பு லிகளின் தமிழ்த் தேசியம் என்பது மற்றவனின் கழுத்தை வெட்டும் போராட்டமாகியுள்ளது. இதுவே புலிகளின் மைய அரசியல் நடைமுறை. மற்றவனைக் கொன்று போடும் எல்லைக்குள் தான், அதன் அரசியல் உணர்வு காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் சமூகச் சிதைவைப் பூசி மெழுகவே பட்டங்களை வாரி வழங்குகின்றனர். துரோகி என்றும் தியாகி என்றும் இரு அடைமொழிக்குள் அனைத்துச் சமூக நடைமுறைகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி சதிராட்டம் போடுகின்றனர்.
தமது சொந்த வர்க்க நலனுக்கு இசைவாக மனித இனத்தைப் பிளந்து அடையாளம் காண்பதன் மூலம், சமூகத்தையே துப்பாக்கி முனையில் அன்றாடம் பலியிடுகின்றனர்.
மாமனிதர், தேசப்பற்றாளர் என்று போற்றும் விருதுகள் மூலம் ஒரு பகுதி குறுந்தேசியத்தின் பெயரில் பலியிடப்படுகின்றது. அதேபோல் துரோகி, சமூக விரோதி என்று தூற்றுவதன் மூலம் பலரின் கழுத்தறுக்கப்படுகின்றது. இவை அனைத்தும் மக்களின் உழைப்பு உருவாக்கும் செல்வத்தைச் சூறையாடுவதை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மக்களிடம் இருந்து அவர்களின் உழைப்பைப் பிடுங்கியெடுப்பதே தமிழ்த் தேசியமாக வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டு விட்டது. இதுவே தணியாத தாகம் என்ற அரசியல் உள்ளடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் எங்கும் காட்டுமிராண்டித்தனமான கொலைக் கலாச்சாரத்தின் மூலம் மனித உழைப்பைச் சூறையாடும் வக்கிரம். இதற்கு வெளியில் எந்த நடைமுறையும் புலிகளிடம் கிடையாது. இதற்கு வெளியில் தமிழ்த் தேசியம் தனது தணியாத தாகமாக எதையும் மக்களுக்குக் கூற முற்படவில்லை. இதுவே தமிழ்த் தேசியமாகக் காட்டப்படுகின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் தலைவிதியாகியுள்ளது.
இன்று தொடரும் கொலைகளும், வாரிவழங்கும் பட்டங்களும் கூட புலிகளின் குறிப்பான அன்றாட நடத்தையாகியுள்ளது. இந்த நிலையில் இது பற்றி பல கட்டுரைகளில் எனது கருத்துக்களை குறிப்பாக முன்வைத்துள்ளேன். இருந்தபோதும் இதற்கான தனியான சமூக அடிப்படைகளை ஆராய்ந்து எழுதவில்லை.
இன்று எமது சமூக அடிப்படையின் அனைத்து விதமான சமூகப் பண்புகளும், நடைமுறைகளும் பயங்கரவாதமாக மாறியுள்ளது. இவற்றை வெறும் புலிகள் தொடர்பான விடையமாக மட்டும் நாம் காணவில்லை. சாதாரண மக்களின் நடைமுறைகளில் கூட, இதுவே பொதுப்பண்பாகி, அதுவே சமூக நடைமுறையாகி வருகின்றது. சமூகமே ஒரு பாசிச (இங்கு பாசிசம் தொடர்பான எமது கருத்து, புலிகளின் ஜனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்டு கூறவில்லை. இது தொடர்பாக விரிவாக மற்றொரு கட்டுரையை இணையத்தில் (தீதீதீ.tச்ட்டிடூஞிடிணூஞிடூஞு.ணஞுt) விரைவில் காணமுடியும்). உள்ளடக்கத்தில் வக்கரிக்கத் தொடங்கியுள்ளது. மற்றவனின் கழுத்தை வெட்டினால் குதூகலிக்கும் சமூக மனப்பாங்கு, சமூகத்தின் ஆதிக்க மொழியாகவும், பண்பாட்டுக் கூறாகவும் மாறிவிட்டது. இதுவே வக்கிரமாகி, தமிழரின் புனிதமான வணக்கத்துக்குரிய பண்பாடாகக் காட்டப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு உயிர் கொல்லப்படாவிட்டால், அரசியல் புத்துணர்ச்சியை இழந்துவிட்ட தேசிய மனப்பாங்கே, சமூகத்தின் இரத்த ஓட்டமாகி உளவியல் பாதிப்புக்குள்ளாகி வெறி கொண்டு அலையும், தேசிய மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை நாம் காண்கின்றோம்.
பெண்களை பற்றி ஆணாதிக்க உள்ளடக்கத்தில் எப்படி தனிப்பட்ட வக்கிரமான உணர்வு சார்ந்த பாலியல் நுகர்வின் உள்ளடக்கத்தில் அன்றாடம் எப்படி தமிழ் மொழி புணரப்படுகின்றதோ, அதேயொத்த உணர்வுடன் தான் கொலைகளை இரசிக்கும் மனப்பாங்கும் இயல்பு வாழ்க்கையில் புகுந்துள்ளது. கொலைகளை மட்டுமல்ல, கொலைகாரனின் வக்கிரமான கொலைச் செயல்களைக் கூட ரசிக்கும் ரசிகர் கூட்டமாகத் தமிழ் இனம் மாறிவிட்டது. இது ஒரு நேர உணவு போல, கொலைகளை இரசிக்கும் மனப்பாங்கு ஒரு பொழுதுபோக்கு செய்தியாக மாறியுள்ளதுடன், இதை நியாயப்படுத்தும் தன்னிலை சுயவிளக்கத்தையும் கூட தமது சொந்த கற்பனை வளத்துக்கு ஏற்ப வழங்குகின்றனர். இது சிறந்த தமிழ் தேசியச் செய்தியாகி அவர்களே தமிழ் ஊடகவியலாளராகி விடுகின்றனர். தமிழ் ஊடகவியலின் பிழைப்புத்தனத்தில் இருந்து இதை மறுபடியும் பெற்றுக் கொள்ளுமளவுக்குச் சமூகம் பாசிச வழிகளில் வழிகாட்டப்படுகின்றது. இந்த வரையறை என்பது புலிகளால் நடத்தப்படும் சில அனாமதேய இணையங்களை அடிப்படையாகக் கொண்டே, தமிழ் ஊடகவியல் தமது கருத்துகளை வளைத்து நெளித்து அதையே வக்கிரமாக மெருகூட்டுகின்றனர்.
தொடரும் சமூகப் படுகொலைகள் முதல் அனைத்துவிதமான மனிதவிரோதச் செயல்களையும் ஊடகவியல் ஆதரித்து, கட்டுரைகளையும், பொழிப்புரைகளையும் வழங்குகின்றனர். இதை ஒரு சமூகத்தின் உளவியல் வக்கிரமாக மாற்றி, அதில் தமது பாசிசக் கோட்பாட்டைக் கொண்டு தமிழ் மக்களின் அடிமைத்தனத்தையே நிலைநிறுத்துகின்றனர்.
இந்த நிலையில், நாம் தொடரும் தொடர் படுகொலைகளை எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்க முடியாத நிலையில், அதைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றோம். இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தில் கருணா தரப்பு மற்றொரு கொலைகாரக் கும்பலுக்கு எதிராக ஈடுபட்டாலும் கூட, நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கொலைகள் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் செய்திகள்தான் என்ன? இதுவே மிக அடிப்படையான கேள்வி. இது அனைத்துவிதமான படுபிற்போக்கு பாசிசத்தையும் தெளிவாக அம்பலப்படுத்தி விடுகின்றது. தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும், புலிகள் பற்றி அவர்கள் கொண்டுள்ள சொந்த அச்சமே, இதை விளக்கப் போதுமானது.
