Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _5.jpgசாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"27, ''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."27 சாதிய ரீதியாகப் பிளந்து, தனிச்சொத்துரிமை சாதியமைப்பு, ஆணாதிக்க ரீதியாகத் தாழ்ந்த சாதிப் பெண்களை உயர்சாதி ஆண்களுக்கு அடிமையாக்கி, பாலியல் இன்பத்தைக் கேள்வி கடந்து அனுபவிக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பெண்ணின் "கற்பு" பற்றிய ஆணாதிக்க விளக்கம் உயர்சாதி ஆணாதிக்கத்தால் சொந்த நலன் சார்ந்து சமுதாய ரீதியாகவே மீறப்படுகின்றது. பெண்ணின் கற்புரிமை அவளை மீறிச் சூறையாடப்படுகின்றது. இன்று நடக்கும் சாதி வன்முறைகளில், இந்து பாசிச வழியில் கற்பழிப்பு பொது வடிவமாகின்றது. அது மறைமுகமாக, நேரடியாக நியாயப்படுத்தப்படுகின்றது. இனி சாதியப் பிறப்பைப் இந்து ஆணாதிக்க விளக்க வழியில் ஆராய்வோம்.


பிறப்பின் சாதிப் பிளவை இட்டு இந்து மதம் எப்படி விளக்கம் தருகின்றது எனப் பார்ப்போம்;. ''சாலசாம்பவன் என்பவன் இறைச்சியைத் தினமும் சிவலிங்கத்துக்குப் படைத்து வந்தானாம். ஒருநாள் காமதேனு என்ற பசு, தேவர் உலகத்தில் இருந்து இறங்கிவந்ததாம். தந்தை, மகனைப் பார்த்து, ''இன்று நீ அதன் தசையை அறுத்து சிவலிங்கத்துக்குப் படை" என்று கூறியதுடன், அந்த இறைச்சியை உண்ணக் கூடாது என்றும் கூறிச் சென்றானாம். மூத்தமகன் அதன்படி செய்தபோது அவனின் கர்ப்பிணியாக இருந்த மனைவி அவ்விறைச்சியை உண்ணவிரும்பினாள். (கிறிஸ்தவத்தில் ஆப்பிளைத் தின்று சாத்தானின் பிறப்பாகியது பெண்ணால்தானே) அதனால் அதில் ஒரு பகுதியை உண்ணக் கொடுத்தான். இதனால் காமதேனு அவ்விடத்தில் இறந்துவிட்டதாம். தந்தை வந்து அதிர்ச்சியடைந்து காமதேனு இறந்த காரணத்தை அறிந்து, இளையமகனிடம் பூசையை ஒப்படைத்ததுடன், மூத்த மகனைச் சேரிக்கு செல் என்றாராம்."28


இந்தக் கதை பலவிடயத்தை எமக்கு உணர்த்துகின்றது. இந்தியச் சமுதாயத்தின் மூத்தகுடிகள் தாழ்சாதி மக்கள் என்பதையும், சாதி ரீதியாகப் பிறப்பைப் பார்ப்பனியம் தனது நலனில் இருந்து புனைந்ததையும் காட்டுகின்றது. கறுப்பு - வெள்ளை பிறப்பைப் பற்றி கிறிஸ்தவ மதம் பைபிளில் கொடுக்கும் விளக்கும் இதுபோன்றதே. ஒருநாள் தந்தை மூன்று மகன்களுடனும் அமர்ந்திருக்கும்போது, தந்தையின் உடுப்பு விலகியிருந்ததாம். இதை ஒரு மகன் பார்த்து சிரித்தானாம். மற்றைய மகன் கண்டும் காணாதது போல் இருந்தானாம். மற்றவன் அதை மூடிவிட்டானாம். மூடிவிட்டவன் வெள்ளையனாகவும், கண்டும் காணாதவன் போல் இருந்தவன் மண் நிறப் பிறப்பாகவும் (ஆசியா வகை), மற்றவன் கறுப்பனாகவும் பிறந்ததாக ஆசியக் கிறிஸ்தவம் விளக்குகின்றது. இதுபோல் இன்னொரு ஐரோப்பிய விளக்கம் சாத்தானின் பிறப்பு கறுப்பாகவும், கடவுளின் பிறப்பு வெள்ளையாகவும் இனவெறியுடன் பைபிள் எடுத்துரைக்கின்றது.


பிறப்புகள் பற்றிய விளக்கங்கள் சமுதாயத்தின் அடக்குமுறைகளை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டதைக் காட்டுகின்றது. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்தச் சாதியை எப்படி அடையாளம் காண்கின்றான் எனின், தந்தை வழியிலேயே ஒழிய தாய் வழியில் அல்ல. இந்த அடையாளம் கூட குழந்தையின் பிறப்புக்கு முன்பே, அதாவது கருவுக்கு முன்பே, ஆணினதும் பெண்ணினதும் விந்திலேயே தீர்மானகரமாகச் சாதியடையாளத்தைப் பெற்றுவிடுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பிறப்பு, விந்து இணைவில்தான் தீர்மானமாகின்றது. ஆனால், சாதி அதற்கு முன்பே சாதி அடையாளத்துடன் தான் இணைகின்றது. ஆணாதிக்கம் வெற்றிபெற முன்பு சாதி என்பது இருந்ததில்லை. மாறாகக் கல்வி கற்ற குருகுலத்தில் குழந்தையின் வருணத் தொழிலை ஒட்டிக் குருவே தீர்மானித்தார். இந்த உரிமையைத் தந்தைக்கு மாற்றியதுடன் சாதிக் கட்டமைப்பு தீர்மானகரமாகின்றது.


அடுத்து, கல்வி கற்பிக்கும் குருவுக்கு இருந்த உரிமையை, தந்தையின் கைக்கு மாற்றியதன் மூலம் தந்தையின் தொழில் பரம்பரையாகி, தொழில் சார்ந்த வருணம் சாதியாகப் பரிணமிக்கின்றது. அடுத்து கல்வி கற்று வெளியேறும்போது அது பாராட்டாக இருந்த வரலாற்றை மாற்றி, ஒரு புனிதச் சமயச் சடங்காக மாற்றப்பட்டதன் மூலம் தந்தைவழி சடங்குரிமை சாதிப் படியைத் தீர்மானகரமாக்குகின்றது. அடுத்து, கல்வியில் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு பயிற்சிக்குப் பின்பு கல்வி என்பதை மாற்றி கல்விக்குப் பின் பயிற்சி என்பதன் மூலம், தந்தை ஆதிக்கக் கல்வி பெற்ற பின் பயிற்சியைக் குருவிடம் பெறுதல் என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் தந்தை அதிகாரம் தீர்மானகரமாகின்றது.


பல்வேறுபட்ட மனிதர்களுடன் சேர்ந்து, பல்வேறு கலைகளைப் பயின்று, அதில் இருந்து தொழிலை ஒட்டி வருணங்கள் உருவாக்கப்பட்டதை மாற்றினார் மனு (மனு என்பது அவரின் சொந்தப் பெயர் அல்ல. அவரின் சொந்தப் பெயர் சுமதி பார்க்கவ ஆகும்). அத்துடன் இதை எழுதிய காலத்தில் இவை அமுல்படுத்தப்படவில்லை. மாறாக கி.மு 170-150-இக்கும் இடைப்பட்ட காலத்தில் புஷ்யமித்திரரின் காலத்தில் புத்தத்துக்கு எதிராகச் செய்த படுகொலைகளின்போது, அதாவது ஒரு புத்தத் துறவியின் தலைக்கு 100 பொற்காசு என்று அறிவித்து நடத்திய பார்ப்பனிய ஆதிக்க வன்முறையின் போதே மனு ஸ்மிருதி என்ற பெயரில் அது சமூகத்தின் விதியாக்கப்பட்டது. மனுவின் காலத்தில் அவ்விதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராகப் ~பானா| என்ற கவிஞன் எதிர்த்து பாடியுள்ளதுடன், அன்று நடந்த கொலைகளையும் அம்பலப்படுத்தியதை அறியமுடிகின்றது. அத்துடன் அவ்வாட்சியைக் கைப்பற்ற நடத்திய பார்ப்பனிய வெறியாட்டத்தை நியாயப்படுத்த பல புதிய விதிகளையும் புகுத்தினர். (பார்க்க - அம்பேத்கர் நூலை.)13


