பெண் மீதான ஆணின் அடக்குமுறையே முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பதை முதலில் கூறியது ஏங்கெல்ஸ்சே! எல்லா மனித அடக்குமுறையின் முதல் மூலம் இந்த வர்க்க அடக்குமுறையில் தோற்றம் பெற்றது. இதை முதன் முதலில் கூறியதும், இதற்கு எதிராக முதலில் போராடியதும், மார்க்சியம் மட்டும்தான். தொடர்ந்து இதற்கு எதிராகப் போராடும் ஓர் அரசியல் பொருளாதார, பண்பாட்டு வடிவமாக உள்ளதும் மார்க்சியம் மட்டும்தான். பெண்ணின் உழைப்பு, வேலைப் பிரிவினையூடாக ஆண்களால் சூறையாடப்பட்ட நிலையில், அந்த வர்க்கப் பகையை உள்ளடக்கிய ஒரு வர்க்கப் போராட்டத்தை, ஆண் சார்ந்து சமூகமயமாகியுள்ள ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்படாமல் பெண் விடுதலையடைய முடியாது. ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண்ணின் விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.
இந்த ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையால் சமூகத் தன்மை பெற்றுள்ளது. இதனால் உலகு எங்கும் இவ்வொடுக்குமுறைகள் ஒரே மாதிரியானவையாக, ஒரே நோக்கம் கொண்டவையாக வெளிப்படுகின்றது. இந்த வர்க்கப் பகையை அமைதியான முறையில் கடந்துவிட முடியாது. அதுபோல் இந்த ஆணாதிக்க வர்க்கப் பகையை முன்வைக்காத போராட்டங்கள் பெண்ணியமல்ல, மாறாக ஆணாதிக்கச் சலுகைகளை ஆணாதிக்கச் சமூக எல்லைக்குள் கோருவதும் பெண்ணியமல்ல. இந்த ஆணாதிக்கத்தையும், வர்க்கப் பகையையும் ஏங்கெல்ஸ் எப்படி மார்க்சியத்தை நிறுவும் போராட்டத்தில், எந்தக் கோட்பாடும் முன்வைக்க முடியாத வரலாற்று ஆய்வினூடாக முன்வைத்தார் எனப் பார்ப்போம்.
"வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒருதார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது. முதல் வர்க்க ஒடுக்குமுறை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகின்றது. ஒருதார மணம் மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதேசமயத்தில், அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தாற்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவங்கியது."3
- என்று ஏங்கெல்ஸ் ஆணாதிக்கத்தின் தோற்றத்தைச் சரியாகவே மார்க்சியச் சமூக விஞ்ஞானத்தில் உயிரியல் விதிக்கமைய பரிணமிப்பைக் கோடிட்டுக் காட்டினார். பெண் ஒரு தாரமணத்தைத் தெரிவு செய்ததும், அதில் அவள் இணைமணத்தை ஆண்களிடம் கோரிப் பேணிய உரிமைகளையும், கடமைகளையும் பறித்த ஆணாதிக்கம், இன்றுள்ள ஒருதார மணத்துக்குச் சீரழிந்து போனது. பெண் மட்டும் காதலிப்பவளாகவும், அன்பு செலுத்துபவளாகவும் ஒருதார மணம் சீரழிந்தபோது பெண்ணின் துயரம் மலையளவானதாகியது. தனிச் சொத்துரிமையின் பிரதிநிதியான ஆண், குடும்பத்தில் சமூகத்திலான சமூக ஆதிக்கத்தைத் தனதாக்கினான். இந்த வளர்ச்சி என்பது ஆணின் பொதுவான தனிச்சொத்தை, உலகமயமாதலில் சிலர் கைப்பற்றி மற்றவர்களை அடிமையாக்கினர், அடிமையாக்குகின்றனர். இந்தப் போக்கில் சொத்து இழந்த ஆணின் நிலை சொத்தற்ற பெண்ணின் அடிமை நிலையில் இருந்த போதிலும், சமுதாயப் படிநிலை அமைப்பின் போக்கால், ஆணாதிக்கச் சமூகப் பண்பாடு பெண்ணை அடிமட்ட நிலைக்குள் நிலைப்படுத்தி, இருத்தி வைத்துள்ளது.
ஆணாதிக்கத்துக்கு முன் பெண் பெற்றிருந்த உயர்ந்த மதிப்புக்கான காரணங்கள், தனிச்சொத்துரிமையின் பின்னால் கேவலப்படுத்தப்பட்டு அடிமையாக்கப்பட்டாள். இதை ஏங்கெல்ஸ் ''தாயுரிமை தூக்கியெறியப் பட்டது. இது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள், அடிமைப்படுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள். கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகி விட்டாள். இது பெண்ணின் நிலையைக் கீழ் இறக்கிவிட்டது"3 என ஆணாதிக்கத்தை அதன் ஒட்டு மொத்த வடிவில் மிகத் தெளிவாக வரையறுத்தார்.
மார்க்சியம் பெண்ணியத்தை ஆராயவில்லை என்று ஏங்கெல்ஸ் மீதும், மார்க்ஸ் மீதும் குற்றம்சாட்டுவதன் பின்னால் உள்ள நலன், இந்தச் சமுதாயத்துக்குள் பெண்கள் ஆணாதிக்கத்தை அடையும் போராட்டத்தில் எழும் ஆணாதிக்க எதிர் கண்ணோட்டத்தைத்தான் பிரதிபலிக்கின்றது. ஆணாதிக்கத்தை அதன் முதல் வர்க்க ஒடுக்குமுறையான பெண்ணடிமைத் தனத்தில் தொடங்கிய விளக்கமே இது. இந்த வகையில் மார்க்சிய ஆசான்கள் விளக்கிய இந்த எடுகோளைத் தாண்டி எந்தப் பெண்ணியமும் புதிதாக எதையும் விளக்கிவிடவில்லை. மாறாக இதில் ஒன்றை அதிகமாக அல்லது ஒன்றை மறுத்தும்தான் எல்லா மார்க்சியமல்லாத பெண்ணியமும் பேசப்படுகின்றது. அதாவது விடுதலைக்கான புரட்சிப் போராட்டம் இன்றி, இந்தச் சுரண்டல் அமைப்பில் ஆணுக்கு நிகராகச் சலுகை கோருவதை முதன்மைப்படுத்தியே பெண்ணின் விடுதலைக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
மார்க்சியம் இந்தச் சுரண்டல் அமைப்பைத் தகர்க்கக் கோருவதையும், அதன் அடிப்படையில் பெண்ணின் விடுதலையைக் கோருவதையும் மறுத்த பிரிவுகள் தாம், மார்க்சியம் பெண்ணியத்தைச் சரியான முறையில் அணுக வில்லை என்ற கோஷம் போடுகின்றன. இது இன்று மட்டும் எழுந்தவையில்லை. மாறாக மார்க்சியம் தனது வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கிய போதே இதுவும் தொடங்கிவிட்டது.
