Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _1.jpgபுலியெதிர்ப்பு அரசியலில் தான் ஜே.வி.பி.யும் உயிர் வாழ்கின்ற அரசியல் பரிதாபம், பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.

தமிழ் இனத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் மனிதவிரோத வன்முறைகளுக்குப் பின்னால், தம்மையும் தமது அரசியல் விபச்சாரத்தையும் தக்க வைக்கின்றனர் என்றால், ஜே.வி.பி.யின் அரசியலும் பேரினவாதமாகி அம்பலமாகி வருகின்றது. எல்லாவிதமான இடதுசாரி வேடங்களையும் களைந்து, தன்னைத்தான் நிர்வாணமாக்கி வருகின்றது. காலங் காலமாக தமிழ் மக்களுடன் செய்து கொண்ட எல்லா ஒப்பந்தங்களும், பேச்சு வார்த்தைகளும் எந்த அரசியல் வழிகளில் முறியடிக்கப்பட்டதோ, அதையே ஜே.வி.பி. மீண்டும் வரலாற்றில் அப்படியே கையாளுகின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் இலங்கையில் எழுந்துள்ள எதார்த்தம் பேரினவாதம் கொக்கரிக்க தொடங்கியுள்ள நிலையில், புலியெதிர்ப்பு தமிழ்ப் பிரிவு அதன் பின்னால் அரோகரா போட்டபடி காவடி எடுக்கின்றனர்.

 

இக்கட்டுரை சுனாமி பெயரில் புலிகளும் அரசும் ஒரு தரப்பாக மக்கள் விரோத உள்ளடக்கத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக எழுதப்பட்டது. கட்டுரை வெளிவரும் போது, ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அவைகளையும் உள்ளடக்கும் வகையிலே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது. சுனாமி மீள் கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஒரு மக்கள் விரோத உடன்பாட்டைக் கையெழுத்திட உள்ளதாக அரசு அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தாம் எதிர்ப்பதாகக் கூறியபடி பேரினவாத நோக்கில் ஜே.வி.பி. அரசியலில் இருந்து வெளியேறியது. இதன் மூலம் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது.


இதைத் தொடர்ந்து ஜே.வி.பி.யும், புத்த பகவானின் வழிகாட்டிகளும் களத்தில் இறங்கி இனவெறி ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தினர், நடத்துகின்றனர். யுத்தத்தை நோக்கிய கோசங்களுடன், இனங்களிடையே பிளவை மேலும் அகலமாக்கி, மக்களை அடக்கியாளும் சமூகப் பிளவுகளைத் தேடுகின்றனர். கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இதே பாணியில் பேரினவாதிகளால் எதிர்க்கப்பட்டன.


மறுபக்கத்தில் தொடர்ச்சியாக இலங்கையை இனவாத அடிப்படையில் அடக்கியாண்ட இரண்டு பிரதான இனவாதக் கட்சிகளும் இன்று, தமது முரண்பாடுகளுக்கு இடையில் இனப்பிரச்சினையில் ஒரு உடன்பாட்டைக் காண முனைகின்றது. இது அக்கட்சிகளின் சொந்த நிலைப்பாடல்ல. ஏகாதிபத்தியங்களின் தீர்வுகளை அமுல்படுத்த முனையும் ஒரு தொடர்ச்சியில் தான், இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் குறுக்கு வழியில் தீர்க்க முனைகின்றனர். மக்கள் பற்றிய சொந்தச் சமூக நேசிப்புகளில் இருந்து, எந்தத் தீர்வையும் இவர்கள் முன்வைக்கவில்லை. மாறாக, ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் நீட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வடிவமாகவே ஒப்பந்தங்கள் மனித சமூகங்களின் மேல் திணிக்கப்படுகின்றது.


இந்த எல்லைக்குள் புலிகள் சரணடைய தயாராக இருக்கும் அவர்களின் அரசியல் பொருளாதாரச் சமிக்கைகளைச் சார்ந்தே, இந்த ஒப்பந்த உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வருகைக்காக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகவே, ஏகாதிபத்தியம் தனது சொந்த நலன் சார்ந்து கடுமையான பிரயத்தனம் செய்து வழிகாட்டியது. இந்த நிலையில் இன்று, இதை எதிர்ப்பவர்கள் யாரும் ஏகாதிபத்திய நலன்களை எதிர்க்கவில்லை. மாறாகப் பௌத்தப் பேரினவாத உள்ளடக்கத்தில், தமிழ் மக்களுக்கு எதிரான நோக்கில் இது எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. பௌத்தப் பேரினவாதிகளும், இடதுசாரியாகத் தம்மைத்தாம் அலங்கரித்து வலம் வரும் தீவிர வலதுசாரியான ஜே.வி.யு.மே இதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும், அரசியல் சதிகளையும் நடத்துகின்றனர். கடந்தகாலத்தில் எப்படி தீவிரப் பேரினவாத அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தனரோ, அதே பேரினவாதக் கட்சிகளின் வழியில் இவர்கள் தமது சொந்த பேரினவாதக் கால்களைத் துல்லியமாக எடுத்து வைத்துள்ளனர்.


இந்த நிலையில் ஜே.வி.பி. தனது வலதுசாரி அரசியலுக்கு இடதுசாயம் பூசி விளம்பரப்படுத்தச் சந்தைப்படுத்துவதையே, புலியெதிர்ப்பு பிரிவினர் கூவி விற்கின்றனர். இந்த வகையில் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரான சந்திரசேகரனைப் புலியெதிர்ப்பு அரசியல் நோக்கிலும், அவரை புலி சார்பில் மடக்கும் நோக்கிலும் அவரின் கருத்துக்களை வானொலிக்கு எடுத்து வந்தனர்.


ஜே.வி.பி. புலிகளின் மனித உரிமை மீறலை மையமாக வைத்து, தமிழ் விரோதப் பேரினவாதச் செய்தியை வெற்றிகரமாகவே பிரச்சாரம் செய்ய முடிந்தது. இதன் மூலம் புலியெதிர்ப்பு பிரச்சாரத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் செய்ய முடிந்தது. தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் சார்ந்த சமூகப் புத்திஜீவித்தனம் அழிக்கப்பட்டுள்ள அராஜகச் சூழலில், சந்திரசேகரின் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத போனது மட்டுமின்றி, புலிக்கு மாற்று ஜே.வி.பி. தான் என்று படிமத்தைப் புலியெதிர்ப்பு அணிகள் கணிசமாக உருவாக்கியுள்ளனர்.


ஜே.வி.பி.யின் பேரினவாதத்துக்கு, புலியெதிர்ப்பாளர்களின் காவடியாட்டம், தமிழ் மக்களின் மேலான புதிய அடக்குமுறைக்குரிய ஒரு அரசியல் வரலாற்றைத் தொடங்கி வைத்துள்ளது. நான் அண்மையில் ஜே.வி.பி. பேரினவாதத்தை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை ஒன்றுக்கு, புலியெதிர்ப்பாளர்கள் துள்ளி குதித்தது மட்டுமின்றி, பதிலளிக்கப் போவதாகக் கூறிய போதும் பதில் எவைகளையும் காண முடியவில்லை. ஜே.வி.பி. புலிகளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு, பேரினவாதமாக குசுவிடும் அரசியலையே இக்கட்டுரை விமர்சனம் செய்ய முனைகின்றது.


ஜே.வி.பி. பேரினவாத அரசியல் எப்படி தொடங்குகின்றது என்பதைத் துல்லியமாக ஆராய்ந்தால் ஆச்சரியமே மிஞ்சும். ஜே.வி.பி.யின் அரசியல் என்ன என்றால், சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பே மிஞ்சுகின்றது. தெளிவான ஒரு கொள்கையற்ற, புலிகளைப் போல் நிலைமைக்கு ஏற்ப இலங்கை அரசியலைக் கையாளும் இவர்கள், தமிழ் மக்களைப் புலியின் பெயரில் எதிராக நிறுத்துகின்றனர்.


ஆம். புலிகளின் மனித விரோத நடத்தைகளை முன்வைத்தே, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாத அரசியல் வெளிவருகின்றது. இதற்கு வெளியில் ஜே.வி.பி.யின் அரசியல் எதுவும் வெளிப்படவில்லை. தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையைச் சொல்லியே, முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆழமாகப் பார்த்தால் எல்லா புலியெதிர்ப்பாளர்களும் எப்படி மக்களுக்கு எதிராக இயங்குகின்றரோ அப்படியே ஜே.வி.பி.யின் பேரினவாதமும் இயங்குகின்றது.