தந்தையிடம் கல்வி கற்பிக்கும் உரிமையை வழங்கி, பரம்பரைத் தொழிலை உருவாக்கியும், குருவின் கல்வி கற்பிக்கும் உரிமையைப் பறித்தும், பயிற்சியை இரண்டாம் காலக் கட்டத்திற்கு உருவாக்கியதன் மூலம், தந்தைவழி சாதிப் பரம்பரை வருணத்துக்குப் பதில் உருவாகின்றது. இப்படி ஆணாதிக்க வழியில் குழந்தைக்குச் சாதி வடிவத்தைத் தந்தை கொடுத்தார். இதனால் பெண்ணின் திருமண உறவுகளில் கூட ஒழுங்கமைப்பு சாதிக் கண்ணோட்டத்தில், ஆணாதிக்க வடிவத்தை மனு மீள ஒழுங்கமைக்கின்றார். அதை ஆராய்வோம். அதாவது மன்னர் பரம்பரை (சத்திரியப் பரம்பரை) எப்படி அதிகார ஆட்சியாளர்களாக உருவாக என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் சாதி உருவாக்கத்திலும் தீர்மானகரமான பங்கை வழங்கியது.


தந்தைவழி சாதியமைப்பை உருவாக்க மனு 9.317 இல், .... ''பிராமணர்கள் கற்றறிந்தவர்களாக இருந்தாலும், அறிவிலியாக இருந்தாலும் சக்திமிக்க தெய்வமாவார்கள். நெருப்பானது வேள்வியில் வளர்க்கப்பட்டாலும,; வீட்டில் வளர்க்கப்பட்டாலும் சக்திவாய்ந்த தெய்வமாயிருப்பது போல்"25 என்ற உவமைகளுடன் வருணத்தைச் சாதியாக மாற்றிய பார்ப்பனிய மனுதர்மம் குழந்தைகளின் வாரிசுரிமையைத் தந்தைக்குரிமையாக்கியது. இதை மேலும் மனு 9.319 இல், ... ''பிராமணர்கள் எல்லாவிதமான இழிந்த தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எல்லாவற்றையும் கடந்த தெய்வத்தன்மை இருக்கின்றது"25 என்று ஏற்படுத்தியதன் மூலம் தொழில் சார்ந்து உருவான வருணம் தந்தைவழி சார்ந்து அதை மறுக்கத் தொடங்கியது. தொழில் சார்ந்த வருணத்துக்குப் பதில் தொழில் சாராத தந்தையின் பரம்பரை உரிமை சாதிப் படிநிலையை உருவாக்கியது. இது பின்னால் சில விதிவிலக்குடன் தொழில்களுக்குள்ளும் வளர்ச்சிப் போக்கில் புகுந்தது.


அதாவது பொருளாதார ஏற்றத் தாழ்வை உயர்த்தும் தந்தைவழி ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை, ஒரு தொழிலை முற்றுமுழுதாகப் பரம்பரையாக்க முடியாத போக்கில் சில தொழில்களைத் தீண்டத் தகாதோருக்கு மட்டும் ஒதுக்கியும், விலக்கியும்;, பார்ப்பனர்களுக்கும் சிலதைச் சிலருக்கு ஒதுக்கியும், விலக்கியும், என எல்லா பிரிவுக்கும் வரையறுத்ததன் மூலம் அடுத்த கட்டப் பாய்ச்சலைப் பார்ப்பனியம் தனக்குச் சார்பாக்கியது. தொழில்ரீதியில் தந்தை வழி வாரிசுரிமையின்றி திறமையின் அடிப்படையில் இருந்த வருணத்தைத் தகர்த்த பார்ப்பனியம், தொழில் சாராத சாதி வருணத்தை உருவாக்கி, தொழில் ரீதியிலும் முழுமையான சாதிவருணத்தைப் புகுத்த முடியாத தனிச்சொத்துரிமையின் சுரண்டல் நலன்கள் குறுக்கிட்டன. எனவே, இதில் பண்பாட்டுத் தளத்தில் ஒருகட்டப் பாய்ச்சலை மட்டும் ஏற்படுத்துவதில் இருந்து நடைமுறைப்படுத்தினர்.


மாற்றி அமைக்கப்பட்ட மனிதப் பிளவில் ஆண் - பெண்ணின் சேர்க்கையை ஒட்டிய பண்பாட்டுக் கலாச்சார ஒழுக்கங்கள் புதிய ஆணாதிக்க மனுதர்மப் போக்கைக் கோரத் தொடங்கியது. முன்பு வருணத்துக்கு இடையில் தந்தையின் பரம்பரை உரிமை இல்லாததால் இலகுவாக வருணம் கடந்த திருமணம், தந்தையின் வாரிசுரிமை சாதிக்கட்டமைப்பை ஏற்படுத்திய போது, திருமணத்திலும் தந்தைவழி ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டது. புத்தமதத்தை வெற்றி பெற்ற பார்ப்பனியம் அதற்கு முன் இருந்த சதுர்வருணத்தை மீள உருவாக்கியது. இருந்தபோதும் இந்தச் சதுர்வருணத்தில் நாலு பிரிவுகள் இருந்தபோதும் இங்கு கலப்பு மணங்கள் சாதாரணமாக நிகழ்ந்ததைப் பிராமணரான வியாச ரிஷியின் குடிவழிப் பட்டியலில் ஆதாரமாகக் (பார்க்க - அம்பேத்கரின் ஆய்வு நூல்கள்) காண முடியும். பல புகழ்பெற்ற முனிவர்களின் திருமணங்கள் எல்லாம் கலப்பு மணங்கள்தான்.


இதைத் தடுக்க மனு உருவாக்கிய ஆணாதிக்கச் சட்டங்கள், கட்டுப்பாடுகள் ஏராளமானவை. மனு 3.12 இல், ''இரு பிறப்பாளர்களில் முதல் திருமணத்துக்கு, சமமான சாதியைச் சேர்ந்தவர் (மனைவியர்) பரிந்துரைக்கப்படுகின்றனர்."25 மனு 3.13 இல், ''சூத்திர வருணத்தைச் சேர்ந்த பெண் சூத்திரனின் மனைவியாயிருக்க முடியும்..."25 மனு 3.15 இல், ''இரு பிறப்பாளர்கள், மடமையினால், கீழ் (சூத்திரன்) சாதி மனைவியரை மணக்கும்போது, விரைவில் தங்களுடைய குடும்பங்களையும், தங்கள் குழந்தைகளையும் சூத்திரர்களின் நிலைக்குத் தாழ்த்தி விடுகிறார்கள்."25 மனு 3.17 இல், ''சூத்திர மனைவியுடன் உடலுறவு கொள்கிற பிராமணன் இறந்தபின் நரகத்தில் ஆழ்வான். அவளிடம் அவன் குழந்தை பெற்றால் அவன் பிராமணன் என்ற அந்தஸ்தை இழந்து விடுவான்"25 என்ற தர்மத்தை மனு உருவாக்கி, பார்ப்பனியத் தந்தைவழி சமூக அமைப்பை உறுதிப்படுத்தினர்.


சாதி கடந்த திருமணத்தில், ஆணின் முந்திய உயர்சாதி தந்தைவழி உரிமை பறிக்கப்பட்டு, பெண்ணின் நிலைக்குத் தரம்தாழ்த்தும் ஆணாதிக்கம் பெண்ணின் சாதியடையாளத்தை ஆணுக்குக் கொடுக்கின்றது. இதன்மூலம் குழந்தை பெண்ணின் தாழ்சாதி நிலையைப் பெண்வழியில் பெற்றுக் கொள்கின்றது. சாதிக் கட்டமைவில் ஆண் சார்ந்த உயர்சாதி அழிப்பை, பெண்வழியில் இனம் காட்டுவது ஆணாதிக்கத் தந்தை வழிமுறைக்கு எதிரானதாக இருந்த போதும், ஆணாதிக்க மனுதர்மம் சாதியைக் கட்டமைப்பதில் தீவிரமாக இருந்ததைக் காட்டுகின்றது.