கி.பி. 1857 இல் மார்ச் 8-ஆம் திகதி அமெரிக்காவில் புடவை தொழிற்சாலைப் பெண்கள் 10 மணி நேர வேலைக் குறைப்பையும், ஆண்களுக்குச் சமமான சம்பளத்தையும் கோரிய நாளையே 1910 இல் டென்மார்க்கில் கூடிய இரண்டாவது சோசலிசப் பெண்கள் மகாநாட்டில் கிளாரா ஜெட்கின் கொண்டு வந்த தீர்மானத்தின்படி, கி.பி. 1911-ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 பெண்கள் போராட்டத் தினமாக எழுச்சி பெற்றது. முதன் முதலில் ஜெர்மன், ஆஸ்திரியா, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. (தரவுகள்-11.3.1999)4 மார்ச் 8-ஆம் திகதியைப் பெண்கள் தினமாக அறிவித்து, பெண்ணினத்தினுடைய வர்க்கப் போராட்டத்திலும் போராடிய கிளாரா ஜெட்கின் இதை எப்படி அணுகினார் எனப் பார்ப்போம்.
"மகளிர் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லக் கூடிய மகளிர் இயக்கம் எதுவும் கிடையாது.''5 ஏனெனின் வர்க்கங்களாகப் பிளவு பட்டிருக்கும் சமுதாயத்தில் "முதலாளித்துவ மகளிர் இயக்கமும், உழைக்கும் வர்க்க மகளிர் இயக்கமும் மட்டுமே உள்ளன. அவற்றிற்கிடையில் உள்ள பொதுவான அம்சம் சமூக ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவச் சமுதாயத்திற்கும் இடையில் நிலவும் பொதுவான அம்சத்தைவிட அதிகமாக ஒன்றும் இல்லை."5
பெண்ணியத்தின் இரு போக்குகள் வரலாறு எங்கும் இருந்துள்ளது. இதில் முதலாளித்துவப் பெண்ணியத்தின் அனைத்து ஜனநாயகக் கோரிக்கையையும் மார்க்சியத்தின் உயர்ந்த பட்ச பெண்ணியக் கோரிக்கைக்குள் ஒரு சிறு துரும்பாக இருந்தது. அத்துடன், மார்க்சியப் பெண்ணியத்தின் உயர்ந்தபட்ச வர்க்கப் போராட்டத்தில் உள்ள ஜனநாயகக் கோரிக்கைகளை அரசு சலுகையாக வழங்கி, முதலாளித்துவப் பெண்ணியவாதிகளை வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக நிறுத்தியது. வாக்குரிமைப் போராட்டத்தில் உயர் பெண்களுக்கும், வெள்ளை மக்களுக்கும், உயர் வர்க்கத்துக்கும் (பொருளாதார ரீதியாக), ஆதிக்கச் சாதிகளுக்கும், ஆளும் இனங்களுக்கும் வாக்குரிமையைக் கோரிய முதலாளித்துவப் பெண்ணியத்தை (இதில் வேறு சமூக இயக்கங்களும் இருந்தன) எதிர்த்து, மார்க்சியம் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமையைக் கோரியது. அதோடு இந்த வாக்குரிமை ஜனநாயகம் என்பது முதலாளித்துவ வர்க்கம் சுரண்டிக் கொழுக்கும் ஜனநாயகத்தை அங்கீகரிப்பதையும், மக்களை இதற்கூடாக ஏமாற்றி மோசடி செய்யும் ஒருவடிவம் என்பதையும் இணைத்து அம்பலப்படுத்தியே போராடியது.
இந்த வகையில் சர்வதேசப் பாட்டாளிவர்க்கம் தனது சொந்தப் பேராயத்தில் எப்படி எதிர் கொண்டது எனப் பார்ப்போம். "பெண்கள் வாக்குரிமைப் பிரச்சனை குறித்து பேராயத்தில் கருத்து வேற்றுமைகள் அனேகமாக இருக்கவில்லை. பெண்களுக்கு வரம்புக்குட்பட்ட வாக்குரிமைக்கு (அனைவருக்குமான வாக்குரிமைக்குப் பதிலாகத் தகுதி வரம்பிடப்பட்ட வாக்குரிமைக்கு) ஆதரவாக சோஷலிஸ்டுகள் போராட்டம் நடத்த வேண்டுமென்று தீவிரச் சந்தர்ப்பவாத நிறுவனமான பிரிட்டிஷ் ஃபேபியன் கழகத்திலிருந்து வந்த பெண் பிரதிநிதி ஒருவர் மட்டும்தான் வாதாட முயன்றார். யாரும் இவரை ஆதரிக்கவில்லை. இவருடைய நோக்கங்கள் பட்டவர்த்தமானவை. பிரிட்டிஷ் முதலாளி வர்க்கச் சீமாட்டிகள் பிரிட்டனிலுள்ள பெண் பாட்டாளிகளுக்கும் கிடைக்கும்படி வாக்குரிமை விரிவாகி விடாமல் தாம் மட்டும் வாக்குரிமை பெற நினைக்கிறார்கள்."6
வரலாற்றில் உடனடியான நலன்கள் மற்றும் சந்தர்ப்பவாதக் கோரிக்கைகளை மார்க்சியம் விமர்சனக் கண்கொண்டு அணுகியது. அதாவது ஜனநாயகக் கோரிக்கையையும், உடனடிக் கோரிக்கையின் பின்னால் இருந்த சந்தர்ப்பவாதத்தையும் வேறுபடுத்தி அம்பலப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையை ஆதரிக்கும்போது அதன் வர்க்கப் பிளவையும் கோடிட்டுக் காட்டியது. அனைத்து ஜனநாயகக் கோரிக்கையிலும் பாட்டாளி வர்க்க நலன்களில் இருந்து அணுகியது. பாட்டாளி வர்க்கம் முரணற்ற ஜனநாயகத்தை, ஜனநாயகக் கோரிக்கையில் முன்னிறுத்தியது. இதை மறுத்து, எதிர்த்த பிரிவுகள் பாட்டாளி வர்க்கத்துக்கு இப்பிரச்சனை மீது அக்கறையில்லை என்று குற்றம்சாட்டியதன் மூலம், தமது சந்தர்ப்பவாதக் கோரிக்கைகளைப் பூசி மெழுகி பாதுகாத்துக் கொள்ள முயன்றன.
ஏகாதிபத்திய முதலாம் உலகயுத்தத்தைச் சர்வதேசப் பெண்கள் அமைப்பு மறைமுகமாக ஆதரித்தபோது லெனின் அதை எதிர்த்து போராடினார். "கி.பி. 1915 மார்ச்சில் ஒரு சர்வதேசப் பெண்கள் மாநாடு கேவலமான அமைதிவாதத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஸ்தாபன அமைப்புக்கமிட்டி அத்தீர்மானத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றியது. கி.பி. 1915 செப்டெம்பரில் நாம் அகிலத்தின் மொத்த இடதுசாரி அணியையும் திரட்டினோம்; நம்முடைய செயல்தந்திரத்தை முன் வைத்தோம்...''6 பாட்டாளி வர்க்கத்தின் கையைக் கட்டிப்போட அமைதியைக் கோரியதன் மூலம், யுத்தத்தக்கு ஆதரவாகச் சர்வதேசப் பெண்ணியமே மாறியபோது மார்க்சியம் அதை அம்பலப் படுத்தியது. மார்க்சிய வர்க்கப் போராட்டப் பாதையைப் பிரச்சாரம் செய்த சர்வதேசப் பெண்ணியத்தின் முக்கிய தலைவி கிளாரா ஜெட்கின் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டார். இதனூடாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு லெனின் வழி காட்டினார். கி.பி. 1917 இல் பாட்டாளி வர்க்கம் தான் ஆட்சிக்கு வரும் முன்பே பெண்களின் உடனடிப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
லெனினால் கி.பி. 1917 ஏப்ரல் - மேயில் எழுதிய "கட்சி வேலைத் திட்டத்தில் மாற்றங்களுக்கான மூலத் தகவல்கள்" என்ற பிரசுரத்தில் பெண்கள் தொடர்பாகக் குறிப்பிட்டப் பகுதிகளைப் பார்ப்போம்.
