தமிழ்மக்கள் தாம் போராடாமல், தமக்கான விடுதலையை ஒருநாளும் அடையமுடியாது. இதுவல்லாத அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் மக்கள் போராட வேண்டும் என்பதை அங்கீகரிக்காத வரை, மாற்றுப்பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை தமது மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த உதவும் வாதத்துக்கு உரிய வெற்றுச் சொல்லாடல்கள் தான்.
மக்கள் போராடாமல், மக்கள் தமது விடுதலையை அடைய முடியாது என்பதை, யாராலும் மறுக்க முடியாது. இந்த உண்மையோ, ஒருபுறம் பளிச்சென்று உள்ளது. மறுபக்கம் மக்கள் தமது எதிரியாக கருதி யாருக்கு எதிராக போராட வேண்டியுள்ளதோ, அவன் தான் கூறுகின்றான் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்று. அதேநேரம் அவனே தான் தன்னை முற்போக்குவாதியாக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரானவனாக, காட்டி தான் மக்களுக்காக போராடுவதாகவும் கூறிக்கொள்கின்றான்.
இப்படி எமது போராட்டத்தின் எதார்த்தம் என்பது, இரண்டு மக்கள் விரோத பாசிச சூழலை எதிர்கொண்டாற்றுகின்றது. புலி-அரசு என்றும் இரண்டுமே, மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்துவதுடன் இழிவுபடுத்துகின்றது. இதை எதிர்கொள்வோர் இன்றியே எதார்த்தம் நிலவுகின்றது. யார் தான் இந்த இரண்டுக்கும் எதிராக உண்மையாக உள்ளனர்? யார் இரண்டுக்கும் எதிராக இல்லையோ, அவர்கள் அடிப்படையிலேயே நேர்மையற்றவர்கள். இரண்டுக்கும் எதிராக யார் போராடவில்லையோ, இவர்களுடன் யார் சமரசம் செய்கின்றனரோ, அவர்கள் தான் மக்களின் முதல் தரமான உள்ளிருக்கும் எதிரிகள்.
மக்களின் இந்த எதிரிகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில், எந்த சமரசமுமின்றி தனித்து நான் மட்டுமே நீண்டகாலம் எதிர்வினையாற்றி வந்துள்ளேன். இதனால், இதை தனிப்பட்ட என்மீதான எதிர்வினையாக்கும் துரதிஸ்ட்டம், இந்த அரசியல் வழியூடாக நீடிக்கின்றது. என்னை தூற்றுவதன் மூலம், இந்த அரசியல் வழியை தூற்ற முடியும் என்று பல எதிர்ப்புரட்சிக் கும்பல்கள் நம்புகின்றனர். இப்படித்தான் அவர்களின் பொது அரசியல் எதிர்வினைகள் அமைகின்றன.
மக்களுக்கான எனது போராட்டம், தனிமனித வரைமுறைக்கு உட்பட்டே இன்னமும் நீடிக்கின்றது.
அரசு–புலி இரண்டையும் நான் மட்டுமே (இலங்கை முதல் புலம்பெயர் நாடு வரை), தொடர்ச்சியாக சமரசங்கள் எதுவுமின்றி விமர்சித்து வந்துள்ளேன். சொந்த மண்ணில் நான் வாழ்ந்த காலத்திலும், நடைமுறையில் மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்பியவன். அதற்கு தலைமை தாங்கியதுடன், சமரசமின்றி மக்களுக்காக மக்களின் சொந்த போராட்டத்துடன் ஊன்றி நின்றவன். அனைத்து மக்கள் விரோத செயல்களையும் எதிர்த்து போராடிய அதேநேரம், அன்று எம்முடன் பலர் சேர்ந்து நின்றனர். பலர் என்னைப்போல் தலைமை தாங்கினர். நீங்கள் நினைப்பது போல் அது வெறுமனே புலிகளுக்கு எதிரானதல்ல, அனைத்து மக்கள் விரோத குழுக்களுக்கும் எதிராகவும் இருந்தது. இப்படித்தான் மக்கள் போராட்டம் நடந்தது. தேசிய விடுதலையின் பெயரில், மக்கள் விரோதக் குழுக்களாகவே பெரும் இயக்கங்களின் செயல்கள் இருந்தன.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியில், பலர் மக்களுக்காக மரணித்தனர். தொடர்ச்சியாக மக்கள் நலனுக்காக போராடியவர்கள் மண்ணில் வாழமுடியாத பொதுச் சூழ்நிலை உருவானது. இதனால் நாம் புலம்பெயர வேண்டியிருந்தது.
