Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 நக்சல்பாரி புரட்சிகர அமைப்பான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)ஐச் சேர்ந்த தோழர் நவீன், தமிழகப் போலீசாரால் கடந்த ஏப்ரல் 19 அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டார். ""ஏப்ரல் 19 அன்று, கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சியில், அதிரடிப் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்; அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஏழெட்டு பேர் கொண்ட நக்சலைட்டு குழுவினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதிரடிப் படையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திருப்பிச் சுட்டனர். ஒருமணி நேரம் நடந்த இம்மோதலில், நவீன் பிரசாத் கொல்லப்பட, மற்ற ஏழு நக்சலைட்டுகள் தப்பியோடி விட்டனர்'' என இக்கொலை பற்றி போலீசார் சொன்ன திரைக்கதையையே, கிளிப் பிள்ளை போல அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.


 நவீன் கொல்லப்பட்ட பின்பு, அது பற்றி சட்டசபையில் பேசிய கருணாநிதி, ""தி.மு.க.வின் இரண்டு வருட ஆட்சியில் 24 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுள் எட்டு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கடந்த (ஐந்து வருட) அ.தி.மு.க. ஆட்சியில் 56 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுள் ஒருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை'' என்ற புள்ளி விவரத்தை எடுத்துப் போட்டுள்ளார். எனவே "தீவிரவாதிகளை' ஒடுக்குவதில் தனது "சூத்திர' ஆட்சி எள்ளளவும் பார்ப்பனபாசிஸ்டுகளின் (ஜெயா) ஆட்சிக்குச் சளைத்ததில்லை எனக் காட்டுவதற்கு நவீனின் கொலையும் கருணாநிதிக்கு அமோகமாகப் பயன்படும்.


 மாவோயிஸ்ட் கட்சியின் அனுதாபிகள் பலரும், ""போலீசார் நவீனை எங்கோ வைத்து அடித்துக் கொன்றுவிட்டு, மோதலில் இறந்து போனதாக நாடகமாடுவதாக''ப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். அவர் உடலின் பல இடங்களில் சித்திரவதைக்குள்ளான இரத்தக் காயங்கள் இருப்பதையும்; அதேசமயம், அவரது ஆடையில் குண்டு துளைத்துச் சென்றதற்கான அடையாளமோ, ஆடையில் இரத்தக் கறையோ இல்லாதிருப்பதையும் அத்தோழர்கள் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.


 ""பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாகப் பாடும் பிலாக்கணம்'' என்று இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் மோகன்குமார்; மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோ.சுகுமாரன்; குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேரா.கோச்சடை; குடியுரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி; ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டி, மும்பய்ஐச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.கோபால்; தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மார்க்ஸ் இளவேனில் ஆகிய மனித உரிமை ஆர்வலர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையும் கூட, நவீன் பிரசாத் போலி மோதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிறது.


 மலைப்பகுதியில் இருந்து டோலியின் மூலம் கீழே கொண்டு வரப்பட்ட நவீன் பிரசாத்தின் உடல்தான் பத்திரிகையாளர்களிடம் காட்டப்பட்டதேயொழிய, ""மோதல்'' நடந்த இடத்தைப் பத்திரிகையாளர்களுக்கோ, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கோ, கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கோ காட்ட போலீசு மறுத்திருக்கிறது.


 உண்மை அறியும் குழு மோதல் நடந்த இடமாகக் குறிப்பிடப்படும் வடகவுஞ்சிக்குச் சென்று விசாரணை நடத்தியதில், அங்கு மோதல் நடந்ததற்கோ, நக்சலைட்டுகளுக்கும் போலீசுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததற்கோ எந்தவிதத் தடயத்தையும் அக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை.


 உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி, துணை போலீசு ஜெனரல் கிருஷ்ணமூர்த்தியிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, மோதல் நடந்த இடத்தை அடையாளம் காட்ட நீங்கள் உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார். அந்த அதிகாரியோ, ""உண்மை அறியும் குழு போலீசுக்கு எதிராகத்தான் அறிக்கை கொடுக்கும் என ""க்யூ'' பிரிவு போலீசு அதிகாரிகள் கூறுவதால், மோதல் நடந்த இடத்தை அடையாளம் காட்ட முடியாது'' என மறுத்துவிட்டார்.


 அறுங்காவல் என்ற ஊரைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் என்பவர் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் மலைப் பகுதியில்தான் வெகுகாலமாக ""டெண்ட்'' போட்டுத் தங்கி வந்துள்ளார். நவீன் கொல்லப்படுவதற்கு முதல் நாள் போலீசார் திடீரென அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். உண்மை அறியும் குழு அவரைச் சிறையில் சந்தித்த பொழுது, அவர், அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்ததாக ஒரு வார்த்தைக்கூடச் சொல்லவில்லை.


