ரி. பி.சி.யின் மாற்று என்பது புலிகளை ஒத்ததாகவே இருக்கும். இதை மறுத்துரைக்கும் அரசியல் நேர்மையிருந்தால், மக்கள் நலன் என்று ஒன்று உங்கள் யாரிடமாவது இருந்தால் அதைத் தெளிவாக வைக்கும்படி அறைகூவல் விடுகின்றோம். முடியுமா? மக்கள் நலன் என்று ஒன்று இல்லாத எல்லா நிலையிலும், இது சாத்தியமில்லை. இவர்கள் விரும்புவது போல், புலிகளை அழிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டால் என்னதான் நடக்கும்? அவர்கள் எதைத்தான் உருவாக்குவார்கள்? இதை அம்பலப்படுத்திய எனது கட்டுரைக்கு, எதிர்வினையற்ற முனைந்த ரி.பி.சி. அரசியல் விவாதக்களம், மூச்சுக் கூட விடவில்லை.
14.07.2005 அன்று ரி.பி.சி.யில் சிவலிங்கம் ரி.பி.சி. தனக்குத்தானே போட்ட ஜனநாயக (நாய்) வேஷம் கலைகின்றது என்ற எமது கட்டுரையில் (இந்த நூலில் இதற்கு முந்திய கட்டுரையாகும்.) இருந்து ஒரு பகுதியை எடுத்து வாசித்து, இதற்கு எதிராகக் கருத்துரைக்கும்படி கோரினார். ஆனால் யாரும் அது பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் சிவலிங்கம் அதை வாசிக்கும் போது, 300 மொழி பேசும் லண்டன் மக்களின் கலாச்சாரத்தைப் பற்றியும், லண்டனில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும் கூறி அதன் பின்னால் நின்று அரசியல் விபச்சாரம் செய்ய முயன்றார். "பயங்கரவாதம்' என்ற கூற்றின் ஊடாக ஏகாதிபத்தியம் கையாளும் அடக்குமுறையையும், இழிவான பிரச்சாரக் கொச்சைத்தனத்தையும் அதன் விளைவுகளையும் நாம் விமர்சித்தோம். இதற்கு அவர் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதா? என தாம் விரும்பியவாறு விளக்கம் கூறினார். இவர்கள் தங்களைத் தாங்களே முற்போக்குவாதிகளாகவும், மார்க்சியவாதிகளாகவும் கூறித் திரிவதாகவும் தூற்றினார். நாங்கள் எப்போது? எங்கே? அப்படி கூறியுள்ளோம். எமக்கு எதிரான எதிர்நிலை விமர்சனங்கள் தான் இப்படி எம்மை அடையாளப்படுத்தி நிற்கின்றன.
அவர் இணையத்தையும் எனது பெயரையும் குறிப்பிடாது வாசித்த எமது கட்டுரையின் பகுதியைப் பார்ப்போம். ""குண்டுவெடிப்பைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் ரி.பி.சி.யும் அதன் நேயர்களும், பிரிட்டனின் அரசு பயங்கரவாதத்தை தான் ஜனநாயகம் என்கின்றனர். உலகெங்கும் குண்டுவீசி அழிக்கும் ஏகாதிபத்தியத்தின் கால்தூசைத் துடைக்கும் இந்தக் கும்பல்தான், புலிகளை அழிக்க ஏகாதிபத்திய ஆயுத வன்முறையைப் புலிகள் மேல் ஏவ அறைகூவல் விடுக்கின்றனர். ஈராக் மக்களை மீட்பதாகக் கூறிக் கொண்டு சென்றவர்கள், அங்கு பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது முதல் பல பத்தாயிரம் மக்களைக் கடந்த ஒரு வருடத்தில் நரவேட்டையாடி கொன்றுள்ளனர்.'' இந்தப் பகுதியை மட்டும் தனது தேவைக்கு ஏற்ப வாசித்துக் காட்ட முனைந்தார். அந்தக் கட்டுரை ரி.பி.சி.யின் நாய் வேஷத்தை அம்பலப்படுத்துகின்றது. அதை மூடிமறைக்கவே முனைந்தார். இதில் இலங்கையில் ஏகாதிபத்தியப் படைகள் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்த ரி.பி.சி.யின் மக்கள் விரோத நிலையை அம்பலப்படுத்தும் போது, சிவலிங்கம் வாசித்த பகுதி உதாரணமாகக் காட்டப்பட்டது.
