1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது. உண்மையில் ஆதிக்க வர்க்கம் எதுவோ அது சார்ந்து, மதம், இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் என்ற பல்வேறு கூறுடன் தொடர்புடையதாகவே, இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி வரலாற்று ரீதியாக இருந்துள்ளது. இங்கு இதற்கு வழங்கப்பட்ட பெயர் "திறமை" என்ற கௌவரமாகும்.
பிரிட்டிஸ் காலனித்துவ வாதிகளின் பிரித்தாளும் கொள்கை இந்த "திறமைக்கு" கடிவாளமிட்டது. 1939 இல் பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு 75.2 சதவீதமாகவும், பௌத்த பாடசாலைக்கு 19.3 சதவீதமாக இருந்தது. இங்கு தமிழ் பாடசாலைகள் பல கிறிஸ்தவ பாடசாலையாகவே இருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி ஏ, பி பாடசாலைகளாக உள்ள 40 உயர் பாடசாலைகளின் வரலாற்றை ஆராய்ந்தால் இது தெட்டத் தெளிவாக வெளிப்படுகின்றது.
இலங்கை பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்து பார்க்கின்ற போது
இனப்பிரிவு 1950 1967
சிங்களவர் 66,0 84.1
தமிழர் 24.5 14.1
மேலுள்ள வகையில் பல்கலைக்கழக அனுமதி இருந்தபோதும், தமிழர் என்ற அடையாளத்துக்குள் மலையக மக்களையோ, முஸ்லீம் மக்களையோ, யாழ்குடா அல்லாத மற்றைய பிரதேச மக்களையோ, யாழ்குடாவில் வாழ்ந்த அடிமட்ட சாதிகளையோ மற்றும் உழைக்கும் வர்க்கத்தையோ பிரதிபலிக்கவில்லை. இதை தொடர்ச்சியாக ஆதாரமாக புள்ளிவிபர ரீதியாக கட்டுரையின் தொடரில் பார்ப்போம். பல்கலைக்கழக அனுமதியில் தமிழரின் விகிதத்தில் கூட உயர்ந்த அந்தஸ்த்துகளை பிரதிபலித்த விஞ்ஞானக் கல்வியில் இனவிகிதங்களை, சில மடங்காக கடந்த நிலையில் தமிழரின் ஆதிக்கம் நிலவியது. பல்கலைக்கழக அனுமதி சதவீகிதத்தில்
1970 1970 1971 1971 1973 1973 1974 1974 1975 1975
சிங்க தமிழர் சிங்க தமிழர் சிங்க தமிழர் சிங்க தமிழர் சிங்க தமிழர்
பொறியியல் 55.9 40.8 62.4 34.7 72.1 24.4 78.8 16.3 83.4 14.2
விஞ்ஞானம் 68.0 28.6 67.0 31.2 73.1 25.9 75.1 20.9 78 1 9.5
மருத்துவம் 53.5 40.9 56.1 39.3 58.8 36.9 70.0 25.9 78.9 17.4
கலை 88.9 7.6 92.6 4.8 91.5 6.1 86.0 10.0 85.6 10.0
1970 களில் இனவிகிதம் கடந்த நிலையில் தமிழரின் ஆதிக்கம் விஞ்ஞானம் சார்ந்த துறையில் காணப்படுவதை மேலே நாம் காணமுடிகின்றது. 1972 தரப்படுத்தலுக்கு முன் பின் என்ற இரு வரலாற்று காலத்திலும் கூட இனவிகிதம் கடந்த தமிழரின் ஆதிக்கமே தொடர்ந்தும் காணப்பட்டது. தரப்படுத்தல் முறையை 1970-1975 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றியமைத்ததன் மூலமே தமிழரின் பங்கை குறைக்க முடிந்தது. இதன் பின்பு படிப்படியாக இனவிகிதத்தைத் தாண்டி சிங்களவரின் விகிதம் அதிகரித்து. இலங்கையின் எந்த பிரிவு அதிகாரத்தில் அதிகார வர்க்கமாக ஆதிக்கம் செலுத்தியதோ, அதற்கு இசைவாகவே பல்கலைக்கழக அனுமதி காணப்படுகின்றது. இதை நாம் மதரீதியாக ஆராயும் போது மேலும் துல்லியமாக நிறுவுகின்றது.
