Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 துள்ளித் திரியும் வயதில் பள்ளிக்குச் சென்றும், ஒத்த வயதினருடன் ஆடிப்பாடியும், கோலி, பம்பரம் விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டிய சிறுவர்கள் பலரின் இளமை, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அரை சாண் வயிற்றுக்காகக் குப்பை பொறுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


 சென்னை மாநகர் ஒரு நாளைக்குக் கழித்துத் தள்ளும் 3500 டன் குப்பைகளைத் தாங்கிக் கொண்டு ஊருக்கு வடக்கே கொடுங்கையூரும், தெற்கே பெருங்குடியும் குப்பை மலைகளாய் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அன்றாடச் சாப்பாட்டுக்காக இந்தக் குப்பைக் குவியலைக் கிளறி, அதில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உலோகத் துண்டுகளைப் பொறுக்கி வாழும் நிலையில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இருக்கின்றனர்.


 பெருங்குடியின் குப்பை மலையில் அதிகாலையிலேயே கையில் கோணிப்பையுடன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் கண்ணகி எனும் 8 வயதுச் சிறுமியும் குணா போன்ற பதின்வயதுச் சிறுவர்களும் தினமும் இம்மலையினைக் குடைந்தால்தான் அவர்களுக்கு 20 ரூபாயாவது கிடைக்கிறது. பகலில் எப்போதும் இவர்களைப் போலக் குறைந்தது நூறு சிறுவர்களாவது பெருங்குடிக் குப்பை மலையில் கையில் குப்பை கிளறும் குச்சிகளுடன் அலைகிறார்கள்.


 உயிருக்கே உலை வைக்கும் மருத்துவமனைக் கழிவுகளான பேண்டேஜ்கள், அழுகிய சதைத் துண்டுகள், தூக்கியெறியப்படும் ஊசிகள், இரசாயனக் கழிவுகள் என எண்ணற்ற அபாயங்களுடன், எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேட்டில் இச்சிறார்கள் அலைந்து திரிவதால் கை கால்கள் எல்லாம் ஆறாத புண்களுடனும், தீராத இருமல்களுடனும் இவர்களின் இளமை, மொட்டிலேயே கருகி நிற்கிறது. புகை மூட்டத்தினூடே, குப்பைகளைக் கொட்ட வரும் லாரிகளில் அடிபட்டு மாண்ட சிறுவர்கள் பற்றி எல்லாம் வெளியே தெரிவதே இல்லை.


 இதே சிங்காரச் சென்னையில் மேட்டுக்குடிக் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் சுகமாய் ஓய்வைக் களிப்பதற்கென்றே மாநகரைச் சுற்றிலும் கேளிக்கைப் பூங்காக்கள், வீடியோ கேம்ஸ் மையங்கள், அமெரிக்க இனிப்புச் சோளத்தை கொறித்தபடி வலம் வர சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா என எண்ணற்ற கேளிக்கை மையங்கள் உள்ளன. இக்குழந்தைகள் விளையாடுவதற்கான விலை உயர்ந்த பொம்மைகளை விற்க அரசே கண்காட்சி நடத்துகிறது. தன் செல்ல மகளிடம், அவளுக்குப் பிடித்த பொம்மையை என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்கிச் செல்லும் தாய்மார்கள் உள்ளனர்.


 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டுகளிக்க ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கிச் சென்று ஊளையிட்டு ரசிக்கின்றனர் மேல்தட்டு வர்க்கச் சிறார்கள். சேப்பாக்கத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ள மெரீனா கடற்கரையில் அதே வயதொத்த சிறார்களோ தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.


 சிங்காரச் சென்னை மட்டுமல்ல, நாடெங்கும் இதே போல மேல்தட்டு வர்க்கக் குழந்தைகள் வாழ்க்கையைச் சுவைத்து வண்ணக் கனவுகளுடன் வாழவும், அதே நேரத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் குப்பை பொறுக்குதல், முறுக்கு சுடுதல், பட்டு நெசவு போன்ற வேலைகளிலும் தீப்பெட்டி, பட்டாசு, கல்குவாரி என உயிருக்கு உத்திரவாதமில்லாத தொழில்களிலும் ஈடுபட்டு இளமையின் பொருள்கூடத் தெரியாமல் வாழவும் பழக்கப்பட்டுள்ளனர்.


