Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _5.jpgமனித முரண்பாடுகள் இயற்கை தோற்றுவித்தவையல்ல. இயற்கையில் நீ சிறியவன் - நான் பெரியவன் என்றோ, ஏழை, பணக்காரன் என்றோ, ஆண் - பெண் என்றோ... பிளவுகள் அற்ற பரிணாமத்தின் தேர்வில்; மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கியவுடன், உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது. இந்த இயற்கையின் மீதான உழைப்பினால் ஏற்பட்ட, உற்பத்தியின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பிளவுகள், இயற்கையையும் மனிதனையும் அடிமைப்படுத்த, சமுதாயத்தின் இயற்கைப் பிளவுகள் மனிதப் பிளவுகளாகி அடிமைத்தனத்துக்கும், சுரண்டலுக்கும் வித்தி;ட்டன.


மனிதனின் நவீனக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதனை மேலும் மேலும் அடிமைத்தனத்துக்குள் இட்டுச் செல்ல, சிலர் அதை அனுபவிக்கும் போக்கில் வளர்ச்சி பெற்ற சமுதாயம், தனக்குள் முரண்பாட்டைக் கொள்வதும் போராடுவதும் மனித வரலாறாகியது. இப்போராட்டங்கள் என்பது இல்லாதவன் தனது அதிகாரத்தின் ஊடாகப் புதிதாகப் பெறுவதைக் குறிக்கோளாக, இருப்பவன் மீது அதிகாரத்தை நிறுவுவதாகவே எப்போதும் இருந்துள்ளது.


மனிதச் சமுதாயத்தில் மனிதனை அடிமைப்படுத்திய போக்கில் ஆண் - பெண்ணையும், உழைக்கும் வர்க்கத்தை - உழைக்காத வர்க்கமும், உயர் சாதி - தாழ் சாதிகள் மீதும், வெள்ளை ஆதிக்க நிறவாதம் - கறுப்பு நிறவாதம் மீதும்.. .. என பல தளத்தில் வளர்ச்சி பெற்ற மனித அவலங்களை ஒழித்துக்கட்ட, வரலாற்றில் நடந்த பல ஆயிரம் போராட்டங்கள் மற்றும் போர்களினால் அவை முடிவுக்குக் கொண்டுவந்துவிடவில்லை. மாறாகப் புதிய ஆளும் வர்க்கம் மீண்டும் அதே வழியில் தொடர்வதும், மீண்டும் போராட்டங்கள் பல்வேறு கோட்பாட்டு உள்ளடக்கத்துடன் தொடர்வதுமாக மனித வரலாறு நீடித்து வந்துள்ளது.


மனிதனின் வாழ்க்கையைச் சுற்றி பிணைந்துள்ள அவலங்கள், தீர்க்கமுடியாத சிக்கல்களைச் சந்தித்த போராட்டங்கள் மீதான தீர்வு என்ன என்பதே, மனிதனின் உண்மையான, சந்தோசமான வாழ்வுக்கான உத்தரவாதத்தை வழங்கும். இந்தப் பேருண்மையை மனிதன் புரிந்து கொள்ள முயன்றான். இந்த நிலையில் மனிதன் இப்படியே இயற்கையில் இருந்தான் அல்லது இவை முன் பிறப்பின் தொடர்ச்சி அல்லது கடவுளின் செயல் எனப் பற்பல விளக்கத்தின் ஊடாக இயற்கை பற்றியதும் மனித அவலம் பற்றிய விளக்கங்கள், மனிதனின் அவலத்தைப் போக்குவதற்குப் பதில் தொடரவே வழிவகுத்தது.


இந்த நிலையில் இயற்கை பற்றி, இயற்கையில் மனிதனின் பரிணாமம் பற்றிய அறிவியல், மனித அவலத்தின் காரணத்தைப் புரிந்துகொள்ள அடிப்படையான இயங்கியலாக இருந்தது. இந்த வகையில் மூன்று முக்கியமான கண்டு பிடிப்புகள் உலகை வேறு ஒரு கோணத்தில் இருந்து மனித அவலத்தின் காரணத்தை அறிந்து கொள்ள வழி காட்டியுள்ளது.


