book _5.jpgஎதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.

ஏகாதிபத்தியப் பண்பாட்டினை விமர்சனரீதியாக அணுகும்போது வரைமுறையற்ற புணர்ச்சி விபச்சாரமாக இருப்பதை எதிர்த்து போராடும்போது, ஆதி குடும்பத்தின் எச்சச் சொச்சமான நல்ல பண்புகளையும் விபச்சாரமாகப் பார்க்கும் தவறான அரசியல் போக்குகள், பாரிய அரசியல் தவறுகளை வழிநடத்துகின்றது. ஆதி குடும்பங்களின் எச்சச் சொச்சங்களில் நீடிக்கும் பெண்ணின் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்வதும், பாலியல் வக்கிரத்தில் இருந்த வேறுபட்ட இயற்கையின் தேர்வான ஆண் - பெண் உறவுகளின் தன்மையைச் சுவீகரித்துக் கொண்டு, அதன் நல்ல பண்புகளை மொத்த சமுதாயத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.


இந்த வகையில் புணர்ச்சி மற்றும் குடும்பத்தை ஒட்டி சுருக்கமாகப் பார்க்க ஏங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற மார்க்சிய நூலில் இருந்து இதை விளக்க முற்படுகின்றேன். இந்த நூல்கள் தொடர்பாகக் கூறும்போது ஏங்கெல்சின் நூல் பெண்ணிய அடிமைத்தனத்தை வர்க்கக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்த மிகச் சிறந்த நூலாகும்;. இதற்கு ஈடு இணையாக எந்த ஆய்வு நூலும் வெளிவந்து விடவில்லை.


மார்க்சியவாதிகள் தமது கோட்பாடுகள், நடைமுறைகளை இதனை ஆதாரமாகக் கொண்டு பெண்ணியத்தை மேலும் வளர்த்தெடுக்கின்றனர். மனிதனின் தோற்றத்தையும் அதைத் தொடர்ந்து சமுதாயத்தை மூன்று கட்டங்களாக வகுத்து அதற்குள் உட்பிரிவுகளையும் கொண்டே சமூகம் ஆராயப்பட்டது. இந்தப் பிரிவுகள் மனித உழைப்பில் சில கண்டுபிடிப்புகளும் அதையொட்டிய புரட்சியில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது.


1.காட்டுமிராண்டி நிலை (10 இலட்சம் வருடங்கள் நீடித்தன), (குழுமணம்)


2.அநாகரிக நிலை (8000 வருடங்கள் கொண்டவை), (இணைமணம்)


3.நாகரிக நிலை (3000 வருடங்கள் கொண்டவை), (ஒருதாரமணம்)


1. காட்டுமிராண்டி நிலை(குழுமணம்)


அ. கடைக்கட்டம்


(அண்ணளவாக 100 அல்லது 60 இலட்சம் வருடம் முதல் ஒரு இலட்சம் வருடங்கள் வரை நீடித்த காலம்)
இது மனிதனின் குழந்தைப்பருவம். வெப்ப மற்றும் அரை வெப்ப மண்டலத்தில் வாழ்ந்த மனிதன் மரங்களில் தனது வசிப்பிடத்தைக் கொண்டிருந்தான். பழங்கள், கொட்டை, கிழங்கு போன்றன அவனின் உணவாக இருந்தது. ஓசைச் சீருள்ள பேச்சு அமைந்ததே அவனின் சாதனையாகும்;. இன்று அப்படி எந்தச் சமூகமும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை நீடித்தது.


ஆ. இடைக்கட்டம்


(அண்ணளவாக ஒரு இலட்சம் முதல் 35 ஆயிரம் வருடங்கள் வரை நீடித்தது.)
நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நீர் சார்ந்த உணவுகளைப் பயன்படுத்த தொடங்கியதும், அதை நெருப்பைக் கொண்டு உணவாக்க முடிந்தது. நெருப்பு, மனிதனைச் சுதந்திரமடையச் செய்தது. கடல் மற்றும் ஆற்றைப் பின்பற்றி மனிதன் உலகின் பலபரப்புகளை நோக்கி நகர்ந்து பரவமுடிந்தது. கரடுமுரடான பட்டை தீட்டாத ஆயுதங்கள், கற்கருவிகள் இக்காலக் கட்டத்தைச் சேர்ந்தவை. இவை எல்லா கண்டங்களிலும் சிதறிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை வேட்டைக்குப் பயன் படுத்தியதன் மூலம் இறைச்சியை உண்ணமுடிந்தது. ஒருக்காலும் இறைச்சியை மட்டும் உணவாகக் கொண்ட சமூகம் இருந்ததில்லை. முழுமையாக உண்ண இறைச்சி கிடைத்ததில்லை. அதேபோல் அதையடையும் வழியும் மனிதனிடம் இருந்ததில்லை. கிழங்குகளைச் சுடுவது போன்ற வகையில் தாவர உணவுகளையே சார்ந்து இருத்தல் நீடித்தது. சென்ற நூற்றாண்டில் ஆஸ்திரேலியர்கள், போலினீயர்கள் இந்தக் கட்டத்தில் வாழ்ந்து வந்தனர்.


இ. தலைக்கட்டம்


(;அண்ணளவாக 35 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வருடங்கள் வரை நீடித்தது.)
அம்பும் வில்லும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இறைச்சி தொடர்ச்சியாகக் கிடைத்த காலத்தைக் குறிக்கின்றது. கிராமங்களை அமைத்து தங்கும் ஆரம்ப நிலையில் இக்கட்டம் இருந்தது. மரத்தால் செய்த கலயங்கள், சாமான்கள், நாரிலிருந்து கைவிரலால் பின்னிய துணிகள், நார், நாணல் புல் கொண்டு பின்னிய கூடைகள், பட்டை தீட்டப்பட்ட கற்கருவிகள், நெருப்பு, கற்கோடரி கொண்டு மரத்தைக் குடைந்து


ஓடம் உருவாக்கிய காலமாகும்;. இவை சென்ற நூற்றாண்டில்
மேற்கு அமெரிக்கா செவ்விந்தியரிடையே தொடர்வதைக் காணக்கூடியதாக இருந்தது.


2. அநாகரிக நிலை (8000 வருடங்கள் நீடித்தன.) (இணைமணம்)


அ. கடைக்கட்டம்


மண்;பாண்டம் உருவாக்கிப் பயன்படுத்தியது, கூடைகள், மரப் பாத்திரம் ஆகியவற்றிக்கு நெருப்பில் எரியாத வகையில் களிமண் பூசியதில் தொடங்குகின்றது. இது அநேகமாக எல்லா இடத்திலும் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னால் களி மண்ணால் மட்டும் உருவாக்கப்பட்ட மண்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காலத்தில்தான் கிழக்கு-மேற்கு ஆகிய இரு கண்டங்களுக்கிடையிலான இயற்கை வேறுபாடு மனிதனைப் பாதிக்கத் தொடங்குகின்றது. அநாகரிகக் காலத்தில் மிருகங்களைப் பழக்குதல், வளர்த்தல், பயிரிடுதல் ஆகியவை தொடங்குகின்றன. இக்காலத்தில் இயற்கை சார்ந்த வேறுபாடுகள் உற்பத்தியின் வேறுபாட்டுடன், பண்பாட்டுக் கலாச்சார நடைமுறைகள் வேறுபடத் தொடங்குகின்றது.


ஆ. இடைக்காலம்


கிழக்குக் கண்டத்தில் மிருகத்தைப் பழக்குவதில் இது தொடங்குகின்றது. இக்காலத்தில் நீர்ப் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்வது தொடங்கியது. சூரிய ஒளி மூலம் செங்கற்கள் செய்வதும் அதன் மூலம் கட்டிடம் கட்டுவதும் இக்காலத்தில் தொடங்குகின்றது. ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு செய்யும் வரை மேற்குக் கண்டத்தில் இந்த நிலையே தொடர்ந்தது. செவ்விந்தியரை வெள்ளையினத்தவர் கண்டுபிடித்தபோது அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் இருந்தனர். உலகின் பல இனங்கள் கால்நடை வளர்ப்பு, அதையொட்டிய இடப்பெயர்ச்சிகளை மேய்ச்சல் நிலம் சார்ந்து நகர்தல் இக்கட்டத்தின் பொதுவான நிலையாக இருந்தது.


இ. தலைக்கட்டம்


இது இரும்புக் கனியை உருக்குவதில் தொடங்குகின்றது. எழுத்துக்களைக் கண்டுபிடித்தல், இலக்கிய ஆவணங்களுக்குப் பயன்படுத்தலுடன் நாகரிக நிலை தோற்றம் பெறுகின்றது. இந்தக் கட்டத்தைக் கிழக்குக் கோளத்தார் மட்டுமே இயற்கையாகக் கடந்தனர். இக்காலத்தில்தான் மாடு இழுக்கும் கலப்பை பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் மட்டுமே தேவையான உணவைச் சேகரிக்கவும், இலகுவாக உழுது பயிரிடவும் முடிந்ததால் ஐந்து இலட்சம் மக்களை ஒரு தலைமையின் கீழ் அணிதிரட்டவும் முடிந்தது.


புணர்ச்சியும் குடும்பமும், சமுதாய வளர்ச்சியின் வேறுபட்ட நிலைமைகளில், வேறுபட்ட போக்கில் கண்டங்களுக்கும், நாடுகளுக்கும், சிறுபிரதேசங்களுக்கும் இடையில் கூட மாறுபட்டு இருந்துள்ளது. இந்த வளர்ச்சியின் போக்கில் சமுதாய வடிவங்களின் வளர்ச்சிகள் பொதுவாக ஒரே தன்மையான போக்கில் வளர்ச்சி பெற்றது என்பது, மனிதனின் பொதுவான உழைப்பின் மீதான உற்பத்தி முறைகளின் மீது வெளிப்பட்டது. இந்தப் பொதுவான உற்பத்தித் தன்மையில் வெளிப்பட்ட சமுதாய விளைவுகள், உற்பத்தியை வந்தடைந்த இயற்கையின் வேறுபாட்டுடன், வேறுபட்ட பண்பாட்டுக் கலாச்சாரங்கள் வெளிப்பட்டன.


இந்த இடத்தில்தான் மொழிகூட, ஒரு பொருளை வௌ;வேறு சொற்களின் ஊடாக அடையாளப்படுத்துவதன் மூலம் வேறுபட்டதாக உருவானது.

 

சமூக வேலைப்பிரிவினையும், தனிச்சொத்துரிமையும் எந்தக் காலத்தின் ஊடாகச் சமுதாயம் வந்தடைந்த போதும், அவற்றால் உருவான ஆணாதிக்கத் தன்மை வேறுபட்ட கலாச்சாரப் பின்னணிகளுடன் பொதுத் தன்மை வாய்ந்ததாக உள்ளது.


