book _1.jpgவெக்ரோன் தனது சொந்த அவலத்தின் உண்மைத்தன்மையைக் கூட தனது ஊடகமான தொலைக்காட்சியின் ஊடாகக் கொண்டு வந்துவிட முடியவில்லை. இந்த நிலையில், எப்படித்தான் தமிழ்ச் சமூக நலன் சார்ந்த உண்மைகளைக் கொண்டு வர முடியும்?


திடீரென சில காரணங்களைக் கூறி நிறுத்திய வெக்ரோன் தொலைக்காட்சி, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது சொந்தக் காதுகளிலேயே பூக்களைச் செருகியபடி அரோகராச்சாமி ஐயப்பன் பாட்டு பாடுகின்றனர். எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது நடத்தும் திரைமறைவுச் சதிகள் மற்றும் நாடகங்கள், தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தின் மேல் செங்கம்பளம் விரித்து அதன் மீதாகவே நடைபோடுகின்றது.

தமிழ் மக்களுக்குத் தேசிய நலன் சார்ந்த உண்மைச் செய்திகளைச் சுடச்சுடக் கொண்டு வருவதாகப் பறைசாற்றும் வெக்ரோன், சொந்த அவலத்தின் உண்மைத் தன்மையைக் கூட கொண்டு வந்துவிட முடியவில்லை. இப்படி இருக்கும்போது, எப்படித்தான் தமிழ்ச் சமூக நலன் சார்ந்த உண்மைகளை உண்மையாகக் கொண்டு வரமுடியும்?

 

ஒருநாளுமே இது சாத்தியமில்லை. ஆம் வெக்ரோன் பொய்களை மூட்டையாக்கி, தமிழ் மக்களின் முதுகில் ஏற்றிவிடுவது மட்டும் நிகழ்கின்றது. இதற்கு அவர்களின் சொந்தச் செய்தி நிறுவனத்துக்கு நடந்ததைக் கூட மக்கள் முன்வைக்க முடியாமல், உண்மையை மூடிமறைத்து நடத்திய நாடகமே சாட்சி. இதைத்தான் இன்றைய ஊடகவியல் செய்து வருகின்றது. தமிழ் மக்களைத் தோண்டப்பட்ட புதைகுழிகளில் இடுவதே ஊடகவியலின் அன்றாட சொந்த நடைமுறையாகும். அதாவது வெட்டப்பட்ட புதைகுழியின் இருட்டில் தமிழ் மக்களைத் தள்ளிவிடுவதே ஊடகவியலின் தலையாய பணியாக உள்ளது.


வெக்ரோன் இடைநிறுத்தலுக்கென கூறிய காரணத்தில், கொழும்பு பிரிவுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட அழுத்தம், லண்டனில் உள்ள இரண்டு தொலைகாட்சிகளில் ஒன்றின் இடையூறு அல்லது அழுத்தம் மற்றும் சிங்களப் பத்திரிக்கையான ஒன்று இனவாத அடிப்படையில் வெக்ரோனை புலிசார்பான தொலைக்காட்சியாகக் கூறும் பிரச்சாரம் என்பனவே காரணம் என்று தெரிவித்தனர். இன்று அதை வென்று தாம் மறுபடியும் உயிர்த்தெழுந்ததாகக் கூறுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல, உள்ளடக்க ரீதியாகத் துரோகத்தனமானதும் கூட.


சிங்கள இனவாத அரசும், சிங்கள இனவாதப் பத்திரிக்கையும், லண்டன் தொலைக்காட்சியும் உங்களைத் தடுத்து நிறுத்தியது என்றால், மீண்டும் தொலைக்காட்சியை இயக்க எப்படி இச்சக்திகள் உங்களை அனுமதித்தன? எங்கேயோ எப்படியோ இவர்களுடன் சோரம் போகும் விபச்சாரத்தைச் செய்திருக்க வேண்டுமல்லவா! இதை நாம் சொல்ல முன்வரவில்லை. உங்கள் காரணங்களே இதைச் சொல்லிவிடுகின்றது அல்லவா! அந்த விபச்சாரம் தான் என்ன?


நீங்கள் பெருமையாக ""தமிழ்த் தேசியத் தலைவரின் ஆசியுடன் வெற்றி நடைபோட்ட வெக்ரோன் தமிழ்த் தொலைக்காட்சி சேவையானது நிறுத்தப்படுகின்றது என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வெக்ரோன் உரக்கச் சொல்லும் உலகுக்கு.'' என்று சொல்லி நிறுத்திய போது, தமிழ்த் தேசியத்தின் வீரராக அல்லவா காட்டமுனைந்தீர்கள்.


இப்படி காட்டிய நீங்கள் எப்படி? எந்த? துரோக விபச்சாரப் பேரத்தின் ஊடாக, இனவாத அரசை, சிங்கள இனவாத பத்திரிகையை, லண்டன் தொலைக்காட்சிகளில் ஒன்றை, யாரை எதிர்த்து வென்றீர்கள்?


இடைநிறுத்திய இனவாதிகளுக்கு வெக்ரோனைப் பேரம்பேசி விற்றுவிட்டீர்களா? அல்லது லண்டனில் இயங்கும் மற்றைய தொலைக்காட்சிக்குச் (இதைத் துரோக தொலைக்காட்சியாகத் தேசியம் பிரச்சாரம் செய்கின்றது) சரணடைந்து, தமிழ்த் தேசிய ஆண்மையை இழந்து விட்டீர்களா? இதை நாம் சொல்லவில்லை, நீங்கள் நிறுத்தும் போது சொன்ன காரணமும், தொடங்கும் போது சொன்ன காரணமும், பொழிப்புரையாக இதைத்தான் எமக்கு விளக்குகின்றது. இல்லை என்கின்றீர்களா? இந்தச் சோரத்தின் மூலமாகவா உங்கள் முன்னாள் எதிரியுடன் கைகோர்த்துக் கொண்டு, இந்த மீள் ஒளிபரப்பை நடத்துகின்றீர்கள்?


இவைபோன்ற கேள்விகளை நீங்கள் குறிப்பிட்ட, குறிப்பிடும் காரணங்களில் இருந்து நிச்சயமாக நாம் எழுப்ப முடியும்.


மறுபக்கத்தில் இவையெல்லாவற்றுக்கும் பின்னால் நாம் முன்பு கூறியது போன்று புலிகளே இருந்துள்ளனர். புலிகளுடனான இரகசிய பேரங்களின் முடிவிலேயே மீள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. இந்தப் பேரம் பெரும் நிதியாக இருக்கலாம். அல்லது வெக்ரோன் செய்மதி அலைவரிசை ஊடாகப் புலிகளின் அலைவரிசையை இலங்கையில் இருந்து கொண்டு வரும் ஒரு முயற்சியாக இருக்கலாம். அல்லது செய்மதி அலைவரிசை ஒன்றை அபகரித்து இருக்கலாம். அல்லது வேறு ஒன்றாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் சாதிப்பதற்கு வெக்ரோனை நிறுத்திய ஒரு வழியில் அல்லாமல் பல வழிகளினூடாக முயன்று இருக்கலாம்.


எது எப்படி இருந்தாலும் ஊடகத்துறை மீதான மற்றுமொரு அச்சுறுத்தல் ஊடாகவே, தமிழ்த் தேசிய ஜனநாயகம் பூத்துக் குலுங்குகின்றது. வெக்ரோனின் தமிழ்த் தேசியப் பாசிசக் கூத்தும் தொடருகின்றது.

07.5.2004