புலிகள் அன்றாடம் நடத்தும் படுகொலைகள், சித்திரவதைகள், கப்பங்கள், வரிகள், சூறையாடல்கள் முதல் அனைத்துவிதமான ஜனநாயக மீறல்களையும் அடிப்படையாகக் கொண்டே, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாதம் தன்னைத்தான் பூசி மொழுக முனைகின்றது. பேரினவாத அரசுகள் புலிப் பயங்கரவாதம் என்று சொல்லி, தமிழ் மக்களை எப்படி ஒடுக்கியதோ, அதைக் கொஞ்சம் மாற்றி வேறு வடிவில் கூறி ஜே.வி.பி. தனது பேரினவாத வழிகளில் கொக்கரிக்கின்றது. இன்று இந்த பொதுக் கட்டமைப்பைப் பேரினவாத நோக்கில் இருந்து எதிர்ப்பதே இதன் ஊடாகத்தான். பொதுக்கட்டமைப்பை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வெளியில், மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் இன்மை, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாதத்தினைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.


உண்மையில் மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் என்பது தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை உள்ளடக்கியது. இது எதுவும் ஜே.வி.பி.யிடம் கிடையவே கிடையாது. உண்மையில் பௌத்தப் பேரினவாத மதவாதிகளுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில், இதை எதிர்ப்பதில் என்ன வேறுபாடுகள் தான் உண்டு என்றால், எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கியப்பட்டுள்ள இவர்கள், பரஸ்பரம் விமர்சிக்காது காணும் ஐக்கியம் பேரினவாதக் கூட்டையே அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றது. ஏன் கடந்த காலத்தில் குறுந்தேசியத் தமிழ்த் தலைமைகளுக்கும் பேரினவாதச் சிங்களத் தலைமைகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட எல்லா ஒப்பந்தங்களும் அவர்கள் கையெழுத்திட்ட மை காயும் முன்பே, காலத்துக்கு காலம் சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது. இந்த ஒவ்வொரு காலக்கட்டத்தின் நிலை தொடர்பாகவும் ஜே.வி.பி. நிலைப்பாடு என்னவாக இருந்து இருக்கும்? என்னவாக இருக்கும்? இதை ஜே.வி.பி. எதிர்க்குமா அல்லது ஆதரிக்குமா எனின் நிச்சயமாக எதிர்த்தே இருக்கும். உண்மையில் இங்கு புலிகள் அல்ல பிரச்சனை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுத்துவிடக் கூடாது என்ற அடிப்படை நிலைப்பாடுதான், ஜே.வி.பி.யின் பேரினவாத அரசியலாகும்.


புலிகள் விரும்பும் எந்தப் பொதுக் கட்டமைப்பும் சரி, இடைக்காலத் தீர்வும் சரி அது எதுவாக இருந்தாலும், மக்களின் வாழ்வைச் சூறையாடலுக்கு உட்படுத்தும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே. இதனடிப்படையில் உருவாகும் அதிகாரக் கட்டமைப்பை ஒட்டு மொத்தச் சமூகம் மீதும் திணிக்கும் குறிக்கோளின் அடிப்படையில், எல்லாவிதமான மனித நாகரீகத்தையும் மறுக்கும் ஜனநாயக மீறலைக் கொண்டே இருப்பர் என்பது இன்றைய எதார்த்தமாகும். இந்த எதார்த்தத்தைக் கொண்டு, எந்தவிதத்திலும் பேரினவாதத்தை மூடி போட்டு பாதுகாக்க முனைவது சுத்த அயோக்கியத்தனமாகும்.


புலிகளின் ஜனநாயக மீறலைக் கூறியபடி, தங்களைத் தாங்கள் பேரினவாதிகள் அல்ல என்கின்றனர். ஜே.வி.பி. கேட்கின்றது தமிழ் மக்களைத் தாங்கள் கொன்றதை நிறுவ முடியுமா என்று? வசதியாகவே புலிகள் பாணியில் இப்படி தமிழ் மக்களை மடக்க முனைகின்றனர். தாங்கள் பேரினவாதிகள் அல்ல என்று நிறுவ, அவர்களின் அரசியல் நடைமுறையில் எதையும் எடுத்துக்காட்ட முடியவில்லை. இதையே ஜே.வி.பி.யின் உப்பு சப்பற்ற புலிப்பாணி வாதம் காட்டுகின்றது. தமது சொந்தப் பேரினவாதத்தை மூடிமறைக்க விரும்பும் அவர்கள், இனங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வையும், மொழிகளுக்கு இடையில் சமத்துவத்தையும் நிலைநாட்டினால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்கின்றனர். அதனால் பொதுக் கட்டமைப்பை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்து, பேரினவாதத்தை ஆணையில் வைக்கின்றனர்.


கடந்த காலத்தில் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகள் இரண்டும் காலத்துக்குக் காலம் இனவாதத்தை முன்வைத்த வரலாற்றைக் கூறி, அவைதான் இன்றைய நிலைக்குக் காரணம் என்கின்றனர். இப்படி பேரினவாதத்தை வார்த்தையில் (நடைமுறையில் அல்ல, நடைமுறையில் பேரினவாதமாக) எதிர்ப்பதாகத் தமிழ் மக்களுக்குக் காட்டியபடி, பேரினவாதிகளாக தாம் இருப்பதை மூடி மறைக்கின்றனர். இதையே பிரதான பேரினவாதக் கட்சிகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம் சாட்டியபடி நடத்தும், சமாதான நாடகங்களிலும் கூட ஜே.வி.பி.யின் பாணியைக் காண முடியும்.


ஜே.வி.பி. தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறியபடி, பொதுக்கட்டமைப்பை எதிர்க்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவே, இந்தப் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டாம் என்கின்றனர். புலிகள் போன்ற பாசிஸ்டுகளுடன் ஒரு உடன்பாடா? என்று கேள்வி எழுப்பி, பேரினவாதத்தைத் தமது சொந்த அரசியலாக்குகின்றனர்.


உண்மையில் இங்கு புலியெதிர்ப்பாளர்கள் போல் ஜே.வி.பி.யும் புலிகள் சமன் தமிழ்மக்கள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே பேரினவாதத்தைக் கட்டமைக்கின்றனர். உண்மையில் இந்தப் பொதுக் கட்டமைப்பு அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தது போல் புலிகளின் சூறையாடலுக்கான ஒன்று என்பது வெட்ட வெளிச்சமானதே. ஒப்பந்தச் சரத்துகள் உருவாக்கும் நிர்வாகக் கட்டமைப்பு கூட மனிதவிரோதத் தன்மையை அப்பட்டமாகக் கொண்டுள்ளது. இவை மக்கள் நலன் என்ற நோக்கில் இது கோரப்படவில்லை என்ற அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தை விமர்சிப்பதை யாரும் இனவாதமாக மதிப்பிடுவதில்லை. மக்கள் நலன் என்பதை அடிப்படையாக வைத்து விமர்சிக்காத அனைத்தும், சமகால எதார்த்தத்தின் மீதான பச்சையான பேரினவாதம் தான். இது புலியெதிர்ப்பு என்ற உள்ளடக்கத்தில் வந்தாலும் பேரினவாதத்துக்கே நேரடியாக உதவி செய்கின்றது. உண்மையில் பேரினவாதத்தை எதிர்த்துப் போராட்டத்தை நடத்தாத அனைத்தும், பெரும் தேசியச் சிங்களப் பேரினவாதம் தான்.


மக்கள் நலன் என்பது என்ன? இதுவே ஜே.வி.பி. பேரினவாதம் மீதான தெளிவான விமர்சனத்தைத் துல்லியமாக எடுத்துக் காட்டும்.


1. இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அனைத்தும் பேரினவாதம்தான். அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கும்போது, அவர்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பதும் பேரினவாதம் தான். இந்தத் தனித்துவம் நிலவும் அரசியல் கட்டமைப்பில், சம பங்காளியாக அங்கீகரிக்க மறுப்பதும் பேரினவாதம் தான். பல தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிளவுகளை இல்லாது ஒழிக்கும் வகையில் தெளிவானதும், சுத்துமாற்று அற்ற ஒரு சமூகத் தீர்வை முன்வைக்க மறுப்பதும் பேரினவாதம் தான்.


2. இனங்களுக்கு இடையிலான பிளவைத் தீர்ப்பதில் சுயநிர்ணயம் உரிமை என்ற கோட்பாடு மட்டும் தான், உயர்ந்தபட்சம் முரணற்ற ஐக்கியத்தை வலியுறுத்துகின்றது. இதை மறுப்பது பேரினவாதம் தான். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான உயர்ந்தபட்ச ஐக்கியம் என்பது, சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது. இதுவே தேசிய இனத்துக்கும் பொருந்தும். இந்தக் கோட்பாடு செல்லாது என்பது, கடைந்தெடுத்த பேரினவாத அயோக்கியத்தனமாகும்.


