book _1.jpgகருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற புலிகளின் காடைத்தனங்களே, மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமது சொந்த நடத்தைகளையும், அரசியல் செயல்பாட்டையும் கூட உரிமை கோர முடியாத புலிகள், அன்றாடம் அதையே தமது சொந்த அரசியல் நடத்தையாகச் சமூகத்தின் மேல் கையாளுகின்றனர். அரசியல் அனாதைகளான புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடத்தைகளையே, புனிதமானதாகவும் ஒழுக்கமானதாகவும் காட்டி கட்டமைத்த சமூகவிரோத வக்கிரங்களையே தேசியமாகப் புனைந்து காட்டுகின்றனர்.

 

வழமைபோல் இனம் தெரியாத புலிப்பாணி சூறையாடல், இனம் தெரியாத கொலைகள் எப்படி ஒரு குதூகலிப்புடன் வரவேற்கப்படுகின்றதோ, அப்படியே தான் ரி.பி.சி. அலுவலகம் சிதைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டதைப் புலிகள் கொண்டாடினர். ரி.பி.சி.யைச் சிதைத்த பின் கட்டமைத்த பல கதைகள் அருவருக்கத்தக்கவை. எப்போதும் பெண்களுடன் சம்பந்தப்படுத்தியும் பல அவதூறுகளைப் பொழிந்தும் எதிராளியை முத்திரை குத்தி வக்கரிக்கும், தமிழ்ச் சமூகத்தின் மிக இழிந்த இழிபண்பாட்டினையே இதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். ரி.பி.சி.யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றதன் மொத்த விளைவே கடைகெட்ட காடைத்தனமாக வெளிப்பட்டது.


மக்களிடம் இருந்து அன்னியமான புலிகள், மக்கள் மேலான தமது அதிகாரக் கட்டமைப்பைப் பயங்கரவாதத்தின் மூலமே உலகெங்கும் கட்டமைத்துள்ளனர். இந்தக் கட்டமைப்புக்குப் பின்னால் ஒரு சொகுசான ஒரு திருட்டு வக்கிரத்தையும், ஒரு சொகுசான வாழ்வியல் முறைமையுமே விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரின் பண்பாக்குகின்றது. இதைத் தக்கவைக்கவே அதிகாரத்தையும், மக்கள் மேலான வரைமுறையற்ற அடக்குமுறையையும் தொடர்ச்சியாகக் கையாளுகின்றனர்.


தமிழ் மக்கள் மேலான சிங்களப் பேரினவாதிகளின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் புலிகள், தமிழ் மக்களுடைய முதுகின் மேல் நின்றே அனைத்து சமூக விரோதச் செயல்களையும் செய்கின்றனர். இந்தச் சமூகவிரோத வக்கிரங்களை இனம் தெரியாத, அடையாளம் தெரியாத ஒரு நடவடிக்கைகள் மூலம் கோழைகளாக ஒழிந்து நின்று கையாளுகின்றனர்.


வடக்கு கிழக்கில் புலிகளின் படுகொலைகள் மற்றும் கொலைப் பயமுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையிலும், ஒரு இனம் தெரியாத மவுனத்தினைக் கட்டமைத்து, அதில் புலிகள் உயிர்த்து நிற்கின்றனர். இந்த உயிர்ப்பை வடக்கு கிழக்கு அல்லாத இலங்கையின் மற்றைய பகுதிகளிலும், அமைதி சமாதானம் என்ற போர்வையில் அங்கும் உருவாக்குகின்றனர். புலிகளின் அரசியல் செய்வதாகக் கூறும் அரசியல் அகராதி, மற்றவர்களை மிரட்டிக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, நோர்வே என்ற முன்னைய கடற்கொள்ளைகாரர்கள் அனுசரணையாளர்களின் மேற்பார்வையில் செய்கின்றனர்.