1970ம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதி மதம் சார்ந்து
கல்வித்துறை பௌத்தர் இந்து கிறிஸ்தவர் முசுலீம் ஏனையோர்
விஞ்ஞானம்
(உயிரியல், பௌதீகம்) 58.8 23.3 15.7 1.8 0.4
பொறியியல் 43.4 32.9 21.7 2.0 -
மருத்துவம் 46.1 31.5 19.8 2.4 -
பல்மருத்துவம் 41.4 51.2 4.9 2.5 -
விவசாயம் 53.6 27.9 13.9 4.6 -
விலங்கு மருத்துவம் 66.6 23.8 4.8 4.8 -
கலையியல் 86.4 5.9 4.4 3.3 -
சட்டம் 37.4 27.1 22.9 10.4 2.1
1960 மாணவர் தொகை 55.6 20.9 21.0 1.9 0.3
1965 மாணவர் தொகை 71.0 15.0 11.9 2.0 0.1
இலங்கையின் போலிச் சுதந்திரத்துக்கு பின்பும் கூட பிரிட்டிஸ் காலனித்துவ கிறிஸ்தவ கல்வி சார்ந்த மாணவர்களின் ஆதிக்கமும், கைக்கூலி சமூகமாக இருந்த தமிழரின் கல்வி ஆதிக்கமும் 1970 களிலேயே தெளிவுபடவே மீண்டும் வெளிபடுகின்றது. சுதந்திரத்துக்கு பின்பு இனம் மற்றும் மதம் சார்ந்து உருவான அரைக்காலனி நிலப்பிரபுத்துவ தரகு அரசுகள், கல்வியில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தின. இதிலும் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ தொடர்புடைய பிரிட்டிஸ்சாரின் எச்ச சொச்ச காலனித்துவம், கல்வியில் ஆதிக்க பிரிவாகவே தொடர்ந்தும் இருந்து வருவதை பல்கலைக்கழக அனுமதி நிறுவுகின்றது. இன்று மற்றைய பெரும்பான்மை இன ஆதிக்க பிரிவுகள் அதிகாரத்துக்கு வந்ததன் மூலம், மத அடிப்படையில் கிறிஸ்தவத்தின் விகிதத்தை குறைத்து வருகின்றது.
கிறிஸ்தவ ஆதிக்கம், தமிழரின் ஆதிக்கம் கல்வி முதல் அனைத்திலும் நிலவிய நிலையில், அதை முறியடிக்கவே சிங்கள இனவாதிகள் தாய்மொழிக்கல்வி, மதக் கல்வியை அமுலாக்கினர். இதிலும் மதக் கல்வியை பாடசாலையில் புகுத்தியது, இந்தியாவுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறானது. இதற்கு இலங்கையில் அதிகார வர்க்கமாக திகழ்ந்த யாழ் மேட்டுக்குடிகளின் ஆதிக்கமும், காலனித்துவ ஆதிக்க மதமாக திகழ்ந்த கிறிஸ்தவத்தின் ஆதிக்கமுமே இதற்கு தூணாகியது. இந்த வகையில் கல்வியில் உயர்ந்த வசதிகளையும் வாய்ப்புக்களையும் யாழ்குடாநாடு தொடர்ச்சியாக இன்றுவரை பேணமுடிகின்றது.
1988ம் ஆண்டு விஞ்ஞானக் கல்வியை மாவட்ட ரீதியாக ஆராய்கின்ற போது இது தெளிவுபடவே நிறுவுகின்றது.