"7.சமூக எஸ்டேட்டுகள் ஒழிக்கப்படுதல்; பால், சமயம், இனம், தேசிய இனம் என்ற வித்தியாசமில்லாமல் எல்லா பிரஜைகளுக்கும் சம உரிமைகள். 14.பொதுவான வேலை வாய்ப்பு, கல்வி பதினாறு வயது வரை எல்லா ஆண், பெண் குழந்தைகளுக்கும் இலவசம். கட்டாயம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச உணவும், உடையும் பள்ளிகளால் அரசின் செலவில் வழங்கப்படும்;. 16.1.1.....உணவிற்காகக் கொடுக்கப்படும் ஒருமணி நேரத்தையும் சேர்த்து, 8 மணிநேர வேலை நாள்;. அபாயகரமான, ஆரோக்கியமற்ற தொழில்களில் வேலை நேரம் 4 மணி முதல் 6 மணி வரையாகக் குறைக்கப்படும். 16.1.2. ...ஊதியம்பெறும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 42 மணி நேரக் கட்டாய ஓய்வு. 16.6. பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் தொழில்களில் பெண் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதற்குத் தடை. குழந்தைப் பேற்றுக்கு நான்கு வாரங்கள் முன்பும் ஆறு வாரங்கள் பின்பும் சம்பள நஷ்டம் எதுவுமில்லாமல் பெண்களுக்குச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். 16.7.கைக்குழந்தைகளுக்கும், இளஞ்சிறுவர்களுக்கும் சேய் பராமரிப்பு நிலையங்கள் பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்;. தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மூன்று மணிக்கு ஒரு தடவை அரை மணி நேரம் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும்."7
பெண்களின் உரிமை தொடர்பாக லெனின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக்கான உடனடி வேலைத் திட்டத்தில் பெண்கள் பற்றிய சரத்துகளை இப்படி வரையறுத்தார். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற திட்டம் அன்றும் சரி இன்றும் சரி முழுமையில் இருந்ததில்லை. புரட்சிக்குப் பின்னால் இது உடனடியாகவே சட்டமாக்கப்பட்டதுடன் பெண்களின் பிரச்சனை விசேடமாகவும், தொடர்ச்சியாகவும் கையாளப்பட்டது. புரட்சி அரசைக் கைப்பற்றுவதோடு முடிந்துவிடுவதில்லை. இது அராஜகவாதத்தின் வெற்று கோஷமாகும். புரட்சி தொடரப்படுவதில் தான் பெண் விடுதலையடைய முடியும் என்றார் லெனின். நிரந்தரப் புரட்சி போன்ற இடது தீவிரவாதம் அராஜகத்துக்குச் சமாந்தரமாக இதை மறுக்கின்றது. தீர்க்கமான மார்க்சிய வழிகாட்டல்கள் வரலாற்றில் அராஜகம், திரிபுவாதம் மற்றும் எல்லா தளத்திலும் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதற்கான வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதை அங்கீகரிக்க மறுக்கும் முதலாளித்துவப் பெண்ணியச் சந்தர்ப்பவாதத்தின் ஜனநாயகக் கோரிக்கையைவிட அதிகமாக மார்க்சியப் பெண்ணியம் முன் நிறுத்தி போராடியதுடன், ஆணாதிக்கத்தைப் புரட்சியின் ஊடாக ஒழித்துக் கட்டப் போராடியது. இந்தப் புரட்சியை மார்க்சியம் அல்லாத எந்தப் பெண்ணியமும் கோரியதும் இல்லை, முன் வைத்ததும் இல்லை.
பெண்ணைச் சமூக உழைப்பில்; இருந்து புறக்கணிக்கப்பட்ட போக்கு (பெண்ணின் உழைப்பு மூலதனத்துக்கேயுரிய உபரி பெறுமானத்தை இழந்தது) என்பது, பெண்ணைச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாக அகற்றியதில் வெற்றி கண்டது. பெண்ணைச் சமூக உழைப்பில் இருந்து அகற்றிய சமூகம் பெண்ணைப் பிள்ளை பெறும் கூலி இயந்திரமாக, ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் இயந்திரப் பொம்மையாக, ஆணுக்குச் சேவை செய்யும் அடிமையாகக் கேவலப்படுத்தியது என்பது, பெண்ணின் வரலாற்றுத் தோல்வியுடன் கூடிய அடிமைத்தனமாகும்;. இதையொட்டி ஏங்கெல்ஸ் "வீட்டு நிர்வாகம் தனது பொதுத் தன்மையை இழந்தது. அது சமூகத்தின் அக்கறையைப் பெற்ற விவகாரமாக இனிமேலும் இருக்கவில்லை. அது தனிப்பட்ட சேவை ஆகி விட்டது. மனைவி முதல் வீட்டு வேலைக்காரியாக மாறினாள். அவள் சமூக உற்பத்தியிலிருந்து வெளியே தள்ளப்பட்டாள்''3 என்றார்.
இதை லெனின் "வீட்டு வேலை பெண்ணை நசுக்குகின்றது; கழுத்தை நெரிக்கிறது; வளர்ச்சியைத் தடுக்கிறது; மதிப்பிழக்கச் செய்கிறது. சமையல்கட்டு, குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்களுடைய வேலையின் தன்மை காட்டுமிராண்டித் தனமானது; விளை பயனற்றது; அற்பத் தன்மையானது; மன உளைச்சலைத் தருவது; சோர்வடையச் செய்வது,"8 என்று மிகத் துல்லியமாகவே பெண்ணின் அடிமைத்தனத்தைக் குறிப்பிட்டார்.
வீட்டுக் கடமை என்பது சமூகக் கடமையாக இருந்ததுடன் அது மதிப்புக்குரியதாக இருந்தது. தனிச் சொத்துரிமை உபரியை அடிப்படையாகக் கொள்ளத் தொடங்கிய நிலையில், பெண்ணின் வீட்டு உழைப்பு உபரியை உற்பத்தி செய்யவில்லை. ஆணின் உழைப்புக்குச் சமூகப் பெறுமானத்தை உபரியின் ஊடாகப் பெற்றபோது, பெண்ணின் உழைப்பு அந்த உபரியின் முன் சமூகப் பெறுமானத்தை இழந்தது. இந்த நிலையில் வீட்டு வேலையும், வீட்டு நிர்வாகமும் சமூகத் தன்மையை இழந்தது. இதனால் பெண்ணின் சமூகத் தகுதி மேலும் கீழ் இறங்கியது. பெண் வேலைக்காரியானாள். உபரியை உற்பத்தி செய்யாத பெண்ணின் வீட்டு உழைப்பு, உபரியை உற்பத்தி செய்த ஆணின் உழைப்புக்கு முன் தரம் தாழ்ந்து சமூகத்தின் இழிநிலை தகுதியானது. ஆகவே குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம் மனையைக் (வீட்டைக்) குறிக்கும் பெயரால் மனைவியானாள்;. கணவன் கணங்களின் தலைவன் என்பதில் இருந்து கணவன் ஆனான். ஆண் சமூகத்தின் தலைவன் ஆனான். பெண் வீட்டின் வேலைக்காரி ஆனாள்.