3. தேசியம் என்பது இனப்பிளவுகளாக மாறியுள்ள போதும், எப்போதும் எல்லாத் தேசிய இனத்துக்கும் மக்கள் நலன் சார்ந்த தீர்வுகள் எப்போதும் ஒரே கோசங்களால் ஆனவை. இங்கு கோசங்கள் வலியுறுத்தும் நிலைமைகள் சில, அதிக அழுத்தத்தை ஒரு இனத்துக்கு வழங்க கோருகின்றது. இது முரண்பாடனவையல்ல. ஒரே பொதுக் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய இனங்களின் முரண்பாட்டைத் தீர்க்கும் நடைமுறை சார்ந்த அரசியலை முன்வைக்காத அனைத்தும் பேரினவாதம் தான்.


4. இலங்கையில் பேரினவாதம் யுத்தத்தை உருவாக்கியுள்ள நிலையில், வலதுசாரியத் தமிழ்த் தேசியம் எதிர் நிலையில் உருவாகியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் பாட்டாளி வர்க்கம் பொறுப்பேற்று தன்னைச் சுயவிமர்சனம் செய்யவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை வளர்க்கும் வகையில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட முரணற்ற அரசியலை முன்வைக்கவும் மறுக்கும் அனைத்தும் பேரினவாதம் தான்.


5. முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாராளுமன்ற அரசியல் என்பது எப்போதும், குறுகிய மனிதப் பிளவுகளை விதைத்தே தன்னைத் தக்கவைக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் இனப் பிளவை அடிப்படையாகக் கொண்டே, பாராளுமன்ற அரசியல் தன்னைத் தகவமைக்கின்றது. இந்த வகையில் பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்ற குட்டையில் புரண்டு எழும் எல்லாப் பன்றிகளும், மக்கள் விரோதிகளாகவும் பேரினவாதிகளாகவுமே இருப்பர் என்பதை ஏற்க மறுப்பதும் பேரினவாதம் தான்.


6. கடந்தகால அனைத்து இனவாத நடவடிக்கைகளையும் சரியாக இனம் கண்டு, அதை அம்பலப்படுத்தி இனவாதத்துக்கு எதிராகச் செயல்படாத அனைத்தும் பேரினவாதம் தான். இதேபோல் சமகாலத்தின் அனைத்து இனவாதத் தொடர் முயற்சிகளையும் அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடாத மௌனங்கள் கூட பேரினவாதம் தான்.


இவை எதையும் ஜே.வி.பி. தனது அரசியல் வழியில் நேர்மையாகக் கையாள்வதில்லை. சந்தர்ப்பவாதப் பேரினவாதிகளாகவே உள்ளனர். தமிழ் மக்களுக்கு ஒன்றும், சிங்கள மக்களுக்கு இன்னொன்றுமாகத் தமது சொந்தக் கருத்தைப் பூசிமொழுகுபவர்கள் தான். கடைந்தெடுத்த வலதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்டு இடதுசாயம் பூசிய சந்தர்ப்பவாதப் பேரினவாதிகளே. இந்த நிலையில் ஜே.வி.பி. கூறுகின்றது பொருளாதாரச் சமத்துவம், மொழி சமத்துவம் அடைந்தால் இனப்பிரச்சினை தகர்ந்து விடும் என்றும், இதுவே தமது இலட்சியம் என்றும் கூறி தமது சொந்தப் பேரினவாதத்தை மூடிமறைக்கின்றனர்.


உண்மையில் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து, மனிதனைச் சுரண்டவே குறுகிய சமூகப் பிளவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. மனித உழைப்பைச் சிலர் சுரண்டவே கட்டமைக்கப்பட்ட மனிதப் பிளவுகள், உள்ளடக்க ரீதியாக வர்க்கப் பிளவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதைப் பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டும் தான், மனிதனின் குறுகிய சமூகப் பிளவுகளை இல்லாதொழிக்கும் ஒரேயொரு புரட்சிகரமான நடைமுறையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜே.வி.பி. கூறும் பொருளாதாரச் சமத்துவத்தைப் (மார்க்சிய அடிப்படையில் பொருளாதாரச் சமத்துவம் என்ற சொல்லுக்கு என்று ஒரு புரட்சிகர அர்த்தமே கிடையாது.) பாராளுமன்றச் சாக்கடையில் புரண்டெழுவதன் மூலம் நடத்தப் போவதாகவே பினாற்றுகின்றனர். இன்றைய பாராளுமன்ற வடிவங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகளவில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு தன்னைத்தான் ஜனநாயகக் கட்டமைப்பு என்கின்றது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் மனிதச் சுதந்திரம் என்றும் கூறுகின்றது.


இந்த வழியில் ஜே.வி.பி. பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி, மக்களின் காதுக்கே பூ வைக்கின்றனர். அத்துடன் மந்திரி பதவிகளைக் கூடப் பெறுகின்றனர். உண்மையில் இங்கு பொருளாதாரச் சமத்துவம், மொழி சமத்துவம் அல்ல பிரச்சினைக்கான சமூக அடிப்படை. மனிதனை மனிதன் சுரண்டும் கட்டமைப்பை இல்லாது ஒழிப்பதன் மூலம் தான், சமூகத்தில் வேரொடியுள்ள பல மனிதப் பிளவுகளை இல்லாது ஒழிக்க முடியும். இது ஒரே நாளில் நிகழ்ந்து விடமுடியாது. உண்மையில் மனித இனம் பற்றிய முரணற்ற கொள்கைகளை முன்வைத்து முரணற்ற நடைமுறையூடாகப் போராடுவதன் ஊடாகத்தான் சாத்தியமானது. ஜே.வி.பி. மக்களை ஏமாற்றுவது போல், பாராளுமன்ற வழிகளில் பொருளாதார சமத்துவத்தை ஒரு நாளுமே ஏற்படுத்த முடியாது. அப்படி ஏற்படுத்த முடியும் என்று ஜே.வி.பி.யின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், அதுவரை தமிழ் மக்கள் போராடக் கூடாது என்கின்றனர். நல்ல ஒரு நகைச்சுவைக்குரிய ஒரு அரசியல்.


மிகவும் வேடிக்கையான, ஒரு சூழ்ச்சித்திறன் மிக்க மோசடி. தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகள் தாம் சொல்லும் பொருளாதாரச் சமத்துவம் வரை கேட்கக் கூடாது என்கின்றனர். அதுவும் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடக் கூடாது என்கின்றனர். தாமும் போராட மாட்டோம் என்கின்றனர். தமிழ் மக்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே ஜே.வி.பி. தமிழ் மக்களுக்குச் சொல்லும் பேரினவாதச் செய்தியாகும்.


இதை அவர்கள் தாம் சார்ந்த எல்லா விடையத்திலும் தமக்குத்தாமே கடைப்பிடிப்பதில்லை. இன மோதல் அல்லாத பல துறைகளில் ஜே.வி.பி. என்ற பேரினவாதிகளின் பொது அணுகுமுறை தான் என்ன? பேரினவாத அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து ஏன் மந்திரி பதவி பெற்றனர்? ஏன் தமது சொந்தப் பொருளாதாரச் சமத்துவ விடுதலை வரையும் அதை மட்டும் ஒத்திப்போடவில்லை. தமது சமத்துவப் பொருளாதார விடுதலைக்கு முன்பாகவே, மக்களின் நலனுக்காகச் செயல்படுவதாகக் கூறி, செயல்படும் பல நடைமுறைகளை நாம் பார்க்க முடியும். இலங்கை பேரினவாத அரசியலில் அரசியல் செய்யும் ஜே.வி.பி. தேசிய இனப்பிரச்சினையில் மட்டும் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை எதிர்க்கின்றது. இது தவிர்ந்த மற்றைய அனைத்திலும் தமது இறுதி லட்சியம் அல்லாத ஒன்றுக்குப் பாய்விரிக்கும் ஜே.வி.பி. இந்தச் சமூகப் பொருளாதார அமைப்பில் புரண்டெழுவது தான் ஏன்?