 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உழைப்பைத் தடை செய்த இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 56 ஆண்டுகளாகி விட்டன. இதனைக் கடுமையாக அமல்படுத்த 1986 இலேயே சட்டம் ஒன்றும் இயற்றப்பட்டு விட்டது. இருப்பினும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. அரசே ஒப்புக் கொண்டபடி, 2003இல் தமிழ்நாட்டில் மட்டும் உயிருக்கு ஆபத்தான தொழில்களில் 4397 சிறுவர்களும், சற்றே ஆபத்தான தொழில்களில் 11,667 சிறுவர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 9 வயதுக்குக் கீழான குழந்தைகள் மட்டும் 1677. ஆனால் உண்மையில் எண்ணிக்கை பலமடங்காக இருக்கும்.


 குழந்தைகளை உழைப்பில் ஈடுபட வைப்பதை சட்டப்படி குற்றம் என்றும் அதற்குச் சிறைத்தண்டனை உண்டென்றும் அறிவிக்கும் அரசு, ஏன் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர் என்பதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. சென்னைபெருங்குடியில் சிறுவர்கள் ஆபத்தான தொழிலான குப்பை கிளறுகிறார்கள் என்று ""இந்து'' பத்திரிக்கை செய்தி வெளியிட்டால், அதிகார வர்க்கமோ அவர்களுக்கு ""கை, கால்களுக்கு உறை வழங்க வேண்டும்'' என வக்கிரமாகப் பேசுகிறது.


 மறுபுறம், குழந்தை உழைப்பாளர்களை மையமாக வைத்துப் பன்னாட்டு எடுபிடிகள் பெரும் வர்த்தகத்தையே இங்கே நடத்தி வருகின்றனர். அமெரிக்க அரசின் தொழிலாளர் நலத்துறையும் இந்திய அரசும் இணைந்து "இண்டஸ் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் திட்டம்' ஒன்றைத் தமிழ்நாட்டில் நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும் தனியாகத் "தேசிய குழந்தை உழைப்பாளர்கள் திட்டம்' எனும் திட்டத்தை நடத்தி வருகின்றது. இத்திட்டத்தின்படி மீட்டெடுக்கப்படும் குழந்தைகள், அருகில் உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். அக்குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடாக உதவித் தொகை வழங்கும் திட்டமும் இதில் அடக்கம். நம் நாட்டு அரசுக்கு குழந்தைகள் மேல் என்னே கருணை என யாரும் வியக்க வேண்டாம். மாதாந்திர உதவித் தொகை எவ்வளவு தெரியுமா? நூறு ரூபாய்! இதை எல்லாம் விட, அத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சம் என்ன என்றால், மீட்கப்பட்ட குழந்தை உழைப்பாளர்களின் தாய்மார்களை சுய உதவிக் குழுவாகக் கட்டி, அதனை தனது நலன் சார்ந்த திட்டத்திற்காக உருவாக்கி வருவதுதான். இதுவரை 893 சுய உதவிக் குழுக்கள் இவ்வாறு கட்டப்பட்டுள்ளன.


 இன்னும் கணக்கற்ற தன்னார்வக் குழுக்கள் "குழந்தை உழைப்பில் உருவான பட்டுச் சேலையைப் புறக்கணியுங்கள்' என்றோ, "பட்டாசு வெடிக்காதீர்கள்' என்றோ கோசம் போட்டு விட்டு பன்னாட்டு வள்ளல்களிடம் கல்லாக் கட்டி வருகின்றன.


 கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களுக்கு, ஒரு தன்னார்வ நிறுவனம் நகரும் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றது. சுண்டல் விற்பனை முடிந்த பிறகு தன்னார்வ நிறுவன வாகனம் ஒன்று வரும். அதன் உள்ளேயே ஒரு மணிநேரம் ஆரம்பக் கல்வி வகுப்புகள் நடத்தப்படும்.


 சில தொண்டு நிறுவனங்கள் உழைப்பில் ஈடுபட்டுள்ள சிறார்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்லும். அண்மையில் இவ்வாறு வேளாங்கண்ணிக்குச் சிறுவர்களை அழைத்துக் கொண்டு போன தொண்டு நிறுவனத்தினர் அங்குள்ள ஒரு விடுதியில் அவர்களைத் தங்க வைத்தனர். மூன்று நாட்கள் அங்கு ""குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்தினர். அவ்விடுதி உரிமையாளரிடம் "இந்த 3 நாட்களுக்கு மட்டும் உங்கள் விடுதியில் பணியாற்றும் சிறுவர்களை எங்கள் முகாமிற்கு அனுப்பி வையுங்கள். அதற்கான இழப்பீட்டைத் தந்து விடுகிறோம்' என அத்தொண்டு நிறுவனங்கள் பேரம் பேசியுள்ளனர். இதுதான் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இந்தக் கைக்கூலிகள் காட்டும் அக்கறையின் இலட்சணம்.


