2500 வருடம் பழமை வாய்ந்த புத்தமதம் பற்றிய மதம் சார்ந்த தமிழ் மூல நூல்கள் இன்மையால், கிடைத்த தரவுகளில் இருந்தே கூட புத்தமதம் ஓர் ஆணாதிக்க மதமாக இருப்பதைக் காணமுடியும். புத்தமதத்தை ஆணாதிக்கமற்ற மதமாகக் காட்ட முனையும் எல்லாப் போக்குகளின் பின்பும், பிழைப்புத்தனமே எஞ்சிக் கிடக்கின்றது.
அம்பேத்கர் இந்து மதத்தின் ஆணாதிக்கத்தை ஆராய்ந்து அம்பலப்படுத்திய அளவுக்கு, அவர் பின்னால் தனது பூர்சுவா அரசியலில் இருந்து வழிகாட்டிய புத்தமதத்தின் ஆணாதிக்கத்தை மூடி மறைத்தபடிதான் மக்களை வழி நடத்தமுடிந்தது. சாதியம் மீதும், பார்ப்பனியத்தின் பல்வேறு மக்கள்விரோதக் கோட்பாட்டு, நடைமுறை மீதும் புத்தர் காட்டிய எதிர்ப்பின்போதும் கூட, பெண்களின் பிரச்சனையை ஒடுக்கப்பட்ட சமூகக் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டது கிடையாது. பௌத்தப் பெண்வழிச் சமூகத்தின் எச்சச் சொச்சத்தை அழித்து, கோலோச்சிவந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பை எதிர்த்து, தனது மதத்தைக் கட்டியெழுப்பிவிடவில்லை. ஆணாதிக்கக் கட்டமைவின் மீதே அவர் பௌத்தத்தைப் போதித்தார். பெண்களுக்கு உரிமை வழங்கக் கோரி அதைச் சுற்றியிருந்த பெண்களும், அவரின் பிரதான தொண்டர்களுமே அவருக்கு எதிராகப் போராடவேண்டியிருந்தது. இதனால் பெண்களுக்கு வேண்டாவெறுப்பாகவே சில உரிமைகளைச் சலுகையாக வழங்கினார்.
இந்தப் போராட்டத்தின்போது, பெண்களுக்கு ஆனந்ததேரர் அந்தஸ்து வழங்குமாறு கோரியபோது, புத்தர் ''உன்னுடன் கதைக்கும் பெண் மூத்தவரானால் அப்பெண் உனது தாய் போன்றவள். பிறபெண்களைச் சகோதரியாக நினைத்துப் பழகு. எச்சந்தர்ப்பத்திலும் தனியாகப் பெண்ணுடன் கதைக்காதே. முடிந்தவரை இன்னொருவரை வைத்துக் கொண்டுபேசு" (இலக்கம் 163)17 என்றே போதிக்கின்றார். இதன் பின்னால் பெண்கள் ஆண்களைக் கவர்ந்து கெடுக்கும் பாலியல் ஆளுமை கொண்ட பண்பினர் என்பதையே மறைமுகமாகக் கூறுகின்றார். உண்மையில் ஆண் அப்படியிருக்க அதைப் பெண்ணுக்கான சிறப்புத் தகுதியாகக் கொச்சைப்படுத்துகின்றார். இதை நாம் சிறப்பாகப் புரிந்துகொள்ள, இயக்கங்களின் பெண்கள் பற்றிய பார்வை, புத்தரின் நிலைக்கு ஒத்ததே. புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பெண்களை இயக்கத்தில் இணைக்க மறுத்த போது கூறிய காரணம், அவர்கள் போராட்டத்தைப் பாலியல் ரீதியாகச் சிதைத்துவிடுவார்கள் என்பதே. பல்வேறு இயக்கத்திலும் சரி, குறிப்பாகத் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து இருந்த பெண்கள் இயக்கத்துக்குள் காதலித்த போது, தலைமையில் இருந்த ஒருசிலர் மாப்பிள்ளை பிடிக்கவே பெண்கள் இணைகின்றனர் என்ற கருத்தை அமைப்பு வடிவமாக்கிக் கொச்சைப்படுத்தினர்.