இந்த நடைமுறை சார்ந்த சாதி ஒழுக்கங்கள் ஆணாதிக்க ஆண்களின் பாலியல் வேட்கையையோ, தாழ்ந்த சாதிப் பெண்களுடனான உறவையோ தடுத்துவிடவில்லை. ஆண்கள் கீழ்சாதிப் பெண்களை நோக்கிச் செல்வதும், இதனால் அவர்களின் சாதி அடையாளம் அழிதலும், அதேநேரம் முன்பு வழக்கில் இருந்த திருமணமுறையினால் குழந்;தை ஆண்வழியில் அடையாளம் காண்பதும், அதேநேரம் உயர் சாதிப் பெண் தாழ்சாதி ஆணுடன் உடலுறவு கொள்ளும்போது, குழந்தை தாழ்ந்த சாதியை அடைவதும் சமூக நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதைத் தடுக்க மனு செய்த சதி குழந்தையைப் பெண்வழி சாதியால் அடையாளம் காண்பித்ததன் மூலம், உயர்சாதிப் பெண்கள் கீழ்நிலை அடைவதைத் தடுத்தது. அதேநேரம் தாழ்ந்த சாதி பெண்ணின் குழந்தை, பெண்ணின் மூலம் ஆணாதிக்கச் சமூகத்தில் அடையாளம் காண்பது என்பது, ஆணின் பொறுப்பில் இருந்து குழந்தையைச் சாதியின் மூலம் ஒதுக்கியது. இங்கு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையில் சாதி தடுப்பாகியது. இதனால் உண்மையில் விரும்பிய ஆண் - பெண் உறவு குழந்தையின் சாதியால் பிளவுபட்டு, பெண்ணை விபச்சார நிலைக்கு அல்லது வைப்பாட்டி நிலைக்குத் தரம்தாழ்த்தி, உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை அனுபவிக்க இருந்த சாதித்தடையைத் தகர்த்து இலகுவாக்கியது மனுதர்மம்.


இது உயர்சாதிப் பெண்களின் நிலையை மேம்படுத்திவிடவில்லை. ஆணாதிக்கத்தின் அடிமைநிலையைப் பெண் மீதான புதிய கட்டுப்பாடுகள் ஊடாக இறுக்கி, பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதிக்குள் நிறைவு செய்ததன் மூலம், பெண்ணின் புணர்ச்சியைக் கண்காணித்து, அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் சாதிக் கலப்பைத் தடுத்தனர். தாழ்ந்த சாதிப் பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதி எல்லைக்குள் வரையறுத்த மனுதர்மம், உயர் சாதிப் பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதிக்குள் எல்லைப்படுத்தியது. இங்கு இரட்டைத் தன்மை ஏற்பட்டது. தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் உயர் சாதி ஆணுக்கும் பிறக்கும் குழந்தையைத் தாழ்ந்த சாதியாகக் கண்ட ஆணாதிக்க இந்து தர்மம், உயர் சாதி பெண்ணுக்கும் தாழ்ந்த சாதி ஆணுக்கும் இடையில் பிறக்கும் குழந்தையைத் தாழ்சாதிக்குள் பெண்ணையும் சேர்த்துத் தள்ளிச் சென்று ஒழுக்கப் பண்பாடாக்கியது. சாதிகடந்த உறவுகள் கள்ள உறவாகத் தொடர்வது வழக்காக இருந்தது. உயர்சாதிப் பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கள்ள உறவு கொள்வதும், சாதி அடிப்படையில் மறைப்பதும் இலகுவாக இருந்தது. இதைக் கொண்ட ஒரு சம்பவத்தை உள்ளடக்கிய கதை வழக்கு ஒன்றைப் பார்ப்போம்.


''குமரி மாவட்டக் கடலோரக் கிராமங்களில் ஒன்றான புத்தூரில் குறும்பு இனப்பெண் முக்குவருடன் கள்ள உறவு வைத்திருந்தாள். ஒருநாள் உறவு கொள்ளும்போது கணவன் வந்துவிடவே, முக்குவரைத் தண்ணீர் கேட்டுக் குடிக்க வந்தவர்போல் அப்பெண் நிறுத்தினாள். வீட்டில் இருந்து கெண்டியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றும்போது, அப்பெண் முக்குவரிடம் கெண்டியைத் தொடாதே என்று பலமுறை கூறித் தண்ணீர் வார்த்தாளாம். தண்ணீர் குடித்துவிட்டு வெளியில் வந்த முக்குவர் ~சூத்திரத்தி குண்டி தருவாளாம் கெண்டி தரமாட்டாளாம்| என்று கூறிச் சென்றாராம்."28 இந்தக் கதை வழக்கில் பெண் கள்ள உறவில் சாதிகடந்து அனுபவித்த உணர்வு, சாதிக்கட்டுமானத்தில் பொருட்களைத் தொடுவதை மறுக்கின்றது. உயர்சாதிப் பெண்கள் கீழ்சாதி ஆண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவது ஆதிக்கச் சாதியின் அடிப்படையில் இலகுவானதாக இருக்கின்றது. (டானியலின் சில இலக்கியப் படைப்புகள் இதற்குள் வெளிப்படுகின்றது.)


இதைப் போன்ற மற்றொரு கதை வழக்கைப் பார்ப்போம். பனைமரம் தோன்றிய வரலாற்றைப் பார்ப்போம். ''காட்டில் சுனை ஒன்றை உருவாக்கி வலங்கையர்களைக் காளி வளர்த்து வர, அந்தச் சுனை நீரை ஒரு பிராமணனும் அவன் மனைவியும் குடித்துவிடுகின்றனர். ஆத்திரமடைந்த காளி அவர்களைத் தலைகீழாக நட்டுவிட ஆண் - பெண் பனையாக வளர்ந்தனராம்."28 மதக் கதைகள் பல்வேறு சமூக விளைவுகளை வெளிப்படுத்தியபோதும், பிறப்புகளின் வக்கிரங்கள் விகாரமானவை. பிறப்புகள் இழிவாடப்படுகின்றன. இயற்கையான பாலியல் உறவு, பரிணாம வளர்ச்சி இறைக் கோட்பாடுகளின் பின்னால் கோரமாக்கப்படுகின்றது. இந்த இடத்தில் பனையேறும் தாழ்ந்த சாதி ஆண்கள், உயர்சாதிப் பார்ப்பனப் பெண்களைத் தழுவுவதாகக் காட்டுவதன் மூலம், பனையேறுவது இழிவு என்ற பதத்தைக் கேலி செய்து பார்ப்பனியப் பெண்ணைப் பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தின் சில பொதுத் தன்மைகளைப் பிரதிபலிக்கின்றது. உயர்சாதிப் பெண்கள் தாழ்ந்த சாதி ஆண்களைப் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தி தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் தன்மையும், உயர் சாதி ஆண் தாழ்ந்த சாதிப் பெண்ணைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியபோது, சாதி ஆதிக்கம் பாலியலில் முரண்பட்டு இரண்டு தளத்தில் இயங்கியுள்ளது.


கீதையில் அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன்; அளித்த உபதேசத்தில், யுத்தம் சாதிக்கலப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை முன்வைக்கின்றது. அதை ஆராய்வோம்.


