போராட்டத்தில் பெண்ணின் போராட்டத்தை, பெண்ணின் பெண்மையில் இருந்து ஆணாதிக்கம் வரையறுக்கும்போது, அதை ஆண்மையாகக் காட்டுவதன் ஊடாக, பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க விளக்கம் ஊடாக, பெண் அடிமைப்படுத்தப் படுகின்றாள். இது இன்று அடங்காப்பிடாரி, வாய்க்காரி போன்ற பதங்கள் ஊடாகக் கேவலப்படுத்தப்படுகின்றது. எப்போதும் ஆண்கள் பெண்ணை நோக்கி வலிந்து செல்வதும் பின்னால் உதறி எறிவதும், வேறு பெண்ணை நோக்கி அலைவதும் என்ற ஆணின் போக்கை எதிர்த்து எச்சரிக்கும் அல்லி அதற்குத் தண்டனையைக் கொடுக்கவும் தயங்கியதில்லை.
பெண்ணின் அதிகாரம், சொத்துரிமை அல்லியைச் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச் செல்லுகின்றது. பாண்டவர் நீதிக் கதைகளில் பாண்டவர் பக்கம் காட்டப்படும் நீதியில், ஆணாதிக்கம் கொலுசாகியிருப்பதை அல்லியின் நீதிக்கான போராட்டமும் காட்டுகின்றது. இன்று நாம் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும்போது அல்லியின் நிலையைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்;. அதிகாரமும், சொத்துரிமையும் இன்றி ஆணாதிக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, பெண்ணின் விடுதலையைச் சாதிக்கவோ முடியாது என்பதை இது நிறுவுகின்றது. பெண்ணின் அதிகாரத்தையும், சொத்துரிமையையும் மீட்க இன்று போராடும் ஒரே மார்க்கம், பாட்டாளிவர்க்க வர்க்கப் போராட்டம் மட்டுமே என்பது எதார்த்தமான முரண்பாட்டுக்குள், மாற்றத்தைக் கோரும் இயங்கியலாக உள்ளது.
கணவன் ஒருவன் தேவையில்லை என்பதைப் பறைசாற்றும் அல்லி, வயிற்றில் குழந்தை உருவாகும்போது பெயரளவில் தந்தையைக் கோருவது என்பது, பெண்ணாதிக்கச் சமூகத்தில் இருந்து ஆணாதிக்கச் சமூகம் தோன்றி வளர்ந்து வந்த போராட்டச் சமுதாயத்தை இவை பிரதிபலிக்கின்றது. அதாவது ஒரு பெண்ணுக்குக் கணவன் அவசியமில்லை. ஆனால் குழந்தைக்குத் தந்தை அவசியம் என்பதை இது காட்டுவதுடன், தாலியின் அவசியம் பற்றிய விதந்துரைகளும் புகுத்தப்படுகின்றன.
பேய் போன்றவற்றை ஆணாதிக்க அமைப்பு பெண்ணை இழிவுபடுத்தி வருணித்தது. நாலடியாரில் பேய் பற்றிய கூற்றில்,
''.. .. அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்"50
- என்று குறிப்பிட்டுப் பெண்ணைப் பேய்க்கு ஒப்பிடுகின்றார். அதாவது கணவனுக்கு உணவு வைக்காத பெண் பேய் என்று கூறி இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் ஆணுக்குக் கட்டுப்படாத பேய்களாக இருக்கின்றனர். அதாவது ஆணுக்கு அடிமைப்பட மறுக்கும் பெண்கள் பேய்களாகின்றனர் அல்லது தெய்வமாக்கப்படுகின்றனர். திருமணம் செய்யாத காளி போன்ற தெய்வங்கள், காரைக்கால் அம்மையார் போன்ற நாயன்மார்கள் அனைவரையும் பேயாக அல்லது சக்தி படைத்த மனுசியாக ஆணாதிக்க உலகம் வருணித்து, வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றுவதன் மூலம் ஆணாதிக்க அமைப்பைப் பெண் மீறாது பாதுகாத்தனர், பாதுகாக்கின்றனர். பேய் பற்றிய பழமொழிகள் பெண்ணைக் குறித்N;த எழுகின்றன. இது போன்று தனிச்சொத்துரிமை அமைப்பில் வெளியாகும் இலக்கியங்கள், ஆணாதிக்க இலக்கியமாக இருப்பது பொது வடிவமாகவுள்ளது. தனிச்சொத்துரிமை அமைப்பின் அனைத்து இலக்கியங்களும் ஆணாதிக்கத் தன்மை கொண்டவை. அவை தனியான நூலுக்கு உரிய வகையில் விமர்சிக்கக் கூடிய அளவுக்கு விரிவானவை. சுருக்கம் கருதி சிறுபகுதியையே நான் இதில் விமர்சித்து அம்பலப் படுத்தியுள்ளேன்.