புத்தர் பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும், மற்றைய பெண்களுடன் கதைக்கும்போது இரண்டாம் ஆளை வைத்துப் பேசு என்கின்ற போது, (இதைத்தான் இன்றைய ஆணாதிக்கம் பொதுவாகக் கடைப் ;பிடிக்கின்றது. பெண்ணுக்குத் துணையாக மற்றொருவரைக் காவல் வைக்கின்றது.), அதில் பெண்கள் பற்றி ஆணின், ஆணாதிக்கப் பார்வையே வெளிப்படுகின்றது. ~புத்தர் காலம் பொற்காலம்| என்பது அப்பட்டமான ஆணாதிக்கக் காலமாகும். பெண்ணைப் பாலியல் ரீதியாக அணுகி, கண்டு விளக்கம் கொடுக்கும் புத்தர், அதைத்தாண்டி பெண்ணை இங்கு, எக்கட்டத்திலும் மனிதப்பிறவியாக அணுகிவிடவில்லை. கதைப்பதே ஆபத்தானது என்றளவுக்கு, புத்தரின் ஆணாதிக்கம் கோலோச்சிக் கிடந்தது.
பெண்களுக்குப் பதவி கொடுப்பதைப் புத்தர் மூன்று முறை மறுத்தார். ஆனந்ததேரரின் பிடிவாதத்தால் மட்டுமே பெண்களுக்குச் சில சலுகை வழங்கப்பட்டதாக ~புதபணவில்| கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர பெண்களுக்கான சட்டத்திட்ட ஆணாதிக்க ஒழுக்க விதிகள் 227, 304 ஒதுக்கப்பட்டவையாகும். ''பெண்களைச் சங்கத்தில் சேர்ப்பதைப் புத்தர் முதலில் விரும்பவில்லை. பின்னர் பெண்கள் எட்டு நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகச் சம்மதித்தால் அவர்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள"22 உடன்பட்டார். ஆணாதிக்கம் எப்படி பெண்ணைக் கருதுகின்றதோ அதையே புத்தரும் முன்வைக்கின்றார். அதனால்தான் ஒழுக்கவிதியை முன்வைத்து ஒழுக சம்மதித்தால், என்பதை விசேடமாக முன்மொழிகின்றார். புத்தமதத்தில் பெண்களுக்கான சலுகைகள் புத்தரின் ஆணாதிக்க எதிர்ப்புகளுக்கு ஊடாகவே பெறப்பட்டது.
புத்தர் பெண்களை மனிதப்பிறவியாக மதித்ததில்லை. அவரின் துறவு கூட பெண் வெறுப்பில் ஏற்பட்டதே. பாலியல் இயற்கையான உணர்வு என்பதை மறுத்து, துறவைப் புத்தநெறியாக்கியபோது பெண்ணை இழிவுபடுத்துவது, அதன் அடிப்படையாகின்றது. ''பாலுறவைக் கடுமையாக எதிர்த்து வந்த..."23 புத்தர், பெண் துறவுக்கு எதிரான போகப்பொருளாகக் காண்கின்ற, ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தின் ஆணாதிக்கப் பிறவியாகவே இருந்தார். இதில் இருந்தே பெண் சார்ந்த ஆணாதிக்கப் போகத்தைத் துறக்கும், ஆணாதிக்கத் துறவுக் கண்ணோட்டம் வெளிப்பட்டபோது, துறவு புத்தமதத்தின் ஆணாதிக்க உள்ளடக்கமாகின்றது. புத்தர் தனிச்சொத்துரிமையைத் தனிமனிதனாகக் கைவிட்டு துறவு பூண்டபோது, பழைய தனிச்சொத்துரிமையற்ற சமுதாயத்தின் ஒரு பிரதிநிதிக்குரிய பிம்பமான மயக்கத்தைக் கொடுத்ததன் ஊடாகப் பெரும் செல்வாக்குப் பெற்றார். இதை அவர் பழைய எச்சச் சொச்ச சமுதாயத்தில் இருந்து எடுக்காததுடன் அதை நோக்கிச் செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அவரின் சமூகக் கண்ணோட்டம் உயர்குடித் தன்மை கொண்டிருந்தது. இதனால் பாலியலில் தனிச்சொத்துரிமையின் விளைவான ஒருதாரமணத்தைச் சமுதாய மயமாக்கினர்.