''குலகஷயே ப்ரணச்யந்தி குலதர்மா: ஸ்நாதனா:
தாமே நஷ்டே குலங் க்ருத்ஸ்ன - மதர்மோ பிபவத்யுத"23


- என்று அத்தியாயம் 1 சுலோகம் 40 இல், ''கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்து விட்டால், குலப் பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணச் சாங்கரியம் (குலங்களின் கலப்பு) ஏற்பட்டுவிடும்"23 என்று அருச்சுனன் கூறும்போது, ஆணாதிக்கச் சாதியமைப்பின் வெட்டவெளிச்சமான ஆதிக்கம் வெளிப்படுகின்றது. இந்தச் சாதிய ஆணாதிக்க ஒழுக்கத்தைக் குலைப்பவர்கள் துன்பத்தை அனுபவிப்பர் என்று கூறி செல்லும். அத் 1. சுலோகம் 41ஐப் பார்ப்போம்.


''அதர்மாபிபவாத் க்ருஷண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷீ துஷ்டாஸீ வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர"23


இதன் அர்த்தம், ''அவ்விதக் கலப்பு, குலத்தை அழித்தவர்களுக்கும் அந்தக் குலத்திற்கும் நரகத்தையே தரும். இவர்களுடைய பித்ருக்களெல்லாம் சிராத்த பிண்டமும் தர்ப்பண ஜலமும் அற்று நரகங்களில் விழுவார்கள்"23 என்று கூறும்போது, சாதியம் தகர்கின்றபோது சாதியக் கலப்பு பொருளாதார ரீதியாகப் பார்ப்பனியத்தின் தனிச்சொத்துரிமையைத் தகர்க்கும். இதனால் ஆணாதிக்கம் பலவீனப்பட்டு, பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். இதையே நரகத்துக்குச் சமமானது என்றும், இது குலத்தின் ஆணாதிக்கச் சாதிய ஆதிக்கப் பொருளாதார நலனைத் துடைத்தெறியும் என்ற அடிப்படையில், யுத்தத்தையிட்டு அருச்சுனன் பின் வாங்குவதையே காட்டுகின்றது. இந்தச் சிதைவை எப்படி வருணிக்கின்றான் என அத்தியாயம் 1 சுலோகம் 39 இல் பார்ப்போம்.


''சுகம் ந ஜ்ஙேயமஸ்மாபி: பாபாத ஸ்மாந்நிவர்த்திதும்
குலகஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜநார்த ந"23


இதன் அர்த்தம் ''குலம் அழிந்தால் புராதனமான குலத்தர்மங்கள் அழிந்து போகும். தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்துவிடும்"23 என்ற அடிப்படையான காரணத்தில் இருந்தே, கீதையை இந்துமதம் தூக்கிபிடிக்கின்றது. இந்தச் சிதைவால் ஏற்படும் விளைவையும் பார்ப்போம்.


''ஸங்கரோ நரகாயைவ குலக்னானாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த - பிண்டோதக - க்ரியா"23


அத் 1. சுலோகம் 42 இல் கூறும் அர்த்தம், ''வர்ணக் கலப்பை உண்டாக்குகின்ற குலப் பாதகர்களின் இத்தகைய தீங்குகளால் நிலையான சாதி தர்மங்களும், குலத் தர்மங்களும் அழிந்துபோகும்"23 என்று சாதியக் கடமைகள் சிதைவதால் ஏற்படும், ஆதிக்கச் சாதியின் சிதைவை வெளிப்படுத்துகின்றது. இது சமுதாயத்தின் பண்பாட்டு, கலாச்சாரச் சிதைவைப் பறைசாற்றுகின்றது. இந்தச் சிதைவால் நரகம் கிடைக்கும் என்று அடுத்த சுலோகம் கூறிச் செல்லுகின்றது. நரகம் என்பது சுகபோகமாக வாழ்வது அழிந்து போகும் என்பதை குறித்துச் சொல்லுகின்றது. அடுத்தவன் உழைப்பைச் சாதியக் கடமையாக்கி, அதை நிலையான சாதியாக்கித் திருமணக் கலப்பை மறுத்து, பெண்ணை அடிமையாக்கி வாழும் சுகபோகம், அழிகின்றபோது அது நரகமாக, சமுதாய இழிவாக இருப்பது கண்டே கீதை அஞ்சுகின்றது.


இந்த மகாபாரதத்தை எழுதிய வியாசர் கூட கலப்புத் திருமணத்தின் பிறப்பு என்பதும், அவர் பார்ப்பானாக மாறியதும் விசித்திரமன்று. பராசன் என்ற பார்ப்பன ரிஷிக்கு காளியென்ற மீனவப் பெண்ணிடம் பிறந்த மகனே வியாசர். இந்த வியாசர்க்கு க்ருதாசி என்ற வேத மங்கை பிறந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் நடந்த ஏராளமான கலப்பு மணப்பிறப்பைக் காணமுடியும். இதை ''ஏகாதச ஸங்கர வர்ணம்"23 என்று அழைக்கப்பட்டது.


''கர்ணன் (சூத்திரப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்.), உக்ரன் (சூத்திரப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்), அம்பஷ்டன் (வைசியப் பெண்ணுக்கும் பார்ப்பனுக்கும் பிறந்தவன்), மாகதன் (சத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்), ஸீதன் (பார்ப்பனப் பெண்ணுக்கும் சத்திரியனுக்கும் பிறந்தவன்), சண்டாளன் (பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன்)... என எண்ணற்ற பிறப்புகள் சாதிகடந்து காணப்படுகின்றது.


இன்று இந்தச் சாதி கடந்த கலப்புப் பிறப்பே ஆயிரக்கணக்கான சாதிகளைப் பிளந்து பிளந்து உருவாக்கியது. திருமணக் கலப்பே புதிய சாதிகளின் ஊற்றுமூலமாகும். சாதிக்கலப்பு சாதியை ஒழிப்பதற்குப் பதில், புதிய சாதியை உருவாக்கக் காரணமாக, மதத்தில் இருந்து விடுபடாமையும், சாதியக் கடமை பொருளாதார ரீதியாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதும் முக்கியமானதாகும். அத்துடன் இதன் மேல் ஆணாதிக்க வடிவம் சாதியைக் கடந்த போதும், தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் இறுகிக் கிடந்ததுமாகும். இது ஒட்டுமொத்தத்தில் புதிய சாதிகளைக் கிளைவிட்டு உருவாக்கியது. இது இரகசியமான சாதி கடந்த பாலியல் உறவாக மாறுகின்ற போதும், அல்லது அதிகாரத்தின் மூலம் பாலியலைக் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதி ஆணும், உயர் சாதிப் பெண் கீழ்ச் சாதி ஆணைப் பயன்படுத்தியபோது, விபச்சாரமும்; வைப்பாட்டித்தனமும் பொதுப் பண்பாக்கியது.


சாதிய ரீதியாக வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் வளர்த்த மனுதர்மம், ஆண் திருமணத்தின் மூலம் கீழ்ச்சாதியாவதைத் தடுத்தது. எதிர் நிலையில் பெண் மீறியபோது நிகழ்ந்த அந்த அத்துமீறல்களில் பெண்கள் எரிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.


''பார்ப்பனர்களுக்கும் ஷத்திரியர்களுக்குமிடையில் நிகழ்ந்த கலப்பு மணத்தில் பிறந்தவர்கள்தான் தான்ஸீதர்கள்;"122 இவர்கள் தான் வேதத்தை இயற்றவும், கொண்டு சென்று பிரச்சாரம் செய்யவும் செய்தனர். இங்கிருந்தே இந்தக் கலப்பு மணம் சாத்தியமாகின்றது.


மகாபாரத ஆசிரியர் அசுரச் சாதியைச் சேர்ந்த பெண்களைக் கிருஷ்ணன் மணப்பதை எதிர்க்காத தன்மையில் சாதிக் கூறுகள் பலவீனமான அக்காலக்கட்டம் வெளிப்படுகின்றது அல்லது ஆணாதிக்கத்தின் தேவை சாதிகடந்த வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுவதும் இயல்பாக வெளிப்படுகின்றது. அக்காலத்தில் பார்ப்பனரே ஏற்க மறுத்த இந்தப் பாலியல் ஒழுங்கைத் தடுக்கக் கடும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மனு 8.382 இல், ''ஒரு பார்ப்பான் ஏனைய இரு வர்ணப் பெண்களுடனோ, சூத்திரப் பெண்களுடனோ உடலுறவு கொண்டால் 1000 பணம் தண்டம் கொடுக்க வேண்டும்."13 மனு 8.383 இல், ''பாதுகாப்பில்லாத சத்திரியப் பெண்களுடன் உறவு கொண்ட வைசியனுக்குப் பணம் 500 தண்டம் விதிக்கப்படும்.


