Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள், தமிழகத்தில் மாபெரும் தொழிற்புரட்சி நடந்து வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவினுள் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் இருப்பதும்; கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில், தமிழகம் முன்னணியில் இருப்பதும் என்னவோ உண்மைதான். எனினும், இந்திய மாநிலங்களிலேயே, வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் வேலை செய்யும் திறன் படைத்தோரில் ஏறத்தாழ 10 சதவீதம் பேர் வேலை வாய்ப்பற்று இருப்பதாகவும்; தேசிய சராசரியைவிட இது அதிகம் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

 முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட, இத்தொழில் வளர்ச்சியை, ""வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி'' Jobless growth) என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருபுறம், அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு; இன்னொருபுறம், விவசாயமும், சிறு நடுத்தரத் தொழில்களும் நசிவடைந்து கொண்டே போவது என்ற சமூக நிலைமையால், வேலை வாய்ப்பற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது.


 தமிழகத்தில் நுழைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையையும்; அவை கொண்டு வரும் மூலதனத்தின் அளவையும் பட்டியல் போடும் தமிழக அரசு, ""சுதேசி'' தொழில்கள்  சிறு, நடுத்தர மற்றும் குடி சைத் தொழில்கள்  பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த உள்நாட்டுத் தொழில்களின் நசிவு பற்றி, அதனால் ஏற்படும் வேலையிழப்பு பற்றித் தமிழக அரசு வெள்ளை அறிக்கையினைக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்போக்கானது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிடும்.
···
 தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறியப்படும் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் பருத்தி அரவை ஆலைகள்தான் (ஜின்னிங் ஃபாக்டரி) பெரும் பங்காற்றி வந்தன. ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பருத்தி அரவை ஆலைகள் அடுத்தடுத்து மூடப்படுவது விஷக் காய்ச்சல் போல் பரவி வருவதால், இந்த ஆலைகளில் வேலை பார்த்து வந்த கிராமப்புற பெண்கள் வேறு வேலை தேடி திருப்பூருக்கும், கோவைக்கும் ஓடுகின்றனர்.


 தூத்துக்குடி மாவட்டத்தில், 1990இல் 46 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இச்சாகுபடி பரப்பு 200405 ஆம் ஆண்டில் 5,090 ஹெக்டேராகக் குறைந்து போனது. இதேபோல், தேனி மாவட்டத்தில் 1990இல் 17 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இது, 200708இல் 834 ஹெக்டேராகக் குறைந்து போனது. பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிதான், தென் மாவட்டங்களில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.


 ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் பருத்தியைப் பயிர் செய்ய ரூ.8,000 வரை செலவு செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு குவிண்டால் பருத்தியை ரூ. 1,600க்கு மேல் விற்று விட முடியாது. பருத்தியின் உற்பத்திச் செலவுக்கு ஏற்பக் கட்டுப்படியாகக் கூடிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காதது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை "மலிவான' இயற்கை மற்றும் செயற்கை பஞ்சோடும் போட்டி போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பருத்தி விவசாயிகள், இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து தப்பிக்க, பருத்தி விவசாயத்தையே கைவிட்டனர். பருத்தி சாகுபடி வீழ்ச்சிக்குப் பின்னுள்ள காரணம் இதுதான்.


 பருத்தி விவசாய வீழ்ச்சியால், தேனி மாவட்டத்தில் மட்டும், பருத்தி கமிசன் மண்டிகளில் வேலை பார்த்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்; பருத்தி மூட்டைகளை மாட்டு வண்டிகளின் மூலம் கொண்டு சென்று வந்த தொழிலாளர்கள்; விளைந்த பருத்தியைப் பறிக்கும் விவசாயக் கூலிகள்; நூற்பாலைகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.


 தென் மாவட்டக் கிராமப்புறங்களில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் மூடப்பட்டதால், அவற்றில் வேலை பார்த்து வந்த இளம் பெண் தொழிலாளர்கள், திருப்பூர்கோவை பகுதியிலுள்ள நூற்பாலைகளுக்கு ""சுமங்கலித் திட்டம்'' என்ற பெயரில் கொத்தடிமைகளாகச் செல்வது அதிகரித்திருக்கிறது.