இதிலும் நாம் எங்கேயாவது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஆதரித்துள்ளோமோ? அல்லது இந்தக் குண்டு வெடிப்பாளர்களின் அரசியல் நடத்தையை ஆதரித்துள்ளோமா? கட்டுரையின் உள்ளடக்கம் லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பானவையல்ல. மாறாக, ரி.பி.சி. விமர்சகர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததைப் பற்றியும், புலிகளை அழிக்க புலிகள் மேல் ஏகாதிபத்தியங்கள் ஆயுத வன்முறையை ஏவவேண்டும் என்ற கருத்து மீதான விமர்சனமாகவே எனது கட்டுரை அமைந்தது. ஏன் இதே குமாரதுரை 14.7.2005 அன்று தனது அரசியல் கருத்துக்களின் முடிவில், மேற்கு நாடுகள் தலையிட வேண்டும் என்றார். அதே மக்கள் விரோத பல்லவி, அதே கோரிக்கை. 1987இலும் புலிகளை அழிக்க இந்தியத் தலையீட்டை இப்படித்தான் இந்தப் புல்லுருவிக் கூட்டம் கோரியது. ஆனால் மக்கள் சந்தித்த கொடூரத்தை முறிந்த பனைகள் என்ற நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பாக தனிக் கட்டுரை ஒன்றை, விரைவில் எமது இணையத்தில் வெளிவரவுள்ளது. இது நிற்க. லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பாக எனது கருத்துக்களை தமிழ் மணம் விவாதக் களத்தில் தெரிவித்து வந்துள்ளோம். குறிப்பாக http://tamilarangam.blogspot.com/2005/07/blog-post 08.htmlஎன்ற தளத்தில் 08.07.2005இலும், 10.8.2005இலும் தெளிவாக கருத்தைப் பதிவு செய்துள்ளேன். ஏன் இதை ஒட்டிய ஒரே கருத்தைக் கொண்ட மற்றொரு விவாதத்தளத்தில் http://thoughtsintamil/blogspot.com/2005/07/blog-post112075679868009412.html#comments 10.7.2005 10.7.2005இலும் எமது கருத்தைப் பதிவு செய்துள்ளோம். தமிழ் மணத்தில் நாம் நடத்தும் விவாதங்கள் தமிழரங்கத்தின் அன்றாட விவாதங்களின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் வைக்கப்பட்ட கருத்துக்களை என்னவென மீண்டும் பார்ப்போம். ""பிரிட்டனில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் தெரிவைக் குண்டுவைத்தவர்கள் தெரிவு செய்தவையல்ல. அதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான், தனக்குத் தானே தெரிவு செய்தது. இன்று மேற்கு நாடுகளில் குண்டுவைப்பவர்கள், பிறப்பில் அந்த உணர்வுடன் பிறந்தவர்களல்ல. மாறாக ஏகாதிபத்தியங்கள் உலகை அடக்கியாள விளைந்ததன் எதிர்வினைகள் தான் இவை. உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடுவதன் மூலமே, தமது சொந்தப் பணப்பைகளை நிரப்பிக் கொள்கின்றன. இதன் மூலம் தமது சொகுசு வாழ்க்கையைக் கட்டமைக்கின்றனர். காலனிகளாகவும், அரைக் காலனிகளாகவும், நவகாலனிகளாகவும் உலகைப் பகிர்ந்து, அந்த மக்களின் பிணங்களின் மேல் தமது சொந்த சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பீற்றுகின்றனர்.
குறிப்பாக இது போன்ற தாக்குதல்களை இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி தூற்றுகின்றனர். திட்டமிட்ட வகையில் இஸ்லாமிய விரோதப் பிரச்சாரத்தைக் கட்டமைக்கின்றனர். இஸ்லாமிய மக்கள் மேல் திட்டமிட்ட குரோதத்தை, மேற்கு நாடுகளின் மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?