புலிகள் போன்ற பாசிச இயக்கங்கள் படுகொலைகளின் மூலம் உயிர்வாழ நினைக்கையில், இதற்கு மாற்றாக அதே பாதைகளை மீளக் கையாள்வது யாராக இருந்தாலும் மற்றொரு பாசிசத்தின் உள்ளடக்கத்தையே கொண்டதாகப் பரிணமிக்கும். உண்மையில் இந்தப் படுகொலைகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் பெயரில், சொந்தத் தமிழ் மக்கள் மீதுதான், தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றது என்ற உண்மையை எப்படித்தான் நாம் புரிந்து கொள்வது. தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்க வெளிப்பட்டதன் விளைவாக, அதை மூடிமறைக்கவே இந்தத் தொடர் கொலைகள் அவசியமாகின்றது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரில் உதிரியாக, லும்பன்களாக ஆயுதம் ஏந்தத் தொடங்கிய காலம் முதலே, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்டு அணுகியவிதமே அனைத்துக்குமான அடிப்படைச் சித்தாந்தமாக இன்றுவரை இருந்துள்ளது. ஆயுதம் ஏந்தாத ஒரு எதிரியைக் கூட, படுகொலைகள் மூலம் கொன்று முடக்கும் கோட்பாடே தமிழ்த் தேசியச் சித்தாந்தமாகியது. தன்னைத் தவிர அனைத்தையும் இந்த எல்லைக்குள் வைத்தே மதிப்பிடுகின்றது. தன்னைச் சுற்றி எந்தவிதமான மாற்று அபிப்ராயமும் உதிக்காத ஒரு பாசிசச் சூழலில் தான், எமது தேசியம் என்று ஒன்று புணரப்பட்டு பெத்துப் போடப்பட்டது.
சமூகத்தில் காணப்பட்ட மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்ட விதம் ஆரம்பம் முதலே வன்முறை சார்ந்ததாகவும் படுகொலை அரசியலாகவும் இருந்தது. தமிழரசு கட்சியும் அடுத்து வந்த தமிழர் ஐக்கிய முன்னணியும் பின்னால் ஏற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் யாரையெல்லாம் எதிரியாக மேடைகளில் காட்டி முழங்கினாரோ, அவர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். இதற்கு சிறப்பான ஒரு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 6.10.1974 அன்று கைலாசபதியின் வீட்டுக்குக் குண்டு வீசிய சம்பவமும் சரி, அடுத்து வி.பி.பொன்னம்பலம் வீட்டுக்குக் குண்டு வீசிய சம்பவமும் அனைத்திலும் தமிழரசுக் கட்சியே இதற்கு ஆட்காட்டியாகச் செயல்பட்டது. தமிழரசுக் கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட வெடிகுண்டு கதாநாயகர்கள், தமிழரசு கட்சி யாரை சுட்டிக் காட்டியதோ அவர்களைக் குண்டுகள் மூலம் கொன்றுவிடவே குண்டுகளை வீசினர். கைலாசபதி செய்தது என்ன? தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைவதை ஆதரித்தது உட்பட, அதன் முதலாவது பீடாதிபதியாகப் பதவியேற்றதால் தான் இந்த குண்டு வீச்சு. இதற்காகத்தான் வி.பி.பொன்னம்பலம் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. இவர்களும் இவர்களின் வாரிசுகளுமே இன்றைய தமிழ்த் தேசியவாதிகளாகவும் புனிதர்களாகவும் உள்ளனர். இன்றைய புலிப் பாசிசத்தின் உள்ளடக்கமே இங்கிருந்துதான் உற்பத்தியானது.
அரசு உதவி பெற்று இயங்கிய பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டு (இந்தத் தேசியமயமாதலில் கூட தனியார் பாடசாலைகளை அவர்கள் விரும்பினால் சுயமாக நடத்தலாம் என்ற தனிச் சொத்துரிமை உறுதி மொழியை மீறாமல் தேசியமயமாக்கப்பட்டது.) உருவான மொழிக் கல்வியை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பதை அடியோடு வெறுத்தது. தமிழரசுக் கட்சி ஆரம்பம் முதலே ஆங்கிலக் கல்வியையே கோரிவந்தது. இந்த நிலையில் தமிழ் மொழி பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த போராடியவர்களைத் துரோகிகளாகக் காட்டியே, குண்டு வீச்சை நடத்தியது. இவற்றை எதிர்கொள்ளவே தமிழரசுக் கட்சி பினாமி அமைப்புகளை உருவாக்கியது. இதைத்தான் புலிகள் இன்று அப்படியே செய்கின்றனர்.
அன்று அரசியல் ரீதியாகச் சமூக முரண்பாடுகளை எதிர்கொள்ள வக்கற்ற கூட்டணி, படுகொலைகளை ஊக்குவித்த அரசியல் தான் பின்னால் அவர்களுக்கே எமனாகியது. ஏன் பலரும் முரண்பாடு இன்றி காலம்காலமாகப் போற்றும் சிவகுமாரன் பலர் மீது குண்டுவீசி கதாநாயகனாகிய நிலையில், அவன் தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடக்கூடாது என்பதற்காகவே, செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் ஒன்று சேர்ந்து சிவகுமாரன் வீடு சென்று அவனை உற்சாகப்படுத்தினர். இதன் மூலம் சிவகுமாரன் செய்து வந்த தனிநபர் படுகொலை முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆசியை வழங்கியவர்கள் இந்த தமிழரசுக் கட்சியினர்தான். இப்படி தான் தனிமனிதப் படுகொலை அரசியல் தமிழ்த் தேசியமாக ஊக்குவிக்கப்பட்டது.
மாற்றுக் கருத்தை அளந்த அளவுகோல் எப்போதும், தமது சொந்த வக்கற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகளில் இருந்து வெம்பிப் பிதுங்கியே வெளிவந்தது. தமது சொந்த வர்க்க நலன்களைத் தக்கவைக்க, எதிரணியின் கருத்துகளை எதிர்கொள்ள வக்கற்று, வன்முறைக்கு வழிகாட்டினர். தம்மைத்தாம் அகிம்சைவாதிகளாக காட்டி நின்ற கூட்டணியினர் தான், இந்த தனிமனிதப் படுகொலை அரசியலுக்கு வழிகாட்டிய சூத்திரவாதிகள். கூட்டணியின் அரசியல் அதிகாரம் தமிழ் மக்களின் மேல் நிலவிய காலக்கட்டத்தில், கொலைக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் போக்கு உச்சத்தை எட்டியது. படுகொலைகளை வரவேற்கும் முறைமை தமிழ் மக்களின் தேசிய பண்பாக உயர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டது. இதைக் கூட்டணி தனது சொந்த அரசியல் கடமையாகச் செய்து முடித்தது.
இதை விளக்கும் சிறப்பான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். சிவகுமாரன் இறந்த நினைவு தினத்தை இன்றுவரை பெருமையாகப் பீற்றும் அனைத்துத்தரப்பு அரசியல் தான் என்ன? இந்த படுகொலை அரசியலை ஆதரிப்பதில், புலி ஆதரவு மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகள் என அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இங்கும் வன்முறைகளை எதிர்ப்பதாகவும், அனைத்துப் படுகொலைகளையும் எதிர்ப்பதாகவும் கூறும் அனைவரும் விதிவிலக்கின்றி இதற்குள் அடங்குவர். சிவகுமாரனைத் தமிழ் மக்களின் கதாநாயகனாக்கியது எது? நிச்சயமாக வன்முறைகளும், அரசியல் படுகொலை முயற்சிகளுமே. இதுவே அவனின் அரசியல். தனிமனிதனாக, லும்பனாகக் குண்டுகளுடன் அலைந்து திரிந்து வேட்டையாடிய அரசியலைத்தான், இன்றுவரை புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்கின்றார். பிரபாகரனின் படுகொலை அரசியலை எதிர்ப்பதாகக் கூறும் ஆனந்தசங்கரி முதல் ரி.பி.சி. வானொலி வரை, பலரும் சிவகுமாரன் விடயத்தில் அவனைப் புனிதராகக் காட்டி ஆதரித்து இன்று போற்றுகின்றனர். சிவகுமாரன் அரசியலானது புலி அரசியல் தான் என்பதை யாரும் விமர்சிப்பதில்லை. இதைத்தான் உமாமகேஸ்வரன் முதல் டக்கிளஸ் தேவனாந்தா வரை கையாளுகின்றனர். இவற்றில் சில முரண்பாடுகள் இருந்த போதும், கோட்பாட்டு ரீதியில் புலிப்பாசிசத்தின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளனர். இங்குதான் தமிழ்ப் பாசிசத்தின் அனைத்து விதமான ஆதரவு அடிப்படைகளையும் நாம் இனம் காண்கின்றோம்.
