மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.
இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.
சமூகத்தின் உயிர்த்துடிப்பான செயல்பாடுகளை எல்லாம் முடக்கி, அதன் இயல்பான இயங்கியல் வாழ்வியலை சிதைத்து, மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டு, 'தேசியம்" 'ஜனநாயகம்" என்பதை, தமது பாசிச வித்தையாக்கினர். இதை மனித முகம் கொண்ட ஒன்றாக காட்டுகின்றனர். தமது இந்த சொந்த செயலுக்கு ஏற்ப மக்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி, அவர்களை எல்லாம் ஊமையாக்கி விடுகின்றனர் இந்தப் பாசிட்டுகள்.
மக்களுக்கு எந்த ஜனநாயக உரிமையும் கிடையாது என்பதே, இவர்களின் கொள்கையாகும். இவர்கள் உரிமை என்பது ('தேசியம்" முதல் 'ஜனநாயகம்" வரை), தமது தேவைகளுக்கு ஏற்ப மக்களைப் பயன்படுத்துவது தான். அதாவது தமது சொந்த நலனுக்கு உட்பட்டதே. எந்த மனித உரிமைகளையும், மக்களுக்கு இவர்கள் அனுமதிப்பதில்லை. இது தான், இவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல். புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை இதைத்தான் வெட்கமானமின்றி செய்கின்றனர்.
மக்கள் வாழ்வை தீர்மானிக்கும் பொருளாதார அமைப்பை, எகாதிபத்திய சூறையாடலுக்கு ஏற்ப சுரண்ட அனுமதிக்கின்ற கொள்கையை வீரியமாக நிலைநாட்டவே, மனிதவுரிமை மீறல்களை தமது அரசியலாக்குகின்றனர். மக்கள் வாழ்வை வளப்படுத்தும் வகையில், மக்களுக்கு என்ற ஒரு பொருளாதாரக் கொள்கையை இவர்கள் கொண்டிருப்பது கிடையாது. மாறாக பொறுக்கித் தின்னும் தமது கொள்கையையே, மக்களின் கொள்கை என்கின்றனர். அரசின் கால்களை நக்கியும், எகாதிபத்தியத்திடம் கையேந்தியும் நிற்பதன் மூலம், மக்களுக்கு சேவை செய்வதே தமது மக்கள் அரசியல் என்கின்றனர். இப்படி மக்களை எகாதிபத்தியத்திடம் விபச்சாரம் செய்ய அழைத்துச் செல்லும் மாமாக்கள் தான் இவர்கள். இது தான் இவர்கள் கொள்கை, அரசியல் என எல்லாம். இதைத் தாண்டியதல்ல இவர்களின் அரசில் முழக்கங்களான 'தேசியமும்" 'ஜனநாயகமும்".
இதனால் இந்த மாமாக்கள், மக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றனர். இவர்களின் மாமா அரசியலை மக்கள் ஏற்க மறுப்பதால், இவர்களால் மக்களைச் சார்ந்து நிற்க முடிவதில்லை. மாறாக ஆயுதங்களையும், ஆயுதம் ஏந்திய அரசுகளையும் சார்ந்து நின்றபடி, மக்களை எதிரியாகவே கருதி வெறுக்கின்றனர். மக்களின் உரிமைகள் என்ற பெயரால், இவர்கள் அதை மறுப்பவராகி விடுகின்றனர்.
தேசியம், ஜனநாயகம் மக்களின் உரிமைகளல்ல என்று இரண்டில் ஒன்றை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தியபடி, இரண்டையும் இருதரப்பும் மக்களுக்கு மொத்தமாகவே மறுக்கின்றனர்.
இது தான் இன்று ஆதிக்கம் பெற்ற அரசியல் போக்கு. இதற்குள் தான் அனைவரும் சாம்பிராணி போட்டு, ஆரத்தி எடுக்கின்றனர். இந்த பாசிசத்துக்கு எதிராக, இந்த மாமாக்களின் அரசியல் விபச்சாரத்துக்கு எதிராக, நாம் மட்டும் நீண்ட காலமாக எதிர்வினையாற்றுகின்றோம்.
இல்லையில்லை, இது பாசிசமில்லை என்கின்றனர். புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பில் இருந்து இது எழுகின்றது. எதிர்த்தரப்பு பாசிசம் தான், ஆனால் தாமல்ல என்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார அரசியல் செயல்பாட்டை முடக்கி, அவர்களை ஒடுக்கியபடி, தாம் மக்களுக்காகத் தான் இந்த ஒடுக்கும் அரசியல் செய்வதாக பீற்றுவதே பாசிசத்தின் வெளிப்பாடாகும்.
