book _1.jpgஇயற்கையான உலகில் ஒரு சில இத்தாலிய மனிதர்கள் உருவாக்கிய வத்திக்கானும், அதை நிர்வகிக்கும் சர்வாதிகாரியான போப்பாண்டவரும், இந்த உலகில் இல்லை என்றால் உலகம் இயங்காதா? உலகம் அழிந்து போய் விடுமா? போப் இல்லை என்றால் உலகம் அழிந்து போய்விடும் என்று, உலகில் யாரும் நம்புவதில்லை. இயற்கையும், மனிதனின் எதார்த்த வாழ்வியலும் இந்த உண்மையை எடுத்தியம்புகின்றது. இந்த உண்மையான எதார்த்த உலகத்தில் எதற்காக மரணித்து போன போப்புக்காக இந்தளவு கூத்துக்களைச் சிலர் நடத்துகின்றனர். மிகவும் கிறிஸ்துவ பக்தியுள்ளவனும் சரி, நிஜமாகவே இயற்கைக்கு வெளியில் கடவுள் இருக்கிறான் என்பதை நம்புகின்ற ஒருவனும் சரி, போப்பாண்டவரும் அவரை உருவாக்கிய வத்திக்கானும் இல்லை என்றாலும், உலகமும் இயற்கையும் இருக்கும் என்றே நம்புகின்றான். அப்படித்தான் அவன் இயற்கையில் வாழ்கின்றான்.

அப்படியாயின் ஏன் போப்புக்காகப் புலம்புகின்றனர். அவர் இந்த உலகில் உள்ள மக்களின் அடிப்படை வாழ்வுக்காக எதைத்தான் செய்துள்ளார். இந்தக் கேள்விக்கு யாரும் சரியாகப் பதிலளிப்பதில்லை, பதிலளிக்கப் போவதுமில்லை. ஆனால் அங்குமிங்குமாகச் சில உண்மைகளை ஒத்துக் கொண்டு விடுகின்றனர். போப்பாண்டவரும், வத்திக்கானும் கடந்து வந்த வரலாற்றில் மக்களுக்கு எதிராகக் கொடூரமாகச் செயல்பட்ட வரலாற்றை இறந்து போன போப் ஜான் பால் ஐஐ ஒத்துக் கொண்டதால், அதைச் சொல்லி புகழுகின்றனர். பிரிட்டிஸ் மகாராணியின் இடத்துக்கு வாரிசாக இருந்த டயானா, ஒரு மொடலாக கவர்ச்சிப் பிம்பமாகத் தன்னை வெளிப்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்தவர். அவர் விளம்பரத்துக்காக அடிநிலை மக்களைத் தொட்டுக் கதைத்ததை ஒரு மனிதாபிமான செயலாகக் கட்டமைத்து, அந்தப் பிம்பத்தைக் காட்டி டயானாவை நவீன தகவல் மையங்கள் வழிப்பாட்டுக்குரிய விளம்பரப் பொருளாக்கினர். அதேபோல் தான் போப்பாண்டவர் பற்றிய பிம்பமும் கட்டமைக்கப்படுகின்றது.


இல்லாத கடவுளின் தூதனாக அல்லாமல், இயற்கைக்கு உட்பட்டு மரணித்துப் போன போப்பாண்டவர், கடந்த 25 வருடத்தில் எதை இந்த உலகுக்குச் செய்தார்? எதை வைத்துத்தான் புகழுகின்றனர்.


கடந்த 1800 வருடங்களில் மதத்தின் பெயரில் கிறிஸ்துவக் கொடுங்கோலாட்சியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவப் பயங்கரவாதக் காலத்தில், மக்களை ஒடுக்கி வந்த வத்திக்கானின் வரலாற்றின் மீதான மன்னிப்புக் கோரலை எடுத்துக் காட்டிப் போற்றுகின்றனர்.


இயற்கையைச் சமூகச் சொத்துரிமையாகக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் திட்டமிட்ட சதிகள் மூலம், இயற்கையைத் தனியார் சொத்துரிமையை உருவாக்கிய பெருமைக்காகப் போற்றுகின்றனர்.