இது எனது அரசியல் உணர்வில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எந்த அரசியலும் எம் அரசியல் உணர்வை சிதைக்கவுமில்லை. தொடர்ச்சியாக அந்தப் போராட்டத்தை தொடர நாம் உறுதிகொண்டோம். மனித விடுதலைக்காக போராடியதால், உட்படுகொலைகளில் மரணித்தவர்களின் அரசியல் கனவுகளுடன், அவர்களின் நினைவுகளுடன் நாம் போராடுகின்றோம். இந்த அரசியல் நிலையை நாம் மட்டும் தான், உணர்வு பூர்வமாக அரசியல் ரீதியாக முன்னெடுக்கின்றோம். மக்களுக்காக மரணித்தவர்களை நாம் மட்டும் தான் இன்று போற்றுகின்றோம்.
இந்த அரசியல் படுகொலைகளை நடத்தியவர்கள் தான், அந்த அரசியலை மறுத்தவர்கள் தான், அதே மக்கள் விரோத அரசியலை இன்றும் கொண்டுள்ளவர்கள் தான், மக்களுக்கான மாற்றுப் பாதை என்ன என்று, எம்மை நோக்கிக் கேட்கின்றனர்? அன்று முதல் இன்று வரை, மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதே, இவர்களின் மொத்த அரசியலாக இருந்து வந்துள்ளது. இதை யாராவது மறுக்க முடியுமா? இன்று அது புலித் தேசியத்தின் பெயரிலும், அரசின் ஜனநாயகத்தின் பெயரிலும் காணப்படுகின்றது. இவர்கள் தான் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். தாம் உருவாக்கி அதை பாதுகாக்கின்ற அரசியல் சூழலை வைத்துக்கொண்டு, எப்படி என்று எம்மை கிண்டலடிக்கின்றனர். உளவியல் ரீதியாக இதைச் சிதைக்கின்றனர்.
இதற்கு எதிரான எனது போராட்டம் மிகக் கடுமையானதாக, ஈவிரக்கமற்றதாக, சமரசமற்றதாக மாறியது. இதை முறியடிக்க தொடர்ச்சியாக அனைத்து முக்கிய நிகழ்வுகள் மீதும் எமது எதிர்வினை அரசியலை முன்வைத்தோம். கருத்து சொல்லாத விடையம் இல்லை என்ற அளவுக்கு, இதை நடத்தினேன். இதனால் தான் இன்றும் இந்தப் பாதை எனது பெயரால் நீடிக்கின்றது.
இந்த போராட்டம் எந்த சமரசமுமின்றி முகத்துக்கு நேராகவே வைக்கப்பட்டது. பலர் அறியப்பட்ட, அன்றாடம் சந்திக்கின்றவர்கள் தான், இந்த எதிர்ப்புரட்சிகர கருத்துக்களின் அரசியல் மையமாக இருந்தனர். எமது இந்த அரசியல் விமர்சனத்துக்கு எதிராக, முதுகுக்கு பின்னான பலத்த அவதூறு எதிர்வினையாக, அவை எனக்கு எதிரான தனிப்பட்ட அவதூறாக மாறியது. இதில் வியப்பேதுமில்லை.
இந்த அரசியல் பணியை தனித்து எடுக்க வேண்டிய சூழலை உணர்ந்த போது, அது மிகக் கடுமையானதாகியது. தனிப்பட்ட அன்றாட வாழ்வின் அடிப்படையான வாழ்வியலில் சில பக்கத்தைக் கூட துறக்க வேண்டி எற்பட்டது. பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கற்கத் தொடங்கிய எலற்றோனிக் படிப்பையே, இடையில் கைவிட வேண்டி ஏற்பட்டது. இலங்கையிலும் இதேபோல் தான், பல்கலைக்கழகக் கல்வியை இடையில் கைவிட வேண்டியநிலை ஏற்பட்டது.
