book _1.jpgதம்மைத்தாம் இலக்கிய ஜாம்பவான்களாகக் காட்டிக் கொள்ளும் பலரும் கூடியிருந்த கலைச்செல்வனின் மரண வீட்டில் இலக்கியத்தின் ஆளுமை மட்டுமின்றி, அதன் போலித்தனமான பொய்மையும் அம்பலமானது. ஒரு மரணம் இயல்பாக ஏற்படுத்தும் சோகத்தில் இவர்கள் நீச்சல் அடிக்க முடிந்ததேயொழிய, இலக்கிய உலகம் கலைச்செல்வன் இழப்பால் இழந்துவிட்டதாகக் கருதும் ஏதோ ஒன்றில் இருந்து, இந்த இலக்கிய இழப்பை உணர்வுபூர்வமாக எதையும் பிரதிபலிக்க முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தையே சிதைக்கும் வழிபாட்டுப் பண்பாட்டில், விமர்சனம் சுயவிமர்சனமின்றி இலக்கிய உலகம் மாமனிதர்களை உருவாக்கும் கற்பனை சொக்கிக் கிடந்தது.

 

பாரிசில் 05.03.2005 அன்று கலைச்செல்வன் இறந்ததைத் தொடர்ந்து அஞ்சலி செய்திகளைப் பல தரப்பும் வெளியிட்டன. இந்த வகையில் புலிகளின் பினாமி பத்திரிகை ஈழமுரசு, கருணா அணியின் பினாமி இணையத் தளங்கள், ஈ.பி.டி.டி. இணையதளம் என பலதரப்பும் அவருக்கு அஞ்சலிகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டன. இந்தியாவில் இருந்து எஸ்.வி. ராஜதுரை முதல் பலரும் இந்த அஞ்சலி அறிக்கைகளில் பங்கு கொண்டனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இச்செய்திகளை வெளியிட்டதாகப் பெருமையாக அறிவிக்கப்பட்டது. புலிக்கு வெளியில் இயங்கும் புலம்பெயர் இலக்கிய உலகம் புல்லரிக்கும் வகையில், அண்ணளவாக 100 இரங்கல் செய்திகளையும், உரைகளையும் வெளியிட்டுள்ளனர்.


இந்த அஞ்சலிகளின் ஊடான அரசியல் மற்றும் சமுதாய நோக்குக்கு வெளியில், ஒரு மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு துக்ககரமானதே. உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அவரைத் தெரிந்தவர்கள், சமூகத்தின் சக உறுப்பினர் என்ற அடிப்படையில் இழப்பை மிகத் துன்பகரமாகவே எதிர்கொண்டனர். இவற்றிலும் நாங்கள் கரம்கோர்த்து பங்கு பற்றினோம். சமூகத்தின் ஒரு சமூக உறுப்பினர் என்ற வகையில், மரணம் இழப்பாகவே பிரதிபலிக்கின்றது. அங்கு துன்பமும், சோகமும், இழப்பும் இயல்பானதாகப் பிரதிபலித்தது, பிரதிபலிக்கின்றது. கலைச்செல்வனின் மரணமும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மறுபக்கத்தில் புலம்பெயர் இலக்கிய உலகம், போலித்தனமான சடங்கு ஒன்றை, உற்றார் உறவினரின் சோகங்களின் மேல் நடத்தினர். புலம்பெயர் இலக்கிய உலகத்தின் அஞ்சலிகள், அறிக்கைகள், உரைகள் பொதுவாகவே நேர்மையற்ற வகையில், உள்ளொன்று வைத்து புறம்மொன்றாகப் பேசுவதாகவே இருக்கும். அதிலும் இலக்கியப் பிரமுகர்களின் கூத்து சொல்லி மாளாது. கலைச்செல்வனுக்கோ இது தனது செத்தவீடு. மற்றவர்களுக்கு இதுவே தமது கல்யாண வீடாகியது. புலம்பெயர் இலக்கியப் பிரமுகர்கள் இப்படித்தான் இதைக் கொண்டாடினர். புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரங்கேற்றம் அழுகை முதல் அனைத்து விதமான கூத்துகளும் இப்படித்தான் அரங்கேறியது. இப்படிப் புலம்பெயர் இலக்கிய உலகத்தின் இழப்புத்தான் என்ன? எதைத்தான் இழந்தனர்? அதை மட்டும் யாராலும் சுட்டிக் காட்டிச் சொல்ல முடியவில்லை.


நடைமுறையில் எடுத்துக்காட்ட முடியாத கற்பனையில் புகழ் உரைகள் மூலம் புலம்பெயர் இலக்கியத்துக்கும், புலிக்கு எதிரான ஜனநாயக மீட்சிக்காக அயராது உழைத்த மாவீரனின் மரணமாகக் காட்டவே இலக்கிய உலகம் பிரயத்தனம் செய்தது. இந்தச் செய்தியில் ஓரிரு செய்திகள் மட்டுமே, விதிவிலக்கான முரண்பாட்டுடன் சிறு குறிப்பு ஊடாக மாறுபட்ட அபிப்பிராயத்தைச் சுட்டிக் காட்டி இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தனர். அவரின் கடந்தகால இயக்கச் செயல்பாட்டை ஓரிரு செய்தி மட்டும் குறிப்பாக உணர்த்தி இரங்கல் செய்தி வெளியிட்டனர். இறுதி நிகழ்வின் போது உரையாற்றியவர்கள், தமது மாறுபட்ட மாற்றுக் கருத்துகளை மூடிமறைக்கவே செய்தனர். இதைச் சிலர் வெளிப்படையாகத் தனிப்பட்ட ரீதியில் ஒத்துக் கொண்டனர். அவருடன் முன்பு நெருங்கி செயல்பட்ட பலர் மௌனமாக இருந்தனர். இந்த மரண நிகழ்வு வழமையான மற்றொரு இலக்கியச் சந்திப்பே. அதில் வழமையாக நடக்கும் எல்லாக் கூத்தையும் மீள நடத்தினர். போலியான புகழ் உரைகளும், பொய்களையும், விமர்சனம், சுயவிமர்சனம் என்ற இயங்கியல் போக்கு உள்ளடக்கப்படாத, மலட்டு இலக்கியச் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இந்த நிகழ்வு அரங்கேறியது. இப்படி பலரும் போற்றிய கலைச்செல்வனின் பங்களிப்பு தான் என்ன? இதுவே அடிப்படையான கேள்வி. இதற்கு எந்த அஞ்சலியும் பதிலளிக்கவில்லை.


கலைச்செல்வன் என் மிக நெருங்கிய உறவினர். அதாவது என் தந்தையினுடைய அக்காவின் மகன். அதாவது என் அத்தையின் மகன். உறவு முறையில் என் மச்சான். நான் 1989இல் பாரிஸ் வந்தபோது, அரசியல் ரீதியாக முதன்முதலில் அவருடன் விவாதிக்க முற்பட்டேன். அன்று அவருடன் கொஞ்சம் நெருங்கி விவாதிக்க முடிந்த அவரின் அரசியல் படிப்படியாக சிதைந்து வந்தது. அவர் என்னை எதிரி முகாமுக்குள் அடக்கும் அளவுக்கு, அவரிடம் அரசியல் மாற்றம் நடந்தது. குறிப்பாக இறுதி காலத்தில் புலிகளுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவைக் கூட, என்னுடன் அவர் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை நாம் எப்படி புரிந்து கொள்வது? இது எனக்கு மட்டுமல்ல, அவருடன் ஆரம்பத்தில் மிக நெருக்கமாக இருந்த பலருக்கும் இதுவே நிலை. அவருடன் இணைந்து நெருங்கி வேலை செய்த பலருக்கும் இதுவே கதி. அவருடன் இணைந்து செயலாற்றிய பலர் மௌனம் சாதிப்பது ஏன்?


