நாம் பெண்ணின் உரிமை, கடமை, மற்றும் ஆணாதிக்கம் தொடர்பாக ஆராய வௌ;வேறு வரலாற்று, இருகட்டங்களின் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.
மனுதர்மத்தைப் பெண்கள் மீது ஆணாதிக்கப் பார்ப்பனியம் திணிக்கும்முன் சமுதாயம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது எம்முன் கேள்வியாக உள்ளது அல்லவா? ~அதர்வண வேதம்| பெண்கள் உபநயனம் செய்யவும், சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும், வேத மந்திரங்களைப் பயின்றதையும் உறுதி செய்கின்றது. பாணினியின் ~அஷ்டாத்யாயில்| பெண் குருகுலத்தில் பயின்றதை உறுதி செய்கின்றது. பதஞ்சலியின் ~மகாபாஷ்யத்தில்| பெண்கள் பயிற்றுவிக்கும் குருவாக இருந்ததை உறுதி செய்கின்றது. பெண்கள் தத்துவவியல், சமயம் போன்றவற்றில் ஆண்களுடன் விவாதம் செய்ததை வரலாறு நிறுவுகின்றது.
இந்த வகையில் ஜனகருக்கும் - கல்பாவுக்கும், யக்ஞவல்கியருக்கும் - கார்க்கிக்கும், சங்கராச்சாரியாருக்கும் - வித்யாதரிக்கும், யக்ஞவல்கியருக்கும் - மைத்ரேயிக்கும் இடையில் விவாதம் நடந்ததை மனுவுக்கு முந்திய இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. இந்தவகையில் சிந்துமுதல் கங்கை வரை என்ற கல்வெட்டு ஆவண நூல் பெண் குருகுலம் சென்றதையும், ஆண்கள் உடன் சரிசமமாகப் பழகியதையும், பாரிய விவாதங்களில் ஈடுபட்டதையும், யுத்தத்தில் பெண்கள் தமது வீரத்தைக் காட்டியதையும், அதேநேரம் அயல் சமூகம் பற்றிய கூற்றில் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவியதை ஒப்பீட்டுத் தன்மையும் பல ஆதாரங்களை அக்கல்வெட்டு நூல் ஆதாரப்படுத்துகின்றன. ரிக்வேத மந்திரங்கள் எழுதியவர்களில் பெண்கள் இருந்துள்ளனர். படிப்பதற்காகத் திருமணம் செய்யாமல் வாழ்ந்த பிரம்மவாதனிகள் பற்றி புத்த - சமண நூல்கள் வெளிக் கொண்டுவந்துள்ளது. கவுஸாம்பியை ஆண்ட மன்னனின் மகள் ஜெயந்தி திருமணம் புரியாமல் மதத்திலும், தத்துவச் சிந்தனையிலும் தன்னை அர்ப்பணித்தார்.
கௌடில்யரின் காலத்தில் ஆண்கள் 16 வயதிலும், பெண்கள் 12 வயதிலும் வயது வந்தவர்களாகக் கருதப்பட்டதுடன் இதுவே திருமண வயதாகவும் இருந்தது. பௌதாயணரின் கிருஹ்ய சூத்திரத்தில் பருவம் எய்திய பின்பே திருமணங்கள் நிகழ்ந்ததை உறுதி செய்கின்றது. ஆனால் மனுவுக்குப் பிந்திய காலத்தில் சிறுவயது திருமணங்கள் நிகழ்த்தப்படும் ஆணாதிக்கத் தனிச்சொத்து வாரிசு கெக்கழிப்பு உருவானது.
இந்தச் சூத்திரத்தில் வேறு ஒருவருடன் உடல் உறவு கொண்டதை மறைத்து திருமணம் செய்தால் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆண் பெண்ணுக்குக் கொடுக்கும் சீதனப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. இதில் இருந்து உடலுறவு மறைக்கப்படுவதே குற்றமாகவும் காணப்பட்டதே ஒழிய, உடலுறவு கொள்ளக் கூடாது என்ற இன்றைய ஒழுங்கு அன்று இருக்கவில்லை. அதுபோல் ஆண்தான் பெண்ணுக்குச் சீதனம் கொடுக்கும் தாய் வழி எச்சச் சொச்சம் இருந்ததே ஒழிய, இன்று போல் பெண் சீதனம் கொடுக்கும் ஆணாதிக்க வடிவம் இருக்கவில்லை. அதேநேரம் ஆண் இத்தவறைச் செய்தால் ஆண் இரண்டு மடங்கு அபராதமும், ஆண் கொடுக்கும் சீதனத்தையும் கூட ஆண் இழந்துவிடுவான் என்பதை வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சமுதாயத்தில் ஆண் - பெண் பிளவு ஆணாதிக்க வடிவமாக மாறாத அல்லது மாற்றம் கண்டுவந்த காலக்கட்டமிது.
இந்த விதியில் கூட சில நீக்குப் போக்குகள் ஆண் சார்ந்து அனுமதிக்கப்பட்டு இருந்தன. முதல் மாதவிடாய் ஏற்பட்டு முதல் மூன்று வருடத்தின் பின் தனது சாதியையும், அந்தஸ்தையும் சேர்ந்த ஆணுடன் உறவு கொள்வது தவறாகாது. அதுபோல் வேறு சாதி ஆணுடன் மூன்று வருடம் கழித்த நிலையில் அப்பெண் அணிகலன்கள் அணிந்திருக்கவில்லை என்றால் உடலுறவு கொள்வது தவறாகாது.
இந்தச் சூத்திரத்தை எழுதிய கௌடில்யர் ஒருதார மணத்தின் பிரதிநிதியாக இருந்தவர். ஒரு ஆண் பல மனைவியைக் கொள்வது பற்றி:
ஒரு பெண் உயிருடன் இருந்தும் குழந்தை இல்லை என்றால் 8 வருடம் கழித்து வேறு பெண்ணைத் திருமணம் செய்யமுடியும். ஒரு பெண் இறந்த குழந்தையைப் பெற்றால் 10 வருடம் காத்து இருக்க வேண்டும்;. பெண்குழந்தை தொடர்ந்து பெற்றால் 12 வருடம் காத்திருக்க வேண்டும். இவ்விதியை மீறினால் ஆணின் சீதனத்தையும், பரிசத்தையும் திருப்பி கொடுப்பதுடன், போதிய நஷ்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்;. சீதனம் கொடுத்துத் திருமணம் செய்யாதவர்கள் சீதனம் கொடுத்தே விலகி மறுமணம் செய்யமுடியும்;. இங்கு பெண் ஆண் குழந்தையைப் பெறக்கோரி அடக்கப்பட்டாள். இது இன்றும் இந்தியாவில் இருப்பதுடன், பெண் சிசுவைக் கருவிலேயே கொல்வதும், அல்லது பிறந்த பின் கொல்வதும் தொடரும் வழக்காக உள்ளது.
ஆண் அல்லது பெண்ணுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டில் தனிப்பட்ட ஒருவரின் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக, இருவரும் பகை கொண்ட நிலையில் விவாகரத்து பெறக் கூடியதாக இருந்தது. மனைவி அபாயமானவள் எனக் கருதிப் பிரியும் ஆண் திருமணத்தின்போது கொடுத்த அனைத்தையும் திருப்பிக் கொடுக்கவேண்டும்;. ஆண் அபாயமானவன் எனக் கருதி பிரியும் பெண் சீதனச் சொத்துரிமையை இழந்துவிடுவாள். தீய நடத்தையுள்ள கணவனை விட்டு மனைவி விலகமுடியும்.