 இன்னொருபுறம், கடந்த மே நாளன்று டெல்லியில், குப்பை பொறுக்கும் சிறுவர்களை நூற்றுக்கணக்கில் திரட்டி, "பால விகாஷ்தாரா' என்ற தன்னார்வ நிறுவனம், முழக்க அட்டைகளுடன் பேரணியை நடத்தியுள்ளது. குப்பை பொறுக்குவதும் ஒரு தொழிலாம்! அதை அங்கீகரித்து, அத்தொழிலில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி மனித உரிமைகளை வழங்க வேண்டும் என்றும்; குப்பை பொறுக்கும் சிறுவர்களுக்குக் கையுறைகாலுறை வழங்குவது, அடையாள அட்டை வழங்குவது, கல்வி  மருத்துவ வசதிகளோடு சேகரிக்கப்பட்ட குப்பைகளைப் பிரிக்க இடவசதியும் செய்து தரவேண்டும் என்று டெல்லி மாநில முதல்வரிடம் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளது. சிறுவர்கள் குப்பை பொறுக்கும் அவலத்தை ஒழிக்கப் போராடுவதற்குப் பதிலாக, குப்பை பொறுக்குவதையும் ஒரு தொழிலாக அங்கீகரித்து சட்டரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்யக் கோருகின்றனர், இக்காரியக் கோமாளிகள்.


 இவ்வாறெல்லாம் புண்ணுக்குப் புணுகு போடும் வேலைகளால்  குப்பைப் பொறுக்கும் அவலத்தில் இருந்து சிறுவர்களையும் மீட்டு விடமுடியுமா?


 குழந்தைகள் ஏன் உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதன் அடிப்படையைப் புரிந்து கொண்டால்தான், அதை எப்படிக் களைவது என்பதைத் தீர்மானிக்க முடியும்.


 சொந்தமாய் நிலம் இருந்தும் விவசாயம் செய்து கட்டுபடி ஆகவில்லை. விவசாயக் கூலிகளுக்கோ வேலை இல்லை. பிழைப்பிற்காக என்ன செய்வது? கள்ளச் சாராயம் விற்பது, திருடுவது போன்ற இழிசெயல்களைச் செய்யாமல் கவுரவமாய் வாழ வேண்டுமானால், இடம் பெயர்ந்துதான் ஆகவேண்டும். ஆகவே, சென்னை போன்ற நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அன்றாடம் வந்து குவிகின்றன. விவசாயம் தவிர வேறொன்றும் அறியாத அவர்கள் கிடைத்த எந்த வேலையையாவது செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.


 அவ்வாறு வாழத் தலைப்பட்டவர்களின் பிள்ளைகள் உட்பட அக்கும்பல்களைச் சேர்ந்த வேலை செய்தால்தான் சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை கொடுத்து இரண்டு வேளையாவது பசியாற முடியும். இதனால்தான் சிறுவர்கள் பழைய பேப்பர் வாங்குவது, குப்பைக் குழிகளைக் கிளறுவது, பட்டாணி, சுண்டல் விற்பது எனப் பல வேலைகளில் ஈடுபட்டு, துள்ளித் திரியும் இளமைக் காலத்தில் கைகால்கள் மரத்துப் போகும் வரை உழைக்கிறார்கள். இவ்வாறு வளரும் சிறுவர்கள் உதிரிகளுக்கே உரிய பண்புகளுடன் வளர்கிறார்கள். இளமையிலேயே புகைபிடிப்பது, போதைப் பழக்கம், ஓரினப் புணர்ச்சி என எல்லாக் கேடுகெட்ட செயல்களுக்கும் அடிமை ஆகின்றனர். இதேநிலை தொடருமானால், இவர்கள் மத்தியில் இருந்தே நாளை கிரிமினல்கள் உருவாகி வருவார்கள்.


 ஆக, இச்சீர்கேடுகளுக்கெல்லாம் ஆணிவேராய் இருப்பது, விவசாயத்தை ஒட்டு மொத்தமாய் அழித்து அரசு நடைமுறைப்படுத்தி வரும் மறுகாலனியப் பொருளாதாரக் கொள்கைதான். இதனை ஒழிக்காமல் குழந்தை உழைப்பை ஒழிப்போம் என்பது, இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது போலத்தான்.


· வில்லாளன்