பொதுவான அரசியல் பணி தடைப்படும் சூழலை தவிர்க்கவே, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் எலற்றோனிக் கல்வியை இடைநடுவில் நிறுத்தினேன். இப்படி என்னைச் சுற்றிய வாழ்வில், அரசியலை முதன்மைப்படுத்தி பலவற்றை தவிர்த்தேன். இப்படி இந்தப் போராட்டம் வெளியுலகுடனும், எனது குடும்ப அலகுக்குள்ளும் கடுமையானதாகியது. அவை நெருக்கடி நிறைந்ததாகவே இருந்தது, இருக்கின்றது. எனது இந்தப் போராட்டத்தை தனிப்பட்ட உடல்சார் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து, மிகக் கடுமையான இடைவிடாத உழைப்பாக மாற்றினேன். இந்தப் போராட்டத்தின் வடிவமாக இருந்த கருத்தை வெளியிடுவதற்கும், எனது குடும்பத்தின் வாழ்வுக்காகவும், நானே உழைக்க வேண்டியிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கருத்தியல் ரீதியாக ஏற்ற இறக்கத்துடன், தோழமையும் ஆதரவும் எமக்கு இருந்தது. ஆனால் இவை பொருளாதார ரீதியாக அல்ல. இது எனது தனிப்பட்ட உழைப்பை மேலும் கடுமையாக்கியது. எனது குடும்ப உறுப்பினருடனான உறவுகளை கூட இது மட்டுப்படுத்தியது. குழந்தைகளை வளர்ப்பதில், வழிகாட்டுவதில் எனது பங்கை கூட மட்டுப்படுத்தியது.
இந்தப் போராட்டத்தை ஏன் நான் தனித்தே நடத்த வேண்டியிருந்தது. எனது மக்களின் விடுதலையின் பெயரில், எனது மக்களுக்கு எதிராகவே அனைத்தும் நடந்து வந்தது. இதை யாரும் பேச முன்வராத நிலையில், சிலவற்றை மட்டும் உள்நோக்குடன் சிலர் எதிர்க்கின்ற சூழலில், அனைத்தையும் அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. பலர் இதை பைத்தியக்கார வெட்டி வேலையாக பார்த்தனர். சிலர் இதை எள்ளிநகையாடினர். ஊரோடு ஒத்துப் போகக் கோரினர். இதே அளவுக்கு இது குடும்பத்தினுள்ளும், உறவுகள் மத்தியிலும் கூட பிரதிபலித்தது. இந்த உளவியல் நெருக்கடியை மீறியும் நான் போராட வேண்டியிருந்தது.
மக்களின் அவலத்தை எனது சொந்த அவலமாகவே நான் கருதினேன். இந்த அவலத்தின் காரணத்தை தெரிந்துகொண்டு, மௌனமாக என்னால் இருக்க முடியாது. யாரும் பேச முன்வராத மக்களைப் பற்றி, நாம் இடைவிடாது பேசினோம். இப்படி யாரும் பேசவும், பேச முன்வராத நிலையில், நான் மட்டும் இதைச் செய்யவேண்டிய சூழலை நான் தனித்து எதிர்கொண்டேன். இந்தப் போராட்டத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு, இந்த போராட்டத்தில் ஊன்றி நின்றேன்.
இதனால் தான் அரசு–புலி அல்லாத வழிகளில், என்ன தான் தீர்வு என்று மக்களின் எதிரிகள் என்னை நோக்கி கேட்கின்றனர். இது எனது போராட்டத்தின் சரியான திசையையும், எதிரி என்னால் சந்திக்கின்ற பொதுவான அரசியல் நெருக்கடியையும் காட்டுகின்றது. அத்துடன் மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்று எதிரிகளே மீளமீள சொல்லுமளவுக்கு, இந்த கருத்தை நான் தனித்தும் சில தோழர்களின் துணையுடன் பலமாக வைத்து வருகின்றேன். எதிரிகள் சந்திக்கும் அரசியல் நெருக்கடி என்பது, எனது பெயரால் அறியப்பட்ட அரசியல் சொல்லுகின்ற உண்மை தான், எதிரியை திகிலுற வைக்கின்றது. இந்த அரசியல் எதார்த்தத்தை அவர்கள் மறுக்க முடிவதில்லை என்ற உண்மை தான், இந்த கருத்தின் மீதான எனது பலம். இந்தப் அரசியல் பலத்துடன் தான், தனித்தே அனைத்தையும் எதிர்கொண்டேன். மக்களின் வாழ்வுக்கு வெளியில், வேறு எந்த அரசியல் உண்மையம் எதுவும் கிடையாது என்பதால், தனித்தே இந்த வரலாற்றுச் சூழலை துணிச்சலுடன் மக்களுக்காக அவர்களுடன் நின்று எதிர் கொண்டேன்.