இந்த வகையில் புணர்ச்சியையும், குடும்பத்தின் தோற்றத்தையும் ஆராய்வோம்;. சமூகம் கீழ்நிலையில் இருந்து மெல்ல மேல்; நிலைக்கு முன்னேறும்போது குடும்பமும் கீழ்நிலை வடிவத்தில் இருந்து மேல்நிலைக்கு முன்னேற வேண்டும். ஆனால் இது நிகழ்வதி;ல்லை. சென்ற நூற்றாண்டிலும், இன்றும் செவ்விந்தியர் முழுக்கவும், இந்திய ஆதிகுடிகளிலும், தக்காணப் பிரதேசத்திலும், திராவிட மற்றும் தமிழர்கள் மத்தியிலும் இரத்த உறவை (மாமா, மகள், மகன், மருமகன், சித்தப்பா, மாமி, அத்தை, மச்சாள்......) ஒரே மாதிரியாகக் குறிக்கும் இருநூறுக்கு மேற்பட்ட சொற்களும், கடமைகளும் காட்டுமிராண்டி மற்றும் அநாகரிக நிலையில் மாற்றம் இன்றி நிலவியது. இந்தப் போக்கில் மாற்றங்கள் நிகழ்வது என்பது சாத்தியமற்றதாகவும், குடும்பம் தீவிர மாற்றத்தை அடைந்த நிலைகளில் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்கு முற்றிலும் வேறுபட்டவடிவம் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இங்கு ஒருதார மணத்துக்கு முந்திய இணைக் குடும்பம் அல்லது பெரிய தந்தை வழிக் (சில இடத்தில் தாய் வழிக் குடும்பம்) குடும்பம், பலதார மணவடிவங்களிலே காணக்கூடியதாக இருந்துள்ளது.


இந்த உறவுமுறைக்கு முன்பு வரலாற்றில் சில குழந்தைகளுக்கு தந்தையர்-தாய்மார் என்ற வடிவம் இருந்துள்ளது. சகோதரன்-சகோதரி உட்பட இவர்கள் தந்தையும் தாயுமாக இருந்துள்ளனர். இந்தமுறை மரபானது குடும்பம் பற்றிய வரையறையைத் தீவிரமாக மறுக்கின்றது. நிலவுகின்ற குடும்பங்களான தனிப்பட்ட ஆணின் பல பெண் மணமுறை, தனிப்பட்ட பெண்ணின் பல ஆண் மணமுறையும், ஒருதார மணமுறையும் மட்டுமே எதார்த்தத்தில் அடையாளம் காண்பதால் இது மட்டுமே நீடித்திருந்தன என மரபுவாதம் விதிந்துரைக்கின்றது. இதைப் பிரதிபலித்து அதிகார அமைப்பும், பண்பாட்டுக் கலாச்சார, மதவாத விழுமியங்களை மீறியும் இவை நிகழ்கின்றபோது மௌனம் சாதிக்கிற அல்லது அதை ஒழுக்கத்துக்குள்ளாக்கித் தண்டனைக்குள்ளாக்குகின்றது.


ஆனால் பூர்வீகச் சமூகத்தில் ஆண்கள் பல மனைவி முறையையும், பெண்கள் பல கணவன் முறையையும் கொண்டிருந்தனர். இங்கு குழந்தைகள் பொதுவில் இருந்தனர். குழந்தைக்குத் தந்தையை யார் எனத் தெரியாது, ஆனால் தாயைத் தெரிந்திருந்தது. இந்தக் குடும்பத்தில் தொடங்கிய பல பாய்ச்சலின் தொடர்ச்சியில்தான் இன்று உள்ள ஒருதாரக் குடும்ப அமைப்பு உருவானது. பொதுவான மணம் என்ற விரிந்த வட்டம் சுருங்கி ஒரு ஜோடி என்ற நிலைக்கு இன்று சுருங்கியுள்ளது.


இந்த நிலைக்கு முந்திய ஆதி சமுதாயத்தில் வரைமுறையற்ற புணர்ச்சி நிகழ்ந்தது. இங்கு ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு ஆணும் சம அளவில் ஒருவருக்கு ஒருவர் சொந்தமாக இருந்தனர். இந்த விடயத்தை மறுப்பதும், இந்த அவமானத்தில் இருந்து இன்றைய ஒழுக்கவாதிகள் வெளிவரவும், இதை மறுப்பதில் அனைத்து அதிகார வடிவங்களையும் கையாளப் பின்நிற்கவில்லை.


இதை மறுக்க மிருகங்களை ஆதாரப்படுத்துவது பொதுவான பண்பாகியது. ஆனால் மிருங்களின் வரைமுறையற்ற புணர்ச்சி கூட அவைகளின் கீழ்நிலைக் கட்டத்துக்குரியது. ஆதிகால வாழ்க்கைக்கான ஆதாரத்தை முழுமையில் நிறுவ முடியவில்லை.


முதுகெலும்பு மிருகங்களின் நீண்ட ஜோடி வாழ்க்கையை அதன் உடல் கூறுகளில் இருந்து விளக்கமுடியும். பெண் பறவை அடைகாக்கும் காலத்தில் ஜோடி அவசியமாகின்றது. பறவையினத்தைக் கொண்டு மனித இனத்தை நிரூபிக்க முயல்வது தவறானது. ஏனெனின் மனிதன் பறவையினத்தில் இருந்து தோன்றவில்லை.


மிருக இனத்தை எடுத்தால் அவற்றில் அனைத்து வடிவங்களும் இருப்பதை நாம் காணமுடியும். ஆனால் பல கணவன் முறை மட்டும் கிடையாது. எம் நெருங்கிய நான்கு வகை குரங்கு இனத்தில் கூட எல்லா வடிவ இணைவுகளும் காணப்படுகின்றன. மிருகத்திலும் பார்க்க மந்தை உன்னதமான சமூகக் குழுவாக இருப்பதால் அதற்குள் குடும்பத்தைக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. குடும்பமும் மந்தையும் நேர் எதிர் முரண்பாட்டில் காணப்படுகின்றது. மந்தை எண்ணிக்கையால் வளர்ந்தால் குடும்பம் சுருங்குகின்றது. குடும்பம் பெருத்தால் மந்தை எண்ணிக்கையால் சுருங்குகின்றது. புணர்ச்சி காலத்தில் ஆண் மந்தைகளில் இருக்கும் பொறாமை கூடி வாழும் மந்தையைக் கட்டுத்தளரச் செய்கின்றது அல்லது தற்காலிகமாகக் கலைந்து விடுகின்றது. அதாவது புணர்ச்சி எங்கே இறுக்கமாக இருக்கின்றதோ அங்கே மந்தைகள் அருகி விடுகின்றன. எங்கே புணர்ச்சி சுயேட்சையாக அல்லது பலதார மண நிகழ்வாக, விதியாக இருக்கின்றதோ அங்கே இயல்பாகவே மந்தை சேர்ந்து இருக்கின்றது. இதனால் தான் மந்தையாகச் சேர்ந்து வாழும் பறவை இனத்தை காண்பது அரிது. ஆனால் மிருகத்தில் மந்தையாகச் சேர்ந்து வாழ்வதைக் காணமுடிகின்றது.


உயர்ந்த, முதுகெலும்பு உள்ள பாலூட்டி மிருகத்தில் பலதாரமணம், இணைமணம் ஆகிய இரண்டுவடிவங்களே இருக்கின்றன. இவ்விரண்டு வடிவத்திலும் ஒரே வயது வந்த ஆண் - ஒரே கணவர்தான் அனுமதிக்கப்பட முடியும். ஆணின் பொறாமை குடும்பத்தின் பந்தத்தையும் சச்சரவுக்குள்ளாக்குகின்றது. இது புணர்ச்சிக் காலத்தில் கலைந்தும், மற்றைய நிலையில் சேர்ந்தும் வாழ்வது முக்கியமான விடயமாகிவிடுகின்றது.


இன்றுள்ள மிருகக் குடும்பத்துக்கும், ஆதிகால மனிதக் குடும்பத்துக்கும் இவை பொருத்தமற்றவை என்பதைக் காட்டுகின்றது. ஏனெனின் இன்று இருக்கும் மிருகக் குடும்பத்தை விட ஏதோ ஒரு குடும்பம் அல்லது அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் மட்டுமே மிருகத்தில் இருந்து தோன்றி கொண்டிருந்த மனிதன் முன்னால் இருந்ததை நிறுவுகின்றது.


மனிதக் குரங்கில் இருந்து மாறும் சமூக வடிவத்தன்மையில் சொந்தக் குழந்தையைத் தாய் நீண்ட சொந்தப் பராமரிப்பினூடாகப் பாதுகாக்கும் வடிவம், மனிதனாக மாறிய படிமத்தில் முக்கியமான கூட்டுப்பங்கை ஆற்றியது. இயற்கையில் குரங்கில் இருந்து தோன்றிய மனிதனுக்கு உயிர்வாழ்வதே போராட்டமாக இருந்தது. உணவைத் தேடவும், மற்றைய விலங்குகளில் இருந்து தப்பி வாழவும் ஒருதாரமணக் குடும்பங்கள் சாத்தியமற்றதாகவே இருந்ததை நிரூபிக்கின்றது. கூட்டமாக வாழ்தல், எதிரியை ஒன்றாக எதிர் கொள்ளல் என்பவற்றைச் சாதிக்க புணர்ச்சியில் வரைமுறையற்ற நிலை அவசியமாக அடிப்படையாக விளங்கியது. எல்லா ஆண்களும் எல்லாப் பெண்களுக்கும், எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களுக்கும் சொந்தமாக இருந்தனர். இது மட்டும் தான் இயற்கையில் மனிதன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும், பாதுகாக்கவும் இருந்த ஒரே நிபந்தனையாகும்.


இங்கு இன்றும், மாறிவந்த சமூக நிலைமைகளில் நிலவிய ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் எதுவும் அன்று இருந்ததில்லை. ஆணின் பொறாமை போன்றன அற்ற காலம்;. பொறாமை உணர்ச்சி பிந்திய சமூகங்களின் ஒருவடிவம்;. பல்வேறு சமூகத்தில் சென்ற நூற்றாண்டில் நிலவிய தந்தை மகள் உறவும், தாய் மகன் உறவும், சகோதர சகோதரி உறவும் இதன் எச்சங்களே. இதை முறைகேடான புணர்ச்சி வடிவம் என்பது இன்றைய ஒழுக்கத்தின், கேவலத்தின் கண்டுபிடிப்பாக நிலவிய போதும், பல நாடுகளில் அவை சமுதாயத்தின் ஒழுக்கமாக இருந்தது. இக்காலத்தில் தனித்தனி ஜோடிகள் சேர்ந்திருப்பதை இந்த வரைமுறையற்ற புணர்ச்சி வடிவம் தடுத்துவிடவில்லை.