இவைகளில் இருந்து ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருளாதார வேறுபாட்டை ஒட்டிய வேறுபாடுகள் அனுமதிக்கப்பட்டதே ஒழிய, வாழ்க்கையில் ஆண் - பெண்ணுக்கிடையில் அதிக இடைவெளிகள் இருக்கவில்லை. பெண் சொத்துரிமை கொண்டு இருந்ததையும், அதன் மீது உரிமை கொண்டிருந்ததையும், விவாகரத்துரிமை பெற்று இருந்ததையும், கல்வி கற்கும் உரிமை பெற்று இருந்ததையும் இன்றைய நாகரிகச் சமூகத்தின் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாட்டுடன் ஒப்பிடும்போது அன்று பெண் மகிழ்ச்சியாக இருந்ததைக் காட்டுகின்றது.
ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் பெறும் தகுதி பெண்ணுக்கு இருந்தது. தனது உணவு, உடை போன்றவற்றை ஆணின் வசதிக்கு உட்பட்டுப் பெற, வாழ்க்கை பூராவும் உரிமை பெற்று இருந்தாள். ஆனால் மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்தோ அல்லது சுதந்திரமாகவோ வாழ்ந்தால் ஜீவனாம்சத்தைப் பெறமுடியாது.
ஒரு பெண்ணின் பாதுகாப்பும், வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்ட நிலையில், பெண்ணுக்கு அவை அவசியமற்ற நிலையில் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விலக்கப்படுகின்றது.
கணவன் இறந்தால் பெண் தூய வாழ்க்கை வாழ விரும்பின் நகைகள், சீதனம், பரிசத்தின் எஞ்சிய பகுதியையும் அவள் பெறமுடியும்;. இவற்றைப் பெற்ற பின் மறுமணம் செய்தால் அதைத் திருப்பி கொடுப்பதுடன், அதற்கு வட்டியும் கொடுக்க வேண்டும்;. அவள் மறுமணம் செய்ய விரும்பின் கணவனும், மாமனாரும் அப்பெண்ணுக்குக் கொடுத்த பொருட்களைக் கொடுக்க வேண்டும்.
இந்த மறுமணம் நீண்டகாலம் பிரிந்த மனைவிக்கும் பொருந்தும். ஆனால் இவை கால எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருந்தன. இந்த மறுமணங்களில் மாமனார் தெரிந்து எடுக்காத ஒரு ஆணை அவள் தெரிவு செய்தால், பெண் கணவன் இடம் இருந்தும், மாமனாரிடம் இருந்தும் பெற்ற பொருட்களை இழந்து விடுவாள். இறந்த கணவரின் சொத்துக்களை மறுமணம் செய்தபின் பெண் உரிமை கொண்டாட முடியாது.
ஒரு பெண் மறுமணம் செய்யும் உரிமையை அன்று பெற்று இருந்தாள். இங்கு இந்த மறுமணத்தில் சொத்துரிமை மட்டுமே யாருக்கு என்ற வரையறைக்குள் திருமணங்கள் சில ஒழுங்குகளைக் கையாண்டது. தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி ஆண் - பெண் சார்ந்து மனித உறவுகளைத் தீர்மானித்ததையும், அதற்குள் ஆண் - பெண் ஒழுங்குகள், ஒழுக்கங்கள் நீடித்ததையும் காணமுடிகிறது.
இவைகளில் தூய வாழ்க்கை வாழ விரும்பிய பெண் கணவனின் சொத்தை அனுபவிக்கமுடியும்;. மகன் அல்லது மகள் இருப்பின் மறுமணம் செய்தால் தனது சொத்தை விரும்பியதுபோல் பயன்படுத்த முடியாது. அச்சொத்து புதல்வருக்கே உரித்தானது. ஒரு பெண் மறுமணம் செய்யும் நிலையில் கணவனின் சொத்தை அப்பெண் இழந்து விடுவாள். ஆனால் மறுமணம் செய்யாத நிலையில் அப்பெண் அச்சொத்தை அனுபவிக்க முடியும். இங்கு பிள்ளைகள் இருப்பின் அப்படி செய்ய முடியாது.
ஆனால், மனுவுக்குப் பிந்திய பார்ப்பனியச் சமூகத்தில், பெண் சொத்துரிமை பறிக்கப்பட்ட நிலையில், பெண்-ஆணின் தயவுக்குள் மேலும் இறுக்கப்பட்டாள். முன்பு கணவன் இறந்தாலும் சொத்துரிமை பெற்று சுதந்திரமாக வாழவும், மறுமணம் செய்யவும் இருந்த உரிமையைப் பறித்த நிலையில் இன்று, அதன் எல்லைக்குள்தான் சிறு சீர்திருத்தத்தோடு பார்ப்பனிய ஆணாதிக்கக் காட்டுமிரண்டிச்; சட்டம் உள்ளது.
இதேநேரம் மனைவி இறந்தால் அச்சொத்து பிள்ளைகளைச் சேரும். இதில் ஆண் - பெண் வேறுபாடு இருந்ததில்லை. பிள்ளை இல்லை என்றால் அச்சொத்தில் இருந்து கணவன் கொடுத்த சீதனம் போன்றவைகளை எடுத்த பின்பு, அவை பெண்வழிக் குடும்பத்துக்கு மீளச் செல்லும்.
மனுவுக்கு முந்திய காலத்தில் சூத்திர, வைசிய, சத்திரிய, பிராமண மனைவிகள் குழந்தை பெறவில்லை என்றால் பெண் குறுகிய காலம் பிரிந்து சென்ற கணவனுக்காக முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வருடம் காத்திருக்க வேண்டும். குழந்தை பெற்ற பெண் என்றால் மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அவளது வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து இருந்தால் மேலுள்ளது போல் இரண்டு மடங்கு காலம் காத்திருக்கவேண்டும்;. இந்த வசதியைக் கணவன் செய்யவில்லை என்றால், அவரின் உறவினர் நான்கு முதல் எட்டு ஆண்டுகள் பாதுகாக்கவேண்டும்;. இல்லையெனின் தமது பொருட்களை எடுத்துக்கொண்டு மறுமணம் செய்துகொள்ள விட்டுவிட வேண்டும். இங்கு கல்வி கற்ற பிராமணன் குடும்பம் என்றால் அவன் மனைவி தனது கணவனுக்காகப் பத்து வருடமும், அவள் குழந்தை பெற்றவள் என்றால் பன்னிரண்டு வருடமும், அரசு ஊழியரின் மனைவி என்றால் ஆயுள் பூராவும் கணவனுக்காகக் காத்திருக்கவேண்டும். இங்கு இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு கணவனின் கோத்திரத்தில் ஒருவனுடன் குழந்தையைப் பெற்றாலும், அவளை வெறுக்கமுடியாது. இந்த இடத்தில் பெண் வாழ வழியைக் கணவனோ, உறவினரோ ஏற்பாடு செய்ய வில்லை என்றால் அவள் மறுமணம் செய்யமுடியும்.