புலிகள் இன்றுவரை பாசிசக் கட்டமைப்பைத் தொடர்ந்து வெற்றிகரமாகப் பேண முடிகின்றது என்றால், அதை எதிர்ப்பதாகக் கூறும் பலரும் கொண்டுள்ள பாசிச அரசியல் கட்டமைப்பு தான் முக்கிய காரணமாகும். பாசிசத்தின் சமூகக் கூறுகளைக் களைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. மாறாக அவற்றை ஆதரிக்கின்றனர். ஏன் வன்முறையை எதிர்ப்பதாகக் கூறும் ரி.பி.சி. அண்மையில் சிறிசபாரத்தினத்தின் நினைவு தினத்தைப் புலிக்கு எதிரான கோட்பாட்டு அடிப்படையில் முன்னிலைப்படுத்திய போது, சிறிசபாரத்தினம் தலைமை தாங்கி நடத்திய படுகொலை அரசியலையே ஆதரித்து நிற்கின்றனர். இங்கு இவர்களின் அரசியல் குட்டை ஒன்றாகவே உள்ளது. யார் அதில் படுத்து புரள்வது என்பதில்தான் பாசிசப் பன்றிகளுக்கு இடையில் மோதல் நடக்கின்றது. தனிநபர் படுகொலைகள் தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுக் கருத்தை மறுத்தே எழுந்தது. இந்த உள்ளடக்கமே அனைத்துத் தமிழ் கதாநாயகர்களின் முகத்தில் செதுக்கப்பட்டு இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிக்கும் இடையில் நெருக்கமாக இருந்த அரசியல் வழி உறவும், வழிகாட்டலும், அனைத்து விதமான ஜனநாயகப் போக்குகளையும் தகர்ப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழு விடுதலைப்புலி உறுப்பினருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மூளாயில் வைத்து இதனடிப்படையில் தான் பேச்சு வார்த்தையை நடத்தினர். இதில் யாரைக் கொல்ல வேண்டும் என்பதையும், தமக்குக் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டது. இதனடிப்படையில் தான் கூட்டணி, சில அடியாட் குழுக்களை வளர்த்தெடுத்த அதேநேரம், சிலவற்றை எட்டி மிதித்தனர்.
மாற்றுக் கருத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள முடியாத எல்லா நிலையிலும், மற்றைய தரப்பு மீது வன்முறைகளைக் கூட்டணி அடியாட் குழுக்கள் மூலம் ஏவிவிட்டது. அரசியல் ரீதியாகத் தமது சொந்தத் தேசியக் கருத்துக்களை நேர்மையாக வைப்பதற்கு முடியாத போது, தமிழ் மக்களை ஏமாற்றி மோசடி செய்தபோது, இதற்கு எதிரான அனைத்து ஜனநாயகக் குரல்களும் கழுத்தோடு வெட்டப்பட்டன. உண்மையில் மாற்றுக் கருத்தை ஒடுக்குவதற்கே அடியாற் குழுக்கள் திட்டமிட்டுக் கூட்டணியால் தீனியிட்டு வளர்க்கப்பட்டது. முதலில் உதிரி நபர்களையும், உதிரிக் குழுக்களையும் புலிகளையும், அதன் பின்னர் அமிர்தலிங்கம் தனது மகனின் தலைமையில் தமிழ்த் தேசிய இராணுவம் (ரெனாவையும்) உருவாக்கினர். இக்குழுக்கள் சில சிதைய, சில இறக்க, சில நீடித்தனர். இதனடிப்படையில் புலிகள் கூட்டணியின் நம்பிக்கையான அடியாற் படையாகவே வளர்ந்தது.
பிரபாகரன் அமிர்தலிங்கம் உறவு மிக நெருக்கமானதாகவும் நீண்டதாகவும் இருந்தது. ஆனாலும் கூட கூட்டணி வளர்த்தெடுத்த தனது சொந்தப் பாசிசக் கட்டமைப்புக்கு, தன்னையே பலியிட வேண்டிய நிலையில் கூட்டணி அரசியல் ஸ்தம்பிதமாகியது. பிரபாகரனின் புலிகள் இயக்கமே அமிர்தலிங்கத்தைக் கொல்லும் அளவுக்கு நிலைமை மாறிச் சென்றது. கூட்டணி எந்த அரசியல் பதங்கள் மூலம் முத்திரை குத்தி மாற்றுக் கருத்துக்களைக் கொல்ல துணை நின்றதோ, அதையே புலிகள் பாவித்து கூட்டணியைக் கொன்றனர். கூட்டணியின் பாசிச சித்தாந்தத்தையே பயன்படுத்தி, இன்று வரை புலிகள் தமது சொந்தப் பாசிச அதிகாரத்தைத் தக்கவைக்கின்றனர். மாற்றுக் கருத்தையே துரோகம் என்பதும், அதை முன்வைப்பவன் கொல்லப்பட வேண்டியவனாகவும் காட்டி நடத்தும் பாசிசம், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்தது. பலி எடுத்து வருகின்றது.
இப்படியான படுகொலை அரசியல், துரோகி, சமூக விரோதி என்ற அடை மொழிகளால் தூற்றி தொடங்கியது. எமது தேசிய விடுதலைப் போராட்டம் இதைத்தாண்டி இன்றுவரை முன்னேறிவிடவில்லை. மாற்றுக் கருத்தை, மாற்று அரசியலை வன்மையாகவே தூசித்து மிரட்டும் வன்முறை மூலம் உருவான தேசியம், வரலாற்று தலைமைகளைக் கடந்தும் நீடிக்கின்றது.
வன்முறை சார்ந்த அரசியல் வக்கிரம் மேன்மை பெற்றபோது, பாராளுமன்ற அரசியல் முடிவுக்கு வந்தது. பாராளுமன்றவாதிகளின் ஆசியுடன் இயங்கிய வன்முறை சார்ந்த உதிரி நபர்களே, படிப்படியாக வன்முறை சார்ந்த கதாநாயகர்களாக மாறினர். இவர்களை முதன்மைப்படுத்தி சமூகக் கண்ணோட்டம், மற்றவற்றைத் துரோகமாக காணும் போக்கு வளர்ச்சியுற்றது. பாசிசமே சமூகத்தின் உயிரோட்டமான தேசிய இயக்கமாகியது. மற்றவரை தூஷிக்கும் அரசியலே தேசிய அரசியலாக மாற்றப்பட்டது. எளிமைப்படுத்தப்பட்ட வகையில் மாற்றுக் கருத்தைத் துரோகமாக காட்டும் படிமங்கள், சமூக முரண்பாட்டை மறுதலித்தது. சமூகத்தை ஒற்றைப் பரிணாமத்தில் காணும் போக்கும், படுகொலைகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.