இதற்கான முக்கிய இலக்கிய ஆதாரங்களாக இந்தியாவில் முன்பு பல பாகத்தில் வாழ்ந்த மக்களின் நிலைபற்றிய ஒரு கி.பி. 3-ஆம் 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் தெளிவாக்குகின்றது. இராகுல சாங்கிருத்தியாயன் புதைபொருள் அகழ்வில் தானே கண்டெடுத்த 3-ஆம் 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1600 செங்கட்டிகளில் வைசாலி மொழியில் எழுதப்பட்ட செங்கல் நூல், பெண்கள் அக்காலத்தில் வாழ்ந்த பாத்திரத்தை வரலாற்று ஆவணமாக்கியுள்ளது. இந்தச் செங்கல் நூல் பாட்னா மியூசியத்தில் தற்போது உள்ளது. இந்த நூலில் பல்வேறு மக்கள் கூட்டத்தின் திருமண முறைகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. வரைமுறையற்ற புணர்ச்சி முதல் இணைக்குடும்பம் மற்றும் ஒருதாரமணம் பற்றிக் கூட பெண்கள் விவாதிப்பதையும், பெண்கள் யுத்தத்திலும் சமூக இயக்கத்திலும் பங்கு பெற்றல் மற்றும் கல்வி கற்றல் எனப் பல ஆதாரபூர்வமான வரலாற்று ஆவணத்தைப் பதிவாக்கியுள்ளது.


பெண்ணியம் பற்றிய போராட்டத்தில் ஆணியத்துக்கு எதிராக இந்தச் செங்கல் நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கோலோச்சியுள்ள ஆணாதிக்கம், சாதி அடக்குமுறைகள், தனிச்சொத்துரிமையை மறுத்துப் போராட, அதில் மாறிவந்த பல்வேறு சமூகங்களைப் பற்றிய வரலாற்று உண்மை ஆவணம், போராடும் மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாகும். ஆனால் இன்றைய போராட்டத்தில் இந்த நூல் ஆதாரத்துக்குக் கூட பயன்படுத்துவதில் புத்திஜீவிகள் மறுப்பது இராகுல சாங்கிருத்தியாயன் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் போராடியதும், பார்ப்பனிய, ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பைத் தலைகீழாக்கும் கோட்பாட்டு ஆதாரங்கள், நடைமுறையில் தகர்ந்து விடக்கூடாது என்பதாலுமே.


பைபிளை எடுத்து ஆராயும்போது நமக்கு இதையொட்டி அக்காலத்துக்கு முந்திய சமூகத்தின் சில தொடர்ச்சிகளை இனம் காணமுடியும். மத் 1.22-23, இசை 7.14 இல், ''கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்" இயேசுவின் தாய் கன்னியாகவே திருமணத்துக்கு வெளியில் குழந்தையைப் பெற்று எடுத்தாள். அதுபோல் ஐந்து தலைமுறையாக இயேசுவின் பரம்பரை திருமணத்துக்கு வெளியில் வாழ்ந்ததைக் காட்டுவதுடன் அவை தாய்வழியாக அடையாளம் காண்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ்வைந்து பெண்களும் மத். 1.1-17 இல், முறையே தாமார் 1.3, ராகாபு, ரூத்து 1.5, பாதத்சேபா 1.6, மரியாள் 1.16 என அடையாளம் காட்டப்படும் அதேநேரம், ஆணை அடிப்படையாகக் கொண்டு பெண்வழியில் மாறுபட்ட இயேசுவின் கால பாலியல் நடத்தைக்கு மாறிவந்ததைக் காட்டுகின்றது. அக்காலத்தில் பெண்கள் திருமணத்துக்குப் புறம்பாகவும் குழந்தைகளைப் பெற்றதையும், வாழ்ந்ததையும், சமூக அங்கீகாரத்தைக் கொண்டிருந்ததையும் காட்டுகின்றது.


இன்று மறுவாசிப்பு என்ற பெயரில் ஆணாதிக்கத்தைச் சீர்திருத்திக் காட்ட முனையும் அனைத்து வாசிப்புகளும் (இங்கு மறுவாசிப்பு என்பதைத் தொடக்கி அதை அமுல் செய்வதே பிற்போக்கு வர்க்கம்தான். அது கடந்தகால அனைத்து மனிதவிரோதத்தையும் மறுவாசிப்பின் பின் நியாயப்படுத்துகின்றது. அக்கால மற்றும் நிகழ்காலத்துக்கேயுரிய மனித நடத்தைகளையும், ஒழுக்கத்தையும் கலந்து உருவான பிற்போக்குச் சிந்தனைகளை, நிகழ்காலத்துக்கே உரிய சமூக நலன்களை முன்நிறுத்தி மறுவாசிப்பு செய்கின்றனர். இன்று பைபிளை ஜெகோவா முதல் அனைத்து மதப்பிரிவும் இதைச் செய்கின்றது. அத்துடன் கேள்விகள், நீங்கள் விளக்க முடியுமா, எடுகோள்களையும் கூட வாசகர்களுக்கு முன்வைப்பதன் மூலம் தீவிரப் பின்நவீனத்துவவாதிகள் ஆகின்றனர். (பார்க்க: தமிழ் வெளியீடான ஜெகோவாவின் ~விழித்தெழு| சஞ்சிகைகளை) இயேசுவைப் பெண்ணின் நண்பராகக் காட்ட முனைகின்றன.


ஆனால் இயேசுவின் சிந்தனையால் உருவான கிறிஸ்தவ மதம், பெண்ணின் கன்னியற்ற வாழ்க்கையில் குழந்தை பெறுவது முதல் ஒருதார மணத்தின் அனைத்து மீறலுக்கும், சிலுவையில் அறைந்து, நெருப்புக்கு இரையாக்கிய பெண்களின் எண்ணிக்கை வரலாறு ஆவணமாகி விடவில்லை. அந்தளவுக்கு எண்ண முடியாதது. கிறிஸ்துவின் பிறந்த காலங்களில் பெண் தனது உரிமையை இழந்துவந்ததைக் காட்டுகின்றது. மதத்தின் மூலம் ஆணாதிக்க ஆதிக்கத்தைக் கொண்டு பெண்ணை அடக்கியாள, தத்துவப் பலத்தை ஆணுக்கு வழங்கியதை நாம் எல்லா மக்களினத்திலும் காணமுடியும்.


முறையற்ற உறவு என்று ஆணாதிக்கம் வரையறுத்ததுக்கு மாறாக அக்காலம் இருந்ததை மேலும் ஆதாரமாகப் பார்ப்போம்;. ஆதி.38 இல், கனானியப்பெண் தாமார் வேமார் வேசியுருப்பூண்டு தன் கணவனின் தந்தையாகிய யூதாவிடம் உறவு கொண்டு இருவரைப் பெற்று எடுத்தாள். ரூத்து 4.13-22 இல், மோவாபியர் இனத்தைச் சார்ந்தவளான ரூத்து இஸ்ராயேலின் உடன் உறவு கொண்டு பிள்ளை பெற்றாள். சாமு. 11-12 இல், எத்தையனான உரியாவின் மனைவி பெசாபே தாவீதோடு உறவு கொண்டு பிள்ளை பெற்றாள். இந்த உறவுகளின் வழியில் தான் இயேசுவின் பரம்பரை உருவானது. இயேசுவின் சொந்தத் தாய் கன்னியாகப் பெற்று எடுத்த நிலைக்கு ஆணாதிக்க விளக்கத்தினை, மதத்தின் ஊடாகக் காட்டியே ஆணாதிக்க ஒருதார மணத்தை உருவாக்க முடிந்தது. லூக். 1.37 இல், ''கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்று கூறி இயேசுவின் படைப்பை இறைவனின் செயலால் கன்னி வழியில் நிறைவேற்றியதாகக் காட்டமுனைகின்றது பைபிள்.


இயேசுவின் தாய் குடும்பமல்லாத வழியில் குழந்தை பெற்றதை லூக். 1.34-38 இல், மரியாள் தூதரிடம் ~இது எங்ஙனம் ஆகும்? நானோ, கணவனை அறியேன்| என்றாள். அதற்கு வானதூதர், ''பரிசுத்த ஆவி உம்மீது வருவார் உன்னதரின் வல்லமை உம்மீது நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்;. இதோ, உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனின் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை."14 இந்தக் கூற்றின் பின் நாம் புரிந்து கொள்ளக் கூடியதை அப்பட்டமாகக் காட்டுகின்றது. அன்று பெண் பிள்ளையைப் பெறாவிட்டால் அவள் மலடிதான். இங்கு ஆண் மலடாக இருப்பான் என்பது அறிவியலுக்குப் புறம்பானதாக இருந்தது. ஆணுக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு அறியப்படவில்லை. இதில் இருந்தே எலிசபெத் கருத்தரித்ததை இறைவனின் செயலாக மதிப்பிடப்பட்டது. ஆனால் எலிசபெத் வேறு ஆணூடாக அக்குழந்தையைப் பெற்றாள் என்ற உண்மையை மறைக்க பிந்திய காலத்தில் எழுதப்பட்ட பைபிள், இறைவனைப் பொறுப்பாக்கி பெண்ணின் ஒழுக்கத்தைக் கோருகின்றது. இப்படித்தான் இயேசுவின் தாய் கன்னியில் கருத்தரிப்புக்கும் விளக்க வேண்டியதாகின்றது.


இன்று ஒரு கன்னி திருமணம் செய்யாமல் கருத்தரித்தால் அதை இறைவனின் செயல் என்று கூறின் இந்த உலகம் நம்புமா? இல்லையே, அப்பெண் சமூகத்தால் பழிவாங்கப்படுவது கடந்த நிகழ் கால வரலாறாகவுள்ளது. கடந்த வரலாற்றில் மனிதப் பாலியல் நடத்தை சார்ந்த பொதுவான திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுகளையும், குழந்தை பிறப்பையும் இறைவனின் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டுவதன் ஊடாக இன்றைய மீறலை ஒழுக்க மீறலாகக் காட்டி பெண்ணைத் தண்டிக்க சமூகத்தால் முடிகின்றது. ஆணின் இனப்பெருக்கத் தொடர்பு தெரிந்திருக்காத சமூகத்தில், பெண், பிள்ளை பெறாத நிலையில், அவளை மலடியாகச் சமூகம் இனம் கண்டது. அத்துடன் தாய் வழியில் குழந்தை அடையாளம் காணப்பட்டது. இதில் இருந்து தனிச்சொத்துரிமை சார்ந்து ஆணாதிக்கம் பலம் பெற்றபோது பெண் வழி அடையாளம் காண்பது மறுக்கப்பட்டு, சொத்துக்களின் தொடர்ச்சியைப் பேண விரும்பி ஆண்வழியில் குழந்தையை அடையாளம் காண, தந்தையின் பெயரைப் பயன்படுத்த வாரிசு சொத்துரிமையைக் கோரியது. தந்தையின் பெயரைக் குழந்தையின் அடையாளமாகக் காட்டிய காலத்தில், ஆண் விந்தின் செயல்பாட்டைப் பலவிதமான வகையில் குழந்தை உருவாக்கத்தில் புரியப்பட்டது. அதாவது ஒருதார மணம் ஆண் - பெண் புணர்ச்சியைக் கட்டுப்படுத்திய நிலையில், பாலியல் உறவு கொள்ளாத பெண் தாய்மையை அடையாததை அனுபவரீதியாக அவதானித்த சமூகம் ஆணின் பங்கை ஊகிக்கமுடிந்தது. பெண் விந்து பகிரங்கமாகச் சுரப்பது கண்ணுக்குத் தெரியாத நிலையில், ஆணின் விந்து பகிரங்கமாகத் தெரிந்த நிலையில் சில சமூகத்தில் ஆணின் விந்தைப் பெண் அடைகாத்தே குழந்தை பிறக்கின்றது என்று அனுபவரீதியாக மற்றைய உயிரினம் மீதான அவதானத்தில் இருந்து விளக்கங்கள் உருவானது.