அவைகளில் முதலாவதாகச் சார்லஸ் டார்வின் எழுதிய''உயிரினங்களின் தோற்றம்" என்ற நூலின் ஊடாக உயிரினத் தோற்றம் பற்றிய இயற்கை சார்ந்த கண்டு பிடிப்பு இதற்கு முந்தைய உலகத்தின், உயிரின் தோற்றம் பற்றிய விளக்கத்தைத் தலைகீழாக்கியது.


இரண்டாவது கண்டுபிடிப்பாக மார்கன் எழுதிய''பண்டைய சமுதாயம்" நூல் ஊடாகக் குடும்பங்கள் மற்றும் சமுதாய வளர்ச்சியை, உழைப்பு பற்றிய வளர்ச்சியை இயற்கை சார்ந்து கண்டுபிடித்தார். இந்த இரு கண்டு பிடிப்புகளும் பலத்த எதிர்ப்பை உலகளவில் சந்தித்தது மட்டும் இன்றி பாடசாலைகளில் கற்பிப்பதற்குக் கூட தடைவிதிக்கப்பட்டது. டார்;வின் கண்டுபிடிப்பை எதிர்த்து''600க்கு மேற்பட்ட அறிவியல் துறையினர் பைபிளின்"9 மீது நம்பிக்கை தெரிவித்து டார்வினைத் தூற்றினர்.


மூன்றாவது கண்டு பிடிப்பாக மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் உபரி மதிப்பைக் கண்டுபிடித்து, பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைமுறையாக இயற்கை சார்ந்து உலகை ஆராயப்பட்டது. இதில்; குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற ஏங்கெல்சின் நூல் மார்கனின் கண்டுபிடிப்பை ஒட்டி மேலும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் உலகை விளக்கியபோது, ஆணாதிக்கச் சுரண்டல் தனிச்சொத்துரிமை உலகம் எங்கும் அதிரத்தொடங்கியது. இவை இன்று வரை சமுதாயத்தில் இரு பெரும் பிளவுக்குள் உள்ளதுடன், கடும் எதிர்ப்புக்குள்ளாகிய வண்ணம் உள்ளது.


இந்த மூன்று கண்டுபிடிப்புகள் தான் இயற்கை மற்றும் மனிதனின் இயற்கையை, வரலாற்று இயங்கியல் வளர்ச்சியை மிகத் துல்லியமாக மனிதனுக்கு முன் கொண்டுவந்தது. இந்த இயங்கியல் வளர்ச்சியின் போக்கில் மனிதனின் தோற்றம், வளர்ச்சி முதல் இன்றைய அவலங்கள் வரைக்கான காரணக்காரியங்களை விளக்கவும் புரியவைக்கவும் முடிந்தது. அதேநேரம் இந்த அவலத்தின் காரணத்தைக் களையவும், அதை இயற்கை சார்ந்த மனித வாழ்வு ஊடாக இனம் கண்டு களையவும் வழிகாட்டக் கூடியதாக இன்று நாம் உள்ளோம்.


ஆணாதிக்கத்துக்குள்ளான பெண் மீதான அடிமைத்தனத்தை, இயற்கைக்கு வெளியில் தனிச்சொத்துரிமை சுரண்டல் ஆதிக்கக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவுகள் மூலம் நியாயப்படுத்தப்பட்ட இன்றைய போக்கை, இந்த மூன்று கண்டு பிடிப்புகளும் இயற்கை சார்ந்து மறுதலித்தது.


இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த பெண்- ஆண் சமூகத்தில் வளர்ச்சி பெற்ற உழைப்பும், இயற்கையிலான உழைப்புப் பிரிவினையும், இதனால் வளர்ச்சி பெற்ற உபரியின் அதிகரிப்பும், ஆணுக்குச் சாதகமாக மாறிய இயற்கையின் விளைவால், ஆண் உபரியைத் தனிச்சொத்துரிமையாக்க, சமூகக் கூட்டு வாழ்வில் வாழ்ந்த பெண் சொத்துரிமை மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானாள்.


இயற்கையிலேயே ஆண் - பெண் பாலியல் தேவைகள் புறநிலை சாராது இயற்கையின் போக்கில் இருந்த வளர்ச்சி என்பது, தனிச்சொத்துரிமையின் போக்குடன் சமூகத் தன்மையை இழந்து, அதன் முதன்மையில் பெண் மீதான அதிகரித்த ஆணின் நுகர்வு வேட்டை ஆரம்பமாகியது. பெண்ணை அடையும் போட்டாபோட்டி அல்லது அனுபவிக்கும் வேட்கை என்பது, ஆண் - பெண்ணுக்கிடையில் வரைமுறையற்ற புணர்ச்சி இருந்த போதும் இது ஆணின் ஆதிக்கத்துக்கு சார்படையத் தொடங்கியது. தனிச் சொத்துரிமையென்பது இயற்கை, சமூகச் சூழல், மற்றைய உயிரினங்கள், மனித இனம் எதையும் மறுத்து உருவாகும் போக்கில் உருவானவை என்பதால், அவை தன்னளவில் பெண் மீதான பாலியலில் ஆதிக்கத்தைக் கோரியது. பெண்ணின் தேர்வுக்கும், உணர்வுக்கும் பதில், பெண்ணைத் தனிச் சொத்துரிமையின் ஆதிக்கத்துக்குள்ளான தீர்மானகரமான விடயமாகத் தனிச் சொத்துரிமை பார்க்கத் தொடங்கியது.


இதன் போக்கில் வரைமுறையற்ற பாலியலில் பெண் பலரின் பாலியல் விருப்பைப் பூர்த்தி செய்தல் அல்லது போட்டியின் இடையே பந்தாடப்படுதல் அல்லது பாலியலில் இருந்து ஓரம் கட்டப்படுதல் அல்லது ஒருவரின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிதல் என்ற தனிச்சொத்துரிமையின் குணாம்ச வெளிப்படுத்தலுக்கு, பெண்ணின் வரைமுறையற்ற புணர்ச்சிப் போக்கில் ஆண்களின் சொத்தாக, உரிமையற்ற, தேர்வு அற்ற பாலியல் பண்டமாக இருக்க பெண்ணைக் கோரியது.


இந்த இடத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியில் இருந்து பெண் ஒருதாரத் திருமணத்துக்கு வந்துவிடவில்லை. அதை வந்தடையும்; போக்கில் பல மாறுதல் கட்டத்தைக் கடந்து வரவேண்டியிருந்தது. இவைகளை ஒட்டிய விளக்கம் புணர்ச்சியும் குடும்பமும் என்ற தலைப்பின் கீழ் ஆராயப்படுகின்றது. அல்லாது திடீரென மாறியதாகப் பார்த்தால் வரலாற்று இயங்கியல் வளர்ச்சியை மறுப்பதில் தொடங்கி தவறான முடிவுக்கே வந்துநிற்போம்.


இந்த நிலையில் தனிச்சொத்துரிமை தோன்றி வளர்ச்சி பெறத் தொடங்கிக் கொண்டிருந்த மனித வரலாற்றில், கூட்டு வாழ்க்கைக்கும் தனிமனித வாழ்வுக்குமிடையிலான முரண்பாடு ஜீவமரணப் போராட்டமாகத் தொடங்கியது. இது வாழ்க்கை ஆதாரமான அனைத்தின் மீதும் தனிச் சொத்துரிமை சமூகத்துக்கு வெளியில் சலுகையைக் கோரியது. இந்தப் போராட்டத்தில் தனிச்சொத்துரிமை சார்ந்து பெண்ணின் தேர்வு, உரிமை ஆணாதிக்கத்தால் மறுக்கப்பட்டது. ஆணாதிக்கத்துக்கிடையில்; பெண் சிக்கி கொண்டிருந்தபோது, பெண் தனது சொந்தத் தேர்வைத் தனிச் சொத்துரிமைக்கு எதிராக, தனது தனித்த தேர்வாகக் கோருவதற்குப் போராட்டம் இட்டுச்சென்றது.


