book _1.jpgக டந்த மூன்றரை வருடங்களாக நடந்த யுத்தநிறுத்தம் எதைச் சாதித்துள்ளது? இந்தக் கேள்வி மிகச் சிக்கலுக்குரிய பல விடையங்களை உள்ளடக்கியது. ஆனால் பொதுவாக இது பேரினவாதத்தின் வெற்றியாக இருப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது. அடிப்படையில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்காத எல்லா நிலையிலும் எது நடக்குமோ அதுவே நடந்துள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியை இந்தளவுக்கு யாரும் பலாத்காரமாகக் கையிலெடுத்து, அதைச் சிதைத்தது கிடையாது.

 

கடந்த மூன்றரை வருடமாகத் தமிழ் மக்களுக்காகப் புலிகள் என்ன செய்தனர் என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது. இந்த நிலையில் பேரினவாதத்தின் வெற்றி தான் எங்கும் எதிலும் பிரதிபலித்தது. இது எடுத்த எடுப்பில் இலகுவாகவே நாம் புரிந்து கொள்ளக் கூடியது. இதற்கு ஒரேயொரு விடையத்தை மட்டும் ஆராய்ந்தாலே போதுமானது. அதாவது யுத்தமற்ற அமைதியும், நடந்த பேச்சுவார்த்தைகளும் என்று நீடித்த ஒரு நிலையிலும் கூட, பேரினவாதம் தனது சொந்தக் கொள்கையை எந்த இடத்திலும் மாற்றிவிடவில்லை. அதாவது இலங்கையின் பேரினவாதக் கட்சிகள் எவையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தங்கள் தரப்பு தீர்வு என்ன என்பதை எங்கும் முன்வைக்கவில்லை. இது எதைக் காட்டுகின்றது. பேரினவாதத்தின் வெற்றியைத் தான் எடுத்துக் காட்டுகின்றது. இது பேரினவாதத்தின் வெற்றிக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும். புலிகளின் பேச்சுவார்த்தைகள் கூட இதை உருவாக்கவில்லை.


பல நூற்றுக்கணக்கான அறிக்கைகள், பல நூறு உரைகள் முதல் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனையைக் கூட ஏற்றுக் கொள்ள எந்தப் பேரினவாதக் கட்சியும் முன்வரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ் மக்களுக்கும் கூட, தமது தரப்பு பிரச்சனை என்னவென்று தெரியாது இருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனை என்னவென்று உங்களை நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ள முனையும் போது, இந்த உண்மை பளிச்சென்று உங்களுக்குத் தெரியவரும். அத்துடன் கடந்த மூன்று வருடத்துக்கு மேலாக என்னதான் நடந்தது என்று எம்மை நாம் கேட்டால், எதுவும் எமக்கு தெரியாத நிலையில் நாம் உள்ளோம். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக கூறிக் கொள்ளும் புலிகளும், இதைத் தமிழ் மக்களுக்குச் சொல்லவில்லை. உண்மையில் நீடித்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஒரு தேனிலவாக மட்டும் இருப்பதை யாரும் எளிதில் மறுத்துவிட முடியாது.


உண்மையில் நீடித்த அமைதியின் ஊடாகப் பேரினவாதிகள் புலிகளைப் பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் என்றுமில்லாத வகையில், புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டே ஆழமான பிளவை உருவாக்கியுள்ளனர். சாதாரண மக்கள் ஆழமான புலி விரோத உணர்வுள்ளவராக மாறியுள்ளனர். மக்களிடையே மௌனிக்கும் அமைதிக்குள், கொந்தளிக்கின்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய உணர்வு சார்ந்த கண்ணோட்டத்தைத் தகர்த்துள்ளனர். அத்துடன் புலிகளுக்குள் நடந்த மிகப் பெரிய பிளவு பிரதேசப் பிளவாகி, புலிகளால் சரி செய்ய முடியாத வகையில் தொடர்ந்து அகலமாகி வருகின்றது.


எங்கும் எதிலும் தமிழ் மக்களுக்கும் புலிக்கும் இடையிலான சமூகப் பிளவை ஆழமாக்கியுள்ளனர். உதாரணமாகப் புலம் பெயர் தமிழர்கள் சுனாமிக்குப் புலிகளிடம் கொடுத்த நிதிக்கு நடந்த கதியைப் பார்த்து, புலம் பெயர் சமூகத்தின் கணிசமான பகுதியினர் புலிக்கு எதிராக மாறியுள்ளனர். இப்படி பல நூறு சம்பவங்கள். உண்மையில் பேரினவாதம் புலிகளைப் புரிந்து கொண்டு, தமிழ் மக்கள் புலிகளைச் சொந்த அனுபவத்தின் ஊடாக புரிய வைத்து வெறுக்க வைத்துள்ளனர். இது பேரினவாதத்தின் மிகப் பெரிய சாதனை. இந்தச் சொந்தத் தற்கொலைப் பாதையைத் தெரிவு செய்ததே, புலிகளின் கொள்கைதான். உண்மையில் புலிகளின் மக்கள் விரோதக் கொள்கையைத் தான், பேரினவாதம் தனக்குச் சார்பாக மாற்றியமைத்தது.


இந்த நிலையில் ஒரு யுத்தத்தை நோக்கிய புலிகளின் வலிந்த அறைகூவல்கள் தொடர்ச்சியாக விடப்படுகின்றன. அமைதிக்குப் பிந்திய நிலையை அடிப்படையாகக் கொண்டு பல பத்துக் கட்டுரைகளைக் கடந்த மூன்று வருடத்தில் எழுதியிருந்தேன். இரண்டு நூல்களைக் கூட இதனடிப்படையில் வெளியிட்டு இருந்தேன். நாம் எதிர்வு கூறியபடி தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அமைதி இருப்பதை மீண்டும் மீண்டும் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மீண்டும் ஒரு அரசியல் தவறாகவே யுத்தத்தை நோக்கிய அறைகூவலைப் புலிகள் விடுகின்றனர். மூன்றரை வருடங்களாக எதையும் மக்களுக்காகச் சாதிக்காத புலிகள், யுத்தத்தின் மூலம் கூட எதையும் மீண்டும் மக்களுக்கு பெற்றுத் தரப் போவதில்லை. இதுதான் எதார்த்தம். அமைதி மக்களை ஒருவகையில் துன்புறுத்தியது என்றால், யுத்தம் மற்றொரு வகையில் துன்புறுத்த விரும்புகின்றது. இதுவே இன்றைய யுத்த கோசங்களின் உள்ளடக்கமாகும்.