 உள்நாட்டுத் தொழில்களுக்குத் தேவைப்படும் பருத்தி கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவும் அதேசமயம், இந்தியாவில் விளையும் தரமான பருத்தியை எவ்விதத் தடையும் இன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொள்கையை மைய அரசு கடைப்பிடித்து வருகிறது. உள்நாட்டு பஞ்சாலைகளைத் தற்கொலைக்குத் தள்ளும் இந்த ஏற்றுமதிக் கொள்கை, உலகமயம் என்று நியாயப்படுத்தப்படுகிறது.


 தேனி மாவட்டத்தில் இயங்கி வந்த 30 தனியார் நூற்பாலைகளில் 25 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதற்கும்; மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த மதுரா கோட்ஸ், கப்பலூர் தியாகராஜர் மில்ஸ் உள்ளிட்ட 12 பெரிய நூற்பலைகளில் 10 நூற்பாலைகள் நலிவுற்றுக் கிடப்பதற்கும்; கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் 3,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பஞ்சாலைகளுள் 30 சதவீத ஆலைகள் மூடக்கூடிய அபாயத்தில் இருப்பதற்கும், பஞ்சு கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடும்; வெளிநாடுகளில் இருந்து நூல் இறக்குமதி செய்யப்படுவதும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது. பஞ்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், மதுரை மாவட்டத்தில் மட்டும் இத்தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி யுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 பஞ்சாலை நெருக்கடியால் வேலையிழக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேறு வேலை தேடி கோவைக்கும், திருப்பூருக்கும் ஓடுகின்றனர். ஆனால், அப்பகுதியில் இயங்கி வரும் பின்னலாடைத் தொழிலகங்களும், விசைத்தறிக் கூடங்களும் நூல் விலையேற்றத்தையும், டாலர் மதிப்பு வீழ்ச்சியையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், தென் மாவட்டத்துத் தொழிலாளர்களின் படையெடுப்பு, கூலியைக் குறைக்கும் ஆயுதமாகவும் முதலாளிகளுக்குப் பயன்படுகிறது.


···


 தமிழகத்தில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழில், குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக மெழுகுவர்த்தித் தயாரிப்பிலும் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளன. மெழுகுவர்த்தி தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருளான பாரபின் மெழுகின் விலை, மூன்று மாதத்திற்கொரு முறை உயர்ந்து கொண்டே போவதால், இக்குடிசைத் தொழிலின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது.


 1998க்கு முன்பு வரை தமிழக அரசின் ""சிட்கோ'' நிறுவனம் மூலம், மெழுகுவர்த்தி உற்பத்தியாளர்களுக்கு பாராபின் மெழுகு ""கோட்டா'' முறையில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர், மூலப் பொருள் விநியோகத்தில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமே பாராபினை வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இத்தாராளமயமாக்கத்தின் காரணமாகத்தான் 2007 சனவரியில்
ரூ. 55,013/ ஆக இருந்த ஒரு டன் பாராபின் மெழுகின் விலை, 2008 சனவரியில் ரூ. 65,415/ ஆக அதிகரித்து விட்டது என மெழுகுவர்த்தி உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், இத்தாராளமயமாக்கம்தான் பாராபின் விற்பனையில் பதுக்கலையும், கள்ளச் சந்தையையும் வளர்த்து விட்டிருப்பதாகவும் அச்சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.


 பாராபின், மெழுகுவர்த்தி தயாரிப்புக்கு மட்டுமின்றி, தீப்பெட்டித் தொழில், தோல் பதனிடும் தொழில், பேப்பர் கோட்டிங், தார்பாலின், சோப்பு, கற்பூரம், தரைபாலிஷ் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்களுக்கும் பயன்படுவதால், பாராபின் விநியோகத்தில் மீண்டும் கோட்டா முறையைக் கொண்டு வர வேண்டும் என இவர்கள் கோருகிறார்கள்.