பல ஆண்களின் போட்டியில் இருந்து தப்பிக்கவும், பாலியல் வன்முறையில் இருந்து தனது கற்பைப் பாதுகாத்து (இங்கு கற்பு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை ஒட்டிய விளக்கத்தை அதாவது ஆணாதிக்கமே ஆதரித்தும், எதிர்த்தும் மாறுபட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை பொருளாதார நிலைக்குள்ளான கோரிக்கையாக உள்ளது என்பதையும், இது பெண்ணின் ஆணாதிக்கத்துக்கு எதிரான கோரிக்கையாக இருந்தது, இருக்கின்றது என்பதையும், கற்பு எப்படி திரிந்து விளக்கம் பெற்றது என்பதையும், கீழே கற்பு பற்றிய தனிப் பகுதி விரிவாக ஆராய்கின்றது.) விலகி வாழவும், பெண் தனது உரிமையைத் தனது சொந்தத் தேர்வு மற்றும் உரிமையூடாகப் பெண், ஆணைத் தெரிவு செய்வது பரிணாம வளர்ச்சியாக ஒருதார மணமாகப் பொருளாதார வளர்ச்சியின் போக்காக்கியது.


பெண்ணின் இத்தெரிவு என்பது கூட வரைமுறையற்ற புணர்ச்சியின் அங்கமாக வளர்ச்சி பெற்றது. பெண் மீதான தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணின் உரிமை மற்றும் தேர்வு போன்றன, ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் தனித்த பல தேர்வைக்கூட படிப்படியாகக் கைவிட நிர்ப்பந்தித்தது. அதாவது ஆணினதும் பெண்ணினதும் உரிமை மற்றும் தேர்வு பற்றிய கண்ணோட்டம், ஒன்றில் இருந்து ஒன்று விலகி அதாள பாதாளத்தில் விழுந்தது. பெண் தனது சொந்தப் பாதுகாப்பு கருதி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஆணின் தேர்வை நாடுவதை, சமூக இயக்கம் படிப்படியாக ஆண் சார்ந்து தேர்ந்தெடுப்பதாக நிர்ப்பந்தித்தது.


பெண் தனது உரிமை, தேர்வைத் தக்கவைக்க ஒரு ஆணைத் (இந்தத் தேர்வு என்பது வாழ்க்கை பூராவும் ஒரு ஆணையல்ல, மாறாகப் பெண் விரும்பும்போது தேர்ந்து வாழும் ஒரு ஆணைக் குறிக்கின்றது) தேர்ந்து எடுத்த போக்கானது, படிப்படியாகத் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியுடனான சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய நியாயப்படுத்தலூடாக ஒரு ஆணைத் தெரிவு செய்து வாழ்க்கை பூராவும் வாழும் குடும்பத் தோற்றத்துக்கு வழிவிட்டது. கடந்த கால இலக்கியத்தில் பெண் வீரமான ஒருவனைப் போட்டியின் ஊடாகத் தெரிவு செய்யும் வழக்கம் நிலவியதையும் காண்கின்றோம். இது பெண் தனது தெரிவைத் தக்கவைத்த வரலாற்று வளர்ச்சியின் ஒருபகுதியாக நீடித்ததைக் காட்டுகின்றது.