வன்முறை சார்ந்த தனிமனித அரசியல் கொலைகளை ஆதரிக்கும் மனப்பாங்கு, படிப்படியாகப் பாராளுமன்ற அரசியலின் முடிவைப் பறைசாற்றியது. இது துரிதமாகவே அரசின் படைக்கு எதிரான உதிரித் தாக்குதலை நடத்துவதை நிபந்தனை ஆக்கியது. தமிழ்த் தேசியப் பாராளுமன்ற அரசியல் மற்றவனைக் கொல்வதை அடிப்படையாகக் கொண்டு தூற்றி, தனது அடியாள் படை மூலம் கொன்றனர். ஒரு சமூகத்தின் மீதே புரையோடிப் போன மிரட்டலைக் கட்டமைத்தனர்.
இந்தப் பாராளுமன்ற அரசியலிலும், அதற்குத் துணை நின்ற அடியாட்படைக்கும் இடையில் நிலவிய சமநிலைத் தன்மை இடம்மாறிய போது, அடியாற் படைகள் அரசியல் அதிகாரத்துக்கு வந்தனர். இங்கு இயல்பாகவே அடியாட் படை கும்பலிடையேயான முரண்பாடு ஒருங்கே உருவானது. இந்தப் போட்டி இயல்பாகவே யார் மாற்றுக் கருத்தை அதிகம் சொல்ல முடிகின்றதோ, அவனே தமிழ் மக்களின் பாசிசச் சிந்தனை ஓட்டத்துக்குத் தலைமை தாங்கும் சக்தியாக மாறினான். இங்கு இதனுடன் அரசு படைகளுக்கு எதிரான சமூகத்துக்கு வெளியில் உதிரியான தாக்குதலும் இணைந்து கொண்டது. ஈவிரக்கமற்ற வகையில் அதிகம் கொலை செய்ய தயாரானவன் வீரனாக, தேசியக் கதாநாயகனாக சமூகத்தின் முன் கொண்டு வரப்பட்டான்.
இந்த மாற்றம் படிப்படியான மாற்றமாக இருந்தது. அதிகம் கொலை செய்தவர்கள், அதிகம் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், அதிகம் சிறை சென்றவர்கள் சமூகத்தின் கதாநாயகனாகச் சமூகப் பாசிசம் தலையில் தூக்கி வைத்தது. இந்தக் கதாநாயக அரசியல் சமூகத்துக்கு எதைப் பெற்றுத் தரப்போகின்றது என்பதைக் கேட்பது சமூகத் துரோகமாகக் காட்டப்பட்டது. மறுபக்கத்தில் சமூகத்துடன் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான நபர்கள், சமூகத்தின் முன் கொண்டு வரப்பட்டனர். தனிமனிதர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற வீரப்பிரதாபங்களை முன்வைத்து, ஒரு சமூகமே பாசிச வெறிபிடித்துக் கூச்சலிட்டது.
தனிமனிதப் புகழ், தனிமனித வக்கிரம், சமூக முரண்பாடுகள் இந்தக் கதாநாயகர்களுக்கு இடையில் தனிமனித முரண்பாடுகளை அக்கம் பக்கமாகவே உருவாக்கிக் கொண்டது. ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் மனப்பாங்கு முதன்மை பெற்றது. தேசியம் என்ற பெயரில் குழுவாதச் சதி வேலைகள் தவிர்க்க முடியாத போது ஒன்றுபட்ட செயல்களைச் செய்தபடி, மறுபக்கத்தில் ஒருவர் காலை மற்றவர் இழுத்துவிடும் சதி கதாநாயகப் பாசிச அரசியலில் இணைபிரியாத அங்கமாகியது. துரோகியை வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் என்ற கோட்பாட்டுக்கு இணங்க, ஒரு இரகசியச் சதி வலையே அனைத்துக்குமான அமைப்பு வடிவமாகியதுடன் அதுவே தேசியமாகியது.
இதனால் தனிமனித ஒழுக்கங்களை முதன்மைப்படுத்தி, அதனடிப்படையில் கூட தம்மைத்தாம் புனிதர்களாகக் காட்ட முனைந்தனர். மற்றவனைத் தனிமனித ஒழுக்கமற்றவனாகக் காட்ட எப்போதும் முனைந்தனர். தனிமனித ஒழுக்கத்தின் பெயரில் கண்காணிப்பு உசுப்பி விடப்பட்டது. பாசிசத்தின் இந்த ஒழுக்க அரசியலால் தன்னை மூடிமறைத்தபடி, ஒழுக்கத்தின் பெயரில் தன்னைத்தானே தகவமைத்தது. இதை மீறுபவர்களையும், மாற்றுக் கருத்தை தெரிவிப்பவர்களையும் தேசியத்தின் எதிரியாகச் சித்தரிப்பதுடன், அவர்களை அழித்தொழிக்கின்றது. கதாநாயகர்களாகிய உதிரி நபர்கள், தனிமனிதன் சார்ந்து கட்டமைத்த தனிப்பட்ட சித்தாந்தங்கள், நம்பிக்கைகளையே சமூகம் கைக்கொள்ள வேண்டும் என்பதையே, தமிழ்த் தேசிய உள்ளடக்கமாக கருதும் மனப்பாங்கு திணிக்கப்பட்டது. இதை மீறுவது தேசியக் குற்றமாகப் புனையப்பட்டது. ஆயுதம் மூலம் அதிகாரத்தைப் பெற்ற இந்தத் தனிநபர்கள், இதைச் சமூக ஒழுக்கமாகக் காட்டிப் புணரப்பட்டு ஆயுத முனையில் திணிக்கப்படுகினறது.
அதேநேரம் உதிரியான நபர்களின் தனிப்பட்ட முரண்பாடுகளும், சமூகப் பிளவுகளின் வெளிப்பாட்டாலும் ஆயுதம் ஏந்திய பல லும்பன் குழுக்கள் உருவானது. இப்படி 1983, 1984களில் பல பத்து குழுக்கள் உருவானது. வன்முறை சார்ந்த கதாநாயக மனப்பாங்குடைய ஒவ்வொருவரும், ஒரு குழுவைத் தோற்றுவிக்கும் தகுதியைச் சமூகப் பாசிசம் உந்தித் தள்ளியது. இதில் ஒருசில விதிவிலக்குகள் இருந்தபோது, மாற்றுக் கருத்தைத் துரோகமாகக் கருதும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே பல குழுக்கள் உருவாகியது. இது விதிவிலக்கின்றி மற்றைய குழுக்களை எல்லாம் எதிரியாகவும், துரோகியாகவும் கருதியது. இப்படித்தான் எமது தேசியம் கற்பிக்கப்பட்டுப் புணரப்பட்டது. சமூகப் பாசிசம் படிமுறையாக மேலெழுந்து, இயக்கப் பாசிசமாகத் தகவமைந்தது. அதுவே தற்போது தேசியமாக ஆட்டம் போடுவதுடன், மேல் இருந்து கீழாகச் சமூகத்தினுள் இறங்குகின்றது. இதுவே இன்றைய சமூகக் கோட்பாடாகியது.
அதேநேரம் சமூகத்தின் போக்கில் இயல்பாக இருந்த பாசிசக் கூறுகளின் மொத்த உள்ளடக்கத்தையும், அப்படியே இயக்கங்கள் தனது மையக் கோசமாக்கிக் கொண்டது. புலிகளோ சமூக பாசிசத்தின் சில கூறுகளை முதன்மைப்படுத்தி, அதைக் கொண்டே அதிகாரத்துக்கு வந்தனர். சமூகத்தின் இயக்கமே இந்த பாசிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தில் செழிப்புற்றது. துரோகம் பற்றிய வரையறையும், அது சார்ந்த கொலைக் கலாச்சாரமும், அரசு படைகள் மேலான தாக்குதலும் கதாநாயகர்களின் தோற்றத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியமைத்தது. அதிக கொலைகளே சமூகத்தில் மதிப்புக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.