இதற்கு பின்னால் ஒரு சந்தை, ஒரு வர்த்தகம், ஒரு சொகுசு வாழ்க்கையே மண்டிக் கிடக்கின்றது. எண்ணை வர்த்தகம் தான்குண்டு வெடிப்பின் மூலமாக உள்ளது. உலகில் எண்ணை மீதான கட்டுப்பாடுதான், உலக ஆதிக்கத்துக்கு ஆணிவேராக உள்ளது. இதற்குள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, எண்ணை வள நாட்டு மக்களில் பட்டு எதிரொலிக்கின்றது. எண்ணை வளங்கள் குவிந்துள்ள நாடுகள் தற்செயலாகவே முஸ்லீம் நாடுகளாக இருப்பதால், எதிர்வினையும் இஸ்லாமிய மதவடிவத்தில் எதிரொலிக்கின்றது அவ்வளவே. இதற்கு வெளியில் இஸ்லாமிய மதம் மேற்கு ஜனநாயகக் கனவான்கள் கூறுவது போல், விசேடமான வன்முறையைக் கொண்டவையல்ல.
எல்லா மதங்களுமே வன்முறை சார்ந்தவைதான். இதில் தனிப்பட்ட மனிதனின் வழிபாட்டு உணர்வை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் தனிமனிதனின் வழிபாட்டு உணர்வைப் பயன்படுத்தி செயல்படும் மதங்கள் அனைத்தும், வன்முறையை அடிப்படையாகக் கொண்டவைதான். இது குறுகிய வட்டத்தில் தொடங்கி விரிந்த உலகளாவிய வடிவம் வரை செயல்படுகின்றது.
ஒரு நாட்டின் மேலான அன்னியப் பாதிப்புகளை எதிர் கொள்ளும் போது சமூக விழிப்புணர்ச்சி பின்தங்கிய ஒரு நிலையில் ஆதிக்கத்தில் உள்ள மதங்கள் எதிர் வினையைத் தன்னகத்தே எடுத்துக் கொள்கின்றது. இதன் பிரதிபலிப்பே லண்டன் தொடர் குண்டுவெடிப்பு.
உள்ளடக்க ரீதியாக இது பயங்கரவாதமாக உள்ளது என்பது எந்தவிதத்திலும் பிரிட்டிஷ் அரசு பயங்கரவாதத்தை விட மோசமானவையல்ல. பிரிட்டிஷ் அரசு பயங்கரவாதங்கள் மிகவும் கொடூரமானவை. பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்றபடிதான், அது உயிர் வாழ்கின்றது. அது தன்னைத்தான் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கவசங்களால் போர்த்தியபடி தான் உலவுகின்றது. மனித உழைப்பைக் கொள்ளையிடவும், தேச வளங்களைச் சூறையாடவும் என்ற இலட்சியங்களுடன் தான் உலகை அடிமைப்படுத்தினர். இதன் எதிர்வினைகள் அனைத்தும் அடக்கியாள நினைக்கும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் இருந்து பிரதிபலிக்கின்றது.
இந்த நிலையில் எதிர்வினைகளைச் செய்பவர்கள் அடிப்படைவாத உள்ளடக்கத்துடன், மக்களைப் பற்றி கவலைப்படாத அராஜக வழிகளில் களமிறங்குகின்றனர். ஈவிரக்கமற்ற மனித விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு, கண்மூடித்தனமான எதிர் தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதல்களை அரசு பயங்கரவாதத்தின் ஊற்று மூலங்களில் அல்ல, உழைத்து வாழும் ஏழை மக்களின் அன்றாடப் போக்குவரத்துகளில் நடத்துகின்றனர். இதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதுடன், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நியாயமான உணர்வுடைய மக்களின் கருத்து நிலைக்குக் கூட குண்டு வைத்து விடுகின்றனர்.