இந்த ஒருதாரமணத் தெரிவை ஒட்டி ஆண் திருப்தி கொள்ளவில்லை. ஆண் தனது பலதார மண வேட்கையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். பெண் தனது உரிமையையும் தேர்வையும் கற்பையும் தக்கவைக்கவும், ஆணிடம் இருந்து தப்பவும் ஒருதாரத் தெரிவை நாடும் நடைமுறை வளர்ச்சி பெற, மற்றொரு பகுதிப் பெண்கள் வழமையான வரைமுறையற்ற புணர்ச்சியை நடைமுறையில் கொண்டிருந்தனர். இந்த எதிர் நிலை முரண்பாடுகள் என்பது தனது போக்கில் வளர்ச்சி பெற்றது.


தனிச்சொத்துரிமையின் ஆணாதிக்க வளர்ச்சி இதைத் தனது பொருளாதார ஆதிக்கத்துக்கு ஊடாக அணுகியது. பெண்கள் தமது உரிமை, தெரிவைத் தக்கவைக்கத் தேர்ந்த வழிகளை ஆணாதிக்கத்திடம் உள்ள பொருளாதாரப் பலத்துக்கு முன்னால் தக்க வைக்கமுடியவில்லை. அதைத் தனிச்சொத்துரிமை தனது தளத்திலும் தனக்கிசைவாக மாற்றிய போக்குதான் பெண் தனது உரிமையை இழக்கவும், தேர்வை இழக்கவும் காரணமாகியது.


பெண்ணின் தனித்தேர்வை ஆண் தனது தனிச்சொத்துரிமையின் வாரிசை உருவாக்கவும், பெண்ணைச் சொத்தாகவும், தனது தனிச் சொத்துரிமையின் அடிமையாகவும், தனிச்சொத்துரிமையின் முன்னால் பெண்ணைத் தனது சொந்தப் பாலியல் நுகர்வுக்குரிய ஒரு பொருளாகவும் அடிமைப்படுத்தியதன் மூலம் ஆணாதிக்கச் சொத்துரிமைச் சமூகம் தனிச் சொத்துக்குரிய வரலாற்று இயங்கியலுடன் வளர்ச்சிபெற்றது.


மறுபுறத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியில் பெண்ணின் தேர்வு, உரிமையைத் தனிச்சொத்துரிமையுடன் கூடிய ஆணாதிக்கம், ஒருதாரத் தெரிவுக்கு எதிரானதாக முன்நிறுத்தி, பழைய ஆணின் உரிமையைப் பாதுகாக்க பொதுமகளிர் முறையை வளர்த்தது. இது இன்று விபச்சார வடிவத்தில் நாம் அடையாளம் காணமுடியும். இந்தியாவில் தேவதாசி முறை போன்று, பல்வேறு சமூகத்தில் இவை அமுல் செய்யப்பட்டன.


இந்த இரு போக்குகளிலும் பெண்ணின் தேர்வு, உரிமையைத் தனிச்சொத்துரிமை பெண்ணுக்கு இல்லாது ஒழித்தது. பெண்ணின் நிலையைத் தரம் தாழ்த்திய தனிச்சொத்துரிமை பெண்ணைப் பாலியல் உற்பத்தியின் நுகர்வு மையமாகவும், ஆணுக்குச் சேவை செய்யும் அடிமையாகவும், ஆணின் வாரிசை உருவாக்கும் இயந்திரமாகவும், பெண்ணின் உழைப்பை உபரியாகவும் மாற்றிய சமூகப் பொருளாதார அமைப்பு (இங்கு அந்த உபரிக்கான நேரடியான சமூகப் பெறுமானம் மறுக்கப்பட்டது) அதைப் பெண்ணுக்கு மறுத்தும், சொத்துரிமை சார்ந்து பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கியது. இதுவே பொதுவான ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டமாக வளர்ச்சி பெற்றது.