சமூகச் சொத்துரிமையை ஒழித்து அதனிடத்தில் தனியார் சொத்துரிமை இயல்பாகவே உலகமயமாதலாகிய போது, அதன் விளைவுகள் சிலவற்றைக் கண்டித்தமைக்காகப் போற்றுகின்றனர். இங்கு குறிப்பாக ஏகாதிபத்தியக் கலாச்சார வகைகளை எதிர்த்தார். ஆனால் உற்பத்தி முறையை அல்ல.


இவற்றைப் பிரதானமாக கொண்டே போப்பரசரைப் புகழ்கின்றனர். உண்மையில் மரணம் பற்றி முக்கியத்துவம் கொடுத்த தகவல் கட்டமைப்பு, மேலும் மக்களின் வாழ்வைத் திட்டமிட்டு அழிக்கும் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது. மக்களின் அனுதாபத்தை உருவாக்கி அதில் குளிர் காய்வது தான் மூலதனத்தின் நரித்தந்திரம். இதுவே அண்மையில் ஏற்பட்ட சுனாமிக்கும் நடந்தது. பல ஆயிரம் கோடி பணத்தைச் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் திரட்டிய போதும், அந்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சுனாமியின் பெயரில் அரசியல் இலாபங்களையும், பொருளாதார இலாபங்களையும் ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பலர் ஏற்கெனவே அனுபவித்து விட்டனர், அனுபவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் இவர்களிடம் இழப்பதே அதிகமாக உள்ளது. இதையேதான் போப்பாண்டவரின் மரணம் பற்றி விளம்பரத்திலும் செய்கின்றனர். தகவல் மையத்தின் துணை கொண்டு உலகத்தையே திட்டமிட்டு வளைக்கின்றனர்.


தகவல் விளம்பர உலகின் பிரச்சாரத்தால் போப்பாண்டவருக்காக இரண்டு எதிர்நிலை உலகம் புலம்புகின்றது. மூலதனத்தின் அதிகார வர்க்கம் ஒருபுறம் புலம்புகின்றது. இவர்களின் திட்டமிட்ட புலம்பல், அடிநிலையில் உள்ள உலக மக்களைப் புலம்ப வைத்துள்ளது. ஒருங்கிணைந்த தகவல் மையங்கள், பத்திரிக்கைகள், ரேடியோ ஒளிபரப்புகள், தொலைக்காட்சி படமாக்கல் மூலம், உலகெங்கும் இந்த மரணம் பற்றிய ஒரு பிரச்சார யுத்தியைக் கட்டமைக்கின்றனர். மக்களை வலிந்திழுத்து அவர்கள் மேல் திணிக்கும் பிரச்சாரம் மூலம், மக்களை மந்தைகளாக அணிதிரட்டுகின்றனர். போப்பாண்டவரும், வத்திக்கானும் மக்களுக்கு எதைத்தான் செய்தனர் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பாத வகையில், புனிதங்களின் பெயரில் பண்ணை மந்தைகளாகவே மக்களை மாற்றும் யுத்தி கையாளப்படுகின்றது.


வத்திக்கானும் அதன் செல்வங்களும் எங்கிருந்து எப்படி உருவாகின்றது? சகமனிதனின் உழைப்பில் நீடித்து நிற்கும் வத்திக்கானின் கிறிஸ்துவ மகிமைகள் தான் என்ன? அது சகமனித உழைப்பைச் சுரண்டுவதாகும். இதற்கு உட்பட்டுதான் கடவுளின் மகிமை போற்றப்படுகின்றது. சக மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை ஒரு கணம் நிறுத்தினாலே, வத்திக்கானின் அதிகாரம் தகர்ந்து போகும். பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களைச் சுரண்டி கிறித்துவ மகிமைக்காக பல கோடி பணத்தை வத்திக்கானுக்கு வழங்குகின்றன. எதற்காக இவை? மக்களை அடிமைப்படுத்தும் அற்புதமான மகிமைக்காகவே. ஒரு நாளைக்குக் கோடிக்கணக்கான கோழிகளை இயந்திரகதியில் உருவாக்கி அதே வேகத்தில் வெட்டும் கே.எப்.சி. என்ற பன்னாட்டு உணவகம், வருடாந்தம் பல கோடி பணத்தை (அவர்களின் சொந்த இணையத்தைப் பார்க்கவும்.) வத்திக்கானுக்கு கொடுக்கின்றதே ஏன்? பரிசுத்த கடவுளின் பெயரிலான புனிதத்தின் மகிமையின் விளைவே மூலதனம் தான்.