இந்த மனித வரலாறு 3000 ஆண்டுகளுக்கு மேலாக மாறிவந்த பல சமுதாயத் தொடர் மாற்றத்திலும், பெண்ணுக்கு வௌ;வேறு பாத்திரங்களை வழங்கியதன் மூலம் இவை தொடர்வது நீடிக்கின்றது. இதற்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தைத் தலைகீழாக்கிடும் புரட்சி செய்வதன் ஊடாகவே இதில் இருந்து மீளமுடியும். இருந்த போதும் பல பெண்ணிலைவாதிகள் இச்சமூகத்துக்குள், ஜனநாயக எல்லைக்குள் நின்றபடி ஆணாதிக்கமயமாதலைக் கோருவதால், சுத்திச் சுத்தி பெண்ணின் நிலை வடிவத்தால் மட்டும் எதிர்ப்பதும், பண்பியல் ரீதியில் இடம்மாறுவதும் நிகழ்கின்றது.
பெண்ணின் அடிமைத்தனத்தையும், ஆணாதிக்கத்தையும் மார்க்ஸ் "நவீன காலக் குடும்பம் அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் தனக்குள் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அது ஆரம்பத்திலிருந்து கட்டாய விவசாய வேலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்குள்ளும் அதன் அரசிற்குள்ளும் பின்னால் விரிவான அளவில் வளர்ச்சியடையப் போகின்ற எல்லா முரண்பாடுகளையும் அது தனக்குள் குறுவடிவத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது''3 என்றார்.
கடந்த சமுதாயத்தின் அடிமை முறைகளில் இருந்து மாறிவந்த பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்ப அரசியலிலும், சமூக வடிவத்திலும் ஜனநாயகத்தின் பண்பியலில் ஏற்பட்ட மாற்றங்கள் பழைய வடிவத்தின் தொடர்ச்சியாக இழுபட்டது. பெண்ணின் நிலையும் சரி, சமுதாயத்தின் எல்லாத்துறையிலும் நடைபெற்ற அனைத்து மாற்றங்களும் சரி, தனிச் சொத்துரிமைக்குள்ளான எல்லைக்குள் தான் மாறியது. இது மனிதனின் அனைத்துப் புரட்சிகளும் விதிவிலக்கின்றி நீடித்ததால், பெண்ணின் நிலையை மாற்றிவிடவில்லை. தனிச் சொத்துரிமைக்கு எதிராக நடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் புரட்சிகள்தான் பெண்ணின் நிலையில் மாற்றத்தைத் தீவிரமாக்கியது. தனிச் சொத்துரிமைக்கு எதிரான புரட்சி தொடர்ந்த நிலையில் பெண்ணின் நிலை படிப்படியாக உயர்ந்தது.
வரலாற்றில் பெண் தனது அடிமைத்தனத்தில் இருந்து மாறிய போராட்டத்தில், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதான பல கலாச்சாரப் புரட்சிகள் தான் பெண் மீதான பண்பாட்டு, கலாச்சார, பொருளாதார ஒடுக்குமுறையின் ஒட்டு மொத்த வடிவில் விடுவிப்பதை வரலாறு நமக்குக் காட்டியது. உலகில் தனியுடைமைக்கு எதிராக நடந்த புரட்சிகள் பெண்ணின் மீதான பல அடக்குமுறைகளைத் தகர்த்தது. இந்தப் புரட்சிகள் உலகம் முழுக்க பெண்ணின் போராட்டத்தைத் தீவிரமாக்கி, பெண்கள் தொடர்ச்சியாகப் பல அடக்குமுறைகளை இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் நொறுக்கினர். தனி உடைமை ஆணாதிக்கத்துக்கு எதிராக நடந்த புரட்சிகள் மீது எவ்வளவுக்குச் சேறு வீசிய போதும், அவை மறுக்க முடியாதவாறு பெண் விடுதலையின் வரலாறாக எம்முன் உள்ளது.
நவீன குடும்பம் பற்றி ஏங்கெல்ஸ் "இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன.''3
இருந்து வந்த, இருக்கின்ற, நீடிக்கின்ற குடும்பங்கள் உண்மையில் இரண்டு உள்ளங்களின் புறநிலை சாராத இயல்பான இணைவுகள் அல்ல. மாறாகத் தனியுடைமை சமுதாய எல்லைக்குள், அதன் ஏதோ ஒரு காரணத்தால் ஒன்றாக இணைந்தவை அல்லது இணைக்கப்பட்டவையே. இரண்டு பேருக்கு இடையில் ஏற்பட்ட இணைவு அது காதலாக இருந்தாலும் சரி, வேறு விதமாக இருந்தாலும் சரி, ஏங்கெல்ஸ் கூற்று போல் எதிர்மறையின் விபச்சாரமாகவே உள்ளது. ஏன்? தனிச் சொத்துரிமையின் விதி என்பது இருவருக்கும் இடையில் நிபந்தனைகளைக் கோருகின்றது. முரணற்ற ஜனநாயகத்தை மறுக்கின்றது. அது சொத்து, அழகு, கல்வி, சாதி, வர்க்கம், நிறம் என பல தளத்தில் எல்லைப்படுத்தி இணைவாகின்ற போதும், பின்னால் இணைவுகளிலும் இவை ஆழமாகச் செயலாற்றுகின்றது.
ஆண் பெண்ணை அடிமையாக இனங்காண்பதும், பெண் அடிமையாக உணர்வதும் இதன் போக்கில் பண்பாட்டு, கலாச்சார, பொருளாதார வழிகளில் இணைவில் பிளவுகளைக் கோருகின்றது பாலியல் நுகர்வுகள். வேறுபட்ட சமூகத் தளத்தில் நுகர்வாகவோ அல்லது ஆணின் தேவை பூர்த்தி செய்கின்றபோதோ இது பாலியலின் இயல்பான இணைப்பை முன்நிறுத்தவில்லை. எம் சமுதாயத்தில் காதலிலும் சரி, பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் சரி பெண்ணின் அச்சத்துடனான அணுகும் போக்கு காணப்படுகின்றது. பெண்ணின் முன்முயற்சியுடன் கூடிய பாலியல் நாட்டம், அச்சுறுத்தும் வகையில் கற்பு இழந்தவளாகக் காட்ட போதுமான பண்பாடாக உள்ளது. பாலியல் பற்றிய பீதியும் இயல்பான பாலியல் புணர்ச்சியைத் தடுக்கின்றது.