ஏகாதிபத்தியம் உலகை ஆளத் துடிக்கும் ஆக்கிரமிப்புகளை நடத்தும் இன்றைய நிலையில், அதற்கு எதிராக மேற்கு நாட்டு மக்கள் நாளந்தம் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதை பிரிட்டிஷ் மக்களும் தொடர்ச்சியாகவே செய்கின்றனர். அன்று குண்டு வெடிப்பில் கொள்ளப்பட்ட அப்பாவி ஏழைப் பொது மக்கள் கூட, இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற்றவராகவோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவராகவோ நிச்சயமாக இருந்திருப்பர். இதன் விளைவு என்ன? எதிரியல்லாத மக்கள் மேல் குண்டு வெடிப்பை நடத்துவதன் மூலம், மக்களை எதிரி நிலைக்குத் தள்ளிவிடுவதையே செய்கின்றனர். இதன் மூலம் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு எதிராக மாறுவதைத் தடுத்து விடுகின்றது. இதன் மூலம் அரசு பயங்கரவாதங்கள் கடுமையான எதிர்ப்பின்றி, உலகளவிய ஆக்கிரமிப்புகளைத் தொடர்வதை நியாயப்படுத்திவிடுகின்றது. சொந்த நாட்டிலும், அன்னிய நாட்டிலும் மக்களின் அடிமைத்தனத்தை இலகுவாகச் செய்வதற்கு இவை துணையாகின்றது.
இப்படித்தான் அக்கட்டுரை எழுதப்பட்டது. குறிப்பாக எமது கட்டுரை அப்பாவி மக்கள் பற்றி நீங்கள் பார்ப்பதை விட மற்றொரு கோணத்தில் உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். ரி.பி.சி. மீதான எமது விமர்சனத்தில் குழப்பத்தைத் தெளிவுபடுத்த முன்னைய செப்டெம்பர் 2 தாக்குதலை நாம் எப்படி பார்த்தோம் என்பதை தெரிந்து கொள்ள, இணைப்பு கொடுத்து இருந்தோம். இவை எதுவும் சிவலிங்கத்தின் கண்ணுக்கு ஏனோ தெரியவில்லை.
மாறாக விடயத்தைத் திரித்து காட்டவே முனைகின்றார். ரி.பி.சி. பற்றி எழுப்பிய எமது அடிப்படையான கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. மாறாகக் குண்டு வெடிப்பை ஒரு பக்கமாகப் பார்த்து, அதைப் பயங்கரவாதமாகப் பினாற்றுவதே நிகழ்கின்றது. குண்டு வெடிப்பாளர்கள் குண்டுவெடிப்பை அவர்களாகவே தேர்ந்தெடுத்தவையல்ல. எல்லா நிகழ்ச்சிகளும் காரணகாரியத்துடன் தொடர்புடையவை. எதுவும் வெற்றிடத்தில் இருந்து தோன்றுபவையல்ல. ஆனால் ரி.பி.சி.க்குத் தனது நிலைப்பாடுகள் அனைத்துக்கும் இவை அவசியமற்றதாக மாறிவிடுகின்றது.
14.07.2005 ரி.பி.சி. விவாதக் களத்தில் வந்த ஒருவர், இன்றைய படுகொலை அரசியலுக்குக் கூட்டணியின் அன்றைய நிலைதான் காரணம் என்றார். இன்றைய நிலைக்குக் கூட்டணியே தனது சொந்த அரசியல் ஊடாகப் பிரபாகரனை வளர்த்தெடுத்தது என்ற காரணத்தைக் கூறினார். இன்றைய புலிகளின் தந்தையே கூட்டணி தான். இதை எமது பல கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன. குறிப்பாக ""கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கினற்து, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.' என்ற எமது கட்டுரை இதைத் தெளிவாகச் சுட்டி நிற்கின்றது. ஏன் அமர்தலிங்கம் தனது மகன் காண்டிபனைத் தலைவராகக் கொண்ட, புலிகளை ஒத்த இயக்கத்தையே தொடங்கி இந்தியப் பயிற்சிகளைக் கூட நடத்திய வரலாறு எம்முன் நிர்வாணமாகவே உள்ளது. ஆகவே வெறும் புலிகள், பிரபாகரன் என்று விடையத்தைக் குறுக்கி அணுகுவது தவறானது. இது உள் நோக்கம் கொண்டது. இதே போன்று தான் லண்டன் குண்டு வெடிப்பும். அப்பாவி மக்கள் என்று மட்டும் பார்த்தால், பிரச்சினை மற்றொன்றாக மாறிவிடும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவது, எந்த விதத்திலும் அப்பாவி மக்களுக்கு எதிரானதல்ல. இது போன்ற குண்டு வெடிப்புகள் ஏன் லண்டனில் நடத்தப்படுகின்றது என்பதை, ரி.பி.சி. ஒரு நாளும் எழுப்பப் போவதில்லை. இந்த குண்டு வெடிப்புகளுக்கு ஏகாதிபத்தியக் கொள்கைகள் தான் காரணம் என்பதைக் கண்டிக்க தயாரற்ற நிலையில், அப்பாவி மக்கள் பற்றி மூக்கால் சிந்தும் ஜனநாயகம், ஏகாதிபத்தியக் கொள்கை(ளை)க்குக் கம்பளம் விரித்துபடுக்க விடுவதுதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளை அழிக்க ஏகாதிபத்தியப் படைகள் அங்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதுதான். இதை நான் மட்டும் தான் விமர்சித்துள்ளேன். இது என்ன தீர்வைத் தரும்? எப்படித் தீர்வைத் தரும்? அல்லது இது ஒரு தீர்வா?