1. பாடசாலை செல்லும் விஞ்ஞானமாணவர்கள்
2. விஞ்ஞான உயர் வகுப்பு உள்ள பாடசாலைகள்
3.விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள்
4. ஒரு விஞ்ஞான பட்டாதாரிக்கு விஞ்ஞான மாணவர்கள்
5.ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர் எண்ணிக்கை
மாவட்டம் 1 2 3 4 5
கொழும்பு 2,34,455 40 431 494 5,861
யாழ்ப்பாணம் 1,97,604 40 350 527 4,940
காலி 2,20,894 33 96 1,000 6,694
கண்டி 2,88,133 39 279 929 7,388
மொனராகலை 87,766 05 36 2,508 11,553
பதுளை 1,72,785 23 138 1,225 7,512
அம்பாறை 53,798 04 20 2,242 13,450
புத்தளம் 56,368 05 22 2,818 11,274
மட்டக்களப்பு 83,584 12 75 1,072 6,965
கல்முனை 72,279 14 60 1,166 5,163
மன்னார் 26,210 06 28 874 4,368
திருகோணமலை65,957 10 55 1,118 6,596
மேலுள்ள விஞ்ஞான பாடசாலைகள் எண்ணிக்கையும், மாணவருக்கான வசதிகளும், ஆசிரியர் செறிவும் தெளிவுபடவே கல்வியில் யாழ் மேலாதிக்கத்தை நிறுவுகின்றது. இங்கு தொண்டர் ஆசிரியராக செயற்படுவோர் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை. பிரிட்டிஸ் காலனித்துவம் தனது காலனித்துவ கைக்கூலி அதிகார வர்க்கத்தை உருவாக்க, கல்வியில் வழங்கிய சலுகை யாழ் மேலாதிக்கத்தை இன்றைய இன அழிப்புக்குள்ளும் பறைசாற்றுகின்றது. சிங்கள இனவாத அழித்தொழிப்பு ஒரு யுத்தமாக, அதுவே ஆக்கிரமிப்பாக மாறியுள்ள நிலையில், அரசு சேவையில் தமிழரின் எண்ணிக்கை இனவாத விகிதத்தை விட மிகவும் தாழ்ந்த நிலைக்குள் சரிந்துள்ளது. ஆசிரியர் தேவை நீண்ட காலமாக தமிழருக்கு வழங்கப்படுவது புறக்கணிக்கப்படும் இன்றைய நிலையிலும், யாழ்குடாநாட்டில் எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை. மற்றைய பிரதேசத்துடன் ஒப்பிடும் போது உயர்ந்த கல்வித்தரத்தை கொழும்புக்கு நிகராக பேணுகின்றது. உண்மையில் பாதிக்கப்பட்டது மற்றைய தமிழ் பிரதேசங்கள் தான். நடக்கும் போராட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் யாழ்குடாநாட்டுக்கே தொடர்ந்தும் கிடைக்கும் என்பது மற்றொரு உண்மையாகும்.
இதிலும் யாழ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மறுக்கப்பட்டது, இன்றும் மறைமுகமாக மறுக்கப்படுகின்றது. அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியை கோரியபோது தாக்கப்பட்டதுடன், பாடசாலைக்கான அவர்கள் செல்லும் வீதிகள் மூடப்பட்டது. அதையும் அவர்கள் மீறிய போது குடிநீர் கிணறுகள் நாசமாக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவங்கள் பல வரலாற்றில் பதிவாகியேயுள்ளது. ஏன் 1975களில் எனது ஊரில் உயர் சாதி மக்களும், தாழ்ந்த சாதி மக்களும் சம அளவில் இருந்த போதும், தாழ்ந்த சாதியில் இருந்து யாரும் மிகப்பெரிய பாடசாலையான யூனியன் கல்லூரியில் உயர் வகுப்பில் கற்க அனுமதிக்கப்படவில்லை. செல்வராசா என்ற மாணவனை கல்லூரியில் சேர்க்க எனது அப்பா கடுமையான போராட்டத்தை பாடசாலை நிர்வாகத்துடன் நடத்தினார். எனது வகுப்பிலேயே அந்த மாணவன் சேர்ந்த போது, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இழிவாடப்பட்டு கல்வியை தொடர முடியாதவனாக இருந்தான். இது தான் யாழ்குடா நாட்டின் அண்மைக்காலம் வரையான பொதுவான நிலை. ஏன் சாதிக்கு எதிரான பல போராட்டங்கள் நடந்த பின்பும், நிலைமை இதுதான். இப்படியிருக்க காலனித்துவ கல்வியின் ஆதிக்கம், உயர் சாதிகளின் கையில் மேட்டுக்குடிகள் சார்ந்தே காணப்பட்டது, காணப்படுகின்றது. இங்கு மற்றைய