கலைச்செல்வன் மிக வறிய குடும்பத்தில் பிறந்தவன். ஒரு நேர உணவுக்கே என்ன செய்வது என்று தெரியாத ஒரு குடும்பத்தில் தான் அவன் வாழ்ந்தான். ஐந்து குழந்தைகளையும் வைத்துக் கொண்டு, வருமானம் எதுவுமற்ற நிலையில் அவர்கள் வடித்த இரத்தக் கண்ணீர் எல்லையற்றது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் என் தந்தை இணைந்து வேலை செய்த காலத்தில் தான், என் தந்தைக்கு கலைச்செல்வனின் தந்தை அறிமுகமானார். இதன் மூலமே கலைச்செல்வனின் தாயைக் (என் அத்தையை) காதலித்து திருமணம் செய்து கொண்டார். மக்களின் போராட்டத்துடன் அன்னியமாகிய கட்சிகளின் சிதைவும், காட்டிக் கொடுப்புகளும் தொடர, இவர்களும் சாதாரண வாழ்வுக்குள் செல்வதை அது துரிதப்படுத்தியது. கலைச்செல்வனின் தந்தையார் தனது குடும்ப வாழ்வுக்காக வன்னியில் (இன்றைய நவீன வன்னி அல்ல. அன்று மனித நடமாட்டம் மிகக் குறைந்த அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது.) வயலில் விதைத்து எதுவும் கிடைத்தால் தான் உயிர் வாழ்வு என்ற நிலை. இது மட்டும் தான் பசியாற, கொஞ்சம் கஞ்சியாவது கிடைக்கும் என்ற நிலையில் வறுமை அவர்களைப் பார்த்து சிரித்தது. எப்போதும் வறுமையின் நிறம் இரத்தச் சிவப்புதான். கலைச்செல்வனின் அண்ணன் மரண வீட்டில் கூறியது போல், வறுமை என்னும் பல்கலைக்கழகத்தில் தான் கலைச்செல்வனின் இளம் வாழ்க்கை கழிந்தது.


தந்தை வன்னியில் கடும் உழைப்பில் தனது வாழ்வைத் தொலைத்துவிட்ட நிலையில், தாய்மைக்குரிய பாசத்துடன் தான் கடுமையான வாழ்வுக்கான போராட்டத்தைக் கலைச்செல்வனின் (என் அத்தை) தாயார் நடத்தினார். இங்கு விரக்தி, இயலாமை, துன்பம், தாய்மை, பாசம் என்று பல வாழ்வியல் துயரங்களை சந்தித்த அவர், இதனால் கடுமையான விரக்தி நிலையில் வாழ்ந்தார். கலைச்செல்வனின் வளரும் இளம் வயதிலேயே அவர் தனது தந்தையை இழந்தார். இது அவர்களின் குடும்பத்துக்கு மேலும் ஒரு பேரிடிதான். அது வறுமையின் எல்லையை அகலமாக்கியது. இந்த நிலையில் என் குடும்பம் கூட இவர்கள் அளவு இல்லாவிட்டாலும், வறுமையில் சிக்கி, அடுத்த நேரக் கஞ்சிக்கு என் அப்பா கையேந்தி வாழ்ந்தார். என் தந்தைக்கும், அவரின் அக்காவுக்கும் (என் அத்தைக்கும்) இடையிலான உறவுகள் கூட, தொடர்ச்சியாகவும் சீராகவும் இருக்கவில்லை. உண்மையில் இவை வறுமையின் எதிர்வினையாகவே இருந்தது. 1980, 1981 களில் கலைச்செல்வனும், அவரின் தமையனும் சீமேந்து தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் வரை, வறுமை அவர்களுடன் இணைப்பிரியாத சீழலாகவே இருந்தது.


இதற்குப் பின்னால் கலைச்செல்வன் பாரிஸ் வந்த பிற்பாடு, அவரை 19891990களில் சந்தித்தேன். முதலில் அவருடன் இணைந்து வேலை செய்வது தொடர்பாகவே விவாதித்தேன். அப்போது வந்து கொண்டிருந்த தூண்டில் என்னும் பத்திரிக்கையை அறிமுகம் செய்தார். பழைய தேடலை அறிமுகம் செய்தார். கண் பத்திரிகையை பற்றி கதைத்தார். புதிதாக அவர்கள் தொடங்க விரும்பிய பத்திரிகை பற்றிய விவாதம் மையமாக இருந்தது. இதுவே பின்னால் பள்ளமாக வந்தது. இணக்கப்பாடான நிலையைத் தாண்டி, சமூகம் பற்றிய அவரின் நிலைப்பாட்டுடன் உடன்பட முடியாததாக இருந்தது. மக்களைத் தம்மில் இருந்து விலக்கி வைக்கும் எல்லைக்கோட்டை வரைந்தபடியேதான், இலக்கியம் முதல் அரசியல் வரை பேச முற்பட்டார். இலக்கியம் சமுதாயத்தின் கண்ணாடியாக இருப்பதையே மறுத்தார். கலை கலைக்காக என்ற கோட்பாட்டை மறுப்பதாகக் கூறியபடி, கலை கலைக்காக என்ற கோட்பாட்டைப் புலம்பெயர் இலக்கிய உலகம் நடைமுறைப்படுத்தியது. இதன் ஒரு தூணாகவே கலைச்செல்வன் இருந்தான். இதுவே ஆரம்பத்தில் பிரதான முரண்பாடாக எமக்கு இடையில் இருந்தது. மக்களே வரலாற்றைப் படைக்கின்றனர் என்ற உண்மையை மறுப்பவராகவே இறுதிவரை இருந்தார். அவர் மார்க்சியத்தை வெறுத்தோடும் நபராக மாறிக் கொண்டிருந்தார். மார்க்சியத்தைத் திரித்துக் காட்ட முனைந்தார். இவை உள்ளடக்கிய இக்கால கட்டத்தில் கல்வி வட்டம் ஒன்றை அவருடன் இணைந்து நடத்தினேன். மக்களின் வாழ்வியலுடன் நெருங்காத, மக்களுடன் பேசாத ஒரு இலக்கியம், இதுவே அவர்களின் அரசியலாக மாறிக் கொண்டிருந்தது. சிலர் பற்றியும், அவர்களுடன் நடத்தும் கூத்தையும் கும்மாளத்தையும் முதன்மைப்படுத்தி நின்றார். இந்த அடிப்படையில் ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பைக் கூட, மக்களின் நலனுக்கு எதிராக மாற்றுவதில் கலைச்செல்வன் முன்னிலைப் பாத்திரத்தை வகித்தார்.