நாம் முதன் முதலில் பாசிசம், யாழ் மேலாதிக்கம், யாழ் மையவாதம், கிழக்கு மேலாதிக்கம், குறுந்தேசியம், புலியெதிர்ப்பு, என்ற நீண்ட பல அரசியல் கலைச்சொற்களை, அரசியல் போக்கின் மீதாக பயன்படுத்தியது என்பது, மக்களின் உரிமையின் அடிப்படையிலானது. ஆனால் புலி மற்றும் புலியெதிர்ப்பு இந்தச் சொற்களை தமது சொந்த நோக்கில் திரித்தே, மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தினர். இப்படி பாசிசம் அரசியல் திரிபுகள் ஊடாக அரங்கில் காணப்படுகின்றது. உதாரணமாக 'ஜனநாயகம்", 'தேசியம்" என்பது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது. ஆனால் அந்த சொல்லுக்குரிய அரசியலை மறுத்து அதைத் திரித்து பாசிசம் தனக்கு ஏற்ப பயன்படுத்துகின்றது. தத்தம் சொந்த நலனுக்கு ஏற்ப அதைக் குதறி, பின் அதைக்கொண்டு மக்களை ஒடுக்குகின்றது.
இப்படி எம் சொந்த மண்ணில் மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மறுக்கும் ஆயுதமேந்திய குண்டர்கள், 'ஜனநாயகம்", 'தேசியம்" என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவே இயங்குகின்றனர். இந்த எதார்த்தம் பளிச்சென்று இருக்க, மக்கள் அங்கு இவர்களுடன் உணர்வு ப+ர்வமாக இணங்கி வாழ்வது கிடையாது. இந்த குண்டர்களின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு, மக்கள் ஆதரவு கொண்ட அரசியல் முகம் எதுவும் கிடையாது. எந்த மக்கள் அரசியலையும் அது கொண்டிருப்பதில்லை.
களியாட்ட விழாக்களையும், கூத்துக்களையும் போட்டு அரசியல் செய்ய முனைகின்றனர். பிணங்களை காட்டி அனுதாபத்தையும், வெற்றியையும் பற்றி நம்பிக்கை கொள்ளக் கோருகின்றனர். அதே நேரம் மக்கள் அச்சம் பீதி கொள்ளும் வகையில், மக்களை மிரட்டும் வகையில், மனிதர்களை கொன்று அப்பிணங்களை சமூகத்தினுள் எறிகின்றனர்.
இப்படிப்பட்ட புலி - புலியெதிர்ப்பு அரசியலுக்கு எந்த மனித முகமும் இருப்பதில்லை. 'கொல்" என்ற மந்திரம் தான், இவர்களின் உயிர்.
இந்த நிலையில், இதற்கு ஒரு அரசியலை, மனிதமுகமூடியைக் கொடுப்பது புலம்பெயர் சமூகம் தான். புலிப் பாசிசத்தையும், புலியெதிர்ப்பு பாசிசத்தையும் நியாயப்படுத்துவது இந்த புலம்பெயர் அறிவுசார் சமூகம் தான். இதற்கு வெளியில், அதனால் அரசியல் செய்ய முடிவதில்லை. அங்கு செய்வதை நியாயப்படுத்தும் அறிவுசார் முயற்சி, பாசிசக் கோட்பாடாகின்றது. அங்கு புலி – புலியெதிர்ப்பு குழுக்களின் அரசியல் என்பது, மக்களை ஒடுக்குகின்றதும் அதே நேரம் கொல்வதையும் தொழிலாகக் கொண்ட குண்டர் செயல்பாடுதான்.
இதற்கு ஏற்ப பாடும் புலம் பெயர் அரசியல், புலி - புலியெதிர்ப்புக்கு ஏற்ப இயல்பாகவே பாசிசமயமாகிவிடுகின்றது. புலம்பெயர் பாசிசம் புலியைக் கொல் என்ற புலிஒழிப்பையும், புலி அல்லாதவனைக் கொல் என்ற துரோக ஒழிப்பையும் வைத்து, அதை நியாயப்படுத்துவதே இங்குள்ளவர்களின் பொது அரசியலாகின்றது. இது இயல்பாகவே பாசிசத்தை தனது சிந்தனை முறையாக, செயல்முறையாக கொண்ட ஒரு கோட்பாடாகின்றது. இதற்கு ஏற்ப நியாயப்படுத்தும் ஒரு சிந்தனை முறை, சொந்த மண்ணில் கொலைவெறி பிடித்து அலையும் கும்பலுக்கு ஏற்ப உருவாகின்றது. புலி மற்றும் புலியெதிர்ப்புக் கொலைகாரக் கும்பலுக்கு, இப்படி புலம்பெயர் சமூகம் சித்தாந்தம் வழங்குகின்றது. இதை மனித முகம் கொண்ட ஒன்றாக காட்டி, புலம்பெயர் புல்லுருவிகள் நியாயப்படுத்துவதே அவர்களிள் அரசியலாகின்றது. மக்களுக்கு எதிரான மாமா வேலையே இவர்களின் அரசியல். இதுவே தான் பாசிச கோட்பாடாகின்றது.
பி.இரயாகரன்
03.06.2008