புலிகள் யுத்தத்தை நோக்கி முன்வைக்கும் காரணங்களைத் தாண்டி, முன் கூட்டியே புலித் தலைவர்கள் யுத்த அறைகூவல்களை விடுத்து வந்தனர் என்பது மற்றொரு பக்க உண்மையாகும். பேச்சு வார்த்தைகளின் தொடர் தவறுகளே, புலிகளைச் சிதைக்கத் தொடங்கியது. இதனால் யுத்தத்துக்குச் சென்றால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்பது புலித் தலைவர்களின் நிலையாகும். அதை மூடிமறைத்தபடி உளறிக் கொட்டும் காரணங்களை முன்வைத்தபடி, யுத்த அறைகூவலை விடுகின்றனர்.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் தராது என்ற உண்மையைக் கூட தமிழ் மக்களிடம் சொல்ல முடியாத நிலைக்கு புலித்தலைவர்களின் அரசியல் வங்குரோத்து, அற்பத்தனமான சில கோரிக்கைகளுக்குள் முடங்கி நின்றது. திடீரென்று யுத்தத்தை நோக்கி நகர முனைகின்றனர். இதைப் புலிகளின் முக்கிய தளபதியான பொட்டம்மன் அண்மைய தனது உரையில் இராணுவம் மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றõர். அதை அவர் ""சிங்கள அரசாங்கம் போரைத் தொடங்கும் பழியை எமது தலையில் போடும் வகையில் காரியங்களை ஆற்றி வருகிறது. சிறிலங்காப் படையினர் நேரடியாகவே ஈடுபட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் எங்களைச் சீண்டி யுத்தத்துக்கான அறிவித்தலை நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் நேரடியாகச் சொல்லக்கூடியது'' என்று கூறுவதன் மூலம், யுத்தத்தை அரசு தொடங்க மறுப்பதைப் பொட்டம்மன் ஒத்துக் கொள்கின்றார். மறுபக்கத்தில் யுத்தத்தை நோக்கி புலிகளின் முன்முயற்சியை பொட்டம்மனே விளக்குகின்றார். அதை அவர் ""யுத்தம் எந்த வேளையிலும் எந்தக் கணத்திலும் வெடிப்பதற்கான நிகழ்வு நடக்கக் கூடும். அந்த வகையில் எம்மை இராணுவ ரீதியில் பலப்படுத்தி உண்மையான பலத்தை நாங்கள் எமது செயலாற்றலின் மூலம் வெளிப்படுத்தும் அந்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டியதே இன்று நாம் செய்ய வேண்டியது'' என்கின்றனர். யுத்தத்துக்கான வழிகள் தேடப்படுகின்றன அல்லது அவை உருவாக்கப்படுகின்றன. அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றனர். இதுவே புலிகளின் யுத்த வழியாக உள்ளது. தமிழ் மக்களின் உணர்வு யுத்தத்துக்கு எதிராக உள்ள நிலையில் புலிகள் யுத்தத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளனர். இதனால் தான் உடன் போரைத் தொடங்குங்கள் என்று பல பினாமிகளின் பெயர்களில் புலிகளே தொடர் அறிக்கை விடுக்கின்றனர்.


பேரினவாதத்தின் மிக நுட்பமான செயல்திறம்மிக்க நடத்தைகள் அனைத்தும், புலிகளின் பலவீனங்கள் மீதுதான் மீண்டும் மீண்டும் கட்டப்படுகின்றது. பேரினவாதம் முரண்பட்ட பல கட்சிகளாக இருந்த போதும், அதை ஒருமுகப்படுத்துவதில் ஒன்றுக்கு ஒன்று உதவுகின்றன. புலிகள் பேரினவாதிகளை எதிர்கொள்ள தமது குறுகிய வட்டத்தில் குறுகிய சிந்தனையில் அணுகி, பேரினவாதச் சேற்றில் புதைந்து போகின்றனர். இதில் இருந்து மீள்வதாயின் மாற்றுவழிகளே அவசியமானது. அதைவிடுத்து யுத்தத்தை நோக்கி செல்ல முனைவது, சர்வதேச தலையீட்டுக்கான மிகவும் ஆபத்தான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்வதாகும். அத்துடன் யுத்தம் மாற்றுத் தீர்வல்ல. யுத்தம் மூலம் எதைத்தான் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க போகின்றார்கள்? அமைதி சமாதானம் போல் யுத்தமும் கூட மக்களுக்கு எதையும் பெற்றுத் தராது.


இந்த நிலையில் புலிகள் யுத்தத்ததைத் தாமாகவே தேர்ந்து எடுத்தால், இதனால் என்னதான் நிகழும் என்ற கேள்வியை எழுப்பினால், தமிழ் மக்களின் அழிவைத் தவிர எதையும் சுட்டிக் காட்ட யாராலும் முடியாது. இன்று யுத்தம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக அமையுமா? அல்லது இன்று தொடரும் அமைதி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக அமையுமா? என்றால், இரண்டுமே தமிழ் மக்களுக்கு இன்று எதிராகவே உள்ளது. இதில் யுத்தம் மிகப் பெரிய அழிவையும், மரண அவலங்களையும் மக்களுக்குப் பரிசளிக்கும். ஆனால் முடிவில் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்றால் எதுவுமில்லை.


மறுபடியும் புலிகள் ஆரம்பிக்க முனையும் யுத்தம், முன்னைய காலங்களைவிட மிக மோசமான சர்வதேச எதிர்ப்புக்குள்ளாகி விடுவதை யாரும் எவரும் தடுக்க முடியாது. ஏன் யுத்தம் மூலம் தமிழீழத்தைப் பிடித்து விடுவதாகச் சொன்னால், அதை அங்கீகரிக்க ஏகாதிபத்தியங்கள் ஒருநாளுமே முனையாது. அதற்குரிய எந்தச் சூழலையும் புலிகள் உருவாக்கவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு வெளியில் தனித்து நிற்க முடியாத வகையில், தேசியப் பொருளாதாரத்தை அழித்து நாசமாக்கி விட்டனர். அன்னிய உதவி இன்றி நாட்டை மீள கட்டமுடியாது என்பது, புலித் தேசியமாக உள்ள நிலையில், யுத்தம் மூலம் நாட்டைப் பிடித்து என்ன செய்வது, யாரிடமாவது ஒரு பதில் உள்ளதா?


முதலில் புலிகள் தொடங்கிய பேச்சு வார்த்தையின் அரசியல் உள்ளடக்கம் முற்றாகவே தவறானது. இலங்கை பேரினவாதத்தின் போக்கை மதிப்பிடத் தவறியதன் மொத்த விளைவே இது. எல்லாவற்றையும் குண்டுகளால் சரி செய்ய முடியும் என்ற புலிகளின் நம்பிக்கை, பேச்சு வார்த்தையையே பேரினவாதத்துக்கு சார்பாக வழிநடத்திச் சென்றனர். தமிழ் மக்களின் பிரச்சனையைப் புலிகள் புரிந்து கொண்ட விதமே முற்றாகத் தவறானது. எப்போதும் தாம் மட்டுமே உலகம் என்று சிந்திக்கும் போக்கு, மொத்த போராட்டத்தையும் முட்டுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி மோதவிடுகின்றது.


புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஊடாகச் செய்ய நினைத்ததெல்லாம், தமது சொந்தப் பொருளாதார நலனை மேம்படுத்துவதே ஒரே குறிக்கோளாக இருந்தது. இதனடிப்படையில் தான் பேச்சு வார்த்தை நகர்த்தப்பட்டது. கோரிக்கைகள் முன் மொழியப்பட்டது. இதன்போது நடைமுறை சார்ந்து சில கோரிக்கைகளை இணைத்துக் கொண்டனர். இவை அனைத்தும் பொருளாதார ரீதியாக, குறிப்பாக தமது சொந்த நலன்களையே புலிகள் அடைய விரும்பினர். இதனால் இயல்பு வாழ்வு பற்றி பேச வேண்டும் என்று, ஒரு நீடித்த உப்புச்சப்பற்ற பேச்சுவார்த்தையை நடத்தினர்.


இந்தப் பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கம் வெளி தெரியாத வகையில், மர்மமான ஒன்றாக நடத்தப்பட்டதே, தமிழ் மக்களுக்கு எதிரானதாக அது இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டி நிற்கின்றது. அதாவது என்ன பேசினார்கள் என்பது புதிராக உள்ளது. விளைவு தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக அமைந்தது. இவை அனைத்தும் பேரினவாதத்துக்குச் சாதகமான விடையமாக இருந்தது. இதற்குள் பேரினவாதிகள் பேசிக் கொண்டே இருக்க முடியும். மத்தியஸ்தம் செய்த ஏகாதிபத்தியங்களுக்கோ வாய்ப்பான ஒன்றாக இது மாறியது. இதை ஊக்குவிக்க, அவர்களை மயக்கிப் போட சில பொருளாதார மற்றும் உதவிகளைப் புலிகளுக்கு வழங்கினர். இதன் மூலம் அசகுபிசகாத வகையில் குறி தவறாது புலிகளைக் குறிவைத்து, தமிழ் மக்கள் மத்தியில் தனிமைப்படுத்த முடிந்துள்ளது.


உண்மையில் பேரினவாதிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் கூட்டுச் சதிதான் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை. இதைப் புலிகளின் சொந்தப் பலவீனங்களையும் அற்பத்தனங்களையும் சரியாக இனம் கண்டு அணுகியதன் மூலம் சாதித்துள்ளனர். ஒரு யுத்தத்தின் மூலம் எதையெல்லாம் சாதிக்க முடியாதோ, அதை அமைதியைக் கொண்டு பேரினவாதம் பெரிய அளவில் சாதித்துள்ளது.


உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனையைப் புலிகளின் போக்கில் அணுக முடியாது. பேச்சு வார்த்தை என்பது தெளிவான வகையில், அரசியல் முடிவுகளை மக்கள் எடுக்கும் வகையில் அமைய வேண்டும். ஒவ்வொரு மக்களும் அதைச் சுயபரிசோதனை செய்யவும், சொந்தப் பகுத்தாய்வுக்கு உள்ளாக்கும் வகையிலும் அமைய வேண்டும். பேச்சு வார்த்தை நியாயமான கோரிக்கையை உள்ளடக்கி, அனைத்து இனமக்களும் தாமாகவே ஏற்றுக் கொள்ளும் வகையில் விடையங்கள் கையாளப்பட வேண்டும். மக்கள் இதைத் தத்தம் அளவில் எப்படி தமது சமூகப் பொருளாதார வாழ்வுக்கு ஏற்றதாகப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றது என்பதை உணர்ந்து, முடிவுகளைத் தாமாக எடுக்கும் வகையில் விடையத்தை நகர்த்த வேண்டும்.


இதில் முக்கியமானது இலங்கையில் ஒன்றுபட்ட ஒரு சமூக அமைப்பில் தமிழ் மக்கள் சேர்ந்து வாழவேண்டும் என்றால் பேரினவாதக் கட்சிகள் தமது தரப்பு தீர்வை மக்கள் மத்தியில் பகிரங்கமாக வைக்க வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனையில் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க நிர்ப்பந்திப்பது மையமான ஒரு அரசியல் விடையமாகும். இதுதான் எல்லாவற்றையும் விட மிக முதன்மையான ஒரு விடையமாகும். இதைத்தான் பேரினவாதிகள் தவிர்க்கின்றனர். இதைத்தான் புலிகளும் தவிர்க்கின்றனர். என்ன ஒரு ஒற்றுமை.


அரசாங்கமும், அரசுடன் சேர்ந்து இயங்கும் கட்சிகளும் தமது தரப்பு தீர்வைப் பகிரங்கமாக முன்வைக்காத வரை, அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் தோல்வியடையும். இதைப் புலிகள் கோர மறுத்தால், பேச்சு வார்த்தை பேரினவாதத்துக்கு வெற்றியாகவே எப்போதும் அமையும். ஒரு பேச்சுவார்த்தைக்கும், அதனடிப்படையிலான தீர்வுகளுக்கும் இதுவே முதற்கட்ட நிபந்தனையாக உள்ளது. அதாவது சேர்ந்து வாழ்வதற்கு மற்றைய தரப்பு என்ன மாற்றை முன்வைக்கின்றது என்பதே, அனைத்தையும் விட முதன்மையானது. இதனடிப்படையில் தான் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். பேசுவதற்கு என எதையும் பேரினவாதிகள் முன்வைக்காத நிலையில் எதைத்தான் பேச முடியும்? எப்படித்தான் பேச முடியும்? இரகசியமாகச் சொந்தப் பேரங்களைப் பேசுவதன் மூலம், அதை மக்கள் மத்தியில் திணிக்க முடியாது. பேரினவாதிகள் பல பேரினவாத நடவடிக்கைகளைக் கடந்தகாலத்தில் மக்கள் மத்தியில் முன்கூட்டியே முன்வைத்தே அதை அமுல்படுத்தினார்கள். இதனடிப்படையில் இவை போன்றவற்றை அமுல்படுத்தியவர்கள். இன்று பேரினவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால், என்ன வகையான தீர்வு மூலம் இதை இல்லாது ஒழிக்க முனைவதாக தமது அரசியல் செயல்பாட்டில் மக்கள் மத்தியில் முன்வைத்து இருக்க வேண்டும். அதைத்தான் கோர வேண்டும். இது இல்லாத எல்லா நிலையிலும் பேரினவாதத்தைக் காப்பாற்றும் ஒரு தந்திரமாகத்தான் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இதைப் புரிந்து கொள்ள மறுத்து இணங்கிப் போவது பேரினவாதத்துக்குத் துணைபோவது தான். பேரினவாதம் பகிரங்கமாக வைக்கும் தீர்வுகள் மீது தான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை ஊடாகத்தான் இயல்பு வாழ்க்கைக்குரிய அனைத்து சமூக விடையங்களையும் உள்ளடக்கிய விரிந்த பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.
நாம் நன்கு ஊன்றி அவதானித்தால், மூன்றரை வருடங்களைக் கடந்த பின்பும் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் உட்பட எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வை முன்வைக்கவில்லை. இதில் சிவப்புகொடிகள் மூலமும், மார்க்சிய தலைவர்களின் படங்கள் மூலமும், சிவப்பு சேட்டுகள் மூலமும் தம்மைத்தாம் இடதுசாரியாகக் காட்டிக் கொள்ளும், ஜே.வி.பி. என்ற பேரினவாதக் கட்சியும் கூட தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தனது தரப்பு தீர்வை முன்வைக்கவில்லை. ஆனால் பேச்சு வார்த்தை என்று, அரசியல் வாக்குறுதி ஊடாகப் பேரினவாதிகள் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு, தமிழர் தரப்பாகத் தமிழ் மக்களைக் காட்டி கொடுத்து புலிகள் பலியாகின்றனர். இந்தப் பாதையை அரசு தேர்ந்து எடுப்பதைவிட, புலிகள் தேர்ந்தெடுத்தது தனது சொந்தத் தற்கொலைக்கே உதவுகின்றது.