சிங்களப் பேரினவாதமும் யுத்தம் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று மார்பு தட்டுகின்ற அதே கொள்கையைத் தான். ஏகாதிபத்தியப் படைகள் மூலம் கோரப்படுகின்றது. இதன் மூலம் புலிகளை அழித்துவிட முடியுமா? இப்படி புலியெதிர்ப்பு கும்பல் கூறுவதன் பின்னுள்ள அரசியல் மக்கள் நலன் கொண்டதா?
ஏகாதிபத்தியத் தலையீடுகளின் மூலம் ஒருநாளுமே ஒரு போராட்டத்தை அழிக்க முடியாது. போராட்டம் ஈராக்கில் நிகழ்வது போல் மற்றொரு பரிணாமத்தில் விரிவடையும் என்பதே உண்மை. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு, ஈராக்கிய குழுக்களுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவை விட மிக மோசமாக இருப்பதால், மட்டும் தான் புலிகளை அழித்துவிடுவதற்கான சூழலை நாம் இங்கு மறுத்துவிட முடியாது. இந்த ஒரேயொரு காரணத்தினால் மட்டும் தான் புலிகளை அழிக்கும் ஒரு சூழல் ஏகாதிபத்தியத்துக்குச் சாதகமாகக் காணப்படுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியங்கள் புலிக்குப் பதிலாக ஆயுதம் ஏந்திய தமிழ்க் கூலிக் கும்பலைத் தான் உருவாக்கும். இதுதான் ஏகாதிபத்திய வரலாறு. எங்கும் இதுதான் நடந்துள்ளது. இந்தியா இலங்கையை ஆக்கிரமித்த போது ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற கூலிக் குழுவைத்தான் வளர்த்தது. இது மக்களுக்கு எதிராகப் புலிகளைப் போல் இயங்கும். இதனால் புலிகள் பக்கம் மக்கள் ஆதரவு திரளும் வாய்ப்பை இது நிராகரித்துவிடவில்லை. புலிகளின் தலைமையைக் குறிப்பாக அழிப்பதன் மூலம், புலிகளை இல்லாதொழிக்கும் முறைமையைத் தான் ஏகாதிபத்தியம் கையாளும்.