கீழ் விவாதித்துள்ள பிறிதோர் பகுதியில் பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தில் ஆணின் விந்து உறையும் ஒரு ஊடகமாகிக் குழந்தை உண்டாகின்றது என்ற எடுகோளை, அன்றைய அறிவுத்துறையின் விளக்கமாகியது. புறச் சுற்றுச்சூழலில் எது எதார்த்தமாக உள்ளதோ அதை ஒட்டிய மனிதவிளக்கமே குழந்தை உருவாக்கத்தில் இருந்தது. இதன் மூலம் தந்தை வழிப் பெயர் குழந்தை மீதான உரிமையை உறுதி செய்யக் கையாளப்பட்டது. ஒரு குழந்தையின் தாய் அப்பட்டமான மறுக்க முடியாத எதார்த்தமாக இருந்தது. ஆனால் தந்தையின் தனிச்சொத்துரிமை ஊடாகச் சமூக ஆதிக்கத்தை அடையாளம் காட்ட, குழந்தையின் பெயர் உரிமையைத் தனதாக்கிப் பெண்ணை அடக்கியாண்டது, ஆள்கின்றது.
இதன் தொடர்ச்சியில் பெண்கள் கன்னியாக அதாவது தந்தையின்றி, அது யார் என்று தெரியாத ஆணுடன் பிள்ளை பெறுவதை இறைவனின் செயலாகப் பைபிள் வருணித்து, படிப்படியாகப் பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதுதான் பாண்டவர் கதையில் குந்திக்கும் நடந்தது. அந்தவகையில் ஆதி. 17.15-22 இல், தொண்ணூறு வயதான சாராள் இறைவன் அருளால் குழந்தையைப் பெற்றாள் என்கிறது. லூக் 1.5-10 இல், மலடியான எலிசபெத்து கடவுள் அருளால் குழந்தை பெற்றாள் என்கிறது.


லூக் 1.28-38 இல், கணவனை அறியாத மரியாள் குழந்தையைப் பெறுகிறாள். இப்படி பைபிளில் பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த, இறைவனின் அருளால் குழந்தை உதிப்பதாகச் சமூகத்தை நம்ப வைக்கின்றது. இதன் மூலம் இயேசுவின் பிறப்பை ஆணாதிக்க வழியில் தூய்மையாக்கவும், பெண்களின் பாலியல் சுதந்திரத்தை ஒழுக்க மீறலாக்கவும் பைபிளால் காட்ட முடிந்தது. இது எல்லா மதத்தைப் போலவும் அன்றைய பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை (இது இன்றைய பாலியல் ஒழுக்க மீறல்கள்) இறைவனின் செயலாக்கியதன் மூலம் இதை விதிவிலக்காக்கி வரலாற்றைத் திரித்து, நிகழ் காலப் பெண்ணின் ஒழுக்கத்தை அத்து மீறலாக்குவதைச் சாத்தியமாக்கியது.


3.நாகரிக நிலை


அ. இரத்த உறவுக் குடும்பம்


இதுவே குடும்பத்தின் முதல் கட்டமாகும். அதாவது இருந்து வந்த வரைமுறையற்ற புணர்ச்சியைத் தடுத்து தலைமுறைக் குடும்பங்கள் தோன்றின. அதாவது பூட்டன் - பூட்டி, தாய் - தந்தை, மகள் - மகன், பேரன்கள் - பேத்திகள் என்ற தலைமுறை பிரிவுதான் குடும்பத்தின் பிரிவாகியது. இருந்து வந்த தலைமுறை கடந்த புணர்ச்சிக்குப் பதிலாக, சகல பூட்டன் - பூட்டியும் பரஸ்பரம் கணவன் - மனைவியாகவும், சகல தாய் - தந்தையும் பரஸ்பரம் கணவன் - மனைவியாகவும், இது போன்று மகள் - மகன் பரஸ்பரம் கணவன் - மனைவியாகவும், பேரன்கள் - பேத்திகள் தமக்கிடையில் கணவன் - மனைவியாகவும் உறவு கொள்ள வரையறுத்த குடும்பமே முதல் குடும்பமாகும். இது சந்ததி கடந்த பாலுறவைத் திட்டவட்டமாகத் தடுத்த கட்டத்தை உள்ளடக்கி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட குடும்பமாக இருந்தது. இதை மறுத்த ஒழுக்கவாதிகளின், சென்ற நூற்றாண்டு வாதங்களின்போது இதுதான் அக்காலத்துக்கே உரிய ஒழுக்கமாக இருந்தது என ஏங்கெல்ஸ் எழுதினார். அத்துடன் நோர்வே மற்றும் நாடுகளில் புராணங்களில் இதையொட்டிய ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினார். சகோதர - சகோதரிகளாக இருந்த ஒரே காரணத்தால் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் கணவன் - மனைவியாக இருப்பது அன்றைய குடும்பமாக, ஒழுக்கமாக இருந்தது.


ஆ. பூனலுவா குடும்பம்


இக்; குடும்ப அமைப்பு இரத்த உறவுக் குடும்பத்தில் இருந்து அடுத்தகட்ட முன்னேற்றமாக இருந்தது. இந்தக் குடும்ப அமைப்பு சகோதர - சகோதரிகளுக்கு இடையில் திட்டவட்டமாகப் புணர்ச்சியை விலக்கியதில் இருந்து தொடங்குகின்றது. இது தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் தொடங்கி, படிப்படியாக பொதுவிதியாக மாறிச்சென்றது. இது படிப்படியாக ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்று விட்ட... சகோதர - சகோதரிகளுக்கு இடையிலும் புணர்ச்சியைத் தடுத்தது. இது இயற்கையின் நியதியாக இருந்ததுடன், இதைக் கைவிட்ட மக்கள் கூட்டம் வேகமாக முன்னேற்றத்தை அடைந்தன. இதன் வளர்ச்சி குலத்தை உருவாக்கி நிரூபித்தது. ஆதிகாலப் பொதுக் குடும்ப நிர்வாகம் அநாகரிக நிலையின் இடைக்காலத்தின் கடைசிக் கட்டம் வரை நீடித்தது. இந்தக் குடும்ப அலகு தனது உச்ச எல்லையை ஒட்டி சில தலைமுறைக்குப் பிளவு ஏற்பட்டது.


ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் உடலுறவு கொள்வது முறையல்ல என்ற கருத்து தோன்றிய உடன் பழைய குடும்பச் சமூகங்கள் பிரிந்து புதிய சமூகங்கள் உருவாவதை ஊக்குவித்தது. சகோதரிகள் அமைந்த குழு அல்லது அதற்கு மேற்பட்ட குழு ஒரு குடும்பச் சமூகத்தின் மூலக்கருவானது. அதேநேரம் அவர்களுடன் கூடப் பிறந்த சகோதரர்கள் இன்னொரு குடும்பச் சமூகத்துக்கு மூலக் கருவாக அமைந்தனர். இது இரத்த உறவுக் குடும்பத்திலும் வெளியிலும் பொதுவாக இருந்தது. இங்கு பொதுவான கணவனும் பொதுவான மனைவிகளும் என்ற நிலையிலேயே இருந்தனர். இங்கு இக்கணவர்மார் சகோதரராக இருப்பதில்லை. மாறாக ~பூனலுவா| அதாவது பங்காளி - கூட்டாளி என்று அழைத்துக் கொண்டனர். இதைப்போல் பெண்களும் அழைத்துக் கொண்டனர். இதுவே குடும்ப அமைப்பின் மூலச் சிறப்பான வடிவமாகும்;. அதாவது முன்பு சகோதர - சகோதரிகளாக இருந்தும் உடலுறவு கொண்டது மாறி, இதற்கு இடையில் உறவு விலக்கப்பட்டு, தாய் வயிற்றுக்கு வெளியில் குடும்பம் தோற்றம் பெற்றது. இங்கு புணர்ச்சி என்பது ஆண் - பெண் கூட்டத்துக்குள் பொதுவில் இருந்தது.


இந்த வடிவத்தில் ஏற்பட்ட திரிபே ஆண் - பெண் தோற்றத்தை முதலில் உருவாக்கியது. குறிப்பிட்ட குடும்ப வட்டத்துக்குள் எல்லாக் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருந்த பொது உறவில், மனைவியரின் கூடப்பிறந்த சகோதரரும் பிற தாய் வயிற்றுச் சகோதரரும் விலக்கப்பட்ட அதேநேரம், கணவர்மாரின் சகோதரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


இந்தக் குடும்பத்தில் என் அம்மாவினுடைய சகோதரிகளின் (சித்தி) குழந்தைகளும், என் அப்பாவினுடைய சகோதரர்களின் (சித்தப்பா) குழந்தைகளும் எனக்குச் சகோதர - சகோதரியாக இருந்தனர். ஆனால் என் அம்மாவினுடைய சகோதரர்களின் (மாமா) குழந்தைகளும், என் அப்பாவினுடைய சகோதரிகளின் (அத்தை) குழந்தைகளும் அவர்களுக்கு மருமகள், மருமகன் ஆகியதால்; எனக்கு ஒன்றுவிட்ட சகோதர - சகோதரியாவர்.


இங்கு என் தாயாரினுடைய சகோதரிகளின் (சித்தி) கணவர்கள் அனைவரும் என் தாயின் கணவராக இருக்க, என் தந்தையினுடைய சகோதரர்களின் (சித்தப்பா) மனைவியர் என் தந்தையின் மனைவியாக நடைமுறையில் இல்லாவிட்டாலும் உரிமைப்படியாக இருக்க, பொதுவான சகோதர - சகோதரிகளுக்கு இடையில் இருந்த தடையை இரண்டாக்கியது. இது ஒன்றுவிட்ட சகோதர - சகோதரிகளை வகைப்படுத்துவதில் இரண்டாக்கியது. இது முன்பு போல் சிலரைச் சகோதர - சகோதரியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள, சிலரை மருமகள், மருமகன் என்ற புதிய சமுதாயப் பிரிவை உருவாக்கியது. இவர்கள் முன்பு போல் சகோதர - சகோதரியாக இருக்க முடியாது போனது. இவர்களுக்குப் பொதுவான தாய் - தந்தை என்ற பொதுவான பெற்றோர் என்ற வடிவம் இருக்கமுடியாது போனது. இந்த மருமகன், மருமகளை அடையாளப்படுத்தலே வரலாற்றில் ஆண் - பெண் என்ற தாயாதிகள் என்ற வகுப்பு அவசியமாக்கியது. இதுவரை பொதுவான ஆண் - பெண் என்ற புணர்ச்சியில் சிலருக்கு ஏற்படுத்திய விலக்கு, ஆண் - பெண் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இது முந்திய குடும்ப அமைப்பில் அர்த்தமற்று இருந்தது.