சமுதாய வளர்ச்சியில் ஆணாதிக்கப் போக்கில் தனிச் சொத்துரிமை மீதான உரிமையை; தனிச்சொத்துரிமையின் ஆணாதிக்க எல்லைக்குள் பெண் கோரிய போக்கில், அதன் வெற்றிகளினால் சமூகப் பொருளாதார வடிவங்கள் கேள்விக்குள்ளாகியது. டார்வின், மார்கன், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்சின் கண்டுபிடிப்புகள் உலகைப் புதிய வழியில் விளக்கி நிறுவி பழைய அறிவியலைத் தகர்த்தது. இதை ஈடுகட்ட இதில் இருந்து விலகி, நிலவி வந்த பொருளாதார, பண்பாட்டு, கலாச்சாரப் புனைவுகள் எல்லாம், தனிச் சொத்துரிமையைப் பெண் பெறத் தொடங்கியபோது மேலும் அவையும் ஆட்டம் காணத்தொடங்கியது. பெண்ணின் தோற்றம், வளர்ச்சி, அடிமைத்தனம் என்பவற்றை மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளும், சமுதாயத்தில் நிலவிய அனைத்து மதிப்பீட்டையும் கேள்வி கேட்டு தகர்த்த போது, புதிய சமூக மதிப்பீடுகள் உருவாயின.


ஆனால் ஆணாதிக்கத்துக்குள் பெண் தனிச்சொத்துரிமை மீதான உரிமையை ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையிடம் போராடிப் பெற்று வரும் இன்றைய சமூகப் போக்கில் (இங்கு சமூகத்தின் சொத்துரிமை பொதுவாகப் பறிக்கப்படுகின்றது. ஆனால் தனிச்சொத்துரிமை சூறையாடும் ஜனநாயகம் பெண்ணுக்கும் விரிவாகின்றது, பெண் மதிப்பீடுகள் இருந்து வந்த வழிகளில் இருந்து மாற்றம் பெற்றுள்ளது.


பெண் தனிச்சொத்துரிமை சார்ந்தும், அந்த ஜனநாயகம் சார்ந்தும் உரிமையையும் தேர்வையும் கோருவது என்பது எதார்த்தமாகியது. தனிச் சொத்துரிமை சார்ந்த உரிமை பற்றியும், தேர்வு பற்றியும் சமூகப் போக்கு புதிய முரண்பாட்டை இதற்குள் உருவாக்கியுள்ளது.


இந்தப் போக்கில் தனிச் சொத்துரிமை பறிக்கப்பட்ட ஆண் - பெண் என்ற மக்கள் கூட்டம் ஒரு சமூகமாகவும், சொத்துரிமை கொண்ட புல்லுருவிகள் அந்த சமூகத்துக்கு எதிரான ஒரு கூட்டமாகவும் சமுதாயம் பிளவுற்று வளர்ச்சி பெற்று வருகின்றது.


சுதந்திரமான உழைப்பாளியாகத் தனிச் சொத்துரிமை உருவாக்கிய போக்கில் அதன் சமூகக் கூறுகளை ஜனநாயகமாக இனம் கண்டு கொள்ளும் வாழ்வில், தனிச்சொத்துரிமையை, ஜனநாயகச் சுதந்திரத்தின் வழியில் பறிக்கப்பட்ட ஆண் - பெண் கூட்டத்தின் முன், சொத்தின் வாரிசுக்கான குடும்ப அமைப்புமுறை மாறிவந்த சமூக வளர்ச்சியால் தகர்ந்து போயுள்ளது, போகின்றது. இதனால் பெண் குழந்தை பெறும் இயந்திரம் என்ற செயற்பாட்டுக் கண்ணோட்டம் தகர்ந்து போனது, போகின்றது.

 
ஆணின் தனிச் சொத்துரிமையைச் சிலர் சூறையாடியதால், ஆணுடன் பெண்ணையும் கூலியாக்கியதால் ஆணுக்குச் செய்த சேவை என்பது தகர்ந்து போனது, போகின்றது. ஆணின் பாலியல் நுகர்வுக்குரிய பண்டமாக இருந்த போக்கில் ஆணின் சொத்துரிமை இழப்பால், பெண்ணின் சொத்துரிமையின் கோரிக்கையால், தனிச் சொத்துரிமையின் சமூகக் கட்டமைப்பால் பெண் தேர்வையும், உரிமையையும் இதற்குள் கோருவதால், கடந்து வந்த பாலியல் பற்றிய மதிப்பீடுகள,; நடைமுறைகள் தகர்ந்து போனது, போகின்றது.