இந்த வழக்கு மனுதர்மத்துக்கு முந்திய சமூகக் கண்ணோட்டமாக இருந்தது. சமுதாயத்தின் பார்ப்பனிய அதிகாரம் மையப் பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படுவது மறுக்கப்பட்டதை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக் காணமுடியும். அன்று சமூகத்தின் தீர்மானங்கள் எடுக்கும் உரிமை மக்களிடம் இருந்த போது பெண் பற்றிய நியாயமான தீர்மானங்களை எடுத்து சமூக ஒழுங்கு பேணப்பட்டது. சொத்துரிமை குடும்பத்தின் கால எல்லையைத் தீர்மானித்ததையும், அதேநேரம் சமூகத்தின் வௌ;வேறு பொருளாதாரப் பிரிவுகளின் வசதியைக் கொண்டே, பெண்கள் மீது இறுக்கமான கட்டுப்பாடு இருந்ததைக் காட்டுகின்றது. இச்சமூகங்களில் பல்வேறு சாதிப் பெண்களின் உரிமை கூட வேறுபட்டு இருந்தது. இவை அனைத்தும் சாதிகளின் தொழில் அடிப்படையில், அதன் பொருளாதாரத் தரத்தில் பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது. பெண் சுயமாக வாழக்கூடிய எல்லா பொருளாதார நிலையிலும் பெண்ணின் சுதந்திரம் எல்லைப்படுத்தப்பட்டும், பொருளாதாரப் பலம் அற்ற நிலையில் பெண்ணின் மறுமணம் மூலமும் அவை ஏற்படுத்தப்பட்டது.
இங்கு பெண்ணின் பொருளாதாரப் பாதுகாப்பை ஆண் வழங்குபவனாக இருப்பதால், பெண்ணின் சுதந்திரம் ஆண் சார்ந்து இருப்பதைத் தீர்மானிப் பதாலும், குடும்ப அமைப்பு இதற்கு உட்பட்டு எல்லைப்படுத்தப்படுகின்றது. மறுமணத்தைக் குற்றமாகக் கருதாமல் அனுமதித்ததுடன், கற்பு பற்றிய எந்த ஒழுக்கமும் இதில் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கவில்லை. கணவன் இல்லாத நிலையில் வாரிசு குழந்தை பெற கணவனின் வழியில் உறவை அங்கீகரித்த சமூகம், இன்றைய ஆணாதிக்கக் கற்பை அன்று இழந்துபோது குற்றமாகக் கருதவில்லை. (ஆனால் இதற்குப் பிந்திய சமூகம் குழந்தை வாரிசுக்காக இன்னொரு பெண்ணை மணக்க ஆணுக்கு அனுமதி வழங்கியது. முன்பு பெண்வழி சமூகத் தொடர்ச்சியில் பெண்ணுக்கு அனுமதித்ததுக்கு மாறாக, ஆண்வழிச் சமூகத்தில் பெண்ணுக்குத் திட்டவட்டமாக மறுத்து, ஆணை மறுமணம் செய்ய அனுமதித்தது.) மாறாகப் பெண்ணைப் பாலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பராமரிக்க கடமைப்பட்டவனாகக் கணவன் இருக்கின்றான். இது இல்லாத பட்சத்தில் அவள் வெளியேறும் எல்லைக்குள் சில கட்டுப்பாடுகள் இருந்ததைக் காட்டுகின்றது.
இந்தக் கட்டுப்பாடுகள் ஆண்வழிச் சமூகம் உருப்பெற்று வந்த வளர்ச்சியின் ஓர் இடைக் கட்டமாகும். பெண் முற்றாக உரிமையை இழந்திராத, இழந்து வந்த வளர்ச்சியில் வாழ்ந்தாள். சமூகத்தின் உயர் குடும்பங்கள் மீது இது அதிகமான கட்டுப்பாட்டை நிலைநிறுத்த, அக்குடும்பத்தின் பொருளாதாரப் பலம் தீர்மானகரமாக இருந்தது. இந்த ஒழுங்கை மதங்களைக் கொண்டு ஓர் இறுகிய சமூக அமைப்பாக உருவாக்கியபோது பெண் அனைத்தையும் இழக்க வேண்டியிருந்தது. இந்த இழப்பை மனுவின் சட்ட ஒழுங்;குக்கும், கௌடில்யரின் அர்த்த சாத்திரத்தில் குறிப்பிட்ட அக்காலத்தில் இருந்த சட்ட ஒழுங்குக்கும் உள்ள இடைவெளியில் வைத்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
கௌடில்யரின் அர்த்த சாத்திரத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் பெண்ணின் சொத்தாக ஆபரணங்கள் இருந்தன. இரண்டாயிரம் பணம் பெண்ணுக்குச் சொத்தாகக் கணவன் கொடுக்கவேண்டும்;. இந்தப் பணத்தைக் கணவன் இல்லாத நிலையில் பெண் பயன்படுத்த முடியும்;. இப்பணத்தை இயற்கை அழிவுகள் மற்றும் நோய் ஏற்படும்போது கணவனும் பயன்படுத்த முடியும். இரட்டைக் குழந்தை பெறும்போது ஆண் - பெண் இருவரின் சம்மதத்துடன் இதைப் பயன்படுத்த முடியும். முதல் நான்கு வகை (வர்ணத்) திருமணத்தி;லும் மூன்று வருடத்திற்குப் பின் சொத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் கந்துருவ, அசுரத் திருமணத்தில் இப்பணத்தைப் பயன்படுத்தினால் அதை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். இராட்சச, பைசாச முறைத் திருமணத்தில் இப்பணத்தைப் பயன்படுத்தினால் திருட்டாகக் கருதப்படும்.
பெண்ணின் சொத்துக்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த கட்டுப்பாட்டை, சாதிப்படி நிலையில் அடிநிலைப் பிரிவுகளில் இறுக்கமாக இருந்ததைக் காட்டுகின்றது. ஆணாதிக்கம் பலமாக வளர்ந்த மேல்மட்ட, உயர் பொருளாதாரப் பிரிவுகள், சாதிகளில் (இங்கு பெண் முற்றுமுழுதாக ஆணைச் சார்ந்து வாழும் வகையில் பொருளாதார ரீதியில் சமூக உழைப்பில் இருந்து விலக்கப்பட்டதால் அடிமையானாள்.) பெண்ணின் சொத்துக்களைப் பயன்படுத்துவதில் ஆணாதிக்கமாக வளர்ச்சிபெற்று வந்த போக்கு தீவிரமானதை, இக்காலக் கட்டம் துல்லியமாகக் காட்டுகின்றது. ஆணின் சொத்துரிமை பலம்பெற பெண்ணின் சொத்துகள், உரிமைகள் ஆண் சார்ந்து இழப்பதை மேற்கண்ட காலக்கட்டத்தையும், மனுதர்மக் காலக்கட்டத்தையும் இரண்டு வௌவேறு காலக்கட்டத்தில் வைத்து அணுகும் போது உறுதிப்பட நிறுவுகின்றது.