இந்த விதிக்கு யாரும் விதிவிலக்கல்ல. பல கொலைகாரக் கதாநாயகர்களின் கதியே, அவர்கள் கட்டமைத்த சொந்த பாசிச விதிக்குள்ளேயே அவர்களையே கொன்று நியாயப்படுத்துவதைத் தடுத்துவிடவில்லை. நாளைப் பிரபாகரனுக்குக் கூட இந்த விதிகள் பொருத்தமான ஒரு தெரிவை வழங்கிவிடலாம். பாசிசத்தின் உள்ளடக்கம் இயக்கங்களின் கண்டுபிடிப்பல்ல. அது யாழ் சமூக உள்ளடக்கத்தில் புரையோடிக் காணப்படுகின்றது. அதன் செறிவான ஒரு வடிவத்தை உள்ளடக்கிய ஒரு அதிகார வடிவமே இயக்கங்களாகவும், அதை நியாயப்படுத்தும் கோட்பாடாகத் தமிழ்த் தேசியமும் வெளிப்பட்டது. உண்மையில் பாசிசத்துக்கு எதிராகச் சமூகத்தில் இயங்கிய மற்றைய முற்போக்கு கூறுகள் இனம் காணப்பட்டு அழிக்கப்பட்டது.
வரலாற்றை நாம் திரும்பி பார்த்தால், எமக்கு பல ஆச்சரியங்களே எம் முன் விரிந்து கிடக்கின்றது. ஒரு காலத்தில் போற்றப்பட்ட பலவும், இன்று மிக இழிந்த சமூகப் பாத்திரத்தை வழங்குவதை இனம் காண முடியும். டttணீ://தீதீதீ.ணடிtடச்ணூண்ச்ணச்ட்.ஞிணிட்/?ணீச்ஞ்ஞு=ணீச்ணீஞுணூண் என்ற புலிகளின் இணையத்தில், புலிகளின் பழைய பத்திரிகைகளின் தொகுப்பு உள்ளது. இதில் உள்ள பல விடையங்களை யாரும் ஒரு கருத்தாக எடுத்துக் காட்டினால், அல்லது தனது கருத்தாகச் சொன்னாலே அவை துரோகத்துக்குரியதாகும். 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பத்திரிகையில் (சித்திரை இதழ் இலக்கம் 6இல்) பிரபாகரன் கூறியது போல் ""நாம் விரும்புவது உண்மையான நிரந்தரமான ஒருமைப்பாட்டையே, இந்த ஒற்றுமையானது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கட்டி எழுப்பும் இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்'' என்றார் பிரபாகரன். இதை யார் இன்று முன்வைத்தாலும் அதே இணையத்தளம் அவரைத் தமிழ்த் தேசத் துரோகியாகவும் பொம்பிளைப் பொறுக்கியாகவும் காட்டும். அவ்வளவு ஏன் இதை இன்று பிரபாகரனே சொல்ல முடியாது. இப்படி பல.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், அதற்கு முந்திய தமிழரசுக் கட்சியும் எமது சமூகத்தைப் பாசிச கட்டமைப்பு சார்ந்து தகவமைத்ததை நாம் நிராகரித்துவிட முடியாது. இன்றைய புலிகளின் படுகொலை கலாச்சாரம் சார்ந்த அரசியல் பாராளுமன்ற அகிம்சைவாதிகளின் அரசியல் வழிகாட்டலில் இருந்தே பெற்றெடுக்கப்பட்டது. தந்தை செல்வா என்றும், ஈழத்துக் காந்தி என்றும் அழைக்கப்பட்ட கோட்டு சூட்டும் போட்ட செல்வநாயகம், மலையகத் தோட்டத் தொழிலளர்களைச் சுரண்டிய கடைந்தெடுத்த ஒரு யாழ்ப்பாணத்துத் தோட்ட முதலாளி. இவர்களுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் உள்ளஉறவு, அடிநிலையில் வாழ்ந்த மக்களைப் பற்றிய எதிர்ப்புணர்வில் இருந்தே, தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி அதைப் பிற்போக்காக கட்டியமைத்தவர்கள். இவரின் தலைமையில் தமிழ்த் தளபதியாகக் காட்டப்பட்ட அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை முன்வைத்த அரசியல் அகிம்சையை அல்ல. அகிம்சையின் பெயரில் மாற்றுக் கருத்தை ஒழித்துக் கட்டும் அரசியல் வன்மத்தையே கையாண்டனர். இதைச் செய்ய சுதந்திரன் என்ற குறுந்தேசிய இனவாத ஒரு ஆள்காட்டி ஏட்டை நடத்தின. அந்தச் சுதந்திரன் என்ற பத்திரிகையில் 50 சதவிகித முதலீடு செல்வநாயகத்துக்குச் சொந்தமாகும். அமைதியான தீர்க்கத்தரிசியாக வருணிக்கப்பட்ட அகிம்சாமூர்த்தி செல்வநாயகம் முதலிட்டு நடத்திய சுதந்திரன் ஏடு, வன்மம்மிக்க பாசிச உள்ளடக்கத்தில் தான் வன்முறைகள் தூவிவிடப்பட்டன. எதிர்த்தரப்பு மீது வன்முறை உசுப்பும் அரசியல் உணர்ச்சிக் கோசங்களைக் கட்டமைத்தனர்.
தனது சொந்த வர்க்க நலன் சார்ந்து எப்போதும் ஆங்கிலம் படித்த பிரிவினரைத் திருப்தி செய்து வந்த தமிழரசுக் கட்சி, யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களையே எப்போதும் உயர்த்தியது. மக்கள் நலன் சார்ந்த தேசியக் கோட்பாடுகளையும், தேசிய நலன்களையும் எதிர்த்து தான் தமிழ்த் தேசியத்தைப் பிற்போக்குத் தேசியமாகத் தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அதன் வாரிசுகள் தான் இன்றைய புலிகள்.
பிரிட்டன் தனது காலனித்துவ நலனைப் பாதுகாக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தியிருந்த பிரிட்டிஷ் விமானப்படை தளத்தையும், திருகோணமலை துறைமுகத்தையும் அரசு 1957இல் தேசியமாக்கிய போது தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யுடன் சேர்ந்து அதைக் கடுமையாக தமிழ்த் தேசியத்தின் பெயரில் எதிர்த்தது. அரசு உதவி பெற்ற பாடசாலைகளைத் தேசியமயமாக்கி, சொந்த மொழிக் கல்வியை உருவாக்கிய போது, அதையும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்தின் பெயரில் எதிர்த்தது. இன்று எமது மக்கள் படித்தவர்கள் என்று ஏதாவது பெருமைப்படுவது என்றால், அந்தப் பெருமை தமிழரசுக் கட்சி யாரையெல்லாம் துரோகிகள் என்று காட்டினார்களோ அவர்களால் கிடைத்ததே. இன்றைய தமிழ் கல்வி என்பது அன்றைய தமிழரசு கட்சியின் துரோகிகளாலே கிடைத்தது. தமிழரசுக் கட்சி தமிழ் வழிக் கல்வியை எதிர்த்தது, ஆங்கிலக் கல்வி என்ற காலனித்து கனவுகளுடன் தேசியத்தின் பெயரில் நக்கித் திரிந்தது. இதை வெற்றிகரமாகச் செய்ய, தமிழ் மக்களை ஏமாற்றி திரட்ட, சிங்களப் பேரினவாதிகளின் நடத்தைகளே உதவியது. மாறாகத் தமிழரசுக் கட்சியின் சொந்த அரசியல் அல்ல. அவர்களின் அரசியல் மக்களின் முதுகுத் தோலை உரிப்பதாகவே எப்போதும் இருந்தது.