···


 மூலப் பொருளின் விலை உயர்வு மெழுகு தயாரிப்புத் தொழிலை மட்டுமின்றி, தீப்பெட்டி தயாரிப்பு, ஃபவுண்டரி, பேக்கரி உள்ளிட்டு பல்வேறு சிறு தொழில்களின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் தீப்பெட்டிகளில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் தயாராகிறது. சிவகாசிக்கு அடுத்தபடியாக குடியாத்தம் பகுதியில்தான் கையினால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வந்தன. 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வந்த இப்பகுதியில், தீப்பெட்டி தயாரிப்புக்குப் பயன்படும் கந்தகம், மெழுகு, குச்சி ஆகிய மூலப் பொருட்களின் கடுமையான விலை உயர்வினால், தற்பொழுது ஏறத்தாழ 250 தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.


 இயந்திர உற்பத்தியுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டியின் விலை கடந்த பத்தாண்டுகளாக 50 காசுக்கு மேல் உயரவில்லை. இந்த நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியதுபோல அமைந்து விட்டது.

 

···


 இந்தியாவில் இரும்புத் தாது உற்பத்தி தேவைக்கேற்ற விதத்தில் பற்றாக்குறையின்றி நடைபெற்று வருகிறது. எனினும், சர்வதேச சந்தையில் இரும்புத் தாது மூலப் பொருட்களின் விலை 39 சதவீதம் உயர்வடைந்ததற்கு இணையாக, டாடா, எஸ்ஸார், செயில் (Sail) போன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களும் இரும்பின் விலையை உயர்த்திக் கொள்ள மைய அரசு அனுமதி கொடுத்ததால், தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 52,000 சிறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சட்டசபையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.


 இரும்பு மூலப் பொருள் விலையேற்றம் காரணமாக, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ""ஜாப் ஆர்டர்'' வழங்குவதை பெரிய நிறுவனங்கள் நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோவை நகரில் இயங்கி வரும் 15 ஆயிரம் சிறு தொழில் கூடங்களில் 40 சதவீத நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.


 சிறுநடுத்தரத் தொழில்களின் செயல்பாடுகள் பற்றி 200102இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் 89 சதவீத சிறு தொழில்கள் நலிவடையும் நிலைக்குச் சென்று விட்டதும்; அவற்றுள் 69 சதவீத சிறு தொழில்கள் மூடப்படும் நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. சிறு தொழில்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்புகள் தாராளமயத்திற்குப் பின் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டதால்தான், அவை மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டன.


 தி.மு.க. அரசு சமீபத்தில் அறிவித்துள்ள தொழிற் கொள்கை, இந்நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைப் பற்றி ஆராயவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், தங்களுக்கு மின்சாரம் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இக்கோரிக்கையைக் கண்டு கொள்ளாத தி.மு.க. அரசு, 250 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனம் போட்டுத் தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு, 2 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை மின்சார சலுகை அளிக்கப்படும் எனத் தனது தொழிற்கொள்கையில் வாக்குறுதி அளிக்கிறது. தி.மு.க. அரசின் தொழில் கொள்கை என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமைச் சாசனம் என்பதை இந்த உதாரணம் ஒன்றே புரிய வைத்து விடும்.


 வெள்ளைக்காரன், தனது மான்செஸ்டர் துணிகளுக்குப் போட்டியாக இருந்த இந்தியாவின் டாக்கா மஸ்லின் துணிகளை ஒழிப்பதற்காக, அதை நெய்த நெசவாளர்களின் கட்டை விரலை வெட்டி எறிந்தான். தாராளமயத்தின் பின் இந்தியாவினுள் நுழைந்த கோக்கும், பெப்சியும் ""அமைதியான'' முறையில் உள்ளூர் சோடா கம்பெனிகளை ஒழித்துக் கட்டின. ஜவுளி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இருந்து வந்த ""கோட்டா'' முறை ஒழிக்கப்பட்டதால், இந்திய ஜவுளித் துறை நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அயோடின் கலந்த உப்பைத்தான் விற்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட சட்டம், சிறு உப்பு உற்பத்தியாளர்களை சந்தையில் இருந்து ஒழித்துக் கட்டியது. ""பிரெட்'', ரொட்டி விற்பனையில் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உணவுக் கலப்படச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளது.


   காலனிய ஆட்சியில் வெள்ளைக்காரன் டாக்கா நெசவாளர்களின் கட்டை விரலை வெட்டி எறிந்ததற்கும் "சுதந்திர' இந்தியாவில், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாக சிறுநடுத்தர தொழில்கள் ஒழித்துக் கட்டப்படுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?


· ரஹீம்