கணவன் மறுமணம் செய்யும்போது பெண்ணுக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டும்;. இல்லாத பட்சத்தில் அவள் செலவுக்கான தொகையைக் கொடுக்க, அவன் வருமானத்தை ஒட்டிய கட்டாயமான விதியாக இருந்தது. இல்லையெனில் கணவனின் உறவினர் அப்பெண்ணைப் பாதுகாக்கவேண்டும்.*
கணவன் மனைவி மீது தாக்குதலோ, அவதூறோ செய்யின் கௌடில்யர் காலத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிகோரமுடியும். ஆனால் மனுவின் காலத்திலோ இது சாத்தியமில்லை. இன்றும்கூட இது சாத்தியமில்லை. இவைகளில் இருந்து தெளிவாவது என்னவென்றால் ஆணாதிக்க வளர்ச்சியிலும், அதற்கு முன்பும் பெண் உரிமைபெற்று வாழ்ந்தாள்; என்பதைக் காட்டுகின்றது. ஆணாதிக்கம் பெண் மீது பொருளாதார ஆதிக்கத்தில் கோலோச்சியதையும் இவை காட்டுகின்றன.
கௌடில்யர் காலத்தில் பெண் பெற்ற உரிமைகள் எப்படி மனுவின் காலத்தில் பறிக்கப்பட்டு, ஆணாதிக்கம் தனது சதிராட்டத்தை எப்படிக் கையாண்டது என விரிவாகப் பார்ப்போம்.
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25 என்ற கூற்றில் ஆண்கள் பெண்களிடம் பழகும் போது புத்திசாலியாக, பெண்ணின் முட்டாள்த்தனத்தை எதிர்த்து முன்னேறுவதாகப் பெண்ணை இழிவுபடுத்துகின்றனர். பெண் ஆண்களை மயக்கும் பாலியல் பண்டம். இது அவர்களின் கூடப் பிறந்த குணம் என்பதன் ஊடாக ஆணாதிக்கம் பெண்ணை அறிவுக்கு முன்னால் அடிமைப்படுத்துவதுடன், பெண்ணின் பாலியல் தேவையை மறுத்து, ஆணின் பாலியல் தேவைக்குள் அதன் பூர்த்தியை, அறிவின் உயர்ச்சியாக இந்து தத்துவம் விதிந்துரைக்கின்றது.
மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25 என்ற இந்துமத அடிப்படைவாதக் கோட்பாடு ஆணாதிக்கத்தின் ஆசை, கோபம் போன்ற சூறையாடலைப் பெண்ணின் தலையில் மூட்டை கட்டி வைத்தபடி எல்லாம் உன்னால்தான் என்று குற்றம்சாட்டுகின்றது.
தாய்வழிச் சமூகத்தில் நீடித்த பொதுவுடைமைச் சமூகம், தனிச் சொத்துரிமை மூலமாக ஆண் ஆதிக்க ஆசை, கோபம் ஊடாக எல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தியதுடன், வர்க்கச் சமூகத்தை உருவாக்கிய ஆணாதிக்க வரலாற்றை, அந்த முட்டாள்த்தனத்தைப் பெண் செய்து விடவில்லை. மாறாகப் பெண் இதற்கு ஊடாக அடிமையாக்கப்பட்டாள். இந்த அடிமைத்தனம் பெண்ணின் போராட்டமாக மாறும்போது ஆண்களின் விழிப்புணர்ச்சியை இது தூண்டும்போது இதைப் பெண்ணின் வடிவில் பார்ப்பதும், எதிர்ப்பதும் மனுவுக்கு அவசியமாகின்றது. இதனால் பெண்ணின் அடிமைத்தனம், மற்றும் சமூகத்தின் அவலத்துக்கு எதிராகப் பெண்ணின் இயல்பான போராட்டத்தையும், அது சார்ந்த ஆணின் விழிப்பையும் எதிர்த்து, இவை பெண்ணின் கேவலமான பண்பாட்டுவழிகள் என்று இந்துத் தத்துவம் பெண்ணைக் கொச்சைப்படுத்தி, ஆணாதிக்கச் சுரண்டலைப் பாதுகாக்கக் குரல் கொடுக்கின்றது.
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25 என்ற இந்து மத விளக்கம் பெண்ணினதும் ஆணினதும் கூட்டு வாழ்க்கைக்கு எதிராக அமைகின்றது. ஓரினச்சேர்க்கை போன்றவை இந்து வழிபாட்டுக் கோபுரங்களில் இருப்பதற்கு இந்தக் கோட்பாடுகள் ஒருபக்கக் காரணமாகும். ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்து வாழவும், ஒரு பெண் பெண்ணுடன்; சேர்ந்து வாழவும் கோரும் மனு, பெண்ணுடன் சேரும் ஆண் தனது புத்தியை இழப்பான் என்பதன் ஊடாக, பெண்ணுக்கு முட்டாள் பட்டத்தைக் கொடுத்து, ஆணாதிக்கத்தை மதவடிவமாக்குகின்றான். பெண்ணின் சமூகப் பாத்திரம் மறுக்கப்பட்டு, பெண்ணைத் தனிமைப்படுத்தி அடிமைப்படுத்தியதன் போக்கில் பெண்ணின் கல்வி முடக்கப்பட்டு, பெண்ணின் அறிவைச் சூனியமாக்கிய ஆணாதிக்கம், ஆணைப் பெண்ணிடம் இருந்து விலக்கி வைத்தும், பெண்ணைப் பாலியல் பண்டமாக மாற்றியதுமே இந்த இந்துக் கோட்பாடுகள் தான். இருந்தபோதும் பெண்ணின் இயற்கையான இயல்பான அன்பு, ஆதரவு, பரிவு.... போன்ற தாய்மையின் கோட்பாட்டில் உதிர்த்து எழுகின்றபோது, அது ஆணைத் தொற்றிக் கொள்ளும் எல்லா நிலையிலும், அதை மனு பெண்ணின் முட்டாள்த்தனம் என்பதன் ஊடாக, அந்த ஆண்களையும் முட்டாள் ஆக்கியதே இந்த ஆணாதிக்கப் போதனைதான்.
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்"25 என்கிறார், இந்து பாசிச வருணச்சிரம மூதாதையரான மனு. வரைமுறையற்ற புணர்ச்சி நீடித்த சமூகத்தில் இருந்து பார்ப்பனிய ஆணாதிக்க ஒருதாரமணத்தையும், சாதிப் படிநிலைக்குள்ளான திருமணத்தைப் பெண்ணுக்குத் திணிக்க உருவாக்கப்பட்ட விளக்கமும், அதன் சட்டத்திட்டமுமே இவையாகும். இன்று வயது எல்லைக்குள்ளான திருமணம், அழகு பார்த்த திருமணங்கள், பொருளாதார அந்தஸ்துக்குள்ளான திருமணங்கள், சாதி கடவாத எல்லைக்குள் பெண்ணை அடிமைப்படுத்திப் பார்ப்பனிய ஒழுக்கக் கோட்பாட்டை நிறுவ இந்த விதிகள் பெண்ணின் ஒழுக்கத்தை வரையறுத்தபோது, பெண்ணின் நடைமுறையைக் கொச்சைப் படுத்த வேண்டியதாகியது.