1966இல் யாழ் பிரதேசங்களில் எழுந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும்படி தமிழ்த் தளபதி அமர்தலிங்கம் பகிரங்கமாகவே அரசிடம் அறைகூவல் விட்டதுடன், உயர் சாதியருடன் சேர்ந்து சாதி ஒடுக்குமுறையைக் கையாண்டவர்கள் தான் இந்தத் தமிழ்த் தளபதிகள். இவர்களின் வாரிசுகள்தான் இன்றைய புலிகள். வளர்த்த கடா மார்பில் முட்டலாமா? என்று சிலர் புலம்பும்போது, தமது சொந்த பாசிச முகத்தை மூடிக் கொண்டு ஜனநாயக வேஷம் போட்டு ஆடுகின்றனர்.
யாழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதை எதிர்த்த தமிழரசுக் கட்சி, இதை ஆதரித்த பலருக்குக் கொலை செய்வோம் என்று பயமுறுத்தலை விடுத்தனர். தமது பினாமி இளைஞர்களைக் கொண்டு குண்டுகளையே வீசினர். இப்படித்தான் எமது மண்ணில் பாசிசத்தின் வேர்கள் ஆழமாகவே வேர் ஊன்றத் தொடங்கியது.
இப்படி கடந்த காலத்தில் அடிநிலையில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு நன்மையாக எது கிடைத்தாலும், அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி செயல்பட்டது. இவற்றை எல்லாம் சிங்களப் பேரினவாதச் சக்திகளின் அரசியல் வன்மத்தின் பின்னால் ஒளிந்து நின்றபடி துரோகமாகக் காட்டினர். இதற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டனர். இப்படி சமூகப் பாசிசக் கூறுகளின் உள்ளடக்கத்தில் தான், யாழ் மேலாதிக்கப் பாசிசக் கூறுகள் அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்தன. இதன் ஏக பிரதிநிதிகளாகப் புலிகள் உள்ளனர். கொள்கை ரீதியாகத் தமிழரசுக் கட்சிக்கும், இவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையவே கிடையாது.
எமது தமிழ்த் தேசியம் என்பது தன்னகத்தே பாசிச உள்ளடக்கத்துடன் தான் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இதற்குத் தலைமை தாங்கிய அரசியல் கட்சிகள், இந்தப் பாசிசக் கூறை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டன. தமிழ் காங்கிரசில் இருந்து தமிழரசுக் கட்சி உருவானபோது, 1952ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி மீது தமிழ் காங்கிரஸ் வன்முறையைக் கையாண்டது. அன்று கம்யூனிஸ்ட் கட்சி தான் தமிழரசுக் கட்சிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழரிடையே பாதுகாப்பைக் கொடுத்தது. பின்னால் செல்வநாயகத்தை கிறிஸ்தவர் என்று தமிழ் காங்கிரஸ் தூற்றியது. இப்படி எமது தமிழ் அரசியல் வரலாறு மோசடித்தனத்தாலும், அவதூறுகளாலும் வன்முறைகளாலும் அலங்கரிக்கப்பட்டே உருவானது. காலத்துக்குக் காலம் யார் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தில் செல்வாக்கு பெற்றனரோ, அவர்களின் பொது அணுகுமுறை இதுவாகவே எப்போதும் இருந்தது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் அகிம்சை.
தமிழரசுக் கட்சியும், பின்னால் கூட்டணியும் தமிழ் மக்களை ஏமாற்றி ஒரு குறுந்தேசிய அரசியலைச் செய்தனர் என்றால், அதையே புலிகளும் செய்கின்றனர். கூட்டணி அகிம்சை என்ற பெயரில் வன்முறையைப் பயன்படுத்தியது. ஆனால் புலிகள் ஆயுதங்கள் என்ற பெயரில் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். தொடர்ச்சியான இந்த அரசியல் போக்கில் தமிழ் மக்களுக்குக் கிடைத்தது என்னவென்று பார்த்தால் எதுவுமில்லை. தமது சொந்த வாழ்க்கையை இழந்ததைத் தவிர வேறு எதையும் தமிழ் மக்கள், அன்றும் சரி இன்றும் சரி பெற்றது கிடையாது. இனி ஒருக்காலும் இந்த அரசியல் உள்ளடக்கத்தில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
இந்த உள்ளடக்கத்தில் தான் புலிகளின் அரசியல், பாசிசத்தின் உச்சக்கட்ட வக்கிரத்தைத் தொட்டு நிற்கின்றது. உண்மையில் புலிகள் இல்லாத இடத்தில் உருவாகும் எந்தக் குழுவும், இதைத்தான் செய்திருப்பர். இது இன்று புலிகளின் சிறப்பான அம்சமல்ல. புலிகளைப் போன்ற அனைத்து ஆயுதம் ஏந்திய குழுக்களின் செயல்பாடுகளும் விதிவிலக்கற்றவாறு ஒன்றாகவே இருந்தது. சிற்சல பண்பியல் மாறுபாடுகள் இருந்தபோதும் பாசிச இயல்பை உள்ளடக்கியே எமது தமிழ்த் தேசிய வக்கிரம் நிச்சயமாகப் பிரதிபலித்து இருக்கும். அவர்கள் உயிர் வாழ்ந்தவரை அப்படித்தான் இருந்தது.
இன்று பலர் இதைப் புலிகளினதும், பிரபாகரனினதும் சிறப்பு அம்சமாகக் காட்டி முன்வைக்கும் விமர்சனம் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். பிரபாகரனும், புலிகளும் இந்தப் பாசிசக் கட்டமைப்பில் தற்செயலானவர்கள் மட்டும் தான். தமிழ்த் தேசியத்தின் பெயரில் பலரும் பாசிச நடத்தையுடன் தான் ஆயுதங்களை ஏந்தினர். இங்கு பாசிசக் கூறுகளைப் புலிகள் தன்னகத்தே வரிந்து கொண்டனர் என்பது, சமூக இயக்கப் போக்கில் இருந்துதான். இதைத்தான் அனைத்துக் குழுக்களும் தமது கொள்கையாகக் கொண்டிருந்தனர். இதைத்தான் கூட்டணியும் தனது சொந்த அரசியலாகக் கொண்டிருந்தது. படுபிற்போக்கான வலதுசாரிய அரசியலில் பாசிசத்தின் கூறுகள் எப்போதும் மலிந்து கிடக்கின்றன. அதில் தான் அவர்கள் எப்போதும் உயிர்த்தெழுகின்றனர்.
இந்தப் பாசிசச் சமூகக் கூறுகள் மொழியில் வன்மத்தில் இருந்தே வன்முறையாகி, இதுவே படுகொலை அரசியலாகிய வரலாற்று பரிணாமத்தில் புலிகள் உச்சத்தை எட்டினர். ஆரம்பத்தில் துரோகி, சமூக விரோதி என்ற படுகொலை அரசியல் தொடங்கியது. இது படிப்படியாக மாற்றுக் கருத்தைக் கொண்டோரையும் தம்முடன் முரண்பட்டவர்களையும் கூட கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற எல்லைவரை சென்று, படுகொலைகளே அன்றாட அரசியல் நிகழ்ச்சியாகிவிட்டது. இங்கு புலிகள் பற்றி முரணான கருத்துகளைச் சாதாரண மக்கள் கதைத்தாலும் கூட, கொலைகளே தீர்வு என்ற நிலையை எட்டிவிட்டது.
மொத்தச் சமூகமும் பீதியில் உறையும் வண்ணம் விழி பிதுங்கி நிற்கும் காட்சி, புலிகளின் மேலான வெறுப்பையூட்டும் வகையில் காணப்படுகின்றது. புலிகள் பற்றி ஒரு சாதாரண மனிதன், அச்சம் கலந்த உணர்வுடன் தான் எப்போதும் எங்கும் இயங்குகின்றான். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. தமது சொந்தச் சமூகப் பொருளாதார வாழ்வை இழந்து போகும் மனிதனின் கதியும், இதுவாகவே உள்ளது.