திருமணத்துக்கு முன்னான உறவில் எவ்வளவு தான் காதலராக இருந்தாலும், பெண் சட்டப்படியான (பதிவுச்சட்ட அங்கீகாரம், பெற்றோரின் அங்கீகாரம், கோயில் அங்கீகாரம், சமூக அங்கீகாரம்... போன்றன) திருமணப் பாதுகாப்பின் பின்பே பாலியல் புணர்ச்சியை நாடும் அளவுக்கு ஆண் மீதான நம்பிக்கையைப் பெண் இழந்து விட்டாள். தனது கற்பு மீதான சூறையாடலைக் காதலிக்கும் ஆணே கற்பழித்து தூற்றுதலுக்குள்ளாக்கும் (இங்கு விருப்பத்துடன்) ஆணாதிக்கச் சமுதாயத்தில் கைவிட்டுவிடுவான் என்ற பீதிக்குள், பெண்கள் சிக்கியுள்ள அளவுக்கு ஆணின் நுகர்வு வேட்கையும், மோசடியும் முன் எப்போதும் இல்லாத வகையில் சமுதாயம் சீரழிந்துள்ளது.
இது பெண்ணின் ஒருதார மணத் தெரிவைத் தற்காப்பிலிருந்து மோசடியூடாக அழித்துச் சிதைக்கின்றது. இதைப் பெண்கள் அன்று ஒருதார மணத் தெரிவைத் தேர்ந்தது போல், தெளிவாகவே பெண் புரிந்து அதன் தற்காப்பில் அச்சத்துடன் காதலிக்கின்றாள். இதே நேரம் மேற்கில் நுகர்வதும், தூக்கி எறிவதும் என்ற ஆணாதிக்கமயமாகிய அழிவுத் தன்மை பாலியலில் புரையோடிப் போயுள்ளது. தற்காப்பைக் கைவிட்டுச் செல்லும் மேற்குப் பெண், தனது பொருளாதாரச் சொந்தச் சூறையாடலுக்கு இசைவாகப் பாலியலை விபச்சார நிலைக்குத் தரம்தாழ்த்தியுள்ளாள்.
பொருளாதாரத்தில் சுதந்திரம் என்றால் ஏகாதிபத்தியச் சூறையாடலையும், பெண் சுதந்திரம் அடைந்து விட்டாள் என்றால் ஆணுக்குச் சோரம் போதலையும், பாலியல் சுதந்திரம் என்றால் விபச்சாரத்தையும் தாண்டி உலகம் உருளாது. அப்படி உருளும் என்றால் ஏகாதிபத்திய எடுபிடிகளின் சுதந்திரத்தையே பாதுகாத்து நிற்கும் விபச்சாரத்தையும் குறித்துச் சொல்லுகின்றது. அந்தளவுக்குச் சமுதாயத்தில் சுதந்திரம் பற்றி, ஜனநாயகம் பற்றிய விளக்கங்கள் சீரழிந்து போய்விட்டன. பெண் கட்டற்ற பரிபூரணமான சுதந்திரம் அடைந்து விட்டாள் அல்லது தூய ஜனநாயகத்தைக் கொண்டு உள்ளாள் என்று கூறும்போது உண்மையில், ஆணாதிக்கத்தின் பரிபூரணமான கட்டற்ற அடிமைத்தனத்தையும், ஒடுக்குமுறைக்கும் உட்பட்ட நடத்தைகளை, செயல்களைத்தான் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் வெளிப்படுத்துகின்றனர். முதலாளித்துவ விளைவுகளையும், அதன் எச்சங்களையும்தான், சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் விளைவாக்கி;, அதைச் சமுதாயத்தின் பொது வடிவமாகக் காட்டி நியாயப்படுத்துகின்றனர்.
ஆதி பொதுவுடைமை சமுதாயத்தில் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவியபோது அங்கு மனிதர்களுக்கிடையிலான உறவுமுறை என்பது இருக்கவில்லை. தாய் பிள்ளை உறவு மட்டுமேதான் அங்கீகாரம் பெற்ற ஒரு தொடர்பு வடிவமாக இருந்தது. இதனால் வரைமுறையற்ற புணர்ச்சி இயல்பானதாகவும் இயற்கையானதாகவும் இருந்தது. இரத்த உறவுகள் தோன்ற அவைக்குள் கண்டிப்பான கடமைகளும், வரைமுறைகளும் உருவான போது, படிப்படியாகப் புணர்ச்சியில் தடைகள் உருவாயின. இது குடும்ப அமைப்பைத் தொடங்கி வைத்தது. உறவுக்குள் (இரத்த உறவுகள்) தடை செய்யப்பட்ட உறவுமுறை சில இனத்தில் சில விதிவிலக்குகளைக் கொண்டிருந்தது.
இன்று உலகமயமாதலால் சிலரின் சொத்துரிமைக் குவிப்பால், சமுதாயத்தின் சொத்திழப்பு தீவிரமாகியுள்ளது. நுகர்வே மனிதனின் அடிப்படையானதும் பண்பாடு - கடமையாகவும் மாறியதால் மனித உறவுமுறைகள் சிதையத் தொடங்கியுள்ளன. சொத்திழந்த வர்க்கத்தின் நுகர்வு, இயல்பாகச் சமுதாயத்தின் உறவுமுறைகளைக் கைவிட்டுச் செல்லுகின்றது. உறவுமுறை ஆதியில் அடிப்படையானதும் சமுதாயக் கூட்டின் எல்லையாகவும் இருந்தது. இது ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தில் பொதுப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும், பின்னால் தனியுடைமை சமுதாயத்தில் தனிச்சொத்துடைமையைப் பாதுகாப்பதிலும் தன்னை ஒழுங்கமைத்தது.
ஆனால் இன்று பரந்த விரிந்த தளத்தில் தனிச் சொத்துரிமை தகர்வதால் உறவுமுறைச் சிதைவு தவிர்க்க முடியாமல், புணர்ச்சியில் வரைமுறையற்ற தன்மையை முன்னிறுத்துகின்றது. இது உறவுமுறையைக் கடந்த புணர்ச்சியை, நுகர்வுக் கண்ணோட்டத்தில் உறவுமுறை கடந்து கோருகின்றது. சமுதாய வளர்ச்சியில் இரத்த உறவுக்கு இருந்த தடைகள் இன்று மீறப்படும்போது (இங்கு சில சமுதாயத்தில் சொத்துரிமையின் பாதுகாப்பு சார்ந்து சில விலக்குகள் இருந்தன) அவை நுகர்வின் பண்பாட்டில் காட்டுமிராண்டித்தனமான மனிதக்கேட்டைக் காட்டுகின்றது. தாய், தந்தை, மகள், மகன், பாட்டி பாட்டன், பேரன், பேத்தி .. என்று வரைமுறை கடந்த பாலியல் உறவை ஏற்றுக் கொள்ளும் அல்லது கோருகின்ற அல்லது நடைமுறைப்படுத்துகின்ற வடிவங்கள் உலகமயமாதலில் தனிமனிதச் சுதந்திரமாக, நுகர்வின் சுயேட்சையாகப் புணர்கின்ற போது, கூட்டு மனித இயக்கத்தை மறுத்த தனிமனிதக் கண்ணோட்டத்தைக் கொண்ட சிதைவைக் காட்டுகின்றது.