புலிகள் நினைத்தது என்ன? அமைதி, பேச்சு வார்த்தைகள் ஊடாக நிதியையும், யுத்தப் பொருளாதாரத்துக்குத் தேவையானவற்றைச் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழமை போல் களமிறங்கினர். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதில் ஐயமே இல்லை. இதில் சுனாமி கூட அவர்களுக்குப் பொற்குவியலை உருவாக்கியது. இப்படி பொத்துக் கொண்டே வந்தது. மக்களின் அவலங்களின் மேல் தான், புலிகளின் சொந்த நலன் சார்ந்த சாதனைகள் இவை. ஆனால் அரசு யுத்தத்தை மீளத் தொடங்க முடியாத வகையில், நீடித்த ஒரு நிலைக்குப் புலிகளை இட்டுச் சென்றனர். இதற்கு இசைவாக ஏகாதிபத்தியங்கள் முக்கிய பங்களித்தனர். புலிகள் விரும்பியவாறு பணம் திரட்ட அனுமதித்தனர். வரி முதல் சொந்த வியாபாரம் வரை செய்ய அனுமதித்தனர். சுனாமி மக்களின் பிணங்களில் மேலாக, மிகப் பெரிய பணக்குவியலைச் சூறையாட வைத்தனர்.


பாதிக்கப்பட்ட மக்கள் வீசியெறியப்பட்டனர். அவர்களின் பெயரால் சூழ்ச்சிமிக்க அரசியல் விபச்சாரமே செய்கின்றனர். இது பொதுவான நிலையென்றபோதும், இதுவே புலிகளின் நிலையும் கூட. நீடித்த அமைதியிலும் இது தாராளமாக புலி சார்பாக அனுமதிக்கப்பட்டது. எவ்வளவு பணத்தை மக்களுக்கு எதிராகச் சூறையாடுகின்றனரோ, அந்தளவுக்குச் சீரழிவு அதன் உட்கட்டமைப்பின் அரசியல் விதியாகும். இது ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மையமான அரசியல் வழிமுறையாகும். இதன் மூலம் தான் உலகில் பல நாடுகளையே ஏகாதிபத்தியம் திவாலாக்குகின்றது. இது போராட்ட அமைப்புக்கும் விதிவிலக்கின்றி பொருந்தும்.


இதன் மூலம் புலியின் உட்கட்டமைப்பில் போராட்டத்தின் மீதான ஆழமான கடின வாழ்வைத் துறந்தோட வைத்துள்ளது. மாறாகப் பணப் பொருளாதாரம் சார்ந்த வாழ்வு முறைமை போராட்டத்தின் மீதான சமூகப் பிடிப்பையையே தகர்த்துள்ளது. இதில் கருணாவின் பிளவும் அதன் மீதான கடும் ஒடுக்குமுறையும், புலிகளின் தொடர் சிதைவை வெளித் தெரியாத வகையில் குமுறுகின்ற ஒன்றாக மாற்றியுள்ளது என்பதும் உண்மையாகும். அமைதி சமாதானம் என்பது ஏகாதிபத்திய ஆடம்பர வாழ்வியல் முறைமையைத் தமிழ்ப் பிரதேசங்களில் வக்கிரமாக்கியுள்ளது. தேவைக்குள்ளான சமூக வாழ்வியல் முறைமை சிதைந்து, ஆடம்பர வாழ்வே வாழ்வாகியுள்ளது. இது புலிகளைக் கூட விட்டுவிடவில்லை. புலிகள் உளவியல் ரீதியாக இதற்கு முற்றாகப் பலியாகியுள்ளனர்.


இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாக பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றின் போது வெளிப்பட்டது. ""எமது போராளிகளுள் அநேகமானவர்கள் வயதில் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தமது மன உளைச்சல்களை ஆசைகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் என்றால் சுதந்திரமாக விசில்அடிக்க, பீடிபிடிக்க, கள் குடிக்க முடியும். ஆனால், எமது போராளிகள் அப்படிச் செய்ய முடியாது'' என்று அவர் கூறினார். இது எதை எமக்குக் காட்டுகின்றது. தலைவர்களின் அரசியல் சிதைவை, அவர்களின் வெப்பிரயத்தை எடுத்துக் காட்டுகின்றது. மக்களின் வாழ்வியல் முறைமையில் இருந்து விலகி நிற்பதைக் காட்டுகின்றது. மாறாகச் சீரழிவு வாழ்வை உன்னதமான வாழ்க்கையாகவும், இன்பமாகவும் காட்டும் உளவியல் சிக்கல்களுக்குள் சிக்கி உள்ளதையும், புலிகளின் அடிமட்டத்தில் இது புகைய வைத்துள்ளது.


இதைப் புலிகள் எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆனால் அரசும், ஏகாதிபத்தியமும் மிகத் தெளிவாக இதை முன் கூட்டியே உணர்ந்து கொண்டே இதை ஊக்குவித்தனர். அந்த வகையில் காய்களை நகர்த்தினர். புலிகள் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஒரு டொலர் நுழைவு கட்டணத்தைச் செலுத்தி சென்று வரமுடியும் என்று பெரிய விளம்பரத்தைச் செய்தõர்கள் புலிகள். இன்று அதை அப்படியே வைத்துக் கொண்டு, புதிதாக வெளிநாட்டில் இருந்த காலத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு டொலர் கட்டக் கோருகின்ற நிலை தற்செயலானவை அல்ல. இதில் ஒரு டொலரைக் கட்ட முடியாதவர்களாகத் தான், 60,70 சதவிகிதமான புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். இதை பற்றிக் கூட அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.


இந்தப் பண அறவீடுகள் அவர்களின் அரசியல் சிதைவையே காட்டுகின்றது. புலிகள் பணம் மீது கொண்ட மோகம், ஏகாதிபத்தியப் பொருளாதார கொள்கையை அப்பட்டமாக ஏற்றுக் கொண்டதும், அது சார்ந்த ஆடம்பர வாழ்வியல் முறைமையும் தான் முக்கிய காரணமாகும். யுத்த நிறுத்தம், அமைதி ஊடாகப் புலிகள் வரி அறிவிட்டமை முதல் பல வழிகளில் பணத் திரட்டலைச் செய்தனர். இது பெரும் பணக்குவியலை வசூலிக்கும் வேட்கையை இயல்பாகவே, வழிகாட்டியது. உண்மையில் புலிகள் இக்காலக் கட்டத்தில் சாதித்தவை தான் என்ன?