அழகு என்பதன் ஊடாக நிற ரீதியில் ஈரானில் இருந்து வந்த பார்ப்பனியர்கள், கறுப்பையும், உடல் உழைப்பையும் மறுக்கும் சொகுசையும், அழகையும் பெண் பூசிக்க வேண்டும் என பார்ப்பனியம், தனது ஆணாதிக்கப் பலதாரமண வேட்கையில் விரும்பி உபதேசித்ததே இந்த அழகு பற்றிய விளக்கம். உழைக்கும் ஆண்களின் மீதான பெண்ணின் இயல்பான சமுதாயம் சார்ந்த இயற்கையின் இருத்தல், பார்ப்பனியத்தின் எல்லையற்ற பாலியல் எல்லையை மட்டுப்படுத்தியது. அதேநேரம் ஆண்களின் பாலியல் அனுபவத்தைப் பெண்கள் இனம் கண்டு சொல்லும்போது, ஆணாதிக்கம் கொதிக்கின்றது. இந்த எல்லையில் அழகு, வயது ஊடாகப் பெண்ணைக் கட்டுப்படுத்தவும், பெண்ணைக் கொச்சைப்படுத்தி, தமது மனு நீதிக்குள் பெண்களை அடக்கி ஒடுக்கவும் இந்த விளக்கம் அவசியமாகின்றது.
மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"25 என்ற மனு நீதி பெண்ணைப் பாலியலில் மோகம் கொண்டு அலைவதாகச் சித்தரித்து, ஆண்களைப் பாலியலில் துரோகியாக்கிவிடுவர் என்று துரோகப் பட்டத்தைப் பெண்களுக்குச் சுமத்துகின்றது. ஆண்கள் காமவெறியிலும், பலதார மணத்திலும் பெண்களைப் பாலியல் பண்டமாகப் பயன்படுத்தப்படும் சமுதாயத்தில், இப்படி ஓர் எதிர்த் தன்மை வாய்ந்த விளக்கம் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க தேவைப்படுகின்றது. பெண்ணைப் பாலியலின் மையமாக, அதுவே அவளின் தொழிலாகக் காட்டுவதும், பாலியல் வீறு கொண்டு அலைவதாகக் காட்டி, ஆணின் இந்த இயல்பைக் காப்பாற்ற முன்வைப்பதன் மூலம் ஆணாதிக்கக் கொடூரம் மூடி மறைக்கப்படுகின்றது.
இந்திய உச்சநீதிமன்றங்களில் கற்பழிப்புகள் மீதான தீர்ப்புகள் பல, பெண் பாலியலைத் தூண்டியதால் ஆண் அதில் பயன்படுத்தப்பட்டான் என்று வெளியாகியுள்ளதை வைத்து இந்த இடத்தில் மனுவின் ஆணாதிக்கத் தர்மத்தையும், பார்ப்பனியத்தின் ஆணாதிக்கத்தையும் இனம் காணமுடியும். பெண் பாலியல் வன்முறைக்குள்ளாவதும், கற்பழிக்கப் படுவதும், அவலட்சணப்படுத்தப்படுவதும் இந்த மனுவின் இந்து ஆணாதிக்க வாரிசுகளால்தான் என்பதை மறைக்க, அதைச் செய்யத் தூண்டுவதே பெண் என்று குற்றம் சாட்டி, பார்ப்பனியம் கற்பழிப்புகளை நியாயப்படுத்தி ஏற்படுத்திய இந்துச் சட்டமே இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு வழிகாட்டுகின்றது. பெண்கள் எப்போதும் தற்காப்பு நிலையில் இருந்து போராடும் மனித வரலாற்றில், வன்முறையில் ஈடுபடுபவனைப் பார்ப்பனிய ஆணாதிக்க ஒழுங்கில் காப்பாற்ற, பெண் மீது பழியைத் தூற்றுவது இந்தியாவின் இந்து சமயத்தின் மனுதர்மமாக உள்ளது.
மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது. பெண் அடக்க ஒடுக்கமாக நாணிக் குறுகி இருக்கும் வகையில் கடவுள் படைத்துள்ளதால் ஆண் வீரத்துடன், அதிகாரத்துடன் அடக்கி ஆள வேண்டும் என்று இந்து மதம் விதித்துரைக்கின்றது. பெண் கூனிக்குறுகி வாழ இறைவன் கோருவதால், பெண் உரிமை என்பதை ஆண் வழங்க அனுமதித்தல் ஆகாது என்று மனு கோருகின்றார். பெண் உரிமை கோரி வெற்றிபெறின் இந்துத் தத்துவமும் அழிந்து விடும் என்பதால் பெரு முயற்சி செய்து ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள இறைவன் பெண்ணுக்கு விதித்துள்ளதை ஆண் நிறைவேற்ற வேண்டும் என்று இந்துச் சட்டம் கோருகின்றது.
மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"25 என்று இந்து தர்மம் பெண்ணுக்குச் சூட்டியுள்ள பட்டங்கள் - அடிமை விலங்காகும். இவை ஆண்களின் குணத்தைப் பெண்ணுக்கு உள்ளதாகக் கூறுவது, ஆணை அடக்கி ஆளக் கோருவது என்பதன் ஊடாகப் பெண்ணை அடிமையாக நிலை நிறுத்த ஆணுக்கு வழங்கிய கடிவாளமாகும். ஆணின் படுக்கை மோகம் பெண்ணைப் பலாத்காரமாகக் கற்பழிப்பதில் இருந்து, பலதார மணவாழ்க்கை வரை என்று உலகம் நின்றுவிடவில்லை. பதவி தாகம், உலகின் அனைத்துச் சொத்தையும் ஆண் அனுபவிப்பதில் இருந்து, உலகை அடக்கி ஆளுவது யுத்தத்தின் கோரத்தைத் தொடர்வது ஈறாக, ஆணாதிக்கம் மனித வரலாறாக நீடிக்கின்றது. உலகில் தங்க வேட்டையில் பல இனங்களை அழித்து அதில் ஆபரணம் செய்து பெண்களை ஆசை நாயகியாக்கிய வரலாறு முடிந்துவிடவில்லை.
உலகின் சகல வக்கிரமான பாலியல் முதல் அனைத்திலும் வக்கிரமான கேடான வாழ்க்கையைத் தொடரும் உலகின் மத்தியில்தான் ஆணாதிக்க இந்து இராஜ்ஜியம் பற்றி கொட்டம் அடிக்கின்றனர். நெற்றிக் கண் கோபம் முதல் சாதிப் படுகொலை, கிறிஸ்தவப் படுகொலை, முஸ்லிம் மத அழிப்பின் உச்சத்தில் இன்று ஆணின் ஆணாதிக்க இரத்த வரலாறு உள்ளது. சதிகள் மூலம் பார்ப்பனிய ஆட்சியை நிலை நிறுத்தியும், வந்தேறு குடிகள் பாரம்பரிய மக்களைக் கேவலப்படுத்தி இழிவாக்கியும், அவர்;களின் மொழியை அழிப்பதும் வஞ்சக் சூதினால்தான். இந்த நேர்மையீனத்தில் இருந்துதான் மனு தனது ஆணாதிக்க, தீய நடத்தைகளை, ஆணிடத்தில் இருந்து பெண்ணுக்குக் கடத்திய சதி வஞ்சகம்தான் இந்து தர்மம் ஆகும். இந்து தர்மம் பெண்ணின் அடிமை விலங்கை இறுக்கிய இந்துப் பண்பாடாகும்.
மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."
மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."25 ஆணாதிக்க ஒருதாரக் குடும்பத்தை ஆண்சார்ந்து இந்து தர்மம் கோருகின்றது. இது பண்பாடாக்கப்படுகின்றது. ஒரு பெண்ணைத் தந்தையும், மகனும், கணவனும் வாழ்க்கை பூராகத் தனது கட்டுக்குள் வைத்திருக்கக் கோருவதுடன், உடலுறவை நாடும் பெண்ணைக் கணவன் தனது அடிமையாக வைத்திருக்க, இறைவனின் பெயரில் இந்துத் தத்துவம் கோருகின்றது. ஆணாதிக்கத்தை ஆணை எதிர்ப்பதன் மூலம் சாதிக்க முடியும் என்ற பெண்ணியத்தை, இந்துத் தத்துவ விளக்கம் எப்படி எள்ளி நகையாடுகின்றது என்பதற்கு மனுவின் இந்த விளக்கம் போதுமானதாகும். இருதார மணத்தில் இருந்து ஒருதார மணத்தைச் சமுதாயம் உருவாக்கிய போது ஆணுக்குக் கிடைத்த அதிகாரமும், பெண் மீதான நிபந்தனையற்ற உரிமையை மனு கோருவதுடன் அதையே சமூகச் சட்டமாகப் பார்ப்பனியம் உருவாக்குகின்றது. இந்து இராஜ்ஜியம் கோரும் இன்றைய பார்ப்பனியம் மனுவின் இந்தக் கோரிக்கையினைக் கடவுளின் பெயரில் பெண்கள் மீது திணிப்பதற்கும், இருக்கும் உரிமைகளைப் பறிக்கவும் பின்நிற்கப் போவதில்லை. பெண்ணின் சுதந்திரத்தை மனுவின் அதிகார நிலையில் மறுப்பது, இந்து தர்மம் இதைக் கொண்டு ஆளத் துடிப்பதையும் மறுத்துவிடப் போவதில்லை. பெண்ணின் சுதந்திரம் என்பது ஆணின் சுதந்திரத்தையும், அவனின் குடும்ப அமைப்பையும் சிதைக்கும் என்று மனு கூறுவதைப் பார்ப்போம்.
மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;"25 என்கிறது, இந்து தர்மம். அதாவது பெண் ஆணின் சட்டத்திட்டத்தை எதிர்த்து தனது சுதந்திரத்துக்காகப் போராட முற்பட்டோ, கோரியோ நின்றால், ஆணாதிக்கப் பண்பியல் அடிப்படையில், இரு குடும்பத்துக்கும் ஆபத்து என்று எச்சரித்து, பெண்ணை ஆண் அடக்கி ஆளவேண்டும் என ஆணாதிக்க இந்துத் தத்துவம் கோருகின்றது. இதை மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"25 என்றதன் மூலம் பெண்ணின் இருத்தலைத் துல்லியமாகக் காட்டுகின்றது.
பெண்ணாதிக்க அமைப்பிலிருந்து பெண்கள் மீதான மதிப்பு குறைக்கப்பட, தனிச் சொத்துரிமை அமைப்பின் வளர்ச்சியில்; பெண் முற்று முழுதாக அடிமைப்படுத்தப்பட்டுவிடாத நிலையில், ஆண்கள் பெண்களின் மீது முழுமை பெறாத அடக்குமுறையை அடக்கியாளவே இந்துத் தத்துவம் வரிவரியாக விதிந்துரைக்கின்றது. பெண் வீட்டின் மீது இருந்த எஞ்சிய சுதந்திரத்தைக் கூட கட்டுப்படுத்தி, எதையும் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று, ஆண்களை இந்த இந்துச் சட்டத் தர்மம் கோருகின்றது. சொந்தச் சமையல், பிள்ளை பராமரிப்பு, வீட்டை அழகுபடுத்ததுல்.... போன்ற பெண் வீட்டில் சுதந்திரமாகச் செய்தவைகளைக் கூட, ஆணின் விருப்பத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டு அனுமதிக்கவேண்டும். வீட்டு வேலையில் சிக்கி அது பெண்ணின் கடமையாகியபோதும் கூட, இவைகளைச் சுதந்திரமாக அனுமதிக்க கூடாது என்பதை ஆணாதிக்க இந்து தர்மம் ஆண்களுக்குக் கட்டளையிடுகின்றது. இங்கு இவை இந்து தர்மத்தின் சட்ட விதியாகின்றபோது, சமுதாய - பண்பாட்டு வடிவமாகியுள்ள நிலையில், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சமுதாயத்தைப் புரட்டிப் போராடும் புரட்சிதான் பெண்ணை விடுவிக்கும்;. இந்த இடத்தில் ஆண்கள் பெண்களின் சுதந்திரத்தைத் தனிப்பட அனுமதிக்கும்போது அவனை வலுவற்ற கணவனாகக் கூறியதுடன், இந்து தர்மத்தை நிலைநாட்ட, சாதியின் பெயரில் பெண் அடிமைப்படுத்த, அடுத்த ஆயுதத்தை இந்து தர்மம் முன்வைப்பதைப் பார்ப்போம்.
மனு 9.6 இல், ''எல்லாச் சாதியினருக்கும் விதிக்கப்பட்டுள்ள உயர்கடமை கருதி, வலுவற்ற கணவர்கள் கூடத் தம் மனைவியரைக் காக்கவேண்டும்;"25 என்று கூறி சாதிக் கடமையின் பெயரில் பெண்ணை அடிமைப்படுத்த ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. பெண் சொல் கேட்பவன், பெண்ணின் சுதந்திரத்தை அனுமதிப்பவன், கோருபவன் வலுவற்ற ஆண் என்று கூறுவதன் மூலம் ஆணின் சமூகப் பாத்திரம் இழிவாக்கப்படுகின்றது. அத்துடன் வலுவானவர்கள் வலுவற்றவன் மீது அதிகாரத்தை, வன்முறையைப் பயன்படுத்தவும் மறைமுகமாக இது கோருவதுடன், சமுதாயத்தின் ஆணாதிக்கச் சாதிக் கோரத்தின் கடமையிலும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கக் கோருகின்றது. இதை மீறுபவன் சாதிக் கடமையைச் செய்ய மறுத்தவனாகவும், அந்தச் சாதியில் இருக்கும் அருகதையை இழந்து விடுவதையும் மறைமுகமாக இது எச்சரிக்கின்றது. இந்து ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது சாதி மற்றும் ஆணாதிக்கம் சார்ந்த இந்து தர்மத்தைத் தகர்க்காத வரை சாத்தியமில்லை. இந்து ஆணாதிக்கம் பெண் விவாகரத்தைக் கோர முடியாது என்பதைத் திட்டவட்டமாக எடுத்தியம்பும் அதேநேரம், கணவன் பெண்ணை விட்டுப் பிரியவோ, விற்கவோ உரிமை வழங்குகின்றது.
இதை மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது." மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது." மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"25 என்றதன் மூலம் ஆணாதிக்க ஒருதார மணத்தைத் திட்டவட்டமாக அமுல் செய்யும்படி பார்ப்பனியம் கோருகின்றது.