இதை ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்று அருமையாகக் கூறுகின்றது. அதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.


"தங்கம், மஞ்சள் நிறமாய் மின்னும் தங்கம்!
அருமையும் பெருமையும் என்னென்ன செய்திடும்!
கறுப்பை வெள்ளையாக்கும், கெட்டதை நல்லதாக்கும்!
தவறென்றானதைச் சரியென்றாக்கிடும்!
இழிந்ததை சிறந்ததாய் உயர்த்தி வைத்திடும்!
கிழவனைக் குமரனாய், அஞ்சி நடுங்கும்
கோழையைத் தீரனாய் மாற்றி வைத்திடும்!
... என்னே இது, விண்ணுறை தெய்வங்காள்!
அர்ச்சகரை, அடியாரை உம்மிடமிருந்தே கவர்ந்து கொள்ளுமே!
மல்லர்தம் தலையணை தட்டிச் செல்லுமே!
இம்மஞ்சள் அடிமை என்னென்ன செய்திடும்?
மதங்களைப் பிணைக்கும், சிதைக்கும்!
படுபாவிக்கும் அருள் பாலிக்கும்!
தொழுநோயென்றும் பாராது குலாவச் செய்திடும்!
கொள்ளையர் தம்மை அவையிலமர்த்தி,
பட்டமும் பாராட்டும் பெற்றுத் தந்திடும்!
வதங்திய விதவையை மணவறையில் அமர்த்திடும்!
... வினை வைக்க வந்த மண்மகளே!
மனிதரனைவர்க்கும் வாய்த்த விலைமகளே!''


தங்கம் பற்றி ஷேக்ஸ்பியரின் கூற்றுகள், கிறிஸ்தவமும் மூலதனமும் இணைந்து நடத்தும் வக்கிரத்தைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வரிகளாகவே இவை உள்ளது. இயற்கையையும் எதார்த்த வாழ்வையும் மறுக்கும் கிறிஸ்துவத்தின் மீதும், அதன் மகிமை மீதும் நம்பிக்கை வைத்துள்ள மக்கள், பிரதானமாக இரண்டு அடிப்படையான வாழ்வியல் விடயங்கள் மீது சார்ந்து உள்ளது.


1. இந்தப் பூமியில் உழைத்தும் வாழ முடியாத வாழ்வியல் அவலங்களைச் சுமந்து நிற்கும் மக்கள், அதற்கான தீர்வாக இறைவனைக் கெஞ்சி பக்தி கொள்கின்றனர். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் ஆன்மாவாகக் கருதி போற்றும் இந்தச் சமூக அமைப்பு, மனிதர்களின் வாழ்வியல் துயரங்களைக் காது கொடுத்து கேட்கவும், அதைத் தீர்க்கவும் மறுக்கின்ற ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டமைத்துள்ளது. பகுத்தாய்வு முறையைக் கைவிட்டு விலங்குகளாகிப் போன இந்தப் பூமியில், பகுத்தறிவுள்ள சமூக மனிதன் இல்லாத ஒரு உலகக் கட்டமைப்பில் கற்பனையான ஒரு சிருஷ்டிப்பு மீது நம்பிக்கை கொண்டு அடிநிலை மக்கள் முறையிடுகின்றனர். இதன் போது தமது கற்பனை கடவுள் காது கொடுத்து கேட்பதாக நம்புகின்றான். அதனால் தனது மனத் துயரங்களைச் சொல்லி மனதார அழமுடிகின்றது. இதுவே கடவுள் நம்பிக்கையாகின்றது. இதுவே பக்தியாகின்றது. சமூகக் கொடுமைகளைச் சமூகம் தீர்க்கத் தவறுகின்றதன் விளைவு நம்பிக்கையாக, பக்தியாகப் பிரதிபலிக்கின்றது. தனிமனிதர்கள் சமூகத்தை எதிர்கொள்ள முடியாததன் விளைவு, பக்தியில் வடிகாலாகின்றது. மனிதனுக்குச் சமூகப் பொருளாதார வழிகளில் சமூகம் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகளை, இல்லாத ஒரு கடவுளிடம் கூறிவிடுவதன் மூலம் எதிர்காலம் மீதான நம்பிக்கை சார்ந்து ஆறுதலளிக்கின்றது. இதுவே ஏழையின் கடவுள் நம்பிக்கை மற்றும் பக்தியின் சூட்சுமமாகும்.