இன்று இலங்கைத் தமிழரிடத்தில் இந்த விலக்கு இருப்பதும், அவர்களுக்கு இடையில் திருமணம் ஏற்றுக் கொள்வதை, எமது இரத்த உறவு குடும்ப அமைப்பில் எதார்த்தமாக உள்ளது. இது மச்சாள், மச்சானாக எனக்கும் எனது பெற்றோருக்கு மருமகள், மருமகன் உறவு இருப்பதும் காணமுடிகின்றது. இதைக் கேவலமான சகோதர - சகோதரி உறவாக ஐரோப்பியக் கிறிஸ்தவ ஒருதாரமணப் பார்வையில் இருந்து கொச்சைப் படுத்துவதும் நிகழ்ந்து வந்தது.


ஆனால் ஐரோப்பாவில் இதையொத்த வடிவங்கள் இருந்ததைச் சீஸர் கூறியுள்ளார். அநாகரிக இடைக் காலத்தில் பிரிட்டானியர்கள் பத்து, பன்னிரண்டு பேர் தமது மனைவியைப் பொதுவில் அனுபவித்ததையும், சகோதர - சகோதரிகள் சேர்ந்து அல்லது பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளும் சேர்ந்து அனுபவித்ததைச் சீஸர் கூறும்போது அது குழுமணமாகப் புரிந்து கொள்ளமுடிகின்றது. இதே நேரம் பத்துப் பன்னிரண்டு மகன்களை வைத்திருக்க அநாகரிகக் காலத்தில் தாய்க்கு முடியவில்லை. ஆனால் அமெரிக்கப் பூனலுவா குடும்பத்தில் இது சாத்தியமாக இருந்தது. இதுபோல் இந்தியாவில் இருப்பதை ~இந்திய மக்கள்| என்ற நூல் பதிந்துள்ளது. அதில் ''அவர்கள் ஒன்றாகவே" (அதாவது ஆண் - பெண் உறவில்) ''கூடி வாழ்கிறார்கள். பெரிய கூட்டுச் சமூகமாக அனேகமாக வரைமுறையின்றிக் கூடி வாழ்கிறார்கள். அவர்களில் இருவர் திருமணமானவர்களாகக் கருதப்பட்டாலும் அந்த பந்தம் பெயரளவில்தான் இருக்கிறது."3


அதர்வ வேதத்தில் ''சகோதரனான எமனே! எந்த ஒரு சகோதரனாவது சொந்தச் சகோதரியுடன் சம்போகத்தில் ஈடுபடாமல் இருக்கின்றானா? அவ்வாறு ஈடுபடாமல் இருந்தால் அவன் கெட்ட சகோதரனே. காமன் என்னை வாட்டுவதால் நான் இவ்வாறு கூறுகின்றேன். அதனால் சகோதரா வத்ரா என்னோடு சம்போகத்தில் ஈடுபடு" என்று கூறி தந்தை பெற்ற மகளைக் கர்ப்பிணியாக்கியதை அதர்வ வேதம் கூறுகின்றது."10 இது மட்டுமா!


ரிக் வேதத்தில் 4.43.5, 10.85.9.. இல், ''இவர்கள் உஷசின் சகோதரர்கள்; சூரியனின் புதல்வர்கள் சூரியனின் மகளான உஷஸ், அவளுடைய இந்த இரட்டை சகோதரர்களையே கணவர்களாக ஏற்றுக் கொண்டாள்.... சூரியனின் குழந்தைகளான எமனுக்கும் யமிக்குமிடையேயுள்ள உறவும்... இவர்களைத் தவிர சந்திரனுடனும் உறவிருந்ததாகக் காணலாம். லெட் மக்கள் பிரிவினருடைய சூரியப் புதல்விக்கும் இரட்டைக் குதிரைக் காரர்களைத் தவிர வேறொரு காதலனும் இருந்தான்."11 சமுதாயத்தில் இவை எல்லாம் கற்பனையான படிமங்கள் சார்ந்த உருவங்கள் அல்ல. மனிதன் தனது கற்பனையை உருவத்தின் மீதான எதார்த்தத்தில் இருந்து படிமானம் ஆகின்ற போது, நிஜ உலகம் அதில் பிரதிபலிக்கின்றது. சகோதர - சகோதரி உறவுகள், பல கணவன் முறை போன்றனவற்றை இது தெளிவுபடுத்துகின்றது. இது ஒருதார மணத்தை மறுக்கின்றது.


கற்பனையான புனைவுகளான பாரதக் கதையில் பல ஆணை ஒரு பெண்ணும் (பல கணவன் முறை), பல பெண்ணை ஒரு ஆணும் வைத்திருந்ததை எதிர்ப்பின்றி காலாகாலமாகக் கூறிய போதும் சரி, பழைய சிற்பங்களில் கூட்டமான புணர்ச்சிகளும் பதிவாகியுள்ள நிலை பழைய சமுதாயத்தின் எச்சங்களேயாகும்;. இன்றும் கூட இந்தியாவில் மகள் அம்மாவின் தம்பியைத் (தாய்மாமன்) திருமணம் செய்வதும், ஒரு ஆண் ஒரு குடும்பத்தில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யும் போது, அப்பெண்ணின் சகோதரிகள் மீதான ஆணின் உரிமை பலவழிகளில் இன்றும் நிலவுகின்றது. மனைவி இறந்தால் மற்றைய சகோதரியை மணப்பது, மனைவி பிள்ளை பேற்றுக்குத் தாய் வீடு சென்றால் தங்கை அந்த இடத்தை நிரப்புவது, மகனின் மனைவியிடம் தந்தை பாலியல் நோக்கில் அணுகுவது..... எனப் பலவழக்குகள் முந்தைய எச்சத்தின் தொடர்ச்சியுடன், ஒருதாரமணத்தின் இறுக்கத்துக்குள்ளும், கண்டும் காணாமல் அனுமதிக்கப்படுகின்றது. இந்தப் போக்கு ஆண் சார்ந்த தளத்தில் மட்டும் ஆணாதிக்கம் சார்ந்து கோரப்படுகின்றது. இது பெண்ணுக்குச் சாத்தியமில்லை.


பூனலுவா குடும்பத்தில் இருந்தே குலங்கள் தோற்றம் பெற்றன. குழுக் குடும்பத்தில் குழந்தையின் தந்தை யார் என்று எப்போதும் தெரிந்திருப்பதில்லை. ஆனால் எல்லாக் குழந்தைக்கும் தனது தாய் யார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்திருந்தது. இந்தக் குழுமணம் நீடித்த அனைத்து சமுதாயத்திலும் தாய் வழிமட்டுமே மரபு வழியைக் கண்டறியக் கூடியதாக இருந்ததால் பெண் வழிமட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டது. காட்டுமிராண்டி மற்றும் அநாகரிகக் கடைக் காலகட்டம் முழுவதும் இப்படியே இருந்தது. பரம்பரையை அடையாளம் காணும் வாரிசு உரிமையைத் தாயுரிமை என்று வரையறுக்கமுடியும். சொத்துரிமையை அடையாளம் காணும் வாரிசுரிமையைத் தந்தையுரிமையாக வரையறுக்கமுடியும். இங்கு தாயுரிமையை இன்றுள்ள ஆண் உரிமைக்கு ஒப்பாக நோக்கக் கூடாது. ஆண் உரிமை என்பது பெண்ணை அடிமையாக்கி பலவடிவத்தில் அழைக்கப்படுகின்றது. பெண் உரிமை என்பது ஆணை அடிமைப்படுத்தியது அல்ல. மாறாகப் பெண் ஊடாக வாரிசை அடையாளம் காண்பதும், பெண் வழி பரம்பரை வழியை அடையாளம் காணக் கூடியதாக இருந்தாலும், குடும்பத்தைப் பராமரித்ததிலும் இப்படி வரையறுக்க கூடியதாக உள்ளது. இங்கு சட்ட ரீதியான அர்த்தத்தில் பெண் உரிமை பயன்படுத்தப்படவில்லை.


மூலத்தாய்க்குப் பிறந்த சகோதரிகளும், மூலத்தாய் வழிவந்த ஒன்றுவிட்ட... சகோதரிகளும் அதுபோல் சகோதரர்களுக்கும் இடையில் பால் உறவு விலக்கப்பட்ட நிலையில், இப்பெண்களின் கணவர்கள் சகோதரராக இராத வேறு தாய் வயிற்றுக் குலத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால் இந்தக் கணவர்களின் குழந்தைகள் இந்தக் குலத்தைச் சேர்ந்தவராக அமைவதால், தாய் வழியொன்றே இதை நிர்ணயித்தால் இந்த சகோதர - சகோதரி புணர்ச்சி தடைசெய்யப்பட்ட நிலையில், இக் குழு குலமாக மாற்றம் அடைந்தது. இது தனக்குள் திருமணம் செய்து கொள்ள பெண்வழி இரத்த உறவுகளைக் கொண்டு திட்டவட்டமாகத் தடைசெய்தது. இதைச் சமயம், சமுதாயம் கறாராக மேலும் இறுக வைத்தது.


இதன் மூலம் குலங்கள் ஒன்றில் இருந்து ஒன்று தம்மை வேறுபடுத்திக் காட்டியது. இங்கு இரண்டு குழுக்களுக்கு இடையில் திருமணம் நடப்பது மட்டுமே சாத்தியமாகியது. ஒரு குழுவில் உள்ள எல்லா ஆணும் மறு குழுவில் உள்ள எல்லாப் பெண்ணும் பிறவிக் கணவனாகவும் பிறவி மனைவியாகவும் இருந்த நிலையில் குலம் வளர்ச்சி பெற்றது. இங்கு திருமணம் தனிநபருக்கு அல்ல, குழுக்களுக்கே நடந்தது. இங்கு வயது வேறுபாடு, இரத்த உறவு என்ற எந்த விதிவிலக்கும் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பூனலுவா குடும்பத்தின் வடிவங்கள் பல்வேறு மக்கள் கூட்டத்துக்கு இடையில் வேறுபட்ட முறைகளை உடலுறவில் விலகலையும், ஏற்பையும் உள்ளடக்கியிருந்தது.


