Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _5.jpgபெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.


ஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.

 

வீட்டில் இருந்த பெண், குழந்தை பராமரிப்புக்கு வெளியில் சுற்றுச் சூழலை ஆராயக் கற்றுக் கொண்டு புதிய உணவு ஆதாரங்களைக் கண்டறிந்தாள்;. இதன் மூலம் உணவு சேகரிப்பைப் பெண் தொடங்கிய வரலாற்றில் நீண்ட, மெதுவாக மாறிய பல ஆயிரம் வருடங்கள் ஆண் - பெண் அசமத்துவம் அதிக இடைவெளியின்றி நகர்ந்தது. பின்னால் மனிதச் சமுதாய வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார முன்னேற்றங்கள், ஆணின் உபரியை உருவாக்கவும் பெண்ணைப் பொருளாதார ஆதாரமற்ற ஜடமாகவும் ஆக்கியது. பொருளாதார ஆதிக்கம் உள்ள பிரிவு ஆதிக்கச் சமூகமாகவும், பொருளாதார ஆதிக்கம் அற்ற பிரிவு அண்டி வாழும் பிரிவாகவும் சமுதாய இயக்கம் மாறிச்சென்றது. அதாவது எல்லோரும் தமது உணவைப் போராடிப் பெற்ற மனித வாழ்வுக்கான நிபந்தனைகள், ஆண் - பெண்ணைச் சம மதிப்புள்ள ஜீவனாக, உணவுப் போராட்டச் சமூக அரணாக இருந்தது. கூட்டு வாழ்வு இல்லை என்றால் பெண்ணும் சரி, ஆணும் சரி உயிர் வாழவே முடியாது என்ற இயற்கையின் நியதி, பெண்ணின் குழந்தைப் பிறப்பைக் கூட இயற்கையின் வாழ்வுக்கான ஒரு நிபந்தனையாக இருந்தது.


மனிதன் இயற்கையில் உயிர் வாழ்வதற்கான உணவுப் போராட்டத்தில், கூட்டுச் சமுதாயத்துக்கு வெளியில் தனிநபர்கள் உணவைச் சேகரிக்கவும் மிதமிஞ்சிய உணவைப் பெறுகின்ற உழைப்பாற்றலின் பலம், தனது உற்பத்தி சார்ந்த உபரி மீதான உணவின் உரிமை பற்றிய கோரிக்கையை உருவாக்குகின்றது. இது பலவீனமான பிரிவுகளுக்கு மறுப்பதில் தனது உரிமையைப் பறைசாற்றியது. இது பெண்களின் இனப்பெருக்கம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக உணவு சேகரிப்பில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட போது, மேலும் பெண்ணினதும் குழந்தையினதும் உணவுக்காக ஆணைச் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டனர்;. ஆணோ தனது உணவு என்ற தனிநபர் சுதந்திர ஜனநாயகவாதத்தை முதன்மைப்படுத்தி, கூட்டுக்கு எதிரான கண்ணோட்டத்தில் அதை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நிபந்தனைக்கு உட்படுத்தி விநியோகிக்க முற்பட்டான்.


இந்த ஆண் என்ற தனிமனிதனின் உபரி வளர்ச்சி பெற, அதைத் தனது நிபந்தனைக்குட்பட்ட, விரும்பிய பெண்ணுக்குக் கொடுக்க முற்பட்டான். இதன் வளர்ச்சி என்பது குறித்த பெண்ணுடன் அதிகமான ஈடுபாடும், குறித்த பெண் அந்த ஆணைச் சார்ந்து வாழ்வதும் அதிகரித்தது. இந்த நிலையில் ஆண் தனக்குப் பின் உபரியை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வியில் தனக்கான வாரிசுகளைத் தெரிவு செய்த போக்கில், தனது இரத்தத்தின் நேரடி உரித்தொன்றை (இதை விஞ்ஞான ரீதியாக அல்ல. அனுபவ ரீதியாக ஆண்-பெண்ணின் இணைவு குழந்தையை உற்பத்தி செய்வதைக் காண்கின்றான்.) உருவாக்க விரும்பினான். இதற்காகத் தனது உபரியை நிபந்தனைக்குட்பட்ட வகையில் வழங்கிய போக்கில், ஒரு பெண்ணைத் தனது வாரிசுக்காகச் சொத்தாக்குவது இலகுவாக இருந்தது. இந்தப் பெண்ணின் மீதான ஆதிக்கம், அப்பெண் மூலம் ஆண் பெற்ற குழந்தை வாரிசுகள், ஒருதாரமணக் குடும்பத்தை உருவாக்கியது. இதை இலகுவாக்க பெண் மீதான ஆணின் கொடூரத்தனமான பாலியல் வேட்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண் ஒரு ஆணைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பாக இருந்தது. பெண்ணின் இந்தத் தற்காப்பைச் சாதகமாகப் பயன்படுத்தினான். அதுவும் சமுதாயத்தில் அதிகமான உபரியை உற்பத்தி செய்யும் ஆணின் அதிகாரம் பெண்ணின் உணவையும், பாதுகாப்பையும் வழங்கிய சமுதாயத்தில்,  பெண்ணை ஆணின் சொத்தாக்குவது இலகுவாக்கியது. இது இயல்பில் ஏற்பட வரலாறு எங்கும், ஆதிக்கப் பொருளாதாரப் பிரிவுகளின் பண்பாடு - கலாச்சாரம் எப்படி நடைமுறையானதோ, அதேபோல் அனைத்து மக்கள் இனத்திலும் ஒருதார மணம் உருவானது. இந்த ஒருதாரமணம் ஆணின் வாரிசை உருவாக்கவும், ஆணைக் கவனித்துக் கொள்ளும் நிபந்தனைக்குள் ஆண் உணவு அளிக்க முன்வந்தான்.