2. சமூகப் பொருளாதார வாழ்வில் திருப்தியோடு இருப்பவன், இருப்பதைத் தக்கவைக்கும் போராட்டத்தில் பக்தி கொள்கின்றான். அதாவது கடவுள் பற்றிய பயங்காரணமாகப் பக்தியாகின்றது. சமூகப் பொருளாதாரச் சமூகக் கட்டமைப்பு சூறையாடலை அடிப்படையாகக் கொண்டு, அதையே தனிமனித சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வரிந்து கொண்டுள்ளது. இதனால் மனிதர்களிடம் இருப்பதைச் சிலரிடம் இழப்பது என்பது கடவுளையும் கடந்த சுதந்திரத்தின் கட்டளையாகின்றது. இந்தப் பூலோகச் சட்டத்தைக் கண்ணுக்குப் புலப்படாத அந்த மாயக் கடவுளும் கூட தடுத்து நிறுத்த முடியாது. இதனால் சமூகப் பொருளாதார வாழ்வியலில் குறைந்த பட்சம் திருப்தியுடன் இருப்பவன், இருப்பதைத் தக்கவைக்கும் எதிர்கால நம்பிக்கையுடன் கடவுளை நம்புகின்றான். இவன் கடவுளை மிஞ்சும் பணத்தைக் கொண்டு கடவுளையே வாங்கி விடுகின்றான். சொந்த ஆடம்பரத்தையே பக்தியாக மாற்றிக் காட்டுகின்றான். வாழ்வு இழந்தவர்களை அடிமைப்படுத்தும் ஒரு சாதனமாக கடவுளையே மாற்றிவிடுகின்றான். இங்கு பயம் சார்ந்த பக்தி என்பது, ஆடம்பரம் சார்ந்த வழிபாட்டு முறையாகி விடுகின்றது. கற்பனையான கடவுளைக்கூட விலைக்கு வாங்கிவிடும் நிலையில், அந்தக் கற்பனை கடவுளை நம்பி முறையிடும் ஏழைகளையும் சேர்த்து வாங்கி விடுகிறான் அப்படி வாங்கி விடுவதன் மூலம், மனித அடிமைத்தனத்தின் செங்கோலையே கடவுளின் கையில் திணித்து விடுகின்றான்.


இயற்கை பூமிக்கு வேலியிடவில்லை. இயற்கை தனிச் சொத்துரிமையைப் படைத்து விடவில்லை. இயற்கை ஆணுக்குப் பெண் அடிமைகள் என்பதை உருவாக்கவில்லை. இயற்கை சாதிய ஏற்றத்தாழ்வை உருவாக்கவில்லை. இயற்கை இன மோதலை உருவாக்கவில்லை. கறுப்பர்கள் வெள்ளையரின் அடிமைகள் என்று கூறவில்லை. இயற்கை மனித உழைப்பைச் சுரண்டவில்லை. அப்படி இருக்க எப்படி இவைகள் உருவானது? கடவுளை நம்புகின்றவன் இந்த இயற்கையைக் கடவுள் படைத்ததாக நம்பினால் கூட, இது பொருந்தும். அப்படியாயின் இதை யார் இடையில் புகுந்து உருவாக்கியது. சமூக மனிதன் தனது சமூகப் பண்பை இழந்து, தனிமனிதக் காட்டுமிராண்டியாக உருவான போதே இதைப் படைத்தான். இது இயற்கைக்கும் சரி, கடவுளே இயற்கையைப் படைத்ததாக நம்புகின்ற ஒருவனின் நம்பிக்கைக்கும் சரி இது முரணானது அல்லவா. இதை எதிர்க்காத வகையில் மனிதனே உருவாக்கிய கடவுள் கோட்பாடுகள், மதத் தத்துவங்கள் அனைத்தும் இயற்கைக்கும் சரி, கடவுளுக்கும் சரி எதிரானது அல்லவா. ஏன் மதங்கள், கடவுள் கோட்பாடுகள் இவற்றை முரணற்றவகையில் எதிர்க்கவில்லை. ஏன் எதிர்த்துப் போராடவில்லை. கறைபடிந்து போன மனித வாழ்வியல் துயரங்களை நியாயப்படுத்திய மதக் கோட்பாடுகள் அனைத்தும் மனிதனுக்கு எதிரானதே. எந்த மதக் கோட்பாடும் இதற்கு விதிவிலக்கற்றவையே.