இதே குற்றத்தைச் செய்த சத்திரியனுக்குத் தண்டனை 500; அபராதம் அல்லது கழுதை மூத்திரத்தைத் தலையில் ஊற்றி மொட்டையடிக்க வேண்டும்."13 மனு 8.384 இல், ''(உறவினர்) பாதுகாப்பில்லாத வைசிய அல்லது சத்திரிய அல்லது சூத்திரப் பெண்களுடன் உடலுறவு கொண்ட பார்ப்பானுக்கு அபராதப் பணம் 500, மிகக் கீழ்சாதிப் பெண்ணுடன் உறவு கொண்டால் பார்ப்பானுக்கு அபராதப் பணம் 1000."13
இந்த விதிகள் மனுவின் பலமுரண்பட்ட போக்கில் வெளிப்படுவதுடன் ஆணாதிக்கச் சாதிச் சட்டமாகின்றது. மனு எழுதியதற்கும் அதை அமுல்படுத்தமுடியாத வரலாற்றுப் போராட்டத்தின் பின், மாறிவந்த காலத்தில் மனுவுக்குள் இணைக்கப்பட்ட விதிகளும் இணைந்து ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான பல விதிகள் ஆகின்றபோது சிக்கலுக்குள்ளாகின்றது. ஆனால் இந்த விதிகள் பல காலக் கட்டத்தின் ஊடாக மனுவுக்குச் சேர்ப்பும், திருத்தத்தையும் பார்ப்பனியள நலன் சார்ந்து உள்வாங்கி ஒடுக்கும் வடிவமாக மாறியது தெளிவாகும் போது, (இதற்குப் பல ஆதாரங்கள் சம்பவத்துடன் உள்ளது.) இதை எதிர்த்த போராட்டம் சிக்கலுக்கு உள்ளாவதில்லை.


சாதி கடந்த உறவு மற்றும் திருமணத்தைப் பார்ப்பனர்களே தமது ஆணாதிக்கப் புணர்ச்சி வேட்கையில் மீறியதையும், அதை மதிக்க மறுத்ததையும் இவை காட்டுகின்றது. பழைய கலப்பு மணங்கள் (புகழ் பெற்ற பல படைப்புகளில் ஆதாரம் உள்ளது) தொடர்ச்சியாக வேரறுக்க, இந்த உறவுகள் மீது கடும் தண்டனைமுறை ஏற்படுத்தப்பட்டது. இங்கு இந்த உறவுகள் என்பது எல்லை கடந்து, கட்டுப்பாடு அற்று, நெளிவு சுழிவான வகையில், இலகுவானதாக இருந்ததை நிறுவுகின்றது. ஆண் - பெண் இலகுவாக பரஸ்பரம் உறவு கொண்டதைத் தடுக்க பெண்கள் பற்றிய விதி எமக்குக் (மேலுள்ள விதிகளைத் தொகுத்து விமர்சித்துள்ளேன்.) காட்டுகின்றன. இங்கு சாதிக்குள் மட்டும் இவ்விதிகள் கட்டுப்பாட்டைக் கோருகின்றனவே ஒழிய, மறுதளத்தில் சொந்தச் சாதிப் பெண்களிடத்தில் சலுகையை வழங்குகின்றது அல்லது மென்மையாக அணுகுகின்றது. ஆணாதிக்கப் பார்ப்பனியப் பெண்கள் மீதான குடும்ப முறையைச் சாதிக்குள் நிறுத்தியதன் மூலம், உலகில் உள்ள பெண்களின் பொதுத் தன்மையில் இருந்து, சிறப்பான ஒடுக்குமுறையைப் பெண்கள் எதிர் கொள்கின்றனர்.


இந்தியச் சமூகத்தில் சாதி கடந்த திருமண உரிமையைக் கோரிப் போராடும் ஜனநாயக உரிமை, எல்லா சமூகத்தையும் விட சிறப்பானவையாகும்;. உலகில் நிறம், தேசியம், இனம், மதம், வர்க்கம் சார்ந்த திருமணத் தடைகள் எப்படி ஆணாதிக்கக் கொடூரமாக இருக்கின்றதோ, அதை விட மோசமான சுற்றுச் சூழலுக்குள்ளேயே சாதித் திருமணத்தடை, கேவலமான பாத்திரத்தை வகிப்பதால் ஆணாதிக்க ஒழிப்பிலும், சாதி ஒழிப்பிலும் இவை தீர்க்கமான ஜனநாயகப் போராட்டமாக உள்ளது. சாதி ஆணாதிக்கம் கீழ்ச்சாதி பெண்ணைக் கேவலப்படுத்தக் கொச்சைப்படுத்த தயங்கவில்லை. சம்பூரண அரிச்சந்திராவில், ''தலையைத் தாங்குறாப் போல குத்து முலையைத் தாங்குறான் பள்ளீரே"29 என்று பார்ப்பனியம் பெண்ணை இழிவுபடுத்தி இரசிக்கின்றது. குற்றாலக் குறவஞ்சியில் குறத்தியை மேல்சாதிக்காரன் அறிமுகம் செய்யும் போது,


''மொழிக்கொரு பசப்பும், முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு சிமிட்டும்
வெளிக்கொரு பகட்டும் ஆய்"29
- என்று பெண்களை இழித்துக் காட்டும்.


ஆணாதிக்கச் சாதியம் குறவனைப் பற்றி கூறும் போது ''முட்டப்படா முலையானையே முட்டவோ சிங்கி ஒக்கப்படுக்க ஒதுக்க இடம் பார்க்கவோ சிங்கி"29


- என்று கேவலப்படுத்துகின்றது. இந்த வரிகளை மனுதர்மமே இந்த வக்கிர இலக்கியங்களைப் படைப்பவர்களுக்கு வழங்குகின்றது. மனுதர்மம் ''முலையை முட்டவோ படுக்க இடம் பார்க்கவோ மாட்ட"29 என்ற பார்ப்பனிய விளக்கங்களை எடுத்துக் கையாளும்போது சொந்த வக்கிரத்தை, அந்த மக்கள் மீது திணிப்பதன் மூலம் கொச்சைப்படுத்துவது நிகழ்கின்றது. ஆனால், அந்த மக்களின், நயவஞ்சகமற்ற வெளிப்பாடு அவர்களின் பாடல் மூலம் வெளிப்படுகின்றது.


''பொய் பொட்டுப் பேசமாட்டோம்
போலீசுக்குப் போக மாட்டோம்
களவு திருட்டு செய்யமாட்டோம்
கச்சேரிக்குப் போகமாட்டோம் -எங்க
பொண்டாட்டி புள்ளைகளைப்
பேதமாக எண்ண மாட்டோம்
மஞ்சி மலை நரிக்குறவர்
நாங்களே சாமி .. .."29


- என்று பாடும் போது அவர்களின் வஞ்சகமற்ற வெளிப்பாடு வெகுளித்தனத்தில் பிறக்கின்றது. ஆணாதிக்க வக்கிரம் அவர்களைக் கேவலப்படுத்தியதன் விளைவே இந்தப் பாடலின் வெளிப்பாடாகும.; இதில் தங்கள் மனைவி, பிள்ளைகளிடையே பேதம் பாராட்டுவதில்லை என்ற வரிகள், அவர்களின் உயர்ந்த மனிதத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ஆனால், சாதி ஆணாதிக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கின்ற விதமே சொந்த வக்கிரத்தில் எழுவதை நாம் காணமுடியும். இந்த மாதிரியான கொச்சைப்படுத்தல் ஊடாகவே சாதி கலந்த திருமணங்களைப் பிளப்பது அரங்கேறுகின்றது.