இனப்பிரச்சினையில் மட்டும் தமது பொருளாதாரச் சமத்துவம் வரை தமிழ் மக்கள் காத்திருக்க கோருவது மக்களை ஏமாற்றுவது தான். ஆனால் சிங்கள இனவாதிகளைத் தம் பக்கம் அணிதிரட்டுவதை எந்தவிதத்திலும் யாரும் கேள்வி கேட்க கூடாதாம். ஏனென்றால் இதன் மூலமே பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கி அதிகாரக் கட்டமைப்பைப் பெற முடியும் என்பது ஜே.வி.பி.யின் அரசியல் நடைமுறை. இங்கு இவர்கள் முன்வைக்கும் அடுத்த அரசியல் மோசடியைப் பார்ப்போம். புலிகள் அல்லாத, மக்களால், தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொதுக்கட்டமைப்பை வழங்கக் கோருகின்றனர். இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாராளுமன்றத் தெரிவையே ஜனநாயகம் அல்லது வழிகளில் புலிகள் தான் அவர்களைத் தமது சொந்தப் பினாமியாகத் தேர்ந்தெடுத்ததாக ஜே.வி.பி. கூறிவந்தது. இது உண்மையாக இருந்தபோதும், இதை ஜே.வி.பி. கூறிவந்தது. ஆனால் திடீரென சந்தர்ப்பவாத நிலையெடுத்த ஜே.வி.பி. பாராளுமன்ற ஜனநாயகம் தெரிவு செய்த பினாமிகளிடம் பொதுக்கட்டமைப்பை ஒப்படைக்கக் கோருகின்றது. அதாவது புலிகள் தாம் விரும்பியதை ஜனநாயகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்ததாகக் கூறும் ஜே.வி.பி. இன்று சந்தர்ப்பவாதமாகப் பொதுக்கட்டமைப்பை அவர்களிடம் கொடுக்கக் கோரும் இனவாத அரசியல் உத்தியைக் கையாளுகின்றது.


பாராளுமன்றத் தேர்தல் என்பது மோசடிகளால் ஆனவை. எந்தக் கட்சியும் மக்கள் நலன்களைத் தெளிவாக முன்வைத்து அதிகாரத்துக்கு வருவதில்லை. மக்களின் அறியாமை மீதுதான், இந்தப் பாராளுமன்ற அரசியல் பூத்துக் குலுங்குகின்றது. இந்த வகையில் புலிகளால் தேர்வு செய்யப்பட்ட பினாமி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, மற்றவர்களிடம் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்களல்ல. ஏன் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கூட அரசியல் தேர்தல் மோசடி ஊடாகத்தான் தேர்வு செய்யப்பட்டனர். ஏன்? எப்படி? என்கின்றீர்களா?


அந்த அரசியல் விபச்சாரத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய விகிதாசார முறையைப் பயன்படுத்தி தமது ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு வடிவத்தைக் கொண்டு அதிக விருப்பு வாக்குகளைத் தமக்குத்தாமே திட்டமிட்டுப் போட்டு, அதிகமான பிரதிநிதிகளைத் தாமாகவே மக்களின் விருப்பை மீறி தாங்களே தேர்ந்தெடுத்தனர். சுதந்திர கட்சி வாக்காளர்களின் பெரும்பான்மை மீது, ஒரு திட்டமிட்ட அரசியல் சதி மூலமே, புலிகளைப் போல் மக்களின் ஜனநாயகத் தேர்வைக் கேலி செய்தவர்கள்தான் இந்த ஜே.வி.பி. ஒருக்காலுமே தனித்து நின்று, இந்தப் போலி ஜனநாயகத்தில் இந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று இருக்க முடியாது. இதைக் கொண்டு பாராளுமன்றப் போலி ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஜனநாயகத்தைப்பற்றி பலவாகப் பிதற்ற முடியாது. இந்த நிலையில் தான் ஜே.வி.பி. மக்களின் காதுக்குப் பேரினவாதப் பூ வைக்கும் வகையில், புலிகளின் பினாமிகளிடம் பொதுக் கட்டமைப்பை வழங்கக் கோருகின்றனர். இங்கு ஜே.வி.பி. செய்வது போலி ஜனநாயகம் என்ற தமது சொந்தக் காவடியைப் பேரினவாதமாக்குவது தான்.


இந்த ஜனநாயகமே போலியாக உள்ளபோது, பாராளுமன்றத்தில் புரண்டெழும் பொருளாதார விடுதலையை ஜே.வி.பி. பின்போடவில்லை. ஆக இந்த ஜனநாயகம் போலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் புரண்டெழுவோம் என்று கூறிக் கொண்டு புலிகளுடனான பொதுக் கட்டமைப்பை மட்டும் எதிர்க்கின்றனர். ஏனென்றால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாம். அவர்கள் மக்களின் நிவாரணத்தைச் சூறையாடி விடுவார்களாம். என்ன சமூக அக்கறை?


இதன் மூலம், ஜே.வி.பி.யின் பேரினவாதப் பொருளாதாரச் சமத்துவ மார்க்சியம் மக்களுக்கு சொல்லும் செய்தி தான் என்ன? புலிகள் அல்லாத அனைவரும் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். புலிகள் அல்லாத அனைவரும் நேர்மையானவர்கள் என்கின்றனர். அவர்கள்சூறையாடத் தெரியாத, சமூக நலன் விரும்பிகள் என்கின்றனர். இதைத்தான் தமது பேரினவாத நோக்கில், பொதுக் கட்டமைப்பை எதிர்க்கும் தமது செய்தியில் சொல்ல முனைகின்றனர்.


சமூகப் பொருளாதாரம் மீதான சூறையாடலைப் புலிகளைப் போலவே, புலிகள் அல்லாத அனைத்து தரப்பினருடையதும் அன்றாட அரசியல் நடைமுறையாக உள்ளது. இது ஜே.வி.பி. கூறுவது போல் புலிகளுக்கு மட்டும் சிறப்பான ஒரு அம்சமல்ல. புலிகள் இதில் பண்பியல் வடிவிலும் இதைச் செய்வதிலும் அதியுயர் எல்லையை அடைந்துள்ளனர் அவ்வளவே. ஆகவே கொஞ்சம் சூறையாடுபவனிடம் இந்தப் பொதுக் கட்டமைப்பைக் கொடுக்கலாம் என்ற அரசியல் விபச்சாரம்தான், ஜே.வி.பி. பின்னால் பேரினவாதமாகக் கொப்பளிக்கின்றது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வு புலிகளின் அப்பட்டமான மக்கள் விரோதப் போக்குகளின் பின்னால் ஒளிந்து நின்றே கூச்சல் போடுகின்றது. நீங்கள் சில வேளைகளில் எம்மிடம் கேட்கலாம். சூறையாடும் ஜனநாயக விரோதப் புலிகளிடம் இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒப்படைப்பதை ஆதரிக்கின்றீர்களா என்று? ஒவ்வொரு பேரினவாதியும் புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைக்கலாம்.


இங்கு பொதுக்கட்டமைப்பை ஒப்படைப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பது எமக்கு விவாதத்துக்குரிய ஒரு பொருளல்ல. மாறாக மக்கள் நலன்களை உயர்த்துவதே எமது மையமான விடயம். அதுவே நேர்மையான அரசியல் கூட. இதை யாரும் முன்வைப்பதில்லை. நாங்கள் புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கையை எப்படி விமர்சிக்கின்றோமோ? அப்படியே தான் பேரினவாதத்தையும் விமர்சிக்கின்றோம். இதன் மூலம் மக்கள் நலன் சார்ந்த மற்றொன்றை மாற்றாகவே எப்போதும் முன்வைக்கின்றோம். இதுவே எமது விமர்சனத்தின் உள்ளடக்கமாகும்.


இன்று பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியத் திட்டத்தை எதிர்க்கின்றோம். நாம் சுனாமியை அடுத்து எழுதிய கட்டுரைகளில் தெளிவாக இதற்கான மாற்றுத் தீர்வைக் கூறியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கிய வகையில் கீழிருந்து கட்டப்படும் ஒரு சமூகக் கண்காணிப்பு தான், உண்மையான சமூக நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும் என்பது எமது நிலைப்பாடு. இது மட்டும்தான் உயர்ந்தபட்சம் நேர்மையான மக்கள் நலன் சார்ந்த ஒரு ஜனநாயகக் கோரிக்கையாகும். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.


