Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 கடந்த மே மாத மத்தியில், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் பகுதியில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 18.5.08 அன்று பின்னமங்கலம் கிராமத்தில் மட்டும் 9 பேர் மாண்டு போயுள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள பல கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் சாராயச் சாவுகள் அதிகரித்து மொத்தத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், மகனை இழந்த தாய் என இவ்வட்டாரம் மாளாத் துயரத்தில் விம்மிக் கொண்டிருக்கிறது. ஓசூரை அடுத்த கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் விஷச் சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 170ஐத் தாண்டி விட்டது.


 மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை தமிழகத்துக்குக் கடத்தி வரவும், எல்லையோரக் கிராமங்களில் விற்பனை செய்யவும் அனுமதித்து, சாராயக் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழகப் போலீசு, தற்போதைய சாராயச் சாவுகள் மூலம் தமது கிரிமினல் குற்றங்கள் வெளிவரத் தொடங்கியதும் அவற்றை மூடி மறைக்க பல தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது. கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்றவர்கள் அங்கு விற்ற விஷச் சாராயத்தைக் குடித்து மாண்டதாகவும், தமிழகத்தில் கள்ளச் சாராயமே கிடையாது என்றும் புளுகி வருகிறது. மேலும், இறந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், பிரேதப் பரிசோதனையால் மாண்டவரின் உடல் விகாரமாகி விடும்; வழக்கு  வாய்தா என்று கோர்ட்டுக்கு அலைய நேரிடும் என்று பீதியூட்டி உடனடியாகப் புதைக்கச் செய்து, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது.


 சாராய கிரிமினல் கும்பலிடம் வாங்கி, உள்ளூரில் சாராயத்தை விற்று கைது செய்யப்பட்டுள்ள பலரில் பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரும் ஒருவர். இவரும் இவருக்குச் சாராய சப்ளை செய்த மாதப்பாவும் நேற்றுவரை சி.பி.எம். கட்சி ஆதரவாளர்களாக இருந்து, அண்மையில் தளி எம்.எல்.ஏ. இராமச்சந்திரன் ஆசியுடன் வலது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர். சாராய கும்பலுடன் போலீசும் அதிகார வர்க்கமும் மட்டுமின்றி, புரட்சி பேசும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கூட்டுச் சேர்ந்து சீரழிந்து கிடக்கிறது.


 சாராயம் காய்ச்சி விற்பது என்பது நம் நாட்டில் காலங்காலமாக நடந்து வந்த தொழில்தான். ஆனால், பெரும் சீமைச் சாராய ஆலைகள் வைத்து நடத்தும் தொழிலதிபர்கள் உருவானதும், சாராய உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்படும் கலால் வரியானது அரசு வருவாய்க்கு முக்கிய மூலாதாரமாகியது. அதன் பின்னர்தான், இந்த ஏற்பாட்டுக்கு வெளியே சாராயம் காய்ச்சி விற்பது குற்றத் தொழிலாக  சட்டவிரோதத் தொழிலாக்கப்பட்டது. இருப்பினும் வறுமை காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் சாராயம் காய்ச்சி விற்பது தொடரத்தான் செய்கிறது.
 ஆனால், கள்ளச் சாராயத் தொழிலில் புகுந்துள்ள கிரிமினல் குற்றக் கும்பல்கள் வேறு வகையினர். இவர்கள் சாராய ஊறல், அடுப்பு, பானை என்று தொழில் செய்வதில்லை. அதைவிட மலிவான, காட்டமான போதை தரும் சாராயத்தை மெத்தனால், எரிசாராயம் மற்றும் பிற இரசாயனக் கலவைகளைக் கொண்டு தயாரித்து குறுகிய காலத்திலேயே கோடிகளை அள்ளுகின்றனர்.