புலம்பெயர் இலக்கியச் சந்திப்பைத் தூண்டில் ஆசிரியர்களில் ஒருவரே, மற்றொரு பொது மகனின் துணையுடன் முதலில் முன்முயற்சி எடுத்து தொடங்க காரணமாக இருந்தவர். சந்திப்பின் மீதான நோக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு மீது பல விமர்சனங்கள் இருந்தபோதும், சமூகம் பற்றி ஒரு நேர்மையான நடைமுறையை அது கோரியது. இதைச் சிதைத்ததில் கலைச்செல்வனுக்கு முக்கிய பாத்திரம் உண்டு. இலக்கியச் சந்திப்பு தொடங்கிய நோக்கம், சிறு பத்திரிக்கைக்கும் வாசகர்களுக்கும் இடையிலான ஒரு நெருங்கிய இணைப்பை உருவாக்கும் நோக்கமே முதன்மையானதாக முன்வைக்கப்பட்டது. சுயவிமர்சனம் விமர்சனம் என்ற அடிப்படை நோக்கில் இவை உருவாக்கப்பட்டது. மக்களுடன் நெருங்கிய உறவை முதன்மைப்படுத்த, இது அடிப்படையான ஒரு கொள்கையாக நடைமுறையாகவே முன்வைக்கப்பட்டது. இது சரியான புலம்பெயர் இலக்கியத்தின் உண்மை வடிவத்தை, அதற்கான கருவை வழங்கும் ஒரு முன்முயற்சி தான். ஆனால் இந்த இலக்கியச் சந்திப்பு, படிப்படியாக அதில் இருந்து விலகி மக்களுக்கு எதிரான போக்கை முதன்மைப்படுத்தி, அது சிதைந்து வந்த வரலாற்றையே நாம் பார்க்கின்றோம். மக்களுக்காக இலக்கியம் என்பதை இலக்கியச் சந்திப்பு தொலைத்து, பத்து வருடங்களாகி விட்டது. இந்த இலக்கியச் சந்திப்பைத் தொடங்க காரணமாக இருந்தவர்கள் முதல் ஆர்வத்துடன் இதில் பங்கு கொண்டவர்கள் வரை பலரை, அதில் இருந்து ஒதுங்க வைத்தது. சமூகம் பற்றி நேசித்த பலரை இதில் இருந்து துரத்தியது. பலரை விரக்தி அடைய வைத்தது. சமூகத்தை நேசித்து வந்த பலரின் வாழ்வே சிதைந்தது. தனிப்பட்ட சுயநலச் சிந்தனையை நோக்கி கோட்பாடுகளையும், கொள்கைகளையும் முன்வைத்தது. இதன் மூலம் சிலரை அழித்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் கூட இந்தச் சமூகத்தில் வாழவிடாத வகையில் நஞ்சிட்டது. சமூகம் பற்றிய அக்கறை உள்ளவர்களின் ஒட்டுமொத்த சிந்தனை ஓட்டத்தையும் நலமடித்ததில் முக்கிய பங்கு இலக்கியச் சந்திப்புக்கு உண்டு என்றால், அதில் கலைச்செல்வனின் பங்கு முதன்மையானதுதான்.


கலைச்செல்வனை மக்களுடன் நெருங்கி வரக்கோரும் எனது விமர்சனத்தில், எப்போதும் ஒன்றையே அடிக்கடி முன்வைத்து வந்தேன். அவனின் கடந்தகால வறுமையையும், அதற்கான தீர்வையும் தேடக் கோரினேன். கடந்தகால சொந்த வறுமைக்கான காரணத்தைக் கண்டறியக் கோருவதன் மூலம், அவனிடம் அடிப்படை மாற்றத்தைக் கோரினேன். இதனடிப்படையில் போராடக் கோரினேன். கடந்தகால சொந்த வறுமைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்குத் தனது சொந்த மரணம் வரை பதிலளிக்கவில்லை. இந்த இலக்கியச் சந்திப்பும், இந்த இலக்கிய வெம்பல்களாலும் இதற்குப் பதிலளிக்க முடியாது. இதன் எதிர்திசையில் தான் புலம்பெயர் இலக்கியம் வெம்புகின்றது. இன்று கலைச்செல்வன் எனது விமர்சனத்துக்குப் பதிலளிக்க உயிருடன் இல்லைதான். இதனால் இந்த விமர்சனம் அவனை நோக்கி முன்வைக்கவில்லை. மாறாகப் புலம்பெயர் இலக்கிய உலகத்தை நோக்கி முன்வைக்கப்படுகின்றது. விமர்சனம் புலம்பெயர் இலக்கியம் மீதானதாக மாறுகின்றது. இதில் கலைச்செல்வன் பொதுவாழ்வில் மக்களின் ஒரு கண்ணாடியாகப் பிரதிபலிக்காத வகையில் வாழ்ந்த அவனின் இலக்கியம் மீது குறிப்பாகச் சுட்டிக் காட்ட முனைகின்றது.


மரண நிகழ்வில் கலைச்செல்வனின் அண்ணன் கூறியது போல் வறுமை என்னும் பல்கலைக் கழகத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பார். உண்மையிலும் உண்மை. ஆனால் இந்தப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் கல்வியை மறந்துபோய், இலக்கியம் பேசிய கலைச்செல்வனின் இலக்கியத்தையும் இலக்கியக் கூத்துக்களையும் நாம் எப்படி போற்ற முடியும்? போற்றுவது என்பது, சீரழிவை இலக்கியமாக்குவதுதான். மரண நிகழ்வில் நட்பை முதன்மைப்படுத்திய அஞ்சலிகள் கூட, வறுமை என்னும் பல்கலைக்கழகக் கல்வியைக் கடந்து இயங்கிய சமரச வாழ்வின் பிரதிபலிப்பாகவே வெளிப்பட்டது. இதுவே அவனின் அரசியலாக, இலக்கியமாகப் பிரதிபலித்தது. நபர்களுக்கும் சூழலுக்கும் ஏற்ற நட்பு, கலைச்செல்வின் ஆளுமையாகப் பிரதிபலித்தது. இது அவரின் இறுதி காலத்தில் உச்சத்தைத் தொட்டது. வெளிவந்த அஞ்சலிகள் பெரும்பாலானவை மிகக் குறுகிய காலம் பழகியவர்கள், மிக குறுகிய காலம் தொடர்பைக் கொண்டவர்கள் மற்றும் அரசியல் ரீதியாகத் தொடர்பு கொள்ளாதவர்களின் பிரதிபலிப்பாகவே இருந்தது. மறுபக்கத்தில் சூழலுக்கும் நிலைமைக்கும் ஏற்ப இயங்கும் கலைச்செல்வனை ஒத்த சமரசவாதிகளின் வெட்டித்தனமான பிரதிபலிப்பு சார்ந்து சிலர் அஞ்சலிகளைச் செலுத்தினர்.


கலைச்செல்வன் இலக்கியமே வாழ்வு என்று கூறி முழுநேரமும் அதுவாக, பல்வேறு சீரழிவுகளை உள்வாங்கியபடி தீவிரமாக செயற்பட்டவர். இதற்கு அவர் தனது சொந்த உழைப்பு சார்ந்து வழங்கிய பொருளாதார வளங்கள் மற்றும் கடும் உழைப்பு அனைத்தும் எதைத்தான் சாதித்துள்ளது? இறுதியாக அவர் சொந்தத் தொழிலைத் தொடங்கிய போது, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாகக் கூறிச் சென்ற நிலையில், இடைஇடையே இலக்கிய நிகழ்வில் முகம் காட்டியபோதும், இந்தப் புலம்பெயர் இலக்கியம் எதைத்தான் மக்களுக்குப் பரிசளித்துள்ளது? புலம்பெயர் இலக்கியம் என்பது என்னவாக இருந்திருக்க வேண்டும்?