இ. இணைக் குடும்பம்;


குழு மணத்தின் போதோ, அல்லது அதற்கு முன்னரோ - நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ இணைவாழ்க்கை நீடித்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாகவும், அதேபோல் அவளுடைய பல கணவரில் ஒருவன் பிரதான கணவனாக இருந்தான். இது அவர்களின் பிடித்தமான கணவன் மனைவியல்ல. இது ஆண் - பெண்ணின் அதிகரிப்புடன் இணை மணமுறை நிலை பெறச் செய்தது. இரத்த உறவுமுறை பல புதிய தடைகளைச் சந்தித்த போது இணைக்குடும்பம் தீர்வாகியது. இந்தக் கட்டத்தில் ஒருவன் ஒருத்தியுடன் வாழ்ந்த போதும் பலதாரமணமும், சமயத்தில் சோரம் போவதும் ஆணின் உரிமை என்ற வகையில், அந்த வாழ்க்கை சமூக அங்கீகாரம் பெற்றது. பொருளாதாரக் காரணத்தால் பலதாரமணம் செய்து கொள்வது அநேகமாகக் கிடையாது.


சேர்ந்து வாழும் காலத்தில் கண்டிப்பான கற்பு கோரப்படுகின்றது. அவள் சோரம் போனால் தண்டிக்கப்பட்டாள். ஆனால் இருதரப்பினரும் இலகுவாகத் திருமணத்தை இரத்து செய்யமுடியும்;. அப்போது குழந்தைகள் தாய்க்குச் சொந்தமாவார்கள்;.

 
திருமணத்தில் உறவினருக்கிடையிலான தொடர்ச்சியான விலக்கல் (இரத்த உறவுக்குள்ளான திருமணத்தடை) முடிவில் பலதாரமணத்தை ஒழித்துக் கட்டி, ஒரு தம்பதிகளின் ஜோடியை மட்டும் உருவாக்கியது. அதுவும் கலைந்து விட்டால் திருமணமே இல்லாது போய்விடும்;. முன்பு பெண்களுக்குப் பஞ்சம் என்பது இருந்ததில்லை. ஆனால் ஆணாதிக்கப் போக்கு வளர்ச்சி பெற்ற பின் பெண்களுக்குப் பஞ்சம் பொதுவான நிலையாகி விட்டது. இதனால் பெண்ணைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது தவிர்க்கமுடியாத விதியாகின்றது. பின்னால் திருமணம் என்பது அவர்கள் அறியாத வகையில் தாய் தீர்மானிப்பதும், பெற்றோருக்குப் பரிசுகளைக் கொடுப்பதன் மூலம் பெண்ணை அடைவதும் சாத்தியமாக்கியது. இருந்தபோதும் அவன் அல்லது அவள் இலகுவாகத் திருமணத்தை இரத்து செய்யக் கூடியதாக இருந்தது.


இந்தப் பிரிவுகளின்போது இரு குலத்தைச் சேர்ந்தோர் குறுக்கிட்டுச் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இதில் தோற்ற பின்பே திருமணம் இரத்தாகியது. ஆனால் குழந்தை தாய்க்குச் சொந்தமாக இருந்தது. இ;ருவரும் சுதந்திர மனிதராக மீளத் திருமணம் செய்யும் உரிமையைக் கொண்டிருந்தனர்.


தொடர்ந்து சுதந்திரமான திருமணங்கள் செய்யமுடியாத நிலை இருந்தபோதும் பெண்ணின் மதிப்பு குறைந்துவிடவில்லை. இயற்கையில் தந்தை யார் எனத் தெரியாத நிலையில் பெண்வழி சமூகத்தில் பெண்ணின் நிலை மேல் நோக்கிக் காணப்பட்டது. பெண் வழியில் மட்டும் குழந்தையை அடையாளம் கண்டது என்பது பெண்ணின் மதிப்பைத் தொடர்ந்து பாதுகாத்தது.


பொதுவுடைமைக் குடும்பத்தில் பெண்கள் எல்லோரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவராக இருக்க, ஆண்கள் பல்வேறு குலத்தில் இருந்து வந்தவராக இருந்தனர். இதுதான் பெண்கள் எல்லா இடத்திலும் மேலோங்கியிருந்த எதார்த்தமாகும்.


கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் 40 வட அமெரிக்கக் குழுக்களிடையே ஒருவன் ஒரு மூத்த சகோதரியைத் திருமணம் செய்யும் அதேநேரம், அவளின் இளைய சகோதரிகள் வயதை அடைந்த உடன் அவர்களும் அவனுடைய மனைவியாகின்றனர். இது பழையதின் எச்சச் சொச்சம். எமது தமிழ்ச் சமூகத்தில் மனைவி இறக்கும்போது அவள் சகோதரியை மீளத் திருமணம் செய்வது, கணவன் இறக்கும்போது அவன் தம்பியின் மனைவியாவது, மனைவி குழந்தைப் பிறப்புக்குத் தாய் வீடு செல்லும்போது தங்கையை விட்டுச் செல்வது எல்லாம் இதன் எச்சச் சொச்சங்களே.


சில மக்கள் இனத்தில் சில விழாக்களில் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட பல்வேறு இனக் குழுக்கள் திரண்டு வந்ததை ஆதாரப்படுத்தியுள்ளது. இன்று இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் மாவட்ட தேவகாவன் கிராமத்தில் திருமணம் செய்யாத ஆண்கள் - பெண்கள் குறித்த நாளில் தொடங்கும் விழாவில், உடன் பிறவாதவர்களுடன் மாறி மாறி ஜோடியாகக் கூடிப் புணருகின்றனர். இங்கு இப்புணர்ச்சி ஜோடிகளுக்கு இடையில் வெளிப்படையாக நடப்பதை (30.7.1997) இந்தியா டுடே விவரித்துள்ளது. பார்ப்பனியத் திருமண மந்திரத்தில் பெண்ணை நோக்கி பார்ப்பான் கூறும் போது ''நீ இதுவரை இந்திரனுக்கு ஒருநாள் மனைவியாக, பின் தேவர்கள் அனைவருக்கும் மனைவியாகி, பின் எனக்கு மனைவியாகி, இப்பொழுது நான் உன்னை இவனுக்கு மனைவியாக்குகிறேன்,"12 என்பதன் பின்னெல்லாம் பழைய வரைமுறையற்ற புணர்ச்சியின் எச்சச்சொச்சங்களே.


இது பல ஆப்பிரிக்க, இந்தியச் சமூகத்தில் இன்றும் காணப்படுவதுடன், மன்னர்கள் - புரோகிதர்கள் என சமூகத்தின் மேல் மட்டப் பிரிவுகள், இதைத் தமது முறை கேடான செயலுக்குப் பெண்களைப் பழைய வரலாற்றின் தொடர்ச்சியில் பயன்படுத்தினர் என்பதைச் சுட்டுகிறது. அதேநேரம் பொது விழாக்களில் வயது பெண்கள் இளையர்களை அனுபவிப்பதற்கும் இவை இடம் கொடுத்தது.


இந்தியச் சமூகத்தில் இவை உரிமையின் வடிவமாக இருந்ததுடன், சென்ற நூற்றாண்டு வரைகூட இந்த ஆணாதிக்கப் பலதார உரிமையைப் பாதுகாக்க போராட்டங்களும் நடத்தப்பட்டன.


கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி வர்த்தமா என்பவன் கள்ளிக் கோட்டை பார்ப்பனர்கள் பற்றி கூறியதில் இருந்து இதைத் துல்லியமாகக் காணமுடியும்.


''இந்த பார்ப்பனர்களைப் பற்றி அறிந்து கொள்வது தேவையானதும், அதே சமயத்தில் மனதுக்கு இனிமையானதும் கூட. நம்மிடையேயுள்ள மதக் குருக்களைப்போல நம்பிக்கையின் முக்கிய ஆட்கள் இவர்கள்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அரசன் திருமணம் செய்யும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்."13


இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில் ''சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்."13


கி.பி. 1869 இல், பம்பாய் வைணவப் பிரிவு மதக்குருக்கள் கரோ சண்டாஸ்முல்ஜிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் தமது இனப் பெண்களின் முதல் உறவு உரிமையைக் கோரினர். இது மகாராஜா அவமதிப்பு வழக்கு எனப் புகழ் பெற்றது. இது முன்னைய பலதார மணத்தை ஆண்கள் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. ''அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள் மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர். பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத் தலைவர்கள் ஆர்வம் காட்டினர். கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன் இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது..."11 பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது பக்தியின் பின்னால் ஆணாதிக்கம் அரங்கேறிய வடிவமிது.


கல்வி, செல்வம் தொடங்கி காமம் ஈறாகப் பார்ப்பனியம் தனது தனிச் சலுகையை அடக்குமுறை, மிரட்டல், பக்தி என எல்லா வகையிலும் பெற்றுக் கொண்டது. இந்த விபச்சார ஒழுக்கம் பக்தியின் பின்னால், புண்ணியத்தின் பின்னால் நடந்தபோது, உலகம் பெண்ணை விபச்சாரத்தின் எல்லையில் கடவுளைக் காட்டியது. பிள்ளையைக் கொன்று உணவு கொடுத்தது, மனைவியைப் படுக்க வைத்து உணவு கொடுத்தது, என்று இந்து மத நாயன்மார் கதைகள் எல்லாம் கற்பனையானவையல்ல. எதார்த்தத்தில் பார்ப்பனியத்தின் சுகபோகத்தை, ஆணாதிக்கத் திமிரைக் காட்டுகின்றது.


பார்ப்பனிய முறைப்படி சட்டபூர்வமான திருமணத்தில் பலதாரமண வடிவத்திலேயே பல மனைவிமாரைக் கொண்டிருந்தனர். கி.பி. 1850 இல், வங்காள மாநிலம் ஹ_க்ளி மாவட்டத்தில் ''197 பார்ப்பனர்கள் 2288 பெண்களை மனைவியராக்கியிருந்தனர். 55 வயதான ஒருவருக்கு 107 மனைவியரும், 12 வயது சிறுவனுக்கு ஆறு மனைவியரும், 5 வயது குழந்தைக்கு இரண்டு மனைவியரும் இருந்தார்கள்."11 ஒருதார மணத்தைப் பெண்ணுக்கும் மட்டுமானதாகவும், சொத்துரிமை வடிவில் குழந்தைத் திருமணத்தையும் கொண்டு பார்ப்பனியம் பெண்களைத் தமது கொல்லைப்புறத்தில் வதைத்தது.