தமிழ் மாவட்டங்கள், முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்கள், மலையக பிரதேசங்களில் ஒரு விஞ்ஞான பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் வசதிகள் யாழ் குடா நாட்டுடன் ஒப்பிடும் போது, சில இடங்களில் அவை மடங்குகளாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் யாழ்குடாநாட்டு கல்வி வசதி மற்றும் சலுகையை நாம் 1950 முதல் 1970 என்ற தொடர்ச்சியான காலகட்டத்துடன் ஒப்பிடின் பிரமாண்டமான இடைவெளியில் காணப்பட்டிருக்கும. வசதியை அடிப்படையாக கொண்டு யாழ்குடாநாட்டு கல்விக்கு கிடைத்த சலுகையை, "திறமை"யாக காட்டுவது மற்றவனை ஏமாற்றுவதாகும். திறமை என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் ஒரே சூழலையும் உருவாக்கிய பின் நிறுவுவதே. இன்றைய உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா வகிக்கும் முதலிடம் கூட, இந்தியா, சீனா என்ற அதிகூடிய மக்கள் தொகை கொண்ட மக்களினத்துக்கு வாய்ப்பையும் வசதியையும் மறுத்த பின்பு அதன் மேல் நிறுவுவதே. உண்மையில் சொல்லப்போனால் இன்றைய உலகில் இடைவெளிகளை உருவாக்கியே, அதில் சிலர் தம்மைத் தாம் நிலை நிறுத்துகின்றனர். இந்த வகையில் யாழ்குடாநாட்டுக் கல்வி என்பது அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் தான் மட்டும் அனுபவித்த பின்பு, அதை விளைவாக கொண்ட அதிகாரத்தை நிறுவுவதே. இதற்கு பிரிட்டிஸ்காரனின் குண்டியை நக்கி பிழைக்க, உயர்சாதி யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் தயங்கவில்லை. உண்மையில் காலனித்துவத்துக்கு எதிராக போராடியவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற தன்மையால், அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு நிலையில் பின்தங்கிய சமூகமாக சிங்கள இனம் மாறியது. இந்த ஒடுக்குமுறையில் பிரிட்டிஸ்சாருக்கு தோளோடு தோள் நின்ற கைக்கூலி தமிழ் அதிகார வர்க்கம், தனது நிர்வாக அலகுகள் மூலம் மேலும் சிங்கள இனத்தை அடக்கி ஒடுங்க வைத்தது. இதை சிங்கள இனவாதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தியது.
காலனித்துவ சேவையும் அதற்கான காலனித்துவ கல்வி என்பன யாழ்குடா நாட்டை கல்வி தரத்தில் இன்று வரை உயர்தரத்தில் வைத்துள்ளது. விஞ்ஞான உயர் வகுப்பு கல்லூரிகளை இலங்கையில் ஆகக் கூடுதலாக கொண்ட நிலையில் (கொழும்பு சமமாக உள்ளது இது தலைநகருக்குரிய விதிவிலக்கு மட்டுமே. அத்துடன் இங்கும் யாழ் மேட்டுக்குடியின் கணிசமான ஆதிக்கம் உள்ளது), கொழும்புக்கு அடுத்ததாக 527 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில், ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு ஆகக் குறைந்த மாணவராக யாழ் மாவட்டம் 4940 மாணவர்களைக் கொண்ட சலுகைக்குரிய வசதியான கல்வியில் கொண்டு திகழ்கின்றது. இலங்கையில் வேறு சில மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, மாணவர் எண்ணிக்கை மூன்று மடங்கு குறைந்த நிலையில் யாழ் பாடசாலைகள் திகழ்கின்றது. இது உன்னதமான குடாநாட்டின் கல்வி வளங்களையும் வளர்ச்சியையும் வசதிகளையும் பறைசாற்றுகின்றது.
இலங்கையில் அதிகார வர்க்கத்தையும், கௌரவமான தொழிலையும், வசதியான வாழ்க்கையையும் வழங்கிய கல்வியும், அதைத் தொடர்ந்து கிடைத்த பல்கலைக்கழக அனுமதியில் தமிழரின் எண்ணிக்கையை இன விகிதம் கடந்த நிலையில் காணப்பட்டது. அதிலும் மருத்துவம், பொறியியல், விஞ்ஞான துறைகளில் தமிழரின் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.