1. பணத்தைப் பல வழிகளில் திரட்டிக் கொண்டனர்.


2. தமது படைக்குப் பலாத்காரமாகவே ஆட்களைக் கடத்திச் சென்று திரட்டத் தொடங்கினர்.


3. தமக்கு எதிரானவர்கள் மற்றும் புலனாய்வு தரப்பாக இனம் கண்டவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இதில் அண்ணளவாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் 400க்கும் மேற்பட்டவை அரசுக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சடலங்களாகக் கிடைத்துள்ளன. மற்றவை கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களை உள்ளடக்கியது.


இதைத்தாண்டி புலிகள் எதையுமே சாதிக்கவில்லை. இது புலிகளின் சிறப்பான சொந்தத் தேர்வாக இருந்த போதும், அரசின் விருப்பமாகவும் இருந்தது. படுகொலைகள் தொடர்ந்த போது, மிகச் சர்ச்சைக்குரிய படுகொலைகளை, கண்காணிப்பு குழு மூடி மறைக்க, மூன்றாம்தரப்பு ஒன்றைக் கற்பனையில் புனைந்து அதன் மீது குற்றம் சாட்டி, புலிகளின் கொலைகளை ஊக்குவித்தனர்.


உண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் வெட்டவெளியாகப் புலிகளை அம்பலப்படுத்துவதில் அரசும், ஏகாதிபத்தியமும் வெற்றி பெற்றுள்ளது. புலிகளின் சாதனையாகக் கருதப்பட்டவை அனைத்தும், அவர்களுக்கு எதிராகவே மாறியுள்ளது. இயல்பாகப் போரட்டத்துக்குத் தாமாக முன்வந்து இணைந்த முந்தைய போக்குகள் எல்லாம் சிதைய, கட்டாய ஆள் பிடிப்பு மட்டும்தான் இன்று புலிகளின் ஆட்பற்றாக்குறையை நிவர்த்திக்கினற்து. இதுவும் மக்கள் மத்தியில் புலிகளை அம்பலமாக்குகின்றது. அதேநேரம் உறுதியான ஒரு இராணுவ அணி என்ற உணர்வுபூர்வமான செயல்பாட்டை இது தகர்த்துள்ளது. கட்டாய ஆள் சேர்ப்பின் விளைவுகள் யுத்த முனையில் திடீர் சரணடைவுகளையும், பாரிய பின்னடைவுகளையும் விட்டுச் சென்றுள்ளது.


உண்மையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தை ஊடாக அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கூட புலிகளை அரசு பலவீனப்படுத்தியுள்ளது. புலிகளின் நீடித்த மர்மமான பேச்சுவார்த்தைகள், குறுகிய தமது சொந்த நலன் சார்ந்த இழுத்தடிப்பு ஊடான நீடித்த பேச்சு வார்த்தைக்கு இட்டுச் சென்றது. இதன் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் அவலவாழ்வைப் புலிகளைப் பயன்படுத்தியே நிரந்தரமாக்கியுள்ளது. குறிப்பாக சுனாமி மீள் கட்டமைப்புக்குள் தமது சொந்த நலன் சார்ந்த அரசியலைப் புலிகள் புகுத்தினர். இதை அரசோ, மற்றைய அரசியல் கட்சிகளோ புகுத்தவில்லை. புலிகள் தான் இந்தப் பொதுக்கட்டமைப்பை வலியுறுத்தி இனவாத அரசியலைப் புகுத்தினார்கள். இதன் பின்பாகத்தான் மற்றைய அரசியல் கட்சிகள் அதற்குள் தமது இனவாத அரசியலைப் புகுத்தினார்கள். இதன் மூலம், நடந்தது என்ன?


1. தமிழ் முஸ்லீம் மக்களின் பிளவை இது ஆழமாக்கியுள்ளது.


2. வடக்கு கிழக்கு பிளவை மேலும் துண்டித்து, தமிழரிடையே வெடிப்பு அகலமாக்கியுள்ளது.


3. இனவாதச் சக்திகளை ஒன்றுபட வைத்து ஒருங்கிணைத்துள்ளது. இனவாதத்துக்கு எதிரான சக்திகளைப் பலவீனப்படுத்தியுள்ளது.


4. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்காத வகையில், ஒரு நீடித்த குழப்பங்களை இது ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சமூகப் போக்கில் இருந்து அன்னியமாக்கியுள்ளது.


5. மக்களை வெறும் பார்வையாளராக்கி, சமூகத்தின் செயலற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.


இதுவே புலிகள் கோரிப் பெற்ற பொதுகட்டமைப்பின் மொத்த விளைவுகள் ஆகும். அரசியல் ரீதியாக இனக்குரோதங்கள் வக்கிரமடைந்துள்ளது. இதைப் புலிகளே வலிந்து தேர்ந்தெடுத்த போதும், பேரினவாதத்துக்கு இவைகள் மிகச் சாதகமான ஒரு அம்சமாகியுள்ளது. புலிகளைத் தமிழ் மக்கள் மத்தியிலும், மற்றைய சமூகங்களின் மத்தியிலும் இருந்து ஆழமாக அன்னியமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை, புலிகள் தாமாகவே தேர்ந்து எடுத்துக் கொண்டனர். இந்த இடத்தில் பொதுக்கட்டமைப்பு நீதிமன்றத்தின் தடைகளைப் பெற்றுள்ள நிகழ்ச்சியை, புலிகள் தமது அரசியல் வெற்றி என்கின்றனர். அதாவது இதன் மூலம் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்காது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளதால், இது தமது அரசியல் வெற்றி என்கின்றனர். இப்படியும், அப்படியும், எப்படியும் வசதிக்கு ஏற்ப புலிகள் விளக்கும் அரசியல் தான், அவர்களின் மொத்த அரசியல் தோல்விக்கும் காரணமாகும்.


திடீரென ஒரு சுனாமி வந்து தான் புலிகளின் அரசியல் வெற்றியை நிறுவ வேண்டியுள்ளது என்றால், தமது சொந்த அரசியல் பரிதாப நிலையை ஒத்துக் கொள்வதைத் தாண்டி இது வேறு எதையும் விளக்கவில்லை. பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்காது என்பதை நிறுவ, ஒரு பொதுக்கட்டமைப்பு தான் தேவைப்பட்டது என்றால், புலிகளின் அரசியல் வங்குரோதத்தைத் தான் இது எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது. பொதுக்கட்டமைப்பு கையெழுத்திட்டவுடன், புலிகளின் நிலைப்பாடு வேறு ஒன்றாக இருந்தது. இதை மிகப் பெரிய சாதனை என்று வர்ணித்தõர்கள் இவர்கள்.