இவைகளை மனிதர்களுக்கிடையில் விலக்கியபோது சமுதாய நலன் மற்றும் கூட்டுக் கண்ணோட்டம், உயர்ந்தபட்ச நோக்கில் இருந்தே வளர்ச்சி பெற்றது. வரைமுறையற்ற புணர்ச்சியின் காட்டுமிராண்டித்தனத்தைக் கைவிடுவதை அது பிரதிபலித்தது. பாட்டாளி வர்க்கம் இதற்கு எதிராகப் போராடவேண்டிய நிலையில் உள்ளது. வரைமுறையற்ற புணர்ச்சியை இரத்த உறவு கடந்து கோருவது என்பது, அடிப்படையில் சொந்தத் தாயுடன் மகன் புணரக் கோரும் உரிமை, மனித வளர்ச்சியில் விகாரமாகிப்போன, வீங்கி வெம்பிய கீழ்நிலைக் கட்டமாகும்.
இதை இரண்டு வகையில் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் எதிர்த்து நிற்கின்றது. வரைமுறையற்ற புணர்ச்சி உலகமயமாதலின் கோரிக்கையாகின்றபோது அது விபச்சாரமாக இருக்கின்றது. இரத்த உறவைக் கடந்து புணர்ச்சியைக் கோருகின்றபோது கூட்டு மனிதநலனை நுகர்வுக்குள் தாழ்த்துகின்றது. பாட்டாளி வர்க்கம் சமுதாயத்தின் இரத்த உறவுமுறையை மறுக்கின்றபோது சமுதாயத்தின் உயர்ந்தபட்ச கூட்டைக் கோருகின்றது. இரத்த உறவுக்குள்ளான புணர்ச்சிக்கு எதிரான கண்ணோட்டத்தில் மேலும் அரசியல் மயப்படுத்துகின்றது. புணர்ச்சியை விரிந்த பரப்பில் முன்நிறுத்தும் போது அது குறுகிய தனது எல்லைக்குள் தங்கி நிற்பதை மறுக்கின்றது. புணர்ச்சியில் வரைமுறையற்ற விபச்சாரத்தை எதிர்க்கும்போது அதன் விபச்சாரத்தை அம்பலப்படுத்தி, ஆண் பெண்ணின் சுயமான சுயேட்சையான இணைவைச் சுயநிர்ணயக் கண்ணோட்டத்தில் கோருகின்றது. ஒருதார மணத்துக்கும் அதேநேரம் வரைமுறையற்ற புணர்ச்சிக்கும் எதிராகத் தன்னை அரசியல்படுத்துகின்றது, போராடுகின்றது.
இதேநேரம் இன்று பாட்டாளி வர்க்கக் குடும்பத்தில் சொத்துரிமை வடிவிலான வாரிசுரிமைக் குடும்பம் தகர்ந்துள்ள நிலை என்பது, குடும்பத்தின் இயல்பான இணைப்புக்கும், காதலுக்கும் அடிப்படையாகின்றது. இத் திருமணங்கள் இரண்டு நபர்கள் அதாவது ஆண் - பெண் தாமாகச் சேர்ந்து வாழ்தல் என்பதும், சொத்துரிமை சட்ட எல்லைக்கு அப்பால், நிறத்துக்கு அப்பால், இனத்துக்கு அப்பால்... இணைவது அதிகரித்துச் செல்கின்றது. இங்கு அவை முரணற்ற ஜனநாயகத்தில் இணைந்த இணைக் குடும்பங்களாக மாறிவிடவில்லை. மாறாக இந்த ஆணாதிக்கத் தனிச்சொத்துடைமை சமுதாயத்தில் வாழ்வதால் அதன் எல்லைக்குள் முன்னேறிய இணைவுகளாக உள்ளது.
பெண்ணின் இயல்பான வாழ்க்கைக்கும் முரணற்ற ஜனநாயகமான இணைவுக்கும் ஏங்கெல்ஸ் குறிப்பிடுவது போல் "பெண்ணினம் முழுவதையும் சமூக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவது தான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை என்பது அப்பொழுதுதான் தெளிவாகும்;. தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகு என்னும் தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதை இது மீண்டும் கோருகின்றது."3
பெண் சுதந்திரமாகச் சிந்திக்க தொடங்குவது பெண்ணின் உழைப்பு (சமூகப் பெறுமானம் கொண்ட கூலி) விடுதலைக்கான முதல் தூண்டுதலாக அமையும். ஒரு ஆணின் உழைப்பைச் சார்ந்து பெண் இருக்கும் வரை, ஆணின் பொருளாதார நலனுக்கு உட்பட்டுதான் பெண் சிந்திக்க முடியும்;. வர்க்கச் சிந்தனை சமுதாயத்தில் எப்படி பொருளாதார எல்லைக்குள் இருந்து உயிர்த்தெழுகின்றதோ, அதேபோல் ஆணின் உழைப்பு பெறுமானத்துக்கு உட்பட்ட பெண்ணின் சமூக வாழ்க்கை, ஆணை முன்நிறுத்தி மட்டுமே சிந்திக்கமுடிகின்றது.
இதில் இருந்து மீள பெண் சமூக உழைப்பில் ஈடுபடுவதும், சொந்தப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ அமைப்புக்குள் சுய ஆற்றலுடன் வாழவும் முடிகின்ற நிலையில் தான், பெண்ணின் சிந்தனை ஆணைச் சாராத வடிவத்தில் வெளிவரமுடியும்;. இந்த நிலையில் பெண்ணின் சிந்தனை தனிப்பட்ட ஆணிடமிருந்து சுதந்திரமாக உதித்தாலும் ஆணாதிக்கம் தொடர்வது தவிர்க்கமுடியாது. ஏனெனில் பெண்ணின் சிந்தனை என்பது தனிச் சொத்துரிமை வடிவில் எழுவதாலும், ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் விளைவு என்பதாலும், தனிச் சொத்துரிமை சமுதாயத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்கமுடியாத நிபந்தனைக்கு உள்ளாக்குகின்றது.
இந்தத் தனிச் சொத்துரிமைக்குச் சமுதாயத்தில் குடும்பங்கள் அதன் ஆதாரமாகவுள்ளன. இங்கு குடும்பம் என்றாலும், தனிமனிதன் என்றாலும், இந்த ஆணாதிக்கத் தனியுடைமை சமுதாயத்தின் பொருளாதார அலகாக இருப்பதைத் தகர்க்காதவரை, பெண்ணின் விடுதலை சாத்தியமில்லை. பெண்ணின் உழைப்பு மட்டும் பெண்ணை விடுவித்துவிடுவதில்லை. பெண்ணின் உழைப்பு தனிச்சொத்துரிமை சமுதாயத்தின் ஊன்று கோலாக இருப்பதில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். இது தனியுடைமைக்குப் பதில் சமூக உழைப்பை ஆதாரமாகக் கொண்ட சமூகப் பெறுமானத்தை வந்தடைவதாகும்.