மக்களை சிந்திக்கத் தூண்டுவதும், அவர்களின் அரசியல் அறிவு மட்டத்தை உயர்த்துவதும், அதன் மூலம் செயலூக்கமுள்ள அவர்களின் செயலை முன்னெடுக்க வைப்பதுமே, எனது அரசியல் பணியாக இருந்தது. இதை எடுத்துச் செல்வதில் இரண்டு பாசிசங்கள் முற்றாக தடை செய்தன. அரசியல் சீரழிவுவாதிகள் இதற்கு தடை போட்டனர். மொத்தத்தில் மக்களின் அரசியல் அறிவு மட்டம் உயர்வதை யாரும் விரும்பவில்லை. அதை தமக்கேயுரிய வழிகளில் தடைசெய்தனர். தமது எதிர்ப்புரட்சி அரசியலால் மக்களை சிறையிட்ட நிலையில், தனித்தே மக்களை சென்று அடைவதற்காக அனைத்து வழிகளிலும் முயன்றேன். எனது உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினேன்.
கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் என்பதை, என்னுடன் தோழமை கொண்டவர்கள் கூட ஆழமாக புரிந்து, அதை ஒரு அரசியல் செயலாக செய்யத் தவறியுள்ளனர் என்ற உண்மையும் இங்கு உள்ளது. அரசியல் வேலை என்பது என்ன என்ற அடிப்படையை, உணர்வு பூர்வமாக உள்வாங்கி அதை ஒரு செயலாக கொண்டு செயல்படுவதில்லை என்பதே இதன் பின்னுள்ள அரசியல் உண்மை.
மக்களை சிந்திக்க வைத்து, அதனடிப்படையில் செயல்படத் தூண்டுவது தான் மக்கள் போராட்டத்துக்கான முதல்படி.
தமிழ் மக்களை அணுகுகின்ற அனைத்து வழிகளும், முட்புதர்கள் நிறைந்தவை. இங்கு வழித்தடங்கள் எதுவும் கிடையாது. இங்கு பாசிச வெறியாட்டங்களும், எதிர்ப்புரட்சிகர அரசியல் சூழ்ச்சிகளும் நிரம்பிய ஒன்றாக உள்ளது. மக்கள் எந்த அறிவுசார் துறையிலும் சிந்திக்க முடியாத வகையில் அவர்களை சிறையிட்டுள்ளனர். இதை தனித்தும், தனிமையான சூழலிலும், எதிர்கொண்டே போராட வேண்டியிருந்தது.
மறுபக்கத்தில் அறிவுசார் துறையில் மக்களுடன் உறவுகொள்ள, நாம் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கற்காமல் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. கற்றலும் கற்றுக் கொடுத்தலும் தொடர்ச்சியான வாழ்வியல் முறையாக எம்மை நாமே ஒழுங்குபடுத்தி கொள்ள வேண்டியிருந்தது.
ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், பகுத்தாய்வாளர்கள் என்று எத்தனை பேரை தம்மை எமது சமூகத்தின் முன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர்கள் மக்களின் எதார்த்த வாழ்வு மீது மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை. தமது அறிவை மக்களைச் சார்ந்து நின்று, அவர்களை செயலுக்கு வழிகாட்டுவதில்லை.
சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக, பொறுக்கிகளாக செயல்பட, தமது அறிவை பயன்படுத்துகின்றனர். மக்களை இழிச்சவாயனாக, கேனயனாக கருதுகின்ற வகையில் அறிவை, கேடுகெட்ட வகையில் தான் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஒரு பிரிவினர் சமகாலத்தின் மீது ஊமை வேஷம், கடந்த காலத்தின் மீது ஆய்வு என்று ஊர் உலகத்தையே கேடுகெட்ட வகையில் அணுகுகின்றனர். மக்களின் நிஜவாழ்வை இப்படி இழிவாடியபடி தமது அறிவைப் பயன்படுத்துகின்றனர். எதார்த்தம் மீது வாயை அவர்கள் திறந்தால், மக்களுக்கு எதிரான ஆபாசம் தான் கொட்டுகின்றது. தம்மை மூடிமறைக்க, வாயைத் திறப்பதில்லை.
இவர்கள் கடந்தகாலத்தின் மக்களின் எதிரியைச் சாடும் இவர்கள், எதார்த்தம் மீது இதைச் செய்வதில்லை. வாயைத் திறந்தால், அது மக்களுக்கு எதிரான பிற்போக்கு பாசிசக் கும்பல்களின் வாணீராகவே வடிக்கின்றனர். கடந்த காலத்தைச் சொல்லி, எதார்த்தத்தில் அறிவுசார் புத்திஜீவியாக வாழ்ந்தபடி, எதார்த்தம் மீது பச்சோந்திகளாக வாழ்கின்றனர். எமது மக்களின் துன்ப துயரங்களுக்கு, அறிவுசார் புத்திஐPவிகளின் துரோகங்களுக்கும் முழுமையான பங்குண்டு.
இந்த அறிவுசார் புரட்டுகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆளுமையை வளர்க்க, நான் கற்றுக் கொள்ள வேண்டியிருத்தது. இதற்காக கடுமையாக படிக்க வேண்டியிருந்தது. நூல்களை சொந்த உழைப்பிலேயே வாங்க வேண்டியிருந்தது. புலம்பெயரும் முன் பெரிதாக எழுத எழுதியிராத நான், எழுத்துத்துறையில் வளர வேண்டியிருந்தது. அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில், போராட்டத்தை பல தளத்தில் நடத்த வேண்டியிருந்தது. இன்று என்னிடம் மாற்றுத் தீர்வைக் கேட்கின்றனர்.
மாற்றுத் தீர்வு என்ன?
என்னை நோக்கி எழுப்பும் இந்த கேள்வி, முக்கியமாக இரண்டு தளத்தில் முன்வைக்கப்படுகின்றது.
1. மக்கள் பாதை சாத்தியமில்லை என்று சொல்லுகின்ற எதிரியால், இதற்கு எதிராக எழுப்பப்படுகின்றது.
2. முற்றாக எதிரியுடன் இல்லாத ஆனால் உடனடி விளைவைக் காணவிரும்பும் அரசியல் ஊசலாட்டத்தில் இருந்து வருகின்றது.
யார் மக்கள் பாதை சாத்தியமில்லை என்று கூறுகின்றானோ, அவன் தான் எதார்த்தத்தில் மக்கள் பாதையை அழித்துக்கொண்டு இருக்கின்றான். அரசு-புலி என இரண்டும், இதற்கு அப்பால் இலக்கியம் அரசியல் என்று பேசுகின்ற ஆனால் மக்களின் வாழ்வியலுடன் அதைப்பேச மறுக்கின்ற சீரழிவுவாதிகள் தான் மக்களின் முதல் தரமான எதிரி. மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர்கள், அவர்கள் எதார்த்தத்தில் எமக்கு அக்கபக்கமாகவே வாழ்கின்றனர்.
மக்கள் போராட்டம் என்பது
1. அரசு-புலி மற்றும் சீரழிவுவாதிகளுக்கு எதிராக நேர்மையாக போராடாமல், உண்மையாக மக்களுடன் யாராலும் நிற்க முடியாது.
2. எதார்த்தம் மீது போராடாமல் மக்களுடன் யாரும் நிற்க முடியாது.
3. அனைத்தையும் மக்களில் இருந்து பார்க்காமல், உண்மையான ஒரு மனிதனாக ஒருவனால் இருக்க முடியாது.