இன்றைய இந்த நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தப் பேரினவாதச் சமூகக் கட்டமைப்பில் உருவானது தான். இலங்கை நீதிமன்றங்கள் பேரினவாதச் சட்டவரையறைக்கும் உட்பட்டவைதான். உண்மையில் நீதிமன்றங்கள் மக்களுக்குச் சார்பானவையல்ல. இது புலிகளின் நீதிமன்றத்துக்கும் பொருந்தும். நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான விடையம் ஒன்று, பொதுவாக முன் கூட்டியே பலரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. இதை நானும் எனது கட்டுரை ஒன்றில் முன்பே குறிப்பிட்டு இருந்தேன். முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தை செலுத்த முடியுமா? என்பதில் இதை விரிவாக பார்க்க முடியும்.


யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், புலிகள் பொதுக்கட்டமைப்பின் அனைத்துப் பிராந்திய தலைமையகத்தையும் கிளிநொச்சியில் இருக்க வேண்டும் என்று கோரியமை, எந்த வகையில் நேர்மையானது. இனமோதல்களும் பரஸ்பரம் சந்தேகங்களும் உள்ள நிலையில், சுனாமியால் மூன்று சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர்களைக் கிளிநொச்சி வரக்கோருவது எந்த வகையில் சரியானது? அத்துடன் கிளிநொச்சிக்குச் செல்வதாக இருந்தால் மிகக் கடுமையான ஒரு நெருக்கடிகளுக்கு ஊடாகத்தான் செல்ல வேண்டும். இயல்பாகச் சுதந்திரமாகச் செல்லவே முடியாது. அத்துடன் ஒவ்வொரு பயணத்துக்குமான செலவுகள் முதல் அனைத்தும் வரி என்பது உள்ளிட்ட கடுமையான, நெருக்கடியான ஒரு நிலையில், பொது மக்கள் அதை நெருங்கவே முடியாது. சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களும், மக்களும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களே நெருங்க முடியாத ஒரு மூலையில் நிவாரணம் பற்றி திட்டமிடுவது எப்படி சாத்தியமானது. புலிகளின் குறுகிய நோக்கங்கள் தான் பொதுக் கட்டமைப்பை முதற்கட்டத்தில் சிதைத்துள்ளது. அரசியல் ரீதியான வெற்றி என்பது, ஜனநாயகப்பூர்வமான கோரிக்கைகள் மீது மட்டும்தான் சாத்தியம். இது இல்லாத எல்லா நிலையிலும் அதை அரசியல் வெற்றி என்பது, விதண்டாவாதமாகவே எஞ்சும்.


இங்கு யுத்தத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இந்தப் பொதுக் கட்டமைப்பின் தீர்ப்பு மீது முன்வைக்கப்படவில்லை. மாறாகத் தமது சொந்த பாதுகாப்பு என்று காரணத்தைக் கூறி முன்வைக்கப்படுகின்றது. திருகோணமலையில் புலிகள் மேலான தாக்குதலை அடுத்து இந்த யுத்தம் என்ற கோரிக்கை வைக்கப்படவில்லை. மாறாக முன் கூட்டியே புலிகளின் அணிகள் பலர், யுத்தத்துக்குச் செல்லுதல் பற்றிய பல உரைகளை நிகழ்த்தியுள்ளனர். பினாமி அமைப்புகளின் பெயரில் யுத்தம்வேண்டும் என்று அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். நிதர்சனம்.காம் முன்கூட்டியே யுத்தம் தரையிலா? கடலிலா? ஆகாயத்திலா? என்ற செய்தியைப் போட்டு யுத்த வெறியை ஊட்டியது. இப்படி பற்பல யுத்த கோசங்கள் மீண்டும் யுத்தத்துக்குச் செல்லுங்கள் என்று பினாமி அமைப்புகள் மூலம் அறைகூவல்கள் விடப்பட்டது.


உண்மையில் புலிகளின் அரசியல் வங்குரோதத்தை இதைக் கோரியது. மூன்றரை வருடங்களாக அரசியல் பேசிய புலிகள், என்ன அரசியலைப் பேசினர் என்பதைக் கூட முன்வைக்க முடியாத முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றனர். தமது சொந்த இராணுவமயமாதலைக் கூட தக்கவைக்க முடியாத பாரிய நெருக்கடிக்குள்ளும் சிக்கினர். இதில் இருந்து அணிகளைத் திசை திருப்பவும் தமது சொந்த இராணுவக் கட்டமைப்பைத் தற்காக்கவுமே யுத்தம் ஒரு மாற்றாக அவர்கள் முன் உள்ளது. இந்த வகையில் மட்டும்தான் யுத்தம் புலிகள் முன் ஒரு தீர்வாக உள்ளது. ஆனால் யுத்தம் தமிழ் மக்களின் பிரச்சனையில் எதிர்நிலைப் பாத்திரத்தையே வகிக்கின்றது. மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. புலிகளின் யுத்தம் மக்களுக்கு எதையும் தீர்வாக வழங்காது. இதன் எதிர்விளைவைக் கூட புலிகள் சந்திப்பதை எதுவும் தடுத்துவிடாது.


புலிகள் யுத்தத்தைத் தொடங்க முன்வைக்கும் காரணம் தமது உறுப்பினர்களுக்கு இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லை என்பதே. தமக்கு உரிய பாதுகாப்பைத் தரவும் கோருகின்றனர். இதற்கான அரசின் யோசனைகள், புலிகளின் யோசனைகள் என்று சம்பிரதாயபூர்வமான ஒரு வேடிக்கை நிகழ்ச்சியையே உலகுக்குப் பரஸ்பரம் நடத்திக் காட்டுகின்றனர்.


ஆனால் இதன் பின்னுள்ள நிலைமையோ மற்றொன்றாக உள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கில் கொல்லப்படும் அனைத்து மக்களின் பாதுகாப்பைப் புலிகள் கோரவில்லை. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறும் புலிகள், கொல்லப்பட்ட அனைத்து மக்களின் பாதுகாப்பை முன்வைக்கவில்லை. மாறாகத் தமது உறுப்பினர்கள் முதல் தமது பினாமிகள் வரையிலானவர்களின் பாதுகாப்பு என்ற ஒரு குறுகிய எல்லைக்குள் இதை முன்வைக்கின்றனர். மற்றவர்கள் கொல்லப்படுவதை இட்டு மகிழ்ச்சியில் திளைக்கும் புலிகள், அக்கொலைக்கும் அவர்களே பொறுப்பாளியாகவும் இருந்தனர், இருக்கின்றனர். மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் கொலைகள் ஒருபுறம், இராணுவப் புலனாய்வு உறுப்பினர்கள் படுகொலை மறுபுறம். இப்படி மற்றவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் யுத்தத்துக்குச் செல்ல போவதாகப் புலிகளைப் போல் மிரட்டவில்லை. இது யுத்த நிறுத்தத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதை இட்டு புலிகள் சிறிதளவில் கூட அக்கறைப்படவில்லை.


இவைதான், தமது உறுப்பினர் மீதான தாக்குதலாக, எதிர்வினையாக மாறியது. புலிகளின் தொடர் கொலைகள் தான், புலிகள் மீதான கொலையாக மாறியது. ஒரு பக்கமாகத் தமக்கு எதிரான கொலைகளைத் தடுக்க கோரும் புலிகள், மறுபக்கம் கொலைகளைச் செய்யும் சுதந்திரத்தைத் தரும்படி கோருகின்றனர். இதற்காகவே தமக்குப் பாதுகாப்பு தரக் கோருகின்றனர்.