புலிகள் தமிழ்த் தேசியத்தின் பெயரில் எதைச் சமூகத்துக்குப் பெற்றுத் தரப் போகின்றார்கள் என்று கேட்டால், அவர்கள் கூட அதற்குப் பதில் தரமுடியாத நிலையில் அலட்டுகின்றனர். அவர்கள் தமிழ் மக்களைச் சுரண்டி சூறையாடும் போக்கைத் தாண்டி, அவர்கள் மக்களுக்கு என்று வழிகாட்டக் கூடிய நோக்கங்கள் என எதுவும் இருப்பதில்லை. தமிழ் மக்களைச் சூறையாடி விடுவதே, அவர்களின் ஒரே இலட்சியமாகிவிட்டது. இந்த நிலையில் தமிழ் இனம் தனது கையாலாகாத்தனத்தை அடைந்துள்ளது. தமிழ் மக்களைச் சூறையாடும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் சொந்த அதிகாரத்தைப் புலிகள் கோருவதே, அதன் உயர்ந்தபட்ச இலட்சியமாகிவிட்டது. இதைப் பாதுகாக்க படுகொலைகள் தொடர்ச்சியாக அரசியல் ஆணையில் வைக்கப்படுகின்றது.
கைது, கடத்தல், கொலை என்ற வடிவில் புலிகள் தொடராக ஒரு சமூகப் படுகொலைகளை நடத்துகின்றனர். 1986ஆம் ஆண்டு ரெலோ அழிப்புடன் தான், பெரும் படுகொலை அரசியல் ஒரு பாய்ச்சலாகத் தொடங்கியது. அன்று தொடங்கிய படுகொலைகள் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒன்றாக இருந்தது. உதாரணமாகத் தெல்லிப்பழை சந்தியில் உயிருடனேயே ரெலொவைச் சேர்ந்தவர்கள் மேல் விறகை போட்டு எரித்தனர். அப்போது அமிர்தலிங்கத்தின் எடுபிடியும், பின்னால் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமகாராஜா, கொலைகாரப் புலிகளுக்கு, உயிருடன் எரித்த களைப்பு தீர கொக்கோகோலாவை போத்தல் போத்தலாகவே உடைத்து பரிமாறினார். இந்த சிவமகாராஜா கூட்டணியின் அரசியல் வாரிசாக, அமர்தலிங்கத்தின் கையாளாக வளர்ந்தவன். அவரின் தயவில் அதிகாரங்களைப் பெற்றவன். அன்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சொத்தில் தான், இந்த கொக்கோகோலாவை புலிகளுக்கு விநியோகம் செய்தõன். பாசிசக் கூறுகளும், கொலைக்கு ஆதரவான சமூகச் சித்தாந்தமும் வெறுமனே புலிகளின் கண்டுபிடிப்பல்ல.
அன்று புலிகள் வீதியில் உயிருள்ள மனிதர்களை எரிக்க தொடங்கிய போது தொடங்கிய சமூகப் பாசிசம், வரலாறு முழுவதும் தொடரும் காட்சி தான் இன்றைய நிலைமை. தமிழ் மண்ணில் எல்லாவிதமான மாற்றுக் கருத்துத்தளங்களையும், சுயமான சமூக நிறுவனங்களையும் கூட ஈவிரக்கமின்றி புலிகள் அழித்தனர். பலவற்றைத் தமது பினாமி பெயரில் அபகரித்தனர். இன்று புலிகளின் உத்தியோகபூர்வமான நிறுவனங்கள் பல, முன்பு புலிகள் அல்லாத தரப்பினரிடம் இருந்து அபகரிக்கப்பட்டதே.
உதாரணமாக, தமிழர் புனர் வாழ்வுக் கழகம், எரிமலை பத்திரிகை, ஊற்று ஆய்வு நிலையம், ஈழமுரசு, நமது ஈழநாடு, ரி.ரி.என். ஐ.பி.சி. போன்ற பல நிறுவனங்களும் அவர்களின் உத்தியோகபூர்வமான நிறுவனங்கள் அனைத்துக்கும் மற்றொரு வரலாறு உண்டு. ஏன் கிட்டு 1986களில், வைத்திருந்த நாய்குட்டி முதல் அவன் வைத்திருந்த குரங்குக்கும் கூட மற்றொரு வரலாறு உண்டு. அவை கூட துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டவை தான். அதேநேரம் தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் புலி ஆதரவு நிறுவனங்கள் அனைத்தும், பெருமளவில் பினாமி நிறுவனங்கள்தான்.
அன்று தொடங்கிய பாசிசம், இன்று தனது அமைதிகாலத்தில் கூட தனது முகத்தை மூடிமறைக்க முடியவில்லை. அமைதிக் காலப் பூங்காவில் புலிகளின் கோர முகம் நிர்வாணமாவது எப்போதும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. வழமையாக யுத்த சூழல் இரைச்சலுக்கு இடையில், பாசிசக் கொடூரங்களை மூடிமறைக்க முடிந்தது. அமைதி மற்றும் சமாதான காலத்தில் பேரினவாத இராணுவத்தின் மயமான அமைதி, புலிகளின் சொந்த கொடூரத்தைத் தெளிவாக சமூகத்தின் முன் வெளிச்சம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான, புலிகளின் கொடூரான போக்கைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. பலர் சொந்த அனுபவத்தைத் தாமாகவே பெற்று விடுவதை இது துரிதமாக்கியது. ஏகாதிபத்தியம், சமாதானம் அமைதி என்று நடத்தும் நாடகத்தின், பின்னுள்ள உண்மையான நோக்கமும் இதுதான். அதாவது புலிகளை அம்பலப்படுத்துவதும் புலிகளைத் தனிமைப்படுத்தி அழிப்பதும்தான். இன்று ஏகாதிபத்தியம் விரும்பியதை நோக்கி நகர்வதை புலிகளின் பாசிசம் தலைகீழ் புரியாத வேகத்தில் அமுல்படுத்துகின்றது.
புலிகளும், அரசும் தாங்களாகவே ஒத்துக் கொண்ட எல்லைக்குள் ஒரு உடன்பாட்டைக் கண்டனர். இதை மீறுவது யுத்த நிறுத்த மீறலாகக் கருதியே கையெழுத்திட்டனர். இதற்குச் சாட்சியங்கள், ஆதாரங்கள் அவசியம் என்ற கூறிச் சென்றனர். இப்படி ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும் நிறுவப்பட்ட குற்றங்களின் அளவே, புலிகளுடைய பாசிசத்தின் பன்மைத் தன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மிக ஒழுக்கமான கட்டுப்பாட்டை வலியுறுத்துவதாகப் பீற்றும் புலி அரசியல், தனது சொந்த தலைவர் பிரபாகரன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் கூட இயக்க அணிகள் கடைப்பிடிக்க முடியவில்லை.
01.02.2002 முதல் 30.04.2005 வரையான காலத்தில் இனம் காணப்பட்ட மொத்த யுத்த மீறல் சம்பவத்தில் புலிகள் தரப்பு 6007 யுத்த மீறலைச் செய்தாகப் பதிவாகியுள்ளன. இராணுவம் மீது 1000 யுத்த மீறலைச் செய்ததாகப் புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் கண்காணிப்பு குழு யுத்த நிறுத்த மீறலாக ஆதõரபூர்வமாக இனம் கண்டவைகளில் புலிகள் 2668 மீறலும் இராணுவம் 115 மீறலும் ஆகும். இந்தப் புள்ளிவிபரம் கூட முழுமையில், ஒரு சிறு பகுதி தான், மொத்தமாக 900இக்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தப்பட்டனர். அண்ணளவாக 400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுச் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவை யுத்த நிறுத்த மீறல் என்ற தரவுக்குள், புலிகளுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலாகப் பதிவு செய்யப்படவில்லை. ஒரே காரணம் இவை இனம் தெரியாதவர்களின் நடவடிக்கையாக ஆதாரமற்ற ஒன்றாகக் கண்காணிப்பு குழு உலகத்தின் காதுக்கே பூ வைக்கின்றது.