புத்தர் வாழ்ந்த காலத்தில், முந்திய சமுதாயத்தின் இணைமணம், வரைமுறையற்ற புணர்ச்சி, சமூகச் சொத்துரிமை என எல்லா எச்சச் சொச்சமும் இருந்தும், அவர் அதைப் பாதுகாக்கப் போராடவில்லை. மாறாக இதற்கு எதிராகத் தனிச்சொத்துரிமையின் போக்கில் அவர் துறவியானபோது, ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாகி பெண்களை இழிவுபடுத்தினார். இதைத் தாண்டி புத்தருடன் நெருங்கிய உறவு இருந்ததாகச் சுந்தரி, சிஞ்சை என்ற பிக்குணிகள் கூறியபோது, அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்த கைக்கூலிகள் என்று தூற்றப்பட்ட வரலாறும் புத்தரின் பின் பதிவுபெற்றுள்ளது. அடுத்து இயற்கையான இயற்கை புணர்ச்சி ஆணாதிக்கப் போகமாகின்ற போது, அதில் ஏற்படும் துறவு ஆணாதிக்க வடிவமாகியே வெளிப்படுகின்றது. இந்தப் போக்கு எல்லா மதத்திலும் ஆங்காங்கே வெளிப்படுத்துவதில் சளைத்துவிடவில்லை. இதைத்தான் கிறிஸ்தவ, யூத மதங்களும் ஆணாதிக்கத் துறவைப் பின்பற்றி கையாண்டன.
ஒருதார மணத்தைப் பெண்ணுக்கு மட்டுமாக இறுக்கியதில் புத்தரின் பங்கு குறிப்பிடத்தக்கது. உயர்குடி பெண்களிடையே மட்டும் நிலவிய ஆணாதிக்க ஒருதார மணத்தைப் பொருளாதார ரீதியாக வாழ்ந்த கீழ்நிலைப் பெண்களுக்கும் ஒழுக்கமாக்கியதில் புத்தரின் பங்கு ஆணாதிக்கத் தன்மை கொண்டவை. பெண்வழிச் சமுதாயத்தில் நிலவிய ஒருதாரமணம் அல்லாத இணைமணத்தை, தனிச்சொத்துரிமை ஒருதாரமணமாக மாற்றியபோது சொத்துடைய உயர்குடிப் பெண்களின் ஒழுக்கமாகவே அது இருந்தது. புத்தர் உயர்குடிக் குடும்பத்தில் பிறந்து, அதன் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார ரீதியாகக் கீழ்நிலையில் வாழ்ந்த மக்களின் இணைமணங்களை விபச்சாரமாக வரையறுத்து, ஆணாதிக்க ஒருதார மணத்தைப் பெண்ணுக்கு மட்டும் இறுக்கியதில் புத்தரின் பங்கு தென்னாசியச் சமூகங்களில் கணிசமான பங்கை வகித்துள்ளது.
புத்தர் பெண்கள் பற்றி கொண்டிருந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தின் விளைவாக, பெண்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். சமுதாயத்திலும், குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனினதும், பெண்ணினதும் கடமைகளை வேறுபடுத்தி வரையறுத்ததன் மூலம் பெண்ணை அடிமையாகவே வரையறுத்தார். இதில் இருந்தே பெண்களைத் துறவியாகப் புத்தமதத்தில் இணைக்க மறுத்துவந்தார். வேண்டா வெறுப்பாகவேத் தவிர்க்க முடியாமலே இறுதியில் இணைத்தார். இவர் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் வரையறுத்தார். அதைப் பார்ப்போம்.
