இன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ஆயுதபாணியாவது தவிர்க்கமுடியாததாகியது.

 தரப்படுத்தல் என்ற ஒன்றை இலங்கை அரசு கொண்டு வந்த போது, இனவாத கண்ணோட்டமே அடிப்படையாக இருந்தது. இருந்த போதும் இதை எதிர்த்த தமிழ் பிரிவுகள் பிற்போக்கான மேல் தட்டு வர்க்க கனவுகளை மையமாக வைத்தும், யாழ் மேலாதிக்க மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இதை இன அரசியலாக்கினர்.

 

இந்த மேல்தட்டு கனவுகள் குறுந் தேசியமாகிய போதும், இந்த மேல் தட்டு பிரிவுகள் போராட களம் புகவில்லை. யாழ் மையவாத "எஞ்சினியர், டாக்டர்" கனவுகளை நனவாக்க தொடங்கிய போராட்டத்தில், அவர்கள் பங்குபற்றவில்லை. குறுந்தேசியம் ஆயுதப் போராட்டமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" சேவை செய்வதில்லை. தமிழ் பிரதேசங்களின் மருத்துவத் துறையில் மருத்துவர்களின் வெற்றிடமும், தேவையும் தெளிவாகவே இதை நிர்வாணமாக்கி உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில் கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறும் 0.82 சதவீதத்தினரிலும் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" மிகச் சிறு பிரிவே. இவர்கள் எம் மக்களின் வரிப்பணத்தில் கற்று அந்த மக்களுக்கு சேவை செய்ய மறுத்து நிற்பது மட்டுமின்றி, மற்றைய தொழில்களையும் அது சார்ந்த கல்வி முறைகளையும் கேவலப்படுத்துவதில் தொடங்கி இனம் மற்றும் நாடு கடந்தும் எம்மக்களை எட்டி உதைப்பதில் பின்நிற்கவில்லை. இது "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" பொதுச் சாராம்சமாகும்.

 

இன அடிப்படையிலான தரப்படுத்தலுக்கு முன்பு இலங்கைப் பல்கலைக்கழக தெரிவு என்பது, அதி கூடிய மதிப்பை யார் பெறுகின்றனரோ அவர்களுக்கே வழங்கப்பட்டது. இந்த அதிகூடிய மதிப்புகளை பெறுவதில் யாழ் தமிழர்கள் கூடுதலானவர்களாக இருந்துள்ளனர். இதில் பாதிப்பு ஏற்பட்ட போதே, ஆயுதப் போராட்டத்தின் முதல் விதைகள் ஊன்றப்பட்டன. அதி கூடிய மதிப்பெண்ணை யாழ் சமூகம் எப்படி பெற முடிந்தது. இதை நாம் பிரிட்டிஸ் காலனித்துவ அமைப்பிலேயே தேடவேண்டும். காலனித்துவ காலத்தில் பிரித்தாளும் தந்திரத்துக்கு இசைவாக, இலங்கையில் முதல் கைக்கூலிகளாக பலியானவர்கள் யாழ்ப்பாணத்து தமிழர்களாவர். சிங்கள பகுதியில் பிரிட்டிசாருக்கு இருந்த எதிர்ப்புக்கு மாறாக யாழ் மேட்டுக்குடி தமிழர்கள், பிரிட்டிசாரின் கால்களை நக்கினர். இலங்கையை நிர்வாக ரீதியாகவும், அடக்கியாளவும், உள்ளுர் காலனித்துவ கைக்கூலிகளாக செயற்படவும் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி தமிழர்களே முன்வந்தனர்.