 நவீன் பிரசாத்தின் இடுப்புக்குக் கீழே கால் பகுதி முழுவதும் ஊசியால் குத்தப்பட்ட தடயங்கள் உள்ளன. இக்காயங்கள், போலீசார் நவீனை ஏற்கெனவே பிடித்து வைத்து சித்திரவதை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. ஆனால், போலீசாரோ அக்காயங்கள் காட்டு விஷ வண்டுகள் நவீனைக் கடித்ததால் ஏற்பட்டவை என மழுப்பி வருகின்றனர்.


 அவர் உடலில் குண்டு துளைத்ததைப் பார்க்கும் பொழுது, நவீன் மிக அருகில் இருந்தே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என உண்மை அறியும் குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


 மஞ்சள் பரப்பு பகுதியில் நவீன் பிரசாத் ஜவுளி வியாபாரி போல நடமாடி வந்ததை ஒப்புக் கொள்ளும் ஊர் மக்கள், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக உண்மை அறியும் குழுவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, மோதல் நடந்த இடத்தில் இருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவை, சந்தன மரக் கடத்தல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டவையாக இருக்கக் கூடும். இதன் மூலம் போலீசார் மலைவாழ் கிராம மக்களிடம் "தீவிரவாதிகள்' பற்றி தேவையற்ற பயத்தை உருவாக்க முனைகிறார்கள் என்றும் அக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


 நவீன் பிரசாத் கொல்லப்படுவதற்கு ஏழு நாட்கள் முன்னதாக, தாமரைக் குளத்தைச் சேர்ந்த விசுவநாதன் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் விசாரணை என்ற பெயரில் இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். இந்தக் கைது பற்றிய செய்தி, ஏப்ரல் 13 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், சென்னை பதிப்பில் கசிந்து வெளியே வந்து விட்டது.


 எனினும், நாங்கள் விஸ்வநாதனைக் கைது செய்யவில்லை என போலீசார் மறுத்ததால், இது தொடர்பான ஆட் கொணர்வு மனு ஏப்.18 வெள்ளிக்கிழமையன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி முருகேசன் அம்மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஏப்.21) ஒத்தி வைத்தார். இந்த இடைவேளையில் நவீன் பிரசாத் கொல்லப்படுகிறார்.


 இக்கொலை பற்றி உண்மை அறியும் குழு தாமரைக்குளத்தில் விசாரித்துக் கொண்டிருந்த வேளையில்தான், அர்ஜுனன், மேரி, லீமா மற்றும் விசுவநாதனின் மைத்துனர் ரத்தினம் ஆகிய நால்வரும் போலீசின் சட்டவிரோதக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஊருக்குத் திரும்பினர். அவர்கள் பயம் காரணமாக உண்மை அறியும் குழுவிடம் எந்தத் தகவலையும் சொல்ல மறுத்துவிட்டனர். எனினும், மற்றொரு நபர் ஊரின் எல்லையில் நின்று கொண்டிருக்கும் டாடா சுமோ காரில் உட்கார வைக்கப்பட்டிருப்பதை அறிந்து, உண்மை அறியும் குழுவினர் அங்கு சென்ற பொழுது, ""அந்த நபர் விசுவநாதன் என்பதும், அவர் ""க்யூ'' பிரிவு போலீசின் பிடியில் இருப்பதும்'' தெரிய வந்தது. அந்தக் காட்சியை உண்மை அறியும் குழு செல்ஃபோன் மூலம் படம் பிடித்து, அதனைச் சாட்சியமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


 தமிழகப் போலீசின் நாடகம் அம்பலமான பிறகுதான், விசுவநாதன் ஏப்ரல் 28 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசுவநாதன் நீதிமன்ற விசாரணையின்பொழுது, ""தன்னை யாரும் கடத்தவில்லை'' எனக் கூறிவிட்டதால், தமிழக போலீசின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலமாகாமல் மூடி மறைக்கப்பட்டு விட்டது.


 தேனி மாவட்டம் வருசநாடு, முருகமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நக்சலைட்டுகளைத் தேடுவது என்ற பெயரில் போலீசு ராஜ்ஜியம் நடந்து கொண்டிருப்பதைத்தான் நவீன் பிரசாத் படுகொலையும், விசுவநாதனின் சட்ட விரோதக் காவலும் நிரூபிக்கின்றன. மேலும், போலீசாரால் தேடப்படுவதாகக் கூறப்படும் காளிதாஸ், ரஞ்சித் உள்ளிட்ட பிற மாவோயிஸ்ட் கட்சித் தோழர்களும் போலீசாரின் சட்டவிரோதக் காவலில் இருக்கலாம் என்ற ஐயத்தையும் அதிரடிப் போலீசின் மர்ம நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன. ""போலீசார் இவர்களைப் போலி மோதலில் கொல்வதற்கு முன்னதாக, நீதிமன்றம் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும். இதற்காக, ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்யப் போவதாக'' உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.


 நக்சல்பாரிகள் பற்றி அவதூறுகள் பரப்புவதன் மூலம், அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம்; அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, நக்சல்பாரிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கனவு காண்கிறார், மு.க. ஆனால், வரலாற்றின் வளர்ச்சி ஆளும் கும்பலின் கற்பனை போல அமைந்து விடுவதில்லையே!

 

· குப்பன்