அன்னிய உதவி என்ற பெயரில் ஏகாதிபத்தியத் தலையீடுகளையும், அவர்களின் நிதியையும் மறுக்கும் நாம், சொந்த மக்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மறுநிர்மாணம் என்பது எமது நிலைப்பாடு. இதற்குச் சாத்தியமான வழிகளை நாம் முன்பே வைத்துள்ளோம். வெளிநாட்டு டொலர்கள் எந்த மனித உழைப்பிலும் ஈடுபடுவதில்லை. அது செய்யப் போவது வெறுமனே மனித உழைப்பை விலைக்கு வாங்குவது மட்டும்தான். இந்த நிவாரணத்தில் உழைப்பின் மூலம் மறு நிர்மாணத்தைச் செய்யப் போவது எமது மக்கள் தான். அதாவது மறுநிர்மாணத்தைச் செய்யப் போவது எமது மக்கள் தான் என்ற அடிப்படையில், அந்த உழைப்பு ஆற்றல் ஏற்கெனவே எமது தேசத்தில் காணப்படுகின்றது. இங்கு அன்னிய டொலர் செய்யப் போவது, மக்களின் வாழ்வில் தேவைப்படும் பண்டமாற்றத்தில் ஒரு ஊடகமாக மட்டும் பங்காற்ற முனைகின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பு உருவாக்கும் நாட்டின் செல்வத்தை, டொலர் நாட்டைவிட்டு கடத்தவுள்ளது.


இதை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்ள உலகில் உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட கடன் அனைத்தும், மக்களின் உழைப்பின் மூலம் மீள அறவிடப்படுகின்றது. இதற்கு வட்டி மட்டுமல்ல, உழைப்பிலான உற்பத்தியைக் கூட ஏகாதிபத்தியம் சுரண்டிச் செல்வதே இன்றைய உலகமயமாதலில் உதவியாக வழங்கப்படும் அனைத்து நிதியினதும், ஒரேயொரு குறிக்கோளாக உள்ளது. இதையே நடைமுறைப்படுத்துகின்றது. இதை மறுத்து யாரும் நிறுவ முடியாது. உண்மையில் நாம் இவற்றை மறுக்கும் ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை, கீழ் இருந்து கட்டப்படுவதையே எப்போதும் இந்தப் பொதுக் கட்டமைப்புக்கு மாற்றாக முன்வைக்கின்றோம்.


இந்த இடத்தில் புலியெதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் பொதுக்கட்டமைப்பு மற்றும் மாற்று யோசனைகளையும் கூட திட்டவட்டமாக நாம் எதிர்க்கின்றோம். இது கூட மக்கள் விரோதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது தான். இங்கு புலியெதிர்ப்பு பிரிவினர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடனமாடி முன்வைக்கும் எதிர்ப்புக் கோசங்களையும், அதன் அடிப்படைகளையும், கூட நாம் எதிர்க்கின்றோம். புலியெதிர்ப்பாளர்கள் எதைத்தான் மாற்றாக முன்வைக்க முனைகின்றனர். புலிகள் உள்ளடங்கி பலரும் பங்களிக்கும் பொதுக்கட்டமைப்பைக் கோருகின்றனர். அல்லது முரண்பட்ட பலரையும் உள்ளடங்கிய ஒரு பொதுக் கட்டமைப்பே வேண்டும் என்கின்றனர். ஆஹா என்ன புலம்பல்! இதில் மக்கள் நலன் என ஏதாவது உள்ளதா? இதை யாராவது சுட்டிக் காட்ட முடியுமா? இதுவே புலிகள் அல்லாத அனைத்து புலியெதிர்ப்பு பிரிவினரின் அரசியலாக உள்ளது.


உண்மையில் இவர்கள் இதன் மூலம் கோருவது என்ன? புலிகளின் தனித்த மக்கள் விரோதச் சூறையாடலுக்குப் பதில், பலரும் சூறையாடும் ஒரு பொதுக்கட்டமைப்பைத் தான் கோருகின்றனர். இங்கு ஜனநாயகம் என்பது பலரும் கொள்ளையடிக்கும் சுதந்திரத்தைக் கோருவதைக் குறிக்கின்றதே ஒழிய மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு இவை முன்வைக்கப்படுவதில்லை. இங்கு மக்கள் நலன் ஏதாவது இருப்பதாக யாரும் பீற்ற முடியாது. இதைத்தான் ஜே.வி.பி.யும் தனது சொந்த பேரினவாத நோக்கில் செய்ய முனைகின்றது. மனித இனத்தைச் சூறையாடும் எல்லைக்குள் அனைத்து தரப்பு உரிமையையும் அங்கீகரிக்க கோருகின்றனர். உண்மையில் இவர்கள் செய்ய நினைப்பது எல்லாம், ஜனநாயகக் கோரிக்கையில் உள்ள நியாயமான மாற்று செயல்பாட்டுத் தளத்தை, மக்களுக்கு எதிராகத் தமது சொந்தக் குறுகிய நலனுக்கு இசைவாகக் கோரிக்கைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதே. இதைத்தான் பலரும் மாற்றுக் கருத்தின் பெயரில் செய்கின்றனர், செய்ய முனைகின்றனர்.


இதை நுட்பமாகப் புரிந்து கொள்ள ஜே.வி.பி. முதல் புலியெதிர்ப்பு பிரிவினர் வரை அனைவரும் ஒருதலைப்பட்சமாகப் புலியை மட்டும் தான் தனித்து எதிர்க்கின்றனரே ஒழிய, தனித்தரப்பாக உள்ள அரசை அல்ல. இது ஒருநுட்பமான அரசியல் மோசடியாகும். புலிகளைப் போல் அரசும் தனித்தரப்பாகவே கையெழுத்திட்டது. இங்கு அரசின் சூறையாடலை ஆதரிக்கும் இவர்கள், அதற்குச் சட்டப்பூர்வமானது என்று காட்டி, அதற்கு சாமரம் வீசுகின்றனர். அரசும் புலிகளைப் போல் தனித்தரப்பாகவே உள்ளது. இங்கு பன்மைத்துவம் என எதுவும் கிடையவே கிடையாது. பேரினவாத அரசு நேர்மையாக மக்கள் நலனில் செயல்படுவதாகக் காட்டும், மிகக் கேவலமான அரசியல் மூலம் மக்களின் காதுக்குப் பூக்களைச் செருகி விடுகின்றனர். நாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கடந்து சிங்களப் பகுதிகளில் சுனாமி நிவாரணத்துக்கு என்ன நடக்கின்றது என்பதை, அந்த மக்களின் சீரழிந்து செல்லும் வாழ்வே வெட்டவெளிச்சமாக்கி விடுகின்றது.


உண்மையில் புலியெதிர்ப்பு மற்றும் ஜே.வி.பி. பிரிவினர் அனைவரும் புலிகள் மறுக்கும் ஜனநாயகக் கோரிக்கைகளைப் பயன்படுத்தியே தமது மக்கள் விரோதப் போக்கை மூட முனைகின்றனர். புலியெதிர்ப்பினர் மக்கள் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இதை முன்வைக்கவில்லை. மாறாகப் புலிகளைப் போல் அனைத்து மக்கள் விரோதிகளினதும் சுதந்திரமான மக்கள் விரோத நடவடிக்கையைச் செயல்படுத்தும் உரிமையைத் தான் கோருகின்றனர். இதைத் தாண்டி எதையும் புலியெதிர்ப்பு பிரிவினர் கோர முற்படவில்லை.


இங்கு முஸ்லீம்தரப்பு தனித்தரப்பாகக் கையெழுத்திடக் கோருவதும் கூட, ஒரு ஜனநாயகக் கோரிக்கை என்ற அளவில் மட்டும் அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது. முஸ்லீம் தரப்பு தனித்தரப்பாகக் கையெழுத்திட்டால், முஸ்லீம் மக்களின் உரிமைகள் கிடைத்துவிடுமா? முஸ்லீம் மக்களுக்கு நியாயமான நிவாரணம் கிடைத்துவிடுமா? என்றால் இல்லை. கையெழுத்து போடுவது முஸ்லீம் பிரதிநிதித்துவம் என இவைகள் எவையும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்று கற்பனை செய்தால், அவை மக்களை ஏமாற்றும் மோசடியாகும். அரசும் புலிகளும் செய்து கொண்ட ஒப்பந்தம், உண்மையில் மற்றைய இனங்கள் மீதான திட்டமிட்ட இன வரலாற்றின் தொடர்ச்சியைப் பேணும் சுற்றுவழிப்பாதையாகும். இதை நாம் விரிவாகத் தனியாக விமர்சிக்க உள்ளோம்.