வரலாற்றில் மார்க்சியம் மீதான வரலாற்றுத் திரிபுகளை, மார்க்சியமல்லாத பெண்ணிலைவாதிகளால் இட்டுக்காட்டப்படுகின்றது. அதாவது பெண் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்தால் அதாவது அவளைச் சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்தினால், பெண் விடுதலை அடைந்து விடுவதாக மார்க்சியம் கூறியதாகக் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிச நாடுகளில் இது நிகழவில்லை, எனவே மார்க்சியப் பெண்ணியம் ஆணாதிக்கத்தை ஒழிக்காத குருட்டுத்தனம் கொண்டது எனக் கூறி, முதலாளித்துவப் பெண்ணியத்தை முண்டு கொடுக்கின்றனர்.
இந்தத் திரிபு மார்க்சியம் பலதரம் எதிர்த்து போராடிய பொருளாதாரவாதம் மற்றும் அராஜகவாதமாகும்;. பொருளாதார வாதம் முதலாளித்துவ அமைப்பின் எல்லைக்குள் போராடுவதன் மூலம், மனித இனம் முன்னேற முடியும் என்ற முதலாளித்துவ வர்க்க நலன்களைக் கொண்டோரின், வர்க்க போராட்டத்தை முடக்கும் வாதமாக இருந்தது. இதையே பெண்ணியவாதிகள் மார்க்சியத்தை அரைகுறையாகவும், திரிபு வழிகளிலும் புரிந்து கொண்டு திரித்து, மார்க்சியத்தின் மீது சேறு வீசப் பயன்படுத்தும் முதலாளித்துவக் கோட்பாடாகும். இதே போல் அராஜகவாதம் பொருளாதாரச் சுயேட்சை, மற்றும் புரட்சிகள் சுயதீனத்தை வழங்கி விடுவதாகக் கற்பனை பண்ணுகின்றனர். இதில் இருந்து கோட்பாட்டு ரீதியில் சிந்திப்போர் தாம் தம்மளவில் விடுதலையடைந்ததாகக் கற்பனையான போதையில் இருக்கவும், செயல்படவும் சிந்திக்கவும் பின்தங்கவில்லை.
மார்க்சியம் பெண்களின் பொருளாதாரத் தனித்துவத்தைக் கோரும் அதேநேரம், அதில் இருந்து பெண்ணின் புரட்சியை வர்க்கப் போராட்டத்தின் ஊடாக, பல பண்பாட்டுக் கலாச்சாரப் புரட்சி ஊடாகவே ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும் என்பதைத் தெளிவாக முன்வைத்துள்ளது. இதைத் தவிர எந்தக் கோட்பாட்டு நடைமுறையையும் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் போராட்ட வழியை, உலகில் யாரும் முன்வைக்கவில்லை, முன்வைக்கவும் முடியாது. பாட்டாளி வர்க்கக் குடும்பங்கள் சொத்துரிமை வடிவத்தில் இருந்து முதலாளித்துவச் சுரண்டலின் வடிவில் விடுவித்துக் கொண்டதால், அக்குடும்ப இணைவு என்பது சொத்துரிமை வடிவில் நீடிக்கமுடியவில்லை. இந்தக் குடும்பத்தின் இணைவு இலகுவானதாக மாறியது, மாறுகின்றது.
இதையொட்டி ஏங்கெல்ஸ் "ஒருதார மணமுறை நிலைத்த பிறகு உறுதியாக வேரூன்றிய, பெண்களைக் கொடுமைப்படுத்துகின்ற போக்கு மட்டும் ஒருவேளை இங்கே சிறிதளவு இருக்கலாம். எனவே பாட்டாளிக் குடும்பம், அதன் கறாரான அர்த்தத்தில் இனியும் ஒருதார மணத்தின் இரகத்தைச் சேர்ந்ததல்ல....... திருமணத்தை இரத்து செய்கின்ற உரிமையைப் பெண் நடைமுறையில் திரும்பப் பெற்றுவிட்டாள்..... பாட்டாளித் திருமணம் ஒருதார மணமாகுமே தவிர அந்தச் சொல்லின் வரலாற்றிற்குரிய அர்த்தத்தில் ஆகாது."3
சொத்துரிமைக் குடும்பம் என்பது மாறி அதன் எல்லைக்குள்ளான புதிய குடும்பம் உருவாகி வருகின்றது. இந்த ஒருதார மணங்கள் இலகுவானதாக உள்ளன. இங்கு பொருளாதார ரீதியில் ஆண் - பெண் சுதந்திரமாக இருப்பதும், முன்பு போல் ஆண் சார்ந்த பொருளாதாரக் குடும்ப வடிவம் நீடிக்க முடியாது பாட்டாளிக் குடும்பத்தில் தகர்ந்து போனது. அத்துடன் ஆண் - பெண் உழைப்பு என்ற கூட்டுப் பொருளாதாரத் தன்மைக்கு வெளியில் ஆணும் சரி, பெண்ணும் சரி வாழமுடியாத, சிந்திக்க முடியாத வகையில் சுரண்டல் கோரமாகியுள்ளது. இது சமூகம் பற்றிய கண்ணோட்டத்தைக் கூட்டுப் பொருளாதார எல்லைக்குள் சிந்திக்கத் தூண்டுகின்றது. இது சமூக ஐக்கியத்தைக் கீழ் இருந்து ஒழுங்கமைக் கின்றது. அத்துடன் பாட்டாளிக் குடும்பத்தின் பொருளாதார வறுமை நுகர்வுப் பண்பாட்டிலும் இருந்து எட்டவே வைத்துள்ளது. இருந்த போதும் தனிச் சொத்துரிமை மற்றும் நுகர்வுப் பண்பாட்டில் நீடிக்கும் சமூகம் என்ற வகையில் பாட்டாளிக் குடும்பமும் அந்தப் பண்பாட்டுத் தாக்கத்தின் எல்லைக்குள் நீடிக்கின்றது. இந்தப் பண்பாட்டுத் தாக்கம் அதன் முழுமையான வடிவில் இல்லா விட்டாலும், அதன் பலகூறுகள் நீடிக்கும் வரையில் இக்குடும்பத்திலும் நீடிப்பது விதியாகின்றது.
ஆண் - பெண்ணின் இணைவு என்பது ஏங்கெல்ஸ் குறிப்பிடுவதுபோல் "முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்பப்பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடமைகள் விடயத்தில் இருதரப்பினரும் சமநிலையில் இருக்க வேண்டும். இவ்விரண்டு கோரிக்கைகளும் முரணில்லாமல் நிறைவேற்றப்பட்டால் பெண் கேட்கக் கூடிய எல்லாமே கிடைத்து விட்டதாகவே இருக்கும்.''3
இந்த நிலை என்பது முழுமையில் ஒரு வர்க்கப் புரட்சியின்றி சாத்தியமில்லை. தனிச் சொத்துரிமை நீடிக்கின்றவரை உரிமைகளும், கடமைகளும் சமுதாயத்தின் அடிப்படை பிளவாக, அதுவே ஜனநாயகமாக, சுதந்திரமாக இருப்பதால் சாத்தியமில்லை. ஆண் - பெண் வேறுபாடு என்பது தனிச் சொத்துரிமையின் வடிவில் நீடிப்பது எதார்த்தமாகின்றது. தனிச் சொத்துரிமையின் வேறுபட்ட இயல்புகள், தன்மைகள், பிளவுகள் நீடிக்கும் வரை ஆண் பெண்ணின் வேறுபட்ட இயல்புகள், தன்மைகள், பிளவுகள் ஆணாதிக்கத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. அதாவது ஒரு சமுதாயத்தில் எங்கோ ஒரு மூலையில் நீடிக்கும் பிளவுதான், அனைத்தின் பிளவுக்குமான ஆதாரமாகின்றது. ஆதி மனிதச் சமுதாயத்தில் இருந்து மாறிவந்த தனிச் சொத்துரிமை ஆதிக்கத்திற்குப் பின்னால் பல பிளவுகள் புதிய பரிணாமத்துடன் மாறிவந்த போதும், தனிச் சொத்துரிமைக்கான பிளவுகள் நீடிப்பதால், அனைத்தும் அதில் இருந்து தோன்றியதால், ஆண் - பெண் பிளவுகள் தொடர்வது நீடிக்கின்றது.