இந்த நிலையில் புலம் பெயர் நாடுகளிலும் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு அங்கம் தான் ரி.பி.சி. மீதான சூறையாடல். புலம்பெயர் நாட்டில் சபாலிங்கம், நாதன், கஜன் போன்ற அரசியல் படுகொலைகள் முதல் பல நூறு அடாவடித்தனங்கள் அனைத்தும் இதனடிப்படையில் தான் செய்யப்பட்டது. புலிகள் தாம் சரியென்றுபட்டதைச் செய்த பின்பாக, அதை மூடிமறைக்கும் முயற்சிக்கு எதிரான அனைத்தையும் ஒடுக்கும் முயற்சியே பயங்கரவாத வடிவங்களில் தொடருகின்றது. இவை அநாமதேயமாக உரிமை கோரப்படாத நிலையில், தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையிலேயே புளுத்து நாறுகின்றது. புலிகளின் இந்தச் சமூக விரோதப் பயங்கரவாதத்தை மக்கள் ஆதரிப்பதில்லை. சிறு கும்பலால் மட்டும் ஆதரிக்கப்படுவதால் தான், இவை உரிமை கோரப்படாது விடப்படுகின்றது. கருத்தியல் ரீதியிலும் இதற்கு மக்களின் ஆதரவு ன்மையும், சிறு கும்பலின் கருத்தாக இருப்பதாலும் கூட, புலிகளின் பல நடத்தைகள் உரிமை கோரப்படுவதில்லை. உரிமைகோராத நடத்தைகளை மக்கள் வெறுப்பதால், அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் அனைத்து ஊடகங்களையும் தமது பாசிசப் பயங்கரவாதக் கட்டமைப்புக்குள் ஒடுக்குகின்றனர். இதன் மூலம் நக்கி பிழைக்கும் பினாமி எழுத்தாளர்கள், அதிகாரப்பூர்வமான ஊடக எழுத்தாளராகி விடுகின்றனர்.


இலங்கையில் ஏகாதிபத்தியத் தயவுடன், புலிகளின் இனம் தெரியாத படுகொலை அரசியல் ஊடாகவே, பேச்சுவார்த்தை என்ற பாசிச நாடகத்தை நடத்துகின்றனர். தமிழ் மக்களின் உரிமைகளை விலைபேசி விற்கின்றனர். புலிகள் தமது சொந்த நலன்களையே முதன்மைப்படுத்தி, அதைத் தமிழ் மக்களின் நலனாகப் புனைந்து விடுகின்றனர். இதையே இலங்கை ஊடகங்கள் தமது சொந்த செய்தியாகவே முன்வைக்கின்றது. இப்படி வைப்பதே தேசியம் என்று புது அகராதி எழுதப்பட்டுள்ளது. இவை மீறப்படும் போது, அதைத் தேசிய விரோதமாகக் காட்டி இனம் தெரியாத நடத்தைகள் மூலம் ஒடுக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.


ஆனால் இதைப் புலம் பெயர் நாட்டில் முழுமையாகச் செய்ய முடிவதில்லை. புலிக்கு எதிரான போக்குகள், ஒரு குறுகிய வட்டத்தில் பலமடைந்துள்ளது. இது மக்களுக்கு வெளியில் சில ஊடகத்துறை சார்ந்து காணப்படுகின்றது. இந்தப் போக்கு என்பது புலிகள் எப்படி ஒரு அணியைக் கொண்டுள்ளனரோ, அதேபோல் புலியெதிர்ப்பு பிரிவினரும் ஒரு அணியைக் கொண்டுள்ளனர். இவர்களின் ஒரே அரசியல் புலியை எதிர்ப்பது மட்டும்தான். புலிக்குச் சாதகமான அனைத்தையும் எதிர்நிலையில் நின்று எதிர்ப்பது இவர்களின் அரசியல் சித்தாந்தமாகியுள்ளது. புலிக்கு எதிரான அனைவருடனும் கைகோர்த்துக் கொள்ளும் மக்கள் விரோத அரசியலை ஆணையில் வைக்கின்றனர். புலிக்கும் இவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் கோட்பாட்டு ரீதியில் எதுவும் இருப்பதில்லை.