பொருளாதார ஆதிக்கத்தைக் கொண்ட பிரிவுக்கு நலிவுற்ற பிரிவு சேவை செய்வதுபோல் பெண்ணின் சேவை ஆணுக்கு நிபந்தனையாகியது. அடிமைகள் அடிமையுடைமையாளனுக்கு உழைப்பைக் கொடுத்தபோது அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஆனால் உழைப்பைச் சுதந்திரமாக விற்றபோது அவன் நவீன அடிமையாகி, அதே சொத்துடைய வர்க்கத்துக்கே இன்றுவரை சேவை செய்கின்றான். இதுபோல் பெண் ஆரம்பத்தில் நேரடியாக ஆணின் அடிமையாக இருந்தது மாறி, இன்று சுதந்திரம் பெற்ற நவீன அடிமையாக இருக்கின்றாள்;. இந்த உழைப்பு மற்றும் பெண்ணடிமைத்தனம் வழக்கம்போல் போராட்டத்தின் மீதான காட்டிக் கொடுப்புகள், சுதந்திரத்தின் பின்னான நம்பிக்கைகளில்தான் எப்போதும் நிகழ்கின்றது. இதில் இருந்துதான் திரிபுவாதப் பெண்ணியக் கோட்பாடுகள் ஆணாதிக்க வழியில் பெண்ணியக் கோஷத்தில் உதிர்த்தெழுகின்றது.


உழைப்பை  இயற்கையின் மீது பயன்படுத்தியபோது உயிர் வாழும் போராட்டத்தில் பெண் இயல்பில் ஆணுடன் பங்கிட்டுக் கொண்ட உணவு என்பது, பொருளாதார வளர்ச்சியால் தனிமனிதன்  உபரி உற்பத்தி செய்த போது பெண்ணுக்கு மறுப்பாக மாறியது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஏற்படும் பக்கவிளைவு போல் இது பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியது. பின்னால் இது சுரண்டல் ஊடாக வர்க்கச் சமுதாயத்தை உருவாக்கி, பல கூறுகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆணின் ஆதிக்கம் பண்பாடு - கலாச்சாரப் போக்குகளை, ஆதிக்கப் பொருளாதார வெளிப்பாடுகளை உள்வாங்கிய சமுதாயமாக மாற்றியது. 


பெண் தனக்கு மறுக்கப்பட்ட உணவு முதல், ஆண் தனக்கான வாரிசைக் கோரி பெண்ணைப் பாலியல் அடிமையாக்கியது முதல், ஆணின் பாலியல் வேட்கைக்கு எதிராக, நிலைத்து வாழத் தொடங்கிய எல்லா மனித இனத்துக்குள் தொடங்கிய முதல் போராட்ட வடிவமாகும்;. முதல் வர்க்க அடிமைப்படுத்தல் பெண்ணினமாக இருக்க, முதல் வர்க்கப் போராட்டம் பெண்ணினத்தால் நடத்தப்பட்டது. முதல் மனிதனுக்கிடையிலான போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக இருந்தது.  அன்று தொடங்கிய போராட்டம் பெண் நிறுத்திவிட முடியாத வகையில், பெண் பொருளாதாரப் பலமற்றவளாக உள்ளதுடன், நிலவும் ஆணாதிக்கத்துடன் சேர்ந்து பெண் நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்ட ஒரு கவர்ச்சிப் பொருளாக, இந்தச் சமூகப் பொருளாதார, பண்பாட்டு - கலாச்சாரத் தளம் தொடர்கின்றது. பெண்ணின் போராட்டம் ஆரம்பம் முதலே ஒட்டு மொத்த தீர்வுக்குப் பதில் சலுகைகளைப் பெறுவது, தக்க வைப்பது, அதில் இருந்து முன்னேறுவது எனத் தொடங்கியது.


இன்று முதலாளித்துவச் சமூகத்தில் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, தன்னை இந்த ஆணாதிக்கத்துக்குள் திடப்படுத்தும் போக்கு இயல்பானதாக உள்ளது. ஆணாதிக்கச் சமூகம் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமைத்தனமும் சூறையாடும் போக்கில் இயற்கைக்கு எதிரானதோ, அந்தளவுக்கு ஆணாதிக்கத்துக்குள் பெண் பெறும் போது அச்சலுகைகளும் மிகவும் மோசமானதாக மாறுகின்றது. பெண் எப்படி அடிமையானாள் என்ற கேள்விகள் விட்டுச் செல்லும் தீர்வுகள் பெண்ணை ஆணாதிக்கத்தில் இருந்து மீட்கவும், ஆணை  ஆணாதிக்கத்தில் இருந்த இயற்கை சார்ந்த பெண்ணின் நிலைக்கு மேலாகத் தரம் உயர்த்தவும் போராடும், மனித வரலாற்றைக் கற்றுக் கொள்வது மட்டுமே இந்த ஆணாதிக்கத்துக்கு முடிவைக் கட்டும்.