ஆதிவேதச் சங்கங்களின் ஸ்தாபனக் காதையில் ''ஆண் மெய்யென்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கும் புருஷனெனப்படுவான். பெண் மெய்யென்பது சகலராலும் இச்சிக்கக்கூடிய ஸ்திரீ எனப்படுவாள். இவ்விருவருள் ஆண் மெய் வீரிய வான்ம வடிவமென்றும் பெண் மெய் பேதை யான்ம வடிவமென்றுங் கூறப்படும்."24 ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆணின் உயர் நிலையைப் புத்தர் அங்கீகரித்துப் பெண்ணைக் கீழ் நிலைக்குத் தள்ளியது இந்த வழியில் தான்;. ஆளவும், பொருளாதார ரீதியாக மற்றவன் மீது அதிகாரம் செலுத்தவும் ஆணுக்கு அங்கீகாரம் தரும் புத்தர், பெண் பாலியல் ரீதியாகப் பயன்படும் ஒரு பாலியல் பொருள் என்கின்றார். ஆணை வீரியம் கொண்டவனாகவும், பெண்ணைப் பேதைப் பொருளாகவும் காட்டும் புத்தர், பெண்ணுக்கு என்ன விடுதலையைத் தந்திருக்கமுடியும்? தொடர்ந்து பார்ப்போம்.
''பேதை யான்ம தோற்றமுள்ள நீங்கள் சகலராலும் இச்சிக்கக் கூடிய வடிவுள்ளவர்களாதலின் நீங்கள் ஒவ்வொருவரும் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பென்னும் நான்கு கற்பின் தன்மையில் நிலைக்கவேண்டும்...
1. அன்னிய புருஷர் யாரைக்கண்டபோதிலும் நாணமுற்று, தலை கவிழ்தலும், தனது முகத்தையும், தேகத்தையும் அன்னியப் புருஷர்கள் கண்டார்களேயென்று வெட்கமடைதல்வேண்டும்.
2. தனது கணவனும், மைந்தர்களும் இல்லத்தில் இல்லாதபோது அச்சவாழ்க்கையில் இல்லறம் நடத்துதலும், தனியே வெளியிற் போகுங்கால் ஒரு சிறுவனையேனும் கையால் தாவுகொண்டு செல்லலும், அன்னியப் புருஷர் முகங்களை நோக்குதற்குப் பயப்படுதலும், தன் கணவனே தன்னை யாண்டுரட்சிக்கும் ஆண்டவனாதலால் அவனுக்கு வேண்டிய பதார்த்தத்தை வட்டித்தலும், வேணப்புசிப்பையளித்தலும், நித்திரைபடுத்தலுமாகிய செயல்களில் அவன் மனங் கோணாது திருப்தியுறுமளவும் அச்சத்தில் நின்று ஆனந்திக்க வேண்டும்.
3.அன்னியப் புருஷரைக் காணுமிடத்து வெறுப்படைதலும், தனக்குக் கிடைத்துள்ள ஆடைகளில் திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்டவாடைகளில் வெறுப்படைதலும், தனக்குள்ள ஆபரணங்களில் வெறுப்படைதலும், தன் கணவனால் கிடைத்துவரும் புசிப்பில் போதுமான திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்ட புசிப்பில் வெறுப்படைதலுமாகிய செயலுற்று, தனக்குக் கிடைத்தவரையில் திருப்தியடைதல் வேண்டும்.
