எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது.
இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.
இப்படி சாதியமும், அதன் தத்துவமான இந்துத்துவமும் மனிதத் தன்மையற்றது. இது சகமனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இந்த இந்துத்துவ சாதிய சமூக அமைப்போ, காட்டுமிராண்டித்தனமானது. இதற்கு அடங்க மறுத்து மீறும் போது, அது கொல் என்கின்றது. அனைத்தையும் பார்ப்பான் என்ற ஒரு சாதியின் குறுகிய நலனில் இருந்து தான், இந்த இந்துத்துவக் கோட்பாடு பார்ப்பனியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தான் சாதிய சமூகம்;அடிப்படையான வாழ்வுசார் ஓழுக்கமாக்கி, மனித வாழ்வை இந்துத்துவத்தின் சித்தாந்தமாக்கியுள்ளது.
இந்த வகையில் இது சக மனிதனை வெறு என்று, சாதிய இந்துத்துவம் கற்பிக்கின்றது. சக மனிதனை சாதி மூலம் இழிவாடக் கோருகின்றது. மனிதத் தன்மையற்ற நடத்தைகளையே, தனிமனித ஒழுக்கமாகக் கோருகின்றது. இப்படி சாதிய இந்துத்துவ வாழ்வியலை இயந்திரமயமாக்கி, அது பார்ப்பனியத்துக்கு இயல்பாக சேவை செய்ய வைக்கின்றது.
ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய சிந்தனைகளை, தனது சாதிய பார்ப்பனிய எல்லைக்குள் உள்வாங்கி அதை பாசிசமாக்குகின்றது. சாதியம் ஒரு இந்துவின் தனிப்பட்ட சுதந்திர தெரிவாக காட்டி விளக்குகின்றது. இதை இந்துவின் ஒரு உன்னதமான வாழ்வியல் ஒழுங்காக பண்பாடாக, இது காலகாலமாக நீடித்து மாறாது இருப்பதாக கூறிக்கொண்டு, மற்றவனை ஒடுக்கி அடிமைப்படுத்துகின்றது. இந்த சாதிய-தீண்டாமை என்ற சமூக ஒழுங்கு தான், இந்துத்துவம். இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏற்று நடப்பது தான், இந்தியாவின் ஜனநாயகம் என்கின்றனர். இதை சகிப்புத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தின், இயற்கையான இயல்பு என்கின்றனர்.
இப்படி சாதிய-தீண்டாமை என்னும் இந்தப் பார்ப்பனிய கொடூரத்தை, கொடுங்கோன்மையையும், இயல்பானதும் இயற்கையானதுமான ஒரு ஜனநாயக சுதந்திரமான வாழ்க்கை முறை என்பதே அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத்தனம், சமூகத்தின் எல்லாக் கூறுமாகிவிட்டது பார்ப்பனியம். இதை நியாயப்படுத்தி, அதைக் கண்காணித்து, அதை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த இழிவான செயலுக்காக பார்ப்பனியம் வெட்கப்படுவதில்லை, மாறாக இதுவோ அவர்களின் வாழ்வின் குறுகிய நலன்களாகி விடுகின்றது.
சாதிய சமூக அமைப்பில் சாதி உயர்வு மூலமான சொர்க்கம், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவனின் இழிநிலையி;ல் இருந்து தான் கிடைக்கின்றது. இதனால் சாதியில் உயர்ந்தவன் தாழ்ந்தவனை ஒடுக்குவது இயந்திரத் தன்மை வாய்ந்த ஒன்றாகவும், வாழ்வியல் பண்பாகவும் மாறுகின்றது. இந்த காட்டுமிராண்டித்தனமான இந்த இழிவாழ்வை நியாயப்படுத்த, தனக்கான பாசிசத் தத்துவங்களை உற்பத்தி செய்கின்றது. தனக்கு கீழ் மனித இழிவையும், மனித அடிமைத்தனத்தையும் உருவாக்க, உயர்வையும் தாழ்வையும் சதா மனித வாழ்வியல் மீது புனைகின்றது. இதை இயற்கை என்கின்றது. இதையே அது இந்திய ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றது.
இவை அனைத்தையும் சாதியின் உச்சியில் இருக்கின்ற பார்ப்பான், தன் சொந்த நலனில் இருந்து தான் சாதிய–தீண்டாமை சமூக கட்டமைப்பையே கட்டமைத்தான, கட்டமைக்கின்றான்;. இதற்காகவே அவன் தனது பார்ப்பனிய மதத்தை இந்து மதமாக்கினான்.