1. புலம் பெயர் சமூகம் மண்ணில் இருந்து பிரிந்த சமூகத் துயரத்தையும், அதற்கான சமூகக் காரணத்தையும், சமூக விளைவுகளையும் புலம்பெயர் இலக்கியம் பேசியிருக்க வேண்டும்.


2. தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுக்கு எதிரானதாக மாறி, அதுவே தமிழ் மக்களின் சொந்த விலங்காக மாறியதுடன் மனிதன் சந்திக்கும் நெருக்கடிகளைப் பேசியிருக்க வேண்டும்.


3. இயக்க உள்படுகொலைகள் மற்றும் மாற்று இயக்கப் படுகொலைகள் எப்படி படிப்படியாக மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையே அழித்து வக்கரிக்கும் போக்கைப் புலம் பெயர் இலக்கியம் பேசியிருக்க வேண்டும்.


4. புலம்பெயர் நாட்டில் தமது வாழ்வுக்கான போராட்டத்தில் புலம் பெயர் சமூகம் சந்திக்கும் நடைமுறைப் பிரச்சனைகளைப் பேசியிருக்க வேண்டும்.


5. புதிய சூழலில் ஏற்படும் சமூக நெருக்கடிகளையும், சமூக அவலங்களையும் பேசியிருக்க வேண்டும்.


6. மனித உறவுகளில் ஏற்பட்ட சிதைவையும், அதனால் ஏற்படும் சமூக வக்கிரங்களையும் பேசியிருக்க வேண்டும்.


7. மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பேசியிருக்க வேண்டும்.


8. மண்ணில் மனித விடுதலைக்காக இயக்கங்கள் மற்றும் வெளிப் படுகொலைகளுக்கு உள்ளான மனிதர்களின் இலட்சியங்களையும், கனவுகளையும் மட்டுமின்றி அவர்கள் பட்ட துயரங்களையும் கூட பேசியிருக்க வேண்டும்.


9. மனித விடுதலைக்காகப் போராடி கொல்லப்பட்டு காணாமல் போனவர்களைச் சமூகத்தின் முன் கொண்டு வருவதைப் புலம்பெயர் இலக்கியம் செய்திருக்க வேண்டும்.


10. சமூக அவலங்களையும், சமூகக் கொடுமைகளையும் புலம் பெயர் இலக்கியம் பேசியிருக்க வேண்டும்.


இப்படி இனம் தெரியாத மனிதர்களின் வாழ்வியலை அடையாளம் காட்டி, சமூகத்தின் முன் முன்நிறுத்த புலம் பெயர் இலக்கியம் முனையவில்லை.


இவைகள் பிரதானமானவை. இவைகளைப் புலம் பெயர் இலக்கியம் செய்துள்ளதா? இதுவே புலம் பெயர் இலக்கியம் மீதான அடிப்படையான விமர்சனத்துக்கு இட்டுச் செல்லும். புலம்பெயர் இலக்கியத்தில் ஒரு சில விதிவிலக்குகள் எப்போதும் இருந்த போதும், முற்ற முழுதாக இதற்கு வெளியில் வெளிவந்தன.


புலம் பெயர் இலக்கியம் சமூகத்தின் ஒரு கண்ணாடியாகப் பிரதிபலிக்கவே இல்லை. இதில் கலைச்செல்வன் விதிவிலக்கல்ல. அப்படியானால் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் எதைத்தான் முன்னிலைப்படுத்தியது. புலம்பெயர் இலக்கியம் நடுத்தர வர்க்கத்தின் அற்ப முரண்பாடுகளையே இலக்கியமாக்கியது. புலம்பெயர்ந்த நாட்டின் பொருளாதார வாழ்வியலில், மேலே நோக்கிய நகர்வுக்கான போராட்டத்தில் ஏறபடும் முரண்பாடுகளையும், சொந்த சமூகச் சீரழிவுகளையும் நியாயப்படுத்தியுமே புலம்பெயர் இலக்கியம் பிரதிபலித்து நின்றது. இதையே இங்கிருந்தபடி சொந்த நாட்டுக்கும், ஒரு அளவுகோலாகக் கொண்டு புலம் பெயர் இலக்கியம் சிதைந்தது. நடுத்தர வர்க்கத்தின் மேல்நோக்கிய அற்ப கனவுகளையும் சீரழிவுகளையும் அடைய, அடிநிலையில் வாழ்வுக்காகத் தத்தளித்துக் கொண்டவர்களைப் புலம்பெயர் இலக்கியம் மிதிப்பதைத் தனது கொள்கையாகக் கொண்டது. கோட்பாடு ரீதியாக இதை ஆணையில் வைத்தனர். அடிநிலையில் மிதிபட்டு வாழ்வுக்காகத் தத்தளித்தவர்களைப் புலம் பெயர் இலக்கியம் எட்டவே நிறுத்தியது. மொத்தத்தில் தமது நடுத்தர வர்க்க அற்ப வக்கிரங்களை, மேல்மட்டக் கனவுகளுடன் இணைந்தபோது ஏற்பட்ட முரண்பாட்டை, வெளிப்படுத்த பல்வேறு கோட்பாடுகளை முன்னிறுத்தினர். அந்தக் கோட்பாடுகளைக் கூட புலம்பெயர் இலக்கியமாகியது. அடிநிலையில் வாழ்ந்த மக்கள் மூச்சு திணறும் வகையில், அவர்களின் விடுதலை மீதான அனைத்து இலக்கியம் மற்றும் அரசியல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதில் புலம்பெயர் இலக்கியம் எகிறிக் குதித்தது. இதைப் புலம் பெயர் இலக்கியத்தின் ஆரம்பக் காலத்துக்கும், இன்றைய சமகால நிலைக்கும் இடையிலான இடைவெளியில் ஒப்பிட்டு சிறப்பாகவே புரிந்து கொள்ள முடியும். இந்த அற்பத்தனமாகச் சீரழிந்த வக்கிரம், 40இக்கும் மேற்பட்ட புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளை முற்றாகவே இல்லாது ஒழித்துள்ளது. தற்போது இவர்கள் கூடுவது அரட்டை அடிக்கவும், குடித்து கும்மாளம் அடிப்பதற்குமே ஒழிய, மக்களின் விடுதலையைப் பேசுவதற்காக அல்ல. இதில் கலைச்செல்வன் மட்டும் விதிவிலக்கல்ல.


வரைமுறையின்றி காணாததைக் கண்டது போல் கூடிக் குடித்து புகைத்து உடல் கூறுகளையும், மனித அறிவியலான செயற்கை மற்றும் இயற்கை மருத்துவத்தையே ஒருபுறம் புலம்பெயர் இலக்கியம் இழிவுபடுத்துகின்றது. இதன் சீரழிவால் சொந்த மரணத்தை ஏற்படுத்தும் கோட்பாட்டை முன்வைப்பவர்கள், மரணத்துக்காக முட்டைக் கண்ணீர் வடிப்பது தான் ஏன்? சொந்த மரணத்துக்கே கோட்பாடு விளக்கம் தருபவர்கள், மரணத்தைச் சோகமாகக் காட்டி போலியாக நாடகமாடுவது தான் ஏன்? ஒரு மரணம் ஏற்படுத்தும் அதிர்வு இயல்பானதே. சமூகக் கூட்டு வாழ்வியலில் தாய்மையைப் போல், இதுவும் ஒன்றே. ஆனால் அதை வலிந்து தேர்ந்தெடுக்கும் அற்ப ஆசை சார்ந்த கோட்பாட்டை, விமர்சனம்சுயவிமர்சனம் செய்யாத அஞ்சலிகள் போலித்தனமானவை, வக்கிரமானவை. இவர்களால் எப்படித்தான் நேர்மையான சமூக நோக்கமுள்ள புலம்பெயர் இலக்கியத்தைப் படைக்க முடியும்.