இந்தத் தனிச் சொத்துரிமையின் மையப்படுதலுக்கான வரலாற்றுப் போக்கில் பரந்துபட்ட மக்கள் சொத்துரிமையை இழந்ததன் விளைவாக மரபாக நீண்டு நீடித்த குடும்ப ஒழுங்குகள் தகர்ந்து போயின. இந்த இடத்தில் தனிச் சொத்துரிமையற்ற ஆண் - பெண் தனிச்சொத்துரிமைப் பண்பாட்டுக்குள் , அந்த ஜனநாயகச் சுயநிர்ணயத்துக்குள் தம்மைத் திருமணத்தின் ஊடாகவும் வெளியிலும் இணைத்துக் கொண்ட குடும்பத்தில், ஆண் - பெண்ணுக்கு இடையிலான பாலியல் நடத்தைகள் இச்சமூக அமைப்பு பண்பாட்டுக்கு இசைவாக நுகர்வுப் புணர்ச்சியாக மாறின. இந்த நுகர்வுப் போக்கில் விளம்பரம் முதன்மையான கூறாகச் சந்தைப்படுத்தலில் உள்ளதால், ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை கட்டமைப்பு பெண்ணை விளம்பரத் தளத்துக்குள் தரம்தாழ்த்தியுள்ளது. பாலியல் நடத்தை சொத்துரிமை வழியில் வரையறுக்கப்பட்ட போக்கில் ஏற்பட்ட சொத்திழப்பால், பாலியல் விளம்பர உத்தியாகியது. ஆண் - பெண்ணின் புணர்ச்சிக்கு நுகர்வுப்பண்டங்கள், விளம்பர உத்திகள் முன்நிபந்தனையாகியுள்ளன. இவைகள் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுப்பதில் தீர்க்கமாகவும், புணர்ச்சியில் வாங்குவது கொடுப்பதும் என்ற வரையறைக்குள் பாலியல், குடும்ப உறவுகள் மாறியுள்ளன, மாறுகின்றன.


சிலரிடம் குவிந்த சொத்துரிமை என்பது பலரிடம் சொத்துரிமையைப் பறித்து உருவாகும் வளர்ச்சியில், குடும்பம் சிதைகின்றபோது சொத்துரிமையால் தடுத்து நிறுத்திவிடமுடியவில்லை. சொத்துரிமையால் கட்டிக் காக்கப்பட்ட குடும்பம் தனக்குள் கொண்டிருந்த காதல், அன்பு போன்ற உணர்வுகள் உறவுகளை எல்லாம், சொத்துரிமை அபகரிப்புக்குள்ளாகும்போது, சம்பந்தப்பட்டவர்கள் தனிச்சொத்துரிமையின் ஜனநாயகத்தைச் சுதந்திரத்தை உயர்த்தும்போது தகர்ந்து போகின்றது. தனிச்சொத்துரிமையும் அதன் ஜனநாயகச் சுதந்திரமும் எப்போதும் அன்பு, காதல், பரிவு, இரக்கம், உதவி போன்ற எல்லாவற்றையும் மறுத்து, சமுதாயத்தின் அதிகாரத்தை ஒட்டுண்ணியாகக் கைப்பற்றுவதால், அதில் வாழும் சொத்துரிமையை இழந்த மக்கள் தனிச்செத்துரிமைப் பண்பாடு கலாச்சார ஜனநாயகத்தில் சிக்கி அன்பு, காதல், பரிவு, நட்பு.... என அனைத்தையும் இழந்து, ஆண் - பெண் - குழந்தை உறவுகள் நுகர்வுக்குட்பட்ட பண்டப் போக்காக மாறிவிட்டன, மாறுகின்றன.