இந்திய சமூகத்தில் நிலவிய அனைத்துப் பண்பாடுகளையும், அனைத்து வழிபாட்டு முறைகளையும், ஏன் கடவுள் இல்லை என்ற கோட்பாடுகளையும், மொத்தத்தில் அனைத்து சிந்தனைகளையும், அழித்ததும் திரித்ததும் அவற்றை உட்செரித்ததன் மூலமும் தான், சாதியத்தை வலியுறுத்திய பார்ப்பனிய மதத்தை இந்துத்துவமாக்கினர்.
இதறகாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியும், அதிகாரத்தில் இருந்தவர்களைப் போற்றியும் தூற்றியும் தான், சாதியத்தை இந்திய சமூக அமைப்பில் மெதுமெதுவாக திணித்தனர். இப்படி நஞ்சை சிறுக்கச்சிறுக்க கொடுத்து, சமூகத்தின் மொத்த உடலையும் சாதியம்-தீண்டாமை மூலம் நஞ்சாக்கினர். இதன் பின் இருந்ததோ, பார்ப்பன சாதியின் நலன்கள் தான்.
வரலாறு தெரிந்த காலம் முதல் இதற்கென்று ஒரு வரலாறு உண்டு. ஆரியர் முதல் இன்றைய பார்ப்பனிய இந்துத்துவம் வரை, இதற்கு ஒரு நீடித்த தொடர்பும் தொடர்சியும் உண்டு. இதற்கு எதிரான போராட்டமும் உண்டு.
இந்திய வரலாற்றில் சாதியை சமூகத்தின் ஒரு இயங்கியலாக இணைக்கப்பட்ட விதம், சதியையும் சூழ்ச்சியையும் ஆதாரமாக கொண்டது. இதற்கு நஞ்சுத்தன்மை கொண்ட பார்ப்பனனின், பார்ப்பனிய நச்சுப் பண்பாடும், அது உருவாக்கிய குரூரமான குறுகிய குணாம்சமும் உறுதுணையாக இருந்துள்ளது. வர்க்க அமைப்;பை, அண்டி வாழும்; அற்ப சுரண்டல் குணாம்சம் கொண்ட பண்பாடு, பார்ப்பன சாதியின் நீடித்த ஒரு சமூகக் கூறாக இருந்து வந்துள்ளது.
இங்கு அறிவால் அல்ல, சூதாலும், சூழ்ச்சியாலும், சதியால் இந்திய சமூக அமைப்பை சாதிய அமைப்பாக தனக்கு கீழ் அடிமைப்படுத்தியவர்கள்; பார்ப்பனர்கள். இங்கு வீரத்துக்குப் பதில், கோழைத்தனமான அற்ப புத்தி சதியாக, அது சமூகத்துக்கு எதிரான சூழ்ச்சியுமாகியது. இதன் மூலம், தனக்கு கீழ், சாதி பிரிவுகள் கொண்ட சமூகமாக சமூகத்தை அடிமைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்;. உழைத்து வாழ மறுத்து, மற்றவன் உழைப்பை திருடி வாழ முனையும் ஆரிய-பார்ப்பனக் குணத்தாலும் பண்பாட்டாலும், சமூகத்தை தனக்கு கீழ் அடிமைப்படுத்தியவர்கள். அதிகாரத்தில் உள்ளவனையெல்லாம் நக்கி வாழும் தனது அற்ப குணத்தால், மக்களின் முதுகில் குத்தியவர்கள் பார்ப்பனர்கள். இதன் மூலம் தான், தனக்கு கீழ் சாதி சமூகமாக சமூகத்தை அடிமைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்.
ஒரு நாட்டில் அல்லது சமூகத்தினுள் வந்தேறு சமூகங்கள், வந்தேறு குடிகள் பல உலகெங்கும் இருந்துள்ளது. இதுபோல் தான் இந்தியாவிலும். வந்தேறிகளின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இந்திய பண்பாட்டுக் கலாச்சாரத்துடன் கலந்து, அவை கரைந்து போனது உண்டு.