4. வாழ்வின் முரண்பாடுகள் மீது, சமூக கொடுமைகள் மீது, ஒடுக்குபவனின் பக்கத்தில் நிற்காமல், ஒருநாளும் மொத்த மக்களுடன் நிற்க முடியாது.
5. மக்களுக்காக போராட முன்வராதவனை, அதை சாத்தியமில்லை என்பவனை, எதிரி என்பதை ஏற்காதவன், மக்களுக்காக ஒருநாளும் உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது.
இப்படி மக்களுடன் நிற்றல் என்பது, கொள்கையளவில் ஏற்று அதை நடைமுறைப்படுத்துவது தான். தீர்வு என்பது இதில் தான் அடங்கியுள்ளது. மக்களை எந்த வழியிலாவது அணுகுவது தான். எது சாத்தியமோ, எது நடைமுறைப்படுத்த முடியுமோ, அதை மக்களுக்காக முன்னெடுத்தல் தான்.
மக்களின் நலனை பேசும் பொருளாக எடுத்தல். அவர்களுடன் அதை பேசுதல். அவர்களிடம் கற்று, கற்றதை மீள எடுத்துச் செல்லுதல். சூழல் எவ்வளவு தான் எமக்கு எதிராக இருந்தாலும், ஒரு அடியைத்தன்னும் முன்னால் வைக்க முடியாவிட்டாலும், இதற்கு வெளியில் மாற்றுக் கிடையாது.
நான் தனித்து இந்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தியிருக்கின்றேன். இந்தப் போராட்டம் என்னால், எனது பெயரால் இன்று அறியப்படுமளவுக்கு இது நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நீங்கள் எத்தனை பேர் என்னுடன், அன்றும் இன்றும் மனப்ப+ர்வமாக இணைந்து நிற்கின்றீர்கள்? இந்தக் கருத்தை எத்தனை பேர், உங்கள் கருத்தாக மாற்றி, அதை மக்களிடம் எடுத்து சென்றீர்கள்? ஒரு துண்டுப் பிரசுரமாக, ஒரு கருத்தாக, ஒரு ஈமெயிலாக, நூலாக, எதைத்தான் நீங்கள் ஊக்கமுடன் ஒரு அரசியல் பணியாக செய்தீர்கள்? சொல்லுங்கள்?
என் பற்றிய குறுகிய அபிப்பிராயங்கள் (இவை பெரும்பாலும் எதிரியால் கட்டமைக்கப்பட்டவை), என் கருத்து பற்றி வளர்த்துக்கொள்ளும் சுய முரண்பாடுகளும் அதை விவாதமாக்குவதும், எதுவும் செய்யாமல் இருக்கும் செயலற்ற சோம்பேறித்தனம், மக்களுக்கு உழைக்க எதுவுமில்லாது வெற்றிடத்தில் தாம் இருப்பதாக பாசாங்கு செய்வது, என்னத்தை செய்ய முடியும் என்று புலம்புவது, நடக்க முடியாத செயல் என்பது, இப்படி எத்தனை. என்னுடன் உடன்பாடு கண்டவர்கள் மத்தியில் கூட, இதுவே எதார்த்தமாக உள்ளது. இப்படி மக்களின் எதிரி எல்லாவற்றையும், தனக்கு ஏற்ப, தனது நிகழ்ச்சிக்கு ஏற்ப பயன்படுத்துகின்றான்.
மக்களிடம் செல்லும் பாதைகள் பல உண்டு. அதற்காக முதலில் உழைக்க வேண்டும். மக்களின் எதிரிகள் மக்களுக்கு எதிராக செயல்படுவதில் உள்ள சுறுசுறுப்பான செயலூக்கமுள்ள எதிர்ப்புரட்சியை முறியடிக்க, தனித்து எனது உழைப்பு மட்டும் போதாது. ஒரு சில தோழர்களின் ஒத்துழைப்பு மட்டும் போதாது. எனது குடும்பம், எனது பிள்ளை என்று உழைப்பது போல், எனது சமூகத்துக்கு உழைக்க எத்தனை பேர் தான் உண்மையாக முனைகின்றீர்கள். இங்கு தான் சமூகத் தீர்வுகள் காணப்படுகின்றது.
பி.இரயாகரன்
01.06.2008