இலங்கை வரலாற்றில் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக செயற்பட்ட யாழ் சமூகம், அந்த கைக்கூலி கல்வியில் முதன்மையிடத்தை பெற்றது. இதுபோன்று இலங்கை ஆட்சியை மையப்படுத்தி தலை நகரங்களிலும், யாழ்குடா நாட்டுக்கு சமச்சீராக கைக் கூலிகளின் சமூகம் உயர்ந்த கல்வித் தரத்தை பெற்றனர். இலங்கைக்கு தங்கத் தட்டில் வைத்து சுதந்திரத்தை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் வழங்கிய போது, காலனித்துவ நலன்கள் என்றுமே சிதைவடையவில்லை. மாறாக காலனித்துவ நலன்களை முந்திய கைக்கூலிகள் கையேற்று நடைமுறைப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டனர். போலிச் சுதந்திரத்தின் பின்பும் ஏகாதிபத்திய கல்விக் கொள்கை, ஏகாதிபத்திய அரைநிலப்பிரபுத்துவ அரைகாலனிய நடைமுறையை பேணிய தொடர்ச்சியில், அந்த கல்வியில் கைக்கூலி சமூகங்கள் முதன்மை இடத்தை தொடர்ச்சியாக பேணமுடிந்தது. அத்துடன் அதற்கான வளங்களை ஆதாரமாக கொண்ட ஒரு கைக்கூலி சமூகமாக இவை மிளிர்ந்தன. இந்தக் கைக்கூலித்தனம் இன்று வரை தமிழ் தேசிய போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்கவில்லை. மாறாக ஏகாதிபத்திய தரகாக செயற்பட தயாராகவே இன்றைய இனத் தேசியவாதிகள் விதிவிலக்கின்றியுள்ளனர்.
இந்த வரலாற்றுப் போக்கில் அடிமட்ட சமூகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், ஒரு வர்க்க அடிப்படையில் தேசியத்தை புரிந்து கொள்வது தொடங்கியது. இதை தடுத்துவிட கைக்கூலி கல்வியில் உள்ள சொகுசுக்கான வளத்தை பிரித்தாளும் வகையில் இனப்பிளவுக்கு வித்திட்டனர். உயர் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தாக கருதப்பட்ட உயர் தொழில்களில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி ஊடாக, பின்தங்கிய பெரும்பான்மை சிங்கள இளைஞர்களின் சிந்தனையை மளுங்கடிக்க முடியும் என்று ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டன. இதனடிப்படையில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தனர்.
இந்த தரப்படுத்தல் குறித்த வீதம் திறமை அடிப்படையிலும், மற்றவை பிரதேச அடிப்படையிலும் கொண்டு வரப்பட்டன. இது கொண்டு வந்த போது இதற்குப் பின்னால் பெரும் சிங்கள தேசிய இனவாத நோக்கம் இருந்தபோதும், இதை எதிர்த்த குழுக்களின் கண்ணோட்டமும் பிற்போக்கானதாகவே இருந்தது. கல்வி வளம் அற்ற பின்தங்கிய பிதேசங்களில் வாழும் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிராகவே இருந்தது. இது சிங்கள மாணவர்களை மட்டுமல்ல, பின் தங்கிய பிரதேசமான தமிழ் மாணவர்களுக்கும் எதிராக இருந்தது. வன்னி, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவே யாழ்குடாநாட்டு தமிழ் தேசியவாதிகளின் கண்ணோட்டம் காணப்பட்டது. இலங்கையில் மொத்தமாக தமிழ்மொழி பேசுவோரில் யாழ்குடாநாட்டை சார்ந்தவர்கள் அண்ணளவாக 15 சதவீதமாகும். இவர்கள் தரப்படுத்தலை எதிர்த்து 85 சதவீதமான பின் தங்கிய பிரதேச தமிழ் மக்களுக்கு எதிராகவே தமது தேசியத்தை முன்வைத்தனர். ஒட்டு மொத்தமாக சிங்கள மக்களை மட்டுமல்ல, 85 சதவீதமான தமிழ் மக்களையும் கூட எதிர்த்தே இந்த தேசிய போராட்டம் எழுந்தது. இந்த யாழ்குடாநாட்டில் வாழும் 15 சதவீதத்துக்குள்ளும் ஏழு சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வியை முத்தமிடாதவர்கள். ஆனால் அதிகாரத்தில் இருந்த சிறுபான்மை உயர் தமிழ் சமூகம், சொந்த பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு கிடைத்த சலுகைகளைக் கூட எதிர்த்தே நின்றனர். இதில் இருந்தே தமிழ் மக்களின் போராட்டம் வித்திடப்பட்டது. தமிழ் மக்கள் விகிதத்துக்கு அதிகமாகவே தரப்படுத்தலின் பின்பும் பல்கலைக்கழக அனுமதியிருந்த போதும், அதிகம் வேண்டும் என்ற ஜனநாயக விரோதக் கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ச்சியான இனப் பிளவும், இனவாதமும், யுத்தத்தின் இன்றைய வளர்ச்சியில் இந்த விகிதம் சரிந்துள்ளது என்பது இதில் இருந்து முற்றிலும் வேறானது.