இன்று புலம்பெயர் இலக்கியவாதிகள் என்று அறிமுகமாகியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலத்தில் சொந்த நாட்டில் அல்லது புலம்பெயர் நாட்டில் ஏதோ ஒரு இயக்கங்களில் இருந்தவர்களே. அரசு வன்முறைக்கு வெளியில் சொந்த இயக்க வன்முறைகளை நன்கு தெரிந்தவர்களும் கூட. இதில் கலைச்செல்வன் விதிவிலக்கல்ல.


தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிங்கள இனவாத ஒடுக்குமுறை ஆயுதப் போராட்டமாக மாற்றிய போது, பல பத்து போராட்டக் குழுக்கள் முரண்பாடுகளுடன் உருவாகின. இப்போராட்டக் குழுக்களில் இணைந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலை என்ற இலட்சியப் போக்குடன் நேர்மையாகவே போராடப் புறப்பட்டனர். 1983இல் இனக் கலவரத்தை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடப் புறப்பட்ட போது, அவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தது. பிரபாகரன் உட்பட எந்த இயக்கத் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களின் விடுதலை என்ற அடிப்படையில் சிந்தித்தார்கள். அதற்காகத் தம் உயிரைத் தியாகம் செய்யும் உறுதியுடன் தான் போராடப் புறப்பட்டனர்.


ஆயுதம் ஏந்திய போராட்டம் பல குழுக்களாக உருவான போது, இதற்குள் பலவிதமான சக்திகளும் ஊடுருவின. குறிப்பாக இந்தியாவின் ஊடுருவல் பிரதானமானதாக இருந்தது. இதைவிட சி.ஐ.ஏ. முதல் கொண்டு சமூக விரோதிகள் வரை அனைவரும் இயக்கத்துக்குள் ஊடுருவினர். இயக்கங்கள் மக்களின் சமூக விடுதலைக்கான வழியை அரசியல் ரீதியாகப் புரிந்து கொள்ளாத ஒரு கதம்பக் கும்பலாக இணைந்தமையால் மக்கள் விரோதிகளின் கோட்டையாகவே இயக்கங்கள் மாறியது. போராட்டம் இருக்கின்ற சமூக அமைப்பை நியாயப்படுத்தியதுடன், அதை அடிப்படையாகக் கொண்ட பிரிவினையைக் கோரியது. இதேநேரம் பரந்துபட்ட இளைஞர்களிடம் பொதுவாக அதேசமயம் கவர்ச்சிகரமாகக் காணப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்வாக இருந்த சோசலிசம் என்ற கனவை, இயக்கங்கள் தமது பதாகைகளின் கீழ் போட்டுக் கொண்டன. இதில் புலிகள் கூட விதிவிலக்கல்ல.


இயக்கங்களின் வளர்ச்சி, இருக்கின்ற சமூக அமைப்பின் மீது வன்முறை கொண்ட ஒரு அதிகார மையமாக மாறியது. மக்களின் சமூக முரண்பாடுகளை எதிராகக் கண்டது. இதனால் மக்களை அடக்கியொடுக்க புறப்பட்டது. இயக்கங்களில் இணைந்த பலரும் சமூக முரண்பாட்டுக்கு ஏற்ப, தமிழ் மக்களின் விடுதலையைத் தத்தம் எண்ணப்படி சமூக முரண்பாட்டின் எல்லைக்குள் புரிந்து கொண்டனர். இதுவே இயக்கங்களுக்குள் இடையிலான முரண்பாட்டையும், இயக்க உள்முரண்பாட்டையும் உருவாக்கியது. தலைமை கிடைத்த அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள, உள் இயக்க மற்றும் வெளி இயக்க ஜனநாயகத்தையே இயல்பில் மறுக்கத் தொடங்கியது. இதை அரசியல் படுகொலைகள் மூலம் தன்னைத் தக்கவைக்க முனைந்தது. முதலில் அதிகமான படுகொலைகளை உள் இயக்கத்தினுள் நடத்தினர். இப்படி உருவாக்கப்பட்ட தேசியப் பாசிசம், "துரோகி' "சமூக விரோதி' என்ற அடைமொழிக்கு உட்பட்ட ஒரு படுகொலை அரசியலை நடத்தியது. இப்படியே தலைமைகள் தங்கள் சொந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டன.


இதை எதிர்த்து உள்ளியக்கத்தில் ஜனநாயகத்தைக் கோருவது முதன்மைப் போக்காகியது. இதன் போது மக்களின் விடுதலை உள்ளடக்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்ற அரசியல் அடிப்படையாக முன்வைக்கப்பட்டது. இது உள் மற்றும் வெளி இயக்கச் செயல்பாட்டுத் தளத்திலும் பலமான போக்காக எழுந்தன. பல சந்தர்ப்பங்களில் மக்களும் பங்கு பற்றுமளவுக்கு பல போராட்டங்கள் நடந்தன. இதை ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் சித்திரவதைகள் மூலம் இயக்கத் தலைமைகள் அடக்கியொடுக்கின. உள் இயக்கப் படுகொலைகள் மற்றும் வெளி இயக்கப் படுகொலைகளின் போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இப்படிக் கொல்லப்பட்டவர்களை இன்று புலிகளும் சரி, புலியெதிர்ப்பு அணியும் சரி திட்டமிட்டே அந்த அரசியல் போக்கை மூடிமறைக்கின்றனர். இலக்கியச் சந்திப்பும் இதை மூடிமறைத்தே தமது மக்கள் விரோத அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தினர்.


படிப்படியாகப் போராட்டத்தின் நோக்கம் சிதைந்து, தலைமையின் சொந்த அதிகாரத்துக்கான போராட்டமாக மாறியது. இதற்குள் குத்துவெட்டு அரசியல் அரங்கேறியது. இதுவே இன்று வரையுள்ள பொதுவான நிலைமை. இந்த நிலையில் பெரும்பாலான அஞ்சலிகளும், அறிக்கைகளும், பிரான்சில் புளொட் இயக்கத்தில் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த கலைச்செல்வின் செயற்பாட்டைத் திட்டமிட்டே மறைத்தனர். இன்று சொந்த நாட்டிலும், புலம் பெயர் நாட்டிலும் புலிப்பினாமிகளாகச் செயற்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் முன்னைய புலி அல்லாத செயற்பாட்டை மறைத்தே பினாமியாக நக்கித் திரிவது போல், கலைச்செல்வனின் முன்னைய புளொட் இயக்க செயற்பாட்டை மறுத்தனர்.