இந்த நிலையில் ரி.பி.சி. சார்பாக அவர்களின் சகாக்கள் முன் மொழிந்த ஏகாதிபத்தியத் தலையீட்டுக் கோரிக்கையை ரி.பி.சி. எதிர்க்கவில்லை. இந்த நிலையில் ஏகாதிபத்தியம் புலிகளைத் தாக்கும்போது, புலிகள் லண்டன் போன்ற நகரங்களில் தற்கொலை தாக்குதலை நடத்துவார்கள். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதான தாக்குதலை நடத்தியவர்கள் தானே இவர்கள். இதுபோன்ற மேற்கு நாடுகள் புலிகள் மேல் தாக்குதலை நடத்தினால், அதன் எதிர்வினையாய் லண்டன் குண்டு வெடிப்பு போன்று புலிகளும் நடத்துவர். புலியெதிர்ப்பு அணிக்கு இது நிச்சயமாகத் தெரியும். ஆனால் இப்படி நிகழும்போது, அப்பாவி மக்கள் இறப்பதையிட்டு இந்தப் புலியெதிர்ப்பு அணிக்குப் பிரச்சனையேயில்லை. அவர்களுக்குத் தேவை புலியை அழித்து, அதற்குப் பதிலாகத் தம்மை ஒத்த கும்பல்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் ஒரேயொரு இலட்சியம். மாறாக அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது, புலிப் பயங்கரவாதம் பற்றியும் அப்பாவி மக்களின் பாதிப்பு பற்றியும் ஒப்பாரி வைப்பார்கள். இதைநாம் சுட்டிக் காட்டுகிறோமே தவிர எந்தவிதத்திலும் இதை ஆதரிப்பதாகக் கொள்ளலாகாது. ஆனால் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இலங்கையில் நடக்கும்போது அப்படித்தான் நடக்கும். இது புலிகளின் வலதுசாரி அரசியலின் உள்ளடக்கமாகும். ரி.பி.சி. நேயரும், ரி.பி.சி.யை கட்டி வளர்த்தவர்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைப் புலிக்கு எதிராக நடத்தக் கோரியபோது, ரி.பி.சி. எந்தவிதத்திலும் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கண்டிக்க அனுமதிக்கவுமில்லை. மாறாக அதை ரி.பி.சி.யும் புலியெதிர்ப்பு அணியினரும் ஆதரிக்கின்றனர். உண்மையில் இப்படி ஒரு ஆக்கிரமிப்பு நிகழும் போது, பிரிட்டிஷ் மக்கள் இதை எதிர்ப்பார்கள். ஆனால் ரி.பி.சி. இதைப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு என்று கூறி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் இணைந்து பிரிட்டிஷ் மக்களையே தூற்றுவார்கள்.
புலிகள் லண்டனில் குண்டு வைத்தால், ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மக்கள் மேல் குண்டா? என்று முக்கால் சிணுங்குவார்கள். இதுதான் இந்த புலியெதிர்ப்பு அரசியலின் சந்தர்ப்பவாத உள்ளடக்கம். குண்டு வெடிப்புகளால் கொல்லப்படும் அப்பாவி மக்களையிட்டு, ஏகாதிபத்திய அரசுக்கு எந்தவிதமான ஒரு அக்கறையும் கிடையாது. ஆனால் அக்கறை இருப்பது போல நடிப்பார்கள். ஏகாதிபத்தியங்களக்கு ஒரேயொரு குறிக்கோள் மட்டும்தான்உண்டு. அது தமது மூலதனத்தைப் பெருக்க, உலகமக்களை மேலும் மேலும் அடக்கியொடுக்குவதுதான். இன்று லண்டனில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களைவிட, பல ஆயிரம் ஈராக்கிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது, பிரிட்டிஷ் அரசின் நிலை என்ன? ரி.பி.சி. யின் அரசியல் நிலைதான் என்ன? அப்பாவி மக்கள் லண்டன் மக்கள் மட்டும்தானா? அல்லது வெள்ளையின மக்கள் மட்டும்தானா? அல்லது செல்வத்தைக் கொண்டுள்ள நாட்டு மக்கள் மட்டும்தானா? இப்படி தான் இன்று விளக்கப்படுகின்றது.
இந்த ஏகாதிபத்தியங்கள் குண்டுக்கு மாற்றாக மக்களைக் கொல்லும் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளையே கொண்டுள்ளன. பல ஆயிரம் சொந்த மக்களையே அன்றாடம் கொன்று போடுபவர்கள்தான் இவர்கள் ஊட்டச்சத்து. மற்ற நாடுகளில் இது எல்லையற்றது.