இதன்போது புலிகளின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தும் இணையங்கள், வானொலிகள் பலமான ஒரு செய்தி ஊடகமாகப் புலம்பெயர் நாடுகளில் ஒரு குறுகிய வட்டத்தினுள் விரிந்து வருகின்றது. அத்துடன் இவை இலங்கைக்குள்ளும் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனால் புலிகளின் பல அடாவடித்தனங்கள் மோசடிகள் மிக வேகமாக அம்பலமாகி வருகின்றது. இந்த வகையில் ரி.பி.சி. வானொலி செய்தியமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி.யின் இதயவீணை செய்திகள் புலிகளின் மோசடி அரசியலுக்குப் பலத்த அச்சுறுத்தலை விடுத்து வருகின்றது. இங்கு புலியெதிர்ப்பு செய்திகளில் கணிசமானவை, புலிகளின் செய்தியைப் போலவே நம்பகமற்றவை. இனம் தெரியாத இணையங்கள் வெளியிடும் கற்பனைச் செய்திகளைக் கூட, இவர்கள் தமது செய்தியாக்குகின்றனர். இதற்கு எந்த ஆதாரத்தையும் கூட முன்வைப்பதில்லை. இதைப் புலிகளின் வழிமுறையில் இருந்தே அதே பாணியில் கையாளுகின்றனர். அடக்குமுறைக்குள், சுதந்திரமான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில், புலியெதிர்ப்பு அணியினர் வெளியிடும் புலிகளுக்கு எதிரான செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கின்றது. இதன் வீச்சு வேகமடைந்து வருகின்றது. இதனால் பல சந்தர்ப்பங்களில் அதைத் தடுத்து நிறுத்தவும், அதில் பணியாற்றுபவர்களை மிரட்டவும், அதன் வாசகர்களை இனம் கண்டு மிரட்டவும், அதை இயக்குபவர்களுக்குக் கொலை பயமுறுத்தலையும் விடுத்தனர், தொடர்ச்சியாக விடுத்தும் வருகின்றனர். இனம் தெரியாத புலிகளின் இந்தப் பகிரங்க நடவடிக்கையும், இதற்கப்பால் இரகசியமான திட்டமிட்ட சதிகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கொலைகார நடத்தை வரை ஒரு விரிந்த தளத்தில் திட்டமிடுகின்றனர். தமிழ் மக்களின் மேலான தமது சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஒரு அங்கமாகவே, ரி.பி.சி. வானொலி நிலையம் சூறையாடப்பட்டு முற்றாகச் சிதைக்கப்பட்டது. ஜனநாயகத்துக்கான மூச்சுகளை வெட்டி சிதையவைக்கும் புலிகளின் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கம் தான் இது.


ரி.பி.சி. மக்களின் நலனுடன் இணைந்து நின்றது அல்ல என்றபோதும் கூட, இதைத் தடுத்து நிறுத்தும் உரிமை மக்கள் விரோதப் புலிகளுக்குக் கிடையாது. அரசியல் ரீதியாக விமர்சித்து அதைச் சுயவிமர்சனம் செய்யவைக்கவும் அல்லாது போனால் அதை அம்பப்படுத்தி மக்களைச் சரியாக அரசியல் மயப்படுத்தும் மக்கள் திரள் அரசியல் வழி மட்டுமே சரியான வழியாகும். மற்றைய அனைத்து வழிகளும் பிற்போக்குத்தனமானவை.


இதற்கு மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிரான தமது சொந்த கறைபடிந்த நடவடிக்கைகளை மூடிமறைத்து விட முடியும் என்று நம்பிய புலிகள், வானொலிக்கு எதிரான அராஜகத்தை இனம் தெரியாத நபர்கள் மூலம் கட்டவிழ்த்துவிட்டனர். உரிமை கோராத காடைத்தனத்தைச் செய்ததன் பின்பாக, தமிழ் மக்களின் எதிரிகள், துரோகிகள், சமூக விரோதிகள் என பல வருணனைகளினூடாகத் தமது சொந்த வக்கிரத்தை வழமைபோல் நியாயப்படுத்தினர். மிகக் கேவலமான வகையில் இணையச் செய்திகளை கூட பரப்பினர். இச்செய்தி அமைப்பில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களாக உள்ள பெண்களைக் கூட இழுத்து, வக்கிரமாக இழிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டங்களின்படி, இவை பாரிய குற்றத்துக்குரியது. ஆனால் இந்தச் சட்டத்தின் காவலர்களுக்கு இது எப்போதுமே விதிவிலக்கு. புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்துக்குக் கூட இது விதிவிலக்கு. பெண்களின் பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தில், ஆணாதிக்கத் தேசியத்தின் உள்ளடக்கத்தில், இவற்றை ஆண்களின் வக்கிரமான கொசிப்பாக்கி அதில் நின்றே ரி.பி.சி.யின் மேலான இந்தக் காடைத்தனத்தை நியாயப்படுத்தினர்.