அரசு இந்தப் பொதுக் கட்டமைப்பு ஊடாகவே இடைக்கால அரசுக்குரிய மாதிரி பொதுக்கட்டமைப்பையே வழங்குகின்றது. பலமாக மோதிக் கொண்டிருக்கும் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள குறித்த சூழலின் விளைவாக உள்ளது. உண்மையில் தேசிய இனங்களின் பிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்பது, இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. முஸ்லீம் தரப்பை ஒரு தனித்தரப்பாகக் கோருவதன் மூலம், இலங்கை தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதும், இதை மாற்றாக முன்வைப்பது என்பதும் கூட தவறானவை. இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மலையக மக்களையும் உள்ளடக்கிய வகையில் தெளிவாக ஒவ்வொரு தரப்பும் தமது சொந்த நிலைப்பாட்டைக் கொள்கையளவில் வைத்து, அதை நடைமுறைப்படுத்தும் கூட்டு நடவடிக்கை அவசியமானது. இது மட்டும் தான் உண்மையான நேர்மையான ஓர் அணுகுமுறை. ஒரு தரப்பாக மட்டும் சிலவற்றை முன்னிறுத்துவது, இனப்பிளவில் தொடர்ந்து குளிர்காய்வதை அடிப்படையாகக் கொண்டதே.


இன்றைய இன மோதலில் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் தரப்புகளின் பிரச்சினைகள் இனப்பிரச்சினை தீர்வுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவையாக மாறிச் செல்லுகின்றது. இன்று முன்வைக்கப்படும் தீர்வுகள் மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு ஏகாதிபத்திய உத்திகள் மட்டும்தான். உண்மையான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, மலையக மக்கள் உள்ளடக்கிய வகையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை அதன்பால் அணிதிரட்டுவதுதான். இதுவே நேர்மையான மனிதச் செயல்பாடுகள். இதை யாரும் செய்வதில்லை. இனப்பிரச்சினைக்கு ஒவ்வொருவரும் என்ன தீர்வை முன்வைக்கின்றனர் என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாத சூட்சுமமாகவே உள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியலிலும், குறுந்தேசிய அரசியலிலும் புழுத்துக் கிடக்கின்றது. இந்த நிலையில் எதார்த்தம் மனித இனத்துக்கு வெளியில், தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து செயல்படுகின்றது. இரண்டு அதிகாரக் கட்டமைப்புகள் இலங்கையில் ஆயுதம் ஏந்தி நிற்கின்றது. மிகப்பலம் பொருந்திய யுத்த வெறியுடன் கொக்கரித்தபடி தன்னைத்தானே மீள மீள தயார் செய்கின்றன.


இந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் இந்த மக்கள் விரோத யுத்த வெறியர்களுக்கு இடையில் மீன் பிடிக்கின்றனர். இதனால் ஏகாதிபத்தியத் தேவையை அடிப்படையாகக் கொண்டே, அமைதி சமாதானம் மீண்டும் மீண்டும் உருப்போடப்படுகின்றது. உண்மையில் இங்கு மூன்றாவது தரப்பாக உள்ள ஏகாதிபத்தியத் தலையீடு, மக்களுக்கு எதிராக மனிதனைச் சூறையாடும் மனித விரோதக் கும்பலாக உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் தேவையின் அடிப்படையில் மூன்று வருடத்துக்கு மேலாக நீடிக்கும் ஒரு யுத்தமற்ற சூழல் காணப்படுகின்றது. யுத்தமற்ற சூழல் மக்களைப் பொறுத்த வரையில், இனங்களைக் கடந்து நிம்மதி பெருமூச்சு விடுகின்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. புலிகள் இக்காலத்தில் பல நூறு பேரைக் கொன்ற போதும் கூட, நிலவும் யுத்தமற்ற அமைதியான சூழல் மக்களின் விருப்பந்தமான ஒரு கனவாகவே தொடருகின்றது. மக்கள் யுத்தமற்ற ஒரு அமைதியையே விரும்புகின்றனர்.


இந்த நிலையில் அரசு தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்று ஒரு தீர்வை முன்வைக்க மறுக்கின்றது. அதைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தியே சேறு அடிக்கின்றனர். இது அரசு மட்டுமல்ல, இலங்கையில் அரசியல் செய்யும் பல கட்சிகளினதும் பொதுவான நிலையும் கூட. இது புலிகளின் எல்லாக் குற்றத்தையும் விட முதன்மையான ஒன்று. புலிகளின் எல்லாக் குற்றத்துக்குமான அடிப்படையை வழங்குவது, பேரினவாதப் போக்கேயாகும். இந்த நிலையில் அரசும் புலிகளும் செய்து கொண்ட மக்கள் விரோத ஒப்பந்தத்திற்கு அமைய, ஒரு இடைக்கால அதிகாரத்தைப் புலிகளிடம் வழங்குவதைக் கோருகின்றது. இது நிலவும் யுத்தமற்ற அமைதிக்கு முன் நிபந்தனையாக உள்ளது. இது இன்றைய எதார்த்தம். இதை ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகள் எதிர்க்கின்றனர்.


இடைக்கால நிர்வாகச் சபை போன்றன தமிழ் மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்க வைத்தாலும் கூட, ஒரு யுத்தம் தொடரும் போது ஏற்படும் துன்பத்தைவிட குறைவானதே. ஒரு யுத்தம் தொடங்கின் மிகக் குறுகிய காலத்தில், இனம் கடந்து குறைந்தபட்சம் 10000இக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களை அழித்தொழிக்கும். அத்துடன் ஏற்படும் சொத்திழப்பு, மிகப் பிரம்மாண்டமானதாகவே இருக்கும். இது புலிகள் சூறையாடக் கோரும் பொதுக்கட்டமைப்பால் ஏற்படும் சிதைவைவிட அதிகமானதாகவும் விரிவானதாகவும் இருக்கும். இடைக்கால நிர்வாகம் ஒப்பீட்டளவில் மக்களின் துயரத்தைக் குறைப்பதாகவே அமையும். மக்கள் நலன் என்று பார்க்கும்போது, யுத்தத்தைவிட இடைக்கால நிர்வாகம் மேன்மையானது. நீடித்த அமைதி மூலம் மற்றொரு முக்கியமான அரசியல் வெற்றியும், மக்கள் நலன் சார்ந்து தன்னெழுச்சியானதாக ஏற்படுகின்றது.


புலிகள் தொடர்ச்சியாக யுத்தமற்ற அமைதியைப் பேணும்போது, என்றுமில்லாத அளவில் அவர்கள் மக்களிடையே அம்பலமாவது ஒரு வீச்சாகவே நடக்கின்றது. சூறையாடல் விரிவாகும்போது, மக்கள் தமது சொந்தக் குருட்டுக்கண்ணைத் திறக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒவ்வொரு மக்களும் புலிப் பாசிசத்தின் கொடூரமான பக்கத்தினை அனுபவிக்கும் ஒரு சொந்த நடைமுறை அரசியலைக் கற்றுக் கொள்கின்றனர். தொடரும் யுத்தநிறுத்தம் தவிர்க்க முடியாத வகையில், தன்னிச்சையாகவே இதை உருவாக்குகின்றது. இந்த வகையிலும் கூட அமைதியை நோக்கிய செயல்பாடுகள் எவ்வளவுதான் பிற்போக்கான கூறுகளுடன் நீடித்தாலும், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் ஒரு சொந்த அரசியல் கல்வியை மக்களுக்குத் தாமாகவே கற்றுக் கொடுக்கின்றது. ஒரு யுத்தம் இதை முற்றாக மாற்றி விடும். யுத்த இரைச்சலுக்கு இடையில் தமது மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்வதே நிகழும். இது எமது தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து செயல்படும் எதார்த்தமான ஒன்றாகத் தன்னியல்பானதாக உள்ளது.


மறுபக்கத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் கூட பேரினவாத அரசும் புலிகளும் கூட்டாகவே ஒரு மோசடியைச் செய்துள்ளனர். சுனாமியின் பெயரில் உருவாகும் பொதுக்கட்டமைப்பு, அரசு செய்ய மறுத்த இடைக்கால நிர்வாகத்துக்கான ஒரு மாற்று வடிவமாக இதைக் கொண்டு வந்துள்ளனர். இது புதிய முரண்பாடுகளை இனவாத நோக்கில் நகர்த்தியுள்ளது. இதை அடுத்த எமது கட்டுரை ஒன்றில் விரிவாகப் பார்க்க உள்ளோம். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பை இனப்பிரச்சினைக்குள் நுழைத்ததன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அழிப்பதுடன் மிகக் கொடூரமான இனவாத விதைகளை ஊன்றி வருகின்றனர். இதில் முஸ்லீம் மக்களை ஒரு தரப்பாக நிராகரித்தன் மூலம், புலிகள் மற்றும் அரசின் கூட்டுச் சதி இங்கு புதிய முரண்பாட்டை எதிர்காலத்துக்கு விட்டுச் சென்றுள்ளது. ஒப்பந்த விதிகள் மூன்று இனத்தின் சமத் தலைமை என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட போதும், ஒரு தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்க மறுத்தமை இன ரீதியான பிளவை ஆழப்படுத்தும் அரசியலை அடிப்படையாகக் கொண்டதே. அத்துடன் உள்ளடக்க விதிகள் கூட ஜனநாயக விரோதமானவையாக உள்ளது. இங்கு மறுதரப்பாகக் கையெழுத்திட மறுத்த அரசியல் உள்ளடக்கமே, இனவாதம்தான். முஸ்லீம்கள் கையெழுத்திடுவதைப் புலிகள் மறுத்ததன் மூலம், குறுந்தேசியத்தின் தொடர்ச்சி சிறுபான்மை இனங்கள் மேலான தனது சொந்த புலி வக்கிரத்தையே மறுபடியும் அம்பலமாக்கியுள்ளது.