இப்படித்தான் மதவழிபாடுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் மனித இனத்தின் உழைப்பைச் சுரண்டும் குறுகிய நலனுடன் இயங்கும் மூலதனத்தின் நலனுக்கு ஏற்றவகையில், தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட கடவுள் கோட்பாடுகளையும், மதத் தத்துவங்களையும் உருவாக்கி மனிதனின் தலையில் தேய்த்து விடுகின்றனர். அதாவது சுரண்டும் சமூகப் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் கடவுளை அரசியல்மயமாக்கி விடுகின்றனர். இது இன்று எல்லா மதத்துக்கும் விதிவிலக்கின்றி பொருந்துகின்றது.
இப்படித்தான் கிறிஸ்துவம் கடந்த 1700 ஆண்டுகளாக மனித வரலாற்றில் நடத்திய கொடூரங்கள், மனித இனம் காணாத கிரிமினல் மயமானதாகவே இருந்தது. கிறிஸ்துவம் ஐரோப்பிய அதிகார வர்க்கத்தின் மதமாக, அடக்குமுறை கருவியாக மதத்தின் பெயரில் செயல்பட்டது. அதாவது கிறிஸ்துவம் ஐரோப்பா மக்கள் மேல் அதிகாரம் செலுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாக ஒரு நிறுவனமாகச் செயல்பட்டது. இந்த வகையில் செயல்படும் வத்திக்கான் என்ற அதிகாரமையம், இன்று வரை சர்வாதிகாரக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது. இந்த அதிகார மையம் வெள்ளையின ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாகப் பல நூற்றாண்டாகத் தெரிவான போப்பரசர்கள் அனைவரும் இத்தாலியரே. மொத்தமாக இதுவரை இருந்த 264 போப்பரசரில் ஒருவர் மட்டுமே இத்தாலி அல்லாத போலந்துகாரர். அவரே தற்போது இயற்கைக்கு உட்பட்டு மரணித்து போன போப்பரசர் இரண்டாவது ஜோன்போல். எப்படி இத்தாலி அல்லாத ஒருவர் தெரிவானார்.


நிலவுகின்ற தனிச்சொத்துரிமை அமைப்புக்குப் பதில் சமூகச் சொத்துரிமை நீடித்த ஒரு சில நாடுகளுக்கு எதிரான, கிறிஸ்தவச் சதியின் ஒரு அங்கமாகவே, ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் தான் இறந்து போன போப்பரசர் அதிகாரத்துக்கு வந்தார். போலந்தில், வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில் உருவான போலி கம்யூனிச ஆட்சியிலும் தொடர்ந்து வந்த முதலாளித்துவ ஆட்சியிலும் சமூக சொத்துரிமை நீடித்து வந்தது. இதை எதிர்த்து இறந்து போன போப் தனிச் சொத்துரிமைக்கான சதிகளில் ஈடுபட்டார். முதலாளித்துவ ஆட்சியிலும், தொடர்ந்தும் நீடித்து சமூக சொத்துரிமையை எதிர்த்து இறந்து போன போப்பரசர் தனிச்சொத்துரிமைக்கான சதிகளில் ஈடுபட்டார். பல அச்சகங்களை இரகசியமாக நிறுவியதுடன் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யுடன் கூட்டுச் சதிகளில் ஈடுபட்டார். அதை வேகப்படுத்தவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சமூகச் சொத்துரிமையைத் தகர்க்கும் ஏகாதிபத்திய விருப்பங்களினால் இவர் போப்பரசரானார். இதனால் இவரை மரணத்தின் பின் அதனடிப்படையில் தகவல் மையங்கள் போற்றுகின்றன. இப்படி தனிச் சொத்துரிமையின் காவல் தெய்வமாகவே வத்திக்கான் திகழ்கின்றது. இதனடிப்படையில் தான் கிறிஸ்துவச் செய்திகளும், வழிபாட்டு முறைகளும், மதக் கோட்பாடுகளும் உலகெங்கும் பரப்புகின்றனர்.