சாதியத்தின் பிறப்பைக் கூட கலப்பு மணத்தில் இழிவால் உருவானதாக இந்து மதம் குறிப்பிட தவறவில்லை. ''தெய்வக் குமாரர் மனு- குமாரத்திகளோடுக் கூடிவாழ்ந்து, இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றதினால் அக்காலத்திலும் பிற்காலத்திலும் இராட்சதர் பூமியிலிருந்தார்கள். அவர்களே பூர்வத்தில் பேர் பெற்ற பலவான்கள்"16 என்று பார்ப்பனரான தெய்வக் குமாரரை எதிர்த்துப் போரிட்ட இராட்சதர்கள், பார்ப்பனக் கலப்பால் உருவானவர்கள் என்பதைக் கூறுவதன் மூலம், அம் மக்களின் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம் இழிவுபடுத்தப்பட்டது. எப்போதும் கலப்பு சாதிப் பிரிவுகள் உக்கிரமாக இருதளத்திலும் இருந்து போராடுவதும், அவர்களின் இருவழித் தொடர்பும் சாத்தியமாக்கியது. இந்தச் சாதி முரண்பாடு, இதனால் விழித்தெழும் போராட்டம் மீதான இழிவுபடுத்தலுக்கு எதிராக முனைப்பு பெற்ற நிலையில், இதை இந்து தர்மம் கலப்பின் இழிவாக இனம் காட்டியது. இந்திய பழங்குடிகளான அசுரர்கள் (இராட்சதர்கள்) மீதான பார்ப்பனியப் பொருளாதாரச் சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்க, கலப்புத் திருமணத்துக்கு எதிரான குரலாகச் சாதியமும் ஆணாதிக்கமும் சேர்ந்து வளர்ச்சி பெற்றதை இது காட்டுகின்றது.


ஆனால், தாழ்ந்த சாதிகளில் சமுதாயத்தின் உயர்ந்த அறிவாளிகள் உருவான போது, பார்ப்பனர்கள் அதைப் பார்ப்பன - சூத்திரக் கலப்பின் மூலம் ஏற்பட்ட அறிவு என்று கதைகளை உருவாக்கினர். ''எழுத்தச்சன், கண்ணச்ச பணிக்கா போன்ற சூத்திரச் சாதி கவிஞர்களைப் பார்ப்பனியக் கலப்பின் விளைவாக"11 அறிவைப் பெற்றனர் என்று கூறியே, சூத்திரர்களின் கல்வியை, திறமையைக் கொச்சைப்படுத்தி புதிய அடக்குமுறையைக் கையாண்டனர்.


அதேநேரம் பெண்ணின் ஒழுக்கத்தைப் பேண நடத்தை விதிகள் சமூகத்துக்கு முன்வைக்கப்பட்டன. மனு 9.4 இல், ''உரிய காலத்தில் தன் பெண்ணிற்கு மணம் முடிக்காத தந்தை கண்டிக்கப்பட வேண்டியவர்."13 மனு 9.88 இல், ''உரிய வயதை அடையாவிட்டாலும் அதாவது பருவமடையாவிட்டாலும் தந்தை தன் மகளை விதிமுறைகளுக்கேற்ப சமமான சாதியைச் சேர்ந்த சிறப்பான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்"13 என்று பெண்களின் உரிமையை, சுயத்தைப் பாலியல் சுதந்திரத்தில் இருந்து பறித்ததன் மூலம், ஆண் வழி ஆணாதிக்கச் சாதி ஒழுங்கு சொத்துரிமையும் இறுக்கமாக்கப்பட்டது. பெண்ணின் சுதந்திரமான பாலியல் தேர்வும், ஈடுபாடும் பார்ப்பனிய ஆண்வழி சமூகத்தை, சாதியத்தை, தனிச்சொத்துரிமையை எதிர்ப்பதாக இருந்தது. இதன் கடமையை ஒழுங்குபடுத்த தந்தைக்குக் கடமையாக்கியதுடன், சிறுவயதுக் குழந்தைத் திருமணம் வேறு புகுத்தப்பட்டதன் மூலம் ஆணாதிக்க ஒழுக்கம் பேணப்பட்டது.. இதைச் செய்யாத தந்தை கண்டனத்துக்கு உரியவரானார். இன்று இந்தியா இலங்கை சமூகங்களில் இவை நீடிப்பதையும் இதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளமுடியும்.


இதை அமுல்படுத்த சிறுமியின் திருமணத்தை மனு விதிந்துரைக்கின்றார். மனு 9.94 இல், ''முப்பது வயதுள்ள ஆணுக்கு 12 வயதுள்ள பெண்ணையும் 24 வயதுள்ளவன் 8 வயதுள்ள பெண்ணையும் மணம் முடிக்கலாம்"13 என்றதன் மூலம் பெண் குழந்தையின் சிறுவயதுக் கல்வி மறுக்கப்பட்டு, அவள் அறிவு கணவனுக்கு உட்பட்டதாகவும், பொதுஅறிவு சாதிக்கு உட்பட்டதாகவும் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்ணின் அறிவு, சுய ஆற்றல், பரந்த சமூக அறிவு முடக்கப்பட்டது. இது அறிவற்ற இயந்திரத்தனத்தில் இருந்து கணவனுக்கு விசுவாசமாக, சாதிக்கு விசுவாசமாகச் சேவைசெய்யக் கோரியது. பெண்ணின் சுயமான பாலியல் தேர்வு, ஈடுபாடு என்பது சிறுவயதிலேயே நலமடிக்கப்பட்ட நிலையில், பெண் கணவனுக்குப் பயன்பாட்டுப் பொருளாகப் பண்டமாக்கப ;பட்டாள்.


இந்தச் சிறுவயது திருமணங்கள் சிறுவயது விதவைகளை அபராதமாக உற்பத்தி செய்தது. அத்து மீறிய ஆணின் பாலியல் வேட்கைக்குப் பலியான பெண், மரணத்தின் எல்லையில் ஊசலாடினாள். அத்துடன் சிறுவயதுக் குழந்தைகள் சிறுவயது திருமணத்தால் கர்ப்பமாவதால் பெண்ணின் இறப்பை விரைவுபடுத்தியது. வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண் சாதிக்கடமைக்குள்ளான மருத்துவத்தை மட்டும் பெறக் கோரிய நிலையில், குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் இறப்பாகியது.


இது ஒருபுறம் நிகழ்கின்றபோது, வயது இடைவெளியினால் கணவனின் இறப்பு மனைவியின் இறப்பைவிட அதிகமானதாக இருந்தது. இதனால் பெண் விதவைகளின்; எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விதவைகள் பார்ப்பனிய ஒழுக்க, ஆணாதிக்கக் கோட்பாட்டைச் சிதைத்தது. பெண்ணின் பராமரிப்பு அல்லது அவளின் வாழ்க்கைக்கான பொருளாதாரம் என்பது, ஆண்வழிச் சொத்துரிமையை மற்றும் ஒருதார மணத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் பெண் குறித்த கணவனின் ஆண்மரபைத் தாண்டி, மறுமணம் செய்தல் தவிர்க்க முடியாத விதியாகியது. இவை பார்ப்பனிய ஒழுக்கத்தின் ஆணாதிக்க வழியைக் கேள்விக்குள்ளாக்கியது. குறித்த ஒரு பெண் மீதான ஆணின் ஆதிக்கம் வலுவிழந்தது.


