குற்றவாளியே நீதி வழங்கும் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? அந்தத் திருப்பணியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முசுலீம் படுகொலை கலவரத்தை விசாரிக்க, மோடி நானாவதி கமிசனை அமைத்தார். அப்படுகொலை நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டபிறகும், அந்த கமிசன் விசாரணை என்ற பெயரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கமிசனைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான கே.ஜி. ஷா என்பவர் சமீபத்தில் இறந்து போய்விட்டார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார்.
நரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் "நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
அந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
அத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட 41 முசுலீம்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டன. இதன் மூலம், அகமதாபாத் நகர போலீசே முக்கியமான தடயங்களை அழித்தது.
நரோடா பாட்டியா வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அசோக் சிந்தியின் கைபேசி படுகொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் மூலம், முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை விசாரணை செய்யத் தொடங்கினார், கூடுதல் போலீசு கமிசனர் ஏ.கே. சுரோலியா. சட்டப்படி விசாரணை மேற்கொண்டதற்காக ஏ.கே. சுரோலியா இடம் மாற்றம் செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சாட்சியங்களை அழித்ததோடு, முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கியைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நரேந்திர மோடியே எடுத்துக் கொண்டார்.
""(படுகொலைக்குப் பிறகு) போலீசு கமிசனர் (எனக்கு எதிராக) உத்தரவுகள் பிறப்பித்தார். நான் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு கோரப்பட்டேன். நான் ஓடிப் போனேன். நரேந்திர பாய் என்னை மவுண்ட் அபுவில் உள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்தார்.''
""நரேந்திரபாய் என்னைச் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். இதற்காக அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டேயிருந்தார். என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தார். இல்லையென்றால், நான் சிறைக்குள்ளேதான் அடைபட்டுக் கிடந்திருப்பேன். தோலாகியாஜி என்ற நீதிபதி, என்னை ஒருமுறையல்ல, நான்கு முறை தூக்கில் போட வேண்டும் எனக் கூறினார். அடுத்து வந்த நீதிபதியோ, என்னைத் தூக்கில் போட வேண்டும் எனக் கூறவில்லையே தவிர... மூன்றாவதாக வேறொரு நீதிபதி வந்தார்... இதற்குள் நாலரை மாதங்கள் சிறையில் கழித்துவிட்டேன்... பிறகு, நரேந்திரபாய் எனக்கொரு செய்தி அனுப்பினார்... எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிப்பேன் என்று... அடுத்ததாக, அக்சய் மேத்தா என்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். அவர் எனது வழக்கு சம்பந்தமான கோப்புகளையோ, வேறெதையோ கண்டு கொள்ளவேயில்லை... (பிணை) வழங்கப்படுகிறது என்று மட்டும்தான் அவர் சொன்னார்... நாங்கள் அனைவரும் வெளியே வந்து விட்டோம்...'' இது, தெகல்கா வார இதழ் நடத்திய இரகசிய விசாரணையில் பாபு பஜ்ரங்கியே அளித்திருக்கும் சாட்சியம். பொதுவாக, விசாரணை கமிசன் என்பதே கண்துடைப்பு நாடகம் என்றுதான் கூறப்படும். ஆனால், நரேந்திர மோடியோ, மிகவும் வெளிப்படையாக, நானாவதி கமிசன் என்பது தனது எடுபிடிகளின் கூடாரம் எனக் காட்டிவிட்டார்.
குஜராத் படுகொலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, குஜராத் முசுலீம் மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தியதையடுத்து, நரோடா பாட்டியா படுகொலைகள் உள்ளிட்ட 14 முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரணை செய்வதற்கு ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். இக்குழுவில் நோயல் பார்மர், ஜெயேஷ் முலியானா என்ற இரு போலீசு அதிகாரிகளும் உறுப்பினர்களாகத் திணிக்கப்பட்டனர். இந்த இருவருமே முசுலீம்களுக்கு எதிராகச் செயல்பட்ட பின்னணி கொண்டவர்கள். குறிப்பாக, நோயல் பார்மர் முசுலீம் என்ற காரணத்தினாலேயே பல பேரை ""தடா''வின் கீழ் கைது செய்து, தனது முசுலீம் வெறுப்புணர்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டவர்.
இந்த அதிகாரிகளின் நியமனம், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டதால், பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அந்த அதிகாரிகளை நீக்கக் கோரிப் போராடிய பிறகுதான், அந்த இருவரும் விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் இப்பொழுது நீதிபதி அக்சய் குமாரை நீக்கக் கோரும் இன்னுமொரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராடாமல், காகிதச் சட்டத்தையும், அதிகாரிகளையும் நம்பிக் கொண்டிருந்தால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதை குஜராத் முசுலீம்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
· அழகு