உண்மையில் ரி.பி.சி. வானொலி நிலையச் செய்திகளின் உள்ளடக்கம், முற்றுமுழுதாகப் புலிகளின் அராஜகத்தின் மேல் தங்கி நின்றுதான் உயிர் வாழ்கின்றது. இதற்குள் தான் ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வுகள் என்ற விசேட விவாதமும் அரங்கேறுகின்றது. இதற்கு வெளியில் மற்றைய புலி சார்பு செய்தியமைப்புகளுக்கும், ரி.பி.சி.க்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இது பொதுவாக புலி சார்பு, புலியெதிர்ப்பு இணையங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கூட அப்படியே பொருந்தும். புலி சார்பு ஊடகங்கள் புலிகளின் அராஜகத்தை ஆதரித்தும் அல்லது மறைமுகமாக அங்கீகரித்தும் இயங்குவதே இதில் இருந்து குறிப்பாக வேறுபடுகின்றது. ரி.பி.சி. புலிகளின் அராஜகத்தை அம்பலப்படுத்துவதன் மூலமே, தன்னைத் தக்கவைத்துள்ளது. மற்றபடி இவர்களுக்கு இடையில் வானொலி உள்ளடக்கத்திலும் பொதுவாக உலகம் பற்றிய பார்வையிலும் மக்கள் பற்றிய அவர்களின் சித்தாந்தத்திலும் கூட எந்த விதத்திலும் வேறுபட்டவையல்ல. புலிகளின் உரிமை கோராத நடவடிக்கைகளையும், புலிகளுக்கு ஆதரவானவற்றை எதிர்த்தும் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு, புலியெதிர்ப்பு அரசியல் தமக்குத்தாமே மகுடத்தைச் சூட்டுகின்றனர். இதனால் கொதித்து நிற்கும் புலிகள், தமது அடியாள் படையாக மட்டும் அரசியல் மயப்படுத்தியுள்ள காடையர்களைக் கொண்டு ரி.பி.சி.யைச் சூறையாடினர்.


உண்மையில் இந்த இரு தரப்பினரும் மக்களின் நலனில் இருந்து ஒரு துளிதன்னும், தமது முரண்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல், எப்படி புலிகளால் சூறையாடப்பட்டு, அழிக்கப்படுகின்றது என்ற உள்ளடக்கத்தில் இருந்து, மாற்றுத் தேசியத்தை முன்வைக்கவில்லை. தமிழ்மக்களின் தேசியத்தைப் பாதுகாக்கவே தாம் போராடுகின்றோம் என்ற புலிகளின் அரசியல் உள்ளடக்கத்தின் பின் உள்ள சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தி, ரி.பி.சி.யோ மற்றவர்களோ தமது கருத்தை முன்வைப்பதில்லை. குறிப்பாகப் புலிகளின் பாசிசச் சித்தாந்தம் எப்படி தமிழ் மக்களின் வாழ்வியல் போக்கில் கலந்து இருக்கின்றது என்பதை இனம் கண்டு, அதில் இருந்து பாசிசத்தைக் களையும் போராட்டத்தை முன்வைப்பதில்லை. மாறாகப் புலிகள் வெளிப்படுத்தும் மனிதவிரோத நடத்தைகள் சிலவற்றை மட்டும் அம்பலப்படுத்துகின்றனர். புலிகளின் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து இவர்கள் கருத்தளவில் கூட வேறுபடுவதில்லை.


அதாவது தமது தனித்துவத்தை மக்களின் நலன்களில் இருந்து உறுதி செய்வதில்லை. உலகமயமாதல் என்ற கட்டமைப்புடன் புலிகளும் சரி, ரி.பி.சி. போன்றவர்களும் சரி ஒன்றுபட்டு நிற்கின்றனர். மக்களுக்கு எதிராக உள்ள உலகமயமாதலின் பொதுவான சர்வதேச நிலைப்பாட்டை இவர்கள் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் சாமரம் வீசி வரவேற்கின்றனர். ஆனால் இதை அடையும் பாதையில் வேறுபடுகின்றனர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்வியல் போக்குடன், இவர்கள் யாரும் நெருங்கி இணைந்து நிற்பதில்லை. மக்களைப் புலிகள் எப்படி நடத்துகின்றனரோ, அப்படியே தான் ரி.பி.சி. போன்றோரும் மக்களை நடத்துகின்றனர்.


மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுடன் இணைந்து நிற்காத போதும், ரி.பி.சி. மீதான புலிகளின் காடைத்தனத்தை யாரும் அங்கீகரிக்க முடியாது. கடந்த 25 வருட எமது தேசிய வரலாறு, தமிழ் மக்களின் துயரங்களின் மேலான இரத்தக் கொப்பளிப்பாகவே இருந்துள்ளது. தேசிய உணர்வுகள் மற்றவனின் தலையைக் கொய்யும் இரத்த வெறியாட்டமாக இருந்துள்ளது. இரத்த வெறிபிடித்த பேய்களே தமிழ் மக்கள் மத்தியில் உலாவின. உலாவி வருகின்றன. தற்போது அது முண்டம் இழந்த இனம் காட்ட முடியாத ஒன்றாகத் தன்னைத் தானே அடையாளம் காட்டுகின்றது. தம்முடன் உடன்பட மறுத்த அனைவருக்கும் மரணதண்டனை முதல் அனைத்து விதமான கொடூரங்களையும் தேசியம் திணித்தது. உண்மையான நேர்மையான மனிதர்கள் உயிர் வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. பாசிச நிர்பந்தங்கள் மூலம் கையாலாகாத்தனத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தி, பலரை எதிரியிடம் சரணடைய வைத்தனர். பின்பு அவர்களைக் கொல்வதைத் தேசியமாகப் பீற்றும் ஒரேயொரு அரசியல் வடிவத்தை மட்டும் நம்பியே புலிகள் அரசியல் செய்கின்றனர்.


ரி.பி.சி. போன்ற செய்தி ஊடகங்கள் மனிதஇனத்தின் உயிரோட்டமான வாழ்வியல் உணர்வுகளுடன் சங்கமிக்க திட்டவட்டமாகவே மறுத்து நின்றாலும், அதன் குரலை நெரிப்பதற்கு எதிராக நாம் மௌனம் சாதிப்பது என்பது பாசிசத்தின் வக்கிரத்தை மெருகூட்டுவதாகவே அமையும். ரி.பி.சி. போன்றவற்றை விமர்சிக்கும் தார்மீகப் பலம், மக்களின் நலன்களுடன் ஒன்றுபட்டு நிற்பவர்களுக்கு மட்டுமே உரியது. பொதுவாக ஜனநாயகத்தின் குறைந்தபட்ச உரிமையை, முரணற்ற வகையில் அங்கீகரிக்க மறுக்கும் யாருக்கும் விமர்சிக்கும் தகுதி கிடையாது. அப்படி செய்வது பாசிசத்துக்குத் துணைபோவதுதான். ரி.பி.சி. போன்ற செய்தி ஊடகங்கள் மக்களுக்கு எதிரானவற்றை நண்பனாகக் (புலிக்கு எதிரான அனைத்தையும் நண்பனாகக் கருதும் போக்கு) கருதும் போக்கை விமர்சிக்கும் போது, விமர்சிப்பவன் மக்களின் நலன்களை உள்ளடக்கிய அரசியலை தெளிவாக முன்வைக்க வேண்டும்.


இதேபோல் தமிழ் மக்களின் நலன்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கருதி ஏகபிரதிநிதித்துவம் கோரும் புலிகள், மக்களின் நலன்கள் எதுவென்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். புலிகளின் நலன்கள் தமிழ் மக்களின் நலன்களல்ல. அந்த நலன்கள் என்பது 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பத்திரிகையில் (சித்திரை இதழ் இலக்கம் 6) பிரபாகரன் கூறியது போல் ""நாம் விரும்புவது உண்மையான நிரந்தரமான ஒருமைப்பாட்டையே, இந்த ஒற்றுமையானது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கட்டி எழுப்பும் இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்'' என்றார். பிரபாகரன் பெயரில் அன்று புலிகளால் தமது பத்திரிகையில் கூறப்பட்ட உள்ளடக்கத்தில் இருந்து தான், எப்போதும் மக்கள் நலனைப் பேணமுடியும். பிரபாகரன் பெயரில் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தி, அன்றைய சமகாலத்தின் எதார்த்தமான சமூகத்தின் போக்கில் இருந்து மக்களைத் திசைதிருப்பி தமக்குப் பின்னால் அணிதிரட்டவே முன்வைக்கப்பட்டது.