எனவே, பெண் மீதான மறுமணத்தடை ஏற்படுத்துவதைப் பார்ப்பனிய மனுதர்மம் தனது ஆணாதிக்க வழியில் நிறைவு செய்தது. இதைச் செய்ய பெண்ணை ஆசைகளிலும், உலக நுகர்விலும் இருந்து அகற்றுவது அவசியமாகியது. இதனால் வெள்ளை ஆடை அணிவது, மொட்டையடித்தல், சுபகாரியத்தில் ஈடுபட தடை, தீட்டு கொண்ட பெண், நல்ல விடயத்துக்கு ஆகாத பெண்.... போன்ற பல விதிகள் இன்று வரை சமூக விதியாக உள்ளது. இதையே அன்று மனு 5.157 இல் ''விதவையானவள் அவள் தன் சொந்த விருப்பத்தோடு காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்டு, தன் உடலை இளைக்கச் செய்யவேண்டும். தன் கணவன் இறந்த பின்னால் வேறொரு ஆடவனின் பெயரைக்கூட உச்சரிக்க அவளை அனுமதிக்க கூடாது."13 மனு 5.161 இல், ''குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் மறுமணம் செய்து கொள்ளும் ஒருபெண் தன் இறந்த கணவனை அவமதிப்பதோடு தனக்குத் தானே இழிவையும் தேடிக் கொள்கிறாள். அவள் சொர்க்கத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவாள்"13 என்ற ஒழுங்கில் பெண் மீதான கட்டுப்பாடு ஆணாதிக்கக் கணவன் வழியில் தீர்மானமாகியது. கணவனின் சொத்தாக, பண்டமாகப் பாவிக்கப்பட்ட பெண்ணுக்குக் கணவனின் பின்னான சுயமான வாழ்க்கையும் கூட அர்த்தம் அற்றதாக்கப்பட்டது. மாறாக, கணவனின் சொத்தான மனைவி, மகனின் சொத்தாக்கப்பட்டாள். தந்தை கணவனுக்கு விற்றதன் மூலம், அதாவது தானமாகப் பொருளுடன் கொடுத்ததன் மூலம், கணவன் பாலியலை அனுபவிக்கவும், பிள்ளை பெறவும், தனக்குச் சேவை செய்யவும் உருவாக்கிய பொம்மையின் உரிமையாளர் இறந்தால், அந்தப் பெண் மகனின் சொத்தாக, மகனுக்குச் சேவை செய்பவளாக மாற்றப்பட்டாள்.


பெண்ணை உணர்ச்சி அற்ற மரக்கட்டையாக மாற்றிய போது, பெண்ணின் சுயவிருப்பத்தில் உணவு வகையைப் பயன்படுத்துவதை மனுதர்மம் கோரியது. இது இன்றும் பெண்கள் சுயவிருப்பத்தில் விரதங்கள், மரக்கறி உணவுகளை உண்பதும், அதற்காகப் போராடுவதும் இதில் இருந்தே காணமுடிகின்றது. அதே நேரம் வேறொரு ஆணின் பெயரை உச்சரிப்பதைத் திட்டவட்டமாகத் தடை செய்தனர். மதத்தின் ஊடான ஆதிக்கம் விதவைப் பெண்ணின் ஒழுக்கத்தைக் கோரியதுடன், உணர்ச்சியை அடக்கக் கோரியது. இந்தத் தடை பெண்ணின் சுயப் பொருளாதார ஆதாரத்தை அற்றதாக்கியது. வாழவழியற்ற பெண்களை, இந்தப் பார்ப்பனிய ஒழுக்கத்துக்குட்பட்டு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தப்பட முடியாத பெண்களை, விபச்சாரத்திலும் கள்ள உறவிலும் ஈடுபட பார்ப்பனிய ஒழுக்கம் நிர்ப்பந்தித்தது. இதை மனுவுக்குப் பிந்திய பார்ப்பனியம் தடுக்க, கண்ட வழிதான் உடன் கட்டை ஏறுதல் ஆகும். இந்த உடன் கட்டைக்கு முந்திய காலத்தில், மனுவுக்குப் பிந்திய வரலாற்றில் விதவைகளின் ஒழுக்கம் பற்றிய நிறைய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.


மனுவைப் போல் புகழ் பெற்ற யக்ஞவல்கியர் (கி.பி. 150-200 இல்) எழுதியதைப் பார்ப்போம். ''கணவனைப் பிரிந்த பெண் தந்தை, மகன், சகோதரன், மாமியார் அல்லது தனது மாமா ஆகியோரைப் பிரிந்து வாழக்கூடாது. அவ்வாறு இல்லையெனில் தண்டனைக்கு உள்ளாவாள்"13 என்றதன் மூலம் ஆணாதிக்க விதியை மறுத்து பெண்கள் வாழ முற்பட்டதையும், போராடியதையும், சமூகத் தண்டனை வழங்கப்பட்டதையும் காணமுடிகின்றது. தந்தை, கணவன், மகன் போன்ற ஆணாதிக்கச் சிறைக்குள், அதை நிறைவு செய்யக் கூடிய சிறையான சகோதரன், மாமா, மாமி என்று விரிந்த தளத்தில் விதவைத்தனத்தை அமுல்படுத்த அதிகாரத்தை வழங்குகின்றனர். இந்த இடத்தில் மாமி அதிகாரத்தைப் பெண்மூலமே ஆணாதிக்கம் உருவாக்கி வலுப்பெறுகின்றது. மகனின் மீது பெற்றுக் கொண்ட உரிமையையும், கணவனின் மீதான உரிமையையும் ஒரு பெண் மூலம் மாற்றி அமைத்த பாத்திரம் தான் மாமியார் ஆகும். தான் அனுபவித்த கொடூரத்தை, மீள ஒரு பெண்ணுக்குச் செய்வித்து இன்பம் காணும் ஆணாதிக்க அதிகார வடிவத்தின் பிரதிபலிப்புதான் மாமியார் கொடுமையாகும். இங்கு ஆணின் சுமை மகனுடைய அன்பின் வழியில், ஆதிக்கத்தின் வழியில் அரங்கேறுகின்றது. பாடசாலை ராக்கிங் வடிவில் எதிர்த் தன்மை பெற்று அதிகாரவடிவில், ஒரு குடும்பக் கட்டமைவில் வெளிப்படுகின்றது. இங்கு இரக்கம் என்பது ஏற்படாத வகையில் இது பண்பாடு, கலாச்சார உரிமை வகையினமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.


பெண்ணின் விதவைத்தனம் அத்து மீறலாக மனுவுக்குப் பிந்திய வரலாற்றில் தொடர்ந்ததால் தண்டனை கொடுக்கப்பட்டதை யக்ஞவல்கியரின் கூற்று தெளிவாக்குகின்றது. இதற்குப் பிந்திய மிதக்சாரா என்ற விரிவுரையை எழுதிய விக்னேஸ்வரர் (கி.பி 1070-1100 இல்) ''இது (சதி) கன்னி வாழ்க்கை வாழ்வதற்கு மாற்று வழியாகும்."13 இதை அவர் வலியுறுத்தி ''அவருக்குப் (கணவனுக்கு) பிறகு சிதையில் வீழ்த்துவதில் பெரிய நன்மை இருக்கிறது"13 என்றதன் மூலம் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தைப் பாதுகாக்க மாற்றுவழிகளை ஆணாதிக்கப் பார்ப்பனியம் அமுல்படுத்தியது. இதைத் தாண்ட பெண்ணுக்கு உரிமையில்லை. அதாவது விவாகரத்து முதல் கணவனின் மரணத்தின் பின் கூட பெண் சுயமாக வாழமுடியாது. இதைப் பாதுகாக்க பெண்ணின் கட்டாய விதவைக் கோலமும் கொடூரமான கண்காணிப்பும் கையாளப்படுகின்றது.


இதில் ஏற்பட்ட பெண்ணின் அதிருப்திகள் ஒழுக்க மீறல்களாக வெளிப்பட்ட போது, இதற்குப் பார்ப்பனியம் கண்ட வழி பெண்ணைக் கணவனின் சிதையில் எரியூட்டுவதே. ஆணுக்கு இவை விதிவிலக்காக இருந்தன. ஆணைப் பின்னால் முன்புபோல் பலதார மணத்தில் வாழ அனுமதிக்கும் பார்ப்பனியத் தர்மம், பெண்களை நாயைவிட மோசமாகத் தாழ்த்தி ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தியது.