இதன் கடந்த கால வரலாறு எல்லாம் கறைபடிந்தது. மக்களைக் கொள்ளையிடவும், அதன் ருசியால் சுரண்டவும் தொடங்கிய ஐரோப்பியக் காலனிய வரலாற்றில் கிறிஸ்துவம் ஆற்றிய பங்கு, பல கோடிக்கணக்கான மக்களை உயிருடன் கொன்று குவிக்க உதவியது. ஆப்பிரிக்க அடிமைகள் வியாபாரத்துக்கு ஆசியைப் பைபிளின் வாக்கிய துணையுடன் கிறித்துவம் வழங்கியது. இது மட்டுமா? தனிச்சொத்துரிமையால் உருவான ஆணாதிக்கச் சமூக அமைப்பின் நெம்புகோலாகவே கிறிஸ்துவம் செயல்பட்டது. மேலும் அதன் பெயரில் பெண்கள் கண்காணிக்கப்பட்டுச் சிலுவையில் அறைந்து உயிருடன் கொழுத்தியது. 1700 ஆண்டுகளாகக் கிறித்துவப் போதைக்கு முரணான அனைத்து அறிவியல் முயற்சியையும் மதத்துக்கு எதிரான பயங்கரவாதமாகக் காட்டி, கடவுளின் பெயரில் அறிவியலாளர்களைச் சித்திரவதை செய்தே கொன்றனர். சாத்தான்கள் என்ற ஒரே ஒரு அடைமொழிக்குள், பாரிய படுகொலைகளையும், சித்திரவதைகளையும் செய்தனர். 2000 வருடத்துக்கு முந்திய பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் நூல்கள் வரை அனைத்தையும் திட்டமிட்டே தேடியெடுத்து எரியூட்டினர். காலனி நாட்டைக் கொள்ளை இட்டு, அந்த மக்களை ஈவிரக்கமற்ற வகையில் கோடிக்கணக்கான பழங்குடி மக்களைக் கொன்றொழித்தனர். இவற்றுக்கு எல்லாம் வத்திக்கான் ஆசிச் செய்தியை வழங்கியதுடன், தனது மதக் கோட்பாடுகள் மூலம், பைபிள் வசனங்கள் மூலம் நியாயப்படுத்தியது. 1700 வருட இருண்ட கிறிஸ்துவ அதிகாரக் கட்டமைப்பில், பல பத்து கோடி மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, போப்பாண்டவர் ஹிட்லருடனும் முசோலினியுடனும் கூட்டு வைத்து பல கோடி படுகொலைகளுக்கு ஆசி வழங்கியவர். (இந்த ஆவணங்களைக் கூட மக்களின் பார்வைக்கு வைக்க வத்திகான் மறுக்கின்றது).


இந்த இருண்ட பயங்கரவாத வரலாற்றின் மீது போப்பாண்டவர் ஒரு வார்த்தை மூலம் மன்னிப்பு கோரியதையே பெருமையாகக் காட்டுகின்றனர். உண்மையில் இது மக்களை ஏமாற்ற நடத்திய வக்கிரமான, கபடத்தனமான நாடகமாகும். இதையே புலிகள் முதல் அமெரிக்க வரை எத்தனையோ மனித விரோத விடயங்களுக்கும் செய்கின்றனர். மக்களின் அறியாமையையும், நல்விருப்பையும் மோசடித்தனமாக கபடமாக ஏமாற்றுவது நயவஞ்சகத்தனமானது.