ஆனால் பார்ப்பனிய பண்பாடு கலாச்சாரம், அப்படியல்ல. அது மனித குலத்தை தனக்கு ஏற்ப பிரித்;தும் பிளந்தும் இழிவாடியது. இது முதலில் தன்னை வேறுபடுத்தியது. அடிப்படையில் இந்தப் பிளவு நீடித்த ஒன்றாக, நிலைத்த ஒன்றாக ஆரியர்-பார்ப்பன வடிவில் இன்று வரை நீடிக்கின்றது.
1. முதலில் (ஆரியர்) அது தன்னை மற்றவனில் இருந்த வேறுபடுத்த நிற வருணத்தை முன்வைத்தது.
2. இந்த நிற வருணம் வர்க்க அமைப்பில், நிறத்துடன் கூடிய வர்க்க வருணமாகியது.
3. நிறத்துடன் கூடிய வர்க்க வருணம், தொழில் சார்ந்த வர்க்க வருணமாகியது .
4. தொழில் சார்ந்த வர்க்க வருணம், தனது வருண நிற அடையாளத்தை இழக்க இது வர்க்க சாதியமாகியது. இங்கு வருண அடையாளத்தை, வர்க்கம் மேவுகின்றது.
5. வருணத்தை இழந்த வர்க்கத் தொழில்சார் சாதியம், மேலும் தொழில் பிரிவினையால் தீண்டாமையை அடிப்டையாக கொண்ட வர்க்க சாதியமாகியது
இப்படி முதலில் நிற வருண பிளவை பேணியது. இதைப் பேண முனைந்த அடிப்படையில் தான், சமூகம் சாதிய-தீண்டாமை வர்க்கப் பிளவாக்கியது. இதற்குள் தான் தொழில்சார் வர்க்கப் பிளவுகள் உருவாகியது. இதற்கென்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.
ஒன்றில் இருந்து ஒன்றும், திரிந்தும், பல இடைப்பட்ட வழித்தடங்கள் ஊடாகத் தான் இன்றைய சாதிய-தீண்டாமையை அடிப்படையாக கொண்ட சாதி சமூக அமைப்பு உருவாகியுள்ளது. வரலாற்றில் ஆரியம் பார்ப்பனியமாகி, இன்று பார்ப்பனியம் இந்துத்துவமாகி விட்டது.
நிற வருணம் சாதிய தீண்டாமைச் சமூகமாக மாறிய வரலாறு எங்கும், பார்ப்பன நலனை அடிப்படையாக கொண்ட சிந்தனை, செயல், நடைமுறை உண்டு. இதற்கு சித்தாந்தம், கோட்பாடு உண்டு. அது இந்துத்துவமாக உள்ளது. இந்தப் பார்ப்பன நலன்கள் சமூகமயமாகி விட்டதால், இது பார்ப்பனியமயமாகி விடுகின்றது. இது வெறுமனே பார்ப்பன சாதிய நலனைக் கடந்து, சமூகத்தின் மற்றவனை அடக்கியாளும் ஒரு பிரிவின் நலனுமாகி விடுகின்றது. நிற வருணப் பிளவு வர்க்கப் பிளவாக மாறியது முதல், இது வெறும் பார்ப்பன சாதிய நலனாக மிகக் குறுகிய எல்லையில் இயங்கவில்லை. அது பன்முகத்தன்மை கொண்ட ஒன்றாக, மக்களை அடக்கியாளும் பிரிவின் மொத்த நலனுமாக இயங்குகின்றது. ஆளும் வர்க்கமாக, ஆளும் அனைத்துப் பிரிவின் சமூக அங்கமாக, சாதியம் அடிப்படையாக கொண்ட பார்ப்பனியம் கோலோச்சி நிற்கின்றது. நிலவும் சுரண்டல் அமைப்பின் நெம்புகோலாக, பார்ப்பனியம் இயங்குகின்றது. இதை வெறுமனே பார்ப்பன சாதிக்கு எதிராக மட்டும் காட்டுவது, கட்ட முனைவது கூட உள்ளடக்க ரீதியாக பார்ப்பனியம் தான்.
இது பார்ப்பனியம் இயங்கும் விரிந்த சமூகத் தளத்தை மூடிமறைப்பதாகும். இது உருவாக்கி வைத்திருப்பது சாதிய– தீண்டாமை இந்துத்துவ சுரண்டல் சமூகத்தை என்பதை மறுத்தலாகும்.