மனுதர்ம ஒழுக்கங்களை மீறும்போது கடுமையான அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இதில் ஆண் - பெண் வேறுபாட்டைக் காட்டவில்லை. ஆனால், ஆண் - பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கையும், சாதிக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கையும் அந்தந்தச் சலுகைகளுடன் தீவிரமாகக் கடைப்பிடிக்க வன்முறை கையாளப்பட்டது. இது மட்டும் தான் மனுதர்மத்தின் வெற்றிக்கும், பார்ப்பனியத்தின் உன்னதமான வாழ்க்கைக்கும், ஆண்களின் நலன்களை உள்ளடக்கிய ஆணாதிக்கச் சமூகத்தை ஒழுங்கமைக்க இருந்த பாதையாகும்.


சாதிகடந்த திருமணம் செய்ய முற்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அதை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதன் மூலம் சமூகப் புறக்கணிப்புத் தண்டனை முறை என்பது சம்பந்தப்பட்டவனின் அழிவைப் பறைசாற்றியது. இது இன்றும் தொடர்வதை நாம் காணமுடியும்.


இது ஒருபுறம் நிகழ்கின்றபோது, மறுபக்கத்தில் சாதிகடந்த உறவுகளுக்குக் கடும் தண்டனை கீழ் இருந்து மேலாக அமுல்படுத்தப்பட்டது. மனு 8.374 இல், ''(உறவினர்) பாதுகாப்புடைய அல்லது தனித்து வாழ்கின்ற உயர்சாதிப் பெண்ணுடன் உடலுறவுகொள்ளும் சூத்திரன் கீழ்க்கண்டவாறு தண்டிக்கப்படுவான். அவள் தனித்து வாழும் பெண்ணாயிருந்தால் குற்றம் செய்த அவன் உறுப்பை இழப்பான். அவள் பாதுகாப்புடைய பெண்ணாயிருந்தால் அவன் கொல்லப்படுவான், அவன் சொத்து பறிமுதல் செய்யப்படும்"13 என்றதன் மூலம் தனித்து வாழும் பெண்ணின் பாதுகாப்பை விட பாதுகாப்பில் வாழும் பெண்ணைச் சார்ந்து தண்டனை கொடூரமாக இருந்தது. இங்கு ஆணாதிக்கத்தின் பாதுகாப்பு பெற்ற பெண், மற்றும் வெளிக் கண்காணிப்பு கொண்ட பெண் என இரு தளத்திலும் தண்டனை வேறுபாடு, ஆணாதிக்கத்தின் உச்சக் கொடூரமாக இருந்தது. இங்கு இவை பலாத்காரமான கற்பழிப்பு அல்ல, மாறாக விரும்பிய உறவுக்கான இத் தண்டனை என்பது, பெண் ஒரு ஆணைச் சாதி கடந்து விரும்பும்போது அவ்வாண் உயிரையே பறிக்கும் அளவுக்குப் பார்ப்பனியச் சர்வாதிகார நிலைமை இருந்தது. அதேநேரம் பெண்ணை விரும்பும் ஆண் தன்னை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான். இதனால் பெண்ணின் கற்பை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பேணுவதில் ஆணாதிக்கம் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியது. வரலாற்றில் பெண் தான் விரும்பியவனுடன் உடலுறவு கொள்ளும் கற்புத் தன்மையைப் பார்ப்பனியம் கற்பழித்தது. மாறாக, ஆணாதிக்கப் பார்ப்பனியம் நாணம் பூட்டும் ஆணுடன் மட்டும் கொள்ளும் உறவே கற்பு என்று விளக்கத்தைக் கொடுத்துக் கண்காணித்தது. வரலாற்றில் இன்று வரை பெண் ஆண் துணையின்றி வாழும்போது, ஆணை நேசித்தாலும் அதை வெளிக்காட்டாத அச்சத்திலும், அதேநேரம் ஆணைக் கண்டு இரசிப்பதிலும் தன்னை எல்லைப்படுத்த வேண்டிய மன உளவியலில் சிக்கிக் கொண்டாள்.


சொந்தத் தீர்மானத்தைக் கொண்டு கற்பைப் பேணும் பெண், அதனடிப்படையில் காதலிக்கும் போது சமூக ஒழுக்கத்தை மீறி பகிரங்கமாகின்றபோது ஆண் கொல்லப்படும் நிலையில், ஆணைக் கண்டுகளிப்பதும் இல்லாத சூனியத்தை விட மௌனமான விருப்பம் அவளின் எதார்த்தமான வாழ்வாகியது. இதை மீறும் பண்பாடோ, கலாச்சாரமோ அத்து மீறலாகவே ஆணாதிக்கம் கருதித் தண்டித்தது. பெண்ணின் உணர்ச்சியைச் சிதைத்தபோது இவை மீறப்பட்டன. இதனால் தண்டனைகள் வழங்கப்பட்டன. இவைகளை ஒழுங்கமைக்க பெண்களைச் சிதையில் தள்ளியதையும் வரலாறு நீக்கல் இன்றி எமக்குக் காட்டுகின்றது. பழக்கப்பட்ட, நக்கிப் பிழைக்கும் உணர்ச்சியற்ற வாலாட்டும் நாயைப் போல் பெண், ஆணுக்கு முதுகு சொறிந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஆண் அதைக் கண்காணிப்பவனாக மாற்றப்பட்டான். சமூகம் அதை அமுல்படுத்தக் கோரியது. உணர்ச்சிக்கு எல்லை போட்டு, அணைகட்ட முற்பட்ட எல்லா நிலையிலும் அவை இயற்கையாக மீறப்படுவதும், புதிய ஒழுங்குகள் விதிகள் போட்டபோதும் பெண்ணின் போராட்டம் அலையாகத் தொடர்வதும் வரலாறாக எம்முன் உள்ளது. பெண் மீதான சாதிய ரீதியான பாலியலில் வேறுபட்ட அடக்குமுறை என்பது, மற்றைய சமூகங்களில் இருந்து குறிப்பாக வேறுபடுத்துகின்றது. இந்த அடக்குமுறைகள் துல்லியமாக ஆணாதிக்கத் தன்மையையும், தனிச்சொத்துரிமை ஆதிக்கத்தையும் கொண்டது.


கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ''சேர்த்தலை" என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)... கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன..."30 இந்தியச் சாதியச் சமூகத்தில் பெண்ணின் தெரிவுக்கான (இங்கு தெரிவு எதார்த்தத்தில் ஆண் சார்ந்தும் உள்ளது) ஆண்கள், குறுகிய வட்டத்துக்குள் இறுகிப் போயுள்ளது. இது சாதிய ரீதியில் மேலும் ஆணாதிக்கத் தன்மை வாய்ந்தாக வக்கரித்துள்ளது.


இதைத் தகர்க்காத வரை பெண் சுதந்திரம் கிடையாது. இது இந்து மதத்தைத் தகர்ப்பதில் சார்ந்துள்ளது. இந்து மதத்தை எதிர்த்துப் போராடாத யாரும் பெண்ணை விடுவிக்கமுடியாது. இந்து மதத்தின் தனிச் சொத்துரிமைக் கோட்பாடு, ஆணாதிக்கக் கோட்பாடு, சாதியக் கோட்பாடு, இனக் கோட்பாடு, மதக் கோட்பாடு போன்றனவற்றைத் தகர்க்க வேண்டும். அதாவது இந்து மதத்தையே தகர்க்கவேண்டும்;. இது தனிச் சொத்துரிமையைத் தகர்ப்பதில் மட்டுமே சாத்தியம். மற்றையவை எல்லாம் தனிச் சொத்துரிமையில் சீர்திருத்தத்தை முன்வைக்கும் போது, அவை தன்னளவில் இந்துமதத்தின் தனிச்சொத்துரிமை நிலையை இறுகக் கட்டிக் காப்பதாகவே உள்ளது. எனவே தனிச் சொத்துரிமையில் இருந்து உருவான மற்றைய மனிதப் பிளவுகள் என்னதான் போராடினாலும் சுரண்டிக் கொழுக்கும் ஜனநாயகச் சுதந்திரத்தில் ஒட்டிக் கொள்கின்றது.