கலைச்செல்வன் பிரான்ஸ் வந்த பின்பு அவரின் நெருங்கிய உறவினரான உமாமகேஸ்வரனின் புளொட் இயக்கத்தில் சேர்ந்தார். அதன் முக்கிய பிரச்சாரகராகவும், செயல்வீரராகவும் இருந்தார். புளொட் இயக்கத்தைப் புலிகள் இயக்கம் தடைசெய்து அந்த இயக்கம் தானாகச் சிதையும் வரை அதில் தீவிரமாகச் செயற்பட்டõர். புளொட் செய்த உள் இயக்க, வெளி இயக்க அனைத்து படுகொலைகளையும், மனித விரோதச் செயல்களையும் நியாயப்படுத்தினார். அதாவது புளொட்டின் அனைத்து மனிதவிரோத வன்முறைகளையும் புளொட்டின் பாணியிலேயே நியாயப்படுத்தினார். புளொட்டின் உட்படுகொலைகளை அம்பலப்படுத்தியவர்களைப் பிரான்சில் இயக்கம் சார்பாக எச்சரித்தவரும் கூட. புளொட்டில் தீப்பொறி உடைவை ஒடுக்கியதையும், சந்ததியாரைப் படுகொலை செய்ததையும் இவர் புளொட் சார்பாக நியாயப்படுத்தினார். புளொட் புலிகளின் தடையால் மண்ணில் சிதைந்த பின்பே, இயக்கமல்லாத புலம்பெயர் அரசியலுக்குக் கலைச்செல்வன் வந்தார்.


அதாவது புளொட் இயக்க மனிதவிரோத அரசியலை விமர்சித்து, கலைச்செல்வன் புலம்பெயர் இலக்கிய உலகுக்குள் வரவில்லை. புளொட்டின் சிதைவே அதில் இருந்து அவரைத் தள்ளியது. வெளிவந்தவர் தனது கடந்தகால நடத்தைகளையும், அரசியலையும் புலம்பெயர் இலக்கியத்தில் விமர்சித்தவர் அல்ல. இங்கு விமர்சனம், சுயவிமர்சனம் அற்ற ஒரு நிலையில் புலம்பெயர் இலக்கியத்தோடு காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப இணைந்து கொண்டார். இதையே தனது மரணம் வரை கையாண்டவர். இயக்கங்களின் வன்முறையால் வெளியேறி வந்தவர்களும் இவருடன் கூடிக் கொண்டனர்.


1986ஆம் ஆண்டு புலிகளால் ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை அரசியல் உச்சத்தைத் தொட்டது. வெளிஇயக்கப் படுöகாலைகளைப் புலிகள் முனைப்பாக நடத்திக் கொண்டிருந்த 1986க்குப் பிந்திய காலம், மாற்று இயக்கத்தில் இருந்தவர்கள், மாற்றுக் கருத்தைக் கொண்டவர்கள், புலிகளுடன் முரண்பட்டவர்கள் யாரும் புலிகளின் பிரதேசத்தில் உயிர் வாழ முடியாத நிலையில் பலர் தமது உயிரை இழந்தனர். பலர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி வெளியேறியவர்கள் பலரும் புலம்பெயர் நாடுகளுக்கு வந்தபோது, பலர் மக்களின் ஜனநாயக உரிமைக்காக உணர்வுபூர்வமான உணர்வுடன் செயல்பட முனைந்தனர். பின்னால் சிலர் ஐரோப்பியப் பணத்தைக் கண்டு அந்த உணர்வுகளையே இழக்கத் தொடங்கினர். புலம்பெயர் நாட்டில் மக்களின் விடுதலை என்ற உன்னத நோக்குடன் செயல்பட முன்வந்தவர்களுடன் ஐரோப்பாவில் செயல்பட்ட ஒரு பகுதியும் இணைந்து கொண்டு செயற்பாட்டு வடிவங்களை உருவாக்கினர். மக்களின் விடுதலைக்கான அரசியல் முனைப்புடன் ஆரம்ப முயற்சிகள் உருவாக்கப்பட்டன. இது பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றாக்கி, ஒரு அணியாக்கியது. இப்படி உருவாகிய முயற்சிகள் மக்களின் விடுதலையை முதன்மைப்படுத்தியது. மார்க்சியம் மீதான கற்றல், அதன் மீதான தேடுதல், அதை முன்னிலைப்படுத்தி செயற்படுவதில் உளப்பூர்வமான நேர்மையுடன் செயற்படத் துடித்தனர். ஆரம்பத்தில் எப்படி இயக்கங்களில் இணைந்தோர் விடுதலை பற்றிய நேர்மையான அர்ப்பணிப்புடன் இருந்தனரோ, அதே நேர்மையுடன் தான் இயக்கங்களில் இருந்து பிரிந்தோரும் இயக்கத்துக்குப் பிந்திய அரசியலிலும் முனைப்புடன் ஈடுபட்டனர்.


இப்படித்தான் கலைச்செல்வனின் ஆரம்ப முயற்சி இருந்தது. ஆனால் இயக்கங்கள் அழிக்கப்பட்டதால் விட்டோடி வந்த பலரும், முன்னைய இயக்க அராஜகங்களை ஆதரித்தவர்களாக இருந்தனர். அவர்கள் அரசியல் ரீதியாகத் தம்மை விமர்சனம், சுயவிமர்சனம் செய்யவில்லை. இதனால் உருவான புதிய போக்குகள் பல குழுவாதங்களுக்குள்ளும் தனிமனித வக்கிரத்துக்குள்ளும் இடிபட்டுச் சிதையத் தொடங்கியது. குறிப்பாக கலைச்செல்வன் இயக்கத்துக்கு வெளியில் முதலில் இணைந்து செயற்பட்ட தேடல் சஞ்சிகையில் இருந்து விட்டோடியது. பள்ளத்தைத் திடீரென நிறுத்தியது. எக்ஸிலில் பிளவு, உயிர்நிழல் ஆசிரியர் ஒருவர் விலகியது வரை, இங்கு இயக்க அராஜகப்பாணியே நடைமுறையாக இருந்துள்ளது. இங்கு விமர்சனம், சுயவிமர்சனம் என்ற ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதுபோன்று பல பத்து சம்பவங்கள் கலைச்செல்வனின் பெயரால் உள்ளது. அரசியல் ரீதியாக கடந்த காலத்தை விமர்சனம், சுயவிமர்சனம் செய்து, மக்களின் விடுதலைக்கான அரசியலைக் கற்கும் முதன்மை பாத்திரம் படிப்படியாக மறுக்கப்பட்டது. மாறாகக் கடந்த காலத்தில் தெரிந்து கொண்ட அரசியலைக் கொண்டு, தமது அரசியல் வாழ்வை வாழத் தொடங்கினர். அது முன்னேற முடியாது நெருக்கடிக்குள்ளாகியது. இது கடுமையான உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் வன்முறைப் பண்பாக வளர்ச்சியுற்றது. இருப்பதை அரைக்கின்ற இயந்திரம் போல், அரசியல் ரீதியாக வங்குரோதத்தை அடைந்து முன்னேற முடியாத முட்டுச் சந்தியில் நிறுத்தியது. இதனால் மக்களின் விடுதலை, அது சார்ந்த அரசியலைக் கைவிட்டு, அரசியல் சாராத இலக்கியத்தை முன்னிலைப்படுத்தினர். இதையே புலம்பெயர் இலக்கியமாக அடையாளம் காட்டினர். இந்த அரசியல் சாராத புலம்பெயர் இலக்கியம் அரசியல் ரீதியாகக் கற்றுக் கொள்வதையும், மக்களின் விடுதலையையும் மறுத்த ஒரு நிலையிலேயே உருவானது.