அதாவது கொலைகளை ஒரு பக்கமாக நடத்தியபடி, அதைச் செய்வதற்குப் பாதுகாப்பைக் கோருகின்றனர். இதுவே யுத்தநிறுத்தத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. புலிகளுக்கு எதிரான தாக்குதல் கருணாவினுடைய பிளவின் பின்பாகவே ஆரம்பமானது. கருணா தரப்பு பிரச்சனை முக்கியமானது. கருணாவின் பிளவையடுத்து, இதில் அரசு தலையிடக் கூடாது என்ற அறிவித்த புலிகள், அவர்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் பொறுப்பையும் தாமே எடுத்துக் கொண்டனர். வன்முறை கொண்ட அழித்தொழிப்பு மூலம் அவர்கள் சாதிக்க நினைத்த விடையம் தொடர்ச்சியாகவே கேள்விக்குள்ளாகியது. இந்த ஆயுதக் களைவுக்கு உதவும் வகையில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஊடாகவே புலிகள் சுதந்திரமாக ஆயுதங்களை எடுத்துச் செல்ல அரசு மறைமுகமாக உதவியது. ஏன் கருணா பிரச்சனையைப் புலிகள் வன்முறை மூலம் கையாள, பெருமளவிலான உறுப்பினர்களை வன்னியில் இருந்து இராணுவப் பாதுகாப்புடன் கிழக்குக்கு அரசு எடுத்து வந்தது. இப்படி தான் கருணா பிரச்சனையை அரசும், புலிகளும் பரஸ்பரம் இணைந்து நின்று ஒடுக்கினர். இன்று புலிகள், அரசு கருணா தரப்புக்கு உதவுவதாக எதிர்மறையில் குற்றம் சாட்டுகின்றனர்.


அரசும், புலிகளும் பரஸ்பரம் பங்களிப்புடன் கருணா பிரச்சனையை ஒடுக்க முனைந்ததன் விளைவு என்ன? கருணா தரப்பு விடையத்தை வெறும் ஆயுத வன்முறை மூலம் தீர்க்க முனைந்ததன் விளைவு, அரசியல் ரீதியான தீர்வை வழங்கவில்லை. இதனால் கருணா தரப்பின் இருப்பு, புலிகளின் விருப்பை மீறி ஒன்றாகியது. இதைப் புலிகளால் மீற முடியவில்லை. கருணாவின் பலம் பலவீனம் அனைத்தும், புலிகளின் பலத்தில் மட்டும் தீர்மானமாகவில்லை. மாறாக இராணுவம் புலிகளுடன் கொண்டுள்ள தேன்நிலவில் தான் தீர்மானமாகின்றது. இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல், கருணாவின் மீள் வருகையைத் தெளிவாகப் பறைசாற்றும். கிழக்கின் சில பகுதிகளைக் கூட புலிகள் இழக்கும் நிலையை இது மறுதலிக்கவில்லை. புலிகள் இராணுவத்துடன் கொண்டுள்ள உறவுதான், கருணா தரப்பைப் பின்தள்ள வைத்துள்ளது. இதில் இருந்து மீள புலிகள் மீதான கருணா தரப்பு தாக்குதல்கள், இயல்பாகவே புலிகள் இராணுவ முரண்பாட்டைக் கூர்மையடைய வைக்கின்றது. இது அரசியல் தந்திரம்கூட.


இந்த நிலையில் புலிகள், கருணா தரப்பைப் புலனாய்வு பிரிவு கையாள்வதாகக் கூறுவதுடன், தம் மீதான தாக்குதலை இணைந்து நடத்துவதாகக் கூறுகின்றனர். இந்த எடுகோளுக்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் தந்துவிடவில்லை. யுத்தத்தைத் தொடங்க விரும்பிய புலிகளின் இரண்டாவது கடிதத்தில் தமிழ்ச்செல்வன், ""சமாதான சூழலைச் சிதைப்பதற்கான ஒரு பொறிமுறையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்ட ரீதியில் கருணாகுழு என்ற பெயரில் இக்குழு உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நாம் பலமுறை ஆதாரங்களுடன் உங்களுக்குச் சுட்டிக் காட்டி வந்துள்ளோம். தேவையேற்படும் பட்சத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிகத் தகவல்களை நாம் உங்களுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம்'' என்று குறிப்பிடுகின்றார். கருணா குழு என்ற ஒன்று இருந்ததையே அவர் மறுக்கின்றார். அவர்களின் ஆயுதங்களை அமைதியாகத் தாங்களே களைவதாகக் கூறி, இராணுவத்தைத் தலையிட வேண்டாம் என்று சொன்னதையே மூடிமறைக்கின்றார். மாறாக இது புலனாய்வுத்துறையின் புதிய கண்டுபிடிப்பு என்கின்றார். நம்புங்கள். தமக்கு இடையில் ஏற்பட்ட பிளவையும், கருணா குழுவையும் ஒழித்துக் கட்ட எடுத்த முயற்சிகள் தோல்வி பெற்றதை எல்லாம் இப்படி தலைகீழாகவே புரட்டிக் கூற முனைவது தான் ஏன்?


இதில் கருணா குழு என்பது இராணுவப் புலனாய்வு பிரிவால் தான் இயக்கப்படுகின்றது என்பதற்கு ஆதாரங்கள் தந்ததாகக் கூறுகின்றார். தேவை என்றால் மேலும் தரமுடியும் என்கின்றார். ஆனால் தமிழ் மக்களுக்கே அப்படி எந்த ஆதாரத்தையும் தந்தது கிடையாது. கருணா குழு இராணுவப் புலனாய்வு குழுவாகத்தான் உள்ளது என்பதைக் காட்டக் கூறிய எந்த ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை. ஆனால் அப்படி புலிகள் கூறுகின்றனர்.


கருணா குழு மற்றைய அரசு சார்பு குழுக்களான புளாட், ஈ.பி.டி.பி. போன்று எங்கும் அரசின் பாதுகாப்பில் இருப்பதை இதுவரை நிறுவமுடியவில்லை. பலர் கருணா தரப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் உள்ளனர். சிலர் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி இறந்த நிகழ்வுகளும் உண்டு. சிறையில் அடைக்கப்பட்ட கருணா தரப்பு நபர்களை நீதிமன்றத்திலும் கூட புலிகள் சுட்டுக் கொன்ற சம்பவங்களும் உண்டு. கருணாவின் முகாமைத் தேடி அழிக்கும் புலி நடவடிக்கைகளின் போது, பல புலிகள் இறந்த சம்பவங்களும் உண்டு. பல உதிரி கொலை முயற்சிகளின் போதும் இப்படி நடந்துள்ளது.