இன்று திருமணத்தில் காணப்படும் ~கன்னிகாதானம்| அடிப்படையில் திருமணத்துக்கு முன் அப்பெண்ணின் மீதான புரோகித மற்றும் உயர் குடிகளின் உடல்உறவு உரிமையை, சமூகம் மறுத்தபோதும் பார்ப்பனியம் தனது நக்கி வாழும் பிழைப்பு ஓகோ என்று நடக்க, விட்டுக் கொடுத்து சமரசம் செய்தன் விளைவுதான் இன்று கன்னிகாதானமாக உள்ளது. இதில் பலவிதமான சடங்குகள் காணப்படுகின்றன. இதுபோல் கணவன் இறந்தால் பெண்ணைச் சிதையில் ஏற்றுவதைத் தீவிரமான எதிர்ப்பினால் படிப்படியாகக் கைவிட்ட போதும், புதிய வடிவங்கள் புகுந்தன. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் சதியைக் கடைப்பிடிக்காத பெண் விதவைகள் மொட்டை அடிக்கப்பட்டு தனித்து வாழ அடைத்து விடப்பட்டனர். 24 மணிநேரத்தில், அதாவது ஒரு நாளைக்கு ஒருநேர கழிவான உணவு உண்ணவும், அமாவாசை தோறும் இரவும் பகலும் ஒரு துளி நீர்கூட அருந்த முடியாத விரதம் இருக்கவும் இந்து ஒழுக்கம் அவர்களை நிர்ப்பந்தித்தது. இதிலிருந்து சிறுவயது குழந்தை விதவைகள் கூட விலக்கி வைக்கப்படவில்லை. அதாவது ஒருதார மணத்தில் ஆண் இறந்தால் பெண் கொல்லப்பட வேண்டும் என்பதை இந்து தர்மம் கவனமாகப் போதித்துக் கொன்றது.


மனு பூமியின் எஜமானர்கள் என்ற கூற்றின் படி உயர்சாதிப் பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில் கொண்டிருந்தனர்.13 இதை மேலும் விளக்குகையில் ''பிறக்கும் குழந்தை தந்தையின் குடும்பத்திலேயே சேரும் என்ற மகத்திய முறையைப் பார்ப்பனச் சாதி பின்பற்றியது. தங்கள் சொந்தச் சாதித் திருமணத்தை எப்போதும் போல் சாதாரண சடங்கு சாஸ்திர விதிகளின்படி நடத்தினார்கள். ஆனால் ஆண் பார்ப்பனர்கள் தாழ்ந்த சாதிப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்."13


இதை மேலும் விளக்குகையில் ''சட்டத்துக்குப் புறம்பான பாலுறவு கொண்ட இருதரப்பினருமே எந்தக் குடும்பத்திலும் உறுப்பினராக இருக்கமுடியாது. இந்த உறவில் பிறந்த குழந்தை தாயையே சாரும். சட்டப்படி தந்தையின் சொத்திலிருந்து இந்தக் குழந்தை பங்கு கேட்பதற்கோ அல்லது பராமரிப்புத் தொகை கேட்பதற்கோ எந்தவகையிலும் அதற்கு உரிமையில்லை."13 மேலும் விளக்குகையில் ''தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றுக் (பார்ப்பனர்கள்) கூறுபவர்களும், ஆளும் வர்க்கமான சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல் முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது. இது மத்தியகாலங்களில் ஐரோப்பாவில் இருந்த முறையேயாகும்."13 இவைகள் பெண்கள் மீதான ஆண்களின் உரிமையைச் சொத்துடைமை சார்ந்து சமூக அந்தஸ்துக்கு உட்பட்ட எல்லைக்குள், ஒருதார மணத்தைத் திணித்த ஆணாதிக்கத்தின் எல்லைக்குள் அதன் போக்கில் உயர் பீடங்கள் பாதுகாத்ததைக் காட்டுகின்றது.


பெண் மீதான பாலியல் நடத்தையைப் பொதுவிபச்சாரத்தில் முழுமையாகத் தீர்க்க முடியாத மேல் மட்ட ஆணாதிக்கத்தின் தனிச் சொத்துருவாக்கச் சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் அனைத்துப் பெண்களையும் அனுபவிக்கும் உரிமையைச் சமூகத்துக்குப் புறம்பாகச் சில ஆண்கள் அனுபவிப்பதில் எல்லைப்படுத்தினர்.


இதில் தாழ்சாதிப் பெண்கள் மீதான சொத்துடைய மேல் ஆதிக்கச் சாதி முதல் இரவு உரிமையைப் பயன்படுத்தியபோது அதன் எல்லைப்படுத்தல், விபச்சாரத்தின் எல்லைக்குள் இந்த உரிமை சீரழிந்தது. இன்று பல இந்தியக் கிராமங்களின் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தில் உள்ள சாதித் திருமணத்தை உயர்சாதி ஆணின் அங்கீகாரத்துக்கு உட்பட்டே செய்யமுடிகின்றது. இதைப் பல சினிமாக்கள் கூட படமாக்குகின்றன. இந்த உயர்சாதி ஆணின் அங்கீகாரம் என்பது அப்பெண்ணின் முதல் அனுபவிக்கும் உரிமை மீது என்பது தௌ;ளத் தெளிவானதுடன், இது இன்றும் சில பகுதிகளில் இலைதழையாகத் தொடர்வதையும் காணமுடிகின்றது.


பெண்ணின் உரிமை, சமூகத்தில் ஆண்களின் உரிமை எல்லாம் உயர்ந்த வாழ்க்கை வாழும் சொத்துடைய வர்க்கத்தின் எல்லைக்குட்பட்டே வாழமுடிந்தது, வாழமுடிகின்றது. குடும்பத் திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஆண் - பெண்ணின் தேர்வுகளையும் விட, மூன்றாம் தரப்பின் பாலியல் உரிமையை, ஒருதாரமணத்தின் ஆதிக்கப் பிரிவுகள் தமக்குச் சார்பாக ஒழுங்கு அமைத்த பண்பாட்டுக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே இன்றுள்ள ஆணாதிக்க ஒழுக்கமாகும்.


இணை மணத்தின் தோற்றம் பழைய திருமணமுறையில் இருந்து விடுபட்டுத் தன்னை ஒருவருக்குப் பரஸ்பரம் ஒப்படைப்பதில் தொடங்கியது. இவை திருமணத்துக்கு முன் வரைமுறையற்ற புணர்ச்சியாக இருந்து படிப்படியாக ஒருவரைத் தெரிவதில் தொடங்குகின்றது.


இதன் எச்சச் சொச்சங்கள் சடங்குகளாக ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்தில் ஒப்படைப்பது, பின்னர் விரும்பிய ஒருவரைத் தேர்ந்து எடுத்து காதல் செய்தலைத் தொடர்ந்து திருமணம் செய்வது, என்று கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆதாரப்படுத்தியுள்ளதுடன், அதன் எச்சச் சொச்சங்கள் இன்றும் உள்ளது. அத்துடன் தந்தை இருந்தும் - இல்லாமலும், தந்தை யாரெனத் தெரியாமலும் உள்ள குழந்தைகளுடைய தாயார்களின் நிலை சமூகத் தாழ்வாகக் கருதப்படாத, பல இனக் குழுக்கள் சென்ற நூற்றாண்டில் இருந்துள்ளது.


கி.பி. 18-ஆம் நூற்றாண்டில், திருமணத்தில் பங்கு கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் அப்பெண்ணை அனுபவித்த பின்பே, கணவன் இறுதியாக அனுபவிக்கின்றான். இன்று பல திருமணச் சடங்குகளில் இதன் எச்சச் சொச்சங்கள் வாழ்த்தும்முறை, அணைக்கும் முறை எனப் பல வடிவங்களில் எஞ்சிப் போயுள்ளது. இதில் புரோகிதர்கள், மன்னர்கள் முதல் உரிமை அல்லது தனிச்சலுகை அவர்களுக்கு மட்டும் கிடைக்கும் பழைய எச்சங்களாகும்;. இந்த எச்சத்தின் பின்னால் ஆணாதிக்கத் தனிச் சலுகை வக்கிரம் விகாரப்பட்டுள்ளது.


பழைய பொதுவுடைமை பலவீனமடைந்து மக்கள் தொகை செறிவு அதிகரிப்பு மற்றும் பழைய வெகுளியான காட்டுத்தனமான உறவு மேலும் மேலும் தரக்குறைவாக மாற, இதை ஒடுக்குதலாகப் பெண் உணரத் தொடங்கினாள். இதனால் தனது தனித்துவத்தைப் பேணவும், விடுதலையைப் பாதுகாக்கவும் ஒரு நபரைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தெரிவு செய்வது பெண்ணுக்கு அவசியமாகியது. இது ஆணிடம் தோன்றியிருக்காது. ஏனெனின் இன்றுவரை கூட ஆண் அதைக் கைவிட்டதில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் எப்போதும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விதிந்துரைக்கின்றான். சுதந்திரமும், ஜனநாயகமும் ஆணாதிக்கம் சார்ந்தது@ ஆணுக்கு மட்டும் அதாவது சொத்துடைய வர்க்கத்துக்கு மட்டும் சேவைசெய்கின்றது. இந்தச் சொத்தைப் பெண் வைத்திருப்பின் ஜனநாயகமும் சுதந்திரமும் விபச்சாரமாகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு ஆணின் பலதாரமணத்தின் ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


பெண்ணின் இணைமணத் தெரிவைத்தான், ஆண் பின்னால் கண்டிப்பான ஒருதாரமணத்தைப் பெண்ணுக்குப் புகுத்த முடிந்தது. இந்தப் புகுத்த முடிந்தது என்பது, ஆணின் தனிச் சொத்துரிமையின் ஆதிக்கத்தால் மட்டுமே சாத்தியமானது. அதாவது ஆண் இணை மணத்தில் இருந்து விலகி காதலிப்பதையும் அன்பு செய்வதையும் கைவிட்டு, பெண்ணிடம் மட்டும் அதைக் கோரியபடி பெண்ணைப் பாலியல் பண்டமாக்கியதன் மூலம், ஒருதாரமணம் பெண்ணுக்கு மட்டும் நிபந்தனையானது.


காட்டுமிராண்டி நிலைக்குக் குழுமணமும், அநாகரிக நிலைக்கு இணைக் குடும்பமும், நாகரிக நிலைக்கு ஒருதார மணமும் பொதுவான வடிவங்களாக இருந்தன.


