ஆபாச சினிமாப் பாடல்கள் ஒலிபெருக்கிகளில் எங்கும் எதிரொலிக்க, அனைத்துலகப் பாட்டாளி வர்க்க போராட்ட நாளான மே நாளை, இன்னுமொரு கேளிக்கை நாளாக்கிப் போலி கம்யூனிஸ்டுகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், ""பன்னாட்டுக் கம்பெனிகளையும் அம்பானி டாடா பிர்லாக்களையும் அடித்து வீழ்த்துவோம்! தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்த வேறு வழி இல்லை; இல்லவே இல்லை!'' என்ற முழக்கத்துடன் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.
""விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?'' என்ற சிறு வெளியீடு மற்றும் மே நாள் அறைகூவலைக் கொண்ட துண்டறிக்கைகளோடு, இவ்வமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். வீடுகள், தெருக்கள், கடைவீதிகள், பேருந்துகள், புறநகர் ரயில் பெட்டிகள் அனைத்தும் பிரச்சார மேடைகளாகின. தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான புரட்சிகர அரசியல், மே நாளன்று இவ்வமைப்புகள் நடத்திய பேரணி. பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகளில் எதிரொலித்தது.
பின்னலாடை, ஆயத்த ஆடை, சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், கோவை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இவ்வமைப்புகள் இணைந்து, மே நாளன்று மாலையில், செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களோடு பேரணியை நடத்தின. சாமுண்டிபுரம் சாலை குமார் நகரில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் சீனிவாசன் (ம.க.இ.க) ஆற்றிய சிறப்புரையும் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தன.
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில், தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து திருப்பாப்புலியூர் தேரடி வீதி வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் மே நாள் பேரணியை நடத்தின. ஜெயகாந்த்சிங் (வி.வி.மு), துரை.சண்முகம் (ம.க.இ.க) ஆகியோரின் சிறப்புரைகளும், கலைநிகழ்ச்சிகளும் இன்னுமொரு விடுதலைப் போருக்கு நாடும் மக்களும் ஆயத்தமாக வேண்டிய அவசியத்தை உணர்த்தின.
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் துண்டறிக்கை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி பேருந்து பணிமனையிலிருந்து ராம்நகர் வரை, பாட்டாளி வர்க்கப் பேராசான்களின் உருவப் படங்களுடன் செங்கொடிகளை ஏந்தி, தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிரான முழக்கங்களுடன் வர்க்க உணர்வுமிக்கப் பேரணியை நடத்தின. தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் பெருமளவில் திரண்ட மே நாள் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க மாநிலச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய சிறப்புரையும், ஆன்லைன் வர்த்தகத்தை அம்பலப்படுத்தி சிறுவர்கள் நடத்திய நாடகமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் தனியார்மயம் தாராளமயத்தைப் போராடி வீழ்த்த சூளுரைப்பதாக அமைந்தன.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இயங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து மதுரையில், மேலமாசி வீதிவடக்கு மாசி வீதி சந்திப்பிலிருந்து ஜான்சிராணி பூங்கா வரை எழுச்சிமிகு மே நாள் பேரணியை நடத்தின. பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்யவும், மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்களைப் போராட அறைகூவினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் மதுரை மையம் நாடக இயக்கத்தினரின் நாடகங்களும் போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தன.
திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இயங்கும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருச்சியில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே மே நாள் பொதுக்கூட்டத்தை நடத்தின. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற மாநகராட்சி ஆணையரின் உத்தரவைக்காட்டி, மே நாள் பேரணிக்கு அனுமதி மறுத்தது, திருச்சி நகரப் போலீசு. இருப்பினும், பல்வேறு பகுதிகளிலிருந்து செங்கொடிமுழக்கத் தட்டிகளுடன் பொதுக்கூட்ட மேடையை நோக்கி தோழர்கள் அணிவகுத்து வந்ததே ஊர்வலம் போல் அமைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய தோழர் பரமானந்தம் (பு.மா.இ.மு), அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர் சேகர், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் ராஜு ஆகியோர் விலைவாசி உயர்வுக்குக் காரணமான தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வீழ்த்த அறைகூவினர். இளந்தோழர்களால் நடத்தப்பட்ட புரட்சிகர கலைநிகழ்ச்சி, உழைக்கும் மக்களின் போராட்டத் திசைவழியைக் காட்டி, பெருத்த வரவேற்பைப் பெற்றது.
சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து, சென்னைமணலியில் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து மார்க்கெட் வரை செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, எழுச்சிமிகு முழக்கங்களோடு மே நாள் பேரணியை நடத்தின. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசு, பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் உஷா ஆகியோர் ஆற்றிய சிறப்பரைகள், தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான போராட்ட அரசியலை மக்களின் நெஞ்சங்களில் தீக்கனலாக மூட்டின. பு.மா.இ.மு. கலைக் குழுவும் வேலூர் ம.க.இ.க. பெண் தோழர்களும் இணைந்து நடத்திய கலைநிகழ்ச்சி, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான பிரச்சார இடிமுழக்கமாக அமைந்தன.
— பு.ஜ.செய்தியாளர்கள்