அரசு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இன அடிப்படையில் தரப்படுத்தலை கொண்டு வந்த பின்பு, 1975 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்வோம்.
1.சனத்தொகை வீகிதத்தில்
2.மருத்துவம் பல் மருத்துவம் - மாவட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
3.மருத்துவம் பல் மருத்துவம் - தரப்படுத்தல் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாக கிடைத்திருக்க கூடியவை
4.பொறியியல் விஞ்ஞானம் - மாவட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
5.பொறியியல் விஞ்ஞானம் - தரப்படுத்தல் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாக கிடைத்திருக்க கூடியவை
மாவட்டம் 1 2 3 4 5
கொழும்பு 21.03 110 132 70 129
யாழ்ப்பாணம் 5.54 29 61 20 56
கண்டி 9.34 24 17 31 11
களுத்துறை 5.76 15 11 20 16
மன்னார் 0.61 1 1 1 -
வவுனியா 0.75 - - - -
மட்டக்களப்பு 2.03 6 4 7 -
அம்பாறை 2.14 - - 1 1
திருகோணமலை 1.51 3 1 5 1
காலி 5.80 29 18 20 24
மாத்தறை 4.63 8 05 15 20
இலங்கை 100 275 275 290 290
தரப்படுத்தலில் பிரதானமாக கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்கள் அதிகமாக பாதித்தது. இது போல் பொறியியல் துறையில் காலி மாத்தறையும் பாதித்தது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் மருத்துவத்துறையில் 4 அதிக இடங்களையும், பொறியியல் துறையில் 11 அதிக இடங்களையும் பெற்றனர். ஆனால் இந்த அதிக அனுமதியை மறுத்து அதை யாழ்ப்பாணத்துக்கு தாரைவார்க்க தமிழ் இனத் தேசியவாதிகள் கோரினர். ஒட்டுமொத்த தமிழர் என்ற கோசத்தின் கீழ், யாழ்ப்பாணத்தானின் நலன்கள் பொதுமைப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டன. இதற்கு மலையக, முஸ்லிம் சிறுபான்மையினங்களின் மொழியான தமிழ் என்ற அடிப்படையைக் கொண்டு, யாழ் நலன்களை தக்கவைக்க அந்த மக்கள் பலியிடப்பட்டனர். யாழ்ப்பாணம் அல்லாத பின் தங்கிய தமிழீழப் பகுதிகளில் தரப்படுத்தல் மருத்துவத்துறையில் 167 சதவீத அதிகரிப்பையும் பொறியியல்துறையில் 700 சதவீத அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இதையிட்டு யாரும் கவலைப்படவில்லை. மாறாக மூடிமறைத்தனர்.
அதே நேரம் யாழ்ப்பாணம் மருத்துவதுறையில் 32 இடங்களையும், பொறியியல் துறையில் 36 இடங்களையும் இழந்ததை முதன்மை விடையமாக்கி அதை இனவாதமாக்கினர். மொத்தத்தில் தமிழ் பிரதேசங்களில் மருத்துவத்துறையில் 28 இடங்களையும், பொறியியல்துறையில் 25 இடங்களையும் இழந்தது. வடக்கு கிழக்கில் தெரிவான தமிழர்கள் விகிதம் மருத்துவத்துறையில் 14.18 யாகவும், பொறியியல் துறையில் 11.72 யாகவும் இருந்தது. இதை தவிர கொழும்பு போன்ற பகுதிகள் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை. அனைத்து தமிழ் பகுதியையும் உள்ளடக்கிய வகையில் பொறியியலில் 14.2 சதவீதமாகவும், மருத்துவத்துறையில் 17.4 சதவீதமாகவும், விஞ்ஞானத்தில் 19.4 சதவீதமாகவும் காணப்பட்டது. கலைத்துறையில் முன்பை விட தமிழர்கள் அதிக அளவில் பல்கலைக்கழகம் சென்றனர். 1971 இல் கலைத்துறையில் தமிழர் 4.8 சதவீதமானவர்களே பல்கலைக்கழகம் சென்றனர். இது 1973 இல் 6.1 யாகவும், 1975 இல் 10 சதவீதமாகவும் மாறியது. இது தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றது. மொத்தத்தில் இனவிகிதத்திற்கு ஏற்ப தமிழரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதற்கு அடிப்படையான காரணம் மலையக மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் மறுக்கப்படும் கல்வியே என்பது வெள்ளிடைமலை. இலங்கையின் மொத்த 12 பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்கும் 33000 மாணவர்களில் 20 பேர் மட்டுமே மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். இனவிகிதப்படி இது 1834 இருக்கவேண்டும். கிடைக்க வேண்டியதில் 100க்கு ஒரு பங்கே கிடைக்கின்றது.