இந்த இடத்தில் ஜே.வி.பி. தன்னைத் தக்கவைக்கும் பேரினவாதத்தை முன்வைக்கும் வடிவமே விசித்திரமானது. நீண்ட இழுபறிக் கூடாகப் புலிகள் பொதுக்கட்டமைப்பைக் கோரி பெற்றது என்பது, தமது சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கத்தான். இந்த முயற்சி அனைத்தும் உண்மையில் மக்களின் வாழ்வை மேலும் ஆழமாக அழிக்கும். பேரினவாத ஜே.வி.பி. இதைச் சொல்லித் தரவேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்குக் கிடையாது. நாங்கள் கடந்த காலம் முழுக்க, இதற்கு எதிராக நேர்மையாகத் தமிழர் தரப்பாக நின்று விடாப்பிடியாகப் போராடி வருபவர்கள் தான்.


தமிழ் மக்களாகிய நாங்கள், தேசியத்தின் பெயரில் உங்களைப் போல் சமரசம் கண்டுவிடவில்லை ஆனால் ஜே.வி.பி. பேரினவாதத்துடன் காலம்காலமாக சமரசம் செய்து வந்துள்ளது. ஜே.வி.பி. வரலாற்றுக்குப் பிந்திய காலத்தில் பேரினவாத நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அரசுகளாலும், படுபிற்போக்கு இனவாதிகளாலும் கட்டமைத்து வந்ததனால் தான் இன்றைய நிலையை நாம் அடைந்துள்ளோம். இந்த பேரினவாதங்கள் ஊடான மாற்றங்கள் நிகழ்ந்த போது, இந்த ஜே.வி.பி. எங்கே போனது? இதைத் தடுத்து நிறுத்த இதுவரை என்ன செய்துள்ளார்கள்? ஒரு போராட்டத்தைக் கூட பேரினவாதங்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. அடிக்கடி வீதியில் இறங்கி கூச்சல் போடும் ஜே.வி.பி. பேரினவாதத்துக்கு எதிராக ஒருநாளுமே வீதியில் இறங்கியது கிடையாது. ஏன் நேர்மையான இடதுசாரியாக இருந்தால், நேர்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியாக இருந்தால், இன்றைய நிலைமைகளுக்கான முழுப் பொறுப்பும் அக்கட்சியே பொறுப்பேற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இன்றுவரை ஜே.வி.பி. இதைச் செய்தது கிடையாது. அதை மற்றவர் மீது குற்றமாகக் காட்டும், பேரினவாத உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கின்றனர். சமகாலத்தில் இனமோதல் விசுவரூபமாக மாறியபோது, இதற்கு எதிரான ஜே.வி.பி. நடைமுறை ரீதியான இனவாதத்துக்கு எதிரான போராட்டம் எங்கே? தொடர்ச்சியான இனவாத நடவடிக்கைகளைப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது கையாண்ட போதே, தமிழ் மக்களின் எதிர்வினைகள் பல வடிவங்களில் வளர்ச்சியுற்றன. அதன் இன்றைய வடிவம் பாசிசமாகப் புலிகளின் பெயரில் உள்ளது அவ்வளவே.


இனவாதம் நாட்டின் பிரதான முரண்பாடாக அரங்குக்கு வந்தபோது, இக்காலக் கட்டத்தில் ஜே.வி.பி. அரசியல் செய்து வந்ததை யாரும் இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் இனவாதத்துக்கு எதிராக நடைபெறவில்லை. மாறாக ஜே.வி.பி. பேரினவாதிகளாகவே தம்மைச் சிங்கள மக்களுக்கு இனம்காட்டி, இனவாத நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மலையக மக்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்ற அடிப்படைக் கோசத்துடன், இதை இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று காட்டி ஆதரித்து இனவாத அமைப்பாகவே தன்னை உருவாக்கியது. மலையக மக்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அரசின் இனவிரோத நிலைப்பாட்டை ஜே.வி.பி. ஆதரித்தது. இன்று மலையக மக்கள் பற்றி அழுவதும், சந்திரசேகரன் என்ற ஜே.வி.பி. மத்திய குழு உறுப்பினரின் நிலைப்பாடும், ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடும் அவர்களுக்கு மக்கள் பற்றிய கருசனையால் ஏற்பட்ட மாற்றமல்ல. மாறாக மலையக மக்கள் மீண்டும் பெற்ற வாக்குரிமை ஜே.வி.பி.யை மாற்றியது. பாராளுமன்ற வழிகளில் புரட்சியைச் செய்யப் போவதாகப் பிதற்றும் ஜே.வி.பி.க்கு அந்த மக்களின் வாக்குகள் தேவைப்படுவதால், ஏற்பட்ட மாற்றம் தான் மலையக மக்கள் பற்றிய ஜே.வி.பி.யின் இன்றைய சந்தர்ப்பவாதக் கொள்கை.


அன்று பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்ட பேரினவாத நடவடிக்கையைப் பயன்படுத்திய ஜே.வி.பி. அதையும் தனக்குச் சார்பாக இனவாத நோக்கில் பயன்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாகப் பல இனவாத நடவடிக்கைகள் முதல் இரண்டு மிகப் பெரிய இனக் கலவரங்களின் போது கூட இதை எதிர்த்து ஜே.வி.பி. போராடவில்லை. இனவாதம் என்னும் வார்த்தை எண்ணையில் ஜே.வி.பி. சுடர்விட்டு எரிந்தது. இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தை ஜே.வி.பி. எதிர்த்த போது, உண்மையில் இந்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்க்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில் மட்டும்தான் ஜே.வி.பி. இதை எதிர்த்தது. உண்மையில் இந்திய விஸ்தரிப்பை எதிர்த்து ஜே.வி.பி. போராடி இருந்தால், புலிகளுடன் கூட்டுக்குப் போயிருக்க வேண்டும்.


இன்று வரை பேரினவாதக் கொள்கையில் தான் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது. மந்திரிப் பதவியைக் கூட தமது சொந்தப் பொருளாதார விடுதலைக்கு முன்பாகக் கோரிப் பெற்றவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினையில் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தையே எப்போதும் தமது அரசியலாகக் கையாண்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னொன்றுமாகக் கூறி வரும் ஜே.வி.பி. இனவாத அரசியல் எதார்த்தத்தில் புளுக்கின்றது.


மிக முக்கியமாக இலங்கையில் இனவாதம் பிரதான போக்காக உள்ள கடந்த காலத்தில், ஜே.வி.பி. எப்போதாவது இதற்கு எதிராக வீதியில் இறங்கியது கிடையாது. வீதியில் இதற்காக இறங்கப் போவதும் கிøடயாது. ஏன் அண்மையில் மிக முக்கியமான சில இனவாத நடவடிக்கைகளின் போதும் கூட, ஜே.வி.பி. அதற்கு எதிராகப் போராடவில்லை. சட்டவிரோதமாகத் திட்டமிட்டு இனவாத அடிப்படையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரங்கள், திட்டமிட்ட தமிழர் மீதான சிறைப்படுகொலை (பிந்தனுவேவ முகாமில் 28 தமிழர்கள் கொலை) செய்தவர்கள் விடுவிக்கப்பட்ட நிகழ்வு என அனைத்தையும், ஜே.வி.பி. எதிர் கொண்டவிதமே, அதன் பேரினவாதத்தின் சொந்த முகத்தை அம்பலமாக்குகின்றது.