இதன்போது ஆரம்பத்தில் அரசியல் ரீதியான சில உள்ளடக்கங்கள் இருந்தபோதும், மக்களின் வாழ்வியல் மீதான சில அம்பலப்படுத்தல்கள் இருந்த போதும், இவை படிப்படியாகக் கைவிடப்பட்டன. இதை முற்றாகக் கைவிட்ட நிலையை இன்று அடைந்துள்ளது. புலிகளின் அராஜகத்தை முதன்மைப்படுத்தி உருவான புலம்பெயர் இலக்கியம், தனது அரசியல் விபச்சாரத்தால் இன்று புலிகளுடன் சமரச நிலையைக் கையாளுகின்றது. மறுபக்கத்தில் இதில் இருந்து விலகி மக்களின் விடுதலை என்ற இலட்சியத்தைக் கைவிட்ட புலியெதிர்ப்பு குழுவினர், அமெரிக்கா முதல் இந்தியாவுடனும் கைகோர்த்துச் செல்லும் எல்லைவரை தமது அன்றாட அரசியல் நடைமுறைகளைக் கைக் கொள்கின்றனர். இப்படித் தமது அரசியல் மற்றும் மானிட விடுதலை இலட்சியத்தைக் கைவிட புலம்பெயர் இலக்கியம், முதன்மையாக மார்க்சியத்தை மறுத்துரைக்கத் தொடங்கியதே. மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் முடியாத இவர்கள், மார்க்சியத்துக்கு எதிரான பிரச்சாரத்தையே புலம்பெயர் இலக்கியம் என்ற பெயரில் ஆணையில் வைத்தனர். மார்க்சியத்தை முன்னிலைப்படுத்தியவர்களை புலம்பெயர் இலக்கிய வாசகர்கள் முன் எதிரியாகக் காட்டியதுடன், அவர்களைத் திட்டித் தீர்த்ததுடன் வசைபாடி தூற்றினர். மார்க்சியத்தை முன்னிலைப்படுத்தி மக்களின் விடுதலையை முன்னிலைப்படுத்திய எனது எல்லா முயற்சிகள் மீதும் கடுமையாகச் சேறடித்தனர்.


குறிப்பாகக் கலைச்செல்வன் மாற்றுக் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதில் முன்னிலைப் பாத்திரத்தை வகித்தார். குறிப்பாக எனக்கு மட்டுமல்ல, மக்களின் விடுதலையை நேசித்த பலருக்கும் இதுதான் நடந்தது. எனது கருத்துக்குத் தீவிர எதிராளியாகச் செயல்பட்டõர். இதை அரசியல் ரீதியாகச் செய்திருந்தால் கூட அதில் ஒரு அரசியல் நேர்மை இருக்கும். என்றைக்கும் என்னுடன் எனது கருத்தை மறுத்து விமர்சிக்கும் அரசியல் ஆற்றல் அற்றவராகவே இருந்தார். இதனால் திட்டமிட்டுச் சேறு பூசுவது, முத்திரை குத்துவது, நான் சொல்லாததைச் சொல்லி பிரச்சாரம் செய்வது என்று பல வழிகளில் என்னை எதிரியாகக் கருதி செயல்பட்டார். அனைத்தும் தனிப்பட்ட காழ்ப்பு என்பதைவிடவும், மார்க்சியம் மீதான காழ்ப்பாகவே வெளிப்பட்டது.


பாரிஸ் இலக்கியச் சந்திப்பு ஒன்றில் எனக்கு விதித்த விசேட நிபந்தனையே, மாற்றுக் கருத்தின் குரல்வளையையே வெட்டுவதாக இருந்தது. ""ஒரு தலைப்பில் ஒரு தரம் தான் கருத்துக் கூறமுடியும். அதுவும் ஒரு நிமிடம் தான்'' என்று இலக்கியச் சந்திப்பில் அறிவித்த போது, பல ஐரோப்பிய "ஜனநாயக' இலக்கியவாதிகள் யாரும் ஆட்சேபிக்கவில்லை. இப்படி கூறிய போது, நான் அந்த இலக்கியச் சந்திப்பைவிட்டு வெளியேறினேன். இதைப் புலிகள் பயன்படுத்தி, மாற்றுக் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் நீங்கள், இப்படிச் செய்வது தவறு என்று தமது கண்டனத்தை அங்கே தெரிவித்ததாக அறிந்தேன்.


மூன்று வருடங்களுக்கு முன்பு பாரிசில் குறும்திரைப்பட விழா நடத்தப்பட்டது. இதன் போது தமிழ்நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ""புதிய கலாச்சாரம் திரைமுழக்கம்'' எடுத்த "தீக்கொழுந்து' என்ற குறும்படமும் காட்டப்பட்டது. அது மக்களின் விடுதலையைப் பேசியதால் அதைத் திடீரென நிறுத்தி படத்தை இருட்டில் வைத்தே மாற்றிவிட்டனர். புதிய படம் முடிந்த நான் பார்வையாளனின் சுதந்திரத்தைத் தடுப்பது மிக மோசமானது என்று ஆட்சேபித்தேன். இதற்கு அவர்கள் சொன்ன காரணமே சிரிப்புக்குரியது. பெண்களுக்குத் தலை இடிக்குது (ஐரோப்பிய வானொலிகளில் மைக்குகளுக்காக அலையும் சிலர் தான் இவர்கள்) என்று இரகசியமாகத் தம்மிடம் சொன்னதால் நிறுத்தியதாகக் கூறியது மட்டுமின்றி, தமது அராஜகத்தை தொடர்ந்து நடத்தினர். கலைச்செல்வன் என்னை நெருங்கி தாக்க முற்பட்ட நிலையில், நான் அதற்கு எதிர்வினையாற்றாது வன்முறையை மறுத்து விமர்சனம் சுயவிமர்சனம் என்ற உள்ளடக்கத்தில் விவாதிக்கத் தூண்டினேன். இதனால் மேலும் கோபம் கொண்ட கலைச்செல்வன் என்னை நோக்கி கூறினான் ""நீ பல பெண்களைக் கற்பழித்தாய் (இந்தக் கற்பழிப்புச் சொல்லைக் கூறியதற்காகக் கலைச்செல்வனை எந்தப் பெண்நிலைவாதியும் விமர்சிக்கவில்லை), பலகொள்ளைகளை அடி'' என்று பலவாறாகத் தூசணத்தால் பேசி பலர் கூடிய சபையில், சபை நடுங்க அலறினார். இதன்போது அங்கே அராஜகத்துக்கு எதிராக புறப்பட்ட "ஜனநாயக' இலக்கியவாதிகள் மௌனமாகி நின்றனர். அன்று திட்டமிட்டு இடையில் நிறுத்தப்பட்ட தீக்கெõழுந்து என்ற டாக்குமென்றி சினிமா, இவர்களின் குறிப்பான அராஜகத்தையும் தாண்டி, பார்வையாளர்களின் வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பெற்றது. ஆனாலும் அவர்கள் அப்படத்தை முழுமையாகப் பார்த்துவிடும் சந்தர்ப்பத்தை மறுத்தே நின்றனர். இது போன்று கலைச்செல்வன், பலருக்கு ஆண்பெண் என்ற வேறுபாடு இன்றி இதே அராஜகத்தையும், ஆணாதிக்க வசவுகளையும் பல இடங்களில் உதிர்த்த போது, இந்த இலக்கியச் சந்திப்புகள் முணுமுணுப்புகளுடன் அங்கும் இங்கும் மாறிமாறி உமிழ்ந்து மௌனமாகி பார்த்தே நின்றது. இப்படி பற்பல கதைகள் கலைச்செல்வன் சார்ந்துண்டு.