 உள்ளூர் ஓட்டுக்கட்சித் தலைவர்கள்  போலீசு அதிகாரிகளின் கூட்டாளியாகவோ பினாமியாகவோ உள்ள இச்சாராய கிரிமினல்களில் சிலர் அரசியல் தலைவர்களாகவும், இன்னும் சிலர் வீட்டுமனைத் தொழில் முதலானவற்றில் இறங்கி புதிய தொழிலபதிபர்களாகவும், சுயநிதிக் கல்லூரி நடத்தும் கல்வித் தந்தையாகவும் பரிணமிக்கின்றனர். இச்சாராய கிரிமினல் கும்பல்கள்தான் கூலிப் படையைக் கட்டியமைத்துக் கொண்டு தேர்தல் சமயங்களில் கள்ள ஓட்டு, வெடிகுண்டு வீச்சு, வாக்குச் சாவடிகளைச் சூறையாடி குறிப்பிட்ட வேட்பாளரை வெற்றி பெற வைப்பது என எல்லா வகை வன்முறை வெறியாட்டங்களையும் முன்னின்று நடத்துகின்றன. இதே மாதிரியான சட்டவிரோத  சமூக விரோத வேலைகளை சீமைச்சாராய ஆலை அதிபர்கள் மேல் மட்டத்தில் செய்கின்றனர். இவர்கள் வாரியிறைக்கும் கள்ளப் பணத்தில்தான் தேர்தல் திருவிழா தடபுடலாக நடக்கிறது. அமைச்சர்களைத் தெரிவு செய்வது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது வரை இவர்களது ஆதிக்கமும் செல்வாக்கும் கொடி கட்டிப் பறக்கிறது.


    இன்று நாடெங்கும் இப்படிப்பட்ட சீமைச் சாராய மன்னர்களும் உள்ளூர் கள்ளச் சாராய தளபதிகளும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள ஓட்டுக் கட்சித் தலைவர்கள்  அதிகாரிகள்  போலீசு கும்பலும் கொண்ட சாராய சாம்ராஜ்ஜியம்தான் கோலோச்சுகிறது. இவர்கள்தான் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறிப்பவர்கள். உற்றார் உறவினர்களை விஷச் சாராயத்துக்குப் பலி கொடுத்துவிட்டு உழைப்பாளி பெண்களும் குழந்தைகளும் அனாதரவாக நிற்கக் காரணமானவர்களும் இவர்கள்தான். ஆனால், இவர்களையெல்லாம் பாதுகாத்துக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக மெத்தனால் சாராயம் விற்றவர்களை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டுகிறது அரசு. மறுபுறம் இது கர்நாடக விஷச் சாராயம்; தமிழகத்தில் உற்பத்தியாகவில்லை என்று கூறி நழுவிக் கொள்கிறது. இக்கள்ளச் சாராய விற்பனை தமிழக போலீசின் ஆதரவோடுதான் நடந்துள்ளது என்றாலும், போலீசு கும்பலைக் கைது செய்து தண்டிப்பதற்குப் பதில், மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி. திலகவதியை பணிமாற்றம் செய்தும் தளி போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசாரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதைப் போல காட்டிக் கொள்கிறது, தமிழக அரசு.


 தற்போதைய ஓசூர் விஷச் சாராய சாவுகள் விவகாரத்தில் மட்டுமல்ல; இதற்கு முன் 1998இல் ஓசூரை அடுத்த சூளகிரியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் பலியானபோதும், 2001இல் சென்னை  செங்குன்றத்தில் 50க்கும் மேலானோர் கொல்லப்பட்ட போதும் எந்தவொரு போலீசுக்காரனோ, அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை. இதுதான் சாராயத்தால் செழிக்கும் ஓட்டுக் கட்சி ஜனநாயகத்தின் யோக்கியதை! இக்கேடு கெட்ட கொலைகார சாராய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காமல் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது. சமூக விரோத கள்ளச் சாராய கிரிமினல் கும்பலைப் பிடித்து உழைக்கும் மக்களே தண்டிக்காதவரை, தொடரும் சாராயச் சாவுகளைத் தடுத்து விடவும் முடியாது.


 பு.ஜ. செய்தியாளர்கள்,  ஓசூர்.