4.தனது கணவன் வாக்குக்கு மீறாது நடத்தல் முதல் ஒடுக்கம். பெரியோர்களிடம் அடங்கி வார்த்தை பேசுதல் இரண்டாம் ஒடுக்கம். கணவனுக்கு எதிர்மொழி பேசாதிருத்தல் மூன்றாம் ஒடுக்கம். கணவனிடம் எக்காலும் மிருதுவான வார்த்தை பேசுதல் நான்காம் ஒடுக்கம். அன்னிய புருஷர்கள் தன்னைப் பார்க்காமலொடுக்கிக் கொள்ளுதல் ஐந்தாம் ஒடுக்கம்;. அன்னியர் மெச்சும் ஆடையாபரணங்களையகற்றி, தன்கணவன் தண் குளிரும் அலங்கரித்து நிற்றல் ஆறாம் ஒடுக்கம். தன்கணவன் தேகமும் தன்தேகமும் வேறாகத் தோன்றினும் அன்பும் மனமும் ஒன்றாய் ஒத்துவாழ்தல் ஏழாம் ஒடுக்கம். கணவனுக்குப் பின் புசித்தலும், கணவனுடன் புசித்தலும் எட்டாம் ஒடுக்கம். கணவனுக்குப் பின் சயனித்தலும், உடன் சயனித்தலும் ஒன்பதாம் ஒடுக்கம். பஞ்சசீலத்தின் ஒழுக்க விரதங் காத்தல் பத்தா மொடுக்கம்."24
எல்லா மதங்களும் எதை எல்லாம் சொல்லுகின்றதோ அதைத்தான் புத்த மதமும் சொன்னது. மதங்களுக்கிடையில் இதில் சில வேறுபாடுகள் இருந்த போதும் பெண்ணை அடிமைப்படுத்துவதில் எந்த மதமும் முரண்படவில்லை. அம்பேத்கர் போன்றோர் புத்தமதத்தைத் தூக்கி நிறுத்தியபோது, இந்துமதத்தின் ஆணாதிக்கத்தை எதிர்த்தது போல் செய்யாது, புத்த மத ஆணாதிக்கத்தை மூடிமறைத்தார். இன்று தலித் ஆணாதிக்கத்தை மூடிமறைத்து, தலித்தென்ற கோஷத்தில் செய்யும் கூத்துபோல்தான் அம்பேத்கர் செய்தார்.
புத்த ஆதிவேதம் பெண்ணின் ஒழுக்கவிதிகளை வரையறுத்துக் கூறும் தரவுகள் அருங்கலைச்செப்பு வழியாகப் போதிக்கப்படுகின்றது.
பெண்ணின் கடமை, கற்பின் வரையறை, அடிமையாக இருக்கும் எல்லை என புத்தம் பெண்ணை அடிமைப்படுத்தும் ஒழுக்கவிதிகள், மனித நாகரிகத்தின் ஆணாதிக்க விளக்கமாகும். பெண், ஆண்களைக் காண்பதே குற்றமாகும். எல்லாமதமும் பெண்ணை வீட்டில் அடைத்துதான் வைத்திருந்தது. இதுவே பெண்ணின் கற்புக்குப் பாதுகாப்பாகும். அவளின் உடை பற்றிய விளக்கங்கள் எல்லாம் எல்லா மதத்திலும் காணப்படுபவைதான். திருமணத்தில் பொதுவாக எல்லா மதமும் பெண்ணின் முகத்தை மூடிக் கொண்டு வரும் வழக்கம், ஆணாதிக்கக் கற்பு கோட்பாட்டின் அடிப்படையில் பெண் மற்றைய ஆண்களைப் பார்க்க கூடாது என்ற கற்பு விதியில் இருந்து, குடும்பத்துக்கு வெளியில் முதல் ஆணைக் காண்பதைக் குறித்து நிற்கின்றது. இந்தியா மற்றும் இலங்கையில் நிகழ்ந்த கற்பழிப்புக்கு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளில் பல, பெண் போட்டிருந்த உடுப்பு சார்ந்து பெண்ணைக் குற்றவாளியாக்குவது ஆணாதிக்க மரபாக உள்ளது. இலங்கையில் சிங்கள இனமக்கள் மத்தியில் திருமணத்தன்று முதல் இரவில் வெள்ளை துணி விரித்து, அடுத்தநாள் பெண் உறுப்பை மூடியிருக்கும் சவ்வுகிழிவினால் ஏற்படும் இரத்தக்கறை தேடி, பெண்ணின் கற்பைப் பரிசோதிக்கும் ஆணாதிக்கத் தீர்ப்புகள், புத்தத் தத்துவத்தில் இருந்தே பிறக்கின்றது.