இதை மூடிமறைக்க இது போன்ற குண்டு வெடிப்புகள் ஏகாதிபத்தியத்துக்குத் தேவையானது. இதுதான் மூலதனத்தின் வளர்ச்சிக்கான வைட்டமின் ஆகும். மக்களின் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தவும், அடக்குமுறைகளை மக்கள் மேல் ஏவவும் இது போன்ற வக்கிரமான குண்டு வெடிப்புகள் இந்தப் பொருளாதாரக் கொள்கைக்குத் தேவையானதாக உள்ளது. அரசியல் ரீதியாகச் சிந்தித்து எழும் மக்கள் போராட்டம் அல்லாத வகையில், வெறிபிடித்த வன்முறை கும்பல் நடவடிக்கையைத் திட்டமிட்டே ஏகாதிபத்தியங்கள் உருவாக்குகின்றன. இது அல்கொய்தா முதல் புலிகள் வரை பொருந்தும். லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பான தனிக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
இந்த மாதிரி வன்முறை வெறி கொண்ட குண்டுவெடிப்புகளை நடத்தும் கும்பல்களைத் திட்டமிட்டே ஏகாதிபத்தியங்கள் உருவாக்குகின்றன. சொந்த மக்களை ஈவிரக்கமின்றி அடக்கியொடுக்கவும், உலகளவில் ஆதிக்கம் செலுத்தவும் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் ஏகாதிபத்தியத்துக்கு அவசியமானதாக உள்ளது. இதனுடன் தான் ரி.பி.சி. கைகோர்க்கின்றது.
ரி.பி.சி. கருத்துக்கள் எப்போதும் மக்களுக்கு எதிரானதே. புலிகளின் மக்கள் விரோத அரசியலில் தான், இவர்களின் மக்கள் விரோத அரசியல் உயிர் வாழ்கின்றது. இது பற்றி நான் எழுதிய கட்டுரையான துப்பாக்கி முனையிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகின்றது. (1.2.2005) என்ற கட்டுரை இதை அம்பலப்படுத்துகின்றது.
மாறாக மக்களைப் பற்றி இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்றால், எதையும் சொல்ல வக்கற்றவர்கள். இயக்கங்கள் எதைச் சொன்னதோ, அதை மீள ஒப்புவிக்கின்றனர். அதிகாரத்தை இழந்தவனின் புலம்பலைத் தாண்டி இவை அமையவில்லை. அதற்காக ரி.பி.சி. மீது புலிகளின் அடக்குமுறை செய்வதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. ரி.பி.சி. மீது தாக்குதலைப் புலிகள் நடத்திய போது, ரி.பி.சி. வானொலி அலுவலகத்தைச் சூறையாடிய புலிகளின் காடைத்தனம் என்ற கட்டுரை ஊடாக நாம் எதிர்த்து நின்றோம். இதேபோல் தான் பாரிஸ் ஈழநாடு எரிக்கப்பட்ட போதும் சரி, தினமுரசு பத்திரிகையைத் தடை செய்த போதும் கூட எதிர்த்து சமரில் எழுதியுள்ளோம். உண்மையில் ரி.பி.சி. மக்கள் நலனை பிரதிபலிக்காத ஒரு நிலையிலும் கூட, அதன் மீதான தாக்குதல்களை நாம் எதிர்த்து நிற்கின்றோம். ஏன்? இதுபோன்ற தாக்குதல் மக்களுக்கு எதிரானதாக உள்ள நிலையில் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ளோம். ஒரு பிற்போக்கான நிலையை கொண்டிருந்த போதும் கூட, இதற்கு எதிரான தாக்குதல்கள் மற்றொரு பிற்போக்கான நடவடிக்கையே ஆகும். இது மக்களின் இறுதி மூச்சையும் நிறுத்தக் கோரும் ஒரு பாசிச முயற்சியாகவே நிகழ்கின்றது.
இதைத்தான் நாளைப் புலிகளை அழிக்கும் ஏகாதிபத்தியமும் அதனுடன் சேர்ந்த கைக்கூலிகளும் களத்தில் இறங்கினால் நாம் எதிர்ப்போம். ஏனென்றால் புலிகளை விட மோசமான மற்றொரு பிற்போக்குக் கைக்கூலி ஆட்சி முறைதான் மக்கள் மேல் திணிக்கப்படும். இதை மறுத்து கூற யாருக்கும் துணிவு இருக்காது.
15.07.2005