1981-82 முஸ்லீம் மாணவர்களின் மருத்துவத்துறை அனுமதியை எடுத்தால் 2.3 க்கு குறைவாகவே கிடைக்கின்றது. இதுவும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் அல்லாத அனைத்து மாணவர்களாலும் பங்கிடப்பட்டது. தரப்படுத்தலுக்கு முன் அதாவது 1969-70 இல் 0.9 சதவீதமான முஸ்லீம் மாணவர்களே மருத்துவத்துறைக்கு செல்ல முடிந்தது. உண்மையில் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை இனங்களின் கல்வியை பறிப்பதில், அவர்களின் கல்வித் தரத்தை சிதைப்பதிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் திட்டமிட்டே செயற்பட்டனர். ஏன் யாழ் கச்சேரியில் இருந்து கிராமப் பிறப்பு பதிவாளர்கள் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரை ஒருமைத் தன்மையில் அடையாளமாக்குவதில், வன்முறையாக தாங்களே பெயர்களை வைத்து சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிவரை கையாண்ட தமிழ் சமூகமல்லவா!
இந்த வகையில் தமிழர்கள் அதிகமாக ஆங்கிலேயர் காலத்திலும் பின்னர் நிர்வாகத்தில் இருந்த போது, சிறுபான்மை இனங்களின் அடிப்படைக் கல்வியுரிமையை மறுத்து, அதைக் கொள்ளையிட்டே உயர் அந்தஸ்துகளை நிறுவினர். இன்று வரை எமது போராட்டம் அதைத் தாண்டி ஒரு படி முன்னேறவில்லை. யாழ்ப்பாணத்தின் அற்ப பூர்சுவா கனவுகளையே இயக்கம் தலைமை தாங்குகின்றது. மலையக மக்களின் நலன்கள், முஸ்லீம் மக்களின் நலன்கள், பின்தங்கிய பிரதேச மக்களின் நலன்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் என எதையிட்டும் கவலைப்படாத போராட்டம், எப்படி அடிமட்ட மக்களின் சமூகக் கோரிக்கைகளை தீர்க்க போராடும். இதனால் தான் இந்தப் போராட்டம் குறுந்தேசிய இனப் போராட்டமாக சிதைந்துவிட்டது.
யாழ் நலன்கள் குறுந்தேசியமாகிய போது தரப்படுத்தல் எதிர்க்கப்பட்டு அவர்கள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன. 3.2.73 இல் யாழ்ப்பாணத்தில் கூடிய யாழ் உயர்வர்க்கங்கள் முன்வைத்த தீர்மானம் ஒன்றில் "பொறியியல், மருத்துவம், விஞ்ஞான பீடங்களுக்கு அனுமதி வழங்குகையில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு வேறுபாடு காட்டப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். மொழி அடிப்படையில் தெரிவு அமைவதால் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் தமிழ் மாணவர்கள் தொகை கணிசமான அளவுக்கு குறைந்திருக்கின்றது." என்று கூறியது. இதன் மூலம் தரப்படுத்தலில் மற்றைய பிரிவுகளை இட்டு யாழ் சமூகம் அக்கறைப்படவில்லை. யாழ் உயர் வர்க்கங்களின் பூர்சுவா கனவுகளாக இருந்த பொறியியல், மருத்துவம், விஞ்ஞான துறையை மையமாக வைத்தே தேசியத்தை முன் தள்ளினர். மற்றைய தமிழ் பிரதேசங்களின் தரப்படுத்தல் மூலம் கிடைத்த சலுகைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த எதிர்ப்பு ஒரு ஆயுதப் போராட்டமாக வளர்ச்சி பெற்றது.