இதன் பின்னால் பலதாரமணம் செல்வத்தின் அசாதாரணமான நிலைகளில் நீடித்தது, நீடிக்கின்றது. இது இன்று தேசம் கடந்த ஏகாதிபத்தியச் சூறையாடல் ஊடாகப் பலதார மணம் விபச்சார நிலைக்குப் பண்பாட்டு ரீதியாகச் சமூகம் சீரழிந்து தரமிறங்கியுள்ளது. இதில் பெண்ணும் சேர்ந்து இயங்குவது தீவிரமடைகின்றது. இதன் ஆதாரமாக இருப்பது மனிதச் சிந்தனையைப் பொருட்களின் மீதான நுகர்வு வடிவமாக மட்டும் பொருளைப் பார்ப்பதன் ஊடாக மனிதன் உணர்வற்ற பொருளாக மாறுகின்றான். முதலாளித்துவம் மனித உழைப்பை இயந்திரத்தின் உறுப்பாக்கியதுபோல் பாலியல் மற்றும் புணர்ச்சி நுகர்வின் உறுப்பாகிவிட்டது. பணக்காரர்கள் பணம் கொடுத்து அந்தப்புரங்களை நிரப்பியது மட்டுமின்றி, அரச மாளிகைகள் - புரோகிதர்கள் என சமூகத்தின் செல்வத்தையும், அதிகாரத்தையும் கொண்ட இடங்களில், ஆண்கள் பல பெண்களைக் கொண்ட பலதார மணத்தை ஏற்படுத்தியபோது, அது அடிமை முறைக்கேயுரிய வடிவத்தில் நீடித்தது. இதைச் சலுகையின் பின் தக்கவைப்பதில் பாதுகாக்க முடிந்தது. இதற்கெதிரான பெண்களின் போராட்டம் தீர்க்கமாக இருந்தது.
ஈ. ஒருதாரமணம்


பெண் மீதான ஆதிக்கத்தை ஆணாதிக்கம் உருவான வழிகளில் காணமுடியும். முதல் ஆணாதிக்கம் சமூகங்களில் ஒன்றான பார்ப்பனியத்தின் ரிக்வேதத்தில், ''அஸ்விகளும் சூரியனும் பிரகாசமான இந்த அதிகாலைக் கன்னியை விரும்புகின்றன. சூரியன் அவளைத் தன்னுடைய பொற் கிரணங்களால் தழுவ முயலும்பொழுது அவள் மறைந்து விடுகிறாள்."122 இந்த உவமை மூலம் பார்ப்பனியம் பெண்ணைச் சமுதாயத்தில் இருந்து மறைத்து அடக்கியதைக் காட்டுகின்றது. ஆணின் செல்வம், பலம், ஆண்மை போன்றவற்றைப் பெண்ணின் மீது கையாண்டு அடக்கியதன் மூலம், ஒருதாரமணம் உருவாகி இறுகியதைக் காட்டுகின்றது.


இங்கு தந்தை உரிமை என்பது தனது சொத்து வாரிசு ஊடாக நிறுவப்பட்டது. தந்தையின் இறுக்கமான வடிவத்தால் இணை மணத்தில் இருந்து இது வேறுபடத் தொடங்கியது. இங்கு திருமணத்தில் இருந்து விலகவும், விலக்கி வைக்கவும் ஆணுக்கு மட்டும் உரிமை இருந்தது. இது இணைக் குடும்பத்தில் பரஸ்பரம் இருந்த உரிமையை மறுத்ததாகும். இணைக்குடும்பத்தில் இருந்து சொத்துக்கள் பிரிகின்றபோது, அவரவரின் சொத்துக்கு இருந்த உரிமை மாறுகின்றபோது, ஒருதாரமணம் நிபந்தனையா கின்றது. சொத்தின் உரிமை ஆண்வழி சமூகத்தில் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட நிலையில் ஒருதாரமணம் அதைப் பாதுகாத்தது.


முன்பு பெண் சோரம் போதல் என்பது அவசியமற்றதாக இருந்தது. ஆனால் ஒருதார மணத்தில் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட உரிமை, பெண்ணின் சோரம் போதலுக்கு நிபந்தனையாகியது. இதனால் ஒழுக்கக் கோவைகள் அதைத் தடுக்கக் கட்டியமைக்கப்பட்டன. பெண்ணை வீட்டில் ஒதுக்குப்புறத்தில் பூட்டி வைப்பதற்கும், அதை நியாயப்படுத்தி விளக்கம் கொடுக்க வேண்டிதாயிற்று.


பாதிக்கப்பட்ட பெண்கள் மேல் போடப்பட்ட ஒழுக்க வேலிகளும், காவல் வழிமுறைகளும் பாலியல் ஒழுக்க மீறல்களை உருவாக்கியது. பெண்களுடன் பழக முடிந்த சிறுவர்களுடன் பெண் பாலியலில் ஈடுபடுவது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது என இயற்கையான பாலியல் கட்டமைவை மீறுவதை, இவ்வொழுக்கம் நிபந்தனையாக்கியது.


முன்பு இருந்த காதல் திருமணம் ஒழிந்து, அதனிடத்தில் பணம், இனம், நிறம், அந்தஸ்து, சாதி.... எனப் பலவும் புகுந்து கொண்டன. இந்த வகையில் இரண்டு தனிமனிதருக்கு இடையில் சமூகத் தலையீடு என்பது, இணைமணத்தில் பிரிவுகளின்போது (விவாகரத்தின் போது) சமாதானப்படுத்த முனைந்த பெரியோர்களின் நடத்தைகள், அதிகாரங்கள,; பண்பாடாக, ஒழுக்க நெறியாக, சமூகம் படிப்படியாக விவாகரத்துரிமையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இது பின்னால் ஆண் - பெண் தமக்கிடையிலான தேர்வைச் செய்வதற்குக் கூட முடியாத நிலைக்கு மேலும் தடைபோட்டது. அந்தளவுக்கு இணை மணத் திருமணத்தில் ஏற்பட்ட பிளவுகளை ஒன்றிணைக்க முற்பட்ட சமூகம், அதை முழுமையில் தான் தீர்மானம் செய்யும் நிலைக்குச் செல்ல, ஆண் பெண்ணின் தனிப்பட்ட உரிமையை மறுக்க, அதைச் சமூகம் முடிவு செய்யும் நிலைக்கு மாறியது. சமூகம் தனிச்சொத்துரிமை வடிவத்தில் இருந்து இதை அணுகும் போது, சொத்துரிமைக்குக் கீழ் பெண்ணைத் தரம் தாழ்த்தி மனித உணர்வுகளைப் பண்டமாக்கியது.


இதன் தொடர்ச்சியில் திருமணத்தைக் கட்டாயமாக்கியதுடன் ஆணின் கடமையையும், பெண்ணின் கடமையையும் நிபந்தனையாக்கியது. கருவுற்ற குழந்தைக்குக் கணவனே சட்டப்படியான தந்தை என்பதை, சட்டம் போட்டு தனிச் சொத்துரிமை பாதுகாக்கப்பட்டது. இதன் மூலம் பெண்ணின் குழந்தை என்பது தனிச் சொத்துரிமை இன்மையால் மறுதலிக்கப்பட்டது. இது ஒருதார மணம் தொடங்கி வளர்ச்சிபெற்ற 3000 வருடங்களில் பலகட்ட அமைப்புகளாக இருந்தது. இன்று மேற்கில் இவை சில எதிர் நிலையில் தகர்ந்துள்ளது. அது ஒருதாரமணத்தில் பெண்ணின் சோரம் போதலின் விளைவுகளால், சட்டம் உண்மை தந்தைக்கான உரிமையை அதன் போக்கில் கண்டுபிடிக்கவும், உரிமையைக் கோரவும் அனுமதித்துள்ளது.


விவாகரத்துகளின் போது நவீனச் சமூகத்திலும் பெண் பெற்ற குழந்தை மீதான உரிமையை, நுகர்வுக்கு அடிமையாகி படிப்படியாகப் பெண் கைவிடுவது அதிகரித்து வருகின்றது. வரலாற்றில் பெண்ணின் பல உரிமைகளைச் சமரசத்துக்கு வெளியிலும், கட்டாயப்படுத்தியும் பெண்ணிடம் இருந்து ஆண் பறித்த வரலாற்றில் இருந்து, மாறுபட்ட வகையில் குழந்தை மீதான உரிமையைப் பெண் கைவிடுகின்றாள்;. தனிச் சொத்துரிமை பின் நவீனத்துவச் (ஏகாதிபத்தியச்) சமூகத்தில் ஜனநாயகத்தை, உரிமை இழப்பு மீதான அங்கீகாரமாகவும் வளர்ச்சி பெற்ற நிலையில், இது தேசம் கடந்த சூறையாடலைப் பொருள் உற்பத்தியில் செய்வது போல், அதில் தேசங்கள் உரிமையைச் சோரத்துக்கு உள்ளாக்கும் வடிவத்தில், பெண் குழந்தை மீதான உரிமையை ஆணிடம் விட்டு வெளியேறுவதைத் தீவிரமாக்குகின்றது.


ஒருதார மணமுறைதான் நவீனக்காலக் காதலுக்கு அடிப்படையாகும். காதல் என்பது புணர்ச்சியின் வேட்கையில் எழுந்த இயல்பான உணர்வாக ஆண் - பெண்ணுக்கு இடையில் இருந்தது. இது இணை மணத்தில் தொடங்கி, வீரக்காதலாகி, பின்னால் பெற்றோர் தீர்மானிக்கும் குடும்பத்துக்குள்ளான காதலாகி, கல்வி, சொத்து, அழகு, வர்க்கம், சாதி.... என்ற வடிவத்தில் காதல் நவீனத்துவம் பெற்றது. இந்தக் காதல் கூட நுகர்வுக்குள் இயந்திரத் தன்மை பெற்று, திரிபடைந்து அதன் அர்த்தத்தில் இருந்து இழிந்துவிட்டது. நவீனக் காலக் காதலில் திருமண வேட்கைக்கு முந்திய நிலையில், ஆண் -பெண் காதலிப்பது என்பதும், புணர்ச்சியின் பின்னால் பெண் மட்டும் காதலிப்பது என்பதும் ஒரு போக்காக இருந்தது. இங்கு ஆண் காதலிப்பது என்பது ஆணின் பாலியல் தேவைகளில் இருந்து எழுந்தது என்பது விதிவிலக்கின்றி எல்லா சமூகத்திலும் காணப்பட்டது, காணப்படுகின்றது.


பெண் தனிச் சொத்துரிமையை ஆணிடம் இருந்து போராடிப் பெறுகின்றபோது, (இங்கு சொத்துரிமையைப் பெற்றது என்பது கூலியைப் பெற்றதைக் குறிக்கின்றது. மற்றும் அராஜகவாதக் கோட்பாட்டில் சொத்து கிடைத்ததாக நம்பும் கற்பனையான சிந்தனைகள்.) பெண்ணின் சொத்துரிமைத் தனித்துவமே அவளின் சுதந்திரத்தின் வடிவமாகியது. இதனால் இந்தச் சுதந்திரம்; என்பது ஆணுக்கான புணர்ச்சியின் தடையை இலகுபடுத்தியது. இதனால் ஆண் காதலிப்பது அவசியமற்றதாக்கியது. இந்தப் போக்கில் ஆணாதிக்கமயமாகும் தனிச்சொத்துரிமைப்; பெண், காதலின் வடிவத்தைக் கைவிட்டுவிடுகின்றாள். காதலிப்பது பெண்ணின் உரிமையாக இருந்த போதும் இது ஆணின் புணர்ச்சியின் எல்லையில்லா, பலதாரத் தொடர் நுகர்வு புணர்ச்சி வேட்கைக்குக் கம்பளம் விரித்து வரவேற்றது. இதுவே எப்போதும் ஆணாதிக்க ஆணின் கோரிக்கையாக, நடைமுறையாக இருந்துள்ளது. காதலின் அர்த்தம் பின்நவீனத்துவத்தில் (ஏகாதிபத்தியச் சமூகத்தில்) மேலும் இழக்கின்ற போது மிஞ்சுவது விபச்சாரம் மட்டுமே. பெண்ணின் உரிமை ஆணாதிக்கத்தில் வெதும்பிப் போகும் போது, ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதையும், பெண் விபச்சாரம் செய்வதையும் எதார்த்தமாக்குகின்றது.