உண்மையில் கொலைகள், கடத்தல்கள் பல முறைப்பாட்டிற்கே (புகார்) வருவதில்லை. இப்படி பல பத்தாயிரம் சம்பவங்கள் தொடர்பாகச் சாதாரண மக்கள் முறைப்பாட்டைச் (புகார்) செய்ய முடிவதில்லை. அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இதைப் பற்றி பேசுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
இந்த யுத்தநிறுத்த மீறல்களில் 90 சதவீதமானவை சொந்தத் தமிழ் மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது புலிகள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராகத் தமது சொந்தப் பாசிச வன்முறைகளைக் கையாளுகின்றனர் என்பதையே பறைசாற்றுகின்றது. புலிகளும், புலிப் பினாமிகளும் அரசு யுத்த நிறுத்தத்தை மீறுவதாகக் கூறும் போது, உண்மையில் அதற்குப் பெரும்பாலும் அடிப்படைகளற்ற வெற்று கோசங்களாகி வெறும் ஊடகச் செய்தியாகவே இதை விடுக்கின்றனர். ஏன் தமிழ் மக்கள் 400 பேரளவில் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிலவற்றை மட்டுமே யுத்தநிறுத்த மீறலாகக் காட்டி, புலிகளும், புலிப்பினாமிகளும் குற்றச்சாட்டை எடுத்துச் செல்லுகின்றனர்? உண்மையில் ஒவ்வொரு கொலையும் யுத்த நிறுத்த மீறலாகக் கொண்டு செல்ல, தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் பினாமிகளும் மறுப்பதில் இருந்து, இக்கொலைகள் அனைத்தும் புலிகளால் செய்யப்பட்டவை என்பதையே உறுதி செய்கின்றது.
இப்படி இந்தக் கொலைக் கலாச்சாரப் பாசிச அரசியல் மனிதத்துவத்தை எட்டி மிதிப்பதில் தன்னைத் தக்க வைக்கின்றது. நாளொன்றுக்கு ஒரு கொலையைத் தின்னும் தேசியம், பலியெடுக்காத நாட்கள் எம்மண்ணில் கிடையாது. 1986இக்குப் பிந்திய எமது வரலாற்றில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒருவரையாவது தேசியம், தேசியத்தின் பெயரில் ஒருநாளைக்கு கொன்று வந்துள்ளது, கொன்று வருகின்றது. இது சில காலத்தில் ஒருநாளைக்கு 3,4 என்று தாண்டிச் சென்றதும் உண்டு. கடந்த 20 வருடங்கள் கொலைகளின்றி நாட்கள் உருண்டு ஓடிவிடவில்லை. இதில் இருந்தே கொலை செய்யப்பட்டவர் பட்டியலை இனம் காணமுடியும்.
கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்துக்கு எப்படித் துரோகம் இழைத்தனர் என்று யாரும் எதிர் கேள்வி கேட்டாலே எதிர் கேள்விகேட்ட அவர்களுக்கும் மரணம் காத்திருக்கும். இதுவே தேசியத்தின் மொழியாக உள்ளது. நாம் அரசு சார்பு குழுக்கள் என்பதை வெறுமனே ஒற்றைப் பரிணாமத்தில் நாம் பார்க்க முடியாத நிலைக்குச் சமூகப் பாசிசமே அதை உருவாக்குகின்றது. அரசு சார்பு குழுக்களை, சமூகப் பாசிசச் சித்தாந்தமும் புலிகளின் பாசிச நடவடிக்கையுமே உருவாக்கி விடுகின்றது. மாற்றுக் கருத்தை வைத்திருந்தமைக்காகச் சித்திரவதையையும், படுகொலையையும் பரிசளிக்கும் புலிகளின் கட்டமைப்பில் தப்பியோடும் மனிதர்கள், வாழவழியற்ற நிலையில் அரசு சார்பு குழுக்களாக மாறுகின்றனர். ஏன் புலனாய்வு பிரிவினராக கூட மாறுகின்றனர் அல்லது மாற்றப்படுகின்றனர். பெரும்பாலானவர்கள் தாம் விரும்பி தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல இது.
குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த ஒரு பாதையாக இது மாறிச் செல்லுகின்றது. புலம் பெயர் நாட்டை நோக்கி நகர்வு இந்த அளவைக் குறைத்த போதும், வசதியற்றவர்களுக்கு இதைவிட்டால் வேறு மார்க்கத்தைச் சமூகப் பாசிசம் எம்மண்ணில் வழிகாட்டவும் இல்லை. வழியை விட்டு வைக்கவுமில்லை. அன்றாடம் புலிகளுக்கு எதிரான அணியில், பலரைப் புதிதாகப் புலிகள் இணைக்கின்றனர். இப்படி சிலர் கொல்லப்படுகின்றனர். சிங்களப் பேரினவாதத்துக்கு இலகுவாகவே ஆட்களைத் திரட்டிக் கொடுக்கும் வகையில், புலிகளின் பாசிச வீர நடத்தைகள் ஊக்கியாகவும், உந்து சக்தியாகவும் உள்ளது.
நாம் அரசு சார்பு குழுக்கள் என்பதால், அதில் உள்ள ஒவ்வொரு மனிதனின் தேர்வையும் கொச்சைப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். மாற்றுவழி நடைமுறையில் இல்லாத ஒரு நிலையில், உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஒரு மனிதனின் தவிர்க்க முடியாத தவறான தேர்வைப் புலிகளே ஊக்குவிக்கின்றனர். இந்த வகையில் அரசு சார்பு குழுக்களின் சாதாரண அடிமட்ட உறுப்பினர்களின் மீதான பாசிசக் குற்றச்சாட்டை, கடுமையாகவே எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது.
அரசு சார்பு குழுக்களை உருவாக்கும் சூழலை மாற்றாதவரை, அதன் மீதான தாக்குதலையும், படுகொலைகளையும் நாம் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. அதேநேரம் அரசு சார்பு குழுக்களின் தலைவர்களைக் கடுமையாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தவறான அரசியல் வழிகள் மூலம், வாழவழியற்ற அப்பாவி ஏதிலிகளைக் கொண்டு நடத்தும் மற்றொரு பாசிச அரசியலின் ஏகபிரதிநிதிகளாகச் செயல்படுவதை எக்காரணம் கொண்டும் நாம் ஏற்க முடியாது. பரஸ்பரம் புலிகளும், அரசு சார்பு குழுக்களும் பாசிசத்தின் கூறுகளைக் கொண்டு, அப்பாவிகளை ஏமாற்றி அல்லது அவர்களின் அறியாமை அல்லது அவர்களின் தியாக மனப்பாங்கைக் கொண்டு நடத்தும் அரசியல் தமிழ் மக்களின் அடிமைத்தனத்தின் மேலானதாக உள்ளது.
நாம் இவற்றை முதலில் தெளிவாக இனம் காணவேண்டியுள்ளது. இதனடிப்படையில் சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் எப்போதும் செய்ய வேண்டியவராக உள்ளோம். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் துருவி ஆராயும் விமர்சனம் வழிமுறையை எல்லாவற்றில் மீதும் கையாள்வதன் மூலம், சரியான ஒன்றை நாம் நிச்சயமாகத் தேர்ந்து கொள்ள முடியும். இது முரணற்ற வகையில் மக்களின் நலனை முதன்மைப்படுத்தும். இது மட்டும் தான் தமிழ் மக்களின் நலன்களை மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் ஒரேயொரு மாற்று அரசியல் வழியாகும்.
27.06.2005