கருணா தரப்பு மீதான தாக்குதலில் போது, எங்கும் இராணுவத்தினர் அல்லது புலனாய்வு பிரிவினர் யாரும் சிக்கியதில்லை. கருணாவின் பலவீனங்களைப் பலப்படுத்தும் வகையில் புலிகளின் நடவடிக்கைகள் உள்ளன. அந்தக் குழுவை மீள் கட்டமைக்கும் ஒரு பணியைத் தான் புலிகள் வீச்சாகச் செய்கின்றனர். கண்மூடித்தனமான படுகொலைகள், கைதுகள் முன்னைய புலிகளைப் பெருமெடுப்பில் கருணாவின் பின்னால் மீள அணிதிரட்டிக் கொடுக்கின்றது. முன்னைய புலி உறுப்பினரின் தற்பாதுகாப்பு, புலிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது மட்டும்தான் மாற்றுப் பாதையாக உள்ளது. இதையே புலிகளின் நடவடிக்கைகள் செய்து வருகின்றன.


புலிகள் தம் மீதான தாக்குதல்களை இராணுவப் புலனாய்வு பிரிவுகள் நடத்துவதாகக் கூறும் இவர்கள், புலிகள் அல்லாத தரப்பு கொலைகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்கின்றனர். இதில் இராணுவம் மற்றும் பொலிஸ் மீதான கொலைகளையும் இப்படித்தான் கூறுகின்றனர். கையும் களவுமாகப் பிடிபடாதவரை தமது தரப்பு சார்பாக எதிரி மீது குற்றம் சாட்டும் புலிகள், தாம் செய்யும் கொலைகளை அப்படிச் சொல்லக் கூடாது என்கின்றனர். அதாவது தம் தரப்பு மீதான தாக்குதலைப் புலனாய்வு தாக்குதலாகக் கூறும் புலிகள், தமது எதிரிகள் மீதான தாக்குதலுக்கான குற்றவாளிகளை அடையாளம் காட்ட மறுக்கின்றனர். தவறானதும் நேர்மையற்றதுமான இந்த வாதங்கள் தான், யுத்த நிறுத்தத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. குற்றவாளிகளாகப் புலிகளை நிறுத்துகின்றது.


இங்கு புலிகள் மேலான தாக்குதல்கள் பொதுவாகக் கிழக்கில் காணப்படுவது ஏன்? அதுவும் கருணா பிளவின் பின்பாக இது காணப்படுவது ஏன்? இந்தக் கேள்வியை நேர்மையாக எழுப்பும் ஒருவன், தானாகவே சில உண்மைகளைக் கண்டறிவான். கருணாவின் பிளவு வரை, புலிகள் மட்டும்தான் ஒரு தரப்பாக வடக்கு கிழக்கு எங்கும் கொலைகளைச் செய்து வந்தனர். அதுவரை புலிகளுக்கு இந்தக் கொலைகள் தொடர்பாக எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. கடத்தல்கள் முதல் அனைத்தையும் சுதந்திரமாகச் செய்த போது, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டதாக அவர்கள் கூறவில்லை. இவை எல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய நடைபெற்றதாகப் புலிகள் சொல்ல முனைகின்றனர். ஏகபிரதிநிதிகளாகக் கூறிக் கொள்ளும் புலிகள், தமிழ் மக்களின் ஒரு பகுதி இப்படி கொல்லப்பட்டதை இட்டு ஆட்சேபணை சொல்லாமல் போனது ஏன்?


இந்த நிலையில் கருணாதரப்பு இராணுவப் புலனாய்வு பிரிவின் கீழ் இயங்குகின்றதா? என்பதை உறுதி சொல்லக் கூடிய எந்த ஆதாரத்தையும் இதுவரை இனம் காணமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு நிலை இல்லை என்பதற்கான சமூகப் பொருளாதார அடிப்படையையும் நாம் நிராகரிக்க முடியாது. எதுவாக இருந்த போதும் கருணா குழு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கினால், கருணா குழுவிலும் ஒரு பிளவு தவிர்க்க முடியாது. ஏனென்றால் கருணா குழு எப்படி இருந்த போதும், குறைந்தபட்சம் அதன் ஒரு பகுதி சுதந்திரமாகவே இயங்குகின்றது. இதுவே பிளவுக்கான மூலமாக இருக்கும். ஒரு பகுதி இராணுவத்துடன் நின்றால், மறுபகுதியின் சுதந்திரமான செயல்பாடுகள் பிளவுக்கான அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிளவாக மாறும்.


இந்த நிலையில் கருணா தரப்பு புலனாய்வு பிரிவின் கீழ் இயங்குவதாகக் கூறுவதற்குரிய எந்த அடிப்படையான ஆதாரமும் இதுவரை கிடையாது. மாறாக வடக்கு கிழக்கில் மக்களிடையே உள்ள பிளவு புலிகளின் ஜனநாயக விரோதப் பண்பும் முஸ்லீம் மக்கள் மேலான யாழ் மேலாண்மை போன்ற பல பத்து காரணங்கள், புலிகளைப் போன்ற அதே நடைமுறையைக் கொண்ட கருணா குழுவும் தனித்துவத்தைப் பேணக் கூடிய சமூக அடிப்படையை வழங்குகின்றது. இந்த நிலையில் இராணுவப் பாதுகாப்புடன் கருணா தரப்பை அழித்தொழிக்க பாதுகாப்பு கேட்பதும், அதை மையமாக வைத்து யுத்தத்தைத் தொடங்கின் விளைவுகள் புலிகளுக்கு மிகவும் பாதகமாகவே அமையும். அதே நேரம் அப்பாவி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர். யுத்தம் தொடங்கின் குறைந்தபட்சம் மிக குறுகிய காலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படுவர். இதுதான் யுத்தத்தின் உயர்ந்தபட்ச சாதனையாக இருக்கும்.


மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் நலன்களில் இருந்து விலகினால், உண்மை என்பதும், நேர்மை என்பதும் பொய்யாகி விடும். அங்கு மக்களின் விடுதலை என்பதும், விருப்பங்களும் கூட கற்பனையாகிவிடும். அதாவது ""மனிதனின் சமுதாய நடைமுறை மட்டுமே, புறவுலகு பற்றி அவன் அடைந்திருக்கும் அறிவின் வளர்ச்சிக்கு அளவுகோலாக இருக்க முடியும் என்று மார்க்சியவாதிகள் கருதுகின்றனர்.


உண்மையாகப் பார்த்தால் சமுதாய நடைமுறை நிகழ்ச்சியில் மனிதன் எதிர்பாராத பலன்களை அடையும்போது மட்டுமே அவனது அறிவு சரியென்று நிரூபிக்கப்படுகின்றது. ஒருவன் தனது வேலையில் வெற்றியடைய விரும்பினால், அதாவது எதிர்பார்த்த விளைவுகளைப் பெற வேண்டுமெனில், தனது கருத்துகளைப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடையவையாகச் செய்ய வேண்டும். அவை இசைவுடையவையாக அமையாவிட்டால் அவன் தன் நடைமுறையில் தோல்வி அடைவான்'' என்பதை லெனினும் மாசேதுங்கும் தெளிவாக உலகுக்குத் தமது சொந்த நடைமுறை மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.


19.07.2005