எதை மறுத்து புலம்பெயர் அரசியலும் புலம் பெயர் இலக்கியமும் உருவானதோ, இறுதியில் அதுவே புலம்பெயர் முயற்சியாக மாறியது. இதனால் பல நல்ல சமூக நேசிப்புக் கொண்டவர்கள் விலகி ஓடினர். பலர் இந்த பொது வாழ்வில் கூட வாழ முடியாத நிலைக்கு, மனநோயாளியாகவும், நடைப்பிணமாகவும் மாறினர்.


புலம்பெயர் அரசியல் அராஜகத்தை எதிர்த்து, மக்களின் விடுதலையை முன்னிலைப்படுத்திய போக்கு, படிப்படியாகப் புலம்பெயர் இலக்கியமாகி அதற்குள்ளும் அராஜகத்தைக் கட்டமைத்தனர். மாற்றுக் கருத்தை முற்றாக மறுக்கும் வகையில் ஒரு அராஜகத்தை முன்னிலைப்படுத்தினர். புலிகளின் தலைவர் பெயரில் மொத்த சமூகக் கட்டமைப்பும் விமர்சனமற்ற வழிபாட்டுக்குள் எப்படிச் சமூகத்தை இட்டுச் சென்று உள்ளனரோ, அதையே புலம்பெயர் இலக்கிய ஜாம்பவான்களும் தமக்குத்தாமே மகுடமாக்கிக் கொண்டனர். கலைச்செல்வன் பற்றிய அஞ்சலிகளும், அறிக்கைகளும் இதையே செய்தன. ஓரிரண்டு விதிவிலக்குகளைக் கடந்து புகழ்தல் மூலம் பிரமையைக் கட்டமைக்கும் போக்கு, தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது.


குறிப்பாக உமாகாந்தன் மரணத்தைப் பற்றி நான் எழுதிய விமர்சனம் உள்ளடக்கிய செய்தி பிரசுரத்துக்காக, பல புலம் பெயர் இலக்கியக் குஞ்சுகள் துள்ளிக் குதித்தன. யாரும் மக்களின் நலன் சார்ந்து எதையும் மறுக்கும் சுதந்திரத்தையும், விமர்சிக்கும் சுதந்திரத்தையும் வழங்காத ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி எப்படித்தான் போராடமுடியும். எனது இந்த கட்டுரை கூட பல புலம் பெயர் இலக்கிய "ஜனநாயக'வாதிகளின் காழ்ப்புக்கு உள்ளாகும். திட்டித் தீர்ப்பதை நீங்கள் பலரும் காதால் கேட்பதை, நான் முன்கூட்டியே உங்களுக்கு சொல்ல முடியும். விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் வக்கற்று தூற்றுவர்.


அன்று அரசிடம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக வாழ்வதற்காக ஜனநாயக உரிமையைக் கோரினோம். அதைத் தொடர்ந்து இதற்காகப் போராடிய இயக்கங்களிடம் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை மக்களுக்கு வழங்க கோரினோம். இறுதியாக இன்று புலிகளிடம் தமிழ் மக்கள் சொந்த மண்ணில் சுயாதீனமாக வாழ்வதற்கான உரிமையைக் கோருகின்றோம். தமிழ் மக்கள் தமது வாழ்வை அதிகார வர்க்கங்களிடம் இழந்து செல்வது தொடருகின்றது. தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை உள்ளடக்கிய, மக்களின் ஜனநாயக உரிமையை வழங்கக் கோருகின்றோம். அனைத்தையும் விமர்சனம், சுயவிமர்சனம் செய்யும் உரிமையைக் கோருகின்றோம். இன்று அதை புலம்பெயர் இலக்கிய நபர்களிடமும் கோர வேண்டிய அளவுக்கு, ஒரு அராஜகத்தைப் புலம் பெயர் இலக்கியம் கையாளுகின்றது. விமர்சனம், சுயவிமர்சனம் என்பதைப் புலம்பெயர் இலக்கியம் மறந்து நீண்ட நாட்களாகின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமையை முன்னிறுத்த போராட்டம் முதல் இலக்கியம் வரை அனைத்து மீதும் கடுமையான விமர்சனம் முன்வைப்பது ஒரு வரலாற்றுக் கடமையாகி விடுகின்றது.


இந்த நிலையில் புலம் பெயர் இலக்கியம் மக்களின் விடுதலை முன்வைப்பதைத் தொலைத்தே வந்துள்ளது. கடந்தகால, நிகழ்கால மனித அனுபவங்களைப் பேச மறுத்துள்ளது. ஒரு சில விதிவிலக்குகள் இருந்த போதும், மொத்தத்தில் புலம்பெயர் இலக்கியம் மக்களின் வாழ்வியலை, அவர்களின் விடுதலையை முன்னிலைப்படுத்தி படைக்கப்படவில்லை. இதனால் அது சமூக நலன் சார்ந்த படைப்புகள் அல்ல. நடுத்தர வர்க்கத்தின் அரிப்பு மற்றும் இச்சைகள் சார்ந்து எழும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்தி தனது சொந்த அரிப்புகளையே வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒட்டு மொத்த மக்களின் விடுதலை என்ற வகையில் புலம்பெயர் இலக்கியம் முரணற்ற வகையில் இயங்கவில்லை. அதற்கு எதிராக இயங்குவதே தனது இலட்சியமாகக் கொண்டு இருந்தது.


மக்களின் விடுதலைக்காக உள் இயக்கப் போராட்டங்களிலும், வெளி இயக்க போராட்டங்களிலும் (இது அரசு சார்பு இன்றைய இயக்க அரசியலில் கொல்லப்பட்டவர்களின் அரசியலை அல்ல) கொல்லப்பட்டவர்களின் அரசியலை முன்னிலைப்படுத்தி, அதன் வழியில் போராடும் அரசியல் மற்றும் இலக்கியத்தைப் புலம் பெயர் இலக்கியத்தில் காண முடியாது. அன்று, குறிப்பாக 1990க்கு முந்தி போராடி மடிந்த ஆயிரக்கணக்கானவர்களின் இலட்சியத்தை (இந்தியக் கைக்கூலிகளை இது உள்ளடக்காது.) அழிப்பதில்தான், புலம்பெயர் இலக்கியம் முட்டி மோதுகின்றது. இதையே வழிபாட்டுக்குரிய முற்போக்காகக் காட்டி வக்கரித்துக் கட்டமைக்கின்றனர். புலம்பெயர் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் சோகங்கள் எண்ணற்றவை. இதைப் பொதுவாகப் புலம்பெயர் இலக்கியத்தில் தேடினாலும் கண்டறிய முடியாது. ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் கொண்ட ஒரு எல்லைக்குள் நடத்தும் புலம்பெயர் இலக்கியக் கூத்தில், புலம்பெயர் இலக்கியத்திலும் புலம்பெயர் அரசியலிலும் விமர்சனம் சுயவிமர்சனத்தை நாம் காண முடியாது. இதற்குள் தான் 20 வருட கலைச்செல்வனின் பொதுவாழ்வும் சீரழிந்து சிதைந்து போனது. மக்களை முன்னிறுத்தாத புலம்பெயர் இலக்கியத்தின் மொத்த கதியும் இதுதான்.

 

20.03.2005