இதுபோல் திருமணத்தில் பெண்ணின் காலில் மெட்டி போடும் முறை அன்னிய ஆணைக் கண்டால் பெண் தலைதாழ்த்தி மெட்டியைப் பார்க்கக் கோரும் ஒழுக்கம் ஒவ்வொன்றும் மதத்தின் விதியாகும். இந்த மெட்டி கூட கன்னிப் பெண்ணுக்கு இருப்பதில்லை. முந்திய காலத்தில் கன்னிப் பெண்கள் திருமணத்துக்கு முன், புணர்ச்சிக் கட்டுப்பாடு இல்லாதைக் காட்டுகின்றது. திருமணமான பெண்ணின் கற்பு ஒழுக்கம்தான், மெட்டி போடும் சடங்கு என்பதை இது காட்டுகின்றது. பழைய வழக்கங்கள் சமுதாயத்தில் மாறிய போதும் (இது கன்னிப் பெண்ணுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கற்பு ஒழுக்கத்துக்குள் அடைத்தபோதும்), அவை தொடர்வதில் இருந்து பழைய சமுதாயத்தினைப் புரிந்த கொள்ள முடிகின்றது. தாலி வேலியாக இருப்பது என்பது, பெண்ணைச் சிறைவைக்கும் நடத்தை சார்ந்தது.
ஆதிவேத வாக்கிய விவரக் காதையில் ''உங்கள் மனைவியை ஒருவன் இச்சிக்கக்கூடாத எண்ணங்கொள்ளுவீர்களாயின் அன்னியன் மனைவியை நீங்கள் இச்சியாதிருங்கள்."24 இதைப் பராதப் பத்து சட்டவிதிகள் கூறிச் செல்லுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் ஆணின் இயல்பை இது காட்டுகின்றது. சொத்துரிமையில் ஆணின் இரத்த வாரிசு உறவு கடந்து செல்லும் சந்தேகத்தைத் தடுக்க, ஆண் மற்றைய பெண்களை அணுகுவதை நிறுத்துவதன் மூலம், ஆணின் சொந்த உடைமையான மனைவியின் ஒழுக்கத்தைக் கற்பு சார்ந்து பாதுகாக்க முடியும் என்று இதனூடாகப் புத்தம் கூறுகின்றது. பெண் சார்ந்து புத்தம் முன்வைத்த ஆணாதிக்க ஒழுக்கக் கோவையின் வெற்றிக்கு, ஆணின் பங்கையும் பங்களிப்பையும் கோரியே இந்த ஆணாதிக்க விளக்கம் வருகின்றது.
சதுர் சத்ய காதையில் ''என்வீடு, என்மனைவி, என்பிள்ளை"24 என்று கூறுவதன் மூலம் புத்தம் ஆணின் மதமாக இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றது. அத்துடன் அச்சமுதாயத்திலும் என் மனைவி என்றதன் மூலம் பெண் ஆணின் வெறும் சொத்துதான் என்பதைத் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது. ஆணின் பல்வேறு சொத்து வகையில் பெண்ணும் ஒரு சொத்துதான். புத்த சமுதாயத்தில் ''என்வீடு, என்மனைவி, என்பிள்ளை"24 என்பது வீண் சிந்தனை என்று தனது துறவுக் கண்ணோட்டத்தில் மறுத்தபோதும், சமுதாய ஆணாதிக்க ஒழுக்கத்தில் இவைகளை அங்கீகரித்த சமூகத்தைக் கட்டி பாதுகாக்கின்றது. இதில் இருந்தே பெண் மீதான ஒழுக்கவிதிகள் ஆணின் சொத்தாக எல்லைப்படுத்தியே, புத்தம் தன்னைக் கட்டியமைத்தது தெரிகிறது.
இது தனிச்சொத்துரிமையின் எல்லா விளைவுகளிலும் சமரசம் கண்டு மக்களின் ஒழுக்கவிதியை ஏற்படுத்திய அதேநேரம், தனது துறவில் அவைகளில் சிலவற்றை மறுத்தபோதும், அதை மீறாத சமூக அமைப்பில் பங்களிப்பதை உறுதிசெய்தனர். இதன் மூலம், புத்தமதம் தன்னை ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை மதமாக அடையாளப்படுத்தியதன் மூலம், ஆணாதிக்கச் சமுதாயச் செல்வாக்கைப் பெற்று வளர்ச்சிபெறமுடிந்தது.