அக்காலக் கட்டத்தில் உள்இயக்க முரண்பாடுகளும் சரி, இயக்கங்களுக்கு எதிராகச் சமூகத்தில் எழுந்த போராட்டங்களும் சரி, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் உள்ளடக்கத்தில் இருந்தே எழுந்தன. இதன் போது பல நூறு பேர் உள் இயக்கத்திலும், வெளிகட்டமைப்பிலும் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டனர். புலிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைகள் இனம் கண்டு விரிவாகவே தேடி அழிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் உண்மையான ஜனநாயகம் பற்றி உயர்ந்தபட்சமாய் இனம் காணப்பட்டு அக்கோரிக்கைகளை முன்வைத்து போராடிய காலகட்டம் அக்காலம் மட்டுமே. இன்று ஜனநாயகம் பற்றி மூக்கால் சிந்திப் பிதற்றுவோர் அக்காலகட்டப் போராட்டத்தையேக் கொச்சைப்படுத்தியவர்கள்தான். இன்றுகூட அந்த அரசியல் போக்கைக் கொச்சைப்படுத்தி நிராகரிக்கின்றனர். ஏன் இன்று ஜனநாயகம் பேசும் பலரும், அன்று பரட்சிகர பாட்டாளி வர்க்கம் என்ற உள்ளடக்கத்தில் போராடியவர்களைக் கொன்றவர்கள் அல்லது கொல்வதற்குத் துணை நின்றவர்கள்தான். அதிகாரம் இழந்து போன இவர்கள் இன்று வரை மறக்காமல், அந்தப் புரட்சிகர அரசியலை எட்டி மிதிப்பவராகவே உள்ளனர். பல இணையத்தளக் கட்டுரைகளில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க அரசியலை, புலிகளின் பாசிசத்துக்கு ஒப்பிட்டுக் கட்டுரை வடிக்கின்றனர். புலி பாசிசத்தை ஒப்பிட பயன்படுத்தும் சர்வதேச உதாரணங்கள் கூட, புரட்சிகர வரலாற்றுப் பக்கங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையின் அவதூறு கட்டுக் கதைகளில் இருந்து எடுத்த ஒப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே தூற்றுகின்றனர். கம்யூனிச எதிர்ப்பும்,புரட்சிகர வரலாற்றைத் திரிப்பதிலும் கூட, புலியெதிர்ப்பு அரசியல் செய்வோர் புலிகளுடன் முரணற்ற வகையில் செயல்படுகின்றனர். புலியெதிர்ப்பு அரசியல் இதையே ஆணையில் வைத்து, புலிகளை விட மேவி நிற்கின்றது. இதை முந்திய தாயக இதழ்களிலும் காணமுடியும். உதயம் பத்திரிகையும் அவர்களின் இணையமும் தொடர்ச்சியாக வெளியிடும் "விலங்குப் பண்ணை' நாவல் தொடர், ஒரு ஏகாதிபத்தியப் பிரிட்டிஷ் உளவாளியால் திட்டமிட்டு எழுதப்பட்டதே. 1984இல் மற்றொரு நாவலில் ""பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்'' என்ற பிரபலமான வாசகத்துடன் வெளியானது. இந்த இரண்டு நூலையும் உலகெங்கும் விநியோகிக்கும்படி தனது தூதரகங்களுக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. தேனீயில் புனைபெயர்களில் எழுதும் அழகலிங்கம், புரட்சிகர வரலாற்றை, சர்வதேச வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, அதைப் புலிகளின் பாசிசத்துக்கு ஒப்பிட்டு எழுதுகின்றார். ரி.பி.சி. காடையர்களால் சூறையாடப்பட்டு, பின்னர் உயிர் பெற்று இயங்கத் தொடங்கிய அன்று நடந்த நேயர் கருத்துக்களின் போது அழகலிங்கம் தனது சொந்த அரசியல் நிலைப்பாட்டை அம்பலமாக்கினார். ரி.பி.சி.யை பாட்டாளி வர்க்கத் தலைமையாகவும் புரட்சிகரமானதாகவும் காட்டியதுடன், புலம்பெயர் சமூகத்தை அணிதிரட்டக் கோரினார். இப்படி பற்பல மக்கள் விரோத அரசியல் புலியெதிர்ப்பின் பின்னால் புகுத்தப்படுகின்றன. மற்றொரு புலியாக மாறிவிடும் நப்பாசையில், புலிக்கு மாற்றாகத் தம்மைத்தாம் பிரகடனம் செய்கின்றனர். மக்களுக்கு இந்த இரண்டு பகுதியினரும் வழங்குவது, அவர்களின் சொந்தப் புதைக்குழியைத்தான்.

01.06.2005