மறுதளத்தில் பொதுக்கட்டமைப்பை எதிர்த்து வீதியில் இறங்கியது என்பது, ஜே.வி.பி.யின் அரசியல், பேரினவாதத்தின் உள்ளடக்கத்தில் இருப்பதை வெளி உலகுக்கு அம்பலமாக்கியுள்ளது. ஆனால் எக்காலத்திலும் பேரினவாதத்துக்கு எதிராக வீதியில் இறங்கியது கிடையாது. புலிகளின் ஜனநாயக மீறல்கள், சூறையாடல்களைப் பேரினவாதமல்லாத நேர்மையான அரசியல் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உண்மையில் தமிழ்த் தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தும் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் நாம் சமரசம் செய்யாது எப்படி எதிர்த்து போராடுகின்றோமோ, அப்படியே பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவது மட்டும்தான் இனவாதத்துக்கு எதிரான ஒரு முற்போக்கான அரசியலாகும். இங்கு நாம் எமது குறைந்தபட்ச பலத்துடன் போராடும்போது, மரணம் எந்த நேரமும் பரிசாகக் கிடைக்கும் என்ற ஒரு நிலையில் சரணடையாது போராடுகின்றோம். நீங்கள் பேரினவாதத்தின் ஒளியின் கீழ் நின்று அதை எதிர்க்காது, அதன் நிழலில் சந்தர்ப்பவாதப் பேரினவாத அரசியலையே செய்கின்றார்கள்.


இந்த ஜே.வி.பி. பேரினவாதப் புலிகளின் பின்னால் ஒளிந்து நின்றே தமிழ் மக்களுக்குக் கல்லெறிவது நடைபெறுகின்றது. இது ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகளின் சந்தர்ப்பவாதமாக உள்ளது. பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு நேர்மையான மனிதன், நிச்சயமாகத் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின், அவன் பேரினவாதத்தின் மையமான அனைத்தையும் ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போராட வேண்டும். இதுவே அவனின் சமகால அரசியல் கோசமாக இருக்க வேண்டும். இது மட்டுமே நேர்மையான ஒரேயொரு அரசியல்.


தமிழ் மக்களின் நியாயமான அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளையும் முன்வைத்து, அதற்காக உறுதியாகச் சிங்கள மக்களிடையே போராட வேண்டும். சிங்கள மக்களை விழிப்புற வைத்து அதன்பால் அணிதிரட்ட வேண்டும். இது தமிழ் மக்களையும் அதன்பால் கவர்ந்து இழுக்கும். தமிழ் மக்கள் ஜனநாயக விரோதத்தின் காவலர்கள் அல்ல. ஜனநாயகத்தை நேசிக்கும் பண்பு கொண்ட உழைக்கும் மனிதர்களாகவே இருக்கின்றனர். இதேபோன்று தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை வெறுக்கும் ஜனநாயக விரோதிகள் அல்ல சிங்கள மக்கள். ஆனால் சிங்கள மக்களின் பெயரில் தலைமை தாங்கும் பேரினவாதிகள் தான் இதை மறுக்கின்றனர். இதையே ஜே.வி.பி.யும் செய்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து போராட மறுக்கும் அனைவரும் அப்பட்டமான பேரினவாதிகள் தான்.


தமிழ் மக்கள் சார்பில் இதைச் சொல்லும் நேர்மையான தகுதி எமக்கு உண்டு. ஏனென்றால் நாங்கள் குறுந்தேசியத்துடன் ஒரு நாளுமே சரணடைந்தவர்கள் அல்ல. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுடன், அதை மறுக்கும் புலிகளை மட்டுமின்றி, அனைத்துக் குழுக்களையும் அவர்கள் முன்வைக்கும் பொது மார்க்கத்தையும் முரணற்ற வகையில் எதிர்ப்பவர்கள் நாம். அந்த வகையில் நாம் கடந்தகாலம் முழுக்க போராடி வருபவர்கள்.


இந்த வழிமுறையை ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகள் செய்தது கிடையாது. மார்க்சியத்தைக் கொண்டு தம்மைத்தாம் மூடிமறைக்கும் வலதுசாரியின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பேரினவாதிகளாகவே ஜே.வி.பி. உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னொன்றுமாகத் தமது சந்தர்ப்பவாதத்தையே பறைசாற்றுகின்றனர். ஏன் அண்மையில் ஜே.வி.பி. தலைவர் சந்திரிக்காவின் பிறப்பில் தமிழ் பரம்பரை உள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசியல் விபச்சாரம் செய்தபோது பேரினவாதம் புளுத்து நாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


உண்மையில் பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் மேலான அதிகாரத்தையும் சூறையாடலையும் அடிப்படையாகக் கொண்ட போதும், இதுதான் இந்தச் சமூக அமைப்புக்குள்ளான ஒரு மாற்றாக வைக்கப்படுகின்றது. இதை நாமும் கடுமையாக விமர்சிக்கின்றோம். மக்கள் விரோத அனைத்து உள்ளடக்கத்தையும் விமர்சிப்பதுடன், மக்களின் நலன்களை உறுதி செய்யும் அரசியல் வழியை நாம் மாற்றாக வைக்கின்றோம். ஆனால் ஜே.வி.பி.யும், புலியெதிர்ப்பு அணியினரும் எதிர்ப்பது போல் எதிர்க்கவில்லை. நாம் இதை விமர்சிப்பதன் மூலம் மாற்றுப் பாதை மக்கள் நலனில் இருந்து முன்வைக்கின்றோம். இந்தப் பொதுக்கட்டமைப்பை நிராகரித்தால் என்ன நடக்கும்? இதைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. எதார்த்தம் மற்றொன்றாகவே உள்ளது. இது யுத்தத்தை நோக்கி தள்ளுவதையே நிபந்தனையாக்குகின்றது. யுத்தம் விரும்பி வரவேற்கப்படுகின்றது. யுத்தத்தை வெறுப்பதாகக் கூறிக் கொண்டு, யுத்தத்தை வரவேற்கும் கொள்கையை முன் தள்ளுகின்றனர். இதன் மூலம் அன்னியத் தலையீடுகளை வலிந்து வரவேற்கும் உத்தி இதன் பின்னணியில் உள்ளது.


அன்னியத் தலையீட்டுக்கான சூழல் தான் புலிகள் தரப்பில் இருந்து யுத்தத்தை நோக்கி நகர்வதைத் தடுத்து வருகின்றது. நீண்ட இழுபறியான அமைதி தொடர்வதன் பின்னணி அன்னியத் தலையீட்டில் இருந்தே நீடிக்கின்றது. அன்னியத் தலையீடு என்பது புலிகளை அழிப்பதாக அமைந்தாலும், அது ஒட்டு மொத்த இலங்கை மீதான ஆக்கிரமிப்பாகவே அமையும். இலங்கை மக்களின் மேலான காலனித்துவத்தின் மறுவடிவமாகவே இவை அமையும். இது தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் அனைவருக்கும் எதிரானதாகவே அமையும்.
தமிழ் மக்களின் பிரச்சனையில் அன்னியர் தலையிடுவதை தவிர்ப்பதற்கான அனைத்துவிதமான முயற்சியிலும் ஈடுபடுவது அவசியமானது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, இன்று இனவாதத்தைக் காவடியாக கொண்டு பேரினவாத ஆட்டத்தையாடும் ஜே.வி.பி. அரசியல் முடிவுகளிலும் தங்கியுள்ளது. இந்த நிலைமையில் அன்னியத் தலையீடு அல்லாத மற்றொரு வழியாக, ஒரு சர்வாதிகாரத்தை நாட்டில் திணிக்கும் முயற்சியும் காணப்படுகின்றது. இந்த வகையில் ஏகாதிபத்திய ஆலோசனைகள் சந்திரிக்கா முன் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் சந்திரிக்கா பொதுக்கட்டமைப்பு உருவாக்குவதற்கு எதிரான தடைகளைத் தகர்க்க, ஒரு சர்வாதிகார கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான சூழலை எடுத்துக் காட்டியுள்ளார்.


தமிழ் மக்களின் பிரச்சினையின் பெயரில் ஒரு பாசிசச் சர்வாதிகார ஆட்சியமைப்பை உருவாக்கலாம். இதற்குச் சந்திரிக்கா தலைமை தாங்கும் நிலைமை கனிந்துதான் காணப்படுகின்றது. ஏகாதிபத்தியங்களின் ஆசியும் ஆதரவும் இதற்கு இருப்பதுடன் சந்திரிக்காவின் நிறைவேறாத அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் மூலமான தொடர்ச்சியான ஒரு அதிகார நீட்சிக்கும் இது சாதகமாகவே உள்ளது. அது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில், ஒரு இராணுவச் சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்குரிய எல்லா சூழலும் கனிந்து காணப்படுகின்றது.


தமிழ் மக்களின் பிரச்சனை மீது பேரினவாதிகள் காட்டும் அடாத்தான எதிர் நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபக்கத்தில் அனைத்துவிதமான ஜனநாயக மீறல் மறுபுறம். இலங்கையின் சூழல்களைத் தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு, நிலைமைகள் நகர்ந்த வண்ணம் உள்ளது.

 

25.6.2005