இருதார மணத்தில் இருந்து ஒருதாரமணம் உருவாக்கிய சட்டத் திட்டம் பெண்ணை ஆணின் உரிமையாக்குகின்றது. ஆண் பெண்ணை விற்கும் பண்டமாகவும், விட்டு எறியவும் உரிமையை ஏற்படுத்தியதன் மூலம் பெண் ஒரு பொருளாக்கப்படுகின்றாள். பொருளாக்கப்பட்ட பெண்ணைப் பண்டமாக வாங்கவும், விற்கவும் உரிமை கொள்ளும் கணவன், பெண்ணைப் பாலியல் ரீதியில் அனுபவிக்க, உழைப்பைச் சுரண்டக் கோருகின்றது. இந்த அனுபவிப்பு முடிவுறும் போது, மீண்டும் விற்கவும், தூக்கி எறியவும் கூடிய பண்டமாகப் பெண் மாற்றப்பட்டு, அதை ஆண் அமுல்படுத்தும் அதிகாரத்தைக் கட்டாயமாக்குகின்றது, பார்ப்பனியத் தர்மம். பெண் தன் வாழ்வைத் தீர்மானிக்கக்கூட முடியாது. தந்தை, கணவன், மகனிடம் இருந்து பிரிந்து வாழவும் கூட பெண்ணுக்கு அனுமதிக்க மறுக்கும் மனுதர்மம், அதை ஆணின் உரிமையாக்குகின்றது. பெண்ணை உயிர் உள்ள பண்டமாக மாற்றி பெண்ணின் சொத்துரிமை மறுக்கப்படுவதைப் பார்ப்போம்.
மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" என மனுதர்மம் பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் உடைமையாளனைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது. பெண்ணை ஆணின் உடைமை, தனிச் சொத்துரிமை வழியில் பெண் ஆணின் பொருளாகி;, சொத்தாகின்றாள். இதில் இருந்து பெண் சொத்துக்கு உரிமை கொண்டாடவோ, தனது உழைப்பைத் தனதாக்கவோ முடியாத ஆணாதிக்கச் சட்டம், ஆணாதிக்கச் தனிச்சொத்துரிமையானது.
கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது. பெண் எந்த நிலையிலும் சுதந்திரமாக வாழ சொத்துரிமை மறுப்பைத் தடையாகக் கொண்ட மனுதர்மமே, இன்று இந்து தர்மம் ஆகின்றது. பெண் ஆணின் சட்டத்திட்டத்தை மனு தர்மப்படி கடைப்பிடிக்கத் தவறின் பெண் மீது தண்டிக்கும் உரிமையை ஆணுக்கு வழங்குகின்றது. அதைப் பார்ப்போம்.
மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்"25 என்று மனுதர்மம் கோருகின்றது. பெண் சமுதாயத்தின் அனைத்து அடிநிலை சமுதாயப் பிரிவுகளின் நிலைக்குத் தாழ்த்தப் பட்டுள்ளாள். அடிமை நிலைக்குப் பெண்ணைத் தரம்தாழ்த்திக் காட்டிய பின், தந்தை, கணவன், மகன் பெண்ணைத் தண்டிக்கும் ஆணாதிக்கத் தண்டனை உரிமையை வழங்கி அதை அமுல்படுத்த இந்து தர்மம் கோருகின்றது. பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது. பெண்ணின் கல்வி உரிமை பற்றி என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.
மனு 2.66 இல், ..... ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......." மனு 9.18 இல், ''வேதங்களைப் பயிலும் உரிமை பெண்களுக்கு இல்லை...... பெண்கள் வேதமந்திரங்களை உச்சாடனம் செய்ய இயலாது. ஆதலின் பெண்கள் அசத்தியத்தைப் போலவே தூய்மையற்றவர்கள்....." மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...." மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...." மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது." மனு 4.206 இல், ''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"25 என்பதன் மூலம் பெண் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய வரலாற்றைக் காட்டுகின்றது.
பெண்கள் ஆணாதிக்க மனுதர்மப் பார்ப்பனியத்தை எதிர்த்து கல்வி கற்கவும், அதை விரிவாக்கவும், அதை நடைமுறைப்படுத்த முயன்றதையும், அதில் ஆண்கள் பங்கு பற்றியதையும் இது காட்டுகின்றது. இந்த எல்லையில்தான் பெண்ணுக்கான ஒழுக்கக் கோவை உருவாக்கப்படுவதுடன், இதை அதிகாரம் செய்யும் உரிமையை ஆண்களுக்கு வழங்கி, ஆணாதிக்கச் சமூகத்தை நிலைபெறச் செய்வதை மனுதர்மம் குறிக்கோளாகக் கொள்கின்றது. பெண் கல்வி பெறுவது நரகத்துக்கு உரியதாகவும், தூய்மைக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இறைவன் பெயரால் கூறிய ஆணாதிக்க மனு தர்ம அதிகாரம் இந்தியச் சமுதாயத்தில் நிறுவப்பட்டது. பெண்ணின் கல்விச் சுதந்திரத்தை வித்திடவும், அவள் சொத்துரிமையைக் கோரவும், ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கவும் முனையும்போது இருக்கும் சமுதாயத்தைத் தகர்த்துவிடும் என்ற பார்ப்பனியச் சதித்தனம் பெண்ணின் அனைத்து நீக்கல்களையும் அடைத்து பொம்மையாக்கிவிட முனைந்தது. இந்தவகையில் அடுத்த அடிமை விதியைப் பார்ப்போம்.
மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"26 என்பதன் மூலம், பெண் தனது சொந்த வாழ்க்கையில் யாரைத் தெரிந்து எடுப்பது அல்லது என்ன நிலையில் வாழ்வது என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலைக்கு அடிமைப்படுத்தப்பட்டாள். பெண்ணின் தந்தை அல்லது சகோதரரின் விருப்பு வெறுப்புக்கு இசைந்து போகும் ஒரு வளர்ப்பு நாயாக வாலாட்டக் கோருவதே இந்த மனுதர்மம் ஆகும். இப்படி வளர்ப்பு நாயை வேறு ஒருவருக்குக் கொடுக்கும் போது அங்கும் வாலாட்ட வேண்டுமே ஒழிய, சுதந்திரமாக எதுவும் செய்யமுடியாது. வளர்ப்பு நாயின் உரிமையாளர் இறந்தாலும் உரிமையாளரின் நிழல்கள் மீது வாலாட்டும் உணர்ச்சியற்ற நாயின் நிலைக்குப் பெண்ணை மாற்றிய போக்கில், ஆணாதிக்க எசமான் அதிகாரத்தில் எச்சில் சோற்றுக்காகப் பெண்ணை வாழக் கோருவதே, மனுதர்மம் விதித்த விதியாகும். இந்தக் கணவன் விசுவாசத்தைப் பெண் மறுக்க முடியாது. அதை மனு கூறுவதில் இருந்து பார்ப்போம்.
மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"26 என்று பெண்ணை நிர்ப்பந்திப்பதன் மூலம் ஆணின் அடிமையாகப் பெண் இருக்கும்படி சமுதாயம் கோருகின்றது. ஆண் எவ்வளவு கொடுமைக்காரன் ஆக இருந்தாலும் சரி, பெண்ணின் உணர்வுகளைத் தீர்க்க முடியாதவனாக இருந்தாலும் சரி, பெண் ஆணை வழிபட வேண்டும். ஆணை விமர்சிக்கவோ, விட்டு விலகவோ பெண்ணுக்கு அனுமதியில்லை. இந்த நிலையில் பெண்ணின் கடமைகள் பற்றி மனுதர்மம் கூறுவதைப் பார்ப்போம்.
மனு 5.150 இல், ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்"26 என்று கூறி பெண்ணின் கடமையை வரையறுக்கின்றது. ஆண் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் சரி, பெண் அவனுக்குக் கட்டுப்பட்டு இவைகளைத் திறம்பட செய்தல் பெண்ணின் கடமையாகின்றது. பெண் ஆண்கள் உலகத்தில் இருந்தும், வீட்டுக்குள் தள்ளப்பட்ட நிலையில் பெண் சமைக்கவும் அவைகளைக் கழுவி வைக்கவும் நிர்பந்தித்து, ஆணுக்குச் சேவகம் செய்து ஆணை வழிபட்டு மோட்சம் அடைய, அதாவது மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"26 என்று மனு தர்மம் பெண்ணை அடிமை நிலைக்குள் இருக்க சொர்க்கத்தின் உயர் பதவி ஆசையும் காட்டிக் கோருகின்றது.
அத்துடன் பெண்ணுக்கு இந்த உலகத்தின் இன்பத்தைத் தருபவன் கணவன் என்று கூறி கணவனுக்கு விசுவாசமாகவும் அடிமையாகவும் இருக்கக் கூறி, அடுத்த உலகிலும் கணவனே எல்லாம் என எச்சரிக்கை செய்கிறது மனுதர்மம். மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே" என்று கடவுள் மீதான பயம், பக்தி ஊடாக ஆணாதிக்கச் சட்டத்தைப் பெண்ணின் மீது திணிக்கிறது மனுதர்மம். பெண் ஆணுக்கு அடிமையாக, பொருளாக, கடமை செய்பவளாக, ஆணின் இன்பத்தைத் தீர்ப்பவளாக மனுதர்மம் பெண்ணின் கடமையை வரையறுத்தது. இதில் பெண் சிந்திக்க இடம் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்த மனுதர்மம் பெண்ணின் வேலையை அதிகமாக்கியது.
இது இன்றும் இந்தியாவில் மனுதர்மத்தின் தொடர்ச்சியில் பெண் சீதனமாகப் பாத்;திரத்தைப் பெற்றுக் கொள்வதும், அதைக் கழுவி வாழக் கோருமளவுக்குப் பெண்ணின் நிலையுள்ளது. இந்தியக் குடும்பங்களில் பாத்திரங்கள் தேவைக்கு மீறிய வகையில் வீடுகளில் அடுக்கி வைத்திருப்பதும், அதைச் சொத்தாகச் சேர்ப்பதையும் காணமுடிகின்றது. வீட்டின் வேறு அடிப்படைத் தேவைக்கு இடம் இல்லா விட்டாலும், பாத்திரத்தின் எண்ணிக்கை குறைவதில்லை. இந்தப் பாத்திரத்தின் எண்ணிக்கையைப் பொறுத்தும், பெண்ணின் வேலையை மனுதர்மம் கோருவதற்கு ஏற்பவும் உணவுத் தயாரிப்பும் அதையொட்டிய பழக்க வழக்கமும் தோற்றம் கண்டது.
உணவின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல பாத்திரங்களைப் பாவிப்பதும், உண்ணும் போது வேறுபட்ட உணவு வகைகளைத் தனித்தனியாகப் பரிமாறுவதும், தனித்தனியாக அவைகளைப் பிரித்து வைப்பதும், பெண் மூன்று நேரமும் வௌ;வேறு வகை உணவைத் தனித்தனியாகச் செய்வது அடிப்படையான உணவுப் பழக்கவழக்கமாக இருப்பதால், சமையல் மற்றும் உணவின் பின் குவிந்து போகும் பாத்திரத்தின் எண்ணிக்கையால், பெண்ணின் வாழ்க்கையும் மூச்சும் இதற்குள் அழுந்திப் போகின்றது. அத்துடன் பெண் கழுவும் கழிவுத் தொட்டி இருட்டு இடத்தில் இலகுவாகக் கழுவ முடியாத வகையில், குனிந்து, நாரி, எலும்பு முறிய, அழுக்கு போக்க மாரடிப்பதும், இல்லையென்றால் குந்தியிருந்து மணிக்கணக்காகக் கழுவிச் செல்லும் வாழ்க்கை சகிக்கமுடியாது. இதுபோல் உடுப்புத் தோய்க்கும்போதும் சரி, பல தளத்தில் பெண் கழுவுவது என்பது சிரமத்தையுடைய பணியாக, பொருள் பயன்பாட்டில், உணவுப் பயன்பாட்டில் வைத்திருப்பது மனுவின் கோரிக்கையின் அடிப்படையில்தான். அத்துடன் இந்த அழுக்கை அகற்ற தண்ணீர் இன்றி இருக்கும்போது பெண்ணின் சுமையைச் சொல்லி மாளாது.
பெண்ணின் அழுந்தி மாரடிக்கும் கூலியற்ற ஆணாதிக்கக் கடமைகளில், குறைந்தபட்சம் தொழில் நுட்பங்களை உள் ஊர் அளவில் கூட புகுத்துவதை மறுக்கும் மனுதர்மக் குசினியமைப்பும் பெண்ணின் கடமையை வரையறுப்பதால், பெண்ணின் வாழ்விடங்கள் நவீனக் கட்டிடத்தில் கூட பழையபடி பேய்கள் வாழும் குகைகளாகப் பேணப்படுகின்றது. இந்தியப் பெண்கள் புரட்சியில் பங்கு கொள்ள முன்பு அவர்களின் உணவுப் பழக்க வழக்கம், குசினி அமைப்பு வடிவத்துக்கு எதிரான போராட்டம், பெண்ணைச் சுதந்திரமாகச் சிந்திக்கும் நேரத்தை வழங்கும். அந்தளவுக்கு மனுதர்மம் பெண்ணின் கடமை பெண்ணை வீட்டில் அழுந்தப்பண்ணி, மூச்சுவிட முடியாத வகையில் சிந்திக்க முடியாத வகையில் பண்பாட்டு, கலாச்சாரச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டுள்ளாள். சமூகம்பற்றி சிந்திக்கும் ஆண்கள் தமது குடும்பங்களில் தீவிர மாற்றத்தை உணவுப் பழக்க வழக்கத்தில், குசினி அமைப்பில் கோரவும், மாற்றி அமைப்பது பெண்களுக்கு ஆறுதலை முதல் கட்டத்தில் வழங்கும். இதில் இருந்துதான் பெண்ணைப் புரட்சிக்கு வென்று எடுக்கவும், ஆணாதிக்கத்தைத் தகர்க்கவும் முடியும்;.
ஆணாதிக்க மனுதர்மத்தின் வக்கிரத்தையும், இந்துப் பண்பாட்டு - மத ஆணாதிக்கத்தையும் மேலும் ஆழமாக மதங்கள் தொடர்பான பகுதியில் ஆராய்வோம்.