Language Selection

 வாக்காளர்கள் ஓட்டுப் போடவிடாமல் அடித்து விரட்டப்பட்டு, குண்டர்கள் கள்ள ஓட்டுப் போட்டனர். வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, கொலைகள், இதுவரை கண்டிராத வன்முறைகள் — இவையெல்லாம் அண்மையில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் அல்ல. நாடாளுன்ற  சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை கட்டிக் காக்கப் போராடி வருவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி ஆளும் மே.வங்கத்தில், கடந்த மே மாதத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள்தான் இவை. இந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், வலதுசாரி பிற்போக்கு காங்கிரசுபாரதிய ஜனதாதிரிணாமுல் காங்கிரசு கட்சியினர் அல்ல. மக்களுக்கான கட்சியாக மார்தட்டிக் கொள்ளும் "இடதுசாரி' சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் மக்களுக்கு எதிராக இந்த வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்.

 பஞ்சாயத்துத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே எதிர்க்கட்சியினரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல பகுதிகளில் சி.பி.எம்.குண்டர்கள் விரட்டியடித்தனர். குறிப்பாக,சிங்கூர்நந்திகிராமம் பகுதியில் சி.பி.எம் குண்டர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் இப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ""சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சி.பி.எம் கட்சியினருக்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்று பிரச்சாரம் செய்து வந்த நந்திகிராமத்தைச் சேர்ந்த பூமி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் மீது சி.பி.எம். குண்டர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தினர். அவர்களின் வீடுகள்வாகனங்கள் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன.


 சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.


 சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடிந்துள்ளது.


 எதிர்க்கட்சியினரைத் தாக்குவதோடு மட்டும் சி.பி.எம்.குண்டர்களின் வெறியாட்டம் முடிந்து விடவில்லை. அரசு சன்மானங்களைப் பொறுக்கித்தின்னப் போட்டி போடும் "இடதுசாரி' கூட்டணி கட்சிகளுக்குள்ளும் நாய்சண்டை முற்றி, புரட்சி சோசலிஸ்டு கட்சியினரும் சி.பி.எம். கட்சியினரும் 24 பர்கானா மாவட்டத்தில் வெளிப்படையாகவே மோதிக் கொண்டனர். சில தொகுதிகள் தமக்கு ஒதுக்கப்படாததை எதிர்த்து புரட்சி சோசலிஸ்டு கட்சி தனித்துப் போட்டியிடத் தொடங்கியதும், தோல்வி பயத்தில் சி.பி.எம். கட்சியினர், இக்கூட்டணிக் கட்சியின் முன்னணியாளர்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். பசந்தி தொகுதியில் புரட்சி சோசலிஸ்டு கட்சியின் அமைச்சரான சுபாஷ் பரஸ்கரின் உறவினரது வீடு சி.பி.எம். குண்டர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்க அக்கட்சியினர் எதிர்த்தாக்கு தல் நடத்தியதில் இரு தரப்பிலும் சேர்த்து நான்கு பேர் கொல்லப்பட்டனர்.


 இது தவிர, மாநிலமெங்கும் நடந்த வன்முறை வெறியாட்டங்களில் எட்டு பேர் மாண்டதாகவும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சி.பி.எம் கட்சித் தலைவர்களே தமது கட்சிக் குண்டர்களைக் கட்டுப்பாட்டுடன் அமைதியாகச் செயல்படுமாறு உபதேசிக்கும் அளவுக்கு, மாநிலமெங்கும் சி.பி.எம் குண்டர்களின் அட்டூழியம் தலைவிரித்தாடியதைப் பத்திரிகைகளும் அறிவுத்திறையினரும் வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர்.


 நாடாளுமன்றசட்டமன்ற ஜனநாயகத்துக்கு வலதுசாரி கட்சிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு, அதைக் கட்டிக் காக்க ஓட்டு பொறுக்குவதை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, இப்போது தானும் தன்பங்கிற்கு வன்முறை வெறியாட்டங்களில் இறங்கி, கேடுகெட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதையை நாடெங்கும் நாறடித்துள்ளது. அரசியல் பலமோ, அமைப்பு பலமோ இல்லாமல், அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னும் பிழைப்புவாதிகளையே அணிகளாகக் கொண்டுள்ளதால், ஆட்சியதிகார பலத்தையும் இதர ஓட்டுக்கட்சிகளைப் போல குண்டர் படையையும்தான் அக்கட்சி பெரிதும் நம்பியுள்ளது. இப்பஞ்சாயத்துத் தேர்தலில், வன்முறை வெறியாட்டங்களின் மூலம் மாநில அளவில் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ள போதிலும், சிங்கூர்  நந்திகிராம வட்டாரத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளது. ஏற்கெனவே நந்திகிராமத்தில் பாசிச வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு உழைக்கும் மக்களை ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வன்முறை வெறியாட்டங்களால் பெயரளவுக்கான ""இடதுசாரி'' தோற்றத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.


· தனபால்