 

மற்றைய பகுதிகளில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம், எதிர்ப்பு, பகிஷ்காரம் என்ற ஒரு தொடர் போராட்ட மரபை பேணிய போது, யாழ் தமிழன் வெள்ளையனின் எடுபிடியானான். இந்த எடுபிடி கைக் கூலித்தன அடக்குமுறையை கையாள, அவனுக்கு காலனித்துவ கல்வி அளிப்பது அவசியமாகியது. இதனால் யாழ் பிரதேசத்தில் காலனித்துவ கல்விக்காக பாடசாலைகள் உருவாக்கப்பட்டது. இந்த கல்வி கிறிஸ்தவ மதத்தை விரிவாக்கவும் காலனித்துவ கைக்கூலிகளை உருவாக்கும் ஆங்கில கல்வியை அடிப்படையாகவும் கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1911ம் ஆண்டில் இலங்கையில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும், கரையோரச் சிங்களவர்கள் 3.5 சதவீதமாகவும், கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் காணப்பட்டனர். ஆங்கிலேயருக்கு இணையாக ஆங்கிலம் பேசிய இந்த வர்க்கம் இலங்கையின் நிர்வாகத்தில் ஆங்கிலேயரின் கால்களை நக்கினர். இதனால் கைக்கூலிகளுக்கு கிடைத்த சுகபோக வாழ்க்கை சார்ந்து உறவான கல்வி மீதான மோகம், யாழ் மேட்டுக்குடியின் ஆதிக்கத்தை இலங்கையிலேயே கொடிகட்டி பறக்கும் அளவுக்கு வளர்ச்சியை பெற்றது.

 

மறு தளத்தில் மத அடிப்படைவாதிகள் காலனித்துவத்துக்கு எதிராக அல்லாது, சைவக் கல்வி சார்ந்த தமிழ் என்ற அடிப்படையில், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் கல்விக்கு மறுபக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்தனர். 1872 இல் வண்ணார்பண்ணையில் ஒரு பாடசாலை உருவாக்கப்பட்டது. 1890 இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் ஒன்றையொன்று வரைமுறைக்கு உட்பட்ட எதிர்ப்பை முன்வைத்த போதும், இரண்டும் அக்கம்பக்கமாக யாழ் மேலாதிக்க வர்க்கங்களின் நலன்கள் சார்ந்து இணைந்து ஒரே குடையின் கீழ் நின்றன. இதனால் இந்த இரு கல்விமுறையும் யாழ் சமூகத்தின் கல்வி தன்மைக்கான சூழலை இலங்கையில் தனித்துவமாக உயர்த்தின.

 

இதனால் கல்வி வளங்கள் பெருகின. யாழ் உற்பத்திமுறை இதற்கு இசைவாக ஊக்கமளித்தன. பணப்பயிர் உற்பத்தி சார்ந்து உருவான யாழ் பூர்சுவா கண்ணோட்டம், இந்த கல்விக்கு ஊக்கமளித்தது. காலனித்துவ கைக்கூலிச் சேவைக்காக கிடைத்த ஊழியம், யாழ் ப+ர்சுவா சமூக அந்தஸ்தை முன்நிலைப்படுத்தியது. ஒட்டு மொத்த சமூக கண்ணோட்டமே இந்த கைக்கூலி பணம் சார்ந்து, மற்றைய இனங்களையும் பிரதேசங்களையும் மக்களை இழிவாக கருதியது. குறிப்பாக "வன்னியன், தோட்டக்காட்டான், கிழக்கான், தீவான் போன்று பல இழிவாடல்களும்" பிரதேசம் சார்ந்த அடக்குமுறைகளும், மற்றைய இனங்களான மோட்டுச் சிங்களவன், தொப்பிபிரட்டி, மாடுதின்னி, காக்கா என்று பல இழிவாடல்கள் மூலம் இலங்கை சமூகத்தையே கொச்சைப்படுத்த யாழ் மேட்டுக்குடி சமூகம் என்றும் பின்நிற்கவில்லை. இந்த யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிகள் இலங்கையிலேயே மிக மோசமான சாதிய ஒடுக்குமுறையை கட்டமைத்ததுடன், அவர்களின் அடிப்படை கல்வி உரிமையை மறுத்து இழிவாடியும் தனது உயர் அதிகாரத்தை அந்தஸ்தை தக்கவைத்து, இலங்கையில் உயர்ந்த ஒரு வர்க்கமாக நீடிக்க ஆங்கிலேயரின் கால்களை நக்கி வாழ்ந்த கைக்கூலி உயர் பதவிகளும், அதிகாரமும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருந்தன. இதை நாம் கடந்த கால நடைமுறையுடன் ஆராய்வோம்.