இவர்கள் கடந்தகாலம் மீதான ஒரு வார்த்தை மன்னிப்பு சுயவிமர்சனத்துக்கு உட்பட்டவையல்ல. மாறாகப் புதிய அடக்குமுறையின், மனிதவிரோதத்தின் வக்கிரங்களைக் கண்டு கொள்ளாது இருக்க பூசும் சாயங்களே. புதிய மனிதவிரோத வக்கிரங்கள் விரிந்த தளத்தில் கிறிஸ்துவம் முதல் அமெரிக்கா வரை எந்தவிதமான மனித உணர்வுமற்ற வகையில் தொடர்ந்து கையாளுகின்றனர். இதை நாம் இன்று உலகில் நடக்கும் எல்லா சர்வதேச விடயத்திலும் காணமுடியும். வத்திக்கான் கடந்தகால கிறிஸ்துவக் கொடூரங்களை உள்ளடக்கிய ஆவணங்களையே, மக்கள் பார்வையிட அனுமதிக்க மறுக்கின்றது. பின் எப்படித்தான் சுயவிமர்சனம் செய்ய முடியும். இறந்து போன போப்பரசரின் ஒரு வார்த்தை மன்னிப்பில் என்னதான் அர்த்தம் உண்டு. மக்களைக் கொடுமைப்படுத்தி கடந்தகாலம் மீதான எல்லா ஆவணங்களையும், உலகில் உள்ள மக்கள் பார்வையிடவும் விமர்சிக்கவும் அனுமதிக்காத நிலையில், உண்மையில் அந்தக் கொடூரத்தை தொடர்ச்சியாக நியாயப்படுத்துவதே தொடருகின்றது.


கிழக்கு ஐரோப்பியச் சமூகச் சொத்துரிமையைத் தனி சொத்துரிமையாக்கி அதன் வீழ்ச்சியைத் துரிதமாக்கிய போப்பரசர், இதனால் வெம்பிப் போன உலகமயமாதலின் சில கூறுகளை எதிர்த்து கருத்து கூறியதைப் பெருமையாக எடுத்துக் காட்டுகின்றனர். உண்மையில் இதுவும் கபடமே. போலந்து மக்களை ஏமாற்றி சதிக்கு உடந்தையாக்கி மக்களின் பெயரில் இருந்து சமூகச் சொத்துரிமையை, தனிச் சொத்துரிமையாக்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் சமூகச் சிதைவைப் போலந்தில் உருவாக்கியுள்ளது. இதை உலகமயமாதலின் சில கூறுகள் என்ற அடிப்படையில் கண்டித்து போலந்து மக்களையும் உலகையும் தனிச்சொத்துரிமைக்காகவே சமாளிக்க முனைந்தõர். இதே போன்று தென் அமெரிக்கா மக்களின் போராட்டத்தில் கிறித்துவம் சேர்ந்து நின்ற நிலையில் அதை அங்கீகரிக்க போப்பரசர் மறுத்தார். இதை அவர் கிறிஸ்துவத் தனிச்சொத்துரிமை கண்ணோட்டத்தில் மார்க்சியம் என்றார். இதுவே கிறித்துவ அமைப்பில் பிளவுக்கு இட்டுச் சென்றது. போப்பரசர் இதை கம்யூனிசம் என்றும், இது தனிச் சொத்துரிமைக்கு எதிரான வன்முறை போருக்குத் துணையாகும் என்று தனது செய்தியில் கூறிய அவர், அந்த மக்களைச் சமாளிக்கவும் உலகமயமாதலின் சில பக்கங்களைக் கண்டித்தார்.


உண்மையில் தனிச் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், கிறித்துவ அமைப்பில் பிளவுகளைத் தவிர்க்கவும் வார்த்தை ஜாலங்களையும், சில சீர்திருத்தங்களையுமே செய்தார். இதன் மூலம் மக்களைத் தமது அறியாமை மீது தக்கவைக்கும் முயற்சியைப் போற்றியே, இன்றைய ஏகாதிபத்தியத் தகவல் மையங்கள் போப்பரசரை உலகத்தின் கதாநாயகன் ஆக்கினர். சமாதானத்தின் தூதனாகக் காட்டுகின்றனர்.

8.4.2005