இதனால் தான் ஆரியர் யார், பார்ப்பான் யார் என்ற கேள்வியும், போராட்டமும், பிளவும், ஆய்வும் இந்தியா மற்றும் சாதிய அமைப்பு நிலவும் சமூகங்களில் இன்று வரை நீடிக்கின்றது. இந்த ஆரிய வழிவந்த சுரண்டல் பார்ப்பனியத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமை இந்துத்துவ சமூகத்தை யாராலும் மாற்றமுடியாது.
மனிதனை மனிதன் மதிக்கின்றதும், ஏற்றத்தாழ்வை களைகின்றதுமான போராட்டம், இயல்பில் பார்ப்பனியத்துக்கும் இந்துமதத்துக்கும் எதிரானது. எந்தப் போராட்டமும் இதை உள்ளடக்காத வரை, ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்ற நடைமுறைகளையும் கோட்பாடுகளையும் ஏதோ ஒருவிதத்தில் தம்முடன் கொண்டிருப்பர்.
பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டம் என்பது, இந்த ஆரிய வழி பார்ப்பனியத்துக்கு எதிரானது. இன்று இது இந்துத்துவத்துக்கு எதிரான வடிவில் நீடிக்கின்றது.
பார்ப்பனிய சாதிய இந்துத்துவ கொடுமைகளும், கொடூரங்களும் தான், பார்ப்பனியத்தின் நேரடியான பிரிவாக தம்மை தக்கவைக்கும் பார்ப்பானுக்கு எதிரான ஒரு போராட்டமாக சாராம்சத்தில் உள்ளது. தம்மை பார்ப்பான் என்று சாதிய அடையாளம் மூலம் பார்ப்பனியத்தை உயர்த்திக் காட்டுபவன், வெறுக்கத்தக்க ஒரு சமூகப் பிரிவாக தம்மை அடையாளப்படுத்துகின்றான். இதேபோல் தான், தன்னை உயர்ந்த சாதியாக பிரகடனப்படுத்துபவனும், அதே அளவுக்கு வெறுக்கத்தக்க சமூகப் பிரிவாக உள்ளான்.
இப்படி எங்கும் பார்ப்பனியம் பல முகத்துடன்;, சாதிய வடிவில் ஒரு சாதிய இழி குணத்துடன் தன்னை தக்கவைக்கின்றது. அனைத்து வகையான சமூக இழிவுகளின்; மொத்த வடிவில், அது தன்னை பிரகடனம் செய்கின்றது. இது சுரண்டும் வர்க்கமாக, உலகமயமாக்கலாக, தாராளமயமாக்கலாக, தனியார்மயமாக்கலாக, ஏகாதிபத்தியமாக, நிலப்பிரபுத்துவமாக, தரகுமுதலாளிகளாக, காலனித்துவமாக… என அனைத்து மக்கள் விரோத வடிவிலும் பார்ப்பனியம் தன்னை வெளிப்படுத்துகின்றது. சாதியைக் கொண்டு மக்களை பிரித்தும் பிளந்தும், இழிவாடியும் வன்முறை மூலம் ஒடுக்குகின்றது.
இப்படி மக்களைப் பிளந்தும், மக்களை ஒடுக்கியும் வாழ்கின்ற ஒன்றாக எப்போதும் பார்ப்பனியம் இருப்பதால், அது எப்போதும் எங்கும் மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. இதனால் அது எப்போதும் எங்கும், மக்களுக்கு எதிரான சக்திகளுடன், மக்களை ஒடுக்குகின்ற பிரிவுகளுடன் சேர்ந்து தான் நிலைத்து நீடிக்க முடிந்தது. இதன் மூலம் அது தன்னை ஒரு பார்ப்;பனிய சாதிய தத்துவமாக, இந்துத்துவ மதமாக உயிர் வாழவைக்கின்றது.
இந்த சாதிய-தீண்டாமை சமூக அமைப்பான இந்துத்துவ பார்ப்பனியம் எங்கிருந்து? எப்படி? எந்த வழிகளில்? எது? உருவாகியது. அதையே இந்த நூல் உங்களுடன் சேர்ந்த ஆராய முற்படுகின்றது.
பி.இரயாகரன்
08.06.2008
(குறிப்பு : சாதி இந்துத்துவ சமூகம் அமைப்பு எழுதியவற்றில் இருந்து, மிக விரைவில் வெளிவரவுள்ள முதலாவது நூலின் முன்னுரை இது. இந்த முன்னுரை அச்சாகும்வரை திருத்தத்துக்கு உள்ளாகும்.)