தனிச் சொத்துரிமை மேலும் மேலும் இறுகி சிலரை நோக்கி மையப்பட சமுதாயத்தின் ஆவேசம் மேலும் கூர்மையாகின்றது. இதைத் தணிக்க மேலும் மேலும் இந்த எல்லைக்குள், அதீதமான சலுகையை, தொழில்நுட்ப வளர்ச்சி அனுமதித்த எல்லைக்குள் தனிச் சொத்துரிமையின் வழியில் திணிக்கப்படுகின்றது. அதேநேரம் சொத்துள்ள வர்க்கம் பெண்ணின் உழைப்பைச் சுரண்டி பெறுமதியாக்கி, சொத்தற்ற வர்க்கமாக விடுவித்ததன் மூலம், பாலியலில் ஏற்பட்ட சுதந்திரம் என்பது தனிச் சொத்துரிமையின் பாவம் பெற்று விபச்சாரமாக வெம்பி வீங்கிப் போனது.
இதையொட்டி ஏங்கெல்ஸ் "நம் காலத்தில் முதலாளித்துவப் பண்ட உற்பத்தி முறை பழைய பரம்பரையான பொதுமகளிர் முறையை எவ்வளவு அதிகமாக மாற்றித் தகவமைக்கின்றதோ, எவ்வளவு அதிகமாக அது பகிரங்கமான விபச்சாரமாக மாறுகின்றதோ அந்த அளவுக்கு அதன் விளைவுகள் மேன்மேலும் சீர்குலைவானவையாக இருக்கின்றன. மேலும் பெண்களை விட ஆண்களையே இது அதிகமாகச் சீர்குலைக்கிறது. பெண்களிடையில், விபச்சாரம் தன்வலையில் சிக்கிக் கொள்கின்ற பரிதாபத்துக்கு உரியவர்களிடையே தாழ்த்தி விடுகின்றது.''3
இன்று இந்த ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் உள்ளார்ந்த வளர்ச்சி விதி என்பது சிலரின் சொத்துரிமைக்குள் உலகம் உருளக் கோருகின்றது. இந்த வடிவம் ஆண் சார்ந்த குடும்ப ஆதிக்க, ஆணாதிக்க ஒருதார மணத்தைத் தகர்த்தது. அந்த இடத்தில் புதிய வடிவம் சார்ந்த குடும்பம் உருவாகின்றது. இதேநேரம் மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடி முதலாம் உலகத் தொழிலாளருக்குக் கொடுக்கும் சலுகைகள் ஆண் - பெண்ணின் நுகர்வு எல்லைக்குள் நகர்த்துகின்றது. பாலியல் என்பது நுகர்வு வேட்கைக்குள்ளாகி அனுபவித்துக் கழிக்கும் போக்கில், அதிகமான விபச்சாரத்தின் எல்லைக்குள் விரிவுபடுத்துகின்றது. ஆண் பாலியலை ஒருதார மணத்தில் ஆண் சார்ந்து அனுபவித்தது என்பது கற்பனையாகின்றது. பெண் அதை அனுபவிக்காவிட்டாலும், முன்பு பெற்றதைப் பெறமுடியாது போவது என்பது எதார்த்தமாகின்றது.
தனியுடைமையின் விரிவாக்கத்தால் கிடைத்த போலிச் சுதந்திரம், ஆண் - பெண்ணின் பாலியல் தேவையை மேலும் கடினமாக்கியுள்ளது. ஆண் - பெண்ணின் தனிச் சொத்துரிமை சார்ந்த தனிமனித ஆதிக்கச் சுதந்திரம், ஆண் - பெண்ணைப் பிளந்துள்ளது. இது முன்பைவிட ஆண் - பெண் உறவை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் சென்றுள்ளது. நடக்கும் உறவும் மேலும் ஆண் - பெண்ணின் இயல்பின் வேட்கைக்குப் புறம்பாக, விபச்சார நிலையில் நுகர்வுக்குள்; அன்னியப்படுகின்றது. இது இயந்திர வடிவம் பெற்று உறுப்பாகி இணைவதும் கலைவதுமாக இணைவையும், பிளவையும் வேகமாக்கியுள்ளது. அதாவது இயந்திரத்தின் வேகமான உற்பத்தித் திறன் எந்தளவுக்கு அதிகரித்ததோ, அந்தளவுக்குப் பாலியல் தேர்வும், பிளவும் அதிகரித்துள்ளது. முன்பு கைத்தொழில் உற்பத்தியில் இருந்த கை நேர்த்தியும் அதன் உள்ளடக்கமும், மூலதனத்தின் முன் இயந்திரத்தின் உறுப்பாகிய அதன் வேகத்தில் தொலைந்தது போல், பாலியல் புணர்ச்சியில் நிகழ்வதன் மூலம் விபச்சார நிலைக்குத் தரம் தாழ்த்தியுள்ளது.
திருமணம் என்பது ஒருதார மணத்தில் ஆண் - பெண்ணுக்கு இடையில் பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் எதார்த்தமாக்காத நிலை நீடிக்கும்வரை விபச்சாரம் பொதுவாக இருப்பது தவிர்க்கமுடியாது. இதை ஏங்கெல்ஸ் "ஒருதார மணம் நலிந்து போவதற்குப் பதிலாக முடிவில் ஆணுக்கும் சேர்த்து எதார்த்தமாகிறது''3 என்றார். ஆம் ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் காதலிக்கவும், பிரியவும் முடிகின்ற வாழ்வில், ஆணுக்குப் பெண்ணின் கடமைகள் தாழ்வு இன்றி முரண் இன்றி சமமாக மதிக்கப்பட்டு, ஒருவருக்குள் ஒருவர் வாழ்கின்ற வர்க்கமற்ற சமுதாயத்தில் ஒருதார மணம் ஆண் - பெண் என இருவருக்கும் எதார்த்தமாகின்றது. இது இல்லாதவரை ஆண் - பெண்ணின் இடைவெளி என்பது வர்க்கச் சமுதாயத்தின் தொடர்ச்சியாக நீடிப்பது இருக்கும். இதுவே மனித வரலாறாக இருப்பதுடன், சமூக விஞ்ஞானமாகவும் உள்ளது.